ரங்க ராட்டின மொழியின் பூர்வ தடயங்கள்

  கோணங்கியின்   மதினிமார்கள் கதையை முன்வைத்து

-லிபி ஆரண்யா

வாசிக்கக் கிடைத்த சிற்றிதழ்கள் வழி எனக்கு அறிமுகமான கோணங்கியின் எழுத்து அவர் குறித்த ஒரு வினோத சித்திரத்தை எனக்குள் உண்டுபண்ணியது. சில பல ஆண்டுகளுக்கு முன்பு செல்மா பிரியதர்ஷனிடம் ‘கோணங்கி அண்ணனுக்குக்காக ஒரு குறும்பட ஸ்கிரிப்ட் ஒண்ணு வச்சிருக்கேன்’ என்றேன். ‘சொல்லு’ என்றான். இப்படியாகச் சொன்னேன்.

கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன். பரபரப்பாக மனிதர்கள்.  கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாது சிமெண்ட் பென்ச் ஒன்றில் ஒருவர் தனித்து அமர்ந்திருக்கிறார். சலனமற்ற அவரது முகத்தில் ஒரு துறவியின் தவக் கலை. வருவதும் போவதுமாய் ரயில்கள். இறங்குவதும் ஏறுவதுமாய் ஜனங்கள். எல்லா ஊர்களின் ரயில்களும் வந்து போய் விட்டன. இந்த நள்ளிரவிலும் காத்திருக்கிறார்.அவரை வெகு நேரமாய்ப் பீதியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஸ்டேஷன் மாஸ்டர் அருகில் செல்கிறார். கொஞ்சம் பதட்டத்தோடு கேட்கிறார். நீங்கள் எங்கே போக வேண்டும் ? எந்த ரயிலுக்காகக் காத்திருக்கிறீர்கள்? அவர் பேசவில்லை. தனது மூடிய இடது கையை விரிக்கிறார். வியர்வையில் பதத்துப் போயிருக்கிறது அந்த டிக்கெட்.  சுருட்டிய  டிக்கெட்டை எடுத்து நடுங்கும் தனது விரல்களால் மெதுவாகப் பிரிக்கிறார் ஸ்டேஷன் மாஸ்டர்.

கேமரா குளோஸ் அப்பில் வருகிறது. முன்பதிவு செய்யப்பட்ட அந்த டிக்கெட்டில் பயணதேதி  22.08.3017 என்று அச்சிடப்பட்டிருக்கிறது. ஒரு சன்னமான வயலின் இசை பின்னணியில் ஒலிக்க ’கோணங்கியின் எழுத்தும்  நமது வாசிப்பும்’ என்ற கார்டு திரையை நிறைக்கிறது

இதை நான் அப்போது  வேடிக்கையாகத்தான் சொன்னேன். இது வேடிக்கையா என்ன ?.

புரிகிறது  vs புரியவில்லை என்கிற  சர்ச்சை இரட்டையின் சிலுவையை வெகுகாலமாய்க்  கோணங்கியின் எழுத்து சுமந்து சலிக்கிறது. யாருக்காக எழுதுகிறார்? அவர் இந்த சமூகத்திற்கு என்னதான் சொல்ல வருகிறார்? என்பது போன்ற நுகர்வு சார் கேள்விகளின் முள்முடி குத்தி அடர் சிவப்பாய் ஒரு ரத்தக் கோடு கோணங்கியின்  கன்னத்தில் வழிந்திறங்கியபடியே இருக்கிறது. பிரதிக்கு வெளியே கோணங்கி பற்றிய வாக்கியங்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்க அவரது படைப்புகள் சார்ந்து பொறுப்பான வாக்கியங்கள் ஏன் உருவாகவில்லை. நமது வாசிப்பின் நேர்மை இவ்வளவுதானா?.

