கூண்டு

-சுநில் கிருஷ்ணன்

ஓவியம்  : சுநில் கிருஷ்ணன்


 கொல்லன் வார்த்தெடுத்துக் கொண்டிருக்கும் மாபெரும் மந்திரக்கூண்டைப் பற்றிதான்  ஊரெல்லாம் பேச்சு. இன்று நாளை என கழிந்தே விட்டன பதினான்கு ஆண்டுகள். கூண்டைக் காண கூடியிருந்த கோடானகோடி மக்களுடன் அவனும் அந்தச் சதுக்கத்தில் நின்றிருந்தான். நள்ளிரவுக்கு இன்னும் நான்கு மணிநேரம்தான் இருக்கிறது.

முன்பொரு காலத்தில், நாட்டில் அநீதியும், அராஜகமும், அக்கிரமமும் தோளோடு தோள் சேர்த்த தோழர்களாய் இருந்தபோது நாட்டைப் பற்றிய கவலை அரசனை நாளுக்கு நாள் விண்டு தேய்பிறை நிலவெனப் பொலிவிழக்கச் செய்தது. சிறைக் கம்பிகளை நெகிழ்த்திக்கொண்டு சாமர்த்தியமாக தப்பி ஓடிவிடுகிறார்கள் சிலர். வாயிற் காவலனை வழிக்குக் கொண்டுவந்து வெளியே செல்பவர்கள் ஏராளம். பிரபுக்கள் காவலர் தலைவனோடும் நியாயமார்களோடும் உடன்படிக்கை செய்து வளமாக வாழ்கிறார்கள் என்பது ஊரறிந்த இரகசியமாகி விட்டது.

அப்போதுதான் அந்த கொல்லனைப் பற்றி ஒற்றர் மூலம் அறிந்து அவனை தருவித்தான் அரசன். கொல்லன் தேர்ந்த ரசவாதி. காடு திருத்தி நாட்டை உருவாக்கிய ஆதிகாலத்தில் அவனுடைய முன்னோர்கள்தான் அங்குச் சுற்றித் திரிந்த ஆட்கொல்லி பல்லிகளை பட்டியில் பத்தி கப்பலேற்றி அனுப்பி வைத்தவர்களாம். அப்பேற்பட்ட கொல்லனிடம்தான், ‘எவரும் தப்ப முடியாத ஒரு மாபெரும் கூண்டை முடைய முடியுமா?’ என்று வினவினான் அரசன்.

கொல்லனின் மயிரற்ற இன்முகம் ஒளிர்ந்தது. அவனுடைய குழந்தைக் கண்கள் சிரித்தன. அவன் பேசா நெறிகொண்டவன். மறுப்பேதுமின்றி அரண்மனைக்கு அடியில் பாதாள இருளின் ரகசிய கிடங்கில் தனியனாக தன்னை அடைத்துகொண்டான். அதன்பின் அவனை எவரும் கண்டதில்லை. இரவுகளில் அரண்மனையை எவரோ பெயர்த்தெடுப்பது போல், ஏதேதோ பிராணிகளின் கர்ஜனைகள், ஊளைகள், ஓலங்கள் என பலநூறு அரவங்கள் எழுவதாக காவலர்கள் பேசிக்கொள்வார்கள்.

கொல்லனின் மாயக்கூண்டு அவன் மந்திரச் சொல்லுக்குகந்து விரியுமாம், சுருங்குமாம், சுழலுமாம், நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தில் முளைக்குமாம். உலோகங்களை நெகிழச் செய்யும் சூத்திரம் அவனறிவான். முன்னூற்றி முப்பத்தியாறு யானைகளின் முதுகெலும்புகளைக் கோரிப் பெற்றான் என்றார்கள். பெட்டி பெட்டிகளாக திமிங்கல நெய் உள்ளே கொண்டு சென்றார்கள். இருநூற்றாண்டுகள் குறையாமல் வாழ்ந்த கணக்கற்ற கடலாமை ஓடுகளை எடுத்து சென்றார்கள். இறுதியாக அரச வம்சத்திலிருந்து குருதி பலி அளிக்க வேண்டும் என்றதாகவும். காணாமல் போன நான்காம் அரசியின் ஐந்தாம் புதல்வன்தான் பலியானவன் என்றும் சொன்னார்கள்.

