நிராயுதபாணிகளின் மௌனம்

நிராயுதபாணிகளின் மௌனம்

மலையாள மூலம் : ராஜீவ்.ஜி. இடவா

தமிழில் : நிர்மால்யா

புகைப்படம் : அனாமிகா

பத்தடுக்கு மாடிகட்டடத்தின் அடியில் கிடக்கும் காங்கிரீட் இடிபாடுகளின் மீது ரத்தம் சிதறி விழுந்து கிடக்கும் முத்து லட்சுமியைப் பற்றி மீரானந்தா பேசிய போது அதற்கு விவேகானந்தன் எதிவினையாற்றினான், “இதுங்களோட முடிவு இப்படியெல்லாம் தான் நந்தா”

“ஆனா முத்துலட்சுமி..”

வருத்தத்தில் மீரானந்தா அவனையே பார்த்தபடி அசையாமல் நின்றாள். “இப்படி செஞ்சுட்டாளேன்னு இருக்கும். எப்பவும் கக்ஷ்டங்கள்தான் இவங்களுக்கு. எத்தனை சலுகைகளை அறிவிச்சாலும் சாதிப்புத்தியை கைவிட மாட்டாங்க. ஒரு பழமொழி இருக்குதே? அட்டையைப் புடிச்சு மெத்தையில படுக்க வெச்சாலும் படுக்காதுன்னு, குப்பை மேலேதான் அதோட மோகம். இவங்களோட வாழ்க்கை அப்படித்தான். சும்மா அலடிக்காம நீ உன்னோட வேலையைப் பார் நந்தா”.

ஐந்தாவது மாடியிலுள்ள தனது அப்பார்ட்மெண்டில் நின்று கீழே பார்க்கலாம் என்கிற பரிவைக் கூட விவேகானந்தன் காட்டவில்லை. ஆனால் அவனது நடவடிக்கைகள் வழக்கத்திற்கு மாறாக இருந்தன. காலையில் தாமதமாகப் படுக்கையை விட்டு விழித்தெழும் அவன் சீக்கிரமாக எழுந்ததையும் பெட் டீ இல்லாமல் குளியலறைக்குச் சென்றதையும் கண்டு வியப்படைந்தாள். முத்துலட்சுமியின் மரணச்செய்தியே அதற்கான காரணமாக இருக்குமென்று கருதினாள். எல்லோருக்குமே அதுவொரு துயரச்செய்திதான். அந்த ஃப்ளாட்டின் ஒவ்வொரு துடிப்பையும் முத்துலட்சுமி அறிந்து வைத்திருந்தாள். தங்கள் வீட்டெதிரில் தற்கொலை நிகழ்ந்திருக்கும் போது யாரால் நிம்மதியாக உறங்க இயலும்? அதை மறைத்து வைக்காமல் வாக்ஷ்பேஸினில் கை அலம்பும் விவேகானந்தனிடம் மனைவி கேட்டாள்.

“ காலையில வழக்கத்துக்கு மாறா நீங்க என்னைத் தட்டி எழுப்பினீங்க. அதனால இருக்கலாம். அப்புறம் எப்படி இருந்தாலும் ஒரு கெட்டச் செய்தியைக் கேட்டுத்தானே கண் முழிச்சேன். அதுக்கப்புறம் படுத்தாலும் தூக்கம் வராது.” வழக்கத்திற்கு மாறாக நாளிதழையும் தேநீரையும் எடுத்துப் படுக்கையறைக்குப் போன அவனையே ஒருகணம் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது நடத்தையில் லேசான குழறுபடி இருப்பதாகச் சந்தேகித்தப் போதிலும் எதையோ எண்ணிப் புன்னகைத்துச் சமையலறக்கே திரும்பினாள்.

 

விவேகானந்தன் முகச்சவரம் செய்து கொண்டிருக்கும் போதுதான் மீண்டும் காப்பி தம்ளரை எடுக்கப் போனாள். அவள் தம்ளருடன் இமைவெட்டாமல் வெறீத்துக் கொண்டிருக்கிறாள். இப்போது அவளது முகம் பயத்தில் உறைந்திருப்பதை கவனித்தான். விவேகானந்தன் புருவம் உயர்த்திக் காரணத்தைக் கேட்டான்.