கரிசல்பூமி எப்போதும்  யதார்த்த வகை எழுத்தின் வெள்ளாமைப் பகுதியாகவே அறியப்படுகிறது. சொட்டுத் தண்ணீரற்றுப் பாளம் பாளமாய் வெடித்துக் கிடக்கும் கரிசல் காட்டில் அதன் பாவப்பட்ட மனிதர்களின் வலியையும் கண்ணீரையும் கொண்டே  முப்போகம் அடித்த கதைசொல்லிகள் இருந்தனர். யதார்த்தவகை எழுத்தின் பெருங்கொண்ட சம்சாரிகளாக கி.ரா உள்ளிட்டோர் அறுவடை செய்த அதே கரிசல்பூமியில்தான் கோணங்கியும் தனது உழவடைச் சாமானங்களோடு இறங்குகிறார். சுற்றியிருக்கும் எல்லா சம்சாரியும் எள்ளு விதைக்கையில் கோணங்கி மட்டும் நெல்லா விதைக்க முடியும். கோணங்கியின் ஆரம்பகாலக் கதைகள் கரிசலின் யதார்த்த வகைப் பயிர் ரகங்கள் தான்.

பொருளியல் நெருக்கடியில் தனது கிராமத்திலிருந்து வேர்ப் பிடுங்காய் பிடுங்கப்படும் துயரம், பிழைப்புக்காக நகரம் வந்து சோற்றுக் கற்றாழையின் அந்தர ஊசல் போல  நகர மண்ணில் வேர் பதியாத வாழ்வு,  வைராக்கியமாக ஊரிலேயே இருக்கும் எளிய மனிதர்களது சொல்லி மாளாத வாதைகள் எனக் கரிசல் காட்டின் முன்னத்தி ஏர்கள் போன பாதையில் நல்ல விதமாய் நடந்து போகும் சமத்தான கதைகளைக் கொண்ட தொகுப்புதான் மதினிமார்கள் கதை. இதில் பாழ், ஆதிவிருட்சம், மூன்றாவது தனிமை ஆகிய கதைகள் விலகிப் பயணிப்பவை.  உள்ளடக்க ரீதியில்  இத்தொகுப்பின் கதைகளை விசாரிக்கும் பட்சத்தில் இப்படியான வாக்கியங்களோடு முடித்துக்  கொள்ள வேண்டியதுதான்.

ஆனால் நான் இந்தக் கதைகளை அவ்வாறு அணுகப்போவதில்லை. இத்தொகுப்பை மூடி வைத்து விட்டு கோணங்கியின் பாதரச ஓநாய்களின் தனிமையை உங்களுக்கு  வாசிக்கத் தருகிறேன். அல்லது கோணங்கியின் சமீபத்திய நாவல்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்து அதில் ஏதேனும் ஒரு பக்கத்தை நீங்களே கூட வாசிக்கலாம். முன் மாதிரியற்ற இந்த மொழிதலின் வந்தடைதலும் தனித்த இந்தக் கதை சொல்லியின் ஜனனமும் எப்படி நிகழ்ந்தது ? இது பரவசமான புதிர்தான்.

 

செம்பகத்தைத் தூக்கி வைத்திருக்கும் மதினி, அவனது குண்டிச் சிரங்கை தனது இடுப்பில் மாற்றிக்கொள்ளும் அன்பின் நேர்கோட்டுக் கதை சொல்லும் தொனியிலிருந்து எப்படி நகர்ந்தார்?. பசுஞ்சாண வாசலில்  மதினிமார்களின் மஞ்சள் பூசிய விரல்களின் வழியே வழிந்த சிக்கலான நெளிகோலத்தின் வழியாகத்தான் கோணங்கி இந்தத் தட்டாமாலை சுற்றும் மொழிப்பக்குவத்தை எட்டியிருக்கக்கூடும். கிறுகிறுத்துப் போகும் படியான கோணங்கியின்  தற்போதைய ரங்க ராட்டின மொழி  நகர்வுக்கான  பூர்வ தடயங்கள் ஏதேனும் இத்தொகுப்பின் பதினோறு கதைகளில் இருக்கிறதா என்று தேடுவதன் வழியாகவே இந்தத் தொகுப்பை நான் அணுக விரும்புகிறேன். தவிரவும் இந்த நகர்வு இயல்பில் நடந்ததா? படைப்பின் தனித்துவ இருப்புக்கான மெனக்கெடல்களில் நிகழ்ந்ததா? சேக்காளிகள் வைத்த செய்வினைத் தகடாலா? என்பதையெல்லாம் உரையாடலுக்கான திறப்புகளாக விட்டுவிடலாம்.

