ஆனந்த் கவிதைகள்

புகைப்படம் : அனாமிகா

 

 

 

 

 


 நிலைக்கண்ணாடி – 1

வட்டமான அந்த
நிலைக்கண்ணாடிக்குள்ளேதான்
எல்லாம் இருக்கிறது
முதல் துகளில் இருந்து
தொடங்கிப் பரிணமித்து
இக்கணம் வரையில்
எல்லாம் அங்கேதான் நடக்கிறது
பழையதை விடுத்துவந்த புதியது
மீண்டும் பழையதாகித்
தன்னையும் விடுக்கும் சங்கிலித் தொடர்
நீண்டுகொண்டே போகிறது
முதலில் கண்ணாடியை அலங்கரித்துக்
கொண்டிருந்தேன்
பூவேலைப்பாடுகள் செய்த அழகான
சட்டங்கள் போட்டுவைத்தேன்
பிறகு நீண்ட காலம் கழித்து
அலுத்துப் போய்
அந்த முயற்சியைக்
கைவிட்டேன்

பின்னர் கண்ணாடியைத்
துடைக்கத் தொடங்கினேன்
துடைக்கத் துடைக்க
அந்தக் கண்ணாடி
என் முகத்தை இப்போதெல்லாம்
தெளிவாகக் காட்டத் தொடங்கியிருக்கிறது

கண்ணாடியின் விளிம்புக்கு வெளியில்
யாருமில்லை எதுவுமில்லை
எப்போதும் இல்லை
எதுவும் நடக்கவில்லை
முகமற்ற எந்தன்
மனமற்ற கானம் மட்டும்
கேட்டுக்கொண்டே இருக்கிறது

நிலைக்கண்ணாடி – 2

கண்ணெதிரே
நிலைக்கண்ணாடியில்
தெரியும் உலகினுள்
நுழைந்துவிடத்தான்
ஆயுள் முழுவதும்
முயன்றுகொண்டே இருக்கிறேன்
ஒரு அடி முன்னே
எடுத்து வைக்கிறேன்
கண்ணாடி அங்கேயே இருந்தாலும்
கண்ணாடி உலகம் ஒரு அடி
பின்னே நகர்ந்துகொள்கிறது

ஆழமும் அகலமும் உள்ள
உலகம்தான் அது
ஆனாலும்
உள்ளே நுழைய முடியவில்லை
இதுவரையில்

கண்ணுக்குத் தெரிகிறது
கால் நுழைய விழைகிறது
மனம் ஏங்கித் தவிக்கிறது
மர்மம் இன்னும் விளங்கவில்லை

கண்ணாடிக்குள்ளே
பரந்து விரியும் உலகுக்கும்
என் உலகவெளிக்கும் இடையே
தொடர்ந்து என்னிடமிருந்து
நகர்ந்து விலகிப் போகும்
எல்லைக்கோட்டில்
என் இடைவிடாத
வாழ்வெளிப் பயணம்
தொடர்கிறது

சோர்ந்துபோய்க்
கண்ணாடிக்குள் நுழையும்
இந்த முயற்சியைக் கைவிடுகிறேன்
இப்போது
என்னிடமிருக்கும் ஒரே கேள்வி
கண்ணாடியின் முன்
யாரும் நிற்காதபோது
எதுவும் இல்லாதபோது
கண்ணாடி எதைக் காட்டுகிறது
என்பதுதான்

*