முடிவின்மையில் நிகழ்பவை

  -விஷால் ராஜா

புகைப்படம் : அனாமிகா

ஓவியம்  : அனந்த பத்மநாபன்


பதிமூன்று வயதில் மித்ரன் முதன்முதலாக கடலில் பயணம் செய்தான். அவனுடைய முதல் கடல் பயணமே விபத்தில்தான் முடிந்தது. நொறுங்கிய கப்பல் மேடையில் திசை தெரியாமல் அமர்ந்தபடி இரு இரவுகள் பசியில் உள்ளிழுத்த வயிறுடனும் கடல் தண்ணீர் அறைந்து உப்புப் படிந்த முகத்துடனும் காற்றோடு பயணித்து அருகாமை தீவில் அவன் கரை சேர்ந்தபோது தனக்கு முன்னரே தன்னுடன் கப்பலில் வந்த மற்ற எல்லோரும் உப்பிய பிணங்களாக மணலில் புதைந்திருப்ப்தை கண்டான். அதன் பிறகு பலமுறை அவன் கடல் பிரயாணம் செய்திருக்கிறான். கப்பல் பணியாளனாகத் தொடங்கி இப்போது கப்பல் மாலுமியாக இருப்பதுவரைக்கும். ஒவ்வொருமுறை தன் பயணத்தை துவங்கும்போதும் கண்முன்னே விரிந்திருக்கும் நீலக்கடலை அச்சமூட்டும் ரகசியம் என்றே அவன் உணர்ந்தான். கட்டற்ற அலைகள் எதையோ சொல்லி சொல்லி அழித்தன. நடுக்கடலிலோ தீண்டவே முடியாத மௌனம்.

மித்ரன் ஒரு வணிக கப்பலில் மாலுமியாக பணியாற்றினான்.சுற்றிலும் உள்ள ஐம்பது தீவுகளுக்கிடையேதொடர்ந்து கடல் வழியே வணிகம் நடந்துக் கொண்டே இருந்தது. தன்னுடைய தீவிலிருந்து கிழக்குபகுதியில்உள்ள கடைசித் தீவு வரைக்கும்செல்கிற தொலைதூர வணிகங்களையே அவன் அதிகம் விரும்பினான். அத்தீவுக்குச் செல்லும் வணிகர்களுக்கே அவன் கப்பலோட்டவும் செய்தான். உண்மையில் அவனுக்கு அதை தாண்டி செல்வதற்கும் விருப்பம் இருந்தது. ஆனால் அது ஆபத்தான பயணம். கடைசித் தீவின் எல்லை முடிந்ததும், கடலின் அழுத்தமும் காற்றின் போக்கும் கணிக்க முடியாதபடி முற்றிலுமாக திரிந்திருக்கும்.வழித் தவறிச் சென்ற எந்த கப்பலையும் யாரும் இதுவரை திரும்ப கண்டதில்லை.அதேப் போல் அவர்களுடைய தீவுக்கு மேற்கு திசையிலும் கடல் அதிக மூர்க்கத்துடன் இருந்தது. அவ்வழியே வணிகங்கள் முளைக்கக்கூட இல்லை. பயணக் கப்பல்களும் செல்வது கிடையாது.அது மரணத்தின் பாதை என்று சொல்லப்பட்டது. தெய்வங்களும் பேய்களும் அங்கே கதைகளாக அலைந்தனர்.அவன் அந்த திசையில் பயணம் செய்யவும் ஆசைப்பட்டான். பயணிக்க முடியாத திசை என்பது கடல் அவனுக்கு விடுக்கும் அறைக்கூவல் போலவே இருந்தது. பொருள் சேர்த்து சொந்தமாக கப்பல் வாங்கியதும் அதை நேரடியாக எதிர்கொள்ள வேண்டும் என்று அவன் நினைத்திருந்தான்.

அன்று கடற்கரையில் மது போத்தலின் கடைசித் மிடறையும் குடித்துவிட்டு வானிருளில் மோதி அலையடித்த கடல் நீரை அர்த்தம் சேராமல் பார்த்துக் கொண்டிருக்கையிலும்,எப்போதும் கற்பனைக்கும் அப்பாலிருக்கும்அந்த பயணமே மித்ரனின் மனதில் ஓடியது. அச்சமயத்தில்தான் கடலில் அணைந்த சிறு கப்பலை அவன் பார்த்தான். அலை நுரைகள் இருளில் கொப்பளித்தப்படியிருக்க அக்கப்பல் கடற்காற்றில் மெல்ல அசைந்தது.கப்பலுடைய பக்கவாட்டு படிகளிலிருந்து இறங்கி வந்த இளைஞனை இருளசைவின்வழியாகமித்ரன் கவனித்தான். நீளமான முடி காற்றில் ஆட, மித்ரனை நோக்கி நடந்து வந்தான் அவன்.அவனுடைய இடது கையில் சிறிய  விளக்கு இருந்தது. கைவிளக்கின் சதுரமானகண்ணாடிப் பேழைக்குள் எண்ணெய் திரி செம்மஞ்சளாக எரிய அதன் ஒளியில் அவன் மறுகையில் பிடித்திருந்த போத்தலில் மது இளங்குருதி எனத் தெரிந்தது. மித்ரன்அவனையே பார்த்தபடியிருந்தான்.அவன் மித்ரனுக்கு அருகில் வந்து அமரவும், கருப்புப் புகைப் போல் மேகங்கள் வானிலிருந்துவிலகின. எங்கிருந்தோ நிலவு வந்து மென்வெளிச்சம் அளித்தது. நிலவைச் சுற்றி இறகுத் தீற்றல் போலிருந்த நீலக் கோட்டைப் அண்ணாந்து பார்த்த மித்ரனிடம் சிநேகமாக மது போத்தலை நீட்டி தன்னை ஆக்னேயா என்று அவன் அறிமுகம் செய்து கொண்டான்.மித்ரன் போத்தலை கையில் வாங்கி உயர்த்தி அனுகிப் பார்த்துவிட்டு பின் நிதானமாக ஒரு மிடறு மது அருந்த, ஆக்னேயா கைவிளக்கை முகத்துக்கு அருகே கொண்டுச் சென்று கண்ணாடி பேழையை திருகி நெருப்பை ஊதி அணைத்தான்.

காலையில் தூக்கத்தில் இருந்த எழுந்த மித்ரனுக்கு தலை ஒரு பக்கமாக அழுத்தி வலித்தது.நெற்றியை தடவியபோது ஆக்னேயாவின் ஞாபகம் தெளிவில்லாமல் மனதில் எழ,முந்தைய இரவை கனவு என்றே அவன் நினைத்தான். பின்னர் தனக்கு அருகே மணலில் அமர்ந்து கடலையே வெறித்துக் கொண்டிருந்த ஆக்னேயாவை பார்த்ததும்தான் அவனுக்கு தன்னுணர்வு வந்தது. இரவில் ஆக்னேயாவின் முகத்தை மித்ரனால் சரியாக பார்க்க முடியவில்லை. இப்போது காலை ஒளியில் அவனை பார்த்தபோது மித்ரனுக்குள் இயல்பாகவே ஒரு நட்புணர்வு தோன்றியது. தனக்கு மட்டுமில்லை; ஆக்னேயாவை பார்க்கிற எல்லோருக்குமே அவனுடன் நட்போடு பழகும் விருப்பம் வந்துவிடும் என்பதை மித்ரன் சீக்கிரமே தெரிந்துக் கொண்டான். ஆக்னேயாவுக்கு மிகவும் அமைதியான குணம். அவனிடம்நிரந்தரமான ஒருகனிவு இருந்தது. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் அவன் உடைந்தும் போயிருந்தான். ஒரு மிகப் பெரிய துயரம் அவனை உள்ளுக்குள் ரணப்படுத்திக் கொண்டிருந்தது.அதனால் உண்டான விலகுதல் ஒவ்வொரு கணமும் அவனில் வெளிப்பட்டது.அதுவே அவனை அதிகம் நேசிக்கவும் வைத்தது.

மூன்று நாட்களில் இருவருமே ரொம்பவும் நெருக்கமாகிவிட்டார்கள்.இத்தனைக்கும் அவர்கள் தொடர்ச்சியாக நிறைய நேரம் பேசக் கூட இல்லை. வெறுமனே கடலை பார்த்து அமர்ந்திருந்தார்கள். ஆக்னேயாவின் கப்பலில் இருந்த சிறுசிறு பழுதுகளை சரி செய்தார்கள். கடைத் தெருக்களில் சுற்றி நீண்ட பயணத்திற்கான பொருட்களை வாங்கி பத்திரப்படுத்தினார்கள். ஆக்னேயாவின் கிளிக்கு புதுக் கூண்டு செய்தார்கள்.இரவெல்லாம் குடித்து கடற்கரையிலேயே விழுந்து கிடந்தார்கள்.

அவர்களிடையே அடிப்படை அறிமுகங்கள் கூட நிகழவில்லை. எதேச்சையாக ஒருமுறை ஆக்னேயா தன் ஊரின் பெயரை கூறினான். அதை மித்ரன் கேள்விக்கூட பட்டது கிடையாது. பின்னர் அதே இரவு,கடற்கரை மணலில்கைகளை அகல விரித்து வான் நோக்கி படுத்தபடி, தன்னுடைய நிலத்தில் வானம் எப்போதும் மலையடர்வின் பச்சையத்துடனே இருக்கும் என்று சொன்னான். அவனது கண்களில் விண்மீன்கள் தூரத்தில் விலகியும் நெருக்கத்தில் கனிந்தும் பனித்தூவல் என பொழிந்துக் கொண்டிருந்தன. மித்ரனுக்கு அவன் சொன்னது புரியவில்லை. முன்னேறி வந்த நீரலை ஒன்று அவன் கால்களில் ஏறி நனைத்து பின் கடலுக்கு திரும்பியது.போதையில் அவன் அலையை எட்டி உதைப்பதுப் போல் கால்களை ஓங்கி உடனேயே மடக்கிக் கொண்டான். பின் மணலில் சரிந்து கொஞ்சம் அசைந்து படுத்தான்.முழங்கால் வரைக்கும் அலைகள் ஏறி வந்து குளிரச் செய்தன.

நான்காம் நாள் மாலை ஆக்னேயாவுடன் கப்பலில் கிளம்பும்போது மித்ரனுக்கு எங்கே போகிறோம் என்பதுக் குறித்து ஒரு யோசனையும் இல்லை. ஆக்னேயா தன் சொந்த ஊருக்கு திரும்பப் போவதில்லை என்பதை மட்டும் அவன் நன்றாக அறிந்திருந்தான். ஆக்னேயாவிடம் வேறேதோ திட்டம் இருந்தது.

கப்பல் பாய் விரித்து காற்றின் விசையில் முன்னேறியது. நீர்ப் பறவைகள் வானில் சுழன்றுக் கொண்டிருந்தன.ஆக்னேயா கூண்டிலிருந்து கிளியை வெளியே எடுத்து அதற்கு பழம் உண்ணக் கொடுத்தான். அது பழத்தைக் கொத்தியபடி சுற்றிலும் பார்த்து தலைய உலுக்கியது. கப்பல் முனையில் அமர்ந்திருந்த மித்ரன் தலை சரித்து கடலை பார்த்தான். சூரியஒளியில் நீலம் கரைந்து கண்ணாடிப் போல் மினுங்கியது கடல். ஒரு துளியில் வெளிச்சம் மறுதுளியில் நீலம்.எத்தனையோ முறை பார்த்த கடல் தான். ஆனால் அது அணுக்கமாவதே இல்லை. சலிப்பதுமில்லை. ஒவ்வொரு முறையும் அது மாறியபடியே இருக்கிறது. தன்னை இன்னும் அதிகம் மறைத்து கொள்கிறது. அல்லது ஒரு புதிய திறப்பின் வழியே தன்னை இன்னும் அதிகம் வெளிக்காட்டுகிறது.ஒருவேளை கடல் என்று நாம் பார்க்கிற பெரும் நீர்ப்பரப்பு வெறும் மாயையோ?அது நாம் பார்க்க முடியாத ஏதோவொன்றின் ராட்சஸ நிழல் மட்டும் தானோ? யோசித்தபடி மித்ரன் காலி மது போத்தலை உயரத்தில் சுழற்றி கடலில் எறிந்தான்.