”முத்துலட்சுமி தற்கொலை செய்யலைன்னும் யாரோ அவளை…” திடீரென்று விவேகானந்தனின் கன்னத்தில் அரும்பிய ரத்தம், நுரைத்த சேவிங் கிரீம் மீது சிகப்பு வரிகளாக கீழ்த்தாடையில் வழிந்தது, “ச்சே” என்று சேவிங் செட்டை உதறினான்.

“என்ன அத்தான், இதெப்படி ஆச்சு…?”

பதட்டத்துடன் லோக்ஷனை எடுத்தாள்.

“சமையலறையில உனக்கு வேலை எதுவும் இல்லையா நந்தா, காலையிலேயே ஏதோ ஆதிவாசிங்களோட பிரச்சினைய எடுத்திட்டு வந்து எதிரே நிற்கற?”

விவேகானந்தனின் குரலில் ஓர் எரிச்சல் முளைத்திருந்தது.

“நமக்கு அவள் ஆதிவாசி பொண்ணு மட்டுமில்ல அத்தான். நம்ம வீட்டு ஆளா இருந்தவளாச்சே?”

”அதுக்காக? அவள் இந்தப் பத்து மாடியில எங்கங்கயோ போயிட்டு வர்ற. அது அவளோட தேவை. ஒரு வேலைக்காரிக்குக் குடுக்கறதை விட அதிகமான சுதந்திரத்தைத் தந்தது என்னோட நல்ல மனசுதான். அதுக்காக…”

அப்போதுதான் தொலைபேசி ஒலித்தது. அதை முதல்முதலாகக் கேட்பதைப் போல போனையே வெறித்துக் கொண்டிருந்தான் விவேகானந்தன். அவர்களுக்கிடையில் அப்போது நிகழ்ந்த மௌனத்தில் அதொரு முழக்கமாக மாறியபோது ரிசீவரை எடுத்தாள்.

போன் உங்களுக்கு. எட்டாவது மாடியிலிருந்து ஜோசப் அண்ணன்.” ஜோசப் என்றதும் விவேகானந்தன் விரைந்து சென்று ரிசீவரைப் பிடுங்கினான்.

“ஹலோ ஜோசப்.”

“……………………………………………”

“என்னப் பண்றது ஜோசப். ஒவ்வொரு தலைவலிகளா வந்து சேருது. இவள்களுக்கு வேற எடம் கெடைக்கலையான்னு நெனைக்கறப்பத்தான்…”

”…………………………………..”

“இங்கேயும் ஒருத்தி காலையிலேர்ந்து முத்துலட்சுமியைப் பத்திப் பேசிகிட்டிருக்காள். அவள் நல்ல வேலைக்காரிதான். அதுக்காக இந்த ஏடாகூடத்துல போய் குதிக்க முடியுமா? நமக்கெல்லாம் வேற ஏதேதோ வேலைங்க கெடக்குது.”

விவேகானந்தன் உரையாடலைத் தொடர்வதைக் கண்டதும் சமையலறைக்குத் திரும்பினாள். அதற்குள் விவேகானந்தன் அழைப்பது கேட்டது.

“நகுலன் எங்கே நந்தா…?”

அப்போது அவனது குரலில் வழக்கத்தை மீறிய ஒரு முரட்டுத்தனம் இருந்தது. அவள் அறிமுகமற்றவளைப் போல அவனை நோக்கித் தணிந்தகுரலில் பதிலளித்தாள்.

“நான் கூப்பிடறேன்; அவன் கீழே…”

“அங்க எதை எடுக்கறே.. போலீஸ் வந்து சேர்ற நேரத்துல தான் பீடைங்களோட ஒரு…”

ஆத்திரத்துடன் அவன் சேவிங் செட்டை மேசை மீது எறிந்தான். அவள் நம்ப முடியாமல் செயலற்று நின்றாள். விவேகானந்தனின் இத்தகைய தோற்றத்தை அவள் முதல்முறையாகப் பார்க்கிறாள். கடும் நிம்மதியின்மை அவளை நெருங்குவதை உணர்ந்தாள்.

