நினைவேக்கங்களால் ஒளிரும் உலகம் வண்ணதாசனின் படைப்புலகம்

 • கே.என். செந்தில்

“வாழ்வு குறித்தும் வாழ்வின் அர்த்தங்கள் குறித்தும் எந்தத் தீவிரமான கேள்விகளையும் எழுப்பாமல் அதே சமயம் சிறுமைகளுடனும் சமரசம் செஞ்சிக்காம, எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேனோ, அப்படியே என் எழுத்துக்கள் எழுதப்படுகின்றன. நான் எவ்வளவு நிஜமோ, அவ்வளவு நிஜம், நான் எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய் என் எழுத்துக்கள்.”

”என் கதைகளில் ஏகப்பட்ட அலங்காரம் இருக்கு. அதையெல்லாம் என்னைக்காவது உதிர்த்திட்டு எழுதினாத் தான் நல்லா இருக்கும். ஆனா என் கவிதைகள் அலங்காரத்தை உதிர்த்திட்டு இருக்குனு நெனக்கிறேன்.”

-சுபமங்களா (1994-ஜுலை இதழ்) நேர்காணலில்..

“நான் ஒரு வேளை பேனாவை நெருங்காமல் இருந்திருந்தால் ஒரு தூரிகையைத் தான் நெருங்கியிருப்பேன்.”

“எப்போதெல்லாம் நான் படைப்பூக்கத்தோடு இயங்கியிருக்கிறேனோ, இயங்கி வருகிறேனோ அதுவே என் இளமைக்காலம்.”

-குமுதம் லைப் (08.02.17) நேர்காணலில்.

 

சில ஆண்டுகளாக அவ்வப்போது ஒரு எண்ணம் தோன்றி சில தினங்கள் தங்கிவிட்டு எதிர்பாராமல் மறைந்துவிடுவதுண்டு. அதை மீள யோசித்து அசைபோடுகையில் அக்காட்சி மனதிற்குள் புலர்காலையின் ஒளி போல மெல்லத் துலங்கியபடியே வரும். ஜனசந்தடி மிகுந்த பேரங்காடிகளும் சிறுகடைகளும் நடைபாதையோரக் கடைகளும் நிரம்பியிருக்கிற அகண்ட தெருவில் நான்கைந்து எழுத்தாளர்கள் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை நடந்து செல்வதாக நினைத்துக் கொள்வேன். பின்னர் அந்த அனுபவத்தை அவர்களிடம் எழுதித் தரக் கோரினால் அதன் மூலம் ஒவ்வொருவரின் எழுத்திலும் காணக்கிடைக்கும் பிரத்யேக அம்சங்கள், அவர்கள் தெரிவு செய்திருக்கும் கருப்பொருள் அதன் பாத்திர வடிவமைப்பு அங்கு அவர்கள் கண்ட காட்சிகளில் யாரையெல்லாம் எதையெல்லாம் நுழையவும் புழங்கவும் அனுமதித்திருக்கிறார்கள் எனக் கண்டோமெனில் அது அப்படைப்பாளியின் உலகைப் பற்றி ஒட்டு மொத்தமாக இல்லையென்றாலும் மிக முக்கியமான பகுதியை கண்டுணர்ந்து கொள்ள வழி சமைத்துத் தரக்கூடும். அவர்களுள் வண்ணதாசன் அத்தெருவை அந்த மனிதர்களை அவர்கள் கிளர்த்தும் நினைவுகளை மீட்டியபடியே உடன் வந்தவர்கள் முதுகு மறைய நடந்த பின்பும் நிதானமாக அவர்கள் செல்லட்டும் என வைத்த அடிக்கும் அடுத்த அடிக்கும் – மனதிற்குள் பல காததூரம் சென்றிருப்பார் என்றாலும் –  யோசனைகள் நீள சிறு நகர்வுக்கு தன்னை அளித்தபடி நின்று கொண்டிருப்பார். “அப்படியே பார்த்துக் கொண்டு நின்றுவிடும்படி எவ்வளவோ இருக்கின்றன” என்று ‘சின்னு முதல் சின்னு வரை’ நூலில் இடம்பெறும் வரி சாதாரணமானதல்ல. அவரது மொத்த எழுத்துக்களின் கீழ் பதியப்பட வேண்டிய வரி அது. அத்தெருவில் எதிர்படும் பெண் அவருக்கு ஊரிலுள்ள தான் கண்ட பழகிய பெண்களை நினைவூட்டக்கூடும். அங்கு நிற்கும் மரங்களை அதிலிருந்து உதிரும் இலைகளை உருளும் சருகுகளை உரிந்த மரப்பட்டைகளை அதிலூறிச் செல்லும் எறும்புகளை அவருக்குப் பார்த்துத் தீராது. அதில் அமரும் பறவை கூட அவரை ஊருக்கு இழுத்துச் சென்று விடும். அங்கு பலூன் விற்கும் முருகேசனைப் போலத் தன்னால் வாழ முடியவில்லையே..! அவனை விடவும் தான் எந்த அளவிற்கு உயர்ந்தவன் எனத்  தன்னிரக்கத்தோடு கேள்விக் கேட்டுக் கொள்வார். அவர் மனம் புற உலகின் காட்சிகளை அசாதாரணமான துல்லியத்துடன் கவித்துவ நேர்த்தியுடன் குறிப்பெடுக்க ஆரம்பித்திருக்கும். அந்த மனம் சுழன்று பின் வந்தமர்வது அன்பிலும் ஈரத்திலுமே. எனவே தான் இவ்வுலகமும் மனிதர்களும் கனிவின் நிழலில் இளைப்பாறத் தக்கவர்களே என அவரது பாத்திரங்கள் காட்டுகின்றன. அவரது படைப்புலகம் எண்ணற்ற ஆட்களால் ஆனது என்றபோதும் சில விதிவிலக்குகள் நீங்கலாக ஏகதேசமான அவர்கள் ஒருப்படித்தானவர்களே. தங்களது அன்றாடபாடுகளுக்கிடையேயும் நெகிழ்வின் சாற்றை பிறருக்கு அளிப்பவர்களாகவும் கடும் அவஸ்தையிலும் ஒரு மலர்தலை நுட்பத்துடன் கவனிக்கச் ‘சம்மதம்’ கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வுலகின் சின்னஞ்சிறு அசைவு கூட அவர்களுக்கு நிரம்பவும் ‘பிடித்திருக்கிறது’. அதனாலேயே அதற்கும் அப்பால் என்ன என்ற வினாவை அவரது கதைகள் எதிர்கொள்வதில்லை.

சிறிய உலகின் கதை சொல்லி வண்ணதாசன். வெவ்வேறு சாயைகளிலும் வேறு வேறான பெயர்களுடனும் இருந்தாலும் கூட பெரும்பாலான அவரது படைப்புலகில் குறிப்பிடத்தக்க நபர்களே மீண்டும் மீண்டும் நடமாடுகிறார்கள். அச்சிறிய உலகின் உள்விரிவை நோக்கிச் செல்வதே வண்ணதாசனின் இயல்பாகவும் எழுத்து முறைமையாகவும் இருக்கிறது. நிகழ்கணத்தில் நின்று கொண்டே பழைய நாட்களின் மீது அது   ஆதுரத்துடன் படர்கிறது. அந்நாட்களைப் பற்றிவிட விழைகிறது. அன்றிருந்ததாக எண்ணிக் கொள்ளும் மகிழ்ச்சியை இன்றில் வைத்து பொருமுகிறது. நினைவேக்கம் ஒரு சுடரைப் போல வரிகளினிடையே எழுந்து நிற்கிறது. அதனால் தானோ என்னவோ அவரது கதை மாந்தர்களில் மிகப்பலரும் பால்பேதமின்றி பரஸ்பரம் கைகளைப் பற்றிக்  கொள்கின்றனர். அதன் வழி இரு வேறு காலங்கள், இரு வேறு மனநிலைகள், இரு வேறு உலகங்கள் ஒன்றையொன்று வெதுவெதுப்பான ஈரத்துடன் அறிய முயல்கின்றன. அவரது ஆக்கங்களை உதிரி உதிரியாகவோ தனித்தொகுப்பாகவோ வாசிக்கையில் கிட்டும் அனுபவம் வேறு. அது சில ஆண்டுகளுக்குள்ளான அவரது படைப்பூக்கத்தைக் காண வழிகோலும். ஆனால் ஒட்டுமொத்தமாக அதுவும் நாற்பதாண்டுகளுக்கு மேல் சிறுகதை வடிவத்தை கையாள்பவரின் ஆக்கங்களை மதிப்பிடுகையில் திரளும் எண்ணங்கள் வேறானவையே. கூறு போடும் வாய்ப்பை இடைப்பட்ட நீண்ட ஆண்டுகள் அளிக்கின்றன என்பதல்ல. தசங்களில் அமைந்த எண்ணிக்கையின் வழி உருவாகும் புகைமூட்டமான மதிப்பீடுகளை விடவும் ஒன்றரை சதங்களுக்கும் அதிகமான எண்ணிக்கை தரும் அனுபவங்கள் அவரைக் குறித்து திட்பமான வரையறுத்துவிடக்கூடிய சில முடிவுகளுக்கு இட்டுச் செல்கின்றன. அருகிலும் தொலைவிலும் அவரது ஆக்கங்களை நிறுத்தி அணுகுவதற்கான சம வாய்ப்பினை இந்த நெடிய ஆண்டுகள் அளித்திருக்கின்றன.