ஆக்னேயா மேற்கு திசையில் கப்பலை செலுத்திக் கொண்டிருந்தான். அவர்கள் எல்லைக் கடந்து வந்துவிட்டிருந்தார்கள். மித்ரன் கடைசியாக இரு நாட்களுக்கு முன்பு ஒரு மீன் பிடி படகை பார்த்திருந்தான். அதன் பிறகு கடலில் பழக்கத்தின்தடமே இல்லை.அது தனிமையிலும் நிச்சலனத்திலும் ஆழ்ந்திருந்தது. ஆக்னேயா அடிக்கடி கடலில் குதித்து நீந்தி திரும்பினான். பின்னர் வெகுநேரத்திற்கு தன் வளர்ப்புக் கிளியை கைகளில் வைத்து அதன் அலகை தொட்டுத் தொட்டு பார்த்துக் கொண்டிருந்தான். மதியம் சதுரங்கம் ஆடும்போதும் இரவில் குடிக்கும்போதும் மட்டுமே மித்ரனும் ஆக்னேயாவும் அருகில் இருந்தார்கள். பிறநேரங்களில் ஆக்னேயா மொத்தமாக தனக்குள் ஒடுங்கியிருந்தான். ஆனாலும் ஆக்னேயாவின் இருப்பே மித்ரனுக்கு போதுமானதாக இருந்தது, அவனிடம் பேசித் தெரிந்து கொள்ள எதுவும் இல்லை என்பது போல்.

நிவலை மீன்கள் கப்பலின் பக்கங்களில் விரிந்த தோகைப் போல் கூட்டமாகநீந்திக் கொண்டிருந்தன. மித்ரன் அவற்றை பார்த்தான். நீளமான இளமஞ்சள் உடலில் பச்சைக் கோடுகள். வால் பகுதி மட்டும் சிவப்பாக இருக்க, சிறகு பழுப்பு நிறத்தில் இருந்தது. நிவலை மீன் மித்ரனுடைய குலத்தின் வழிபாட்டு தெய்வம். மிகவும் அபூர்வமான ஒரு மீன் இனம் அது.நிவலன் எனும் நிலமகன் கடல் தேவதையின் மீது கொண்ட காதலால் நீரிலேயே வாழும் பொருட்டு மீனாக மாறியதாகவும் அவனுடைய வழித் தோன்றல்களே நிவலை மீன்கள் என்று சொல்லப்படுகிறது. முட்டையிலிருந்து வெளிவரும் நிவலை மீனை நீருக்குள் செல்லவிடாமல் பார்த்துக் கொண்டால்அது பிற மீன்களை போல்இறந்துவிடாது. மாறாகஅதன் தோற்றம் வேறுபட்டு மண் வாழ் உயிரினமாக மாறிவிடும். ஆனால் கடல் தேவதையை அன்னையாக கொண்ட நிவிலை என்றுமே தன் ஆன்மாவில் கடலையே எண்ணிக் கொண்டிருக்கும்என்பது அவர்களுடைய நம்பிக்கை.

மித்ரனின் இனக்குழுவில் ஆண்டுக்கொரு முறை நிவலை மீன்களுக்கு விசேஷமான வழிபாட்டு நிகழ்வுநடைபெறும். சரியாக பருவக்காலத்தில் நூற்றுக்கணக்கான பெண் நிவலை மீன்கள்,ஆமைகளின் உடலில் ஒட்டியபடி கரை அணைந்து ஆமை முட்டைகளுடன் தங்கள் முட்டைகளையும் சேர்த்துவிட்டு கடலுக்கு திரும்பிவிடும். பின்னர் முட்டையிலிருந்து பொறிந்து வரும் மீன் குஞ்சுகள் ஆமை ஓடுகளில் பதுங்கி தாமாகவே கடல் சேரும்.ஆண்டுத் திருவிழாவின் போது நிவலை மீன் குஞ்சுகளில்சிலவற்றை மட்டும் தனியே எடுத்துக் கொள்வார் குருபூசகர்.பின் நிவலை ஆலயத்தில் பாதி மீன் குஞ்சுகளை நீர்த் தொட்டியிலும் மீதியை மண் குழியிலும் போட்டு வளர்ப்பார்கள். குறிப்பிட்ட நாட்களில் நீர்த் தொட்டியில் வளரும் நிவலைகள் மீனுருப் பெற மண் குழியில் விட்ட நிவலைகளோ மண் பாம்பின் உருவத்தில் வளர தொடங்கும். பின்னர் அவற்றை மீண்டும் நீர்த் தொட்டிக்கு மாற்றி இருபத்தியாறு நாட்கள் கழித்து அவை மீனாக தன்னுருப் பெறுவதை விழாவாக எடுத்துக் கொண்டாடுவார்கள்.நிவலை தரிசனமும் பூசனைகளும் இருவேளை உணவு பகிர்தலும் நடக்கும். அன்றிரவு குருபூசகர் நிவலனையும் கடல் தேவதையும் வணங்கி பாடுவார்.

நீர்மையே முழுமை. பரிபூர்ணமே வடிவானவள் மீது நிவலன் கொண்டிருந்த பெருங்காதல் தன்னையன்றி வேறெதையும் அறியாதது. தானன்றி வேறெதுவும் இல்லாதது. நிவலன் தன்னையே அழித்து அவளில் சேர்ந்தான். பித்தில் எரிந்து சரணடையச் செய்யும் பெண்மையின் பேரழகையும் உயிர்கள் தோறும் வலி,நினைவு,கண்ணீர்,அர்த்தம் என்று மிஞ்சுகிற காதலின் நித்தியத்தன்மையையும்  மதுவருந்தி பாடித் துதித்து, மறுநாள் காலைஅனைத்துநிவலை மீன்களையும் கடலில் விட்டுவிடுவார்கள்.

சட்டென்று நிவலை மீன்கள் தற்செயலாக கப்பலைச் சுற்றி வரவில்லை என்று தோன்றியது மித்ரனுக்கு.அவை திட்டக்கிரமம் கப்பலை தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தன.மித்ரன் கண்களை இமைத்தபடி நுணுக்கமாக அவற்றை பார்த்தான்.வானில் மாலையிருள் கவிந்துக் கொண்டிருக்க நீருக்குள் வண்ண வெளிச்சம் போல் அவை நீண்டுக் கொண்டேயிருந்தன. கப்பல் முன்னே செல்ல செல்ல நிவலைகளின் எண்ணிக்கையும் கூடியபடியே இருந்தது. மித்ரன் ஓடிச் சென்று கப்பலின் மறுபக்கத்தில் பார்த்தபோது அங்கேயும் நிவலைகள் குழுமியபடி இருந்தன. அவன் உடனேயே ஆக்னேயாவை அழைத்து இதை சுட்டி காட்டினான். கப்பலின் உள்ளறையில் அமர்ந்திருந்த ஆக்னேயா தன் உள்ளங்கையில் உடல் சுருக்கி நின்றிருந்த கிளியை கூண்டிலைத்துவிட்டு மித்ரனுடன் வந்து கப்பலை சுற்றிச் சேரும் நிவலை மீன்களின் கூட்டத்தை ஆராய்வதுப் போல்உற்று கவனித்தான். அவனது பார்வையில் குழப்பமோ ஆச்சர்யமோ இல்லை.  எதிர்பார்த்து காத்திருந்த ஒரு நிகழ்வை கண்டுகொண்டதுப் போல் அவன் நடந்துக் கொண்டான். மித்ரனுக்கு அது சிறு அதிர்ச்சியாக இருந்தது.

ஆக்னேயா வேகமாக கப்பலை இயக்கும் பகுதிக்கு செல்ல மித்ரனும் அவனை தொடர்ந்து சென்றான். சுக்கானுக்கு அருகாமையில் அவர்கள் சென்றபோது கடல்காற்றில் திடீரென்று அசாதாரணமான அழுத்தம் கூடத் துவங்கியது. சூரையேறிய காற்று நான்கு திசைகளில் இருந்தும் அவர்களுடைய கப்பலை சூழ்ந்து இறுக்கியது. அலைகள் உயர்ந்து எழ பாய்மரச் சட்டங்களில் எங்கேயோ இணைப்பு முறியும் சத்தத்தை மித்ரன் கேட்டான். கப்பலின் முகப்பில் தண்ணீர் சேர்ந்துக் கொண்டிருந்தது. ஆக்னேயா சுக்கானை கட்டுபடுத்த முடியாமல் திணற,உதவிக்காக மித்ரனும் கைக் கொடுத்தான். ஆனால் அது பயனளிக்கவில்லை.சுக்கான் திசை மாறி மாறி சுற்றியது- வேறேதோ அரூப விசை இயக்குவதுப் போல். மித்ரனால் எதையுமே உள்வாங்க முடியவில்லை. இலக்கே தெரியாத இப்பயணத்தில் அவன் ஆபத்தை எதிர்நோக்கியே இருந்தான் எனும்போதும் சில நிமிடங்கள்முன்புவரையிலும் மழைக்கான சின்ன அறிகுறிக் கூட எங்கும் தென்படவில்லை.ஆனால் சடுதியில் கடலையே யாரோ திருப்பிப் போடுவதுப் போல் காற்று முரட்டுத்தனமாக மோதிக் கொண்டிருப்பது அவனை குழப்பியது.

சுக்கான் மேடையில் இருந்த தன் திசைக்காட்டியை கையில் எடுத்து அருகில் பார்த்தான் மித்ரன். திசைமுள் ஒரு புள்ளியில் நிற்காமல் மிகவும் வேகமாக முன்னும் பின்னும் வட்டமிட்டுக் கொண்டேயிருந்தது. ஆக்னேயா சைகையிலேயே பக்கத்தில் இருந்த தன்னுடைய திசைக்காட்டியை பார்க்கும்படி மித்ரனிடம் சொன்னான். பொன்னாலான ஆக்னேயாவின் திசைக்காட்டியில் திசைமுள் சரியாக திசையை சுட்டி நிற்பதை கண்டு மித்ரன் புரியாமல் விழிக்க, கண்ணாடி பேழைகளில் எரிந்துக் கொண்டிருந்த திரிவிளக்குகள் புயல் காற்றில் ஆடிகப்பலின்நிலைபிடிகளில் இருந்து விழுந்து உடைந்தன.சுற்றிலும்வெறும் இருட்டு மட்டும் மீதமிருந்தது. தூரத்தில் யாரோஅடிக்குரலில் ஜபிப்பது போன்ற ஓசை. கூண்டுக் கிளி மிரட்சியில் கதறிக் கொண்டிருக்க, மித்ரன் கப்பலின் முனையில் வந்து நின்றுக் கொண்டான்.

அப்போது நிவலை மீன்கள் தொடுக்கப்பட்ட அம்புப் போல் விரைந்து கப்பலின் முன்பக்கத்திற்கு வந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து உடல் கோர்த்து சரம் போல் நீண்டன. மெல்ல அவற்றின் உடலமைப்பு மீனுருவில் இருந்து விலகி பாம்பு போல்மாறியது. அவை ஒற்றை பெரும் உயிர் என்று வளர்ந்தன.ஒளி மின்னும் நீருடலில் கடல் ஆழத்திலிருந்து வான் வரை எழுந்து நின்றான் நிவலன். பின் உடல் வளைத்து அவர்களுடைய கப்பலை சுற்றி நெருக்கினான். கருமை அடர்ந்த நீர்பரப்பில் நிவலனின் உடல் நெருப்பு திரவம் போல் ஓடியது. மித்ரன் கண்கள் வெளிர அதை பார்த்துக் கொண்டிருக்க, ஆக்னேயா உள்ளறையிலிருந்து ஒரு மரப்பெட்டியை தூக்கியபடி அவனுக்கு பக்கத்தில் வந்தான். அவசரமாக அதை திறந்து உள்ளே இருந்து தோல் காகிதங்களினால் ஆன ஒரு புத்தகத்தை எடுத்து கடலில் வீசினான். நிவலன் தலை சிலுப்பி விழிகள் சிவந்து எரிய மீண்டும் உயர வளர்ந்து கப்பலை சூழ்ந்து பலமாக இறுக்கினான். மரச்சட்டங்களில் விரிசல் விழும் ஒலிக் கேட்டது. கப்பல் சமனற்று ஆட மித்ரன் ஒரு மரத்தூணை அழுந்த பிடித்துக் கொண்டான்.

