ஒப்பனை மேஜை

ஒப்பனை மேஜை – சலீல் சௌதுரி

தமிழில் – சுகுமாரன்

ஓவியம்  : அனந்த பத்மநாபன்

எங்கள் திருமணத்துக்குப் பிறகு நந்தா எனக்கு எழுதிய அநேகமாக எல்லாக் கடிதங்களிலும் இந்தப் பின்குறிப்பை  எப்போதும்  சேர்த்திருப்பாள் : ‘ நமக்காக நீங்கள் வாடகைக்கு வீட்டை அமர்த்தும்போது எனக்கு ஒரு ஒப்பனை மேஜையை வாங்க மறக்கவேண்டாம். அதன் கண்ணாடி நேர்த்தியானதாக இருக்க வேண்டும். பெரியதாகவும் இருக்க வேண்டும்’.

திருணத்துக்கு முன்பு நந்தாவின் வீட்டுக்குப் போகும்போதெல்லாம் முன் வாசலில் இருந்த விரிசல் விழுந்த கண்ணாடியை எப்போதும் பார்ப்பேன். அந்தக் கண்ணாடியில் ஒருவர் முகத்தைப் பார்ப்பது சிரமமான செயலாகவே இருந்தது. மூக்குக்கும் நெற்றிக்கும் இடையே ஒரு அடி தூரம் இருப்பது போலவும் உதடுகளுக்கும் முகவாய்க்கும் இடையில் ஒரு அங்குலம் கூட இல்லாதது போலவும் தெரியும். நீங்கள் நிற்கும் இடத்திலிருந்து கொஞ்சம் நகர்ந்தாலும் கண்ணாடி உங்களுக்குப் பழிப்புப் காட்டுவதுபோலத் தோன்றும். அதைப் பார்த்து நான் வருத்தப்படுவதைக் கண்டு நந்தா சிரித்துக் கொண்டே சொல்வாள். ‘’ நான் அங்கே குடியிருக்க வரும்போது நீங்கள் எனக்கு ஒரு நல்ல கண்ணாடி வாங்கிக் கொடுக்கவேண்டும்”’“

இதெல்லாம் திருமணம் முடிந்ததும் நடந்தவை. அப்போது இரண்டோ மூன்றோ நாளிதழ்களில் கிடைப்பதாக இருந்த  ஆதாயம் உள்ள வேலை வாய்ப்புகளைப் பற்றி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தேன். அவற்றில் ஒன்று விரைவில் கிடைப்பதாகவும் இருந்தது. நான் ஒரு வேலையில் சேரும் வரை நந்தா அவளுடைய தகப்பனார் வீட்டிலேயே இருக்கட்டும் என்று முடிவு செய்திருந்தோம். பேச்சு வார்த்தை பலனளிக்குமென்று தெரிந்ததும் அவளைக் கல்கத்தாவுக்கு அழைத்து வரலாம் என்று யோசித்திருந்தேன். எங்கள் வாடகை வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிப்பது என்று அவளுடன் பேசி விரிவாகத் திட்டமிட்டு விட்டுக் கல்கத்தா திரும்பினேன். நந்தா அவளுடைய தகப்பனாருடன் கிராமத்திலேயே இருந்தாள். நான் கடைசியாக ஒரு வேலையில் சேர்ந்தேன். நான் பேசிவைத்திருந்த வேலைகளில் ஒன்றல்ல அது. நான் ஒருபோதும் நினைத்தே பார்த்திராத வேலை. ஷூ விற்பனைக் கடையில் சேல்ஸ்மேன் வேலை. என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களில் ஒருவருடன் வாடகையைப் பங்கு போட்டுக்கொள்ள ஒப்புக்கொண்டு, கஸ்பாவின் உட்பிரதேசத்தில் இருண்ட குளத்தின் கரையில் இரண்டு அறைகள் உள்ள  தகரக்கூரை வீட்டைப் பிடித்தேன். நந்தா அவள் தகப்பனார் வீட்டை விட்டுவிட்டு என்னுடன் வாழ வந்தாள். இருவரும் அருமை யாகத்தான் வசித்தோம். மற்ற எல்லாப் பெண்களுக்கும் இருப்பது  போலவே தற்போதைய சூழ்நிலைக்கு இசைந்து போகும் அபார திறமை நந்தாவுக்கும் இருந்தது. இதுபோன்ற வீட்டில் குடியிருக்க நேர்ந்தது பற்றி ஒருமுறை கூட அவள் புகார் சொல்லவில்லை. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தகரக்கூரை வேய்ந்த கஸ்பா வீட்டில் வசிக்க விரும்பியவள்போலக் காட்டிக் கொண்டாள். இந்த வீட்டுக்கு வந்த பின்பு ஒருமுறை கூட ஒப்பனை மேஜையைப் பற்றிச் பேசவில்லை. நானும் கிட்டத்தட்ட அதை மறந்து விட்டி ருந்தேன். இந்தச் சமயத்தில் ஒரு சனிக்கிழமை பிற்பகலில், மொடமொடப் பான வங்கித் தாள்களாகக் கிடைத்த மாதச் சம்பளம் அறுபது ரூபாயை எண்ணிப் பார்த்தபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். இதை வாங்கலாமா அதை வாங்கலாமா என்று நினைத்து எதையும் வாங்காமல் சாலையின் இரண்டு பக்கங்களிலும் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாம் ஒரு சபலம்தான். சட்டைப் பைக்குள் பணம் வைத்திருப்பது அருமையான உணர்வு தானே? திடீரென்று, கஸ்பா திருப்பத்துக்கு அருகில்  மிக அழகான ஒப்பனை மேஜையொன்றை ஏலம் விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். வேறு சில அறைகலன்களும் சகாய விலையில் ஏலமிடப்பட்டுக் கொண்டிருந்தன. ஒப்பனை மேஜைக் கண்ணாடியின் ஒரு மூலையில் மட்டும் சின்னதாக விரிசல் கண்டிருந்தது என்பதைத் தவிர முழுமையாகவே இருந்தது.  வெறும் முப்பது ரூபாய்க்கு கடைசி ஏலம் கூறப்பட்டது. அதனால் கவரப்பட்டு அந்த ஒப்பனை மேஜையை வாங்கினேன். அதைத் தலையில் சுமந்த கூலியாளுடன் வீட்டை நோக்கி நடந்தேன். முப்பது ரூபாய் வீட்டு வாடகை கொடுத்து விட்டால் எங்களிடம் மிஞ்சியிருக்கும் முப்பது ரூபாயை வைத்துக் கொண்டுதான் முழு மாதத்தையும் நகர்த்த வேண்டும். நான் நந்தாவின் முகத்தைக் காட்சியாகப் பார்த்தேன். அவள் என்னை மிகுந்த நம்பிக்கை யுடனும் கனவுகளுடனும் காதலித்தவள்.  அவளுடைய கனவுகளில் எதையும் என்னால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே அவளுக்காக முப்பது ரூபாயைச் செலவழிப்பதை நான் பொருட்படுத்தவில்லை.

