ஒரு கூடை தாழம்பூ

-எம்.கோபாலகிருஷ்ணன்

புகைப்படம் : அனாமிகா


பணியிட மாற்றம் காரணமாக கொங்கு நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து கும்பகோணம் வர நேர்ந்தது. நிலம் புதிது, மொழி புதிது, மனிதர்கள் புதியவர் என்றாலும் இதுவும் தமிழ்நாட்டில்தானே உள்ளது என்ற துணிச்சலில் குடும்பத்தோடு வந்திறங்கியிருந்தேன். மலைப்பாயிருந்தது. இந்த ஊரில் எப்படி காலம் தள்ளப்போகிறோம்? வீடு தேடி அலைந்து எதுவுமே சரிவரவில்லை. இன்னும் ஒருநாளில் வீடு பார்த்து பால் காய்ச்சிவிடவேண்டும் என்ற கவலை மனைவிக்கு. இல்லையேல் ஆனிமாதம் தொடங்கிவிடும். பிறகு ஆவணியில்தான் யோசிக்கமுடியும். அதற்குள் பள்ளிகள் துவங்கிவிடும். குடும்பம் கோவையிலும் நான் கும்பகோணத்திலுமாக கிடக்க நேரிடும். நல்லவேளையாய் அன்று மாலையில் வீடு அமைந்தது. சின்னஞ்சிறு வீடு. பிடிக்கவில்லை என்றாலும் மனைவிக்கு வேறு வழியிருக்கவில்லை. பள்ளிக்குச் சென்ற மகனுக்கும் பிடிக்கவில்லை. ‘டீச்சர்ஸ்கூட பேட் வேர்ட் பேசறாங்கப்பா.’ சுட்டெரிக்கும் வெயில். பசுமாடுகள் சுதந்திரமாகத் திரியும் கடைத்தெருக்கள். தடுக்கி விழுந்தால் கோயில்கள். 14 ஆண்டுகளுக்கு முன்பு நண்பருடன் சுற்றுலா வந்து பாதையற்ற வயல்வெளிகளுக்கு நடுவே கங்கைகொண்ட சோழபுரத்தையும், தாராசுரத்தையும் கண்டு சென்ற பிறகு இப்போதுதான் வந்திருக்கிறேன். ஜானகிராமனின் எழுத்துக்களின் வழியாக ஊர்கள் சிலவற்றின் பெயர்களைத் தெரியும். மற்றபடி எனக்குமே எதற்காக இந்த ஊருக்கு வந்தோம் என்ற கேள்வி தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டுதான் இருந்தது.

சிலநாட்களுக்குப் பிறகு அலுவலக வேலையாக திருவிடைமருதூர் செல்ல நேர்ந்தது. கும்பகோணத்திலிருந்து திருவிடைமருதூருக்கு செல்கையில் அந்தப் பாதை எனக்கு ஏற்கெனவே நன்கு பரிச்சயப்பட்ட ஒன்றென உணர்ந்தேன். பத்தாம்வகுப்பு விடுமுறையில் வாசித்த ‘புல்லின் இதழ்கள்’ நாவலில் பயணப்பட்ட பாதை.

சங்கீத வித்வான் சுப்பராம பாகவதர் கும்பகோணத்தில் வசிக்கிறார். இரண்டு குடும்பங்கள். மற்றொன்று திருவிடைமருதூரில். கழுத்து மணியொலிக்க காளை மாட்டு வண்டியில் கும்பகோணத்திலிருந்து திருவிடைமருதூர் செல்வது வழக்கம். திருவிடைமருதூரில் உள்ள இரண்டாம் தாரத்து மகள் காயத்ரி, இளம்விதவை. சம்பிரதாயமான கலாச்சாரம் பேணும் நங்கை, கும்பகோணத்தில் முதல்தாரத்து மகள் சுசீலா. குறும்பும் விளையாட்டுமானவள்.  நவீனமானவள். வித்வானுக்கு வீட்டிலேயே இருந்து வித்தை பயிலும் சிஷ்யன் ஹரி. வித்வானின் இரண்டு பெண்களுக்கும் அவன் மீது காதல். தவிர மராட்டிய குடும்பத்தைச் சேர்ந்த சந்திரா என்றொரு சங்கீத ரசிகையும் உண்டு. அவளது வாசம் சுவாமிமலை. இரண்டு குடும்பங்களுக்கும் இடையிலான உறவும், ஹரியின் மீதான நான்கு பெண்களின் காதலுமே நாவலின் மையம். நாவலை எழுதியவர் கே.பி. நீலமணி.