ஆக்னேயாவும் பதற்றத்துடனே இருந்தான். எனினும் அதை மீறிய வேறொரு உந்துதல் அவனை இயக்கிக் கொண்டிருந்தது. மீண்டும் பெட்டியில் கை நுழைத்து ஒரு புல்லாங்குழலை எடுத்து கடலில் எறிந்தான். நிவலன் வெறிக் கொண்டது போல் படமெடுத்து ஆடினான்.கப்பல் ஒரு பக்கமாக சரிந்து மீண்டது. ஆக்னேயா அடுத்ததாக ஒரு பெண்ணின் திருமண உடையை பெட்டியிலிருந்து எடுத்தான்.மூச்சை இழுத்து பிடித்து அதையும் கடலில் வீசினான். தன்னெஞ்சம் அறியமால் அவனுக்கு கண்ணீர் வந்தது. ஆனால் நிவலன் அடங்கவில்லை. அவனுடல் திரும்பியபோது கடல் மட்டம் உயர்ந்து திமிறியது. மித்ரன் தூணில் மோதி கீழே விழுந்தான். முழங்காலுக்கு கீழே ஆணிப் போல் எதுவோ உரசி தோல் பிய்ந்து ரத்தம் வந்தது. ஆக்னேயாவும் தற்சமன் இல்லாமல் நீரில் வழுக்கி பின்னுக்கு சரிந்தான். பிறகு தவழ்ந்தபடியே உள்ளறைக்குச் சென்று கூண்டுக் கிளியை எடுத்து திரும்பவும் கப்பல் நங்கூரத்தின் முனைக்கு வந்தான். பயத்தில் அலறிய கிளியில் குரல் அலை சத்தத்தில் ஹீனமானது.

ஆக்னேயா தன் கால்சட்டை பையிலிருந்து சிறிய கத்தியை எடுத்து கூண்டுக் கம்பிகளின் வழியே அதை நுழைத்து கிளியின் கழுத்தை அறுத்து கடலில் போட்டான். நீரில் ஊறி மரத்து போயிருந்த மித்ரனின் தேகம் பயத்தில் நடுங்கி உதறியது.அவன் பார்க்கும்போதே துடிதுடித்து கிளி இறந்து விழுந்த இடத்தில் செம்மை பெருகி கடலே நீர்க் கொப்பளங்கள் வெடிக்கும் குருதிச்சேறு போலானது. நிவலன் சினம் தணிந்து இறங்கினான். அவனதுஉடல் கப்பலில் இருந்து கழன்றுவிலக அவன் மேல் கடல் தேவதை உருப்பெற்று அமைந்தாள்.காற்று இயல்புக்கு திரும்பி கப்பல் பாய்கள் ஒழுங்கு பெற்றன. ஆக்னேயாவும் மித்ரனும் மண்டியிட்டுபணிய கடல் தேவதை இருவரையும் ஆசீர்வதித்தாள். நிவலன்ஆக்னேயாவிடம் விரைவில் அமைதி பெறுக என்று வாழ்த்து சொல்லி நீரில் புகுந்து மறைய சில நொடிகளில் நூற்றுக்கணக்கில் நிவலை மீன்கள் வெவ்வேறு திசைகளில் பிரிந்து நீந்தி விலகுவதை மித்ரன் கண்டான்.

அது மட்டும்தான் அவனுக்கு நினைவிருந்தது. அதன் பிறகு ஏதோ சுழலுக்குள் மாட்டிக் கொண்டதுப் போல் உணர்ந்தான். காற்று மிகுதியாகி மூச்சடைத்தது. காற்றே இல்லாமல் மூச்சு திணறியது. தொலைதூரம் வரைக்கும் வெளிச்சம் மட்டுமே இருந்தது. பார்வை இருண்டு எதுவுமே தெரியவில்லை.மித்ரன் பிரக்ஞை மீண்டு கண் விழித்தபோது அவர்கள் கப்பல் கரை அணைந்திருந்தது. ஆக்னேயா கப்பலில் இருந்து இறங்கி முன்னே செல்ல மித்ரன் அவனைத் தொடர்ந்து நடந்தான்.

விடியல் வெளிச்சம். விடியல் இருள்.கண்களில் ஊதாநிற கண்ணாடித் தாளை அணிந்துக் கொண்டதுப் போல் பார்க்கும்தூரம் வரைக்கும் எல்லாமே ஊதாநிறத்தில் தெரிந்தது.மித்ரனுக்கு நிதானம் முழுக்க கூடியிருக்கவில்லை. அந்தரத்தில் ஒரு வெள்ளிக் கம்பி சுழன்று நீள்வதுப் போல் அவன் பார்வையில் பிரம்மை தட்டிக் கொண்டேயிருந்தது. வானத்தில் அங்கங்கே புகை மூட்டங்கள் விலகி சாம்பல் வெளிச்சம் படர, அவன் மெல்ல தடுமாறினான். தன்னிலை பெற அப்படியே நின்றுக் கொண்டான். அப்போது கடலுக்கு மேலே திடீரென்று நூற்றுக்கணக்கில் பச்சைக் கிளிகள் எங்கிருந்தோ தோன்றி உற்சாகமாக குரல் கொடுத்து வான் நிறைய பறந்து சென்றன. இளமஞ்சள் நிறத்தில் கதிர் எழுந்துக் கொண்டிருக்க, கிளிகள் சூரியனை கடலுக்குள் இருந்து இழுத்து வருவதுப் போல் ஒரு காட்சி மயக்கம் உருவானது மித்ரனுக்கு. அதிசயத்து நின்று கொண்டிருந்தவன் தொலைவில் எங்கேயோ மென்மையாக ஒரு புல்லாங்குழல் இசைக்கப்படுவதை கேட்டான். ஏக்க பெருமூச்சு போல் தனியே ஒரு புல்லாங்குழல் ஓசை. பின்னர் அதை ஆற்றுப்படுத்தும் த்வனியில் இன்னொரு புல்லாங்குழல் சேர்ந்துக் கொள்கிறது. முறையிடல் போல் மற்றொன்று. பின் புதுமலர் தீண்டும் மழை போல் ஒன்று. யாருக்குமே கேட்காத ஆனால் எப்போதுமே இருந்துக் கொண்டிருக்கிற கேவல் போல் ஒன்று என நூற்றுக்கணக்கில் புல்லாங்குழல்கள். பச்சிலை நரம்பென தனித்தனியாகவும் ஒற்றை பெருங்காடென பிரம்மாண்டமாகவும் அவை கணத்துக்கு கணம் வித்தியாசப்பட்டு இசைந்தன. அவற்றுக்கடியே கிளிகளின் ஒழுங்கற்ற கீச்சுகீச்சு குரல். அதிலும் புலப்படாதஒரு பிணைப்புச்சரடு இருக்கிறது என்று எண்ணினான் மித்ரன். மெல்ல புல்லாங்குழல்களின் இசை உச்சத்தில் இருந்து கீழ்ஸ்தாயிற்கு இறங்கத் தொடங்கியது. வானம் முற்றிலுமாக தெளிந்து பொலிவு பெற கிளிகள் பிரிந்து விலகி, நொடியில் காணாமலயே போயின. ஒவ்வொரு புல்லாங்குழலாக காற்றில் கரைய கடைசி குழலின் கடைசித் துளி இசையும் மறைந்தது. துயரமோ மகிழ்ச்சியோ இல்லாத வெறுமை.சட்டென்று வான் விளிம்பிலிருந்து பறந்து வந்த ஒரு கிளி கடல் நோக்கி நின்றிருந்த ஆக்னேயாவை சுற்றி மெதுவாக வட்டமடித்துவிட்டு -பிரிவுக்கு விடை சொல்வது போல்- பின் வேகமாக சிறகசைத்து பறந்தது. ஆக்னேயா தலை தாழ்த்தி கண்களை மூடித் திறந்தான். அப்போது அவன் முகத்தில் தெரிந்த நிஷ்களங்கத்தை பார்த்து மித்ரனுடைய முகம் அனிச்சையாக புன்னகையில் மலர்ந்தது.

நன்கு பழக்கமான இடத்திற்குவந்தது போல் ஆக்னேயா கடற்கரையில் ஏறி நடந்து மரங்கள் அடர்ந்த சமவெளிக்குச் சென்றான்.அவனுக்கு பின்னாலயே சென்றமித்ரனுக்கு அந்த இடமே விசித்திரமாக இருந்தது. இதமாக வருடிக் கொண்டேயிருக்கும் ஈரக் காற்று. நாசியிலேயே தங்கும் நறுமணம்.ஆனால்சுற்றிலும் உயிர் அரவமே இல்லை. செடி விருட்சங்கள் சூழ்ந்து இருள் படிந்திருந்த காட்டுப் பாதையில் எதையோ தேடிச் செல்பவன் போல் ஆக்னேயா விரைந்து சென்றுக் கொண்டிருக்க,பச்சை வாசம் ஏறிய காட்டின் குளிர்ச்சியை ஸ்பரிசித்தபடி பின்னால் வந்துக் கொண்டிருந்தான் மித்ரன்.சிறிது நேரத்தில் அருகில் எங்கோ நீர் வீழ்ச்சியில் தண்ணீர் மோதும் சத்தம் கேட்கத் தொடங்கியது. அதைக் கேட்டு இருவருமே சத்தம் வந்த திசையில் சென்றார்கள்.

காட்டு பாதை மிகவும் பிரம்மாண்டமான ஒரு ரோஜா பூந்தோட்டத்தில் வந்து முடிந்தது. சிவப்பு, நீலம், மஞ்சள் என தோட்டத்தின் பாத்திகள் தோறும் ஆயிரக்கணக்கில் ரோஜா மலர்கள். தூரத்தில் நீர்வீழ்ச்சி பாறைகளில் சரிந்து ஓடிக் கொண்டிருந்தது. அதற்கு கொஞ்சம் முன்பாக கூம்பு வடிவக் கோபுரம் கொண்ட ஒரு மர ஆலயம். அதை நோக்கி நீளும் ஒற்றையடி பாதையில் அவர்கள் நடந்தார்கள்.சுற்றி தோட்டத்தின் புல் தரையெங்கும் ரோஜா இதழ்கள் சிதறிக் கிடப்பதையும் அவை காற்றின் போக்கில் சுழன்றாடுவதையும் கவனித்தபடி நடந்த மித்ரன்,பூ இதழ்களுக்கு சிக்கிக் கொண்ட வண்டென தன்னை உணர்ந்தான். அவ்விடத்தின் அழகு அவனை மொத்தமாக ஆட்கொள்ள துவங்கியது. அதே நேரம் அவனால் அங்கே முழுமையாக தன்னை பொருத்தி கொள்ளவும் முடியவில்லை. மாசேயில்லாத பரிசுத்தம் – அது தாங்கமுடியாததாக இருந்தது.மித்ரனின் பார்வை சலனமே இல்லாமல் முன்னால் சென்றுக் கொண்டிருக்கும் ஆக்னேயாவின் மீது திரும்பியது. ஏனோ தன்னைப் போல் ஆக்னேயா இந்த இடத்தை அந்நியமாக உணர மாட்டான் என்று அவன் நினைத்துக் கொண்டான்.

மித்ரனும் ஆக்னேயாவும் மர ஆலயத்துக்குள் நுழைந்தார்கள். வெளியே கேட்டுக் கொண்டிருந்த நீர்வீழ்ச்சியின் சத்தம் இங்கே கேட்கவில்லை. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் இருந்த ஆலய அறையின் மைய பீடத்தில் ஒரு வயோதிகர் நீளமான கருப்பு அங்கி அணிந்து அமர்ந்திருந்தார். மொட்டை அடித்து முழு சவரம் செய்திருந்த முகத்தில் முதுமையின் சுருக்கங்கள். நல்ல உயரத்தில் தடித்த ஆகிருதியோடிருந்தார் அவர். இருவரும் அவருக்கு அருகாமையில் சென்றார்கள்.எல்லாம் அறிந்ததுப் போல் அவருடைய பார்வை கனிந்திருந்தது. அதனாலயே அவரிடம் ஒரு அதீத விரக்தியும் இருந்தது. மெல்ல தன் பீடத்தில் இருந்து இறங்கி அவர் கீழே வந்தார்.மரத்தரைக்கு கீழே என்னவோ சன்னமாக ஒலித்துக் கொண்டிருப்பதை கேட்டு மித்ரன்வித்தியாசமாக உணர்ந்தான். அதற்குள் அவர்களுக்கு பக்கத்தில் வந்துவிட்டிருந்த பெரியவர் ஆக்னேயாவிடம் “காதல் கொண்ட உயிர் பிறிதில் அடங்குவதே இல்லை.இல்லையா?” என்றார். ஆக்னேயாவின் முகம் உணர்ச்சியற்று இருந்தது. ஆக்னேயாவின் தலையை தொட்டு ஆசீர்வதித்துவிட்டு அவர் திரும்பவும் தன் பீடத்தில் போய் அமர்ந்துக் கொண்டார். மித்ரனுக்கு என்ன செய்ய வேண்டும் என்றே புரியவில்லை. பெரியவர் சிற்பம் போல் அமைதியில் சமைந்திருந்தார். ஆக்னேயாவிடமும் ஒரு அசைவும் இல்லை. மேலும் தரைக்கு கீழே இருந்து வந்துக் கொண்டிருந்த சத்தம் வேறு மித்ரனை தொந்தரவு செய்துக் கொண்டே இருந்தது. அது என்ன என்று அடையாளம் காணவும் முடியவில்லை. அவன் மெதுவாக அங்கிருந்து விலகி வெளியே வந்தான்.