                  ‘அம்மா இல்லாவிட்டாலும் தெக்குத் தெரு இருந்தது அங்கு‘ என்ற வரிகளின் ஊடாகத் தெக்குத் தெரு மதினிமார்களின் கரிசனம் கோட்டோவியமாக விரிகையில் தரையிலிருந்து மேலெழும்பும் கோணங்கியின் எழுத்துப் பட்சியை  அவதானிக்க முடிகிறது.

மாயாண்டிக் கொத்தனின் ரஸமட்டம்  ஒரு வகையில்  விளக்கைத் தேய்த்து  தனது  பூதத்தைத் தானே விடுவிக்கும் கோணங்கியின் முயற்சிதான். மாயாண்டிக் கொத்தன் ஊர் நீங்குவதும் நகரில் லொங்குவதும் கதைசொல்லிக்கு இரண்டாம் பட்சம்தான். மாயாண்டிக் கொத்தனின் கையிலிருக்கும் ரஸமட்டத்தின் மீதும் மனையடி சாஸ்திரக் குறிப்பேட்டின் மீதும்தான் அவரது கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன. ஒரு குழந்தையின் கண்கள் அவை. அக்கண்களின் வழியாகத்தான் கதையும் நகர்கிறது. கொத்தனை மதிக்காது கொத்தனது மரபார்ந்த கட்டிடக் கலை நுட்பத்தை உதாசீனப்படுத்தும் மெத்தப் படித்த   என்ஜினியரின் கோடுகளை, ரஸமட்டத்தை ஆயுதமாக மாற்றித்தான் பழிவாங்க விரும்புகிறார் கதைசொல்லி. தவிர மனையடி சாஸ்திரக் குறிப்பேட்டை சிறார் கதைகளில் வரும்  ஒரு மந்திரத் தன்மை கொண்ட குறிப்பேடாக்கி நகரின் குழப்படிகளுக்கும் நகரத்தாரின் வாதைகளுக்கும்  நவீனக் கட்டிட சிருஷ்டியே காரணம் என்று புழுதி வாரித் தூற்றுகிறார்.

குழந்தைகள் தமது விருப்பத்திற்குரிய பொருட்களை வீம்பாகப் பிடித்திருப்பதைப்போல் ரஸமட்டத்தைப் பற்றிக்கொண்டு அலைகிறார் தன் கதைவெளிக்குள்.

கையில் இருக்கும் ரஸமட்டம் ரத்த அழுத்தம் பெற்றுக் கொதித்தது ‘என்றொரு வரியைக் கவனப்படுத்த விரும்புகிறேன். இதில் ரஸமட்டம்- பாதரஸம்- தெர்மாமீட்டர்- இரத்தஅழுத்தக்கருவி- இரத்தஅழுத்தம் என்று தாவித் தாவிப் பயணித்து  இப்படியான ஒரு வாக்கியத்தை உருவி வைக்கிறார்.  அரூபத் தொடர்புகளின் வழியே பயணித்து தொடர்பற்ற வாக்கியம் போல் ஒன்றை உருவாக்குவது கோணங்கியின் சித்து வேலைகளில் ஒன்று. பாதரஸத்தின் மீதான மையல்கூட  கோணங்கிக்கு கொத்தனின் ரஸமட்டத்தில் இருந்துதான்   வந்திருக்க வேண்டும்.

கொத்தன் கதையில் மட்டுமல்ல. வந்த சோலியை மறந்து விட்டு தனக்குப் பிடித்த இடங்களில் தங்கிப் போகும் ஒரு பொறுப்பற்ற பிள்ளையின் லட்சணங்கள் கோணங்கிக்கு வாய்த்தது கொடுப்பினைதான். கலாப்பூர்வமான கொடுப்பினை அது.

கரண்டு மேன் அய்யாவின் சிவப்பு ரப்பர் கை, டெய்லர் கடை அண்ணாச்சியின் குப்பைக் குழி, அதிலிருக்கும் வண்ண வண்ணத் துண்டுத் துணிகள். தீப்பெட்டி, பொன்வண்டு, தையல் மிஷினுக்குள்ளிருந்து அண்ணாச்சி எடுத்துத் தரும் கலர் கலர் நூல்கள் என்று அவர் தங்கிப் போகும் இடங்கள் அநேகம்..