புல்லின் இதழ்கள் நாவல், அதன் கதைப் பின்னணி, முக்கிய கதாபாத்திரங்கள் என மனம் முழுக்க நாவல் விரிந்தது. திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலும் அதன் பிரமாண்டமான பிரகாரங்களும் தென்னையும் மூங்கிலும் தேக்கும் செறிந்து நிற்க, பசுமையோடிய வயல்வெளிகளும் என்னை நாவலுக்குள் இழுத்து நிறுத்தின.  நாவலை உடனடியாக படிக்கவேண்டும் என்ற பரபரப்பு என்னைத் தொற்றிக்கொண்டது. திருவிடைமருதூரில் எனக்கு இருப்பு கொள்ளவில்லை. முன்பின் தெரியாத கும்பகோணத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்த ஒரு பழைய புத்தகத்தை எங்கே தேடிக் கண்டுபிடிப்பது? கோவையில் இதுபோன்ற அவசரம் என்றால் தியாகுவிடம் கேட்டால் போதும். அடுத்த நாள் புத்தகம் கைக்கு வந்துவிடும். அவரது நூலகத்தில் முன்னொரு சமயத்தில் புல்லின் இதழ்கள் நாவலைப் பார்த்த நினைவும் இருந்தது. தொலைபேசியில் அவரை அழைத்து நாவலை தபாலில் அனுப்பச் சொல்லலாம் என்று தீர்மானித்தேன்.  ஆழ்ந்த யோசனையில் இருந்த என்னை உணர்ந்த  நண்பர் ‘என்ன பிரச்சினை?’ என்று கேட்டார். எனக்கு பழைய புத்தகம் ஒன்று வேண்டும், இந்த ஊரில் கிடைக்க வாய்ப்பில்லை என்று உற்சாகமின்றி சொன்னேன். அவருக்கும் இலக்கியத்துக்கும் தொடர்பில்லை என்று தெரியும். ஆனாலும் யாரிடமாவது சொல்லித்தானே ஆகவேண்டும். அவர் உடனடியாக தொலைபேசியில் இன்னொரு நண்பரிடம் விசாரித்துவிட்டு ஒரு நூலக முகவரியை என்னிடம் தந்தார். ‘சிவகுருநாதன் தமிழ் நூலகம், நாணயக்காரத் தெரு, கும்பகோணம்.’ முகவரியைக் கண்டதும் உற்சாகமானேன். நான் வசிக்கும் தெருவுக்கு அடுத்திருப்பதுதான் நாணயக்காரத் தெரு.

மறுநாள் காலையில் நூலகத்தைத் தேடி மெல்ல நடந்தேன். கும்பகோணம் முழுவதையும் நடந்தே சுற்றிவிடலாம். வாகனம் அவசியமில்லை. சில நிமிடங்கள் நடந்தவுடனேயே நூலகத்தைக் கண்டுபிடித்தேன். என் வீட்டிலிருந்து கூப்பிடு தொலைவில்தான் இருந்தது.