மெல்ல ரோஜா பூந்தோட்டத்துக்கு அண்டையாக சென்ற மித்ரன் மரக் கோயிலின் பின் வாசலில் இருந்துஒரு பெண் வெளியேறுவதைக் கண்டு அவளை தொடர்ந்து போனான். சிவப்பு ரோஜாக்களின் பகுதியில் நின்றுஅவள் வானை வெறித்துக் கொண்டிருந்தாள். மித்ரன் அவளுக்கு அருகில் சென்று புன்னைத்தான். சிவப்பு நிற ஆடை உடுத்தியிருந்தவள் தலை சரித்து கண் சிமிட்டி பதிலுக்கு சிரித்தாள்.“மலர்தலை மட்டுமே அறிந்தது காதல். அதன் நிறம் அழிவதே இல்லை”. உற்சாகமாக ஒலித்த அவளுடைய குரலைக் கேட்டு மித்ரன் தயக்கத்துடன் அமைதியாக நின்றான். அவள் மிகவும் இயல்பாக “உங்கள் நண்பருக்குள் நொடிதோறும் காதல் மலர்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும். மீளாத் துயரையும் மீறிஅவருடைய கண்களில் ஒளியாக தெரிவது அதன் அழிவற்ற நிறம் தான்” என்று சொல்லவும் மித்ரன் குழம்பியபடி தனக்கு ஆக்னேயாவையை பற்றி எதுவும் தெரியாது எனவும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதுக் குறித்த சிறு யூகம் கூட தன்னிடம் இல்லை எனவும்கூறினான்.

அவள் புருவங்களை உயர்த்தி சந்தேகமாக பார்த்துவிட்டு கழுத்தை ஒடித்து விளையாட்டாக சிரித்தாள். மலர்தலை மட்டுமே அறிந்த அழகுடையவள் என்று மித்ரனுக்கு பட்டது. அவளுடைய பெயர் என்ன என்று கேட்டான். “பிரகதி” என்றபடி அவள் பூக்களின் வரிசையூடே நடக்க அவனும் அவளுடனே நடந்தான். பூ இதழ்களை உரசி நறுமணத்துடன் வீசிக் கொண்டிருந்த ஈரக்காற்றில் அவர்கள் பேசியபடி நடந்தார்கள். மித்ரன் அவளிடம் தன் பெயரையும் ஊரையும் சொன்னான். பின்னர் தான் ஒரு கப்பல் மாலுமி என்று கூறிவிட்டு சுற்றிலும் கைக்காட்டி “இது என்ன இடம்?” என்று விசாரித்தான்.

“உங்களுக்கு இந்த மலர்த் தோட்டம் பற்றி எதுவும் தெரியாதா?”. இல்லை என்றுதலையசைத்தான் மித்ரன்.

நீர் வீழ்ச்சியின் ஒலி அதிகரித்தும் குறைந்தும் சீரில்லாமல் வெவ்வேறு அலைவரிசைகளில் ஒலித்துக் கொண்டிருக்க பிரகதி தரையோடு ஒழுகிய தன் நீளமான ஆடையை சரி செய்தபடி சிறுபெண்ணின் ஆர்வத்துடன்“இது ப்ரியத்தின் தோட்டம்” என்று ரோஜா மலர்களை பற்றி சொல்லலானாள். கண்தூரம் வரைக்கும் செழித்திருந்த தோட்டத்தில் சிவப்பு, நீலம், மஞ்சள் என மூன்று வண்ணங்களில் ரோஜாக்கள் பூத்திருந்தன.“இதில் சிவப்பு ரோஜா, இரு மனங்களிலும் தோன்றி உணர்தலிலும் பகிர்தலிலும் முழுமையுற்ற காதல்களை குறிக்கும்.”என்றவாறு அவள் ரோஜா செடிகளின் முன்னே குனிந்து அவற்றின் செம்மை அடர்ந்த இதழ்களில் தன் கன்னத்தை புதைத்தாள்.கண்களை மட்டும் திருப்பி “காதலைப் பற்றி எண்ணும்போதெல்லாம் எனக்குள் ஆச்சர்யம் மட்டுமே எஞ்சுகிறது. அது எப்படி ஒரே நேரத்தில் இரண்டு மனங்களிலும் நேசம் தோன்றமுடியும்? அதை என்னால் அறிந்து கொள்ளவே முடிந்ததில்லை” என்று கூறிவிட்டு எழுந்து நின்றாள்.“சமயங்களில் காதலின் ரகசியத்தை நான் நெருங்கிவிட்டதாகவே நினைப்பேன். என் சொற்கள் அறியும் தொலைவில்தான் அது இருக்கிறது என்று தோன்றும். ஆனால் உடனேயே அது பொய் என்பது போல் காதல் முற்றிலும் வேறொன்றாக மாறிவிடும்.” என்றாள். “அறிந்துகொள்ளும்போது அது புதிதாக மலர்கிறது போலும்”. மிகவும் பிரியப்பட்ட விஷயம் பற்றி பேசுவதைப் போல் அவள் குரல் சிநேகத்துடன் ஒலித்தது.

பிரகதியிடம் வெளிப்பட்ட நெருக்கம் மித்ரனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. துயரத்தையே அறியாதவள் போல் அபிரிதமான உள எழுச்சியுடன்பேசியவாறுஅவள் தோட்டச் சரிவினூடே சென்று கொண்டிருந்தாள். ஏதோவொரு விருப்பப் பாடல் அவள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கவேண்டும். அதன் இசைவுக்கேற்ற நடனம் போலிருந்தது அவளுடைய நடை. அவளது தோள்பட்டையில் ரோஜா இதழொன்று ஒட்டிக் கொண்டிருந்தது.அவள் மெல்ல திரும்பி மித்ரனை நோக்கி புன்னகைத்து இயல்பாக கூந்தலை ஒதுக்கினாள். கருங்கூந்தலின் அலைவில் தோள் பட்டையிலிருந்த ரோஜா இதழ் பிரிந்து விலகி காற்றில் உதிர்ந்தது. அந்த ஒற்றை இதழ் மண்ணை சேர்வதையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரன். அது தனியே ஒரு காலத்தில் நிகழ்ந்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது அவனுக்கு. பின்னர் தான் அவன் சுற்றிலும் உன்னிப்பாக கவனித்தான். ஒற்றை பெரும்காட்சியாக தெரிந்த உலகம் சிறுசிறு வேறுபாடுகளுடன் வெவ்வேறு காலங்களில் நிகழும் காட்சிகளின் கோர்வை என மாறிக் கொண்டிருந்தது. காற்றின் அலை ஒவ்வொரு சதுர அடியிலும் தேங்கி தேங்கி முன்னேறியது. மண் தரையில் ஒவ்வொரு கூழாங்கல்லும் பிரம்மாண்டமாக தெரிந்தது. எல்லாமே சிதறிக் கொண்டிருப்பதை உணர்ந்து தெளிவில்லாமல் நின்றிருந்த மித்ரன் எதிரில் பிரகதியின் உடை சிவப்பிலிருந்து மஞ்சள் நிறத்துக்கு மாறுவதை இமையாது பார்த்தான். மேலே வானம் உடைபட்டுக் கொண்டிருந்தது. நிலம் பிளந்து வருவதுப் போல் அல்லது பிளவுப்பட்ட நிலத்தை யாரோ பிழையாக பதித்து வைத்ததுப் போல் தரை அவன் கால்களுக்கடியே நடுங்கியது. மித்ரன் மயக்கம் வருவதுப் போல் தள்ளாடினான்.சடுதியில் பிரகதியின் ஆடை நிறம் மாறியதும் காட்சிகள் திரும்பவும் ஒழுங்கு பெற்றன. கிழிந்து ஒட்டவைத்த காகிதம் போல் துண்டு துண்டாக தெரிந்த பூந்தோட்டம் சீரானது. சில நொடிகளுக்கு நினைவு தவறி பார்வை குழம்பி மீண்டதாக மித்ரன் உணர்ந்தான்.

அவர்கள் நடந்தபடியே மஞ்சள் ரோஜாக்களின் பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.நெற்றி ஒரு பக்கமாக சாய்ந்து இழுப்பது போலிருக்க, தன் கால்களை தரையில் வலுக் கொடுத்து அழுத்தி நின்று நிதானம் அடைந்தான்மித்ரன். பதற்றம் குறையாமலயே பிரகதியிடம் “உங்கள் உடையின் நிறம் மாறிவிட்டது” என்றான்.

பிரகதி ஐயமுற்றவளாக தலை கவிழ்த்தி தன் ஆடையை நோக்கிவிட்டு புருவம் உயர்த்தி “இல்லையே” என்றாள்.

“முன்னர் நீங்கள் சிவப்பு வண்ண உடை அணிந்திருந்தீர்கள்”. மித்ரனின் குரல் நிச்சயம் இல்லாமல் ஒலித்தது.

பிரகதி பதில் சொல்லவில்லை. அவளிடம் ஏதோ பெரிய மாற்றம் வந்திருப்பதை மித்ரன் கவனித்தான். அவள் முகம் பரிச்சயமற்றதாக தெரிந்தது. உருவத்தில் மாற்றமில்லை எனும்போது ஏதோவொன்று அவளை பிறத்தியாக காண்பித்தது. உடனேயே அது என்ன என்பதை மித்ரன் கண்டுகொண்டான்.அதுவரைக்கும் அவளிடம் இருந்த உற்சாகம் முற்றிலுமாக வற்றிப் போயிருந்தது. அதீதமான சந்தோஷத்தில் சிறுபெண் போல் தோன்றிய பிரகதி இவளல்ல. அரிய பொருளை தொலைத்துவிட்ட பேதை என அவள் முன்னே நின்றிருந்தாள்.

மித்ரன் “ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டான்.

அவள் அதை உள்வாங்க முடியாதவள் போல் “என்ன?” என்றாள்.

சாதாரணமாக பேசிக் கொண்டு வந்தவள் திடீரென்று என்னவோ போல் ஆகிவிட்டதை மித்ரன் குறிப்பிட்டு சொல்ல, அவள் “நானா? என்ன பேசிக் கொண்டு வந்தேன்” என்று கேட்டாள்.

“இந்த மலர்த் தோட்டம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தீர்கள். சிவப்பு ரோஜாக்கள் முழுமை பெற்ற காதல்களை குறிக்கும் என்று”. அவன் வாக்கியத்தை முடிக்காமல் அவளை மௌனமாக பார்த்தான்.

“ம்ம்” என்று தலையசைத்தவாறு பிரகதி “இந்த மஞ்சள் ரோஜாக்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டாள்.

மித்ரன் சத்தமே வராமல் உதட்டை அசைத்தான். பின் தொண்டையை செறுமி “இல்லை” என்றான்.