நகுலன் காலையில் கண்ட காட்சி

“மம்மி, மம்மி… கீழே முத்து அக்கா விழுந்து கெடக்குறா. அவளைச்சுத்தி ரத்தம்.”

உறக்கம் கலைந்து சோம்பலில் படுத்துக் கிடக்கும் விவேகானந்தன் நடுநடுங்க அதைக் கேட்டன். நேற்றிரவு வெகுதாமதமாகத்தான் அவன் ஃப்ளாட்டுக்குத் திரும்பினான். இருப்பினும் அதிகாலையிலேயே உறக்கம் போய்விட்டது. பக்கத்தில் படுத்திருந்த மீரானந்தா எழுந்து போகும்போது அவன் உறங்கிக் கொண்டிருக்கவில்லை. உறங்குவதைப் போல நடித்துக் கொண்டிருந்தான். தேநீரைப் பருகிக் கொண்டிருந்த மீரானந்தா திடுக்கிட்டு நகுலனைப் பார்த்து அவனது பேச்சின் பொருளைப் புரிந்து கொண்டபோது எழுந்த நடுக்கத்தில் அவனைக் கட்டியணைத்து விவேகானந்தனின் அருகில் ஓடினாள்.

பத்து வயது நகுலனும் அவன் வயதையொத்த மோனாயும் அதிகாலையிலேயே தரைத்தளத்திலுள்ள பேட்மிண்டன் களத்திற்குத் தவறாமல் ஜாக்கிங் செய்யக் கிளம்பினார்கள். முதலில், நேற்றுச் சாயங்காலம் கிரிக்கெட் விளையாடும்போது பூந்தோட்டத்தில் தொலைத்த பந்தைத் தேடினார்கள். அப்போதுதான் அங்கே ஏதோ கிடப்பதைக் கவனித்தார்கள். லேசான மழைமூட்டம் இருந்தமையால் விடியல் வெளிச்சம் குறைவாகவே இருந்தது. எனவே முதல்காட்சியில் அது தெளிவாகத் தெரியவில்லை.

“எப்படி மோனாய் இதுக்குள்ள நாய் நொழைஞ்சது?”

இதுவரை நிகழ்ந்திராத ஒரு சம்பவத்தின் பிரமிப்பு அப்போது நகுலனின் முகத்தில் தென்பட்டது.

“அது நாய் இல்லடா நகுலா, வேற என்னமோ.”

அவன் ஆவலுடன் பதுங்கிச் சென்று குனிந்து பார்த்தான்.

“அய்யய்யோ நகுலா அது முத்துலட்சுமி அக்கா?”

மோனாய் பயத்தில் அலறத் தொடங்கியபோது பெரிய ஆளைப் போல நகுலன் அவனது வாயைப் பொத்தினான். ஏனென்று நகுலனுக்குக் கூட விளங்கவில்லை. அவ்வேளையில் அப்படி செய்ய வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. சட்டென்று அவன் மேனாயின் கையைப் பற்றியிழுத்து மேல்நோக்கிச் செல்லும் படிக்கட்டுகளில் ஓடினான். அப்போது அவனுக்கு மூச்சுவாங்கியது.

அவள் செல்வதைக் கேட்டப்பின்பும் தீவிரமாக யோசிப்பதைப் போல மின்விசிறியையேப் பார்த்துக் கொண்டிருந்தான் விவேகானந்தன். அப்போது அவன் நடுக்கத்தை உணர்வதாக அவளுக்குத் தோன்றியது. ஒரு வார்த்தை கூட பேசாமல் உறங்குவதைப் போலக் கண்களை மூடியபோது அவனுக்குத் தொல்லை கொடுக்க வேண்டாமென்று நகுலனை அணைத்தபடி சமையலறைக்குத் திரும்பினாள்.

“நீ இனி கீழே போகாதே மகனே.”