ஒப்பனை மேஜையுடன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் நந்தா முழுவதுமாக வியந்து போனாள்.

கொஞ்ச நேரம் அதைச் சீராட்டிக்கொண்டிருந்த பிறகும் அவள் மிக மகிழ்ச்சி யுடனேயே தென்பட்டாள். காசைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கும் வேறு எந்தப் பெண்ணும் ஒப்பனை மேஜைக்காக நான் செலவழித்தது பற்றி குறைப் பட்டுக் கொண்டிருந்திருப்பாள். நந்தாவுக்கு பெருந்தன்மையான மனம் இருந்தது. அவள் கவிஞராக இல்லாமலிருந்தாலும்  ஒரு கவிஞனின் மனைவியாக இருக்கப் பொருத்தமானவள்.நந்தா ஒப்பனை மேஜை முன்னால் உட்கார்ந்து கூந்தலை விதவிதமாகப் பின்னினாள்; சேலை மாற்றினாள்; நெற்றிவகிட்டில் பொட்டுவைத்தாள்;முக்காட்டை இழுத்துவிட்டுக் கொண்டாள்; காரணமே இல்லாமல் சிரிக்க ஆரம்பித்தாள். மகிழ்ச்சியுணர்வுடன் படுக்கையில் கிடந்திருந்த நான் எப்போது தூங்கிப் போனேன் என்று தெரிய வில்லை. எங்கள் உடன்போக்கு நாட்களைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்தேன். வாழ்க்கை மிக நிறைவானதாகத் தோன்றியது. சட்டென்று நந்தாவின் அழைப்பைக் கேட்டு விழித்தேன். அவளுடைய கண்கள் வீங்கிச் சிவந்திருந்தன. கன்னங்களில் கண்ணீர் உருண்டு இRறங்கிக் கொண்டி ருந்தது; உடல் குலுங்கிக் கொண்டிருந்தது.

’’நந்தா என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்?’’

”இந்த டிரெஸ்ஸிங் டேபிளை நீங்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள். அது எனக்கு வேண்டாம்’’

முகத்தைத் தலையணையில் புதைத்துக்கொண்டு மறுபடியும் அழத் தொடங் கினாள்.

பழைய உருப்படி என்பதால் அவள் அவமானம் அடைந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் புதிய ஒன்றை வாங்க எனக்கு வசதி இல்லையே? அவள் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைத்தேன். எல்லா வற்றுக்கும் மேலாக அந்த ஒப்பனை மேஜை கிட்டத்தட்டப் புதிதாகவேதான் தெரிந்தது.

“நந்தா, நான் சொல்வதைக் கேள்”

“இல்லை, இது எனக்கு வேண்டாம். திருப்பிக் கொடுத்து விடுங்கள்”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நந்தா அவளுடைய அற்ப அகங்காரத்தைக் காட்டுகிறாள் என்று தோன்றியது.என்னுடைய உணர்ச்சிகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்காதவளாகத் தென்பட்டாள்.

“ சரி, நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்’’

அவள் மெதுவாக எழுந்து போனாள். சிறிது நேரத்துக்குப் பிறகு திரும்பி வந்தாள். ஒரு கட்டுக் கடிதத்தை என் மடிமேல் போட்டு விட்டு ‘’இதைப் படியுங்கள்’’ என்றாள்.வங்காளியில் எழுதப்பட்ட நான்கு கடிதங்கள் நீலநிற உறைகளுக்குள் இருந்தன.

” யாருடைய கடிதங்கள்? இதெல்லாம் உனக்கு எங்கிருந்து கிடைத்தன?

‘’டிரெஸ்ஸிங் டேபிள்  இழுப்பறைக்குள்ளேதான்  இதெல்லாம் இருந்தன’

நான் அந்தக் கடிதங்களை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தேன். ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்கினேன். இனம்புரியாத பயத்தில் என் கைககள் நடுங்கிக் கொண்டிருந்தன. தேதி வாரியாகக் கடிதங்களை வரிசைப்படுத்தினேன்.


                                 கடிதம் 1

பாகர்ஹட்

என் அன்பே, இன்று இரவு பன்னிரண்டு மணிக்கு இங்கே வந்து சேர்ந்தேன். நாம் பிரிந்து யுகங்கள் ஆகிவிட்டாற்போலத் தோன்றுகிறது. நேற்று இதே நேரத்தில் நாம் ஒன்றாக இருந்தோம் என்பதை யோசிக்கும்போது எனக்குத் துக்கமாக இருக்கிறது.