“இம்மஞ்சள் பூக்கள் துர்சந்தர்ப்பம் காரணமாக பிரிய நேர்ந்த காதல்களை குறிக்கும்”. வெளிறிய கண்களால் மலர்களை பார்த்த வண்ணம் “பெரும்பாலும் அவை பாழ் மரணத்திலேயே நிகழ்கின்றன. காதல் இணையில் ஒருவரோ அல்லது இருவருமேக் கூடமரித்துவிடும்போது” என்று கூறிஅவள் தன் கைகளை பிணைத்துக் கொண்டு முகம் சுருக்கினாள். “எனக்கு இது புரியவே இல்லை. பிரிவுக்கு பின்பும்நெஞ்சத்தில் வளர்ந்துக் கொண்டேயிருக்கும் ஒருவரின் ஞாபகங்களை எப்படி அகற்றுவது?”. அவள் குரல் இறைஞ்சி தழுத்தது.“காதலிக்கும்போது எப்படியோ இந்த முழுமை பிசகவே முடியாது- இந்த சந்தோஷம் தீரவே போவதில்லை என்று எளிதில் நம்பிவிடுகிறோம்.ஆனால் காதல் தரும் அந்த நம்பிக்கை ஒரு இரக்கமில்லாத பொய். கருணையற்ற பழிச்சொல்” பிரகதி நீண்ட நாட்களாக மனதில் புதைத்து வைத்திருந்த ஆற்றாமையை தீர்த்துக் கொள்வதுப் போல் பேசினாள். “காத்திருக்கவும் முடியாது. மறக்கவும் முடியாது எனும்போது எதை வேண்டி அன்பின் நினைவுகள் உயிரை எரிக்கின்றன?” என்று கூறிவிட்டு சொல் மறந்தது போல் அசைவில்லாமல் நின்றாள்.

மித்ரனுக்கு அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை. அவள் முகத்தையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான். இழப்பின் துயரத்தில் அவள் கண்கள் இருண்டு போயிருந்தன. ஆனால் அதில் கசப்பு இல்லை. கோபமும் இல்லை. இயலாமையும் தவிப்பும்மட்டுமே அவளை அழுத்திக் கொண்டிருந்தன. அவளது உடல் மொழியிலேயே அந்த நடுக்கம் தெரிந்தது. நிஜத்தை மாற்ற முடியாது என்று தெரிந்து கொண்ட பின்பும் அதை ஏற்றுக் கொள்வதில் இருக்கும் பயம்.ஏமாற்றம். அவை அவளது சொற்களில் வெளிப்பட்டன. அவன் எதிர்பார்க்காத ஒரு கணத்தில் அவள் அவனது கையை பிடித்துக் கொண்டு “ஒவ்வொன்றாக விலகிச் செல்வதும் இல்லையென்றாவதும் தான் முடிவு என்றால் எதற்கு இவ்வளவு பற்றுதல்?” என்றாள். அவளை பிரிந்து சென்ற காதலன் தானாகவே இருக்கவேண்டும் என்று மித்ரன் உளமயக்கம் அடைந்தான். அப்படி இல்லையெனினும் அவளுடன் இனி என்றும் இருக்கப் போகும் காதலன் தானேயென்று அவன் நினைத்துக் கொண்டான்.

பிரகதி அவனுக்கு பக்கமாக வந்து அவனது தோளில் தலை சாய்த்துக் கொள்ள இருவரும் கை கோர்த்து நடக்க தொடங்கினார்கள்.மித்ரன் தலை சரித்து பிரகதியை பார்த்தான். அவளிடம் ஏதாவது பேச வேண்டும் போலிருந்தது.ஆனால் என்ன கேட்பது என்று எதுவும் தோன்றவில்லை.பொருள்கூடாத எண்ணங்களாக மனதில் ஓடிக் கொண்டிருந்தன. உண்மையில் பிரகதி தன் கையை பிடித்துக் கொண்டு நடப்பதை அவனால் நம்பவே முடியவில்லை. எதன் பொருட்டும் இதை தொலைத்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு அவனுள் எழுந்தது. மறுபுறம் எப்படியும் இது தன்னைவிட்டு பிரிந்துவிடும் என்கிற பயமும் இருந்தது. இயல்பாக அவளிடம் “அந்த நீல மலர்கள் எதை குறிக்கும்?” என்று தொலைவில் கைக் காட்டி கேட்டான்.

பிரகதியிடமிருந்து பதில் வரவில்லை. ஆனால் அவள் அவனை நீல மலர்களின் திசையில் தான் அழைத்துச் சென்றுக் கொண்டிருந்தாள். அவர்களுக்கிடையே குளிர் பனி போல் மௌனம் தொடர்ந்துக் கொண்டிருந்தது. மித்ரனால் சிவப்பு ஆடையில் மகிழ்ச்சி ததும்ப நின்றிருந்த பிரகதியை ஞாபகத்தில் இருந்து விலக்க முடியவில்லை.அதே நேரம் தற்போது உடன் வருகிற பிரகதியும் அவனில் நிரம்பிக் கொண்டிருந்தாள். மஞ்சள் போன்ற அடர்ந்த வண்ணம் துயரத்தை உண்டு பண்ண முடியும் என்பதே அவனுக்கு அப்போதுதான் புரிந்தது. கூண்டில் அடைப்பட்ட மஞ்சள் பறவைஎன இருந்தாள் பிரகதி. அவனுக்குள் பிரகதியின் துயரம் முள் போல் சிக்கி நெருடிக் கொண்டேயிருந்தது. அதை மறக்கும் பொருட்டு “அந்த ஆலயம் யாருடையது?” என்றுக் கேட்டான். சரிவிலிருந்து பார்க்கும்போது ஆலயக் கோபுரம் மட்டுமே தெரிந்தது.

“அது காலாதீதிஆலயம்” என்றாள் பிரகதி. “அதற்கு கீழே தான் சாத்தியங்களின் இயந்திரம் இருக்கிறது”.

பிரகதி தொடர்ந்து பேசியதை மித்ரன் அதிர்ச்சி விலகாமல் கேட்டான். அவர்கள் முன்பு பார்த்த மர ஆலயத்துக்கு கீழே சுரங்கத்தில் முப்பத்தியைந்தாயிரம் குள்ளர்களால் இயக்கப்படும் ஒரு மிகப் பெரிய இயந்திரம் இருக்கிறது. அதை தான் “சாத்தியங்களின் இயந்திரம்” என்றாள் பிரகதி. உலகில் அது போல் மொத்தம் நூற்றியிருபது இயந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு இயந்திரமும் உலகின் ஒரு பகுதி மனிதர்களை முற்றிலுமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அவர்களுடைய பிறப்பு, மரணம், வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள், நிகழும் சம்பவங்கள், உணரும் பருவங்கள் என அனைத்துமே இந்த இயந்திரத்தினால் மட்டுமே தீர்மாணிக்கப்படுகிறது. மித்ரன் எவ்வளவு யோசித்தும் சாத்தியங்களின் இயந்திரத்தை தன் கற்பனையில் கொண்டு வர முடியவில்லை. “தறி இயந்திரம் பட்டு நூலை நெய்து ஆடை செய்வதுப் போல் சாத்தியங்களின் இயந்திரம் மனித வாழ்க்கையை நெய்கிறது” என்று சொன்னாள் பிரகதி.

.ஒவ்வொரு பட்டுநூலும் ஒரு மனித உயிர். ஆனால் எந்த நூல் எதில் சேரும், எந்த நூல் எப்படி அறுபடும் என்பது யாருக்கும் தெரியாது. கோயிலில் இருந்த பெரியவர் தான் சாத்தியங்களின் இயந்திரத்திற்கான பொறுப்பாளர்.

பெரியவருக்கு முன்னே நின்றுக் கொண்டிருந்தபோது கேட்ட வித்தியாசாமன சத்தம் நினைவில் எழ மித்ரனுடைய மனதில் சாத்தியங்களின் இயந்திரம் ஒரு மாதிரி துல்லியம் இல்லாமல் உருக் கொண்டது. குறுக்கும் நெடுகிலுமாக ஓடும் லட்சம் நூல்கள். அவற்றை தம் போக்கில் இழுத்துக் கோர்க்கும் குள்ளர்கள். ஒரு நூல் இன்னொன்றில் இணைகிறது. யாரோ யாருக்கோ முத்தமிடுகிறார்கள். ஒரு நூல் வரிசை மாறுகிறது. யாரோ யாரையோ கைவிடுகிறார்கள்.எனில் தனிமையில் சபிக்கப்பட்டவரின் வாழ்க்கை எப்படி நெய்யப்படும்? சடுதியில் மித்ரனுக்குள் சாத்தியங்களின் இயந்திரம் அறிந்துக் கொள்ளவே முடியாத புதிர் என வளர்ந்துக் கொண்டே போனது. அதன் வடிவத்தை நினைத்து பார்க்கவே இயலவில்லை. நூறு பேர் பகிர்ந்து கொள்ளும் தினத்தில், நூறு நிகழ்வுகள் இணையும் புள்ளியில், லட்சம் கோடி சாத்தியங்கள் ஒன்றையொன்று ஏற்றுக் கொள்கின்றன. ஒன்றையொன்று மீறிச் செல்கின்றன. ஒன்றையொன்று சமன் செய்கின்றன. நிலைத் தவற வைக்கின்றன. அதன் ஒழுங்கை எப்படி தீர்மாணிப்பது?

“உங்கள் நண்பர் சாத்தியங்களின் இயந்திரத்தை தேடிதான் இங்கே வந்திருக்கிறார்”. பிரகதியின் குரல் கேட்டு சிந்தனை தடைபட்டவனாக மித்ரன் “என்ன?” என்றான். அதற்குள் பிரகதி கூறியது அவனுக்குள் அர்த்தமாகி விட்டது. உடனேயே “யார்? ஆக்னேயாவா?” என்றான்.

பிரகதி “ஆம். அவர்தான். அவர் மீதும் மஞ்சள் பூக்களின் நிழல் படிந்திருக்கிறது” என்றாள்.

“அவன் எதற்கு இங்கே வரவேண்டும்?”.

பிரகதி மித்ரனிடம் இருந்து தன் கையை பிரித்தபடி முன்னே நடந்து “நிவலன் வந்த அதே காரணத்திற்காகத் தான்” என்றாள். “தன் காதலை சாஸ்வதமாக்க”.

“புரியவில்லை”. உடன் நடந்தபடியே மித்ரன் சொல்ல பிரகதி “நிவலன் கடல் தேவதைக்காக தன்னுடலை மாற்றித் தர சொல்லி கேட்டான். அவன் அதன் வழியே ஒரு புது உயிரை உருவாக்கினான். புது உயிர் என்பது புது சாத்தியம் மட்டுமே.” என்றாள்.

ஆக்னேயாவிடம் எப்போதும் இருக்கும் சோகத்தை மித்ரன் நினைவில் கொண்டான். அது காதல் துயர் என்று அவன் எண்ணியிருக்கவே இல்லை.ஆனால் இப்போது அது காதல் துயராக மட்டுமே இருக்கமுடியும் என்று பட்டது.“அவனுடைய காதலி இறந்துவிட்டாளா?” என்றான்.

பிரகதி ஒரு விநாடி அவன் கண்களை பார்த்துவிட்டு மண் நோக்கி தலையை தாழ்த்தினாள். மித்ரனுக்குள் தொடர்ச்சியாக என்னென்னவோ கேள்விகள் எழுந்தன. சடுதியில் பெருகிய கிளர்ச்சியுடன் “இறந்தவர்களை மீண்டும் பிறப்பிப்பதற்கும் வாய்ப்பு உண்டா என்ன?” என்று அவன் கேட்டான்.

“தெரியவில்லை.” என்றாள் பிரகதி.”அவர் என்ன நினைத்திருக்கிறார் என்பதும்கூட குழப்பமாகவே இருக்கிறது”.

அவர்கள் நீல மலர்களின் பகுதிக்கு வந்துவிட்டிருந்தார்கள்.