‘சிவகுருநாதன் தமிழ் நூலகம்’ தமிழார்வம் மிக்க தனி நபரின் முயற்சி. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள். அதிலும் குறிப்பாக அறுபது, எழுபது ஆண்டுகளுக்கும் முன்பு பதிப்பிக்கப்பட்ட நூல்கள் பலவும் அங்குண்டு. நூல் பட்டியல் வகைப்படுத்தப்பட்டு, வரிசைப்படுத்தப்பட்டு அச்சிட்டு வைக்கப்பட்டுள்ளது. பட்டியலில் நூல் குறித்த முழு விபரங்களும் உண்டு. நூலின் பெயர், எழுதியவர், பதிப்பகம், பதிப்பிக்கப்பட்ட ஆண்டு என்று அனைத்து விபரங்களும். நமக்குத் தேவையான நூலின் எண்ணை நூலகரிடம் குறிப்பிட்டுக் கேட்டால் அவர் எடுத்துத் தருவார். வீட்டிற்கு எடுத்து வர அனுமதியில்லை. அங்கேயேதான் அமர்ந்து படிக்கவேண்டும். நூலகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அந்த நூலகத்தைப் பேணி வரும் பெரியவரின் தோற்றமே அவர் காலத்தைச் சொல்லிவிடும். பஞ்சகச்சமும் குடுமியும் கட்டைப்பேனாவுமாக எப்போதும் நூற்பட்டியலை புதுப்பித்தபடியே இருப்பார்.

‘புல்லின் இதழ்கள்’ நாவலை சுலபமாகக் கண்டுபிடிக்க முடிந்தது. அதைவிடவும் முக்கியமானது இதுவரையிலும் நான் அறிந்திராத, கேள்விப்பட்டிராத பல பழம்நூல்கள் அங்கிருந்தன.

அந்த நூலகத்தில் பல அரிய நூல்களை நான் வாசிக்க நேர்ந்தது. அவற்றில் ஒன்று கோவைக்கிழார் எழுதிய ‘எங்கள் நாட்டுப்புறம்’ என்ற புத்தகம்.

இந்த நூல் வெள்ளைக்கிணறு சி.வெள்ளியங்கிரிக் கவுண்டர் (25/11/1880 முதல் 02/11/1948) நினைவு மலராக 1951ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. கோவை நிலையப் பதிப்பகம் லிமிடெட் இதை வெளியிட்டுள்ளது. வேளாளர் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்ட நூலின் விலை ரூ.1-8-0.

கொங்குப் பிரதேசத்தின் மண்ணைப் பற்றியும் ஊர் அமைப்புப் பற்றியும் வாழ்க்கைப் பற்றியுமான நுட்பமான தகவல்களை பதினாறு அத்தியாயங்களாகப் பிரித்து விவரித்துள்ளார் கோவைக்கிழார். எங்கள் ஊர்க்கட்டு, எங்கள் நிலக்கட்டு, எங்கள் குடும்பங்கள், குடிகள், நாட்டுப்பாடல்கள், பண்டிகைகள், சமயநிலை என்று அத்தியாயங்கள் பெயரிடப்பட்டுள்ளன. இந்த நூலை எழுதக் காரணம் குறித்து விரிவான முன்னுரை ஒன்றைத் தந்துள்ளார் கோவைக்கிழார்.