இந்த இடம் நகரத்திலிருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது. அமலை உனக்கு ஞாபகமிருக்கிறதா? அவன் இங்கே ஒரு கல்லூரியில் கற்பித்துக் கொண்டிருக் கிறான். நாளை அவனைப் பார்க்கப் போகிறேன். அவனுடன்தான் தங்க இருக்கிறேன். ரயில் பயணம் அவ்வளவு அலுப்பூட்டுவதாக இருக்கவில்லை. ஆனாலும் எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. ரயிலில் விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்தது. என்னுடன் ஒரு குடும்பமும் பயணம் செய்தது. முதிர்ந்த மனிதர் ஒருவர், அவர் மனைவி. கூட அவர்களுடைய மகனும் இரண்டு மகள்களும். போஷாக்கான குழந்தைகள், சிரிப்பு மாறாத அன்பான  பெரிய மனிதர், சம்பிரதாயமான வங்காளி அம்மா என்று மிக அருமையான குடும்பம். அவர்கள் துணையை நான் மிகவும் அனுபவித்தேன். என்னுடைய ஸ்கெட்ச் புத்தகத்தை எடுத்து வைத்து வழியோர நிமிடங்களை வரைய ஆரம்பித்தேன். நான் அந்தக் குடும்பத்தைத்தான் வரைகிறேன் என்பதை சிறுமிகளில் ஒருத்தி கவனித்தாள். அதை  சகோதரியிடம் சொன்னாள். மொத்தக் குடுமபமும் உற்சாகமாகி விட்டது. பெரியவர் என்னுடைய ஓவியத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினார்.

“ நிஜமாகவா? எங்களை எப்படி வரைந்திருக்கிறீர்கள் என்று பார்க்கிறேனே? ஆஹா, என்ன ஆச்சரியம்? அரே, நீங்கள் ஒரு மாந்திரீகன் “

அவருக்கு என்னுடைய ஓவியங்கள் மிகவும் பிடித்துப் போயிருந்தன. ரயிலில் எதையெல்லாம் வாங்கினாரோ அதை எனக்கும் சாப்பிடக்கொடுத்தார்.

“அரே, இந்த வங்காளிகள் ஏன் இவ்வளவு பின் தங்கி இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? கலைஞர்களை எப்படி மதிப்பது என்று  அவர்களுக்குத் தெரியாது. அதனால்தான் இப்படி இருக்கிறார்கள். ஒரு காலத்தில் எனக்கும் இதிலெல்லாம் விருப்பம் இருந்தது. இசை வட்டாரத்தில் நான் பெயரைச் சம்பாதித்திருக்கிறேன். இதை எடுத்துச் சாப்பிடுங்கள். கூச்சப் பட வேண்டாம்”.

அவர் கொடுத்ததை எல்லாம் நான் சாப்பிட வேண்டியிருந்தது. மனிதர் பதிலுக்காக ஒருபோதும் காத்திருப்பவர் அல்ல என்றும் அவருடைய விருப்பத்தை மீற நம்மால் முடியாது என்றும் தோன்றியது.

“உங்களுக்குத் திருமணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன். நல்லது, ஒரு போதும் அந்தப் பொறியில் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள்; உங்கள் வாழ்க்கையே பாழாகி விடும்”

எனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று சொல்ல இருந்தேன். ஆனால் அதற்கு வாய்ப்பே தராமல் அவர்  கேட்டார்: ” நீங்கள் ஏன் என் பெண்களுக்கு ஓவியம் வரையக் கற்றுக் கொடுக்கக்கூடாது? நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அதை நான் கொடுக்கிறேன். நீங்கள் கல்கத்தாவில் இருப்பதனால் பீதான் தெருவிலிருக்கும் எங்கள் வீட்டுக்கு வரலாம். எங்கள் வீட்டுக்கு வரவேண்டும். ஹசி, குஷி, உங்களுக்குச் சந்தோஷம்தானே? உங்களுக்கு ஒரு ஆசிரியரை எப்படிப் பிடித்தேன் பார்த்தீர்களா?’

இதில் எதற்கும் பதில் சொல்ல எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இரண்டு சகோதரிகளும் ‘’நிஜமாகவே எங்கள் வீட்டுக்கு வருவீர்களா?“ என்று கேட்டார்கள்.

‘’ ஓயெஸ், நிச்சயம் வருகிறேன்” என்றேன்.

இதற்கு இடையில் சிறுவன் என் பைக்குள் கையைவிட்டு ஆல்பத்தை வெளியே எடுத்தான். விரலில் எச்சிலைத் தொட்டுக்கொண்டு அதன் பக்கங் களைப் புரட்டினான்.

‘’ கோக்கா, விஷமம் செய்யாதே. அதைத் திரும்ப வை’’ என்று அவன் அம்மா திட்டியதைப் பொருட்படுத்தவில்லை.

“இல்லை, வைக்க மாட்டேன். மாஸ்டர் மொஷாய் அதைப் பார்க்கச் சொல்லி யிருக்கிறார். நீங்கள் என்னைப் பார்க்கச் சொன்னீர்கள்தானே?”

‘’ஆமாம். ஆமாம். நான்தான் அவனை ஆல்பத்தைப் பார்க்கச் சொன்னேன்’’

அந்தக் கனவான் குடும்பத்துடன் ராணாகாட்டில் இறங்க வேண்டும். நான் என்னுடைய பையிலிருந்து டிபன் பாக்ஸை எடுத்தேன். நீ செய்த லூச்சியை அவர்களுக்குக் கொடுத்தேன். வாடகைச் சட்டம், காமன்வெல்த் என்று இன்றைய நாட்டு நடப்புகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இறங்குவதற்கு முன்பாக கனவான் என்னிடம் ’’அரே, உங்கள் பெயர் என்ன? உங்கள் பெயரையும் முகவரியையும் குறித்துக்கொள்ள மறந்துவிட்டேன். சொல்லுங்கள்,எழுதிக் கொள்கிறேன்’’ என்று சொல்லி விட்டு ஒரு காகிதத் துண்டையும் பேனாவையும் எடுத்தார். நான் என் பெயரைச் சொன்னேன். ஆனால் அதை அவர் சரியாகக் கேட்டுக் கொள்ளவில்லை. திரும்பச் சொன்னேன். ‘ரஹீமுத்தீன் சவுதுரி’.

’’என்ன?’’