மித்ரன் யோசனையுடன் தலையசைத்துக் கொண்டிருக்கும்போதே சுற்றி மீண்டும் காட்சிகள் வெட்டுப் பட்டு சிதறுவதை கண்டான்.வானுக்கும் மண்ணுக்கும் நடுவே குறுக்கிலும் நெடுகிலுமாக கோடுகள் விழுந்து உலகம்பெரிய பெரிய சதுரங்களாக பிரிந்துக் கொண்டிருந்தது. பின் அவை உடைந்து பிறக்கும் சிறிய சதுரங்கள். அவற்றிலிருந்து விலகி தோன்றும் இன்னும் சிறியசதுரங்கள் என உலகம் பிளவுப் பட்டுக் கொண்டேயிருந்தது.இறுதியில் ஒன்று மீது ஒன்று என்றுகாட்சிகள் மோதி உருக்குலைந்து சிதையை வெறும் வெளிச்சப்புள்ளிகள் மட்டுமே எஞ்சியிருந்தன.எதையும் சரியாக பார்க்க முடியாமல் கண்களை இமைத்து இமைத்துமித்ரன் ஒரு கட்டத்தில் தள்ளாடி கீழேயே விழுந்துவிட்டான். அவன் எழுந்து பார்த்தபோது பிரகதியின் உடை முற்றிலும் அடர் நீலத்திற்கு மாறிவிட்டிருந்தது. உடலில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிவிட்டபடி அவளை வித்தியாசமாக பார்த்தான் மித்ரன். பிரகதி அவனிடம் எதுவுமே சொல்லாமல் எங்கேயோ செல்பவள் போல் விலகி வேகமாக நடக்க அவன் படபடப்புடன் “பிரகதி..” என்றான்.

அவள் திரும்பி நின்று என்ன என்பது போல் குழப்பமாக பார்க்க மித்ரன் “நாம் பேசிக் கொண்டிருந்தோம்…” என்றான்.

“நாம் இருவருமா?”

அவளுக்கு நினைவுப் படுத்துவது போல் மித்ரன் “ஆம். மலர்களை பற்றி சொல்லி தொடங்கி சாத்தியங்கள் இயந்திரம் ஆக்னேயா என்று நாம் பேசிக் கொண்டிருந்தோமே”. என்றான்.

அவள் பாதி நினைவு வந்ததுப் போல் உறுதி இல்லாமல் தலையாட்டினாள்.

தன்னை ஞாபகப்படுத்துவதற்கு எதையாவது பேச வேண்டும் என்று மித்ரன் “இந்த நீல மலர்கள் எதை குறிக்கும் என்று நீங்கள் இன்னும் சொல்லவில்லை” என்றான். கீழே விழுந்தபோது அவனது கால் ஏதோ ஒரு கல்லில் மோதியிருந்தது. கப்பலில் ஆணி குத்திய இடத்திற்கு பக்கத்திலேயே அடிபட்டத்தில் லேசாக வலியெடுத்தது. அவன் எச்சில் விழுங்கி அதை பொறுத்துக் கொண்டான்.

பிரகதி அருகிலிருந்த பூச் செடியிலிருந்து ஒரு நீல ரோஜாவை பறித்து எடுத்தாள். அதை கைகளில் சுழற்றியபடியே “நீல ரோஜாக்கள் சொல்லப்படாத காதல்களையும் ஏற்றுக் கொள்ளப்படாத காதல்களையும் குறிக்கும்” என்றாள்.

அவள் அதற்கு மேல் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் அவளை பார்க்கும்போதே மித்ரனுக்குள் மெல்லிய பயம் எழுந்தது. அவனது பார்வையில் பிரகதி ஏதோ கொலை தெய்வம் போல் தெரிந்தாள். இத்தனைக்கும்முன்பு அவள் சந்தோஷமாக இருந்தபோதும் சரி; மீட்சியற்ற துயரில் இருந்தபோதும் சரி; மித்ரன் அவளை சிநேகமாகவே உணர்ந்தான். ஆனால் இப்போது வஞ்சினம் கொண்ட யட்சி என கண் முன்னே மலரை பற்றியபடி நின்றிருப்பவள் ஒரு தீச்சொல்லில் தன்னை எரித்து அழித்துவிட முடியும் என்று பட்டது அவனுக்கு. தன்னை மட்டுமில்லை புவியெங்கும் உயிர் என்றிருக்கும் அத்தனையையும் அவளால் அழிக்க முடியும். பிரகதி நீல ரோஜாவிலிருந்து ஒவ்வொரு மலரிதழாக பிய்த்து எறிந்துக் கொண்டிருந்தாள். சட்டென்று மலர் காம்பின் முள்ளால் தன் கையை அழுத்தி குத்தியபடி “இன்னும் எத்தனை தடவை உங்கள் முன் மண்டியிட்டு கதறவேண்டும்? இன்னும் எத்தனை தடவை உங்கள் பொய்யை நம்பிவிட்டதாக நடிக்க வேண்டும்? இன்னும் எத்தனை தடவை கைவிடப்படும்போது கண்ணீரை மறைத்துக் கொள்ளவேண்டும்?” என்றாள்.கை நரம்பில் குத்திசிறுதுளியாக பொட்டுவிட்ட ரத்தம் சீக்கிரமே பிய்த்து அடிக்கத் துவங்கியது. கையிலிருந்து ஒழுகி நீல ஆடை முழுக்க படிந்து தரையில் சேர்ந்தும் நிற்காமல் ரத்தம் வந்துக் கொண்டேயிருந்தது.

பிரகதி முள்ளால் இன்னும் ஆழமாக குத்திக் கொண்டேயிருந்தாள். நீர் பெருக்கெடுத்து ஓடுவதுப் போல் தரை முழுக்க குருதி கொப்பளித்து ஓடிக் கொண்டிருந்தது. நீல ரோஜாக்கள் மீது சிதறி தெறித்தது. மித்ரன் வேகமாக முன்னே நடந்து பிரகதியின் கையை பிடித்து அவளை தடுத்து நிறுத்தினான். உள்ளங்கையில் சூடான ரத்தம் பிசுபிசுப்புடன் ஒட்டியது. மெல்ல பிரக்ஞை இழந்து பிரகதி மயங்கி விழ அவன் அவளை தாங்கிப் பிடிக்க முயன்றாள்.ஆனால் அதற்குள் காற்றில் பஞ்சு பறப்பதைப் போல் அவள் நீல இழைகளாகி கரைந்துப் போனாள். நீராவி என சில நொடிகளில் அவள் காற்றில் மறைந்துவிடமித்ரன் அதிர்ச்சியுடன் சுற்றிலும் பார்த்தான். கண் முன்பாகவே ஒவ்வொரு ரோஜாச் செடியிலிருந்தும் மலர்கள்உதிர, அரூப கைகளால் அள்ளியெடுக்கப் படுவதுப் போல் பூவிதழ்கள் காற்றில் மேலெழுந்து சுழன்றபடியே வான் எல்லை வரை சென்று மறைந்தன. பூமியிலிருந்து வான் நோக்கி பெய்யும் மழைப் போல்சிவப்பு, மஞ்சள், நீலம் என ரோஜா இதழ்கள் அந்தர வெளியில் மேலே சென்றுக் கொண்டிருப்பதை ரத்தம் சொட்டும் கைகளுடன் மித்ரன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்களில் பூந்தோட்டம் முழுக்க வெறும் மொட்டைக் காம்புகள் மட்டுமே இருந்தன. கண்ணெடுத்து பார்க்கவும் முடியவில்லை. சபிக்கப்பட்ட நிலம் போல் விரிந்துக் கிடந்தது பூந்தோட்டம். மித்ரனுக்கு அங்கு நிற்கவே பயமாக இருந்தது. நீர் வீழ்ச்சியின் சத்தம் பெரும் ஓலம் போல் கேட்டுக் கொண்டிருக்க அவன் மர ஆலயம் நோக்கி விரைந்து ஓடினான். இருள் எழுந்து வர நிலவொளியில் சவக்காடு போல்இருந்த ப்ரியத்தின் தோட்டத்தில் நிலை தெரியாமல் பதறி ஓடி அவன் மரஆலயத்தை வந்தடைந்தான்.எங்கே என்று கணிக்கமுடியாத தொலைவில் சருகுகள் நெறிபடும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. அவன் ஆலய முகப்பில் நின்று மூச்சிரைத்தான். காது மடல்கள் வெப்பத்தில் சிவக்க, நெற்றியில் இருந்து வியர்வை வழிந்து ஊற்றிக் கொண்டிருந்தது. நெஞ்சுக்கூட்டில் அதிகரித்த இதயத்துடிப்பை உணர்ந்தபடி அவன் மரஆலயத்தை சிந்தனையற்று பார்த்துக் கொண்டிருந்தான். காலை வெளிச்சத்தில் ரசனையான வசிப்பிடம் போல் தெரிந்த ஆலயம் தற்போது இருளில் நூற்றாண்டுகளின் ஆழத்தில் புதையுண்ட புராதான ஸ்தலம் போல் காட்சியளித்தது. முகப்பு சுவரில் இருந்த பாம்பின் ஓவியத்தை அவன் அப்போதுதான் முதல் தடவையாக பார்த்தான். சுவர்களில் தென்பட்ட பூ ஓவியங்கள்கூட இருண்மையையே நினைவூட்டின.

உள்ளே இருந்து திடீரென்று பேச்சு சத்தம் கேட்கவும் மித்ரன் துணுக்குற்றான். பின் பக்கவாட்டில் நடந்து சென்று பேச்சுக்குரல் கேட்ட திசையில் எட்டி பார்த்தான்.

“எனில் உங்கள் இருவரின் வாழ்க்கையிலும் வேறு யாருமே இருக்க மாட்டார்கள். எதுவுமே நிகழாது.நான் கொடுக்க இருப்பது ஒரே ஒரு சாத்தியம் மட்டுமே.ஆண்டுகள் தோறும் இருவரும் ஒரே நிகழ்வில்தான் திரும்ப திரும்ப வாழ்ந்து கொண்டிருக்கவேண்டும்”. பெரியவரின் குரல் தன்மையாக அதே சமயம் அழுத்தமாகவும் ஒலித்தது. மித்ரன் அவருக்கு எதிரே நின்றிருந்த ஆக்னேயாவை கவனித்தான். தன் கழுத்தில் குறுங்கத்தியை பாய்ச்சுவது போல் வைத்து நின்றிருந்த ஆக்னேயா உறுதியாக “ஆம்.அதுவே நான் விழைவது” என்றான்.

“அது நிஜம் என்றாகுக. ஆம். அதையே அளித்தோம்” என்றபடி பெரியவர் தன் பீடத்தில் இருந்து இறங்கி மித்ரன் நின்றிருந்த திசையில் நடந்து வந்தார். அருகே பார்த்தபோதுதான் அவர் தன் கருப்பு அங்கியில் சிவப்பு,மஞ்சள், நீலம் என மூன்று வண்ணங்களில் ரோஜாக்கள் அணிந்திருப்பது தெரிந்தது மித்ரனுக்கு. அவனைக் கடந்து அவர் இருட்டில் சென்று மறைய மித்ரன் ஆக்னேயாவிடம் நெருங்கிச் சென்றான். தீப்பந்தங்களின் ஒளியில் சுவர் சித்திரங்களும் தூண் சிற்பங்களும் எப்போது வேண்டுமானாலும் உயிர் கொண்டு எழந்துவிடலாம் என்பது போலிருந்தது மித்ரனுக்கு. உடன் தரைக்கு அடியே அந்த விசித்திரமான சப்தமும் நிறுத்தாது கேட்டுக் கொண்டேயிருக்க அவன் பிரகதி சொன்ன சாத்தியங்களின் இயந்திரத்தை ஞாபகத்தில் கொண்டான். அப்போதுஆக்னேயா தன்கையிலிருந்த குறுங்கத்தியை நழுவவிட்டபடி உணர்ச்சி மிகுதியில் மண்டியிட்டு சரிய மரத்தரையில் விழுந்த கத்தியின் உலோக ஒலி அறை முழுக்க எதிரொலித்தது. மித்ரன் ஆக்னேயாவுக்கு பக்கத்தில் போய் அவனது தோளைத் தொட ஆக்னேயா மித்ரனின் கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் வழிய எழுந்து நின்று அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டான். மித்ரனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. ஆக்னேயா என்ன வரம் கேட்டு பெற்றிருக்கிறான் என்பதை அவனால் அனுமானிக்கக்கூட இயலவில்லை. ஆனால் அவன் தன் காதலியை திரும்பவும் அடைய போகிறான் என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது. அதை எண்ணும்போது அவனுக்கும் மனம் துடிப்பாகவே இருந்தது.

உக்கிரமாக எதுவோ மோதி உடைபடும் சத்தம் கேட்டு மித்ரனும் ஆக்னேயாவும் ஒரே சமயத்தில் வாசலை பார்த்தார்கள். மரத்தரையிலிருந்த ஒரு திறப்பின் வழியே குள்ளன் ஒருவன் மேலே ஏறி அவர்களை நோக்கி நடந்து வந்தான். இடுப்பு உயரத்துக்கே இருந்த அக்குள்ளன் வெள்ளை உடை அணிந்திருந்தான். கழுத்து வரை நீண்டிருந்தது அவன் தலை முடி.

