ஸாம்ஸாவின் காதல்

 

ஸாம்ஸாவின் காதல்  

ஹாருகி முரகாமி

தமிழில் : ஜி.குப்புசாமி

ஓவியம்  : அனந்த 

பத்மநாபன்

 

 

 

விழித்தெழுந்தபோது அவன் உருமாற்றமடைந்து கிரகோர் ஸாம்ஸாவாக மாறியிருப்பதைக் கண்டான். படுக்கையில் மல்லாந்து படுத்தபடி கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தான். வெளிச்சமின்மைக்குப் பழகிக்கொள்ள அவன் கண்களுக்குச் சற்று நேரம் பிடித்தது. அந்தக் கூரை சாதாரணமாக, எல்லா இடங்களிலும் இருப்பதைப் போல விசேஷ அலங்காரம் எதுவுமின்றி  இருந்தது. ஒரு காலத்தில் வெள்ளை அல்லது வெளிர் பால் நிறத்தில் வண்ண மடித்திருக்க வேண்டும்.  இப்போது புழுதியும் அழுக்கும் படிந்து புளித்துப்போன பாலின்  நிறத்துக்கு வந்துவிட்டிருந்தது. அலங்கார வேலைப்பாடுகளோ, தனித்து தெரிவதற்கான  அம்சங்களோ எதுவுமற்ற வெற்றுக்கூரை. எந்த சர்ச்சையும் இல்லை, எந்தச் செய்தியும் இல்லை. கட்டுமானக் கடமையை மட்டும் ஆற்றிக்கொண்டு  கூடுதலாக  எதற்கும் விழையாமல் இருக்கும்  கூரை.

அவனுக்கு இடப்புறத்தில் அறையின் ஒரு பக்கத்தில் உயரமான சன்னல் இருந்தது. ஆனால் அதன் திரைச்சீலைகள் அகற்றப்பட்டு கனமான பலகைகள் சன்னலின் சட்டகத்தில் அடிக்கப்பட்டிருந்தன. இந்த பலகைகளுக்கிடையில் வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ சுமார் ஒரு அங்குலத்துக்கு மட்டும் இடைவெளி விடப்பட்டிருந்தது. அதன் வழியே காலைச்சூரியன் புகுந்து தரையில் பிரகாசமான இணை கோடுகள் விழுந்திருந்தன. எதற்காக இந்த சன்னல் இப்படி முரட்டுத்தனமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது? பெரிய புயலோ, சூறைக்காற்றோ வரப்போகிறதா? அல்லது யாரும் உள்ளே வந்துவிடக்கூடாதென்று தடுக்கப்பட்டிருக்கிறதா? அல்லது யாராவது (ஒருவேளை நானோ?) இங்கிருந்து தப்பிவிடக்கூடாதென்பதற்காகச் செய்யப்பட்ட பாதுகாப்பா? மல்லாந்து படுத்திருந்த வாக்கிலேயே தலையைத் திருப்பி அறையை ஆராய்ந்தான். அவன் படுத்திருந்த கட்டிலைத் தவிர அறைக்கலன்கள் வேறெதுவுமில்லை.

இழுப்பறைகள், மேஜை, நாற்காலி, சுவரில் சித்திரங்கள், கடிகாரம், கண்ணாடி என்று எதுவுமே கண்ணில் படவில்லை. விளக்குகூட இல்லை. இருட்டுக் கம்பளி விரிப்போ, தரைவிரிப்போ இருக்கிறதாவென்று கீழே பார்த்தான். வெறும் பலகை தரை. சுவர்களில் சிக்கலான வடிவங்கள் கொண்ட சுவர்க் காகிதம். வெகு காலத்துக்கு முன் ஒட்டிய சுவர்க் காகிதமாக இருக்க வேண்டும். அறையின் மங்கிய வெளிச்சத்தில் அதில் பொறிக்கப்பட்டிருந்த வடிவங்களை இனம் காண முடியவில்லை. அந்த அறை ஒரு காலத்தில் சாதாரணப் படுக்கையறையாக இருந்திருக்க வேண்டும். இப்போது மனிதர்கள் வாழ்ந்ததற்கான எல்லா எச்சங்களும் துடைத்தழிக்கப்பட்டிருந்தது. மிச்சமிருந்த ஒரே விஷயம் அறையின் நடுவிலிருந்த கட்டில். அதிலும் மெத்தை இல்லை. படுக்கை விரிப்பு இல்லை. பஞ்சுறை இல்லை. தலையணை இல்லை. வெறும் புராதன பாய்விரிப்பு மட்டும்.

ஸாம்ஸாவுக்குத் தான் எங்கிருக்கிறோம், என்ன செய்யவேண்டும் என்று எதுவும் மனதில் இல்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம், தற்போது அவன் ஒரு மனிதனாக இருக்கிறான் என்பதும், அவன் பெயர் கிரகோர் ஸாம்ஸா என்பதும் மட்டுமே. இது மட்டும் அவனுக்கு எப்படித் தெரிந்திருக்கிறது? தூங்கிக்கொண்டிருக்கும்போது யாராவது அவன் செவிகளுக்குள் கிசுகிசுத்துவிட்டார்களோ? சரி, அப்படியானால் கிரகோர் ஸாம்ஸாவாக மாறுவதற்கு முன் அவன் எதுவாக இருந்தான்? என்னவாக இருந்தான்? இந்தக் கேள்வியை யோசிக்கத் தொடங்கியவுடனே அவன் தலைக்குள் கருப்புக் கொசுக்கூட்டம் போல ஏதோவொன்று சுழலத் தொடங்கிற்று. படலம் போலிருந்த அது அடர்ந்து, கெட்டியாகி, மூளையின் மென்மையான பகுதிக்கு நகர்ந்து ரீங்கரிக்கத் தொடங்கியது. ஸாம்ஸா யோசிப்பதை நிறுத்தினான். இப்போது எதைப்பற்றி யோசித்தாலும் தலைக்குள் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்குப் பாரமேறிவிடுமென்று பயந்தான்.

