லாவண்டர்

 

-கபில் ஸ்ரனிஸ்லஸ்

ஓவியம்  : அனந்த பத்மநாபன்


நிலைகண்ணாடிக்கு முன்னே நின்று மஸ்காரா போட்டு கொண்டிருந்தாள்.பரபின் மெழுகு மணம் தூக்கலாக வந்தது.மஸ்காரா பரபின் மெழுகால் ஆக்கபடுகிறது என்பதை அவள் அழகு குறிப்புகளில் படித்திருக்கிறாள்.குளிக்கும் சோப்பிலும் மித மிஞ்சிய பன்றி கொழுப்பு நாற்றம்.தன்னையே ஒரு பன்றி போல உணர்ந்தாள்.சேற்றில் ஊறிய உரோமங்கள் அற்ற வளவளப்பான தோலை கொண்ட பன்றி.பிங் நிறம்.ஒரே அருவருப்பு.தன்னை தானே நிர்வாணமாக பார்க்கவும் அசூயை.முதலில் சோப்பை மாற்ற வேண்டும்.முன் எப்போதுமே இவள் இப்படி இருந்தது இல்லை.எல்லாமே இந்த இரண்டு நாட்களாக தான்.வாசனைகளை அபரி மிதமாக முகர முடிகிறது அவளால்.

இப்போது ஒரு தெரு நாயின் வாடை. தோல் சுருங்கி றப்பர் போல் அலையுமே? அப்படி ஒரு நாய்.அது அவளிடமிருந்து வரவில்லை.அறையை விட்டு வெளியே வந்து ஹோலை கடந்து முற்றத்துக்கு போனாள். கேட் திறந்து கிடந்தது.திரும்பவும் ஹோலுக்கு போய் தும்பு தடியை எடுத்து கொண்டு வீட்டின் பின் பக்கமாக நடந்தாள்.அதுவே தான். தெரு நாய்.பெயர் கறுப்பி.ஓங்கி ஒரு அடியுடன் ‘கொல்’ என்று ஓட்டம் பிடித்தது நாய்.திரும்பி வந்து கேட்டை சாத்தினாள்.என்ன செய்வது? அது மீண்டும் இன்று இரவே வந்து விடும்.பூ வேலைப்பாடு நிறைந்த கேட் என்பதால் ஒவ்வொரு பூக்களுக்கு இடையேயும் இடைவெளி.பூனை நுழைய போதுமானது.அந்த றப்பர் நாயும். கறுப்பி.
முஷபார் வந்ததும் இதை சரி செய்ய வைக்க வேண்டும். வேலி வரியும் கம்பி இருந்தாலே இடைவெளியை அடைத்து விடலாம்.அவன் நாளை தான் வருவான்.இன்று எப்படியும் கறுப்பி உள்ளே வந்து விடும்.அதற்காக தும்பு தடியும் கையுமாக அலைய முடியாது.

இப்போது சிகரெட் வீச்சம்.     இல்லை பீடி. வாப்பா பிடிக்கும் அதே பீடி.மதில் சுவர் ஓரமாக ஆண்களின் கிசுகிசு பேச்சு.ஆண் துணை இல்லாத வீடு நாதியற்று போய் விடுகிறது. தனியாக வசிப்பதில் ஒரே பயம்.முஷபார் நாளை வரும் வரை சமாளிக்க தானே வேண்டும்? கொழும்பில் மீட்டிங் என்று சொன்னான்.அவனது பதவி அப்படி.மனேஜர் மீட்டிங் போனால் அவனும் கூட போக வேண்டும்.