“தமக்காக ஆராய்ச்சியோ முதன்மையோ இல்லாவிட்டால் கிடக்கட்டும். பிறர் போனவழியே போவது எளிது அல்லவா? எனக்கு பின்பற்றுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு கிடைத்தது. படித்துப் பட்டம் பெற்ற ஒருவர் படிப்புத் துறையில் அமர்ந்தார். அவர் எங்கள் வட்டத்திற்குச் சேர்ந்தவர். தாய்மொழி தேனினும் இனிய தெலுங்கு. ஆனால் தேர்ந்தெடுத்துக் கற்ற மொழி தமிழ். பாடசாலைகளை சோதிக்கு அறவழியில் அமர்ந்திருந்தார். திங்கள் ஒன்றிற்கு இத்தனைப் பள்ளிகளை மேய்க்க வேண்டும் என்று அவருடைய கடமை. ஆகவே நாட்டுப்புறங்களில் சுற்றி நாட்டு மக்களுடன் அளவளாவி இருத்தல் அவருக்கு ஏற்பட்ட பொழுதுபோக்கு. நிலா சமயத்தில் பெரியவர்களும் தாய்மார்களும் தெருத் திண்ணைகளில் கதைகேட்பது வழக்கம். சிறுவர் சிறுமியர் உல்லாசப் பாடல்கள், கும்மி, கோலாட்டம் என்று பலதையும் அவர் கவனித்துக்கொண்டிருப்பார். அவர் கேட்ட பாடல் அனைத்தையும் திரட்டி ‘எங்கள் ஊர்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். அதன் பிறகும் பல்வேறு நாட்டுப்பாடல்களையும் சேகரித்தார். கள்ளழகர் அம்மாணையில் உள்ள அண்ணமார் கதை, குன்றுடையான் கதை ஆகியவற்றை இனிய நடையில் எழுதத்தொடங்கினார். நானும் அவரோடு சேர்ந்து உழைத்தேன். கொங்கு நாட்டு வேளாளர்களுக்கும் வேட்டுவர்களுக்கும் இடையே நிகழ்ந்த பகையும் போரும் பாடல்களாகப் பாடப்படுவன. அரசண்ணாமலை, திங்களுர் அப்பிச்சிமார் மடம், வெள்ளோடு முதலிய இடங்களுக்குச் சென்றோம். பாதி நூல் வெளியான நிலையில் அப்பெரியார் மறைந்தார்” என்று முன்னுரையில் குறிப்பிடும் கோவைக்கிழார் அப்பணியைத் தொடர்ந்தார். அதன் பலன்தான் இந்த நூல்.

“எழுத்தாளர்கள் மதிப்புரை இங்கே யாதொரு உதவியும் புரியமுடியாது என்க. பின் எவ்வாறு எழுத்தாளர்கள் இந்நூலை எழுதக் காரணமாய் நிற்பார்கள் என்று கேளுங்கள். நம் நாட்டு எழுத்தாளர்கள் அல்லர். அவர்கள் இன்னும் எழுத்து வேலையில் புகழ் பெறவில்லை. பயனுள்ள எழுத்துக்களை இன்னமும் எழுதத் தொடங்கவில்லை. அதிலும் அத்தகைய நூல் கருத்துக்களை இன்னமும் மனதில் இருத்திக் கொள்ளவும் தகுந்த பயிற்சி பெறவில்லை. ஆகவே இந்நாட்டு எழுத்தாளர்கள் இந்நூலுக்கு யாதொரு ஊக்கமும் தரவில்லை என்று அவர்களை விட்டுவிடுங்கள்” என்று இந்நூலுக்கு தமிழ் எழுத்துலகில் வரவேற்பில்லை என்று குறிப்பிடும் அவர் மேலும் “ஆங்கில எழுத்தாளர்களே ஆர்வ விதையை ஊன்றி இந்நூலை கனிய வைத்தார்கள். நான் நூல் நிலையத்தில் வாசிக்க நேர்ந்த இரண்டு ஆங்கில நூல்களே இந்நூல் முயற்சியை ஊக்கவித்தன. ஒன்று “ஆங்கில நாட்டு இடப் பெயர்கள்”, மற்றொன்று ”நாட்டுப்புறத்து ஆங்கில நாடு” எனத் தனது நூலுக்கான தூண்டுதலைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் கொங்கு கிராமங்கள் குறித்த நுட்பமான விபரங்களை வெகு சுவாரஸ்யமாக விவரிக்கின்றன. ‘இட்டேரி’ என்ற வழக்கு கொங்குப்பகுதியில் புழக்கத்தில் உண்டு. பொதுவாக கிராமத்துக்கு வெளியில் உள்ள பாதைகளை குறிக்கும் சொல் அது. அச்சொல்லை பழம்பாடலில் ஔவையார் எடுத்தாண்டிருப்பதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. “இடம்படி இட்டேரி விடல்.”