ஆனாலும், அவன் தன்னுடைய உடம்பை எப்படி அசைப்பது, இயக்குவது என்று கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கூரையைப் பார்த்துக்கொண்டே படுத்துக் கொண்டிருக்க முடியாது. இதே நிலையில் கிடப்பது ஆபத்தாக முடியும். உதாரணத்துக்கு வேட்டைப் பறவைகள் தாக்கத் தொடங்கினால் அவன் உயிருக்கு ஆபத்தாகிவிடும். முதற் கட்டமாக அவன் விரல்களை அசைக்க முயன்றான். அவை மொத்தம் பத்து இருந்தன. இரண்டு கைகளிலும் நீளநீளமாக ஒட்டியிருந்த அவற்றில் ஒவ்வொன்றிலும் பல மூட்டுகள் இருந்தன. அவை ஒருங்கிணைந்து சிக்கலான முறைகளில் அசைவதாக இருந்தன. இந்த விரல்களை அசைப்பதே பெரும் களைப்பை உண்டாக்கியது. உடல் முழுதும் மரத்துப்போனதைப்போல, பிசுபிசுப்பான, கெட்டியான திரவத்தில் உடம்பு மூழ்கியிருப்பதைப்போல, விரல்கள் சக்தியிழந்து போயின.

எனினும் தொடர்ந்து முயன்று, தோற்று, கண்களை மூடி மனதை ஒருமுகப்படுத்தி விரல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவது எப்படி என்று சற்றுநேரத்தில் கற்றுக்கொண்டான். விரல்கள் செயல்படத் தொடங்கியதும் அவன் உடலைப் பீடித்திருந்த உணர்ச்சியற்ற தன்மை மறைந்தது. அது வெளியேறிய இடத்தில் – கடலில் ஓதம் பின்வாங்கத் தொடங்கியதும் வெளிப்படுகின்ற பயங்கர, கரும்பாறைகள் போல – தாங்க முடியாத வலி ஒன்று வந்தது. சற்றுநேரம் கழித்துதான் அந்த வலி, பசி என்று ஸாம்ஸா உணர்ந்தான். உணவுக்காகத் துடிக்கும் இந்தக் கொடும்பசி அவனுக்குப் புதிது. இதைப்போல இதற்குமுன் அனுபவித்ததாக அவனுக்கு நினைவில்லை. ஏதோ ஒரு வாரமாக ஒரு கவளம்கூட வாயில் இறங்காததைப்போல.

அவன் உடம்பின் மையப் பகுதியே இப்போது உள்ளீடற்ற குழியாகிவிட்டதைப்போல. அவனுடைய எலும்புகள் முனகின; தசைகள் இறுகின; அங்கங்கள் முறுக்கின. வலியைப் பொறுக்க முடியாதவனாக, ஸாம்ஸா முழங்கைகளைக் கட்டிலில் அழுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து உட்கார முயன்றான். இம்முயற்சியில் முதுகெலும்பு  அங்கங்கே கிறீச்சிட்டு வெட்டி வெட்டி வலித்தது. ”கடவுளே, எவ்வளவு நேரமாக இதே நிலையில் படுத்துக்கிடந்திருக்கிறேன்? என்று ஸாம்ஸா நினைத்தான். ஒவ்வொரு அசைவுக்கும் அவன் உடல் எதிர்த்தது. விடாப்பிடியாக முயன்று, சக்தியனைத்தையும் பிரயோகித்து ஒரு வழியாக எழுந்து உட்கார்ந்துவிட்டான்.

ஸாம்ஸா குனிந்து தனது நிர்வாண உடலைப் பார்த்துத் திடுக்கிட்டான். எவ்வளவு அவலட்சணமான உடலமைப்பு! அவலட்சணம் என்பதைவிட மோசம் என்று சொல்லலாம். தற்காப்புக்காக எந்த அவயமும் இல்லை. வழுவழுப்பான வெள்ளைச் சருமம். (அங்குமிங்கும் மேலோட்டமாக சில முடிக்கற்றைகள்), மெல்லியதாக சிற்சில இடங்களில் தெரியும் பச்சை நரம்புகள்; மென்மையான, கவசமற்ற வயிறு, நகைப்புக்கிடமான, விசித்திர வடிவம் கொண்ட பாலுறுப்புகள், தளர்வான கைகள், கால்கள் (அதுவும் வெறும் இரண்டிரண்டு); ஒல்லியான, உடைந்து விடும்படியான கழுத்து; பெரிதாக அசட்டு வடிவத்தில் ஒரு தலையும் அதன் உச்சியில் கொத்தாக முடியும்; கடற் சிப்பிகளைப்போல அபத்தமாகத் துருத்திக் கொண்டிருக்கும் இரண்டு காதுகள். உண்மையில் இதுதான் அவனா? இப்படி முற்றிலும் ஒவ்வாத மிக எளிதாக அழிக்கப்படக்கூடிய (தற்காப்புக்காக ஓடு இல்லாமல், தாக்குவதற்காக ஆயுதங்கள் இல்லாமல்) அமைக்கப்பட்டிருக்கும் உடம்பால் உலகில் பிழைத்திருக்க முடியுமா? அவன் ஏன் ஒரு மீனாக உருமாற்றப்படவில்லை? அல்லது ஒரு சூரியகாந்திப் பூவாக? மீனாக, அல்லது சூரியகாந்தியாக இருந்தால் அதில் அர்த்தம் இருந்திருக்கும். இப்படிக் கிரகோர் ஸாம்ஸா என்ற மனிதாக இருப்பதைவிட மேலானதாக இருந்திருக்கும்.

உடம்பை இறுக்கிக் கொண்டு மெதுவாகக் கால்களைக் கட்டிலிலிருந்து கீழிறக்கித் தரையின்மேல் மெதுவாகப் பாதங்களைப் பதித்தான். மரத்தரையின் எதிர்பாராத குளிர்ச்சி அவனைத் திடுக்கிட வைத்தது. இறங்கும் முயற்சியில் இடறி விழுந்தான். பலமுறை தரையில் விழுந்து எழுந்தபின் கடைசியில் இரண்டு கால்களையும் சமப்படுத்தி, தாங்க முடியாத வலியோடு, கட்டிலின் சட்டகத்தை ஒரு கையால் இறுகப் பிடித்துக்கொண்டு நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அவனுடைய தலை கனத்து நிலையாக நிறுத்த முடியாதிருந்தது.  அக்குளிலிருந்து வியர்வைப்  பெருகி வழிய, அயர்ச்சியில் அவனது பாலுறுப்புகள் சுருங்கின. பலமுறை ஆழமாக மூச்சையிழுத்து விட்டதும் இறுகியிருந்த தசைகள் இளகத் தொடங்கின. நிற்பது பழக்கமானதும், நடக்கப் பழகிக் கொள்ள வேண்டியிருந்தது.