அவள் மிகவும் அதிர்ந்து போயிருந்தாள். நகுலனிடமிருந்து விலகி மீண்டும் இருளின் மெல்லிய முனைகளை அகற்றி ஜன்னவழியாக முத்துலட்சுமி விழுந்து கிடக்கும் இடத்தைப் பார்த்தாள். அதிகாலையில் ஐந்தாவது தளத்திலிருந்து அந்தக் காட்சியைத் தெளிவாகப் பார்க்க இயலவில்லை, அவள் கவலையுடன் தனது வேலைகளுக்குத் திரும்பினாள். அப்போதும் அவள் முத்துலட்சுமியின் மரணத்தின் அதிர்ச்சியிலேயே இருந்தாள். அவளால் சமையலறைக்குள் நிம்மதியாக நிற்க இயலவில்லை, அவள் ஏன் தற்கொலை செய்து கொண்டாள். நேற்றும் கூட அவள் கலகலப்பாகத்தானே திரும்பிச் சென்றாள். இத்தகைய எண்ணங்கள் அவளை மிதித்துக் கொண்டிருந்தன.

நகுலன் உள்ளறையை எட்டிப் பார்த்தான். டாடி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு சமையலறை கதவுப்படியில் நின்று மம்மியைப் பார்த்தான். மம்மி எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். அவன் மெதுவாகப் படிக்கட்டுகளில் இறங்கினான். அவனது எண்ணமெல்லாம் அவனுக்காக கடலையை எடுத்து வரும் முத்துலட்சுமியைப் பற்றியதாக இருந்தது. ரத்தத்தில் கண்கள் பிதுங்கிக் கிடக்கும் முத்துலட்சுமியின் உருவம் அவனால் நம்ப முடியாததாக இருந்தது. படிக்கட்டு முடியும் இடத்திலிருந்த தூணில் சாய்ந்து உட்கார்ந்தான். அங்கிருந்து அவனால் முத்துலட்சுமியைப் பார்க்க முடியும். அப்படி அமர்ந்திருக்கும் போது அவனது மனம் நினைவுகளால் பின்னப்பட்ட இழைகளை விடுவிடுத்தது. வரிசையான பற்களைக் காட்டிச் சிரிக்கும் முத்துலட்சுமியின் கரிய அழகிய முகம் அவன் மனதை அடைந்தது. அடர்த்தியான நீண்ட கூந்தலில் காட்டுப் பூக்களைச் சூடி வரும் முத்துலட்சுமிக்கு எத்தனை அழகு என்று மம்மி கூறுவதை நினைவுகூர்ந்தான்.

“எங்க ஊர்ல இப்ப மாம்பழக் காலம் நகுலா. உனக்கும் கொஞ்சம் எடுத்து வந்து தரட்டுமா.”

“வேண்டாம் முத்து அக்கா. டாடி பாத்த திட்டுவார். என்னை அடிப்பார்.”

அப்போது அவன் கண்களில் அச்சம் நிழலாடியது.

”இல்லடா மண்டு. என் மேல சாருக்கு ரொம்ப இக்ஷ்டம். அதனாலதானே ஓணம் பண்டிகைக்குப் பாவாடையும் சட்டையும் வாங்கித் தந்தார். அதை எங்க கோயில் திருவிழாவுல உடுக்கறதுக்காக வெச்சிருக்கேன்.”

“வேண்டா அக்கா. அக்கா காட்டுலேர்ந்துதானே வர்றீங்க. கடலையைப் பயந்துகிட்டுத்தான் வாங்கறேன். எங்க பாத்ரூம்ல உட்கார்ந்துதான் அதைச் சாப்பிடுவேன், டாடிக்கு அக்கா மேல பிரியம் இருந்தாலும் சிலசமயம் உங்கள காட்டுமிருகம்னு சொல்லுவார். அதனாலதான்…” இருண்ட நிறத்தைக் கொண்ட முத்துலட்சுமியின் முகம் மேலும் இருள்வதை நகுலன் கவனித்தான். அவளைப் பற்றிய நினைவுகளில் வருத்தமுற்றாள். அவனுக்கு நெஞ்சு அடைப்பதைப் போலத் தோன்றியது.