பால்யத்தின் கொண்டாட்டங்களைப் பலிதந்து தூக்கம் கலையாத அதிகாலையில்  சிவகாசிக்கு அனுப்பப்படும் சின்னச் சின்னக் குழந்தைகளைப்  பாஸ்பரஸ் சர்ப்பங்கள் தீண்டித் தீண்டி மெல்ல மெல்ல நீலம் பாரிக்கப் பண்ணும் வலி மிக்க பதிவுதான் கருப்பு ரயில். ஆனாலும் அக்கதையின் உள்ளடக்கக் கசப்பினூடே வாசிப்பின் ருசி மொக்குகளில் பால்யத்தின் கொண்டாட்டத் தித்திப்பைப் படர விடும் அற்புதம் நிகழ்ந்துவிடுகிறது.

இந்தக்  கதையில் மூன்று ரயில்கள் வருகின்றன. மூன்றாவது ரயில் முக்கியமானது. வைக்கோலைத் திரித்துக் கயிறாக்கி கயிற்றுக்குள் ஒன்று சேரும் ரயில்தான் சாகவே சாகாத ஞாயிற்றுக்கிழமை ரயில். அந்த ரயில் ஊரெல்லாம் சுற்றிக் கம்மாய்க் கரையில் பயணித்து  கம்மாய் இறக்கத்தில் இறங்குகையில் என்ன ஆகிறது என்பதை கோணங்கியின் வார்த்தைகளில் கேட்பதே அழகு. கம்மாய்க்குள் ஏகமாய் விரிந்து கிடக்கும் நீர்ப்பரப்பின் அலைகளைப் பார்த்ததுமே சின்னவர்களின் டவுசர் அவிழ்ந்து கொள்ளும். ஒருகையில் டவுசரைப் பிடித்தபடி நீர் விளிம்பு வரைக்கும் வந்து எல்லாம் களைந்து நிற்கிற அம்மணத்தோடு கடைசி ஸ்டேஷனில் நிற்கும் ரயில் திடீரென்று ஹைய்ய்ய்… யென்ற பெருங்கூச்சலில் சிதறிச் சின்னாபின்னமாகிவிடும். அப்போது ரயில் இருக்காது. ரயில் தாத்தா இருக்க மாட்டார்.

கோணங்கிக்கும்  தனுஷ்கோடித் தீவிற்குமான  உறவு தீவிரமானது. அவரது படைப்பு வெளியிலும் அது உக்கிரம் கொண்டதாகவே இருக்கிறது. தனுஷ்கோடி புயலில் மூழ்கிப் போன ரயில், அதில் மொத்தமாய் மரித்துப் போன பயணிகள், அந்த ரயிலைக் கொடியசைத்து அனுப்பிவைத்த ரயில்வே ஊழியர், அவரது கையிலிருந்த கொடி என மருகும் கோணங்கியின் இன்றைய மனப் பதற்றத்தை எப்போதோ எழுதப்பட்ட கருப்பு ரயில்  சிறுகதையில் வரும் மேற்கண்ட வரிகள் கிளர்த்துவது தற்செயலானதா? அல்லது அந்த ரயில்தான் இந்த ரயிலா? (இத்தனைக்கும் இக்கதையின் இவ்வரிகளோ கொண்டாட்டத்தின்  நிறம் கொண்டவை )

சொல்லப்பட்ட கிரமத்திலேயே  ஒரு வாசகன் மீள நினைவுக்குக் கொண்டு வருவதை கோணங்கியின் சிறுகதைகள் விரும்புவதில்லை என்றே படுகிறது. இருட்டு கதை என் நினைவில் எப்போதும் ஒரு கரித்தடமாகத்தான் இருக்கிறது. அக்கதையை நினைவுபடுத்தி நான் யாரிடமாவது சொல்ல வேண்டுமெனில் கதை முடிவில்  ஊரைவிட்டு ரயிலில் போகும் மாரியப்பனைத் துரத்தியபடி வரும் கரித்தட ஞாபகத்தில் இருந்துதான் நான் துவங்குவேன்.

