பெரு.விஷ்ணுகுமார் கவிதைகள்

புகைப்படம் : அனாமிகா

ஓவியம்  : அனந்த பத்மநாபன்

 

 

 

 

 


இருப்பதற்கு இல்லை என்று பொருள்

அதற்குள்ளாகவே
நீ சொன்ன இடத்திற்கு வந்துவிட்டேன் பார்த்தாயா
சரி அங்கிருந்து ஐந்தடி முன்னே வந்தால்
ஆள் நடமாட்டமேதும் இருக்காது
அவர்களில் யாரிடமாவதுபோய்
என்-ஊர் எங்கிருக்கிறதென விசாரி
பின் அவ்வழியே நிற்காமல் செல்லும் பேருந்தில் ஏறவில்லையெனில்
மூன்றாவது நிறுத்தத்தில் ஊர்க்குளமொன்று இருக்காது
அதைத்தாண்டுவதற்கு
நின்ற இடத்திலிருந்தே குதித்தால்போதும்
ஒருவேளை தவறி விழுந்தாலும் நீ நனையமாட்டாய்
அதெப்படி சாத்தியம்
நாதான் சொன்னேனே அங்கு குளமில்லையென்று
பின்பு அங்கிருந்து வலப்பக்கம் திரும்பினால்
பெரிய மரமொன்று இருக்காது
மன்னிக்கவும் இங்கு மரமுள்ளது
அப்படியா அதை ஒரு படமெடுத்துக்கொள்
இநநகரத்தின் கடைசி மரமது
அது மடியும்வரை காத்திருந்து
பின்பு நேராக வந்தால்
எதிரே பளிங்கு வீடொன்று இருக்காது
வாசலில்கூட ஒரு பிச்சைக்காரன் கெஞ்சிக்கொண்டிருக்கமாட்டான்
உனக்கு விருப்பமெனில் உள்ளேசென்று
சற்று நீரருந்தாமல் திரும்பலாம்
அப்புறம் அங்கிருந்து……..
போதும் போதும்
இனி ஒரு அடி கூட எடுத்துவைக்க இயலாது
ஹேய் நீ வரவேண்டிய இடம் வெகுதூரத்தில்
என்னால் முடியாது சாமி
வேண்டுமெனில் உன் முகவரியை
இவ்வீட்டிற்கு மாற்றிக்கொள்…

 

 

 

 

 

வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டுத் தொங்குதல்

நம் எடைக்குச் சமமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து
அதை உச்சரிப்பதற்கு உன்னதமானவொரு இளித்தவாயன்
தேவைப்படுகிறான்
ஆனால் வார்த்தைகளோ
பூங்காவில் சறுக்கி விளையாடும் குழந்தையைப் போல்
நாக்கிலிருந்து சறுக்கி வருகிறது
அதைப் பிடித்து அந்தரத்திலே நிறுத்தி
மொதுமொதுவென அதன்மேல் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள்
இன்னும் சிலரோ அவ்வார்த்தைப் பின்தொடர்ந்து சென்று
அதன் பொருள்மீது தொங்குவது
என் ஆசிரியர் இரண்டாம்ரகம்
சிறுவயதில் பல்லத்தாக்கு என்றெழுதி
நிறையதடவை மொத்துவாங்கி
பின் நான் வளர்ந்துவிட்டேன்
அவரோ இன்றுவரை
என்னைக் காணும்போதெல்லாம்
அப்பள்ளத்தாக்கில் தொங்குவார்
ஆச்சரியம்தான்
இத்தனை ஆண்டுகளில்
அங்கிருந்து ஒருமுறைகூட
அவரும் விழுந்ததில்லை
அப்பள்ளத்தாக்கும் விட்டதில்லை…

 

 

 

 

 

 

ஏணி

இப்போதைக்கு யாரும் ஏணியிலேறவேண்டாம்
தடை செய்யப்பட்டுள்ளது
உங்கள்பாட்டுக்கு சாதரணமாய்
ஏறி இறங்கிவிட்டுப் போய்விடுவீர்கள்
ஆனால்
இதுவரையிந்த ஏணியில்
மேலேரும்போது கீழிறங்கவும்
கீழிறங்கும்போது மேலேறியும் வந்த வானத்தை
இப்போதுதான் ஆடாமல் அசையாமல்
ஒட்டிவைத்துள்ளோம்
ஹே… ஏறதான் கூடாது
மற்றபடி அருகேதான் ரயில்நிலையம்
உன் ஏணியை தரையில் கிடத்தினால்
உண்டாகும் தண்டவாளத்தில் தலைவைத்து
நான்கு மாதங்களுக்குப் பின்னால் நிகழவிருக்கும்
தற்கொலைக்குப் பயிற்சியெடுப்பாய் மகளே
ரொம்பவும் வலிக்கக்கூடியது.
இங்கு கோடாரியின் பெயர் துப்பாக்கி…!!
மரம்வெட்டும் தொழிலாளியின் கோடாரி
இன்று அநியாயத்திற்கு வேலைசெய்கிறது
வெட்ட வெட்ட பதறியசையும் அம்மரத்தை
வாகுவான மேசைசெய்யக் கேட்டிருக்கிறார்கள்
இதை அம்மரமும் அறியும்
அது கிட்டதட்ட
அந்த அதிகாரத்தின் மேசையாகவே
தன்னை நினைக்கத்தொடங்கிவிட்டது
அதிகாரி வருகிறார்
மேசைமீது கால்களை வைத்தபடி உறங்கிக்கொண்டிருக்கிறார்
அதேமேசையின் ஓரத்திலேதான்
ஒரு மரம்வெட்டுபவனின் முன்னே
சில தோட்டாக்களை ஏப்பமிட்ட துப்பாக்கியையும் வைக்கிறார்
இப்போது மேசையை கவனியுங்களேன்
அது இன்னும் தன்னை
மரமாக நினைகின்றதோ என்னவோ
மரம்வெட்டுபவனின் கோடாரியை நினைத்தபடி
பதறியசைந்துகொண்டிருக்கிறது
இன்னும் உற்று கவனியுங்களேன்
மேசை மட்டுமா நடுங்குகிறது
வெகுநாட்களுக்குப்பிறகு
அதிகாரியின் கால்களும்

———————————

பெரு.விஷ்ணுகுமார் : இயற்பெயர் விஷ்ணுகுமார். பழனிக்கு அருகில் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்தவர். தற்போது காரைக்குடியில் முதுகலை இயற்பியல்  பயின்று வருகிறார். சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.