சமீபத்தியத் தொகுப்பான ‘ஒரு சிறு இசை’ நூலிலுள்ள சிறுகதைகளையும் சேர்த்து மிகச்சரியான எண்ணிக்கையில் கூறுவதென்றால் 170 கதைகளை உள்ளடக்கிய மிக நீளமான- விரிவான அல்ல- படைப்புலகம் வண்ணதாசனுடையது. அவரது குறுநாவலான ‘சின்னு முதல் சின்னு வரை’ கணக்கில் சேர்க்கப்படவில்லை. மட்டுமல்ல அவர் கைகளில் இப்போது மேலும் ஒரு தொகுப்புக்கான கதைகள் இருக்கக்கூடும். எண்ணிக்கை படைப்பூக்கத்தின் பிரதான காரணியல்ல என்ற போதும்  இதைக் கூறுவது சீரான இடைவெளியில் தொய்வின்றி தன் மீது கூறப்பட்ட எவ்வித விமர்சனச் சொற்களுக்கும் செவிமடுக்காமல் தனதேயான உலகைச் சமைப்பதில் சளைப்பின்றி ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்திருக்கிறார்/ வந்து கொண்டிருக்கிறார் என்பதைச் சுட்டவே. கதைகளே அவரது பிரதான வாகனம். இயல்பாகவே அவருக்கு கல்யாண்ஜியாக ஆவதைவிடவும் வண்ணதாசனாக இருப்பதில் தான் விருப்பம் இருந்திருக்கிறது. “ஒரு மோசமான சிறுகதை எழுதியதும் ஏற்படும் மகிழ்ச்சி ஒரு நல்ல கவிதை எழுதியதும் எனக்கு ஏற்பட்டதில்லை.” எனவும் “கதை சுலபமாக எழுத முடியாது” எனவும் அவர் சொல்லியிருப்பது அதனாலாகவும் இருக்ககூடும்.

பதின்மவயதின் மத்தியிலேயே அவரது எழுத்து முயற்சிகள் தொடங்கிவிடுகின்றன. அவ்வாறான சூழலை அவரது வீடும் கொண்டிருந்திருக்கிறது. வண்ணதாசன் அவரது அண்ணனின் பாதிப்பைக் கொண்டவர். அவர் அடைய இருந்ததை தான் அடைந்திருப்பதாக நேர்காணலில் ஒப்புக் கொள்வது மட்டுமல்ல இந்த பெயரே கூட அவரிடமிருந்து பெற்றுக் கொண்டது தான் என்கிறார். அவரது முதல் கதை ‘ஏழையின் கண்ணீர்’ 1962ல் புதுமை பத்திரிகையில் வெளிவருகிறது. அப்போது வண்ணதாசனுகு வயது பதினாறு.

இன்றும் அழகுணர்வுக்காக நினைவுகூறப்படுகிற, அந்த வித்தியாசமான எழுத்துருவுக்கும் மெச்சத்தக்க தயாரிப்புக்கும் காரணகர்த்தரான ‘அஃக்’ பரந்தாமனால் கொண்டு வரப்பட்டது அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’. பதினைந்து கதைகளைக் கொண்டதெனினும் ஒவ்வொன்றும் முக்கியதுவமுடையதும் இன்றுவரை சிலாகிப்புக்கு உரியதுமான ஆக்கங்களைக் கொண்ட தொகுதி. தேர்ந்த கதையாளனின் வருகையை அறிவிக்கும் கூறுகளை மிக அதிகமாகவே- அவர் பெயரைச் சொன்னதுமே சட்டென நினைவுக்கு வருமளவிற்கு- அக்கதைகள் கொண்டிருக்கின்றன. அவரது மனத்தடங்கள் இக்கதைகளின் வழி சென்று தொட்ட இடங்கள் புனைகதை பரப்பின் சில இழைகளை மிளரச் செய்தன. சிறிய வாழ்வின் சிறிய இடத்தில் உழலும் மனிதர்களின் மீது அவை படர்ந்திருந்தன. வண்ணதாசனின் இவ்வளவு ஆண்டு எழுத்துவாழ்க்கையின் பாதையை இக்கதைகளின் மூலம் புகைமூட்டமாக கண்டுவிட முடியும் என்றே தோன்றுகிறது.

லாட்ஜ் அறையில் தொடங்கி அதிகாலையின் சாலையோரத்தில் முற்று பெறும் ‘மிச்சம்’ சமூகத்தின் உதிரிகளாகச் சொல்லப்படும் ஆட்களால் பின்னப்பட்டது. புற உலகின் சேதன அசேதனப் பொருட்களை ஒரு சித்திரக்காரனைப் போல குறிப்பெடுத்துச் செல்லும் முறை விலக்க முடியாத நிழலைப் போல அவரது எழுத்தின் முன்சென்றும் பின் தொடர்ந்தும் வந்து கொண்டேயிருக்கிறது. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு பின் வந்த தொகுப்பின் புதிய பதிப்பின் முன்னுரையில்(முதல் பதிப்பில் முன்னுரையில்லை) இக்கதைகளைத் திரும்பும் மீள அசை போட்டு இந்த மனிதர்கள் எங்கிருந்து வந்து இக்கதைகளுக்குள் நுழைந்தார்கள் எனக் காட்டுகிறார். அன்று ‘மிச்சம்’ மட்டுமே வாசித்திருந்த ஒருவர் எண்ணியிருந்த வண்ணதாசனின் பயணம் வேறாகத் தான் இருந்திருக்கும். ஆனாலும் டெய்ஸி வாத்திச்சியும் அந்த ஆர்பனேஜில் பாடலின் வழியாகவும் அத்துயரை வாசிப்பவர்க்கும் கவிழ்த்து விடும் வண்ணதாசன் ‘வடிகால்’, ‘ஓர் உல்லாச பயணம்’ என அடுத்தடுத்துச் சென்றார்.

நீண்ட தொலைவுக்கு செல்லக்கூடிய இசைஞன் இவன் என கட்டியம் கூறுவதற்கான அனைத்து சம்பத்துகளையும் வெளிப்படுத்தியுமிருந்தார். உறவுகளின் இணைப்புச்சங்கலிகளால் ஆனவையே இந்த நெடுங்கதையுலகம். வர்ணணைகளால் அவற்றை மேலும் கூட்டுகிறார். அந்த உறவுகளின் பம்மாத்துக்களையும் சுயநலங்களையும் கூறிச் செல்லும் போது கூட கடுமையை அனுமதிப்பதில்லை. தான் காணாத தன் செவிக்கு எட்டாத ஒன்றுக்கு அவர் படைப்புலகில் இடமில்லை. உறவுகளின் ஆரத்தை மையமிட்டு சுழலும் இக்கதைச் சக்கரங்கள் தேர்ந்த, வழித்தடங்களின் மணல் கூட மிருதுவானவே. பொடிக்கற்கள் அரைபடும் ஓசை விட்டுவிட்டு அவ்வப்போது கேட்கவும் செய்கிறது. மேலும் ஒரு காலகட்டத்திற்கு பின் எழுதப்பட்ட கதைகளை வாசிக்கும் போது அவற்றை முன்பே கண்டுவிட்டது போல தோன்றிவிடுகின்றன. பழைய கதைகளின் ஏதேனுமொரு இழையை எடுத்து புதிய கதையை பின்னுகிறாரோ என்னும் நினைப்பை உறுதிப்படுத்தும்படியான கூறுகளை அதிகமாகவே காணமுடிகிறது. புலப்படாத அதே சமயத்தில் அறுபடாத் தொடர்ச்சி பல கதைகளிலும் ஊடாடுகின்றன. பெயரால் மட்டும் வேறுபட்ட ஒரே சாயலிலால் ஆன மனிதர்கள் அவர்கள். சிவஞானத்தின் கனிந்த வடிவம் தான்(ஒரு ஞானி ஒரு முட்டாள்-2007) குத்தாலிங்கம் அண்ணாச்சி(’ஊரும் காலம்’- 2000). நினைவின் மடிப்புகளை ஊடுருவிச் செல்ல அல்ல மென்மையாகப் பார்த்து நிற்பதையே இன்பம் எனக் கருதும் மாந்தர்கள் அவர்கள். இங்கு அவரது இரு முன்னுரைகளின் சில வரிகளை குறிப்பிடத் தோன்றுகிறது.