இத்தொகுப்பில் செல்ஃபி வகைக் கதைகளாக மூன்றாவது தனிமையையும் ராபர்ட் கிளைவின் தற்கொலை நகலையும் மட்டுமே சொல்ல முடியும். அந்த வகையில் இத்தொகுப்பை மற்றமை மீதான கரிசனம் சார் தொகுப்பாக அடையாளப்படுத்தலாம்.

ஆனாலும்  சில அரசியல் கேள்விகளோடு கதை சொல்லியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிற  வாய்ப்பை    கழுதை யாவாரிகள் கதை வழங்குவதையும் கவனப்படுத்த வேண்டியுள்ளது. வேறு சில கதைகளையும் வேறு வேறு அரசியல் பிராதுகளின் வழி விசாரிக்கலாம்தான். ஆனால் கோணங்கி என்ற கதைசொல்லியின் தனித்த மன உலகைக் கவனத்தில் கொள்ளாத புகார் வாக்கியங்கள் ஒரு நுட்பமான வாசகனால் நிராகரிக்கப்பட்டுவிடும்.

ஒரு குழந்தையின் நுட்பமான புலன்களோடும், வழமையின் ஒவ்வாமையோடும், வினோதங்களின் மையலோடும், நிலைகொள்ளாத ஒரு யாத்ரீகனின் அலைச்சலோடும், சொற்களின் மீதான  தீராக் காமத்தோடும்,  ஆசீர்வதிக்கப்பட்ட கலை உன்மத்தத்தோடும், புனைவின் பித்துநிலையோடும்  தமது தீராத் தேடல் வழி கோணங்கி என்கிற தனித்துவம் மிக்க கலைஞன் தமிழுக்குக் கிடைத்திருக்கிறான்.

இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகளில் ரயில் வருகிறது. அதுவே  அலைச்சலின் குறியீடுதான். தீராத அலைச்சலின் வழியேதான் கோணங்கியின் வருகை நிகழ்ந்திருக்கிறது. கிறுகிறுக்க வைக்கும் மொழியும் அவருக்கு வசப்பட்டிருக்கிறது. ஆதி விருட்சம் கதை,  ஆளில்லா ரங்க ராட்டினத்தின் ஆரம்ப நகர்வு. பாழ் கதையோ வாசகனை ஏற்றி வைத்து வேகங்கூட்டிய சோதனை நிகழ்வு.

இன்று விஸ்வரூபங்கொண்டுள்ள கோணங்கியினுடைய மொழியின் பூர்வத் தடயங்களைக் கொண்ட தொகுப்புதான் மதினிமார்கள் கதை

மாயாண்டிக் கொத்தனின் ரஸமட்டம் கதையில் இப்படி ஒரு வரி வருகிறது. ‘ கிளிப்பிள்ளையைப் போல் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிப் பூனைக்குட்டிக்குப் படம் வரைவது போல் கொத்தன் தன்மை தெரியாமல் அழிச்சாட்டியம் செய்கிறார் வி.வி.

இது கதைசொல்லியின் ஸ்தல அவஸ்தையாகவே எனக்குப் படுகிறது. கரிசல் மண்ணில் மாறி மாறி வரையப்பட்ட யதார்த்த வகைப் பூனைக்குட்டிகளிடமிருந்த அலுப்புதான் அது. இங்கேதான் கோணங்கியின் விலகல் துவங்கியிருக்க வேண்டும்.

ராபர்ட் கிளைவின் தற்கொலை நகல் கதையின் ஒரு வரி இது. தயவு செய்து நகல் பிசாசுகளை விரட்டியடிக்கும்படி கடவுளிடம் வேண்டிக்கொள் இந்த   நற்பிரார்த்தனையின் ஸ்தூலமான பெலன் கோணங்கி.

கருப்பு ரயில் கதையில் கோணங்கியின் அவதானிப்பு இது.

ரயிலுக்கு வெளியில் கிடப்பதெல்லாம் ரயிலோடு ஓடி வராது’

கோணங்கியை வாசிப்பதற்கான எளிய உபாயமாக இதையே நான்  சிபாரிசு செய்வேன் .

 

 

(கன்னியாகுமரியில் நடைபெற்ற பரிவாதினி நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை )

 

 

Leave a Comment