கொங்குப் பகுதியின் நொய்யல் ஆறு குறித்த இந்த வாக்கியத்தைப் படிக்கும்போது மிகுந்த வியப்பளிக்கிறது. “என்றும் வற்றாத உயிர் ஓவிய ஆறாகிய எங்கள் நொய்யலின் வெண்மை மணலினும் பல்லாண்டுக்ள் வாழ்வீர்கள்” என்று புலவர்கள் வாழ்த்துவதாக சொல்லப்பட்டுள்ளது. இன்றைய மறைந்த நொய்யலின் பழம்பெருமையை வாசிக்கும்போது பெரும் துயரமே மேலிடுகிறது.

நிலங்களைக் குறித்த பழம்பதிவுகள் மிகுந்த சொல்வளம் கொண்டதாய் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. ‘நிலக்கட்டு’ என்ற பகுதியில் வரும் பத்தி இது “எங்கள் நிலங்களைக் குறிக்கும்போது முற்காலத்தில் நாற்புறத்து எல்லைகளையும் குறித்து பின் அந்நிலத்தின் பெயரைக் குறிப்பிட்டார்கள். வேலாமரத்துக்காடு, குருவிவளவுத்தோப்பு, ஆற்றுக்கார வயல் என்று பெயரைப் படிக்கும்போதே சுலபமாக விளங்கும். ஆங்கில ஆட்சிக்குப் பிறகு நிலங்களை சாலைகளாக வகுத்து ஒவ்வொரு காலைக்கும் ஒரு எண் தரப்பட்டது. முற்காலத்தில் ஊர் என்று இருந்தது. இப்போது கிராமம் என்ற பிரிவில் அடங்கியுள்ளது. அதில் ஊர்க்கட்டு, புறம்போக்கு, நத்தம், சேரி, மேய்ச்சல்காடு, வாய்க்கால், இனம் முதலியனவும் சேர்ந்துள்ளன. இதனை பண்டைய கால சாசன பத்ததியில் வெகு அழகாக விவரித்துள்ளார்கள். “அதிராஜ ராஜ மண்டலத்து வெங்காள நாட்டு நெல்வாய்க்குப் பள்ளிக்கு கீழ்ப்பால் எல்லை ஆந்தனூர் எல்லைக்கு மேற்கும், தென்பால் எல்லை கருங்கல் நாட்டுக்கு வடக்கும், மேல்பால் எல்லை பாய்ப்படுத்தாள் கல்லுக்குக் கிழக்கும், வடபால் எல்லைக்கு ஆற்றுக்குத் தெற்கும், இந் நான்கெல்லைக்குட்பட்ட நன்செய், புன்செய் உடும்போடி, ஆமை தவழ், புற்று எழுந்த இடம், மேனோக்கிய மரமும், நீணோக்கிய கிணறும், கற்றுப்புல், பேரகர முற்றூட்டும், இறைவரி, சிற்றாயம், எலவை, உகவை, மன்றுபாடு, தெண்ட குற்றம் மற்றும் எப்பேர்ப்பட்டவையும் இருப்பதாக திருவானிலை மகாதேவர்க்குத் திருநாமத்துக் காணியாக நம் ஓலை கொடுத்தோம்.” (கருவூர் சாசனம்).

‘கவுண்டர்கள்’ என்ற சொல் பற்றி இந்தப் புத்தகத்தில் கோவைக்கிழார் எழுதியுள்ள பகுதி ரசமானது. “கௌண்டன் என்ற சொல் காமிண்டன் என்ற சொல்லில் இருந்து வந்ததாகவும், அதுவே கெண்டன் என நாளாவட்டத்தில் மாறினதாகவும் கூறுவர். காமிண்டன் என்ற சொல்லுக்கு தலைவன் என்று பொருளாம். உதாரணம், உத்தமக்காமிண்டன். ஆகவே கவுண்டன், முதலி, பிள்ளை, சிரேட்டி நாயக்கன் முதலிய பல்வகைப்பட்ட பெயர்களுக்கும் ஒரே பொருள் ஏற்பட்டது என்று அறியவேண்டும்.”