“ஒரே வகையான எழுத்து, ஒரே வகையான விஷயம் என்று இதை ஒதுக்கிவிட முடியாது. ஒரே வகையான வாழ்வையும் ஒரே வகையான மனிதர்களையும் எப்படி ஒதுக்கி விட முடியாதோ அப்படி”                 (‘கனிவு’  முன்னுரை – 1992)

“அதே மனிதர்கள், கிட்டத்தட்ட அதே பரப்பளவுடைய வாழ்வு தான். ஆனால் வேறு வார்த்தைகளின் தான் சொல்லும் படியாகிவிட்டது  எல்லாவற்றையும். ஏற்கனவே சொல்லப்பட்டது என்ற முத்திரையை ஏற்க மறுத்தே ஒவ்வொரு நல்லபடைப்பும் தன்னைத் தீவிரமாக முன்வைத்துக் கொள்கிறது.” (‘உயரப்பறத்தல்’ முன்னுரை- 1997)

ஆனால் அடுத்தடுத்த தொகுதிகளின் ஊடாக ஒரு சிறிய வளாகத்திற்குள் நடந்து உதிரும் வேப்பம்பழங்களையும் சருகுகளையும் கண்டு வியந்து துக்கித்து தன் இருப்பே ஒரு வித மகிழ்வும் துயரமும் ஒருங்கே அமையப் பெற்றது என்ற இடத்திற்கு வந்து சேர்கிறார்.

இரண்டாம் தொகுப்பான ‘தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்க’ளிலுள்ள கதைகள் தான் அவரது எழுத்தின் எதிர்காலத்திற்கான பாதையை புலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.

வறுமை அல்ல, போதாமையின் கையறுநிலையிலும் சிறுமையை அனுமதிக்காத கனவைக் கொண்டிருக்கிறவர்களால் ஆன கதைகள் இவை. அவர்களின் பலகீனங்கள் கூட அப்பட்டமாக வெளித்தெரியாமல் சூசகமாக உணர்த்தப்படுகிறது. அந்த சூசகம் வரிகளுக்குள் ரகசியமாக பதுங்கியிருக்கிறது. உடைத்துப் பேசவும் அவர்களுக்கு இயல்வதில்லை. கதைவைக் கூட வேகமாகத் திறந்தால் அதன் ‘க்ரீச்’ சத்தம் நாராசமாய் ஒலிக்குமோ எனத் தயங்குபவராக வண்ணதாசன் இருக்கிறார். இத்தொகுப்பிலிருந்து அவர் எழுதியவற்றின் தொண்ணூற்று ஐந்து சதவீதமாக ஆக்கங்கள் குடும்பங்களால் அதன் சில குறிப்பிட்ட உறவுகளாலும் ஆனவையே. கதவுக்குப் பின்னால் நிற்கும் சமைந்த குமரிகளின் பெருமூச்சுகள் கேட்கத் தொடங்கியதும் இங்கிருந்து தான்.

பற்றாக்குறையைச் சரிசெய்ய இயலாமலும் தான் அவனுக்கு சரியான ஜோடி இல்லை என நொந்தபடியும் ’கடைசியில் ஒரு மட்டுக்கும்’ ‘கொசு கடிக்காமல் தூங்க’ அவனுக்காக வாங்கி வரும் போர்வையின் பொருட்டு எழுதப்பட்ட ‘போர்த்திக் கொள்ளுதல்’. தன் மனைவிக்கு மருந்து வாங்கச் சென்று நண்பனின் குழந்தைக்கு மாத்திரை வாங்கித் தந்து விட்டு சாமத்தில் வருபவனின் மீது கோபத்திற்கு பதில் பிரியத்தைச் சுரக்கும் ‘அன்பின் வழியது’ போன்ற பல கதைகளும் மென் உணர்வுகளின் மீட்டலில் எழுதப்பட்டவையே. இதே போன்ற இதை விடவும் கூடுதலான மென்மையும் ஈரமும் நிரம்பிய கதைகளை தொடர்ச்சியாக வாசித்துச் செல்கையில் ஒரு எண்ணம் மேலிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. அது வண்ணதாசன் பார்க்க விரும்பிய அல்லது காட்ட ஆசைப்பட்ட பக்கம் மட்டுமே. மனிதன் அவ்வளவு அன்பனாவனாக (“இந்த அன்பின்மேல் ஏன் இவ்வளவு கோபம். அன்பாக இருக்கக் கட்டுப்படி ஆகாது போலவும் அன்பாக இருக்க முயல்வதே ஒரு பெரும் அபத்தம் போலவும் மனவளர்ச்சியற்ற குழந்தைச் சிரிப்பின் விகாரம் அது என்றும் மலைப்பிரசங்கம் என்றும் வெறுப்பின் தகிக்கும் குழம்புகள் வாழ்வின் முகடுகளிலிருந்து சதா வழிந்து கொண்டிருக்க அதை அன்பு என்னும் பீற்றல் துணியைக் கண்ணில் கட்டி மறைத்துப் பொய்யாக்கி விடுவது போலவும் எல்லாம் குற்றம் சாட்டுகிறார்கள்) இருப்பது அவருக்கு மட்டுமல்ல ஏனைய பலருக்கும் உவப்பானதே. அதற்குள்ளோ வெளியிலோ உறைந்திருக்கும் குரூரத்தை சென்று தொடும் பிரயாசை அவருக்கில்லை போலும். அவ்வாறு இருப்பதற்கான சுவடுகளைக் கொண்டிருக்கும் கதைச் சம்பவங்களில் கூட அவரே பிரக்ஞைபூர்வமாகத் தடுத்து விடுகிறார். அதாவது அதற்கடுத்த வரியிலே அவரது பாத்திரங்கள் இலையையோ அடுத்தவரின் செய்கையிலுள்ள நுட்பத்தில் லயிப்பதைச் சொல்வதன் மூலமோ அது மடைமாறி விடுகிறது. கணுக்களின் தோற்றத்தைக் கூட கவித்துவமாகச் சொல்ல முடிந்தவருக்கு அதற்கப்பால் செல்ல மனமில்லாமல் போனது விநோதமானது தான். ஒரு எழுத்தாளனின் நடையே ஒரு கட்டத்தில் அவனுக்கு தடையாக அமைந்துவிடுவதை தன் கட்டுரை ஒன்றில் வண்ணதாசன் சுட்டியிருப்பதை இங்கு நினைவு படுத்திக் கொள்ளலாம்.

டிபன் பாக்ஸை மறந்து வைத்து விட்டு அதைத் திரும்ப எடுக்கச் செல்பவள் (ஞாபகம்1975) கூட அந்த ஆளற்ற அலுவலகம் கிளர்த்தும் நினைவுகளுக்குள் சென்று சேர்கிறவளாக இருக்கிறாள். இக்கதையை வாசித்தும் பிரபஞ்சனின் ‘குமாரசாமியின் பகல்பொழுது’ என்னும் சிறுகதை நினைவில் எழுந்தது. அலுவலகத்தில் அடைப்பட்டுக் கிடப்பவன் அன்று நிகழும் விஷயத்தின் காரணமாக அதே அலுவலக நேரத்தைய பகல் பொழுதை வெளியே கழிக்க நேர்ந்தால் அது அவனுக்குள் எவ்வாறு வினையாற்றும் என்பதே இக்கதை. வெட்டவெளி அளிக்கும் விடுதலையுணர்வு அவனுக்கு முக்கியமானதாக இருக்கும்.

எளிதில் அறிய முடியாத அல்லது அறிந்து விட்டோம் என இறுமாப்பு அடைகையிலும் துலக்கமாக புலப்படாதவை ஆண் பெண் உறவுகளின் ஊடாட்டங்கள். அதைப் பாதி திறந்த அல்லது பாதிக்கும் குறைவாகத் திறந்த கதவு என வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். அந்தச் சிறு திறப்பில் கூட- உள்ளே வெளிச்சம் மங்கலாகத் தான் இருக்கும்- நிற்கும் நிலையில் தட்டுபடுவது சில காட்சிகளே. ஆனால் அக்காட்சிகளின் வழி சென்று சேரும் இடம் நிச்சயமாக குளிர்ச்சியோடிருக்காது. அங்கு தெரியாததும் அறிய முடியாததும் என்ன? என்ற வினாவைத் தோற்றுவித்து அதை நோக்கி வாசகரை கற்பனையின் வழி செல்ல தூண்டுபவை வண்ணதாசனின் ஆக்கங்கள். வெளித் தெரியாததன் அழகால் பரவசம் கொள்ளச் செய்யும் வண்ணதாசன், அந்த மர்மத்தைத் தொந்தரவு செய்யாமல் ஒரு பார்வையாளனாகச் சாட்சியாளனாக அதில் அமர்ந்திருக்கிறார்.  அவரது படைப்பாக்கத்தின் பல கதைகளில் இதே அம்சம் பழக்கம் போல மாறி தொடர்ந்து தொழிற்பட்டிருக்கிறது.

