சாம்ராஜ் கவிதைகள்

ஓவியம்  : அனந்த பத்மநாபன்.

 

 

 

 

 


 

 

1

ரப்பர் மரங்களுக்குள்
காலையின் சூரிய ஒளி

புழைக்கு போகிறது
இப்பாதை

சலவைக்கல் வீட்டில்
கர்த்தர் சட்டகத்துக்குள்
தெற்கு பார்த்து அமர்ந்திருக்கிறார்

ரோமம் இல்லாத தேகமாய்
நிற்கின்றன பாக்கு மரங்கள்

நல் இதயங்களுடன்
பள்ளிக்கு போகிறார்கள் சிறுமிகள்

மீன்காரனின் கூவலுக்கு
காத்திருக்கின்றன பூனைகள்

“சர்ப்பம் அழிச்சு” கீதம்
எங்கிருந்தோ மிதந்து வருகிறது

கதகளி கோலத்தில்
உத்திரத்தில் தொங்கும்
ஜோசப் சாக்கோ
காத்திருக்கிறார் கதவு உடைபட

———————————–

2

கையில் கூண்டோடு
ஜோசியக்காரன்
மரம் மறைவில்
சிறுநீர் கழிக்கையில்
முகத்தை திருப்பிக் கொள்கிறது கிளி

——————————-

3

சுரங்கங்களைப்பற்றிய பேச்சு
எப்பொழுதும்
மர்மாகவே இருக்கிறது.

கோவிலிருந்து கடற்கரைக்கு
அரண்மனையிலிருந்து கோவிலுக்கு
பொக்கிஷ அறைகளிலிருந்து
கைவிடப்பட்ட பழைய நந்தவனங்களுக்கு
போகின்றன அதன் ரகசிய பாதைகள்

பேசும்பொழுதே
மண் சரிகின்றன
வார்த்தைகளின் மீது

உரையாடும் எவரும்
நேரில் கண்டதில்லை அதை

பாதாள சாக்கடைக்காக
நகரமே தோண்டப்பட
மறுபடியும் சொற்களில்
உயிர் பெறுகின்றன சுரங்கங்கள்

கழிவுநீர் குழாய்கள் பதிக்க வெட்டப்பட்ட
ஆழமான குழிகளை
சரித்திர சந்தேகங்களோடு
கடந்து செல்கின்றனர்.

கான்கீரிட் இடப்பட்ட
சாலைகளில் பயணிப்பவர்
மானசீகமாய்
நடக்கின்றனர்
ஒரு சுரங்கத்தின் மீது.

பின்னிரவில்
வெளிவரும் பெருச்சாளி
தன் அநாதி மூதோன்
கல்லாகப் பார்த்த தூணின் மிச்சத்தில்
சற்று நேரம் பதுங்கிப்போகிறது.