கூண்டு இரக்கமற்ற இயந்திரம், நம் எல்லோரையும் அழித்துவிடும்  என அஞ்சினார்கள். எத்தனை குருதி குடித்தாலும் அதன் விடாய் அடங்கவே அடங்காது என்றார்கள். அது முப்பது பனையுயரமும் ஐம்பது கஜ விட்டமும் இருக்கும் என்றார்கள். ஆனால் அது அநீதிக்கு எதிரான மாபெரும் ஆயுதம் என்றார்கள். அதுவே குற்றவாளிகளை கண்டறியும் நீதி வழங்கி தண்டிக்கும் என்றார்கள். நீதியை நிலைநாட்ட வந்த தேவனின் துலாக்கோள் என்றார்கள்.

இன்று, கூண்டைக் காண கூடியிருந்த கோடானகோடி மக்களில் ஒருவனாயிருந்த அவனும் அப்படித்தான் எண்ணினான்.கூண்டு உருவாகும் செய்தி பரவியதிலிருந்தே குற்றங்கள் பாதியாகக் குறைவதை அவன் கண் முன் கண்டான். கொடியில் காய்ந்த அவனது உத்தரீயம் ஒருவாரம் கழிந்த பின்னரும் அங்கேயே இருந்தது. கோட்டத்தின் வாயிலில் விட்டுசென்ற காலணிகள் அங்கேயே இருந்தன. கூண்டு சரியாக உருவாக வேண்டும் என ஒரு நன்மகனாக கடவுளிடம் நிதமும் பிரார்த்தித்தான். தன் நாட்டில் எழப் போகும் கூண்டை எண்ணி பெருமிதம் கொண்டான். அவனை வஞ்சித்துத் தப்பியவர்கள் அனைவரும் கூண்டில் சிக்கித் தவிப்பதை கற்பனை செய்து ஒவ்வொரு நாளும் அகமகிழ்ந்தான். அவன் வீட்டுச் சேவலை திருடிச் சென்று, கண் முன் உலாத்தும் ஊரறிந்த கோட்டியை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ‘இரு, இரு, கூண்டு வருகிறது. அது உன்னைப் பார்த்துக் கொள்ளும்,’ என கறுவிக் கொண்டான். பக்கத்து நிலத்துக்காரன் தானியங்களை பதுக்கி ஏய்த்தபோது அவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். ‘இரு, இரு, கூண்டு வருகிறது. அது உன்னைப் பார்த்துக் கொள்ளும்’ என தனக்குள் முனகிக்கொண்டான்.

அச்சமும் குறுகுறுப்பும் கொண்ட முகங்கள் அங்கே மைதானத்தில் நள்ளிரவின் புது விடியலைக் காண குழுமியிருந்தன. மங்கள முழக்கங்கள் எழுந்தன. அரசனும் அவனது படை பரிவாரங்களும் கம்பீரமாக மேடையில் தோன்றினர். ஆரவாரங்கள் அடங்கியதும் அங்கே அமைதி படர்ந்தது. அப்போது அமைதியைக் கிழித்துக்கொண்டு பாதாளம் பிளக்கும் பேரொலி எழுந்தது. குகைச் சிம்மத்தின் கர்ஜனையை போல்.

ஒரு கையில் பந்தம் ஏந்தியபடி மறு கையை வீசிக் கொண்டு கொல்லன் தனித்து வந்தான். அவன் பின்னால் கூண்டு இழுத்து வரப்படுகிறதா என பார்த்தார்கள். ஒன்றுமில்லை. அவன் அதே மயிரற்ற இன்முகத்துடன் குழந்தைக் கண்கள் சிரிக்க அரசன் முன் வந்து நின்றான். தன் இடைக் கச்சை மடிப்பிலிருந்து எதையோ எடுத்தான். விரல் அகலம் கொண்ட சின்னஞ்சிறிய கூண்டு. அதை மண்ணில் வைத்தான். அரசன் முகம் சிவந்து எரிந்தது. அவன் மாறா இன்முகத்துடன் அங்கேயே நின்றான். “இது என்ன எறும்பையும் ஈயையும் சிறை பிடிக்கவா?” எனக் கத்தினான். எல்லோரும் சிரித்தார்கள். அரசன் துவண்டு விழுந்தான். அவனுக்கு அழுகையாக வந்தது.