கை கூடாத காதல்கள், சொல்லப்படாத காதல்கள் – காதல் என்ற சொல்லின் துணையின்றியே- கதைகளுள் மெளனமாக உறைந்திருக்கின்றன. அத்தருணத்தில் கூட அக்கையறு நிலையில் அப்பாத்திரங்களின் இயலாமை உள்ளே குமைந்தாலும் அவர்கள் காட்டும் முதிர்ச்சியின் விளைவால் அந்த உறைதல் உருகி வாசிப்பவரின் மனதில் படர்கிறது. தான் கட்டிக் கொள்ள ஆசைப்பட்ட சரசு வேறொருவனை மணந்து வந்ததை அறிந்து காணச் செல்வதும் பின்னொரு நாளில் கைக்குழந்தையோடு நிற்கும் அதே சரசுவுக்கு ப்ரியத்துடன் டீ குடிக்க அழைப்பதும் (தாகமாய் இருக்கிறவர்கள்) அதனால் தான். தனக்குத் தர மறுத்த மாமாவின் பெண்ணுக்கு தனக்கு மணம் ஆன பின்பும் நீண்ட நாள் மணமாகாமல் படுக்கையில் கிடக்க அவளைக் காணச் செல்லும் ‘விசாலம்’ துயரின் சிற்றலையை கால்களுக்கு கொண்டு வந்து சேர்கிறது.  கை நழுவிய கிட்டணம்மாவை பார்க்கச் சென்று அவள் குழந்தையைக் கொஞ்சிய பின் எதுவுமே நடவாதது போல தன் சினேகிதனிடம் ‘போகலாமா..’ என்று கேட்கும் செல்லப்பா (தற்காத்தல்), பல்கலைக்கழகத்தில் கட்டுரைபடித்த ஜோதிக்காக கொலுசு வாங்க கடைகடையாக அலையும் அந்தப் பையனும் ஜோதியும் நானும்(88)  போன்றவை அத்தகைய உணர்வுகளால் ஆனவையே. ’தனுமை’யில் ஞானப்பனுக்கு தனு மேல் தோன்றுவதற்கும் ஒரு அர்த்தத்தில் டெய்சி வாத்திச்சி ஞானப்பனைக் கட்டிக் கொள்வதற்கும் பின்னுள்ளது அதுவே தான். வாத்திச்சிக்கு ஞானப்பன் ஒரு சாக்கு. டெய்சிக்குள் கனலும் உணர்வுக்கு ‘அவன் பொருட்டு தான்  எல்லோரையும்’ கட்டிக் கொள்கிறாள்.

மற்றொரு வகையான காதல் வண்ணதாசன் நெய்து விரிக்கும் கதைக்கம்ளத்தில் பிரதான நிறத்தைப் பெற்றிருக்கிறது. அதைத் தவிப்பு என, ஈர்ப்பு என, மனத்தோரணம் எனச் சொல்லிக் கொள்ளலாம். இச்சொற்களனைத்தும் நயத்தகு நாகரீகத்தின் விழைவேயன்றி உள்ளே சுழன்று திரிவதன் உண்மையான பொருள் அல்ல. ஏனெனில் மணமானவர்களுக்குள் அவ்வளவு பாந்தமாக நறுவிசாக நிகழும் அச்சந்தர்ப்பங்களின் மனஓட்டங்களின் பெயர் தான் என்ன? அது அவ்விருவருக்கு மட்டுமல்ல வாசிப்பவருக்கும் புரியத் தான் செய்கிறது.  சரி புரிகிறது, பிறகென்ன? என்றால் அவரவர் அவரவரின் பழைய நிலைக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு அடிபணிய வேண்டி இருப்பதன் முரண்நகையைச் சொல்லலாம். கள்ளத்தனம் நிரம்பிய காதல்கள் என்ற போதும் அவ்வுறவுகளுக்குள் இருக்கும் இசைமை சிற்றகல் போல் ஒளிர்கின்றன. அவற்றைச் சட்டென ‘கள்ளம்’ என்றும் கூறிவிட முடியாது தான். ‘பொத்தி வைத்தல்’ என ஏகதேசமாகப் பொருள் கொள்ளலாம். அதன் சிறு இணுங்கு மட்டும் அந்தந்த தருணங்களில் வெளித் தெரிந்து உடனே உள்ளிழுத்தும் கொள்கிறது. எனவே தான் கதைசொல்லி எப்போதோ கவிதை வாசித்த போது பதிவு செய்யப்பட்ட காஸெட்டை பத்திரமாக அந்த அம்மாவால் வைத்திருக்க முடிகிறது. அதன் காரணம் கேட்கப்படுகையில் ‘புதிய முகமொன்று’ வந்து சேர்கிறது. திருப்பிச் சொல்ல எதுவுமின்றி அதே பிரியத்துடன் கதைசொல்லி ‘புறப்படும் போது நவ்வாப்பழம் வாங்கினோம்’ எனச் சொல்ல முடிகிறது(’பற்பசைக்குழாயும் நவால் பழங்களும்). பார்த்ததும் சிறு ‘தீ எரிகிற’ நாற்பது வயசு அலர்மேல் நரசய்யாவை (இவரைக் காணவே ‘சிநேகிதியும் சிநேகிதர்களு’மில் கதைசொல்லி கிளம்பி வருகிறார்)  அவர் மகள் திருமணத்துக்கு அழைக்கச் செல்கையில் ‘வரமாட்டேன். அது ஏன்னு உங்களுக்கேத் தெரியும்’ என்னும் பொருளில் அவள் கூறும் பதிலைக் கேட்ட பின் அச்சிறு தீ மேலும் உக்கிரம் கொள்ளத் தானே செய்யும்!(அழைக்கிறவர்கள்). பக்கத்து வீட்டு முருகேசனின் மேல் ரெங்கம்மாவுக்கு (மழை வெயில்) உள்ளதன் பெயர் வெறும் அன்பாகவே இருக்க வேண்டும் என நம்ப ஆசைப்படுகிறேன். தன் அப்பாவின் இருமல் சத்தத்தைக் கேட்டே அவர் வருகையைக் கண்கொள்ளும் பிச்சம்மா சின்னம்மையின் இறப்பை அதே அப்பா குரல் அதிரக் கூறுகையில் உள்ளுணர்வதும் அதுவே (பாசஞ்சர் ரயிலும் ஆண்கள் பெட்டியும்-1995). மேலும் 15 வருடம் கழித்து எழுதிய ‘இன்னொன்று’ (2010) கதையில் அந்த பிச்சம்மா சின்னம்மை தான் சுந்தா சின்னம்மையாக பிறப்பெடுத்திருக்கிறாளோ..! என எண்ணக் கொண்டேன். தொண்டையில் போட்டிருந்த துணியை பொத்தியபடி அவள் சொல்லும் ‘அத்தானையும் பாத்தாச்சு’ என்ற வசனத்தின் பொருள் வேறென்னவாக இருக்க முடியும்? ’ஒளியிலே தெரிவது’ கதையில் சூசகமாக சொல்லப்பட்டிருந்தாலும் கூட அந்த மனம் சுமந்து கிடந்ததும் காதலையே என அக்கதையின் முடிவு காட்டுகிறது.

’குண்டு’ கனகராஜ்  தன் மனைவி சிகாவின் காதலன் என்று சொல்லத்தக்க  ரவியை தன் வீட்டிலேயே தங்க அனுமதிப்பதும் மூவரும் பிசிறற்ற எல்லைகளுக்குள் நடமாட முடிவதும்(எழுதி வைக்காதவை-1995)  மனைவியின் அலுவலக சகா அவளைக் குறித்து விதந்தோதி சொற்களால் உச்சி முகர்ந்து சொன்னவைகளை அவனது மரணம் நிகழ்ந்த அன்று அவளிடம் சொல்லும் கணவனையும் அதற்கு அவள் அவரிடமே ’அவர் உங்ககிட்ட சொன்ன மாதிரி என்கிட்டயும் சொல்லியிருக்கலாம்’ (ஸ்படிகம்நாபிக்கமலம் தொகுப்பு) என கூறுவதையும் எவ்வகையில் புரிந்து கொள்ள? இத்தகு மனிதர்களை நேரில் காண்பது அபூர்வம் எனினும் இலக்கியத்திலாவது சந்திக்க முடிந்ததே.! ‘எழுதி வைக்காதவை’ போன்ற ஒரு உறவை நேரிலேயே கண்டிருக்கிறேன். ஆனால் அதன் முடிவு அத்தனைச் சுபமானதல்ல.

உணர்வுகள் உணர்ச்சியின் பிடிக்குள் சிக்கி மறுகுவதையே மீண்டும் மீண்டும் சலிக்காமல் எழுதி வருகிறார் என்று தோன்றுகிறது. மிகுந்த அமைதியுடையவர்களாக குடும்பத்தின் சொல்லுக்கு இணங்கிச் செல்பவர்களாக வரும் பெண்களுக்கு மத்தியில் மிகச் சிலரே ஆவேசமானவர்களாக மூர்க்கமானவர்களாக படைக்கப்பட்டிருக்கிறார்கள். பனிரெண்டு வருடத்திற்கு முன் எந்த பெண்ணின் பொருட்டு வீட்டில் ஆவுடையம்மையால பிரளயம் ஏற்பட்டதோ அவளையே ரயிலடியில் பார்க்கவும் உடன் நடக்கவும் நேர்ந்து விடுகிற கதைசொல்லியை அவர் மகள் தெய்வு கண்டுவிடுவதைப் பார்த்து பதைபதைப்புடன் வீடு சேர அது பற்றிய துளி விசாரிப்புமில்லாமல் தெய்வு ’காபி குடிக்கிறீங்களா?’ எனக் கேட்பதும் அக்கதைக்கு அவர் இட்டிருக்கும் (சூரிய நமஸ்காரம்) பெயரும் அவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. இந்த ஆவுடையம்மையின் உக்கிரம் கூடிய வடிவம் தான் நாபிக் கமலம் கதையில் வரும் கனகு எனவும் கொள்ளலாம். ஒரு அர்த்தத்தில் தெய்வுவின் – தெய்வு மட்டுமல்ல அவர் படைப்புலகின் வேறு சில பெண்களின்- முதிர்ந்த வடிவமாக நீலாவைக் கருதலாம்(’யாரும் இழுக்காமல் தானாக’- 2009). காணாமல் போய்விட்ட அப்பாவின் இடத்தில் ஒரு காலத்தில் அம்மாவை மணந்து கொள்ள ஆசைப்பட்ட பாஸ்கர பெரியப்பாவைக் கொண்டு வந்து வைக்கும் மனதை என்னவென்று சொல்வது? அந்த பிரியம் சிநேகிதமாகவே இருந்து விடுவதும் அது பொக்கிஷம் போல ஆகி பல ஆண்டுகள் பின்தொடர்ந்து வரும் கதைகளும் உண்டு, ‘உயரப்பறத்தல்’ போல.