இரண்டு கால்களாலும் நடப்பதென்பது ஒருவித சித்ரவதையாக, ஒவ்வொரு அசைவும் வேதனைப் பயற்சியாக இருந்தது. எப்படிப் பார்த்தாலும் வலது காலையும் இடது காலையும் ஒன்றுக்குப் பிறகு ஒன்றாக முன்வைத்து நடப்பது என்பது எல்லா இயற்கை விதிகளையும் மீறிய வினோதச் செயலாக நினைத்தான். அதுமட்டுமல்லாது அவனுடைய கண்களுக்கும் தரைக்கும் இடையிலிருந்த அதலபாதாள தூரம் அவனை பயத்தில் சுருங்கவைப்பதாக இருந்தது. இடுப்பையும் முட்டி மடங்கல்களையும் அவன் ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் ஒரு அடி முன்வைக்கும்போது, கால் முட்டிகள் கட்டுப்பாடின்றித் துடித்தன. இரண்டு கைகளையும் சுவரில் தாங்கிப் பிடித்துக்கொண்டு நிதானப்படுத்திக் கொண்டான்.

இந்த அறையிலேயே நிரந்தரமாகத் தங்கியிருக்க முடியாது. சாப்பிட எதுவும் கிடைக்காவிட்டால், அதுவும் உடனே கிடைக்காவிட்டால், பசியில் கொதித்துக் கொண்டிருக்கும் அவன் வயிறு அவனுடைய சொந்த தசையையே ஜீரணித்துவிடும். அப்புறம் அவனும் இறந்துபோவான் என்று எப்படியோ அவனுக்குத் தெரிந்திருந்தது. சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டே கதவை நோக்கி மெதுவாக நகர்ந்து சென்றான். நேரத்தைக் கணக்கிடுவதற்கு வழியில்லாவிட்டாலும்கூட, வலியின் அளவை வைத்துப் பார்த்தால் கதவை அடையப் பல மணிநேரம் ஆனதைப்போலிருந்தது. அவனது நடை அலங்கோலமாக நத்தையின் வேகத்தில் இருந்தது. ஆதரவாக எதன் மீதும் சாய்ந்து கொள்ளாமல் அவனால் நடக்க முடியவில்லை. இதைப்போலத் தெருவில் நடந்து சென்றால் அவனை ஊனமுற்றவன் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்.

கதவின் தாழ்ப்பாளைப் பிடித்துத் திருகினான். அது அசையவில்லை. கதவைத் தள்ளிப்பார்த்தான். திறக்கவில்லை. அடுத்த முயற்சியாகத் தாழ்ப்பாளை வலதுபுறமாகத் திருகிக் கதவை உட்புறமாக இழுக்க, மெல்லிய முனகலோடு கதவு சற்றுத் திறந்தது. தலையை மட்டும் வெளியே நீட்டிப்பார்த்தான். நடைவழி வெறிச்சிட்டிருந்தது. ஆழ்கடலைப்போலக் கனத்த நிசப்தம். கதவு அனுமதித்த சற்று இடைவெளியில் இடது காலை நுழைத்து, வாசல் சட்டத்தை ஒரு கையால் பிடித்துக்கொண்டு உடம்பைக் கதவின்மேல் அழுத்தித் திறந்து வெளியே வந்தான். சுவரின் மேல் கையை ஊன்றிக்கொண்டே நடைவழியில் மெதுவாக நடந்தான்.

அந்த நடைவழியில் இவன் வெளியே வந்த வாசலைச் சேர்த்து நான்கு கதவுகள் இருந்தன. எல்லாமே ஒரே மாதிரியான, கருப்பு மரக்கதவுகள்.  அவற்றுக்குள்ளே இருப்பது யார் அல்லது எது? எல்லா கதவுகளையும் திறந்து பார்த்துவிடலாமாவென்று அவனுக்குத் தோன்றியது. ஒருவேளை அவன் தற்போது இருக்கும் மர்மமான சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் முடியலாம். அல்லது ஏதாவதொரு துப்புக் கிடைக்கலாம். எனினும், முடிந்தளவுக்குச் சத்தமெழுப்பாமல் ஒவ்வொரு கதவையும் தாண்டி வந்தான். வயிற்றை நிரப்ப வேண்டிய அவசியம் அவனது அறிந்துகொள்ளும் ஆர்வத்துக்குத் தடைபோட்டது. சாப்பிடுவதற்கு எதையாவது அவன் தேடிக் கண்டுப் பிடித்தேயாக வேண்டும்.

அது எங்கே கிடைக்கும் என்பதற்கு அவனுக்கு இப்போது துப்பு கிடைத்தது. சமைத்த உணவின் வாசனை. வாசனை வரும் தடத்தைப் பின்பற்ற வேண்டும்.  காற்றில் கலந்து வரும் நறுமணம் அவன் நாசிக்குள்ளிருக்கும் மோப்ப நரம்புகளுக்குக் கிடைத்த தகவல் மூளைக்குச் செலுத்தப்பட்டு அவனுக்குள் எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டது. மிக வலுவானதொரு இச்சை. அனுபவம் வாய்ந்த ஒரு சித்ரவதைக்காரனால் உள்ளுறுப்புகள் மெதுவாக முறுக்கப்படுவதைப்போல உணர்ந்தான். அவன் வாய்க்குள் எச்சில் சுரந்தது. இந்த உணவின் வாசம் வருமிடத்தை அடைய அவன் நெட்டுக்குத்தாக இறங்கும் படிக்கட்டுகளில் இறங்க வேண்டும். பதினேழு படிகள். சமதளத்தில் நடப்பதே பெரும்பாடாக இருப்பவனுக்கு இந்தப் படிக்கட்டுகளில் இறங்குவது நரக வேதனையாகத்தான் இருக்கப்போகிறது. கைப்பிடிக் கம்பியை இரண்டு கைகளிலும் பற்றிக் கொண்டு மெதுவாக இறங்கினான். ஒட்டி உலர்ந்திருந்த கணுக்கால்கள் அவனது எடையைத் தாங்க முடியாமல் புரண்டுவிடும் போலிருந்தன. சிற்சில முறை தடுமாறி விழப்போனான்.

படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும்போது ஸாம்ஸாவின் மனதில் இருந்தது என்ன? பெரும்பாலும் மீன்களும் சூரியகாந்திப் பூக்களும். ஒரு மீனாகவோ அல்லது ஒரு சூரியகாந்திப்பூவாகவோ என்னை உருமாற்றியிருந்தால் இதைப்போலப் படி ஏறி இறங்கி கஷ்டப்படாமல் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்திருப்பேன் என்பதுதான் நினைப்பாக இருந்தது. பதினேழு படிகளையும் இறங்கிக் கீழே வந்ததும் ஸாம்ஸா நிமிர்ந்து நின்றான். மிச்சமிருந்த சக்தியைச் சேகரித்துக்கொண்டு அந்தக் கவர்ந்திழுக்கும் நறுமணம் வருகின்ற திசையை நோக்கித் தட்டுத்தடுமாறிச் சென்றான். உயரமான மேற்கூரை கவிந்த முகப்பறையைத் தாண்டி, திறந்திருந்த உணவறைக்குள் நுழைந்தான்.

நீள்வட்டத்தில் அமைந்த ஒரு மாபெரும் உணவு மேஜையில் பல்வகையான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஐந்து நாற்காலிகள். மனிதர்கள் யாரும் இருப்பதற்கான அறிகுறியே காணப்படவில்லை. உணவுப் பாத்திரங்களிலிருந்து ஆவி வெண்ணிறத் திரிகளாக எழும்பிக் கொண்டிருந்தது. மேஜையின் நடுவில் கண்ணாடிக் குடுவையில் ஒரு டஜன் அல்லி மலர்கள். நான்கு இடங்களில் தட்டுகளும், முட்கரண்டி, கைக்குட்டைகளும் வைக்கப்பட்டிருந்தன. யாரும் அவற்றில் கைவைத்தாக தெரியவில்லை. சில நிமிடங்களுக்கு முன்புதான் சிலர் அங்கு காலை உணவுக்காக வந்த நேரத்தில் எதிர்பார்க்காத சம்பவம் ஏதோ நிகழ்ந்து, அவர்கள் அவசரமாக ஓடிவிட்டதைப்போலத் தோன்றியது. என்ன நடந்திருக்கும்? அவர்கள் எங்கே போயிருப்பார்கள்? அல்லது அவர்களைக் கடத்திச் சென்றுவிட்டார்களா? காலை உணவுக்காகத் திரும்பி வருவார்களா?

ஆனால், இதைப் பற்றியெல்லாம் யோசிக்க ஸாம்ஸாவுக்கு நேரமில்லை. பக்கத்திலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கைக்கெட்டிய தூரத்தில் இருந்த எல்லா உணவுப் பதார்த்தங்களையும் அருகில் இழுத்துக் கொண்டான். கத்தி, கரண்டி, முட்கரண்டி, கைக்குட்டை யாவற்றையும் புறக்கணித்து வெறும் கையாலேயே அள்ளிஅள்ளி வாய்க்குள் திணித்துக் கொண்டான். ரொட்டியைப் பிய்த்து ஜாம் வெண்ணை எதுவும் தடவாமல் வாயிலிட்டு மென்றான். கொத்திறைச்சியைக் கைநிறைய வழித்தெடுத்துத் தின்றான். வேகவைத்த முட்டைகளை அவசரத்தில் ஓடுகளைப் பிரித்தெடுக்காமலேயே எடுத்துக் கடிக்க முற்பட்டான். இன்னமும் சூடாக இருந்த உருளைக்கிழங்கு மசாலாவை அப்படியே வழித்துத் தின்றான். ஊறுகாய் பாட்டிலுக்குள் விரலைவிட்டு எடுத்து எல்லாவற்றுடனும் சேர்த்து மென்றான். ஜாடியிலிருந்த தண்ணீரை அப்படியே எடுத்துக்குடித்தான். ருசி உறைக்கவில்லை. உப்புச் சப்பில்லாமல் இருந்ததோ, சுவையாக இருந்ததோ, காரமோ, கசப்போ – எதையும் அவன் உணர்ந்திருக்கவில்லை. அவனுக்குள்ளே திறந்திருந்த அந்தக் காலியான படுகுழியை நிரப்புவதில்தான் அவன் கவனம் இருந்தது. மனதை முழுசாக ஒருமுகப்படுத்திச் சாப்பிட்டான். சாப்பிடும் மும்மரத்தில் விரலை நக்கும்போது கவனக்குறைவாகக் கடித்துவிட்டதில் வலியில் துடித்து கையை வீச, தட்டு தரையில் விழுந்து பதார்த்தங்கள் எங்கும் சிதறின. அதைக்கூட அவன் கவனிக்கவில்லை.

வயிறு நிறைந்ததும் ஸாம்ஸா நாற்காலியில் சாய்ந்து பெருமூச்செறிந்தான். மேஜையில் அநேகமாக எதுவும் மிச்சமிருக்கவில்லை. சாப்பிட்ட இடம் கந்தரகோலமாக இருந்தது. காக்கைகள் கூட்டமாக வந்து எல்லாற்றையும் கீழே இறைத்து சாப்பிட்டுவிட்டுப் பறந்துபோயிருப்பதைப்போல. கைபடாமலிருந்த ஒரே விஷயம் அந்த அல்லி மலர்கள் வைத்திருந்த ஜாடி. வயிறு நிறைந்திருக்காவிட்டால் அவற்றையும்கூடச் சாப்பிட்டிருப்பான்.