சின்னஞ்சிறிய கூண்டு பிளந்து திறந்தது. அதன் கம்பிகள் மண்ணில் வீழ்ந்தன. மக்களின் நகைப்பொலி இடி என இறங்கியது. எவரோ ஒருவர் “கொல்லனை கொல்லுங்கள்” எனக் கத்தினார். அத்தனை கண்களும் அவனைத் தேடின. கொல்லனைக் காணவில்லை. எல்லோரும் நகைத்தபடி கலைந்து செல்லத் துவங்கினார்கள். அப்போது ஒரு தடித்த உலோகக் கம்பி மண்ணில் அரும்பியது. அது மெல்ல மெல்ல வளர்ந்தது, அருகருகே தோன்றிய கம்பிகளுடன் பிணைந்தது. மக்கள் அஞ்சிச் சிதறி விலகி ஓடினார்கள். நான்கு கஜ விட்டத்தில் இரண்டு பனையுயரத்தில் பிரம்மாண்ட கூண்டு ஒன்று எழுந்தது. விரல்கூட நுழைய முடியாத அளவு நெருக்கி முடையப்பட்ட கதவற்ற பிரம்மாண்ட கூண்டு.

கரிய மேலாடையும் நெற்றியில் கோடரிக் குறியும் தரித்து கூட்டத்தில் கலந்திருந்த  சுமார் பதினாறு பேர் கூண்டுக்குள் இருந்தனர். கூண்டு பிறரை வெளித் தள்ளியது. ஆ! வில்லாள நாட்டு விதேச  தீவிரவாதிகள்! மக்கள் ஆச்சரியத்தில் கூக்குரலிட்டனர். பிடிபட்ட அவர்களின் மீது மண்ணையும் கல்லையும் வாரி இறைத்துத் தூற்றினர். ஒரு கல் கூட உள்ளே நுழையவில்லை. கோடரிகளைக் கொண்டு அறுக்க முயன்றபோது அவை சுக்குநூறாக உடைந்தன. தப்ப முடியாத கூண்டு! கூட்டம் ஆர்ப்பரித்தது. அரசன் நிமிர்ந்து அமர்ந்தான்., கொல்லனை தேடினான். இம்முறை அவனைப் பாராட்டி பரிசில் அளிக்க.

மீண்டும் மண்ணைக் கிளர்ந்து கொண்டு உலோகம் துளிர்த்தது. அழகிய மலர் தாங்கும் கொடி போல் வளைந்து வளைந்து படர்ந்தது. எட்டு கஜ விட்டத்தில் மூன்று பனையுயரத்தில் பிரம்மாண்டமாக  கூண்டு உயர்ந்தது. உச்ச விசையில் முந்தைய கூண்டு அதனுடன் வந்து மோதிப் பிணைந்தது. தோள்களில் சுருள் நாகத்தை பச்சை குத்திய அறுபது புதியவர்கள் வேல் கம்புடன் உள்ளே இருந்தார்கள். அதோ நாகேந்திர வர்மன்! இறந்துவிட்டான் எனக் கருதப்பட்ட அரசனின் சகோதரன். அவனும் அவனுடைய கிளர்ச்சிப் படையினரும் மாட்டினார்கள். தேசத் துரோகிகள்! மக்கள் அவர்கள் மீது காரியுமிழ்ந்தனர். அவனும் உமிழ்ந்தான். அரசன் மிடுக்காக அணுகி வந்தான். நாகேந்திரன் தலை கவிந்து நின்றான். மக்கள் கூண்டை சுற்றி வந்து ஆனந்த கூத்தாடினார்கள்.

கொண்டாட்டம் அடங்கும் முன், மீண்டும் உலோகப் பின்னல்  மண்ணிலிருந்து தழைந்தது. இம்முறை பத்து கஜ விட்டமிருக்கலாம். உயரம் எல்லாம் கணிக்க இயலவில்லை. மந்திரிகள், மஞ்சளாடை அணிந்த முப்பத்தியாறு அரசவை பிரபுக்கள், நகரத்து பெரு வணிகர்கள் என நூற்றைம்பது பேர் உள்ளே இருந்தார்கள். முந்தைய கூண்டு அதனுடன் முயங்கிக் கொண்டது. அரசன் வெகுண்டெழுந்தான். உதிரம் உறிஞ்சும் அட்டைகள்! பாவிகள்! நம்பிக்கை துரோகிகள்! அவர்களைச் சபித்தான். கூட்டம் அவர்களை நோக்கி கொக்கரித்தது. முதியவர் ஒருவர் கச்சையில் முடிந்த காசை இரண்டாக துண்டாக்கி தூற்றினார். இத்தனை நாட்கள் இந்த கயவர்களால் எமாற்றபட்டுள்ளோம்! ஆத்திரத்தில் கூண்டின் மீது தீ பந்தத்தை வீசி எறிந்தார்கள். ஒன்றுமே நிகழவில்லை!