பாசாங்குகளோ ‘பெரிய மனுஷத்தனங்களோ’ இன்றி சிறார்களின் துறுதுறுப்பும் ஏக்கமுமான உலகை அவர்களின் இயல்பைத் தொட்டு பேசும் ஆக்கங்கள் அவர் மொழியில் சொல்வதெனில் ‘பூப்போல’ , ‘மழைப்பெய்வதைப் போல’ நிர்பந்தங்கள் ஏதுமின்றி வெளிப்பட்டிருக்கிறது. அவ்வயத்திற்குரிய குதூகலங்களுக்கு மாறாக ஏக்கத்தின் குமிழ்களால் ஆனவையாக இருக்கின்றன அவை. எனவே அது உடைவதும் இயல்பே. அவரது புகழ்பெற்ற கதையான ‘நிலை’, ‘வாழையடிகள்’ போன்றவை அத்தகையதே. குடும்பத்திலிருந்து பிடுங்கி வேலைக்காக வேறொரு இடத்தில் நடப்பட்ட சிறுமிகளின் துயரைப் பேசும் கதைகள். அதே போல சிறுவர்கள் இடம்பெறும் ‘சபலம்’, ‘ஊமைப்படங்கள்’, ‘ஓர் உல்லாசப் பயணம்’ ஆகிய கதைகள் சிறு சோகத்தை அடக்கி வைத்திருந்தாலும் கூட அவர்களின் உற்சாகமான பக்கங்களையும் சேர்த்தே காட்டுகின்றன. அதிலும் குறிப்பாக ‘ஊமைப்படங்கள்’. அவரது நல்ல சிறுகதைகளில் ஒன்றும் கூட. அவர் படைப்பாக்கத்தில் ஆங்காங்கே தோன்றி மறையும் சமைந்த குமரியும் சரிவில் அமர்ந்திருக்கும் குடும்பத் தலைவனும் இக்கதையினுள் இடைகலந்து வந்து புதிய நிறத்தை அளிக்கிறார்கள். இந்த சமைந்த குமரிகள் பற்றி யோசிக்கையில் ‘ஒரு போதும் தேயாத பென்சில்’ கதையில் வரும் ராஜீ வேறு மாதிரி என்பதையும் சொல்ல வேண்டும். அவள் முதிர்கன்னி. தோற்றுப்போய் அவள் கேட்கும் கேள்வியின் மூலம் அபிலாஷைகள் சிதறி வெற்றுக்கூடு மட்டுமே தான் என்று காட்டுகிறாள்.  மருந்து குடித்துச் செத்துப் போகும் லீலாக்காவைப் (கூடு விட்டு-2006) போலன்றி ராஜீ வாழ்ந்து கிடப்பது ஆறுதலானது தான். பெண்களுக்குள் நிகழும் உறவின் மேம்பட்ட வடிவங்களையே வண்ணதாசன் காட்டுகிறார். இதற்கு ’ஒட்டுதல்சிநேகிதகள் கதைகளை உதாரணமாகச் சுட்ட இயலும். கட்டினவனின் மரணத்திற்கு பிறகு குஞ்சம்மா, வேலாயுதத்தைக் கல்யாணம் செய்து கொள்ளவிருப்பதை அறிந்து ‘அதுல என்ன தப்பு?’ எனக் கேட்கும் பெரியம்மை (ஒருத்தருக்கு ஒருத்தர்) ஜெயகாந்தனின் வயதான பெண்களின் வார்ப்பையல்ல, ஒரு அர்த்தத்தில் ஜானகிராமனின் பெண்பாத்திரத்தின் சாயலையே காண்கிறோம்.

தோற்றவர்களை வாழ்ந்து கெட்டவர்களை ஜீவிதத்துக்காக நித்தமும் மறுகித் தவிப்பவர்களை இலக்கியம் கூடுதலாகவே கையாண்டிருக்கிறது. இதன் பொருள் துயருற்றோருக்கான கீதமே அதிகம் இசைக்கப்பட்டது என்பதல்ல, மாறாக அவர்கள் கண்ணீரின் கையறுநிலைக்கு ஏதேனுமொரு பங்கு தனக்குமிருப்பதாக கருதுவதே. அன்றாடம் எதிர்படும் பாத்திரங்களால் ஆன வண்ணதாசன் உலகில் அத்தகைய கதைகளும் உள்ளன. இந்நிலையிலும் கூட மனைவியிடமிருந்தோ பிள்ளைகளிடமிருந்தோ முணுமுணுப்புக் கூட கேட்பதில்லை. அப்பாவை வீட்டில் வைத்துக் கொண்டே பலசரக்குக்காரனிடம் இல்லை எனச் சொல்லும் மகளுக்கும் (அந்தந்த தினங்கள்) குத்தாலத்துக்கு எக்ஸ்கர்ஸன் போகாக் குறையை எதிர்வீட்டு தட்டோட்டிலிருந்து விழும் நீரில் குளித்து சமன் செய்யும் மகனுக்கும்(ஓர் உல்லாச பயணம்), அவர்கள் அம்மைக்கும் அது குறித்து எந்த பராதிகளும் இல்லை. இத்தனைக்கும் மேற்படி கதையில் அம்மைகளின் குரல் அடுப்படியிலிருந்து தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பண முடைக்காக அப்பாவைத் தேடி அலையும் பெரிய நாயகி (நிலத்து இயல்பில்) ஒரு காலத்தில் பள்ளிகளில் வித்தை காட்டி கோலோச்சியவர்கள் உதவி வேண்டி கதவு தட்டி இறஞ்சி வெறுங்கையுடன் திரும்பும் முழுக்கைச் சட்டைப்போட்டவரும் கதிரேசன் என்பவரும் வீழ்ச்சியுற்ற மனிதர்களே. மட்டுமல்ல மகனுக்கு கிடைத்த கண்டெக்டர் வேலைக்கான உடுப்புக்கு பழைய டிரவுசர்கள் வேண்டி கூச்சத்துடன் தயங்கி நிற்கும் ராமலிங்க மாமா(உயரம்), தெருவின் அடையாளமாக, ஆட்களின் ரகசிய வேட்கையாக இருக்கும் ‘அவளும்’ வசித்த கிருஷ்ணன் வைத்த வீடு ஒன்றுமில்லாமல் சிதலமாகும் அவலம் என தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. ‘ஊமைப் படங்கள்’(1976) அப்பாவுக்கும் ‘சைகள் மூலம் செய்திகள்’(1997) ராவுக்கும் இடையே ஓடிய கிட்டதட்ட இருபதாண்டுகளை சட்டென கடந்து அருகருகே அமைந்த புள்ளியில் அவர்களிருவரும் நின்று மெல்லச் சிரிக்கிறார்கள். கைப்பு நிலையின் சிரிப்பு அது. இத்தகு உணர்ச்சிகளால் அமைந்த கதைகளில் கடந்த விரும்பியதிலிருந்து ஒரு துளியும் கூடுதல்குறைவின்றி பிசகாது சென்று தைக்கும் ஆக்கங்களுக்கு வண்ணநிலவன் படைப்புலகில் பிரத்யேக இடமுண்டு. ஆனால் வண்ணதாசன் அப்பாதையிலிருந்து விலகி- கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதக் கதைகளில்- நடைபயின்று வேறொன்றுக்குத் தாவி (அந்தத் தாவலும் கூட அப்பாத்திரங்களின் மனஉணர்ச்சிகளுக்கு ஏற்றதாக இல்லை) திரும்பவும் வந்து அமர்கிறார். இது அவரது படைப்புலகில் தவிர்க்க முடியாத அங்கமாக அவரது இயல்பின் ஒரு கூறாக அடையாளம் கண்ட பின்னுரும் கூட அயர்ச்சியே மிஞ்சுகிறது. சிறிய உடம்புக்கு போடப்பட்ட வண்ணமும் நாகசும் மிளிரும் பெரிய சட்டை போல தோற்றமளிக்கின்றன. அவைக் கவித்துவமாக இருப்பது உண்மைதான் என்றபோதும் அச்சூழலுக்கு பொருத்தமற்றோ அச்சூழலின் தீவிரத்தை மழுங்கடிப்பதாகவோ தான் அமைந்திருக்கிறது.