’’ரஹீமுத்தீன் சவுதுரி’’

‘’ஓ’’

அவர் எழுதினார். ஆனால் அவருடைய விரல்கள் நடுங்கின. சங்கடத்தைத் தொண்டைக்குள்ளேயே விழுங்கிக் கொண்டு “ ஓ, நல்லது. தோற்றத்தை வைத்து ஆட்களைப் புரிந்துகொள்வது சிரமமாகத்தான் இருக்கிறது, நீங்கள் பார்க்க வங்காளிபோலவே இருக்கிறீர்கள்’’ என்றார்.

பார்க்க வங்காளிபோல இருக்கிறீர்கள்! ‘’ பிறகு, நீங்கள் வேறு என்ன நினைத்தீர்கள், நான் ஒரு பஞ்சாபி என்றா? ‘’ என்று அவரிடம் கத்திச் சொல்ல விரும்பினேன். ஆனால் என்னால் பேச முடியவில்லை.

சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்துவதற்காக இரண்டு சிறுமிகளும் ‘’ பீதான் தெருவிலிருக்கும் எங்கள் வீட்டுக்கு வர மறந்து விடாதீர்கள்’’ என்று புன்னகைத்துக் கொண்டே சொன்னார்கள். நானும் புன்னகைக்க முயன்றேன்.

ரயில் மீண்டும் புறப்பட்டது. சிறுவனின் கையிலிருந்த லூச்சியை அவன் அம்மா பிடுங்கி எறிவதை என்னால் பார்க்க முடிந்தது. ‘’இது மரியாதை அல்ல. எனக்கு இழைக்கப்பட்ட அநீதி’ என்று கதறி அழுது பெட்டியில் இருந்த மக்களிடம் சொல்ல விரும்பினேன். ஆனால் யாருக்கும் எதுவும் தெரியாது.

அமைதியாக உட்கார்ந்தேன். என்னுடைய நாள் நாசமாகிப் போயிற்று. எல்லாவற்றையும் என்னால் இப்போது நினைவுபடுத்திக் கொள்ள முடிய வில்லை. இல்லை, நான் அதை நினைக்கவே விரும்பவில்லை. ‘’பீதான் தெருவிலிருக்கும் எங்கள் வீட்டுக்கு வர மறந்து விடாதீர்கள்’’ என்ற அந்தச் சகோதரிகளின் வார்த்தைகளை அவ்வப்போது நினைத்துக் கொள்வேன். ‘’இல்லை, மறக்க மாட்டேன். நீங்கள்தான் புதிய வங்காளம். உங்களை எதிர் பார்த்துத்தான் நாங்கள் நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’’ என்று மனதுக்குள் பதில் சொல்லிக் கொண்டேன்.

சீக்கிரம் பதில் எழுது.

உனது

ரஹீம்

உறையின்மேல் பின்வரும் முகவரி இருந்தது.

ஆமினா சவுதுரி

உஜானிபாரா, ஹௌரா.


 

                                கடிதம் 2

பாகர்ஹட்

ஹௌரா.

அன்பே, இன்று காலை அமலின் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். வரும் வழியில் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். மொத்த நகரத்திலுமே பயங்கரமான அமைதி நிரம்பியிருக்கிறது. மக்கள் பேசும்போதுகூடத் தங்கள் குரலை உரக்க எழுப்ப அஞ்சுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் நடுவில் முட்டாள்தனமாக உணர்கிறேன். சூழ்நிலையை முழுதாகப் புரிந்துகொள்வதற்கு முன்பே அமல் தன்னுடைய வேலையை ராஜினாமாச் செய்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அவர்கள் கல்கத்தா வருவதற்காக மூட்டைகட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்னை இங்கே எதிர்பார்க்கவில்லை. அமலின் மனைவி என்னைப் பார்த்ததும்  வெளிறிய புன்னகையைத்தான் உதிர்த்தாள்.

‘’என்ன விஷயம் அமல்? என்ன ஆச்சு பௌதி? கடைசியில் நீங்களும் போகிறீர்களா?

பௌதி புன்னகைக்க முயன்றாள். “தாகூர்போ, இனிமேல் எங்களை உங்கள் நாட்டில் வசிக்க அனுமதிக்க மாட்டீர்களே?’’ என்றாள்.

“எங்கள் நாடா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அனிலின் ஊர் குல்னா. என் ஊர் 24 பர்கானா. நீங்கள் இங்கிருந்து என் ஊருக்குத்தானே போகிறீர்கள்?”

”இனிமேல் அது அப்படியல்ல. இன்றுமுதல் இந்துக்கள் இந்துஸ்தானில் வாழ்வார்கள். முஸ்லிம்கள் பாகிஸ்தானில் இருப்பார்கள்”

அமல் எரிச்சலுடன் மனைவியிடம் ‘’நீ போய் உன் வேலையைப் பார்” என்றான்.

பௌதி மிச்ச சாமான்களை மூட்டை கட்டுவதற்காகப் போனாள். நான் அமைதியாக அமலைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அமலின் குட்டிப் பையன் புதிதாகத் தவழக் கற்றுக் கொண்டிருந்தான். தவழ்ந்து வந்து அப்பாவின் கால்களைப் பிடித்து எழுந்து நிற்க முயன்றான். கீழே விழுந்ததும் அழ ஆரம்பித்தான். எவ்வளவு அருமையான குழந்தை. ஆனால் இவை எதையும் அமல் கவனிக்கவில்லை.

“ரஹீம், உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்”

“சொல்லு, நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்’’ என்றபடி குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டேன்.