சற்று நேரத்துக்கு அப்படியே ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தான். மேஜையின்மீது கைகளைப் பதித்து, பாதி மூடிய கண்களின் வழியே அந்த அல்லிப்பூக்களை வெற்றாகப் பார்த்துக் கொண்டிருந்தான். சாப்பிட்ட உணவு, உணவுக்குழாய் வழியே ஜீரண மண்டலத்தை அடைந்து மெதுவாகச் செரிமானப் பணியைத் தொடங்கியதும், ஒரு திகட்டலான உணர்வு அலையாக எழும்பியது. உலோகப் பாத்திரம் ஒன்றிலிருந்த காபியை ஒரு வெண்ணிற பீங்கான் கோப்பையில் ஊற்றினான். காபியின் கூர்மையான மணம் அவனுக்கு எதையோ நினைவூட்டியது. அது நேரடியாக அவனை அடையவில்லை. பகுதி பகுதியாக அவனுக்குள் நுழைந்தது. விநோதமான உணர்வு அது.

எதிர்காலத்திலிருந்து நிகழ்காலத்தை நினைவுகூர்வதைப்போல. காலம் என்பது இரண்டாகப் பிளந்து, ஞாபகங்களும் அனுபவங்களும் ஒன்றையென்று தொடர்ந்தபடி சுழல்வதைப்போல. காபியில் தாராளமாகக் கிரீமைச் சேர்த்துக்கொண்டு விரலாலேயே கலக்கிக் குடித்தான். காபியில் சூடு இல்லாவிட்டாலும் கொஞ்சம் வெதுவெதுப்பு இருந்தது. காபியை வாயிலேயே சற்றுநேரம் வைத்திருந்து மெதுவாக விழுங்கினான். அது அவனைச் சற்று நிதானப்படுத்தியது.

திடீரென குளிராக உணர்ந்தான். பசியின் உக்கிரம் அவனது பிற உணர்ச்சிகளை இதுவரை மழுங்கடித்திருந்தது. இப்போது பசியடங்கியதும், காலை நேரக் குளிர் அவனை நடுங்கச் செய்தது. கணப்பு அணைந்துவிட்டிருந்தது. வெப்பமேற்றிகள் எதுவும் போட்டிருப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவன் முழு நிர்வாணமாக இருந்தான். காலணிகள்கூட அணிந்திருக்கவில்லை. அணிந்துகொள்வதற்கு எதையாவது தேடியெடுக்க வேண்டும் என்று உணர்ந்தான். பயங்கரமாகக் குளிர்கிறது. மேலும் அவன் இப்படி உடையில்லாமல் இருப்பதை யாராவது பார்த்தால் சிக்கலாகிவிடும்.

யாராவது கதவைத் தட்டலாம். அல்லது காலை உணவுக்காக உட்கார்ந்து எழுந்துச் சென்றவர்கள் திரும்பி வரலாம். இந்த நிலையில் அவனைப் பார்த்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று யாருக்குத் தெரியும்? அவனுக்கு இவையெல்லாம் புரிந்தது. இவற்றையெல்லாம் அவன் ஊகிக்கவோ அல்லது அறிவுப்பூர்வமாக சிந்தித்தோ தெரிந்து கொள்ளவில்லை. அவனுக்குத் தோன்றியது, அவ்வளவுதான்.

இத்தகைய அறிவு எங்கிருந்து வந்ததென்று ஸாம்ஸாவுக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவனுக்குள் சுழலும் ஞாபகங்களோடு தொடர்பு கொண்டதாக அது இருக்கக்கூடும். நாற்காலியிருந்து எழுந்து வெளியே முகப்புக் கூடத்துக்கு வந்தான். இன்னமும் அவன் தட்டுத்தடுமாறித்தான் நடந்துகொண்டிருந்தான் என்றாலும், அவனால் நிமிர்ந்து நிற்கவும், எதையும் ஊன்றிக் கொள்ளாமலும் நடக்க முடிந்தது. அந்தக் கூடத்தின் மூலையில் ஒரு துருப்பிடித்த நிலைமாட்டியில் பற்பல ஊன்றுகோல்கள் மாட்டப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து ஓக் மரத்தில் செய்யப்பட்ட ஒரு கருப்பு ஊன்றுகோலை எடுத்துக் கொண்டான். அதன் கைப்பிடியைப் பற்றியதுமே தன்னம்பிக்கை பிறந்தது. இனி ஏதாவது பறவைகள் வந்து தாக்கினால்கூட பாதுகாத்துக் கொள்ள ஆயுதம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். சன்னலுக்குச் சென்று, திரைச்சீலைகளின் இடைவெளி வழியே வெளியே பார்த்தான். அந்த வீடு ஒரு தெருவைப் பார்த்திருந்தது. பெரிய தெருவாகத் தெரியவில்லை. அதிகம்பேர் நடமாடவில்லை. ஆனால் எல்லோரும் முழுமையாக உடையணிந்திருந்தார்கள். அந்த உடைகள் பல்வேறு நிறங்களிலும் வடிவங்களிலும் இருந்தன. ஆண்களும் பெண்களும் வெவ்வேறு வகையில் உடையணிந்திருந்தார்கள். கெட்டியான தோலில் செய்த காலணிகள் அவர்களின் பாதங்களை மூடியிருந்தன. சிலர் பளபளப்பாக பாலீஷ் செய்யப்பட்ட காலணிகளை அணிந்திருந்தனர். சாலையில் பாவியிருந்த உருளைக்கற்களின் மீது நடக்கும்போது அந்தக் காலணிகள் எழுப்பும் ஓசையை அவனால் கேட்க முடிந்தது. பெரும்பாலான ஆண்களும் பெண்களும் தொப்பி அணிந்திருந்தனர்.

பாலுறுப்புகளை உடையால் மறைத்துக் கொண்டு இரண்டு கால்களையும் வீசி நடப்பது அவர்களுக்குப் பெரிய காரியமாக இல்லை போல. அந்தக் கூடத்திலிருந்த ஆளுயரக் கண்ணாடியில் தெரிந்த தனது உடம்பையும் வீதியில் செல்பவர்களையும் ஸாம்ஸா ஒப்பிட்டுப் பார்த்தான். கண்ணாடியில் தெரிந்தது ஒரு அலங்கோலமான, ஒல்லியான ஜந்து. அவன் வயிற்றில் குழம்பு சிந்தியிருந்தது.  அவனது பூப்பு மயிரில் ரொட்டித் துணுக்குகள் பஞ்சுப் பிசிறுகள் போல ஒட்டியிருந்தன. அவற்றைத் துடைத்துத் தள்ளினான்.