பொழுது பளிச்சென்று விடியும் போது முத்துலட்சுமியை அந்தப் பத்தடுக்கு மாடி குடியிருப்பில் பார்க்கலாம். அவள் எப்போது வருகிறாள்; எப்போது திரும்பிச் செல்கிறாளென்று யாருக்கும் உறுதியில்லை. அவளொரு தலித் பெண் என்றும் நகரத்தின் வடக்கிலுள்ள வனப் பகுதியிலிருந்து வருகிறாளென்று மட்டுமே தெரியும். கூடுதலாக விசாரிக்க யாரும் முற்படவில்லை. அவர்களில் யாருக்கும் அதற்கான தேவை இருக்கவில்லை. அவள் ஒவ்வொரு குடியிருப்புக்கும் வெகு உற்சாகமாகப் போய் வருவாள் பக்கத்து வீட்டில் வேலை பார்த்த களைப்பையோ ஆர்வமின்மையையோ யாரும் காணவில்லை. தினக்கூலிக்குப் பாத்திரங்களைத் தேய்த்து குப்பைகளை அகற்றி வேர்வை நனையத் திருப்பிச்செல்லும் அவள் அந்தக் குடியிருப்பில் தவிர்க்கமுடியாத ஒரு கண்ணியாக இருந்தாள்.

பூட்டப்பட்ட குளியலறையில் நகுலன்

“நீ எதுக்காக இங்க உட்கார்ந்திருக்கே?”

டாடியின் முரட்டுக்குரலைக் கேட்டு நகுலன் திடுக்கிட்டு எழுந்தான். ஏதோ தவறிழைத்ததைப் போல தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

இயன்றவரை குரலை உயர்த்த முயற்சிக்காமல் கேட்டான்,” நான் சொல்றது உனக்குக் கேட்கலையா?”

அந்த அளவுக்கு முத்துலட்சுமியின் மரணம் அக்குடியிருப்பில் பீதியைப் பரப்பியிருந்தது. இன்றைய சூழலில் ஒரு தலித்பெண்ணின் தற்கொலை பின்னணியில் இருக்கும் சந்தேகங்களைத் தேடி யாரேனும் வரக்கூடும் என்கிற எண்ணமே அவர்களின் பீதிக்குக் காரணம். முத்துலட்சுமியின் சடலம் கிடக்கும் இடத்திற்கு யாரும் செல்லவில்லை. இருப்பினும், ஒவ்வொரு அப்பார்ட்மெண்டின் ஜன்னல் வழியாக பீதியும் ஆவலும் கொண்ட கண்கள் நீண்டு சென்றன. அவள் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டாள் என்கிற ஆர்வம் நிலைத்திருக்கையில் அவர்களுக்குள் வேறொரு கேள்வியும் எழுந்தது. தற்கொலைதான் செய்து கொண்டாளோ?

“முத்துலட்சுமியைப் பாக்கறதுக்காக…”

“போதும் பாத்தாது. மேலே நட.”

நகுலன் தலை குனிந்து படிக்கட்டில் ஏறினான். அவனுக்குப் பின்னால் ஓசையுடன் கதவு சாத்தப்பட்ட போது இதுவரை இல்லாத திகைப்புடன் விவேகானந்தனைப் பார்த்தாள் மீரானந்தா. அதற்குள் நகுலன் அடிவாங்கித் தரையில் விழுந்திருந்தான். அவன் புரண்டெழுந்து மீரானந்தாவின் காலை கட்டிப்பிடித்து அழத்தொடங்கினான்.

“பேசாதே. சனியன். இங்கேயொரு தற்கொலை நடந்திருக்குது. அதுவும் ஒரு காட்டுவாசியோடது. அப்போதுதான் இவனோட பாசமும் வேடிக்கையும்.”

சூழ்நிலையை மறந்து விவேகானந்தன் கத்தினான்.

“அதுக்காக அத்தான் ஏன் இப்படி…?

அவள் இடைமறித்துக் கேட்டாள்.

“பேசாதே.”