இதை முஷபாரிடம் எப்படி சொல்வது? என்னால் வாசனையை உணர முடிகிறது என்றால் நம்புவானா? அவனாலும் முடியுமே.ஆனால் என்னால் ஒரு வாசனையின் அடி நாதம் வரையிலும் போக முடியும்.அவனிடம் இதை சொல்லலாமா? சொன்னால் சிரிப்பான்.ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.மஸ்காராவில் பரபின் மெழுகு,சோப்பில் பன்றி கொழுப்பு……இவற்றை அவனும் எங்கேயாவது படித்து தெரிந்து கொண்டிருப்பானே.ஆதாரம்…..ஆதாரம்…..ஏதாவது சிக்கும்.முஷபார் நாளை தானே வருகிறான்.நேரம் கிடக்கிறது.

நேரம் ஏழரை. இரண்டு நாட்களாக அவள் எட்டரைக்கே தூங்கி விடுவதால் ஏழரைக்கு சாப்பிடுகிறாள்.பாணும் டின் ஃபிஷ் சம்பலும்.பாணிலிருந்து ஈஸ்ட் வீச்சம்.இனிமேல் இந்த பேக்கரியில் பாண் வாங்க கூடாது.டின் ஃபிஷில் இருந்து வெடுக்கு நாற்றம் மூக்கை துருத்தியது. குடலை புரட்டியது. சரியாக சாப்பிடவும் முடியவில்லை.பாதியில் எழுந்தாள்.மிஞ்சிய சாப்பாட்டை என்ன செய்வது? எதிர் வீட்டு மிதுளாவிடம் கொடுக்கலாம்.எடுத்து கொண்டு கேட் வரை நடந்தாள்.பீடி மணம்.அதே கிசுகிசு பேச்சு.அந்த மணமே கடும் மன உளைச்சலை உண்டு பண்ணியது.சாப்பாட்டை கொண்டு வந்து மேசையில் வைத்து விட்டு கட்டிலுக்கு போனாள்.

மிதுளா இந்த நேரத்துக்கு எல்லாம் சாப்பிட்டிருக்க மாட்டாள்.சாப்பாட்டை கொண்டு போய் கொடுத்திருக்கலாம்.அவள் என் சமையலை விரும்புகிறாள்.நேற்று நான் கொடுத்த கத்தரிக்காய் கறி மேல் பைத்தியமே ஆகி விட்டாள்.கறி வேப்பிலைகளையும் நான் ஒன்று ஒன்றாக தெரிந்து போடுகிறேனே! இரசாயன வாடை அடிக்கும் காய்கறிகளை தொடுவதே இல்லை.முஷபார் வந்ததும் வித்தியாசத்தை உணர்வான்.என் சமையலில் தெரியும் மாறுதலே பெரிய ஆதாரம் தானே? அவன் நம்புவான்.

முகட்டு வளையில் ஓடும் எலிகளின் மூத்திர நாற்றம் மூக்கை துளைத்தது.தூக்கம் வர மாட்டேன் என்றது.அவள் தனியாகவே இருந்தாள்.இருந்தாலும் ஏதோ ஒன்று எப்போதும் அவளை சுற்றி வந்தது.மூச்சை ஒரு தடவை நன்றாக உள் இழுத்தாள்.பீடி மணம் வரவில்லை.கிலி கொஞ்சம் நீங்கியது.மீண்டும் தெருநாய் வாடை.கறுப்பி.நீயாவது இருக்கிறாயே? துணையாக படுத்து கொள்.

விடிந்தது.ஹோலிங் பெல் சத்தம்.கதவை திறக்க முஷபார் நின்றான்.சோர்வாக தோன்றினான்.பிரயாண அசதி.ஆசையோடு கட்டி அணைத்தாள் அவள்.வழக்கமாக வரும் அத்தர் வாசத்தை அவனிடத்தில் காணவில்லை.மாறாக லாவண்டர் வாசம்.இப்படி ஒரு வாசனை திரவியத்தை இவன் ஏன் தேர்ந்து எடுத்தான்? ஆண்கள் இதை விரும்புவார்களா? இல்லை.சர்வ நிச்சயமாக இல்லை.இது இவனுடையதும் இல்லை.வேறு யாருடையதோ? வேறு எவரோ? அல்லது எவளோ? பெண் தான்.பெண்கள் ஆசை கொள்ளும் வாசனை தான் இது.எனக்கும் பிடித்திருக்கிறதே! கடைக்கு போனால் இப்படி ஒரு வாசனையை தான் நானும் விரும்பி நாடுவேன்.