அவரது பெயர் உச்சரிக்கப்பட்டதும் அடைமொழி மொழி போல கூறப்படும் சில சொற்களில் முதன்மையானது அன்பு. லோகு மதினியின் (ஈரம்-96) கண்கள் போல இந்த அன்பும் பளபளப்பும் ஈரமும் கொண்டிருக்கிறது. எனவே வாசகர் நெகிழ்ந்துப் போவதற்கானத் தருணங்கள் ஏராளமாக இருக்கின்றன.உண்மையில் இவ்வளவு ‘அன்பை’ச் சுமந்து காண்பவர்களின் கையை பற்றிக் கொள்கிறவருக்கு, அந்த அன்பின் ஒரு மிடறை பருகவும் அவர்களிடம் இரு மடங்காக அதைத் திருப்பிச் செலுத்தவும் முயல்கிற மனிதனுக்கு இவ்வுலகிடமிருந்து கிட்டுவது ஏமாற்றத்தின் கசப்புத்தான்.  இந்த வாழ்க்கை அவ்வளவு லகுவானதா என்ன? அதன் வகையறிய முடியாத குரூரங்களை, உக்கிரங்களை அன்பின் திரைச்சீலை கொண்டு மறைத்து விட இயலுமா? இயலும் என்றால் அந்த அன்பின் நான்கு பக்கங்களையும் கிருமிநாசினியினால் கழுவ வேண்டும். ஆம். அப்போது தானே அந்த மகத்தான பொய்யின் நாற்றத்திலிருந்து தற்காலிகமாகவேனும் தப்ப முடியும்? சில கதைகளில் அந்த இருளை நோக்கிச் சிற்றடிகளை வைப்பவராக அல்லது வைக்க முயல்கிறார் என்றாலும் மேலும் செல்ல அவருக்கு விருப்பமில்லை. வேண்டுமென்றே தவிர்த்து விடுகிறாரோ என்ற ஐயம் எழமலில்லை. அவரது எழுதித் தேர்ந்த கை வழமையான தடத்தில் புதிய தோற்றத்துடன் –அத்தோற்றத்தில் சிற்சில நேர்த்திகளுடனும் – மீண்டும் புகவே ஆசைப்படுகிறது. அவர் சுழித்தோடுகிறது எனக் கூறும் அன்பெனும் ஆறு நிதர்சனத்தில் என்றோ வற்றிவிட்டது. மணல் கூட அந்த ஆற்றுக்கு சொந்தமில்லை. அதில் கிடப்பவை பாதத்தை கிழிக்கும் முட்களும் கள்ளிச் செடிகளும் கொதிக்கும் பாறைகளுமே. இன்று அன்பு சுடுமணலில் சிந்திய நீர். அது விழுந்த கணத்தை அறிவதற்குள் ஆவியாகி விடுகிறது. நிலம் நனையும் அழகும் கூட கண் இமைக்கும் நேரமே. அவ்வளவு கொதித்துக் கிடக்கிறது வாழ்க்கை.

இதற்குள்ளும் அன்பின் சுடரை கனிவின் மலர்ச்சியை நிச்சயமாக இவ்வுலகு கொண்டிருக்கிறது. ஆனால் அதன் சதமானம் மீச்சிறு அளவே. அதற்கு மனநெகிழ்வுடன் வழிசமைத்து தருபவராக வண்ணதாசன் தோன்றுகிறார்.

ஊரே வெள்ளப்பெருக்கில் மூழ்கிக்கிடக்க, அதை வியப்புடன் கண்டு திரும்பும் கதைசொல்லி, தன் வீடு அவ்வெள்ளத்தால் நிர்க்கதிக்கு  ஆளானவர்களின் புகலிடமாக ஆகியிருப்பதைக் கண்டு தனக்குள்ளாக கூறிக் கொள்ளும் வாக்கியத்தில் (’வெள்ளத்தைப் பாலத்தின் அடியில் தான் பார்க்க வேண்டுமா? என்ன?’) துடிப்பது அன்பின் நரம்பு தான்(வெள்ளம்). பெயர் தெரியாத பறவை இறந்தது கண்டு தூக்கி வந்ததும் அதன் மீது உருவாகும் பரிவு சட்டென மடைமாறி மழையில் நனைந்த ரொட்டிகள் மீது படர்ந்துவிடுவதற்கு (பெயர் தெரியாமல் ஒரு பறவை) வேறென்ன பெயரை இடுவது? ஒன்றை பிடுங்கினால் இன்னொன்றை நட வேண்டும் எனச் சொல்கிற தாத்தா(நடுகை) அதன் வழி கூற விழைந்தது என்ன? ஒரு வகையில் ஒருவரை மற்றவரை ‘அது’, ’இது’ என அழைத்துக் கொள்ளும் போது இருவரிடையே முளைத்து நிற்கும் தாவரத்தின் பெயரும் அன்பென்று கொள்க.

மின்சார ரயில் பயணத்தில் நகரம் சார்ந்த விசித்திர அனுபவத்தை குரூரக் காட்சியை நேராக காட்டி விட்டு (’நடுகை’ முன்னுரையில்) தன்னியல்பாக பூக்களை நோக்கி சென்று விடுகிறார். இம்மனநிலையை அவரது கதைகளை நோக்கியும் விரிவுபடுத்திக் கொள்ளலாம். போலவே மழை பெய்வதை (அதன் கொப்புளங்கள் உடைவது முதற்கொண்டு) படைப்புலகினுள் இந்த அளவுக்கு அனுமதித்தவர் இவராகவே இருக்ககூடும். அதன் மீது வண்ணதாசனுக்குள்ள மோகம் தாரைகளையும் அது கொணரும் வாசனைகளையும் விட்டு வைப்பதில்லை. விரும்பத் தகாத மாற்றங்களை அடைந்து விட்ட வாழ்க்கையைப் பற்றிய புகார்கள் அடுக்கியபடியே வந்து (’பெய்தலும் ஓய்தலும்’ முன்னுரை) மழை என்ற சொல்லை அவர் எழுத்து தீண்டியதும் மலர்ந்து விடுகிறார். ‘அவர் பொருட்டு எல்லோருக்கும்’ போன்ற கதைகள் அந்த மனநிலையிலிருந்து உருவானவையே. நிறைய எழுதுகிற பருவம் மழைக்கு முந்தையோ அல்லது மழை பருவமாகவோ இருப்பதில் அவர் மகிழ்ச்சி அடைவதற்கான காரணத்தை வேறெங்கும் தேட வேண்டியதில்லை அல்லவா..! (’உயரப்பறத்தல்’ முன்னுரை).

வண்ணதாசன் படைப்புலகிலிருந்து ஊரை மட்டுமல்ல, ஆற்றையும் பிரித்து விட முடியாது. ‘மின்சார வண்டித் தடத்திற்கு மத்தியிலும் எங்கோ என் தாமிரபரணி ஓடுவதை நான் அறிந்தே இருக்கிறேன்’ என சொல்வது அதனால் தான்.

தி.ஜானகிராமனுக்கும் அசோகமித்திரனுக்கும் இடையே நடந்து செல்கிறவராக வண்ணதாசனை எண்ணிக்கொள்ள இடமுண்டு. வர்ணனைகள் அடுத்தடுத்து அடுக்கப்பட்ட (அது கூட கதையை நீட்டிச் செல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்ட) அவதானிப்புகளால் ஆன வண்ணதாசனின் உலகு அவர்களிடமிருந்து கிளைபிரிந்து சென்று விடுகிறது. தி.ஜா அழகால் ஆகர்ஷிக்கப்படுகிறார். அதற்கு தன் சொற்களால் ஒளியேற்றுகிறார். என்ற போதும் அது துறுத்தலாக தென்படுவதில்லை. அசோகமித்திரனின் மறைபொருளின் நுட்பமும் அர்த்தச்செறிவும் வண்ண தாசனிடம் காணக்கிடைக்கிறது எனினும் இரண்டுமே தன்னளவில் வேறு பட்டதாகும். ஏற்கனவே பலதடவை வாசகருக்கு உணர்த்தியதையே மீண்டும் மீண்டும் உணர்த்தத் தலைபடுகிறார் வண்ணதாசன். மனநகர்வும் முன்னமே அடைந்த அதே இடத்திலேயே. குடைராட்டினத்தில் பக்கவாட்டில் சுற்றிவிடுகிறவர்கள் தான் புதுப்பெயர்களோடு இருக்கிறார்களே ஒழிய –வேகத்தில் வேண்டுமெனில் கூடுதல் குறைவிருக்கலாம்- வந்து சேரும் இடம் முந்தையவரால் சுற்றப்பட்டு இறக்கி விடப்பட்டதற்கு சிறிது தள்ளி. எனவே அதே இடத்தில்தான் நிற்கிறோம் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றுகிறது.