அவளை நோக்கி விரலைச் சுட்டினான், அவள் பயந்து போனாள். அவளுக்கு இத்தனை நாள் அறிமுகமற்ற ஒரு குரலில் பேசினான். “மொதல்ல இவன்தான் பார்த்தான். போலீஸோட கேள்வியும் அதுவாகத் தான் இருக்கும். மோனாய் காய்ச்சல்ல படுத்திட்டான். அவங்க அவனைத் திருவனந்தபுரத்துல இருக்கும் ஜோஸப்போட சகோதரி வீட்டுல கொண்டு போய் விட தயாராயிட்டாங்க. அப்பத்தான் இங்க ஒரு மம்மியும் மகனும். அடுத்தவங்களுக்கு இல்லாத பாசம். என்னோட கவலையைப் பற்றி யாரும் தெரிஞ்சுக்காதீங்க. காலைல்ல இருந்து நான் நெருப்பைத் தின்னுகிட்டு இருக்கேன். அவன் பாத்தேன்னு உங்கிட்ட வந்து சொன்னதிலேர்ந்து அதை எப்படிக் கையாளுறதுன்னு தெரியாம படுத்துக் கெடந்தேன் நான்.” வெருகுப்பூனையைப் போல விவேகானந்தன் ஹாலில் நடந்தான்.

“இருந்தாலும் அத்தான் அவள்கிட்டே நாம காட்டறது அநியாயம். மன்னிக்க முடியாத அநியாயம்.”

வருத்தத்துடன் சொன்னாள்.

“நீ பேசாதே.”

அவன் கொதிப்படைந்தான்.

“எல்லாம் நீ ஊகிச்சுச் கொல்றீயா. இல்லா ஜோசப்போட பொஞ்சாதியும், முஸ்தஃபாவோட பொஞ்சாதியும் சொன்னாங்களா? உங்களுக்கு வேற வேலை கெடையாதே. வீட்டுல உட்கார்ந்து தேவையில்லாததை எல்லாம் யோசிச்சு சொந்தமுடிவுகளை எடுத்தா போதுமே. கக்ஷ்டம். அவளைக் கொன்னுட்டு யாருக்கு என்ன கொடைக்கப் போவுது நந்தா? இப்படியெல்லாம் யோசிக்கறதுக்கு முன்னாடி அதோட முக்கியத்துவத்தையும் எதிர்விளைவுகளையும் நீங்க யாரும் யோசிக்கறது கெடையது. அப்புறம் அவள் ஒண்ணும் பெரிய அழகி இல்லை. சரியா..” அவள் திகைத்துப்போய் விவேகானந்தனையே பார்த்தாள். இத்தனை ஆத்திரத்திற்குக் காரணம், நகுலன் பார்த்து விட்டான் என்பதற்காக இருக்குமோ? மனக்கொதிப்பதால் அவனது நாக்கிலிருந்து வார்த்தைகள் விழுவதாக ஆறுதலடைந்தபோதிலும் அவள் கவலையடைந்தாள்.

“நகுலனை நாம எங்க அனுப்பலாம்னு ஏதாவது யோசனை இருக்குதா உனக்கு. என்னோட வீட்டுக்கா. இல்லை உன்னோட வீட்டுக்கா? தன் இக்ஷ்டத்துக்கு வீட்டைவிட்டுக் கெளம்பி வர்றதுக்கு முன்னாடி இதுமாதிரி சில சம்பவங்கள் வாழ்க்கையில நடக்கும்ங்கற யோசனை இருந்திருக்கணும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள்லதான் தனிமையைப் பத்தின எண்ணம் வருது. என்னோட ஒரு தலையெழுத்து.”

வெறுப்பை உமிழும் கரிய வார்த்தைகளை அவள் மீது வாரியிறைத்துக் கொண்டிருந்தான். அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். இப்படி ஒருபோதும் அவன் பேசியதில்லை. சிலவேளை அவர்களின் அந்தரங்க உரையாடலின் போதும் உறவினர்களைப் பற்றி பேசும் போதெல்லாம் அவன் அதிலொன்றும் அக்கறை இல்லாதவனைப் போல் ஒதுங்கிப் போயிருக்கிறான். அவன் ஒருபோதும் அதைப்பற்றி நினைவுகூரக் கூட முற்பட்டதில்லை. அவளது விருப்பத்திற்கேற்ப தனது வாழ்க்கையை நறுக்கிப் பக்குவப்படுத்தியிருந்தான். அந்த விவேகானந்தன் தான் இப்போது ஓர் அந்நியனின் முகப்பாவத்துடன் நிற்கிறான். முத்துலட்சுமியின் சடலத்தை நகுலன் காணநேர்ந்தது அவ்வளவு பெரிய பாவச்செயலா? அதொரு பொறியாக மாறியதால்தானே விவேகானந்தன் இத்தனை பயப்படுகிறான். அவளது இதயம் துடித்துடித்தது. பாரம் மிகுந்த ஒரு பயத்தின் அழுத்தம் அவளுக்குள் எழுந்தது.