வந்தவன் குளித்து முடித்து ஹோலுக்கு வந்தான்.இடுப்பில் வெளிர் மஞ்சள் டவல்.கட்டு மஸ்தான திரேகி.யாருக்கு தான் வேட்கை வராது? சதைப்பற்றான ஆனால் முறுக்கேறிய நெஞ்சு.யாருக்கு தான் வேட்கை வராது? இந்த உடலால் மூச்சு முட்ட அணைக்க படுவதை எல்லா பெண்களும் விரும்புவார்கள்.நானும் விரும்புவேன்.லாவண்டர் வாசனை காரியும் விரும்புவாள்.இப்போது முஷபார் மேல் லாவண்டர் வாசனை வீசவில்லை.அவனும் பன்றி போல் நாற தொடங்கினான்.ஆனால் திரேகம் பன்றி போல் இல்லை.கட்டு மஸ்தான திரேகி அவன்.யாருக்கு தான் வேட்கை வராது?

முஷபார் சாப்பிடவில்லை.வரும் வழியில் கடையில் சாப்பிட்டதாக சொன்னான்.பிறகு தூங்க போய்விட்டான்.பிரயாண அசதி.அவளுக்கு மிச்சம் வைத்த டின் ஃபிஷ் நாற்றம் குடலை புரட்டியது.அப்படியே ஒரு பொலித்தீன் பையில் திணித்து வீட்டின் வெளியே ஓரமாக இருந்த குப்பை தொட்டியில் கடாசினாள்.திரும்பி பார்க்க அதை கறுப்பி இழுத்து பிய்த்து நக்கியது.நல்ல தீனி தான் கறுப்பி உனக்கு.

மிதுளா வாசலுக்கு தண்ணீர் தெளித்து கொண்டிருந்தாள். மண் வாசனை வெளி கிளம்பியது. மிதுளாவின் மூக்கும் அதை உணரும். மிதுளாவுக்கு லாவண்டர் வாசம் பிடிக்குமா? அருகே நெருங்கினாள். அக்குள் வியர்வை நாற்றம். மிதுளா இன்னமும் குளிக்கவில்லை. தோற்றத்திலேயே தெரிந்தது. அலங்கோலம்.

“நைட் படுக்கும் போது எத்தன மணி?”

“ஒம்பதுஅர இருக்கும். நாடகம் பாத்திற்று தானே படுத்தது”

“நைட் சாப்பாடு மிஞ்சு போற்று. தரலாம் எண்டு பாத்தன். இப்ப தான் கொட்டீற்று வாறன்”

“அப்ப,காலமைக்கு என்ன?”

“தெரியல,போய் தான் பாக்கனும்”

அதுவரையிலும் மிதுளா நிமிரவே இல்லை. குனிந்து தண்ணீரே தெளித்து கொண்டிருந்தாள். மண் வாசனையும் வியர்வை நாற்றமும் மாறி மாறி வந்தது.