கொங்கு நாட்டுப்புறத்தில் நிலவிய சில கொடிய சடங்குகளைக் குறித்தும் கோவைக்கிழார் இதில் குறிப்பிட்டுள்ளார். அக்காலத்தில் நாட்டு மருத்துவச்சி வகுப்பதே சட்டதிட்டம். சீதம் வராமல் இருக்க நெற்றி, கை, கால், வயிறு என்று ஏதேனும் ஒரு இடத்தில் பழுக்கக் காய்ச்சிய ஊசியால் சூடு வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. பிறந்த குழந்தைகக்கு விளக்கெண்ணையை புகட்டும் வழக்கமும் இருந்துள்ளது. பேறுகாலத்தில் குழந்தை பிறக்கும் வீடு காற்றோட்டமே இல்லாமல் இருண்டு கிடக்கும், பெற்றவளை பட்டினி போடுவது  என்று அக்காலத்து நடைமுறைகளைக்  குறித்து விவரித்துள்ளார்.

‘ஆண்பிள்ளை விளையாட்டு’ என்ற பகுதியில் கோலி விளையாடுவது பற்றி இவ்வாறு விவரித்துள்ளார். “கோலி அல்லது குண்டு அரை அங்குலம் முதற்கொண்டு ஒரு அங்குலம் வரை குறுக்களவு கொண்டது. அதனை மாக்கல்லிலும் கண்ணாடியிலும் இரும்பிலும் செய்வர். மூன்று வகையான கோலி ஆடுவதுண்டு. கையால் எறிவது, விரல் வளைத்து அடிப்பது, சுண்டுவது என்று. ஒரு குழி, இரு குழி, முக்குழி, அரைக்குழி என்று கிரமங்களும் கோலி விளையாட்டில் உண்டு”.

அந்தக் காலத்து குருகுலப்படிப்பின்போது மாணவர்கள் வீடு திரும்பும்போது பாடுவதாக ஒரு பாடலை கோவைக்கிழார் குறிப்பிட்டுள்ளார்.

அந்திக்குப் போறோம் நாங்கள்
அகந்தனில் விளையாடாமல்
சுந்தர விளக்கின் முன்னே
சுவடிகள் அவிழ்த்துப் பார்த்து
வந்தது வராததெல்லாம்
வணவுடன் படித்துக்காட்டி
கந்தனார் கோழி கூவக்
காலமே வாறோம் அய்யா…

அக்காலத்தில் சிறுவர், சிறுமியர் விளையாடிய ஆட்டங்களின் பட்டியலைப் பார்க்கும்போது இன்றைய தலைமுறையினர் கூடி விளையாடும் பண்பையும் சந்தோஷத்தையும் எத்தனை இழந்துள்ளனர் என்று உணரமுடிகிறது. இந்தப் பட்டியலில் வெற்றிடங்களில் விளையாடும் ஆட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன – கிண்ணாங்கிண்ணிக் கிட்டி, கரம் ஆட்டம், கண்ணாமூச்சி, கூந்தலடி, கட்டாந்தரம், நாலுமூலைத்தாச்சி, வெயிலும் நிழலும், கோல், கும்மி, குரவைக்கூத்து, கோட்டான் கோட்டான், கிளித்தட்டு, குந்தி காலாட்டம், கோல் குந்தி, கில்லியாட்டம், மரப்பந்து, பேய்ப்பந்து, பிள்ளையார் பந்து, துடுப்புப் பந்து, கவட்டிக் கவட்டி, கழுதை தூக்கி.