ஆக்னேயாவிடம் “நிகழ்ந்து கொண்டேயிருக்கும் ஒற்றை சாத்தியத்தை இயந்திரத்தில் இணைக்கச் சொல்லி உத்தரவு.” என்றான் குள்ளன். ஏனோ அவனது உருவமும் குரலும் அச்சமூட்டும்படியாகஇருந்தன.குரூரமாகவும்.மித்ரனுக்கு அவனை பார்க்கவே பயமாக இருந்தது. ஆனால் பார்வையை திருப்பவும் மனம் வரவில்லை.

குள்ளனுக்காகவே காத்திருந்ததுப் போல் ஆக்னேயா வேகமாக தன் கால்சட்டை பையிலிருந்து,மூடி போட்டு அடைத்திருந்த ஒரு சிறிய மண் குடுவையை எடுத்தான்.அதை குள்ளனிடம் கொடுத்துவிட்டு தன் வலதுக் கையை மடக்கி அவன் முன்னே நீட்டினான். மித்ரன்நிச்சயமற்று பார்த்துக் கொண்டிருக்க, மண்குடுவையை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்ட குள்ளன் சிறு வெட்டுக் கத்தியால் ஆக்னேயாவின் கையை அழுத்தமாக கீறினான். சதை அறுப்பட்டு ரத்தம் வழிய அதை தான் கொண்டு வந்திருந்த இன்னொரு காலி மண் குடுவையில்நிரப்பிக் கொண்டான். வலி தாளாமாட்டாமல் ஆக்னேயா உதட்டை பல்லால் கடித்து அலறமித்ரனுக்கோ உடலே பதறி நடுங்கியது. கடந்த சில நாட்களாகவே வெறும் ரத்தமாகவே பார்த்து பார்த்து அவனுக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. குள்ளம் வெட்டுப்பட்ட ஆக்னேயாவின் கையில் தைலம் போல் எதையோ பூசிவிட்டு இரு மண் குடுவைகளையும் கைகளில் பிடித்தவாறு வந்த வழியிலேயே திரும்பிச் சென்றான். ஆக்னேயா குள்ளனிடம் முதலில் கொடுத்த மண் குடுவையில் அவனது காதலியின் ரத்தம் இருக்கக்கூடும் என்று மித்ரன் எண்ணிக் கொண்டான். தரைத் திறப்பு அறைப்பட்டு மூடுவதை பார்த்துவிட்டு மித்ரனும் ஆக்னேயாவும் ஆலயத்தை விட்டு வெளியே வந்தார்கள்.

ஆக்னேயாவுக்கு இன்னும் வலி பொறுக்க முடியவில்லை. ஒரு மாதிரி தாங்கலாகவே நடந்து வந்தான்.இருள் தொடர காட்டு மரங்களின் பாதையில் நடந்து இருவரும் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். வழி முழுக்க நிலா பொழியும் வெளிச்சக் கோடுகள் சரிந்து நீள்வதையும் அவை திட்டுதிட்டாக படிந்து பிரகாசிப்பதையும் கவனித்தபடி நடந்தான் மித்ரன்.

இருவரும் கப்பலுக்குச் சென்று ஆளுக்கொரு மது போத்தலை எடுத்துக் கொண்டு கடற்கரைக்கு திரும்பினார்கள். “எனக்கு எதுவுமே புரியவில்லை”. மூன்றாவது மிடறுக்கு பின்பு மித்ரன் சொன்னான்.

“சாத்தியங்களின் இயந்திரம் பற்றி அறிந்திருப்பாய் தானே?”. ஆக்னேயா கேட்கவும் மித்ரன் “ம்ம்” என்று முனகலாக ஆமோதித்தான்.

“மனித வாழ்க்கை முடிவற்ற சாத்தியங்களால் மட்டுமேஇயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நிகழ்வு முடிந்து இன்னொரு நிகழ்வு நடப்பதற்கு எத்தனையோ கோடி சாத்தியங்கள் சேர்ந்து அமைய வேண்டும். சாத்தியங்களின் இயந்திரம் சாத்தியங்களை உற்பத்தி செய்து பெருக்குகிறது. விளைவாக மனித வாழ்க்கை நிகழ்ந்தபடியே இருக்கிறது.”  மித்ரன் ஆக்னேயாவை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். நுரைத்து பொங்கிய கடல் அலைகளில் இருளை மோதித் திறந்துக் கொண்டிருக்க ஆக்னேயா தொடர்ந்து “மனித உயிர் ஸ்திதி. காலமும் சாத்தியங்களும் நிலையிலிகள். இதில் காலமாற்றம் பொதுவானது. தனித்து இயங்குவது. ஆனால் சாத்தியங்கள் ஒன்றையொன்று சார்ந்து உருவாகுபவை. எனவே நான் மறுபடியும்விட்ட இடத்திலிருந்து என் காதலியோடு இயல்பாக வாழ்க்கையை தொடர முடியாது. அது ஒட்டுமொத்தமாக மானுடத் தொகையின் சமனையே குலைத்துவிடும்.” என்றான்.

மித்ரனுக்கு ஆக்னேயா சொல்வது அர்த்தமாவது போலத் தான் இருந்தது. மறுநொடியே சுத்தமாக புரியாததுப் போலவும் இருந்தது. “சரி. எப்படிதான் உன் காதலியை திரும்ப கொண்டு வரப் போகிறாய்?” என்றான்.

“எனக்கு கொடுக்கப்பட்டிருப்பது ஒரு சாத்தியம்.ஒரு நிகழ்வு.நானும் அவளும் இனி காலத்திற்கும் இதே வயதில் ஒரேயொரு நிகழ்வில் மட்டும் வாழ்ந்துக் கொண்டிருப்போம். மரணமோ பிரிவோ இல்லாமல்”

மித்ரனுக்கு சடுதியில் அனைத்துமே புரிந்தது.“காலம் உறைந்து போனது போல்” என்றான்.அவனுக்கு அதை கற்பனை செய்யவே அச்சமாக இருந்தது. ஒரே செயலை முடிவற்று செய்யவேண்டும். ஒரே வாக்கியத்தை முடிவில்லாமல் பேசிக் கொண்டிருப்பது போல். ஒரே நினைவில் முடிவில்லாமல் மாட்டிக் கொண்டது போல். முடிவற்று அழவேண்டும். முடிவற்று காத்திருக்க வேண்டும். முடிவில்லாமல் எதை செய்தாலும் அது மிகப் பெரியம் சாபம் என்றே எண்ணினான் மித்ரன். வேகமாக இன்னொரு மிடறு மது அருந்தியபடி “அவள் திரும்பியதும், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?”என்றான்.

“அவள் கடலையே பார்த்ததில்லை. கடற்கரையில் அமர்ந்து கடலை பார்க்க போகிறோம்”

ஆக்னேயாவின் குரலில் ஒலித்த ஆர்வத்தைக் கண்டு அதிர்ந்தவாறு அமர்ந்திருந்தான் மித்ரன். “முடிவின்மை.முடிவின்மை.” என்று அவன் மனம் பிதற்றிக் கொண்டே இருந்தது. சிறிது நேரத்திலேயே “காதல் ஒரு முடிவின்மை. காதல் ஒரு முடிவின்மை” என்று அவன் எண்ணத் தொடங்கினான். காதல் என்றதும் பிரகதியின் ஞாபகம் அவனை சூழ்ந்து மூடியது-எல்லாவற்றின் மீதும் பெய்து எல்லாமுமாக மாறும் மழைப் போல்.

காதலின் தூய வெளிச்சத்தில் இதழ் விரிக்கும் பூக்களின் தேவதை. இழப்பின் மீட்சியற்ற மௌனத்தில் கண்ணீர் வடிக்கும் துயரின் தேவதை. தனிமையின் நிழலில் எரிந்து சாகும் நட்சத்திரங்களின் தேவதை.சிவப்பு, மஞ்சள், நீலம் என எந்த வண்ணத்தில் இருந்தபோதும் பிரகதியின் மீது தனக்கு காதல் மட்டுமே இருந்தது என்பதை மித்ரன் உணர்ந்தான். அவள் தன்னுள் சந்தோஷமாக தேங்கினாலும், காயமாக வருத்தினாலும், யட்சியாகி உயிரையே கொன்றாலும்அவளது ஸ்பரிசத்தின் பொருட்டு எதையும் ஏற்றுக் கொள்ளமுடியும் என்று தோன்றியது அவனுக்கு. ஒவ்வொருமுறையும் அவளில் உருவான சின்ன சின்ன மாறுதல்களைக் கூட அவன் நுனுக்கமாக நினைவில் கண்டான். அவளது குரலில் தெரிந்த வேறுபாடுகள். உடல்மொழியில் வெளிப்பட்ட பதற்றம். உற்சாகம். உக்கிரம் எல்லாமே அவனுள் திரும்பவும் நிகழ்ந்தன. ஓயாமல் அவள் மாறிக் கொண்டே இருந்தாள். கையை பற்றிக் கொண்டு சிரித்தாள். கையை பற்றிக் கொண்டு அழுதாள். கையை விலக்கி காற்றோடு மறைந்தாள். மலரும் சிவப்பானாள். வாடும் மஞ்சளானாள். அழிக்கும் நீலமானாள். ஆனால் ஒரு தடவையேனும் அவளை தன்னிலிருந்து விலக்கி பார்க்க முடியவில்லை மித்ரனால்.அவளை ஏற்றுக் கொள்ள அவன் நினைக்கவில்லை. அவளிடம் சரண் அடையவே அவன் விரும்பினான். தெய்வம் என்றில்லாமல் இருண்மை என்றானாலும் அவளை சேர்வதில் எந்த பிழையும் இருக்காது.

மெல்ல மித்ரன் சுற்றி சுற்றி பார்த்தான். ப்ரியத்தின் தோட்டத்திற்கு சென்று பிரகதியை தேடலாமா என்று மனம் ஓடியது. ஆனால் அவன் அந்த எண்ணத்தை கட்டுப்படுத்தினான். ஏனோ அவள் அங்கே இருக்கமாட்டாள் என்று அவனுக்கு அழுத்தமாக பட்டது. உடன் பூக்களை இழந்து வெறும் பாழ்வெளி என விரிந்திருந்த அத்தோட்டம் அவனை மிரளச் செய்தது. அது தவிர்த்துபிரகதியைவேறு எப்படி, எங்கே தேடுவது என்பதுக் குறித்து அவனுக்கு எந்த யோசனையும் வரவில்லை. ஆக்னேயாவை கேட்கலாமா என்றெண்ணினான். பக்கத்தில் அவனை பார்த்தபோது அவன் நிகழ்போதிலேயே இருப்பதுப் போல் தெரியவில்லை. கடற்கரை மணலில் புதிர்க் கனவொன்றில் சிக்கியவனாக அவன் விழி மூடி சரிந்துக் கிடந்தான்.

சட்டென்று மித்ரனுக்கு கருப்பு அங்கியணிந்த பெரியவரின் முகம் கவனம் வந்தது. உடனேயே தரைக்கடியே கேட்ட விசித்திரமான சப்தங்களும் நினைவில் எழுந்தன. அவன் அவற்றை வெறுத்தான். யாரோ எதையோ இடம் மாற்றி வைக்கும் சத்தம்.யாரோ எதையோ பிரித்தெடுக்கும் சத்தம். யாரோ எதையோ என்னவோ செய்யும் சத்தம். அவனால் எதையும் அடையாளம் காணவோ புரிந்து கொள்ளவோ முடியவில்லை. திடீரென்று ஆக்னேயாவின் கைச் சதையை அறுத்துச் சென்ற குள்ளனின் ஞாபகம் வந்தது. குள்ளனின் கண்கள்- பச்சாதபமே இல்லாதவை. வன்மத்தை மட்டுமே அறிந்தவை. ஆனால் இக்குள்ளர்களே மனித உறவுகளை தீர்மாணிப்பவர்கள். அவற்றின் போதாமைகளை ஒவ்வொரு கணமும் பல கோடிப்பேரில் கண்டு கொண்டே இருப்பவர்கள். அவர்கள் வன்மம் கொண்டவர்களாக மட்டுமே இருக்க முடியும். ஏனெனில் அவர்கள் சாத்தியங்களின் இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஓடிச் சென்று ஒரே மூச்சில் முப்பத்தியைந்தியாதிரம் குள்ளர்களையும் கழுத்து அறுத்து கொன்றுவிடலாமா என்றுக் கூட நினைத்தான் அவன். அல்லது அந்த பெரியவரை மட்டுமாவது கொல்ல வேண்டும். அதன் பின் ஒரு பகுதி உலகம் முழுக்கவே செயலற்று நிற்பதுப் போல் கற்பனை செய்தபோது உள்ளம் கிளர்ச்சியாக இருந்தது.