இரவு ஏழு மணி இருக்கும்.முஷபார் நண்பர்களுடன் வந்தான்.அலுவலகத்தில் அவனோடு வேலை செய்பவர்கள்.அவர்கள் வந்த மாத்திரத்தில்,ஹோலில் இருந்தவள் எழுந்து போய் கட்டிலில் விழுந்தாள்.முஷபார் வந்து மாட்டிறைச்சி சமைத்து தர சொன்னான்.அவளிடம் இருந்து பதில் ஏதும் இல்லை.முகத்தை தூக்கி வைத்து கொண்டாள்.முஷபார் மேல் மறுபடியும் அத்தர் வாசம்.வந்திருந்த ஐந்தாறு பேர்களிலும் வித விதமான வாசனைகள் வந்தன.எல்லாமே அவர்களுக்கு சொந்தமானதாய் இருக்காது.அவர்களது மனைவிகள் உடையதாகவும் இருக்கலாம்.சிறிது நேரத்தில் மாட்டிறைச்சி வாடை எழுந்தது.மூக்கை பொத்தினாள்.சட்டி,பானைகள் உருட்டப்படும் சப்தம் கேட்டது.பிறகு இறைச்சி எண்ணெய்யில் பொரியும் சப்தம்.இடை இடையே கருகிய வாடை.எல்லோரும் குடித்தார்கள்,நிதானம் மீற.முஷபார் வந்து அருகில் படுத்த அரை சாமத்தில் சாராய வாடை குப்பென்றது.அவள் எழுந்து போய் சமையலறையை துளாவினாள்.சாமான் சட்டுகள் திக்கு திக்காக கிடந்தது.திறந்து பார்த்தாள்,அவள் சமைத்த உணவை எவரும் சாப்பிடவில்லை.நாளைக்கு கறுப்பிக்கு தான் வேட்டை.வெளியே சென்று முகர்ந்து பார்க்க கறுப்பியின் வீச்சம் அடிக்கவில்லை.திரும்பவும் உள்ளே சென்று படுத்தாள்.

அடுத்த நாள் இரவு பத்து மணி.அந்த ஏரியாவே தூங்கும் நேரம்.முஷபாருக்கு மட்டும் அப்படி இருக்கவில்லை.நாய் போல அங்கும் இங்கும் அலைந்தான்.அவனது குறி விறைத்தது.இன்று எப்படியாவது இவள் உடலை ஆண்டு அடக்க வேண்டும்.மோக மயக்கத்தில் கட்டிலில் கிடந்தான்.இது அவளுக்கு புரிந்து விட்டது என முஷபாருக்கு தெரிந்து இருந்தது.இன்னும் அவள் எந்த வித எதிர்வினையையும் காட்டியிருக்க வில்லை.அவளுக்கு தினவெடுத்தால் தண்ணி நீல நைட்டி அணிவாள்.அது உடலோடு ஒட்டி அங்கங்களை பூதாகரமாக்கும்.பார்பவருக்கு பசி வரும்.ஆனால் அவள் அதை அணியவில்லை.வைரம் பாய்ந்த கட்டை போல ஹோலிலேயே குந்தி இருந்தாள்.எத்தனையோ வாசனைகளை அவள் மூக்கு உணர்ந்தது.முஷபார் தூங்கி விட்டான் என்று உறுதி படுத்திய பின்னரே கட்டிலில் போய் படுத்தாள்.தூக்கம் வரும் மட்டும் மூக்கை இழுத்து இழுத்து முகர்ந்தாள்.எலி மூத்திர நாற்றம் தூக்கலாக வந்தது.கொஞ்சம் பன்றி கொழுப்பு நாற்றமும்.

விடி விடி என்றதும் முஷபார் சொல்லாமல் கொள்ளாமல் வேலைக்கு கிளம்பி விட்டான்.இவள் எழுந்து குளித்து தயாரானாள்.மீண்டும் பன்றி நாற்றம்.இந்த சோப்பை மாற்றியாக வேண்டும்;ஆயிரத்தெட்டாவது முறையாக சொல்லி விட்டாள்.பர்தாவை அணிந்தாள்.கண் மட்டும் தெரிய கூடிய கறுப்பு பர்தா.இத்தோடு இதை இரண்டாவது முறையாக அணிகிறாள்.முதல் முறை அணிந்த போது முஷபாரோடு டவுனில் இருந்தாள்.