கொங்கு இலக்கியங்கள் என்ற பகுதியில் கோவைக்கிழார் சேகரித்துத் தந்துள்ள நாட்டுப்பாடல்கள் மிக அரிதானவை. தொழிலாளர் பாட்டு, வண்ணான்பாட்டு ஆகியவற்றோடு கொங்குப் பகுதியில் தைப்பொங்கலின் போது ‘பூப்பறிக்கப்போகும்’ நாளன்று பாடப்படும் ‘ஓலையக்கா கொண்டையிலே’ என்ற பிரசித்திபெற்ற நாட்டுப்பாடலின் முழுவடிவத்தையும் தொகுத்துத் தந்திருக்கிறார்  கிழார்.

தைமாதத்தில், ஆற்றோரமாய் கன்னிமார் பூசையை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது பாடுவதாக இப்பாட்டு அமைந்துள்ளது. தாய் வீட்டோடு சீராடிக்கொண்டு போகும் பெண்ணைப் பற்றிய பாடலாக சற்றே துயரச் சாயல்கொண்டு இப்பாடல் அமைந்துள்ளது.

“பாக்கு பதின்கலமாம், பச்சரிசி முக்கலமாம் எண்ணெய் இருநாழி, இளந்தேங்காய் பதினெட்டு இத்தனையுங் கொண்டுவந்து இறக்கினாள் பந்தலிலே. மலையாள பகவதிக்கு மாலையிடப் போறாளாம்”

ஓலையக்காக் கொண்டையிலே
ஒருகூடத் தாழம்பூ
தாழம்பூச் சிற்றாடை, தலைநிறைய முக்காடு

என நீள்கிறது இந்த அழகான பாடல்.

இன்று விநாயக சதுர்த்தியின்போது கடலில் கிரேன்களின் உதவியோடு பிள்ளையார் சிலைகள் கரைக்கும் காட்சியை, கொங்கு பிரதேசங்களில் பிள்ளையார் நோன்பின் மூன்றாம் நாளில், சாணத்தில் பிடித்த பிள்ளையாரை கூடையில் வைத்து கட்டுச் சாதத்தோடு ஆற்றிலே அல்லது கிணற்றிலே விடும் சித்தரிப்பில் காணமுடிகிறது. அப்போது பாடும் இந்த நாட்டுப்பாடலின் அழகு கோவைக்கிழாரை பெரிதும் கவர்ந்துள்ளது.

“வட்ட வட்டப் புள்ளையாரே
வாழைக்காய்ப் புள்ளையாரே
உண்ணுண்ணுப் புள்ளையாரே
ஊமத்தங்காப் புள்ளையாரே”

120 பக்கங்களே கொண்ட இந்த சிறு நூல் இன்று 60 ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்குள் பெரும் திகைப்பையும் சோர்வையும் ஒருசேர உண்டாக்கியது. அரை நூற்றாண்டு காலகட்டத்துக்குள்ளாக நமது ஊரும் வாழ்வும் எத்தனை வேகமாய் புரட்டிப் போடப்பட்டுள்ளது என்பது குறித்து வியப்பைவிட, நவீன வளர்ச்சி என்ற பெயரில் வாழ்வின் சாரத்தை எத்தனை ஆழமாய் நாம் இழந்து நிற்கிறோம் என்ற துயரமும் சோர்வுமே கூடுதலாக உள்ளது.

நம் வாழ்வில் நாம் இழந்த நிலவளம், சொல்வளம், உறவுகள் சார்ந்த கூறுகள், நாட்டுப்பாடல்கள், நாட்டுப்புற கலை வடிவங்கள், தாவரங்கள், சிறார் பருவத்து அற்புதங்கள் என்று பெரும் சரிவை இப் புத்தகம் நமக்கு மிகத் துல்லியமாய் அடையாளம் காட்டுகிறது.

கோவைக்கிழாரின் நூல்கள் பலவும் மறுபதிப்பு கண்டுள்ளன. ‘எங்கள் நாட்டுப்புறம்’என்ற இந்நூலையும் மீண்டும் பிரசுரிப்பதன் மூலம் கொங்கு நாட்டுப்புறத்தைக் குறித்த நினைவுகளை புதுப்பிக்க முடியும் என்று தோன்றுகிறது.