உடம்பை மறைக்க எதையாவது கண்டுபிடித்தே தீரவேண்டும் என்று மீண்டும் நினைத்துக் கொண்டான். பறவைகள் தென்படுகின்றனவாவென்று மறுபடியும் தெருவைப் பார்த்தான். பறவைகள் எதுவும் கண்ணில் படவில்லை. அந்த வீட்டின் தரைத்தளத்தில் கூடமும், சமையலறையும் வசிப்பறையும் இருந்தன. இந்த அறைகள் எதிலும் உடைகள்போலத் தோற்றமளிக்கும் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியானால் உடைகளைக் கழற்றுவதும், அணிவதும் வெறெங்கோ நடப்பனவையாக இருக்கலாம். ஒருவேளை இரண்டாம் தளத்திலுள்ள அறையில். ஸாம்ஸா திரும்பிவந்து படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினான். படிகளில் இறங்குவதைவிட ஏறுவது எவ்வளவு சுலபமாக இருக்கிறதென்று அவனுக்கு வியப்பாக இருந்தது. கைப்பிடிக் கம்பியைப் பிடித்தபடியே அந்தப் பதினேழு படிகளையும் முன்பைவிட வேகமாகவும், தேவையற்ற பயமோ வலியோ இல்லாமலும்,

அங்கங்கே சற்று நின்று (அதிகநேரம் எடுத்துக் கொள்ளவில்லை) ஆசுவாசப்படுத்தக் கொண்டு ஏறிவிட்டான். அவன் பக்கம் அதிர்ஷ்டம் இருந்ததென்றே சொல்ல வேண்டும். இரண்டாம் தளத்திலிருந்த எந்தக் கதவும் பூட்டியிருக்கவில்லை. அவன் செய்ய வேண்டியிருந்ததெல்லாம் ஒவ்வொரு கதவுக்கும் சென்று தாழ்ப்பாளைத் திருகி, கதவைத் தள்ள வேண்டியதுதான். எல்லா கதவுகளும் திறந்தன. மொத்தம் நான்கு கதவுகள்.

அவன் விழித்தெழுந்த அறையைப்போல உறைநிலையில் வெறும் தரையோடு இல்லாமல் எல்லா அறைகளிலும் அறைகலன்கள் நிறைந்திருந்தன. எல்லா அறைகளிலும் கட்டிலில் சுத்தமான மெத்தை, ஒப்பனை இருக்கை, எழுதுமேஜை, கூரையிலோ சுவரிலோ பொருத்தப்பட்ட விளக்கு, நுட்பமான வடிவங்கள் பின்னப்பட்ட தரைக்கம்பளங்கள், விரிப்புகள். அலமாரிகளில் புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தன. சுவரில் நிலக்காட்சிகளின் தைல ஓவிங்கள், எல்லா அறைகளிலும் கண்ணாடி ஜாடியில் புதிய, பிரகாசமான நிறப்பூக்கள். எந்த அறையிலும் சன்னலின் மேல் பலகைகள் ஆணியடித்து வைக்கப்பட்டிருக்கவில்லை. அந்த சன்னல்களில் ஜரிகை திரைச்சீலைகள் வழியே சொர்க்கத்திலிருந்து வரும் ஆசீர்வாதம் போல சூரியஒளி ஊடுருவி வழிந்திருந்தது. எல்லா படுக்கைகளிலும் யாரோ படுத்துத் தூங்கியிருந்த தடங்களும், தலையணைகளில் தலைகள் அழுந்திய பள்ளங்களும்.

அந்த அறைகளில் மிகப்பெரியதாக இருந்த அறையில் அவன் அளவுக்குச் சரியாக இருந்த கவுன் ஒன்றை அலமாரியில் கண்டெடுத்தான். அதை அவனால் எளிதாக அணிந்து கொள்ள முடியுமென்று தோன்றியது. மற்ற உடைகளைப் பற்றி – எப்படி அவற்றை அணிந்து கொள்வது என்று – எதுவும் தெரியவில்லை. அவை மிகவும் சிக்கலாக இருந்தன. எண்ணற்ற பொத்தான்கள் ஒரு குழப்பம் என்றால், அவற்றிற்கு எது முன்பக்கம், பின்பக்கம் என்றோ, எது மேல் பாகம், எது கீழ்பாகமென்றோ விளங்காமல் இருந்தது.

ஆனால் இந்த டிரெஸ்ஸிங் கவுன் எளிமையாக, அலங்காரமின்றி சுலபமாக இருந்தது. அதன் இலேசான, மென்மையான துணி அவன் சருமத்துக்கு இதமாக இருந்தது. அதன் கருநீல நிறத்துக்குப் பொருத்தமாக செருப்புகளும் ஸாம்ஸாவுக்குக் கிடைத்தன. அந்த டிரெஸ்ஸிங் கவுனுக்குள் உடம்பை நுழைத்துக் கொண்டான். பலமுறை முயன்று, தோற்று, ஒருவழியாக இடுப்பைச் சுற்றி நாடாவை இறுக்கிக் கட்டிக் கொண்டான். செருப்பையும் அணிந்துகொண்டு கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துக் கொண்டான் அந்தளவுக்கு ஒன்றும் கதகதப்பாக இல்லை. வீட்டுக்குள்ளேயே இருக்கும்வரை குளிருக்கு இந்த உடை இதமாக இருக்கும். அதைவிட முக்கியமாக வேட்டைப் பறவைகள் வந்து அவனுடைய மென்மையான தோலைக் கொத்துமோ என்ற கவலை தீர்ந்தது.