நடந்து போய் தெரு முனை சந்தியில் ஓட்டோ எடுத்தாள்.”எம் சி லீசிங் கொம்பனி போங்க”.ஓட்டோ நிறைய ஒயில் பிசுபிசுப்பு வாடை.காலை நேரம் ஆகையால் டிரைவர் அழுக்கு தேய குளித்திருந்தான்.இறங்கியதும் லீசிங் கொம்பனிக்கு முன்னால் ஒரு நோட்டம்.முஷபாரின் பைக்.அவன் உள்ளே தான் இருப்பான்.எதிரே நிறைய கடைகள்.ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினாள்.இடை இடையே லீசிங் கொம்பனி மேல் ஒரு கண்.ஒரு புடவை கடைக்குள் அத்தோடு ஐந்தாவது தடவையாக நுழைந்திருப்பாள்.ஆரம்பத்தில் ஆர்வமாக துணியை பிரித்து போட்ட கடை பையன் பின்னர் இவளை காணும் போது எல்லாம் இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லை.தானாகவே போய் குலைந்து கிடந்த துணிகளை வருடினாள்.சிலவற்றை நேர்த்தியாக மடித்தும் வைத்தாள்.கடை பையன் வாய் திறக்கவில்லை.அநேகமாக அவனது முதலாளி வெளியே எங்காவது சென்றிருக்க வேண்டும்.அவளை தவிர வாடிக்கையாளர் இல்லாத கடையில் மயான அமைதி.கடையும் அவ்வளவு பெரிது அல்ல.புது துணிகளின் வாசம் கிறங்க வைத்தது.ரமழான்,ஹச் பண்டிகைகள் எல்லாம் நினைவுக்கு வந்து வந்து போயின.

வீதியில் இறங்கி நடக்கும் போது எதிர் பட்ட பெண்களை முகர்ந்தாள்.எல்லோர் மேலும் பவுடர்,கிறீம் வாசனைகள் அப்பி இருந்தன.ஏற குறைய லாவண்டர் போல வாசம் வீசிய ஒரு பெண்ணை பின் தொடர்ந்தாள்.அந்த பெண் ஒரு மொபைல் ஸ்டோருனுள் புகுந்ததும் பின் தொடர்வதை கைவிட்டாள்.வாசனை திரவியம் விற்கும் கடை ஒன்றும் இருந்தது.நுழைந்து ஒவ்வொரு குப்பியாக எடுத்து பிசிறாமலே முகர்ந்தாள்.கடைக்காரி ஒரு பெண்.அவள் மேல் மல்லிகை பூ பவுடர் வாசம்.கடையை விட்டு வெளியேறும் போது தான் உள்ளே சோப்பும் இருக்கிறது என கண்டு பிடித்தாள்.பன்றி நாற்றம் அடிக்காத ஐந்தாறு சோப் கட்டிகளை வாங்கினாள்.

லீசிங் கொம்பனிக்கு முன்னால் போக ஐந்து மணியை தாண்டி இருக்கும். வேலை முடியும் நேரம். கலபுலவென்று வாசல் அருகே கூட்டம். முஷபாரும் வந்தான். தனது சிவப்பு நிற பைக்கை எடுத்து கொண்டு கிளம்பினான். சடுதியாக இவளும் ஒரு ஓட்டோவை பிடித்து கொண்டு முஷபாரை பின் தொடர்ந்தாள். பைக் நேராக வீட்டில் போய் நின்றது. பெயரை சொல்லி அழைக்க மனம் வரவில்லை முஷபாருக்கு.ஹோலிங் பெல்லை அழுத்தியும் பலனில்லை. தன்னிடம் இருந்த உபரி சாவியை வைத்து கதவை திறந்தான். அவள் வர சிறிது தாமதமானது.

“வீட்டில ஆள் இருக்கிறேலயா?”

“சோப் முடிஞ்சு போச்சு”

அடுத்த நாள் மாலை ஏழு மணி ஆகியும் முஷபார் வீடு திரும்ப வில்லை.ஃபோன் வந்தது.