அமல் என்னிடம் சொன்னது ஏறத்தாழ இதுபோலத்தான்:

நகரத்திலிருந்து கொஞ்ச தூரத்திலிருக்கும் நாமசூத்திரர்கள் கிராமத்தில் பெரும் கலவரம் நடந்திருக்கிறது. நாமசூத்திரர்கள் பெரும்பாலும் விவசாயி களும் மீனவர்களும்தான். கொஞ்ச காலமாகவே ஜமீன்தாரின் சுரண்டல் களுக்கு எதிராக ஒன்று திரண்டு கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தலைவர்கள் இரண்டு பேரைக் கைது செய்வதற்கான உத்தரவை போலீஸ் சமீபத்தில் பெற்றிருந்தது. தலைவர்களில் ஒருவர் இந்து. மற்றவர் முஸ்லிம். அவர்களைக் கைது செய்வதற்காகக் கிராமத்துக்குள் நுழைந்தபோது கிராம வாசிகள் போலீசைத் திரும்பிப் போகச் சொல்லியிருக்கிறார்கள். அமைதியான இறைஞ்சல் வேலைக்கு உதவவில்லை என்று தெரிந்ததும் அவர்களை அடித்து கிராமத்தை விட்டு விரட்டியிருக்கிறார்கள். இது நடந்து வெகு சீக்கிரத்திலேயே ஆயுதம் தாங்கிய போலீஸ் படையும் குண்டர்களின் தனிப்  படையும் சேர்ந்துவந்து கிராமத்தைச் சூறையாடின. ஆண்களையும் பெண்களையும் கொடூரமாகச் சித்ரவதை செய்தன. அவர்கள் மக்களின் அற்ப உடைமைகளையும் பறித்துக் கொண்டார்கள். கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். கிராமவாசிகள் வெளியேறத் தொடங்கினார்கள். ஏழைக் கிராமவாசிகளின் நிராதரவான புலம்பல் காற்றில் குடியேறியது. இதற்கு இடையில் எல்லா இந்துக்களும் பாகிஸ்தானின் எதிரிகள் என்றும் அதனால் அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்றும் வதந்தி பரவியது. குண்டர்கள் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு கடைகளைக் கொள்ளை யடித்தார்கள். தீவைத்தார்கள். பிரதான சாலையில் போன இந்துக்களை அச்சுறுத்தினார்கள்.’

“உனக்கு அன்வரை நினைவிருக்கிறதா? அந்தப் பொறுக்கிதானே கல்லூரியில் படிக்கும்போது உன்னைப் பார்த்து ஆபாச சைகைகள் காட்டினவன்.பங்கு மார்க்கெட் வியாபாரத்தில் பங்குதாரரை ஏமாற்றி விட்டுப் பாகிஸ்தானுக்குத் திரும்பி வந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டேன். அவன்தான் இப்போது இங்கே இருக்கும் குண்டர்களுக்குத் தலைவன்”’. அந்தப் பொறுக்கிமேல் எனக்கு ஆத்திரம் வந்தது.அவனைப் பார்க்க நேர்ந்தால் தலையை வெட்டுவேன்”.

அமல் போகப்போகிறான். இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளை அல்லது இன்னொரு நாள். அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. அவனுடைய அநாதரவான நிலைமையை நான் அவமான மாக உணர்ந்தேன். இதைப் பற்றி எல்லாம் யோசித்து எனக்கு வருத்தமாக இருந்தது. இங்கே எனக்கு யாரையும் தெரியாது. எனக்கு அறிமுகமாகியிருந்த ஒரு மாணவனைச் சந்தித்தேன். அவர்கள் ஒரு அமைதிக் குழுவை ஏற்படுத்தி யிருக்கிறார்கள். வாழ்க்கை அசைவற்றுப் போயிருந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் நான் டாக்கா போய்ச் சேர வேண்டும். அங்கே ஏதாவது வேலை தேட வேண்டும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்க வேண்டும். மக்களை நெடுங்காலத்துக்கு வழி தவறச் செய்ய முடியாது. கடைசியில் மனித குலத்துக்குத்தான் வெற்றி கிடைக்கும். இந்த நம்பிக்கையுடன்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இங்கே இருக்கும் உண்மையான நிலவரத்தை மற்றவர்களிடம் எடுத்துச் சொல்…

உனது

ரஹீம்


                                 கடிதம் 3

டாக்கா

அன்பே,

உன் கடிதம் கிடைத்த பின்பு நான் மிகவும் சஞ்சலம் அடைந்திருக்கிறேன். குல்னா சம்பவம்பற்றி கல்கத்தாச் செய்தித்தாள்கள் தவறாகத் தெரிவித் திருந்தால் அதன் விளைவு பேரழிவாக இருக்கும். செய்தித்தாள்கள் உருவாக்கி விட்டிருக்கும் அசுரன் ஒருநாள் நிச்சயம் அவற்றையே அழிக்கும். ஒரு கலவரத்தைத் தாங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் தொடங்கவும் முடிக்கவும் முடியும் என்பது செய்தித்தாள்களுக்கு நிச்சயமாகத் தெரியும். மக்களிடையே அவநம்பிக்கையும் சந்தேகமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிச்சயமற்ற காலத்தில் பயந்து போயிருக்கும் மக்களின் முகங்களில் சோகத்தைப் பார்க்க முடிகிறது. ஏதாவது ஒரு சக்தி இதைக் புரட்டித்தள்ளி விட்டு மனிதாபிமானத்தின் கொடியை உயரப் பறக்க விடாதா என்று ஏங்குகிறேன். ஆனால் எங்கே இருக்கிறது அந்த சக்தி? ஏதாவது அரசுத் துறையில் எனக்கு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் ஒரு வங்காளி என்பதையே கிட்டத்தட்ட மறந்து விட்டேன். நான் சொந்தக் காசைச் செலவழித்து உருது கற்றுக் கொண்டது உனக்கு நினைவிருக்கிறதா? அதற்குக் காரணம் நான்  உருது இலக்கியத்தை நேசித்தேன்  என்பதுதான். ஆனால் உருதுமொழி ஒரு முறை கேட்டுக்குக் கருவியாகுமென்றால், நமது கலாச்சாரத்தின்மேல் உருது ஆதிக்கம் செய்யுமென்றால் அதைக் கைவிடுவதுதான் நல்லது. மற்றவர்கள் என்னிடம் பேசும்போது, அவர்களுக்குப் புரிந்தாலும் இல்லாவிட்டாலும் நான் வங்காளியிலேயே பதில் சொல்கிறேன். இந்தச் சூழ்நிலையில் ஏதாவது வேலை கிடைக்கும் என்பதற்கான நம்பிக்கை அதிகமில்லை என்பது உனக்குப் புரியும்.

