ஷாஅ கவிதைகள்

 

 

 

 

 

 

போஸ்டீரியர் கவிதைகள்

 


இயற்கை, பிரபஞ்சத்தின் எல்லா இயக்கங்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. கவிதையும் ஒரு செயல்தான் அதில். கவிதையோ வேறு எதுவோ நிகழ வேண்டி, அண்ட வெளி பின்புலமாக அமைகிறது என நான் பார்க்கிறேன். அது அனுபவப் புலமாக ஈடுகொடுக்க உருவாக்கும் தளம் குறித்தும் சில கவிதைகளை நான் அவ்வப்போது எழுதி வருகிறேன். பின்பக்கக் கவிதை என்று  வசதியாக அவை போன்றவற்றிற்கு அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.

 

வர்ணனைகளும் கருத்துகளும் படியாமல், இயற்கைச் செயல் ஒரு சம்பவமாக ஏற்றம் பெறும் முன்பே அதாவது அனுபவமாக மனம் ஏற்றுக்கொள்ளும் முன்பே நிகழின் இருத்தலை கவிதையில் வடிக்க முனைந்திருக்கிறேன். இதற்கு முன்பு இப்படி எழுதப்பட்ட கவிதைகளுக்கு உலகில் ஏற்கனவே ஏதேனும் கருதுகோள்வகை இருக்கிறதா என எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அதனால் இவற்றிற்கு பின்பக்கக் கவிதைகள் (அல்லது பின்புலக் கவிதைகள்) எனத் தமிழிலும் posterior poems என ஆங்கிலத்திலும் பெயரிட்டு எழுதி வைத்திருக்கிறேன். அதேநேரம் இவ்வாறு பெயர் எதையும் வழங்காமலும் கவிதைகளை எழுதவும் வாசிக்கவும் இயலும் என்பதையும் நான் பூரணமாக நம்புகிறேன்.

-ஷாஅ

புகைப்படம் : அனாமிகா


மெனு (ஒரு போஸ்டீரியர் கவிதை)

இன்று காலை என்ன டிபன்
ரெண்டு கண்கள்
ஒரு சூரியன்

ஓ..மத்தியானம்
உச்சி நடு வானம்
மிடறு தண்ணீர்
மிடறு தண்ணீர்

மாலையில்
மென் காற்று
ஓரலை ஈரலை
கால் குறுகுறுக்கும் ஸ்பரிச அலை

நன்று, இரவில்
ஒற்றை இருள்
அவ்வளவே

பகல் நடுவில் ஏதாச்சும்
உருளும் உலகம்
கொறிக்க எப்போதும் அன்றாடம்

இந்த நாள் ஓகே
நாளை சில கேள்விகள், எப்போ வரலாம்
நாளைக்கும்
இப்போ

 

வரப் போகும் மழை (ஒரு போஸ்டீரியர் கவிதை)

ஒரு விவசாயியின் வானமும்
ஒரு சித்திரக்காரனின் வானமும்
தெரிகிறது
இங்கிருந்தும்
அங்கிருந்தும்
கண்ணில் அடங்காத வயல்களுக்கு நடுவில்
சிலுங் சிலுஙென
போகும் பாதையில்
பின்னால் வருகின்றன இரண்டு ஆடுகள், சடைகள்
துணையாக
சாய்ந்தாடும் சிரிப்பு.
மாட்டு வண்டியில்
குலுங்கிக் குலுங்கி விழுவது,
தோள்பையில் எகிறும்
பிரஷ்ஷும் குப்பிகளும்
காற்றுக்கு ஒரே குதூகலம்
என்ன ஒரு வீச்சு
என்ன ஒரு பேச்சு

வரப்போகும் மழையோ
சாவதானமாக
ஓவியம் தீட்டிக் கொண்டிருக்கிறது
கதிர்களின் மீதும்
கேன்வாஸ் மேலும்

 

தூர விழி (ஒரு போஸ்டீரியர் கவிதை)

மணல்வெளி எங்கும்
மணல் மட்டும் நடக்கிறது

ஒட்டாமல் துகளென
விழும் கால்
அங்கங்கே நின்றுகொள்கிறது

மணல் சிலபொழுது,
தாவிப் பறந்து
அமர்கிறது
ஓடும் நண்டின் பின்னால் ஓடுகிறது
நல்லவெயிலை இழுத்துக் காய்ந்தும்
சாயுங்காலம்
தன்னிச்சையாய்த் திரிந்தபடியுமிருக்கிறது

இன்னமும்
கட்டுமரவரிசை விறைத்து ஏறாத
கடற்கரையோரம்
பகலோ இரவோ
மழையோ புயலோ
கடுக்க நின்று
விரிந்த வலைஇழைப் பின்னலின்
தூரவிழியில், அது
எதையும் கேட்பதில்லை

ஈரம் மீளாக்
கடல் முத்தம் தவிர

*