“நைட் சமைக்க வேணாம். மீட்டிங் இருக்கு. கொழும்பு போறன். நாளைக்கு காலேலவருவன்”

அப்படியே கட்டிலில் கிடந்தவளுக்கு தூக்கம் வரவில்லை.இமைகளை வெறுமனே மூட மட்டும் முடிந்தது.எப்போது தூங்கினாளோ தெரியாது ஆனால் விழிக்கும் போது அருகில் முஷபார் கிடந்தான்.

மூச்சை ஒரு தடவை இழுத்தாள். அத்தர் வாசம் கூட வரவில்லை. அவனது உடல் எங்கும் மூக்கை வைத்து உறிஞ்சினாள். எதுவுமில்லை. அக்குளில் முகர்ந்தாள். வியர்வை நாற்றமும் இல்லை. எலி மூத்திர நாற்றம் எங்கே போனது? ஓடி சென்று மஸ்காராவை கையில் பூசி முகர்ந்தாள். அசுமாத்தம் இல்லை. பாத்ரூமுக்குள் சென்று பன்றி நாற்றம் வீசிய சோப்பை கையில் பூசி முகர்ந்தாள். சாதாரண சோப் வாசமும் வரவில்லை. என்ன ஆனது எனக்கு? வீடு பூராகவும் மூச்சை இழுத்த படி அலைந்தாள். சுவரில் மூக்கை வைத்து உறிஞ்சினாள். அவளால் எதையுமே துண்டற முகர முடியவில்லை.

வீட்டுக்கு வெளியே போய் மூச்சை உள் இழுத்தாள். கறுப்பியின் நாற்றத்தை காணவில்லை. உள்ளே புகுந்து தும்பு தடியை எடுத்து கொண்டு பின்பக்கம் போனாள். ஓர் உருவம். ஓங்கி ஒரு அடி.’கொல்’ என்றபடி ஓடியது கறுப்பி. அவளும் பின்னாலே ஓடினாள். கறுப்பி இரும்பு கேட்டுக்குள் பொறுத்தபடி நின்றது. விடுவிக்க முயன்றது. சரளமாக அடி விழுந்தது,மடார் மடார்.கறுப்பி கத்தியது. நடு நடுவே முனகியது.கடேசியில் ஒரு அடி.ஆக்ரோசமான பலத்த அடி,கறுப்பியின் புட்டத்தில்.’சொத்’ என்று வீதியில் விழுந்து கரணம் தப்பினால் மரணம் என ஓட்டம் பிடித்தது கறுப்பி.

அதே வேகத்தில் அறைக்கு திரும்பி முஷபாரின் சட்டையை இழுத்து பிடித்து மூக்கை வைத்து உறிஞ்சினாள். அவன் விழித்து கொண்டான்.

“என்ன?”

“லாவண்டர்”

“என்னடி?”

“பன்டிநாத்தம்”

“ஏன் வாய் புலம்புற?”

“ஒண்டுமில்ல”

அவன் சுருண்டு படுத்தான். அவளுக்கு தூக்கமே வரவில்லை.

——————————

கபில் ஸ்ரனிஸ்லஸ் : 1994ஆம் ஆண்டு இலங்கை, மன்னார் ( மன்னாரில் விடத்தல் தீவு எனும் கிராமத்தில் ) பிறந்தார். “சிறு வயதில் இருந்தே வாசிப்பதில் ஆர்வம்.பதின்ம வயதுகளில் கவிதைகள் எழுதினேன்.பின்னர் புனைக் கதைகளின் மேலுள்ள விருப்பத்தால் கதை எழுத தொடங்கினேன்.அகம் இணைய இதழில் இரண்டு கதைகள்(ரேடியோப் பொட்டி,இரண்டே இரண்டு ரூபாய்) வெளிவந்துள்ளன.” என்று கூறும் கபில்  தற்போது யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் மொழிபெயர்ப்பு பயின்று வருகிறார்.