நீ ரபீந்திரசங்கீத வகுப்புகளுக்குப் போவதை நிறுத்தும்படிக் கட்டாயப் படுத்தப்பட்டதை நினைத்து நான் சோர்ந்திருக்கிறேன். உன்னைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டு போகிறவர்களுக்கு ரபீந்திர சங்கீதம் கற்றுக் கொள்ள எந்த உரிமையும் இல்லை என்று நான் நம்புகிறேன். ஆனாலும் அவர்கள் மேலான நம்பிக்கையை இழக்க வேண்டாம். அவர்கள் இல்லாமல் உன்னால் இருக்க முடியுமா? இந்த துரதிர்ஷ்ட தேசத்தின் மீது கவிந்திருக்கும் சாபம் இன்னும் விலகவில்லை. எப்படி அந்த துரதிர்ஷ்ட வட்டத்துக்கு வெளியில் நாம் மட்டும் இருக்க முடியும்? அன்பே, மனிதாபிமானம் மறுபடியும் நிலைக்கும்போது பூமியின் மீதிருக்கும் கழிவுகளைத் துடைத்து அகற்றும்  நெருப்பாகப் படர விரும்புகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு உள்ளூர் கல்லூரியில் வேலை செய்யும் ஒரு பண்டிட்டைச் சில பொறுக்கிகள் பிரதான சாலையில் வைத்து அவமானப் படுத்தினார்கள். அவருடைய குடுமியை வெட்டி, அவரை மாட்டிறச்சியைத் தின்னக் கட்டாயப்படுத்தினார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்று நீ எப்போதாவது கற்பனை செய்திருக்கிறாயா? நான் உள்ளூர் தலைவர்களிடம்  ‘’உங்கள் கண்முன்னாலேயே இப்படியெல்லாம் நடக்க நீங்கள் எப்படி அனுமதித்தீர்கள்? நீங்கள் எல்லாம் இன்னும் உயிரோடு இருப்பதாகத்தான் நினைக்கிறீர்களா? ‘ என்று கேட்டேன். அவர்கள் “நாங்கள் என்ன செய்ய? போலீஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறது. அவர்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன. அவர்களை எதிர்ப்பவர்கள் எல்லாரையும் பாகிஸ்தானின் எதிரிகள் என்று சொல்லி அச்சுறுத்துகிறார்கள். எதிர்ப்பவர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். அவர்களைக் கொல்கிறார்கள்” என்றார்கள். நமக்கெல்லாம் முதுகெலும்பே இல்லையோ என்று சமயங்களில் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இருக்குமானால் சில பொறுக்கிகளைக் களை எடுப்பது அவ்வளவு கடினமானதா என்ன? உண்மையான மனிதர்களை விடக் களைகள் தான் அதிகமாக இருக்கின்றன. ஆனாலும் அதை நம்பச் சிரமமாகத்தான் இருக்கிறது.

அன்பே, இங்கே நான் உற்சாகமாக இல்லை, இங்கே வந்ததே தவறு. நீயில்லாமல் ஒரு நொடிகூட அதிகமாக என்னால் இங்கே வாழ முடியாது. என் வேலை நாசமாகப் போகட்டும். ஒன்றிரண்டு நாட்களுக்குள் வீட்டுக்குப் புறப்படப் போகிறேன். அமலிடமிருந்து கடிதம் வந்தது. அவர்கள் நாளை புறப் படுகிறார்கள். கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்த்தும் உன்னைச் சந்திப்பதாக அவன் எழுதியிருக்கிறான். அவர்கள் தங்குவதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடு. நாம் எப்படியாவது சமாளிப்போம்.

உனது ரஹீம்

[ அடுத்த கடிதம் இருபது நாட்களுக்குப் பிறகு எழுதப்பட்ட்து. இதற்கு முன்பும் அவன் வேறு கடிதங்களை எழுதியிருக்கலாம். ஆனால் என்ன காரணத்தாலோ அவை காணப்படவில்லை ]

 

கடிதம் 4

மினா,

வெகு விரைவில் நான் பைத்தியமாகிவிடுவேன். கடந்த ஏழு நாட்களாக என்னால் ஒரு நொடிகூடத் தூங்க முடியவில்லை. கிறுக்கனைப்போல நகரத்தைச் சுற்றி அலைந்துகொண்டிருந்தேன். மனித இனம் என்ற ஒன்றே இனிமேல் இல்லை என்பதுபோலத் தோன்றியது. மிருகத்தனத்தின் நடனம் மட்டுமே அரசாட்சி செய்கிறது. எங்கேயும் மக்களின் கதறலைத்தான் உன்னால் கேட்க முடியும். கோரமான விளையாட்டின் ஓசையைத்தான் கேட்க முடியும். கடந்த ஏழு எட்டு நாட்களாக உன்னிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை. ஆயிரக் கணக்கான அகதிகள் இங்கே வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். கல்கத்தாவில் ஒரு முஸ்லிம் கூட உயிருடனில்லை என்பதை அவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டேன். இந்தக் கணத்தில் அவர்கள் சொல்வது உண்மையா இல்லையா என்பதை யோசிக்க என்னால் முடியவில்லை. நீ எங்கே இருக்கிறாய்? உயிரோடு இருக்கிறாயா? இந்த நாட்களில் மனிதர்களுடன் பேசவே எனக்குப் பிடிக்கவில்லை. பதிலுக்கு சூரியனிடமும் மரங்களிடமும் மட்டுமே பேசுகிறேன். என்னுடைய ஆமினா நலமாக இருக்கிறாளா என்று அவற்றிடம்தான் கேட்கிறேன். நீ இருக்கும் இடத்தைப் பற்றி அவற்றிடமே கேட்கிறேன்.