மதுபோத்தல் காலியாகி இருந்தது. கப்பலுக்குச் சென்று இன்னொரு போத்தலை எடுத்து வரலாம் என்றெண்ணி அவன் எழுந்து கடல் நோக்கி நடந்தான்.சிறிய துறை மேடையில் நங்கூரம் போட்டு நின்றிருந்த கப்பலுக்குள் சென்று மது போத்தலை எடுத்துக் கொண்டு அவன் கப்பலின் அமர முனையில் வந்து அமர்ந்தான். அப்போது கடல் நீரில் எங்கிருந்தோ மேலெழுந்த நிவலை மீன்கள் வரிசையாக நீந்தி குவியலாக வந்து சேர்ந்தன. நீருக்குள் இருந்து நிவலன் எழுந்து வருவதைக் கண்டு மித்ரன் அசைவில்லாமல் இருந்தான்.இம்முறை மித்ரன் பாம்பு போல் வரவில்லை. அவன் மனித உருவத்தில் இருந்தான். நல்ல உயரத்தில் பெரிய உருவம். இடையில் மட்டுமே ஆடை இருந்தது.எரியும் நெருப்பு போல் மஞ்சள் ஒளி வீசும் வடிவான அகன்ற மேலுடலில்நீர் சொட்டியபடியிருக்க அவன் மித்ரனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தான்.

“உன் நண்பன் தன் காதலியை அடைந்துவிட்டானா?”. புன்னகையுடன் நிவலன் கேட்க மித்ரன் “இன்னும் இல்லை.ஆனால் அவன் அதற்குரிய வரம் பெற்றுவிட்டான். ஆனால் அது வரமா சாபமா என்று எனக்கு தெரியவில்லை” என்றான்.

“எப்போதுமே இருக்கும் குழப்பம் தான் அது.” என்ற நிவலனைமித்ரன் ஆழ்ந்து நோக்கினான். நிவலனின் உடலில் இருந்து வெளிப்பட்ட மஞ்சள் ஒளி கூடுதல்பிரகாசமடைந்தது. “இவற்றை ஆக்னேயா உன்னிடம் தர வேண்டியிருந்தான்” என்று நிவலன் அந்தரத்தில் இருந்து ஒரு புத்தகத்தையும் பெண்ணின் திருமண உடையையும் தருவித்து மித்ரனிடம் கொடுத்தான். மித்ரன் மெதுவாக தோல் காகிதங்களாலான அப்புத்தகத்தை புரட்டினான். அது ஒரு ஓவியப் புத்தகம். ஒவ்வொரு பகக்த்திலும் ஆக்னேயா தன் காதலியை வரைந்து வைத்திருந்தான். நிலவொளியும், நிவலனின் உடலில் இருந்து வெளிப்பட்ட மஞ்சள் ஒளியும் சேர்ந்து காகிதங்கள் ஒரு கலவையான நிறத்தில் அதீத வெளிச்சத்துடன் தெரிந்தன. மித்ரன் பொறுமையாக ஒவ்வொரு தாளாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அனைத்து படங்களிலுமே ஆக்னேயாவின் காதலி முழுமையான அழகுடனே இருந்தாள். சிரிக்கும்போதும், வெட்கப்படும்போதும், பொய்க்கோபத்தில் உதடு சுழிக்கும்போதும், கையில் மலரை பிடித்திருக்கும்போதும்அவள் காதலால் நிரம்பியிருந்தாள். கடைசி ஓவியத்தை மட்டும் சில நிமிடங்களுக்கு விழியசைக்காது பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரன். பின் நெஞ்சடைக்க தன் கையால் அதை மென்மையாகத் தடவினான்.

அது அவளுடைய மரணத்தை சொல்லும் காட்சி. வானிலிருந்த நீண்ட இரண்டு கைகள் உயிரற்ற அவளது உடலை தாங்கிக் கொண்டிருக்கின்றன. அவள் தியானத்தில் இருப்பவள் கண் மூடிக் கிடந்தாள்.முகத்தில் துளி களங்கமில்லை. பெருங்கருணையின் கடவுள் போல் இருந்தாள். அதை ஆக்னேயாவால் எப்படி வரைய முடிந்தது என்று ஆச்சர்யம் அடைந்தான் மித்ரன். நிச்சயமாக அதை வரையும்போது அவன் உள்ளுக்குள்ளேயே நொடிந்து செத்துப் போயிருப்பான். அந்த ஈடற்ற வலிதான் ஓவியத்திலும் பிரதிபலித்தது. நேரடியாக இருதயத்திற்குள் இறங்கும் வலி. மித்ரன் புத்தகத்தை மூடினான்.

நிவலன் நிதானமானக் குரலில் “நண்பனின் பிரிவுக்கு தயாராகிவிட்டாயா?” என்றுக் கேட்டான்.

மித்ரன் புரியாமல் “என்ன பிரிவு?” என்று கேட்டான்.

“அவன் உன்னிடம் சொல்லவில்லையா?”. நிவிலன் சாய்ந்து அமர்ந்து “நான் என எஞ்சுகிற எதுவும் உலகின் இயக்கத்தில் இருந்து விலக முடியாது” என்றான். “தன் காதலியை திரும்ப அடைய அவன் தன்னை அழித்தாக வேண்டும்”.

நிவலன் கூறியது ஒவ்வொரு சொல்லாக மித்ரனுக்குள் சென்றது.ஒற்றை பொருளென அது திரண்டு வந்ததும் அவன் பயம் கொண்டு அலறியபடி புத்தகத்தையும் திருமண உடையையும் அழுத்த பிடித்தவாறு கப்பலை விட்டு இறங்கி கடற்கரையின் திக்கில் ஓடினான்.

மித்ரன் ஆக்னேயாவை நெருங்கியபோது அவன் தன் வயிற்றை கத்தியால் குத்தி ரத்தச் சேறாக கவிழ்ந்து கிடந்தான். மித்ரன் கண்ணீர் வழிய அவனை தன் கைகளில் ஏந்தியபோது அவன் முகம் புன்னகையில் விரிந்திருந்தது. மிகவும் சிரமப்பட்டு தன் வலக்கையை உயர்த்தி விக்கிய குரலில் “மைத்ரேயி” என்றான் ஆக்னேயா. அவன் கை நீட்டிய திசையில் பார்த்த மித்ரன் அங்கே ஒரு இளம்பெண் அமர்ந்து கடலை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அதுவரையிலும் ஆக்னேயாவுடைய காதலியின் பெயரைக் கூட தெரிந்திருக்காததை நினைத்து வருந்தியவனாக மித்ரன் ஒரு கையால் தலையில் அடித்துக் கொண்டான். பின் ஆக்னேயாவை மெல்ல தரையில் கிடத்திவிட்டு மைத்ரேயியை நோக்கி விரைந்தான்.

ஓடி வந்த வேகத்தில் கடற்கரை மணலில் கால் புதைந்து சறுக்க மித்ரன் மைத்ரேயியின் முன்னே இடறி விழுந்தான். சுதாரித்து எழுந்து, ஆக்னேயாவின் பக்கமாக கைக் காட்டி “அங்கே…அங்கே.. ஆக்னேயா” என்று கேவலில் அடைத்தக் குரலில் திக்கியபடி சொன்னான். மைத்ரேயி அவன் சொன்னதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. உண்மையில் அவள் மித்ரனை பார்த்ததுப் போலவே தெரியவில்லை. இருளில் அலையடித்த கடலையே அவள் ஆச்சர்யம் பெருகும் விழிகளால் பார்த்துக் கொண்டிருந்தாள். மித்ரன் உரக்க “ஆக்னேயா அங்கே இறந்துக் கொண்டிருக்கிறான்” என்று கத்தினான். ஆனால் மைத்ரேயிடம் எந்த மாற்றமும் இல்லை. அவன் குரல் அவளைப் போல் சேரவே இல்லை. மித்ரன் ஆத்திரம் மிக்கவனாக ரத்தம் படிந்த தன் கைகளால் அவளை பிடித்து உலுக்கினான். அவன் மனம் உணர்ச்சி வேகத்தில் குமுறியது.எனினும் மைத்ரேயியிடம் கொஞ்சம்கூட சலனம் இல்லை. மணலில் விழுந்திருந்த ஓவிய நூலையும் மைத்ரேயியின் திருமண ஆடையையும் பொறுக்கியெடுத்து அவற்றை அவளது பாதங்களுக்கு முன்பாகவே வீசியடித்துவிட்டு அவன் திரும்பவும் ஆக்னேயாவிடம் வந்தான்.ஆனால் அவன் திரும்பி வருவதற்குள்ளேயே ஆக்னேயாவின் உயிர் பிரிந்திருந்தது.

மித்ரன் தலையை இறுக பிடித்தபடி முழந்தாளிட்டு பற்களை நெறித்துகுலுங்கி அழுதான். அவனுக்கு சில பத்தடிகள் தொலைவில் கருப்பு அங்கி அணிந்த பெரியவர் வான் நோக்கி விழி மூடி பிரார்த்தனை போல் எதையோ முணுமுணுத்துவிட்டு பெருமூச்சு விட்டபடி திரும்பி பாராது நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அதை பார்த்த மித்ரனுக்கு காரணமே இல்லாமல் அவர் மீது பொறுக்கவியலாத கோபம் வந்தது. சினம் மிக கடற்கரை மணலை ஓங்காரத்துடன் குத்தினான். நிவலன் கடலுக்குள் இறங்கி மறைய நீர் பரப்பில் மஞ்சள் ஒளி கசிந்துக் கொண்டிருந்தது. மித்ரனுக்கு இன்னமும் உடலில் நடுக்கம் குறையவே இல்லை. மண் மேட்டில் ஆக்னேயாவின் உடல் சரிந்து உருள்வதை பார்த்தபடி அவன் கண்ணீர் உகுத்துக் கொண்டே இருந்தான். சீறியெழுந்த கடல் அலைகள் ஆக்னேயாவின் உடலை தழுவி இழுத்தன. அப்போது யாரோ மித்ரனின் தலையை ஆதுரமாக வருடிக் கொடுக்க அவன் கழுத்தை உயர்த்தி அண்ணாந்து பார்த்தான். அவனுக்கு அண்மையாக வெள்ளை உடையில் பிரகதி நின்றிருந்தான். அவன் எழுந்து நின்று அவள் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான் – பிரிவின் அச்சத்தில் தாயின் கையை பிடித்துக் கொள்ளும் குழந்தையைப் போல். மூர்க்கத்தில் பொங்கியெழுந்த கடல் அலைகள் ஆக்னேயாவின் உடலை தம்மோடு இழுத்து செல்வதைக் கண்டு உணர்ச்சி தளும்பியவனாக மித்ரன் பிரகதியின் தோளில் சாய்ந்து தேம்பினான்.அவள் சமாதானம் சொல்வதுப் போல் அவனது கன்னத்தில் கைவைத்து தடவினாள். பின் அவன் தலையை நிமிர்த்தி தனக்கு எதிரே பார்க்கும்படி சொன்னாள். தூரத்து இன்மையிலிருந்து ஒரு வெளிச்சப் பாதை இரவின் திரையை கிழித்து கரையோரமாக நீண்டுக் கொண்டிருந்தது. அதன் வழியே மைத்ரேயியை நோக்கி நடந்து வந்துக் கொண்டிருந்தான் ஆக்னேயா. மித்ரன் அதிர்ச்சியுடன் குனிந்து கடற்கரையின் ஈர மணலை பார்த்தான். ஆக்னேயாவின் உடல் இருந்த தடம் கூட இல்லை.மைத்ரேயியும் ஆக்னேயாவும் கை கோர்த்தபடி மணலில் அமர்ந்து என்றென்றைக்குமாக கடலைப் பார்க்கத் துவங்கினார்கள்.

O

 

Leave a Comment