அழைப்பு மணி ஒலித்தபோது ஸாம்ஸா அங்கிருந்த மிகப்பெரிய அறையில் (மிகப்பெரிய கட்டிலில்) தூங்கிக்கொண்டிருந்தான். அந்த மெத்தென்ற படுக்கையில் கதகதப்பாகப் புதைந்திருந்தது முட்டைக்குள் கருவைப்போலச் சுகமாக இருந்தது. கனவிலிருந்து விழித்தான். அந்தக் கனவு தெளிவாக ஞாபகத்தில் தங்காவிட்டாலும் அது மிக இன்பமானவொன்றாக இருந்தது. அழைப்பு மணி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த வீட்டுக்குள் சுற்றிச்சுற்றி எதிரொலித்து அவனை நிஜஉலகிற்குள் இழுத்து வந்தது.

படுக்கையிலிருந்து தன்னைப் பிய்த்தெடுத்துக்கொண்டு, கவுனை இடுப்பில் இறுக்கி, கருநீல செருப்புகளுக்குள் பாதங்களைச் சொருகிக்கொண்டு கருப்புநிற கைத்தடியை எடுத்துக்கொண்டு படிகளில் கைப்பிடிக் கம்பியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டே இறங்கினான். முதல் முறையைவிட இப்போது சுலபமாக இருந்தது. இருந்தாலும் கால் இடறிவிடக் கூடிய அபாயம் எப்போதுமே இருந்ததால் கைப்பிடியை அவன் விடவில்லை. கவனமாக ஒவ்வொரு படியாக அடியெடுத்து இறங்கினான். அழைப்பு மணி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. அழைப்பவர் சற்றும் பொறுமையற்ற பிடிவாதக்காரராகத்தான் இருக்க வேண்டும். இடதுகையில் கைத்தடியோடு கதவை நெருங்கினான். தாழ்ப்பாள் குமிழை வலதுபுறமாகத் திருப்ப, கதவை இழுக்கத் திறந்துகொண்டது. வெளியே ஒரு குள்ளமான பெண் நின்றிருந்தாள். மிகக்குள்ளமான பெண். இவளால் எப்படி அழைப்பு மணியை எட்டி அடிக்க முடிந்ததென்று வியப்பாக இருந்தது. உற்றுப் பார்த்தபோதுதான் அவள் குள்ளம் அல்ல என்று புரிந்தது. அவள் முதுகு வளைந்திருந்த கூனி.

அந்த முதுகுப் புடைப்பு அவள் உருவத்தைக் குறுக்கே மடித்துக் குள்ளம் போலத் தோன்ற வைத்திருந்தது. உண்மையில் அவள் உடலமைப்பு சரியான பரிமாணங்களில்தான் அமைந்திருந்தது. தலைமுடி முகத்தின் மீது சரிந்து விடாதபடி ரப்பர் வளையத்தால் முடிச்சிட்டிருந்தாள். அடர்த்தியான செக்கர் நிறக்கூந்தல். பழைய நேரியல் கம்பளி ஜாக்கெட்டும், கணுக்கால் வரை மூடிய தொளதொளப்பான பாவாடையும் அணிந்திருந்தாள். கோடு போட்ட பருத்தி முக்காடு கழுத்தைச் சுற்றியிருந்தது. அவள் தொப்பி அணிந்திருக்கவில்லை. வார் இழையாலான காலணிகள் அணிந்திருந்த அவளுக்கு வயது ஆரம்ப இருபதுகளில்தான் இருக்கும். அந்தப் பெண்ணிடம் இனங்காணமுடியாத ஏதோவொன்று இருந்தது.  அவள் கண்கள் பெரியதாக இருந்தன. சிறிய நாசி. உதடுகள் ஒரு பக்கமாகப் பிறை நிலவுபோலக் கோணிக்கொண்டிருந்தன. நெற்றியின் குறுக்கே நேர்க்கோடுகளாக அடர்ந்த, கரிய புருவங்கள் சந்தேகப்படுவதைப் போன்ற முகபாவனையை அவளுக்கு அளித்தன.

“இது ஸாம்ஸா வீடுதானா?” அந்தப் பெண் தலையை உயர்த்தி அவனைப் பார்த்துக் கேட்டுவிட்டு உடம்பை முறுக்கிக் கொண்டாள்.

பயங்கர நிலநடுக்கத்தின்போது பூமி முறுக்கிக் கொள்வதைப் போலிருந்தது. முதலில் அவன் திடுக்கிட்டுப் போனான். பின்னர் சமாளித்துக்கொண்டு, “ஆமாம்” என்றான். அவன் கிரகோர் ஸாம்ஸா என்பதால் இது ஸாம்ஸாவின் வீடாகத்தான் இருக்க வேண்டும். எப்படியானாலும், அதைப்போலச் சொல்வதில் தவறொன்றும் இருக்க முடியாது. ஆனால், அந்தப் பெண்ணுக்கு அவனுடைய பதில் திருப்தியளிக்காததைப் போலிருந்தது. அவள் புருவங்கள் சற்று சுருங்கின. அவன் குரலிலிருந்த குழப்பத்தை அவள் கவனித்திருக்கக்கூடும். “இது உண்மையிலேயே ஸாம்ஸாவின் வீடுதானா?” வாசலில் அவலட்சணமாக வந்து நிற்கும் ஒருவனைப் பார்த்து அனுபவசாலியான வாயிற்காவலன் கேட்கும் தொனியில் அதட்டிக் கேட்டாள்.

ஸாம்ஸா எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாந்தமான குரலில், “நான்தான் கிரகோர் ஸாம்ஸா” என்றான். குறைந்தது இதுவொன்றாவது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. “நீ சொல்வது உண்மையென்று நம்புகிறேன்” என்றபடி காலடியில் வைத்திருந்த துணிப்பையை எடுத்தாள். அது கருப்பு நிறத்தில் கனமாக இருப்பதாகத் தெரிந்தது. சிற்சில இடங்களில் கிழிந்திருந்தது. நிச்சயமாகப் பலருடைய கைகளுக்கு அந்தப் பை மாறியிருக்க வேண்டும். “சரி நாம் ஆரம்பிப்போம்.” பதிலுக்குக் காத்திராமல் வீட்டுக்குள் நுழைந்தாள். ஸாம்ஸா கதவை மூடினான். அவள் நின்று அவனை மேலும் கீழும் பார்த்தாள். அவனது கவுனும் செருப்புகளும் அவளுக்குச் சந்தேகத்தை எழுப்பியிருக்கும்போல

உன்னை எழுப்பிவிட்டேன் போலிருக்கிறது” என்றாள் உணர்ச்சியற்ற குரலில்.