“முஸ்தஃபா என்ன சொன்னான்னு தெரியுமா? போலீஸோட எதிர்ல போய் நகுலன் அகப்படக் கூடாதாம். வேற ஒன்னுமில்ல. கேஸு கோர்டுன்னு ஆயிட்டா அவனோட படிப்பு, அதுக்குப் பின்னாடி இருக்கற அலைக்கழிப்புகள். அதெல்லாம் பெரிய விவகாரமா ஆயிடும் நந்தா. எதுக்காக வீணா ஒவ்வொரு பொல்லாப்புகள்ல நாம போய் விழணும். அதுவும் ஒரு ஆதிவாசி பொண்ணுக்காக. என்ன ஏதுன்னு நமக்குத் தெரியாதே. நம்மோட ஃப்ளாட்டுக்கு நேத்து அவள் வரவும் இல்ல, நமக்கு எதுவும் தெரியாது”.

சீற்றத்தின் காரணமாக அவனுக்கு மூச்சுவாங்கியது. அவன் சொல்வதைக் கேட்டு அவள் முழித்துக் கொண்டிருக்கும் போது, கீழே வாகனங்கள் வந்து நிற்பதும் கதவுகள் மூடப்படும் சத்தமும் கேட்டது. விவேகானந்தன் ஜன்னல் வழியாகக் கீழே பார்த்தான்.

“போலீஸ்.”

அவனது குரல் சன்னமாக ஒலித்தபோதிலும் அதில் பயம் இருந்தது. அவளுக்குத் தனது குரல் உறைந்து விட்டதாகவும் பல முழக்கங்கள் அவளது காதை நோக்கி வருவதாகவும் அவை தனது இதயத்தின் முழக்கங்களாகவும் தோன்றியது. விவேகனந்தன் செய்வதறியாமல் ஹாலில் உலவிக் கொண்டிருந்தான். அப்போதுதான் தொலைபேசி ஒலித்தது. முதலில் முஸ்தஃபா கூப்பிட்டார். தொடந்து ஜோசப். விவேகானந்தன் ரிசீவரை வைக்கும் போது அவனது முகம் நன்றாகச் சிவந்திருந்தது. தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் திகைத்து நிற்கும் நகுலனின் கையை இறுக்கியபடி அவர்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தான் விவேகானந்தன். பின்னர் திடமான ஒரு முடிவுடன் நகுலனை பாத்ரூமிற்குள் தள்ளிக் கதவைச் சாத்தினான். விவேகானந்தன் களைப்புடன் சோபாவில் அமர்ந்தான். பாத்ரூமின் தாழ்பாளைப் பூட்டி சாவியை பாக்கெட்டில் போட்டப் போது பாத்ரூமிலிருந்து நகுலனின் விசும்பும் அழுகை எழுந்தது. மீரானந்தாவுக்கு அப்போது கவலையை விட கோபமே மேலோங்கி இருந்தது, அவள் அவனை எரித்து விடுவதைப் போலப் பார்த்தாள், அவனது அந்த நடவடிக்கை அவளது உணர்வுத்தளத்தில் ஆழமான காயங்களைத் தீட்டியது.