அமலின் கடிதம் எனக்குக் கிடைத்தது. எல்லைப் பிரதேசத்தில் அவர்கள் தாக்கப்பட்டதாகவும் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் எழுதியிருந்தான். குண்டர்கள் பௌதியைக் கடத்திக்கொண்டு போயிருக்கிறார்கள். அமல் மட்டும் எப்படியோ குழந்தையுடன் ராணாகட்டுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறான். ‘என்னுடைய நிலைமையைப் பற்றி எழுதாமலிருப்பதே உத்தமம். ஆனால் இந்தச் செய்தி கல்கத்தாப் பத்திரிகைகளைப் போய்ச் சேராது என்று எனக்குத் தெரியும். உனக்கு எது பொருத்தமாகத் தோன்றுகிறதோ அப்படியே செய். நான் மனதாலும் உடலாலும் செயலற்றுப் போயிருக்கிறேன்’ என்று எழுதி யிருந்தான். நான் இப்போதே புறப்படுகிறேன். இதற்கு மேலும் இங்கே இருந்தால் நான் தற்கொலை செய்து கொண்டுவிடுவேன். பௌதியைத் தேட வேண்டும். நீ தெரிவித்த சில தகவல்கள் மேற்கொண்டு நகர எனக்கு வலிமையைக் கொடுத்திருக்கின்றன. மறுபடியும் எப்போது நான் உன்னைப் பார்க்கப் போகிறேனென்று தெரியவில்லை. பார்க்கத்தான் முடியுமா என்றும் தெரியவில்லை.

என்னுடைய கையறுநிலைக்கு என்னை மன்னித்து விடு. என் தேசத்தைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்று கர்வமாக நினைத்துக் கொண்டிருந்தேன். அந்தப் பெருமிதம் துண்டுதுண்டாகச் சிதறடிக்கப்பட்டு விட்டது. மனிதாபிமானத்தை உயர்த்திப் பிடித்ததில் மிருக வெறியைத் தவறாக எடைபோட்டு விட்டேன். மிருகவெறி அதன் பலத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறது. நீ எங்கே இருந்தாலும் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் கவனமாக இரு.

அன்பே, என்னால் உன்னை இழந்துவிட முடியாது. அமலின் பெருந்தன்மை எனக்கு இல்லை. நான் ஒரு சாதாரண ஆள்…

உனது ரஹீம்

 

வைதாம் அந்தக் கடிதங்கள். கடிதங்களைப் படித்த பிறகு ஓவியர் ரஹீமுத்தீனைத் தேடி ஹௌராவிலிருக்கும் உஜானிபாராவுக்குப் போய் விசாரித்தேன். சிலர் தங்களுக்குத் தெரியாது என்றார்கள். வேறு சிலர் ’இங்கே துலுக்கர்கள் யாரும் வசிக்கவில்லை’ என்றார்கள். கடைசியாக ஒரு பீடாக் கடைக்காரர் ஒற்றைத்தள வீட்டைக் காட்டினார். அந்த வீட்டில் இரண்டு அறைகளை வாடகைக்கு விட்டிருந்தார்கள். வீடு பாழடைந்திருந்த்து. வாசலிலும் ஜன்னலிலும் கதவுகள் இல்லாமலிருந்தன. கதவுகளின் இடத்தில் கோணிப்பையால் ஆன திரைகள் தொங்கின. யாரும் என் அழைப்பைக் கேட்கவில்லை. கோணித் திரையைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தேன். குழந்தைகளுடன் இருபது பெண்கள் இருந்தார்கள். சிலர் உட்கார்ந்து கொண்டும் சிலர் உறங்கிக் கொண்டும் இருந்தார்கள். நான் உள்ளே புகுந்ததும் அவர்கள் வெருண்டு போனார்கள். அந்த வீட்டைவிடப் பாழ்பட்டவர்களாக இருந்தார்கள் அவர்கள். ’ரஹீமுத்தின் சௌதுரி இங்கே குடியிருக்கிறாரா?” என்று அவர்களிடம் கேட்டேன்.

அவர்களில் எவருக்கும் ரஹீமுத்தின் சௌதுரியைப் பற்றி எதுவும் தெரிய வில்லை. அன்று காலைதான் அந்த வீட்டுக்கு வந்து குடியேறியிருக் கிறார்கள். கிழக்கு வங்காளத்திலிருந்து அகதிகளாக வந்திருக்கிறார்கள். நான்கு முறை அந்த வீட்டை விட்டு வெளியேறும்படி அவர்கள் அச்சுறுத்தப் பட்டதாகக் கேள்விப்பட்டேன், நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் அறைக்குள்ளே வந்தார். மற்றவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். இரண்டு பையன்கள் பொரி நிரம்பிய பிரம்புக் கூடையுடன் வந்தார்கள். பள்ளி மாணவர்கள்போலத் தெரிந்தார்கள். அவர்கள்தான் அகதிகளுக்கு அந்த வீட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள்; அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ரஹீமுத்தீனைப் பற்றிக் கேட்டேன். அவர்களில் ஒருவனுக்கு ரஹீமைத் தெரிந்திருந்த்து. ஆமினாவையும் தெரிந்திருந்தது. அவனுடைய அக்கா ரஹீமிடம் ஓவியம் கற்றுக்கொண்டிருந்தாள். அவன் அடிக்கடி அக்காவுடன் ரஹீமைப் பார்க்கப் போயிருக்கிறான். அந்தக் குடும்பத்தைப் பற்றியெல்லாம் அவன் சொன்னான்:

மாஸ்டர்மோஷெ பாகிஸ்தானில் இருப்பதாக்க் கேள்விப்பட்டேன். ஆமினாதி உயிரோடிருக்க முடியாது. ஒருநாள் இந்த அறை வெளியில் பூட்டப்பட்டு தீ வைக்கப்பட்டது. நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற நாங்கள் மிகவும் பாடுபட்டோம். ஆனால் முடியவில்லை. அப்போது எங்களைச் சுற்றி கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்துகொண்டிருந்த்து. பையனின் கண்களில் குளம் நிரம்பியது. நான் அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். எல்லாச் சுவர்களும் எரிந்து கருகியியிருந்தன. வீட்டின் அருகிலிருந்த வேப்பமரமும் பட்டுப்போயிருந்த்து. வீடு கொளுத்தப்பட்டதற்கான எல்லாத் தடயங்களும் இருந்தன. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்த்து. ஆமினா உயிரோ எரிக்கப்பட்டிருப்பாளென்றால் ஒப்பனை மேஜை மட்டும் எப்படித் தப்பியது? நான் அங்கே சென்று வந்ததை நந்தாவிடம் வெளிப்படுத்தவில்லை.