இதழ் பிரித்து இதழ் பிரித்து நுண்மைக்குள் சென்று அதன் சுகந்தத்தில் லயித்து விடுவதாலேயே சமீபகாலம் வரை அவர் நாவலாசிரியாக உருமாறவில்லை போலும்.(“இலை வற்றி, இலை பழுத்து நிற்கையில் சற்று உள்பக்கம் சுருண்டு அதன் பின் பக்கம் தெரிவதில்லையா?அப்படி, முன் பக்கம் புடைத்துத் தெரியாத நரம்பெல்லாம் சுருளுடன் பின் பக்கத்தில் தானே தெரிகின்றன. ! இந்த பின்பக்கம் புடைத்த நரம்புகள் தான் எத்தனை அழகு.!”)

90களில் வெளிவந்த குறுநாவலாகச் சொல்லப்படுகிற ‘சின்னு முதல் சின்னு வரை’ அவ்வாறு ஆகியிருக்க வேண்டிய ஆக்கம் தான். சின்னு சம்பந்தமாக காதில் விழுந்தவற்றை பொருட்படுத்தாமல் அல்லது ஏற்றுக் கொள்ளாமல் அவளைக் காணச் செல்கிறவன் அவள் இப்போதிருக்கும் தெருவுக்குள் நுழைவதற்குள் மூன்று தலைமுறை நினைவுகளை அசைபோட்டு விடுகிறான். அந்நினைவுகளை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு கிளைபிரிந்து போகிறது. வண்ணதாசன் தீட்டும் சித்திரம் கண் முன் அவளை எழுப்பிக் காட்ட வல்லது. அவர் கதைகளில் ஊடாடி வரும் படிமத்தை போன்றே இதிலும் இடம்பெறும் படிமங்கள் நினைவின் சர்பத்தால் தீண்டபட்டவை. இன்றும் சில இடங்கள் அவ்வளவு ஒளியுடன் வாசிப்பவரை நெருங்கிவருகின்றன. சின்னு என்கிற ஸ்ரீனிவாசலட்சுமியை  தீட்டிக் காட்ட வண்ணதாசன் கையாளும் மொழியில் தி.ஜா நடையழகின் சாயைகள் சற்று தலைநீட்டுகின்றன.

தெருக்களின் மாறுபட்ட வர்ணங்களை ஒவ்வொரு அசைவிலும் அதன் தோற்றத்தில் உண்டாகும் சலனங்களை அதற்கு காரணகர்த்தர்களான மனிதர்களின் அப்போதைய வடிவங்களை நெருங்கிச் சென்று வெளிச்சம் போல மனதில் பரப்புகின்றன இக்கதைகளின் உலகம். அவர் கண்ணுக்கு கிளைகளின் அசைவு கூட தப்புவதில்லை. அந்த அசைவு அந்த மரத்திற்கும் அதன் நிழலுக்கும் அளிக்கும் புதிய தோற்றத்தைக் கூட விட்டுவிட மனம் இல்லாதவர். உடல்மொழியை விடவும் மனிதர்களின் தற்காலிக அசைவுகளைத் தொட்டெழுதுவதில் சலிப்பில்லாதவர். இது அவரது எழுத்தாக்க முறையின் கூறு என்ற போதும் பல சமயங்கள் அவை துறுத்தல்களாக ஆகிவிடுகின்றன. உதாரணமாக தந்தையின் மரணத்திற்கு அகால வேளையில் செல்லும் போது கூட(துக்கம்) தெரு சார்ந்த அவதானிப்புகளை நிரப்பிச் செல்வது மனித உணர்ச்சி அவ்வளவு இலகுவானதா? என்னும் கேள்வியை எழுப்புகிறது. இச்சம்பவம் கலாப்ரியாவுக்கு நடந்தது எனவும் அதையே கதையாக ஆக்கியிருப்பதாகவும் முன்னுரையில் சொல்கிறார். மடைமாற்றப்பட்ட அந்த அனுபவத்தில் அந்நபர் வண்ணதாசனாக ஆகிவிடுகிறார் என்பதாலேயே இத்தகு பொருந்தா வரிகள் அவ்விரவின் மீது எழுதப்பட்டிருக்கின்றன. அவரது பல கதைகளிலும் நிகழ்வது தான் இது. தனிப்பட்ட குணாம்சம்களால் யூகிக்க இயலாத மன அமைப்பு கொண்ட மனிதர்களால் ஆன உலகில் வண்ணதாசன் கதைகளில் இடம்பெறுகிறவர்கள் அவரைப் போலவே ஆகிவிடுகிறார்கள். அவ்வாறு நிகழாத கதைகளும் உண்டு எனினும் அது ஒப்பீட்டளவில் குறைவே. எழுதுகிறவன் எழுதும் ஒன்றாக ஆவதற்கு அல்லது அவர்களை அவ்வாறே இருக்க விடுவதற்கு மாறாக இங்கு தலைகீழாக ஆகிவிடுகிறது. பாத்திரங்களுக்குள் எழுத்தாளனின் சில இயல்புகள் அங்குமிங்கும் ஒட்டியிருப்பது இயல்பே. ஆனால் கதைசொல்லியைப் போலவே பிறரும் இருப்பதைக் காண்பது நெருடுகிறது.  நாடகீயத் தருணங்களின் பக்கம் திரும்பிக் கூட பார்க்காத இவரது உலகின் பலரும் தேர்ந்த சொற்களில் உட்பொதிந்த மெளனங்களுடன் உரையாடுவதை வாசிக்கையில் ஏற்பட்ட எண்ணம் இது.

ஒரு காலகட்டத்திற்கு பின் எழுதப்பட்ட மிகப் பலக் கதைகளிலும் காணநேர்ந்த ஒற்றுமை சட்டென வியப்பை அளித்து நிமிர்ந்தமரச் செய்தது. கதைசொல்லி யாரையேனும் காணச் செல்கிறார். அல்லது அறிமுகமான அல்லது அறிமுகமற்ற யாராவது கதைசொல்லியைப் பார்க்க வந்து விடுகிறார்கள். இவையிரண்டாலும் ஆன ஆக்கங்களைத் தனியாகப் பிரித்து அடுக்கிவிடலாம் என்பது போல இவற்றின் எண்ணிக்கை மிக அதிகம். ‘மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது’ போன்ற அவரது முக்கியமான கதைகளில் சிலவற்றை இவற்றுள் கொண்டுவந்து நிறுத்தலாம்.

வண்ணதாசனின் சமீபத்திய இரு தொகுப்புகளில் ஒப்புநோக்க ‘ஒரு சிறு இசை’ விட மேம்பட்ட தொகுதி ‘நாபிக்கமலம்’. அவரே சொல்வது போல வயதானவர்கள் புழங்கும் கதைகளுள்ள தொகுப்பும் கூட. ஏற்கனவே எழுதித் தீர்த்தவற்றின் புதிய ஜாடைகளைக் கொண்டிருக்கிறது எனினும் கபாலியாப் பிள்ளை(சற்றே விலகி) போன்ற ஒருவரை மகாமாயி அத்தையை காண நேர்கிறதே.

கனிவு மேலும் கூடுவிடுகிற தொகுப்பு ‘ஒரு சிறு இசை’. ‘அப்பாவைக் கொன்றவனை’ப் பார்த்து மட்டுமே நிற்க முடிகிற சித்திரை (1997)யை எழுதியவர் பின்னும் பதினைந்து ஆண்டுகள் கழித்து எழுதிய கதையில் பேருந்தில் சங்கிலி அறுத்தவன் எனத் தெரிந்தும் மாதுளைப் பொறுக்கித் தருபவராக கதை சொல்லியையும் அவர் மகளையும் நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்கிறார். அலைந்து திரியும் பரமு எப்போதோ விட்டுப் போன ஒருவளை கூட்டி வந்து வீடு சேரும் ‘கல்பனா ஸ்டுடியோவில் ஒரு போட்டோ’, போன்றவை மட்டுமல்ல எதையோ கேட்கப் போய் என்றோ ஆசைப்பட்டு கை கூடாமல் போன பேபியை காண சட்டென விரும்பி நிற்பது மனதின் ரகசியக் கதவு திறந்த கணம் அல்லவா? இத்தொகுதியின் முக்கியமான கதை ‘மன்மத லீலையை..’. கனவின் இடவல மாற்றத்தின் ஊடாக மனிதனுக்குள் சிறகு விரிக்கும் காமத்தின் ஓராயிரம் மூச்சுகளுள் ஒன்றினுள் நொதிந்து கிடப்பதென்ன? எனக் காட்டும் கதை.