கீழே இறங்கிச் செல்லும் போது முஸ்தஃபாவும் ஜோசப்பும் அவனுக்காக தரைத்தளத்தில் பரிசளித்து விட்டு ரத்தம் உறைந்து கிடக்கும் முத்துலட்சுமியை பார்த்தான். அவர்களின் கண்களும் அந்த பரிதாபத்திற்குரிய காட்சியைப் பார்த்தன. போலீஸ்காரர்கள் அறிக்கையைத் தயாரிக்கும் மும்முரத்தில் இருந்தார்கள். தாங்கள் கையாளுவது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த விக்ஷயமில்லை என்கிற விதத்தில் இருந்தன அவர்களின் செயல்பாடுகள், எஸ்.ஐ எதையோ சொல்லி உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தார், விவேகானந்தன் சட்டென அவ்விடத்தை விட்டு கண்களை விலக்கிக் கொண்டான். கேரேஜிலிருந்த தனது ஐகோன் காரை வெளியே எடுத்தான். அப்போது போலீஸ்காரகளின் கவனம் அவர்களின் மீது திரும்பியது. எஸ்.ஐ தாமோதர் அப்போது போலீஸ்காரர்களிடம் தீவிரமாக எதையோ பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் தங்களுடைய வேலையில் மும்முரமானார்கள். முஸ்தஃபாவும் ஜோசப்பும் காருக்குள் அமர்ந்து கதவை மூடினார்கள். விவேகானந்தன் வண்டியை பின்புறமாக எடுத்து முத்துலட்சுமியின் சடலத்தின் அருகில் சென்றான்.

“ஹலோ மிஸ்டர் விவேகானந்தன் குட் மார்னிங். என்ன உங்களோட ஃப்ளாட்ல இப்படியெல்லாம்?”

எஸ்.ஐ தாமோதர் அவனிடம் கேட்டார்.

“நோ தாமோதர். என்னோட ஃப்ளாட்டில் இல்ல. இதுல ஒரு அப்பார்ட்மெண்ட் மட்டும்தான் எனக்கு இருக்குது.”

“ஹ…ஹ…ஓகே, ஓகே…”

வாய்விட்டு சிரித்தவாறு எஸ்.ஐ தாமோதர் அவனுடைய தோளைத் தட்டினார்.

“எனி வே, ஏதாச்சும் துப்பு?”

மிகுந்த அக்கறையுடன் விவேகானந்தன் கேட்டான்.

“என்ன துப்பு கெடக்கப்போகுது. எப்படியானாலும் தற்கொலைன்னு நாங்க முடிவுப் பண்ணிட்டோம். சிலசமயம் அப்படி இல்லாம இருந்தா கூட. அதிகமான விளக்கங்களை இதுவரைக்கும் யாரும் கேட்கலை. அதனால எங்களோட வேலை குறைஞ்சுடுச்சு.”

”அப்ப போஸ்ட்மார்ட்டம்.”

”தேவைதான். இப்படியொரு தற்கொலை நடந்ததுங்கறதுக்கான சான்று தேவைப்படுது. அதை போலீஸ் சர்ஜன் பாத்துக்குவார். இன்னைக்கு இப்படிப்பட்ட உதிரிச் சம்பவங்கள் தொடர்பா யாருக்கும் அக்கறை கெடயாது.”

“சரி தாமோதர், நீங்க வேலையை பாருங்க. நாம சாயங்கலம் கிளப்ல பார்க்கலாம்.”

விவேகானந்தன் ஐகான் காரை முன்னோக்கி எடுக்கும்போது முஸ்தஃபாவும் ஜோசப்பும் அவனை பார்த்து ரகசியமாகச் சிரித்தார்கள். அப்போது வண்டியின் டிக்கியிலிருந்து ஈக்கள் கூட்டமாக ரீங்கரித்து பறந்து எழுந்தன.

———————-

ராஜீவ் ஜி இடவா :

சமகால மலையாள இளம் படைப்பாளிகளில் முக்கியமானவர். ஐந்து சிறுகதைத்தொகுப்புகள், இரண்டு நாவல்களை எழுதியுள்ளார். இலக்கியப்பணிக்காக பதினைந்து விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது அனுபவங்கள்‘ரத்தக்கோடுகள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. ‘புதுக்கால கதைகள்’ நூலின் தொகுப்பாளர். ராணுவத்தில் பணியாற்றிய இவர் தற்போது கொல்லம் மாவட்டம் பரவூரில் வசித்து வருகிறார்.