மண் பிளந்து மற்றுமோர் கூண்டு உருக்கொண்டது. நான்கு மாட வீதிகளையும் சேர்த்த மிகப்பெரிய கூண்டு. குடியானவர், குயவர், வைத்தியர், வேதியர், நாவிதர் என பலரையும் உள்ளடக்கிய கூண்டு. ஒரே கூச்சல் குழப்பம். அவனும் குழம்பினான். ஒருவேளை இருக்குமோ? என்ன செய்ய, அறம் தன் வழியைத் தேரும் என தன்னையே சமாதானம் செய்துகொண்டு கல்லாக நின்றான். உள்ளேயிருந்தவர்கள் அரசனிடம் முறையிட்டார்கள். பெண்களும் குழந்தைகளும் அவர்களைத் தொட முயன்று தோற்று வெளியிலிருந்து கதறினார்கள். அரசன் இறுகிய முகத்துடன் அமைதியாக நின்றான்.

பேரிரைச்சல்! கூச்சல் குழப்பம் அடங்குவதற்குள், அரண்மனை, குடியிருப்புகள் என ஊரின் சரிபாதியை உள்ளடக்கிய அதி பிரம்மாண்ட கூண்டு இம்முறை தோன்றியது. வெளியே இருந்த பெண்களணைவரும் ஒரு சொடுக்கில் கூண்டிற்குள் இருந்தனர். கணவன்மார்கள் மனைவிகளைக் கட்டியணைத்தனர். அன்னையர் மகன்களை உச்சி முகர்ந்தனர். ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மகிழ்ச்சிக் கூத்தாடினார்கள். அரசனும் நான்கு அரசிகளும் அவர்களின் மெய்க்காப்பாளர்களையும் அவனையும் தவிர்த்து எவருமே வெளியில் இல்லை. அரசன் குழம்பித் தவித்தான். இப்போதும் அவன் கொல்லனை தேடினான்.

இரண்டு கஜ விட்டத்தில் ஒரு சிறு கூண்டு முளைத்தது. நான்கு அரசியர்களையும், மூன்று மெய்க்காப்பாளர்களையும் சூழ்ந்தது. பெரும் கூண்டுடன் பிணைந்து ஊரின் முக்கால் பங்கிற்கு விரிந்தது. கிழக்கு மூலையின் இடுகாடும் அதையொட்டிய ஓடையும் மட்டுமே கூண்டுக்கு வெளியே எஞ்சியிருந்தன. வெளியே தனித்து விடப்பட்ட அரசன் கம்பியை உலுக்கி அழத் தொடங்கினான்.

மக்கள் அவரவர் வீட்டுக்குள் புகுந்து கொண்டனர். கடைக்காரர்கள் கூண்டில் சட்டமடித்து சாமான்களை அடுக்கத் துவங்கினர். வண்ணான்துறையில் கூண்டுக் கம்பிகளுக்கு இடையே கயிறு கட்டி துணி உலர்த்தத் துவங்கினர். பிள்ளைகள் கூண்டை தொற்றி ஏறுவதும் குதிப்பதுமாக விளையாடி தீர்த்தனர். காதலர்கள் கூண்டில் சாய்ந்தப்படி முத்தமிட்டு கொண்டனர். அரண்மனை யானைகளும் குதிரைகளும் கூண்டில் பினைக்கபட்டன. அரசிகள் கூண்டு விளிம்பில் மெய்க்காப்பாளர்கள் சூழ கவலையுடன் அரசனை பார்த்து அமர்ந்திருந்தனர்.

இரவடங்கி கதிரவன் மேலெழுந்தான். அரசனை சுற்றியும் ஒரு கூண்டு முளைத்தது. அது பெரும் கூண்டோடு பிணைந்தது. அரசன் சிரித்தபடி நகர் புகுந்தான். அங்கே அவனுக்கு பெரும் வரவேற்பு நிகழ்ந்தது. கூண்டு நாட்டளவுக்கே பிரம்மாண்டமாக விரிந்திருந்தது. அவனுக்கு ஒரேயொரு மொட்டைப் பாறைதான் விஞ்சி இருந்தது. அதற்கப்பால் நீலக்கடல். பொழுது சாயும்வரை அங்கேயே அமர்ந்திருந்தான்.

அவன்  என்ன செய்தால் உள்ளே போக முடியும் என்பதறியான். ஒருவேளை கொல்லனுக்கு தெரிந்திருக்கலாம். அவனும் கொல்லனை தேடினான். செய்வதற்கு ஏதுமின்றி கூண்டை வெறித்தபடி காத்திருந்தான். அப்போது தொலைவானில் நீலகடலுக்கு அப்பால் உலோகக் கம்பி ஒன்று வானை கிழித்துக்கொண்டு எழுந்தது.