வீட்டின் கூடத்துக்கு அருகில் இருக்கும் சிறிய அறைக்குள் மேஜை இருந்தது என்று அந்தப் பையன் என்னிடம் சொன்னான். ஆமினா அந்த அறைக்குள் புகுந்து தப்பியிருக்கலாம். ஆனால் இப்போது அவள் எங்கே?

நந்தாவின் வற்புறுத்தலால்தான் இந்தக் கதையை எழுதுகிறேன். ஏதாவது பத்திரிகையில் கதை வெளியிடப்பட்டால், ஒப்பனை மேஜையை எடுத்துச் சொல்வதற்காக ஆமினா வருவாள் என்று நம்புகிறாள். ஒரு துணியால் கண்ணாடியைப் பொதிந்து வைத்திருக்கிறாள்.

ஒரு பிற்சேர்க்கை:

இந்தக் கதை இங்கே முடிகிறது. வாசகர்களிடம் இன்னொரு சம்பவத்தையும் எடுத்துக் காட்ட விரும்புகிறேன். அதற்கும் இந்தக் கதைக்கும் எந்தத் தொடர்புமில்லை. எனினும் இரண்டுக்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஏப்ரல் முதல் நாள் வங்காள நாளிதழ் ஒன்றில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்த்து. ’’ ஹௌரா ஸ்டேஷனை ஒட்டிய பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் திரிந்து கொண்டிருந்த ஒரு நபர் நேற்று கைதுசெய்யப்பட்டார். அவருடைய பையில் ஸ்கெட்சுகளும் பிரஷ் களும் இருந்தன. அவர் ஹௌரா ஸ்டேஷனையும் பாலத்தையும் வரைந்து கொண்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. பெயரைச் சொல்லும்படிக் கேட்ட போது பைத்தியக்காரன்போல நடித்த அவர் ‘ மனிதப் பிறவி’ என்றார்.

நாளிதழ் தலைப்பு இப்படி இருந்தது: ’பாகிஸ்தான் உளவாளி கைது’.

 

—————————-

சலீல் சௌதுரி :

ந்தியத் திரையுலகின் நிகரற்ற இசையமைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப் படுபவர் சலீல் சௌதுரி ( 1923 – 1995 ). மகத்தான் இசைக் கலைஞராகப்  பெற்றிருக்கும் புகழொளியில்  அவரது பிற ஆற்றல்கள் அதிகம் கவனத்துக்கு வராமற் போயிருக்கின்றன. சலீல்தா பன்முக ஆளுமையாகச் செயல்பட்டவர். பிளவுபடாத இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கலாச்சார அமைப்பான இப்டா ( Indian Peoples Theatre Association ) வில் பங்கேற்றுப் பணியாற்றியதன் மூலம் தனது பிற திறன்களை வெளிப்படுத்தவும் வளர்த்துக் கொள்ளவும் அவரால் முடிந்தது. இப்டா நாடகங்களுக்கு இசை  அமைத்திருக் கிறார். பாடல்களை எழுதியிருக்கிறார். அதேசமயம் வங்கமொழிப் பத்திரிகை களில் கட்டுரை, கதைகளையும் எழுதியிருக்கிறார்.

தேச விடுதலையை முன்வைத்து நடந்த பிரிவினை அந்தக் காலகட்டத்தின் மனிதாபிமானக் கலைஞர்கள் எல்லாரையும் ஆழமாகப் பாதித்தது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த வன்முறைகளும் மனிதர்களுக்கு நேர்ந்த மதிப்பிழப்பும் பகையும் அவர்களது படைப்புகளில் மையப் பொருள் ஆயின. நேற்றிருந்த வீடும் உறவுகளும் இன்று இல்லை என்று ஆன அவலத்தையும் முன் தினம் வரை ஒரு வயிற்றுப் பிள்ளைகளாகக் கூடிக் களித்தவர்கள் அடுத்த நாள் ஜென்மப் பகைவர்களாக மாறிய துயரத்தையும் பலரும் தமது படைப்புகளில் சித்தரித்தனர். சதத் ஹசன் மண்டோ, பீஷ்ம சஹானி, குஷ்வந்த சிங், கே எஸ் துக்கல் உள்ளிட்ட பலர் கதை, கவிதை, நாடகங்கள் வாயிலாக இந்தப் பேரவலத்தை எடுத்துக் காட்டினார்கள். அவர்களில் ஒருவராகவே எழுத்தாளர் சலீல் சௌதுரியையும் சேர்க்கலாம். சலீல்தா எழுதிய பல கதைகளும் பிரிவினையின் காயத்தையும் வலியையும் வடுவையும் சொல்பவை. ‘ஒப்பனை மேஜை ‘ அவற்றில் ஒன்று.

மலையாளப் பதிப்பாளரான நண்பர் அரவிந்தன் தமது அடையாளம் பப்ளி கேஷன் மூலம் கொண்டுவர விரும்பிய புத்தகங்களில் ஒன்று , இந்திய – பாகிஸ்தான் பிரிவினையை மையமாகக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. அதற்காக அவர் திரட்டிய கதைகளில் ஒன்று ‘ டிரெஸ்ஸிங் டேபிள்’.  கதையை ஆங்கிலத்திலிருந்து மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்தேன். வங்காள மொழியிலிருந்து கதையை ஆங்கிலத்தில் பெயர்த்தவர் மொஷரப் எச் கான்.  அவரது ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்தே மலையாள ஆக்கம் மேற்கொள்ளப் பட்டது. பதிப்பகம் மூடப்பட்டதால் புத்தகம் வெளியாகவில்லை. மலையாள மொழிபெயர்ப்புப்படியும்  கைநழுவிப் போயிற்று. கானின் ஆங்கில வடிவமே இந்தத் தமிழாக்கத்தின் மூலம்.