பூக்களுக்கும் மரங்களுக்கும் அதனதன் பெயர்கள் உண்டு. இன்றைய நவீனச் சிறுகதைகள் போல ஒரு பூ என்றோ பெயர் அறியாத பூவுக்கு அதன் நிறத்தையே அடையாளமாகச் சுட்டி மஞ்சள் நிறப்பூ என்றோ எங்குமோ மொட்டையாக வண்ணதாசன் குறிப்பிடுவதில்லை. அது போலவே மரங்களையும். ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய பெயர்கள். வண்ணதாசனின் படைப்புலகில் இடம்பெற்றிருக்கும் பூக்களையும் மரங்களையும் அட்டவணைப்படுத்தினால் அதுவே முக்கியமான பணியாக இருக்கும். இக்காலத்தில் அவற்றில் உயிரோடிருப்பவைகளை அறிந்து கொள்ள அப்பணி உதவக்கூடும். 21ஆம் நூற்றாண்டின் வாசகர் பலருமே இக்கதைகளின் வழியே ஒரு சொல்லாகத் தான் இந்தப் பூக்களின் பெயர்களை அறிவார்களாயிருக்கும். ஆனால் இத்தனை எண்ணிக்கைகள் கொண்ட கதைகளில் விலங்குகளுக்கோ பிராணிகளுக்கோ இடமேதுமில்லை. பசுக்கள் வருகின்றன. அவ்வளவே. ‘பூனை’ ஒரு கதையில் நுழைந்து விட்டிருக்கிறது(பூனைகள்-71). இதுவே அவரது மொத்த புனைவுகளிலும் வித்தியாசமான கதைகளில் முதன்மையானது. அறைக்குள் நுழைந்து விட்ட பூனையை வெளியேற்றும் பிரயத்தனங்களால் ஆனது கதை இது. ‘கசடதபற’வில் வெளிவந்ததால் கூட இது போல முயற்சித்து பார்த்திருக்கக்கூடும். ஆனால் மறுஆண்டே ‘விழ முடியாத படங்கள்’ போன்ற அவரது மேலுமொரு நல்ல கதையும் அதில் தான் வந்திருக்கிறது.

வண்ணதாசனின் கதைகள் மிகுதியும் வெளிவந்தது ‘தீபம்’ இதழிலேயே. எழுத்தாளன் உருவாகி வரும் போது அவனுக்கு களம் அவசியமல்லவா? அதை தீபம் செய்திருக்கிறது. கிட்டதட்ட அவரது 90-கள் வரையினாலான கதைகளில் இருபத்தைந்தை தொடும் எண்ணிக்கை இவ்விதழிலேயே பிரசுரமாகியிருக்கிறது. பிறகு புதிய பார்வை, சுபமங்களா, இந்தியா டுடே, காலச்சுவடு, குங்குமம் என அவர் வாசகர்களை அடைந்திருக்கிறார். சமீபமாக அவரது கதைகள் ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கின்றன. அதை விடவும் தற்சமயம் அவர் விரும்பியதை எழுதிக் கொள்ளும் களமாக இருந்து வருவது ’உயிர் எழுத்து’ இதழே.

ஒரு நல்ல கதையை வாசித்து முடித்ததும் வாசகர் மேல் கவிகிற அமைதிக்கு கதையின் முடிப்புக்கு முக்கியமான பங்குண்டு. வண்ணதாசன் பல கதைகளை முடிக்க (குறிப்பாக 90கள் வரை எழுதிய கதைகள்) எழுதும் வாக்கியம் அத்தகையதே. நடுவிலே தாவிச் சென்று சோதித்தாலும் அவ்வளவு சரியான இடத்தில் கோட்டைக் கிழித்து விடுகிறார். ஆன போதும் தொண்ணூறுகளைக் கடந்து  புத்தாயிரத்திற்கு அவர் கதைகள் வரவேயில்லை. இந்த ஆண்டு அவர் எழுதும் கதையை 80களிலோ 90களிலோ வெளிவந்த தொகுப்பில் சேர்த்தாலும் ஒரு வித்தியாசத்தையும் அது கொண்டிருக்காது. அன்று வாழ்த்து அட்டை இடம்பெற்றிருந்தது என்றால் இன்றைய கதைகளில் செல்பேசி. அவ்வளவே. வேறெந்த மாற்றத்தையும் நோக்கி அவர் செல்லவேயில்லை.

ஒரு காலகட்டத்தில் எழுத்தாளர்களின் உறவும் ஒரு அர்த்தத்தில் இலக்கிய மதிப்பீடுகளும் ரசனையுமே கூட அவர்களுள் பரிமாறப்பட்ட கடிதங்களின் வழியாகவே உருவாகிவந்தது எனலாம். ஆனால் வண்ணதாசனின் கடிதங்களில் அத்தகு பரிமாற்றங்கள் குறைவே. வண்ணதாசனின் படைப்புகளின் இன்னொரு பரிணாமமே அவரது கடிதங்கள். அவற்றிலும் இந்த வாழ்க்கையை நேசிக்க இடர்களிலிருந்து மீள மழையை பார்த்திருக்க அன்பின் வழியெது என கை காட்ட தொடர்ந்து முயன்று கொண்டிருப்பவராகவே தென்படுகிறார். அவை கடிதங்கள் என்பதைத் தாண்டி ஒரு படைப்புத் தருணத்தின் அழகோடு இருக்கிறது. வாழ்வில் பல நுட்பமான தருணங்களைச் சட்டென்று இக்கடிதங்களின் வரிகளில் போய் தொட்டுவிடுகிறார். வண்ணதாசனால் கதை எழுதும்படி வற்புறுத்தப்பட்ட அந்த ‘காயத்ரி’ என்ன ஆனார்? எனத் தெரியவில்லை. கோவை ஞானி எழுதப்பட்ட கடிதங்கள் நினைவில் நிற்கிறது. விக்கிரமாதித்யனை வந்து பார்க்க வேண்டாம் எனச் சொல்லி விட்டு அதற்கடுத்த சில தினங்களுக்குள் அதற்கு வருத்தம் தெரிவித்தும் ஒரு கடிதம் எழுதுகிறார். விக்கியை அந்த வாழ்க்கைக்குள்ளிலிருந்து மீட்கும் முயற்சிகளும் அக்கறைகளும் கடிதங்களில் தெரிகின்றன. வேலை நிமித்தம் பணி மாறுதல்கள் பெற்றதால் இந்தக் கடிதங்கள் எழுதப்பட்ட ஊர்கள் வெவ்வேறானவே. கடிதம் எழுதப்பட்ட ஆண்டுகளில் எந்த ஊரில் வசித்தார் என்று தெரிந்து கொண்டு அந்த ஆண்டுகளில் அவர் எழுதிய கதைகளை அதன் கருக்களை ஒப்பிட்டுக் கொண்டிருந்தேன். இதில் தெரியும் முகமும் அவர் கதைகளின் வழி தெரியும் முகமும் வெவ்வேறானதல்ல. சில கடிதங்களில் இருக்கும் சகஜபாவம் மட்டுமே வித்தியாசம்.

காணும் பொருளிலெல்லாம் அழகை தரிக்க விழையும் வண்ணதாசன் படைப்புலகம் அவசரகதியில் தட்டுப்படாதவற்றை அருகில் கொண்டு வந்து காட்டுகிறது. சகலரின் கைகளையும் பற்றிக் கொள்ள விழைகிறது. அன்பு அன்பு என அகவுகிறது. பூக்களை எடுத்து கைகளில் வைத்துக் கொள்ளவதில் ஆனந்தம் கொள்கிறது. உறவின் வானவில்லை ஆகாயத்தில் தீட்டிக் காட்டுகிறது. மண்ணிலிருந்து அந்த ஆகாயத்தை முகம் மலர தலைஉயர்த்தி பார்த்துக் கொண்டிருக்கிறோம். தொடுவானத்திற்கருகே சென்றால் ஒரு வேளை அதை தொடக் கூடலாம். ஆனால் அருகில் செல்லும் போதே மேலும் தொலைதூரத்திற்கு அந்த தொடுவானம் சென்று விடுமே? என்ன செய்ய?

குறிப்பு : மேற்கண்ட கட்டுரை வண்ணதாசனின் மொத்த சிறுகதைகளின் உலகையே மதிப்பிடுகிறது. அவர் கல்யாண்ஜி என்னும் பெயரில் எழுதிய கவிதைகளை எடுத்துக் கொள்ளவில்லை. வண்ணதாசன் கடிதங்கள் நூலும் இக்கட்டுரைக்கு பயன்பட்டிருக்கிறது.

உதவியவை :

வண்ணதாசனின் படைப்புகள் அனைத்தையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கீழ்காணும் அவரது நூல்களே இக்கட்டுரைக்கு உதவியவை.

சிறுகதைத் தொகுப்புகள்சந்தியா பதிப்பகம்

————————————————————————

 1. கலைக்க முடியாத ஒப்பனைகள்
 2. தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்
 3. சமவெளி
 4. பெயர் தெரியாமல் ஒரு பறவை
 5. மனுஷா மனுஷா
 6. கனிவு
 7. நடுகை
 8. உயரப்பறத்தல்
 9. மேற்கண்ட தொகுப்புகளிலுள்ள கதைகளை மொத்தமாகச் சேர்த்து வெளிவந்த ‘வண்ணதாசன் கதைகள்’(2000)
 10. கிருஷ்ணன் வைத்த வீடு
 11. பெய்தலும் ஓய்தலும் (2007)
 12. ஒளியிலே தெரிவது (2010)
 13. ஒரு சிறு இசை (2013)
 14. நாபிக் கமலம் (2016)
 15. சின்னு முதல் சின்னு வரை – குறுநாவல்
 16. எல்லோருக்கும் அன்புடன் – வண்ணதாசன் கடிதங்கள்