“அதனாலென்ன பரவாயில்லை” என்றான். அவள் முகபாவம் மாறுவதிலிருந்து, அவன் அணிந்திருக்கும் உடை பொருத்தமில்லாமல் இருப்பதை உணர்ந்தான்.

“நான் இந்தத் தோற்றத்தில் இருப்பதற்காக மன்னிக்கவேண்டும்” என்றான்.

“காரணம் என்னவென்றால்…”

அந்தப் பெண் அவன் சொல்லவந்ததை நிராகரித்து, “சரி, அப்புறம்?” என்று உதடுகளை இறுக்கினாள்.

“சரி, அப்புறம்?” என்று ஸாம்ஸாவும் எதிரொலித்தான்.

“சரி, அப்புறமா பழுதான அந்தப் பூட்டு எங்கே இருக்கிறது?” என்றாள்.

“பூட்டா?”

“அதுதான் பழுதான பூட்டு, அதைச் சரியாக்கத்தானே என்னைக் கூப்பிட்டீர்கள்?”

“ஆ, பழுதான பூட்டு” என்றான் ஸாம்ஸா. ஸாம்ஸா மூளையைத் துருவி யோசித்தான். மனதைக் குவிக்க ஆரம்பித்ததுமே, அந்தக் கரிய நிறக்கொசுக்கூட்டம் எழும்பத் தொடங்கியது.

“பூட்டைப் பற்றிக் குறிப்பாக எதுவும் நான் கேள்விப்படவில்லை. ஒருவேளை இரண்டாம் தளத்திலுள்ள கதவு ஒன்றில் உள்ளதாக இருக்கலாம்” என்றான்.

அந்தப் பெண் அவனைச் சுட்டுவிடுவதைப்போலப் பார்த்தாள்.

“அப்படியென்று நினைக்கிறாயா?” என்று அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். அவள் குரல் மேலும் கடுமையாகியது. ஒரேயொரு புருவம் மட்டும் அவநம்பிக்கையில் மேலே வளைந்தது.

“ஏதோவொரு கதவா?” என்று இழுத்தாள். வெட்கத்தில் தன் முகம் சிவப்பதை ஸாம்ஸா உணர்ந்தான். பழுதான பூட்டைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருப்பது மிகவும் சங்கடமளிப்பதாக இருந்தது. தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேசுவதற்கு முயன்றான். வார்த்தைகள் வரவில்லை.

“திரு ஸாம்ஸா, உன் பெற்றோர்கள் உள்ளே இருக்கிறார்களா? நான் அவர்களிடமே பேசிக்கொள்கிறேன்”

அவர்கள் ஏதோ வேலையாக வெளியே போயிருக்கிறார்கள் போலிருக்கிறது” என்றான் ஸாம்ஸா.

“வேலையா?” அவள் திடுக்கிட்டாள். “வெளியே இவ்வளவு கலவரமாக இருக்கும்போதா?”

“அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. காலையில் நான் எழுந்து பார்த்தபோது யாரையும் காணோம்”

“கடவுளே” அந்த இளம்பெண் நீளமாகப் பெருமூச்செறிந்தாள்.

“இன்றைக்கு இந்த நேரத்தில் நாங்கள் வருவோம் என்று அவர்களிடம் சொல்லியிருந்தோமே?”

“தயவு செய்து மன்னித்துக்கொள்”

அந்தப் பெண் அங்கேயே ஒருகணம் நின்றிருந்தாள். பின், அவளுடைய நெரித்த புருவங்கள் நேராகின. ஸாம்ஸா இடதுகையில் பிடித்திருந்த கைத்தடியைப் பார்த்தாள்.

“உன் கால்களில் ஏதாவது பிரச்சனையா கிரகோர் ஸாம்ஸா?”

“ஆம், கொஞ்சம்” என்றான் மழுப்பலாக.

அவள் மீண்டும் தன் உடம்பை முறுக்கிக்கொண்டாள். இப்படி அவள் செய்து கொள்வதற்கு என்ன அர்த்தம், எதற்காகச் செய்து கொள்கிறாள் என்றெல்லாம் ஸாம்ஸாவுக்குத் தெரியவில்லை. ஆனாலும் இப்படிச் செய்யும்போது அவள் உடம்பு அசையும் விதம் அவனுக்குள் கிளர்ச்சியை உண்டாக்கியது.

“சரி, என்னதான் செய்ய வேண்டும் நான்?” குரலில் சலிப்போடு அந்தப் பெண் கேட்டாள். “இரண்டாவது தளத்திலுள்ள அந்தக் கதவுகளைப் பார்க்கலாம். இந்தப் பயங்கரக் கலவரத்துக்கு நடுவில் நகரின் ஒரு கோடியிலிருந்து இங்கே பாலத்தைத் தாண்டி வந்திருக்கிறேன். உயிரைப் பணயம் வைத்துத்தான் வந்திருக்கிறேன் அப்படி வந்தபிறகு “ஓ யாரும் இல்லையா? சரி அப்புறம் வருகிறேன்”என்று போய்விட முடியாதில்லையா?”

இந்தப் பயங்கரக் கலவரம்? அவள் என்ன சொல்கிறாள் என்று ஸாம்ஸாவால் கிரகிக்க இயலவில்லை. அப்படியென்ன பயங்கரமாக நடந்து கொண்டிருக்கிறது? ஆனால் விவரமாகச் சொல்லும்படி கேட்கவேண்டாமென்று முடிவெடுத்தான். அவனது அறியாமையை மேலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதே நல்லது.

கூன்முதுகோடு அந்தக் கனமான கருப்புப் பையை வலதுகையால் தூக்கிகொண்டு, ஊர்ந்து செல்லும் பூச்சியைப்போலப் படிக்கட்டுகளில் ஏறிச்சென்றாள். ஸாம்ஸா அவளுக்குப் பின்னால் கைப்பிடிக் கம்பியைப் பிடித்துக்கொண்டு மெதுவாக ஏறினான். அவளது கூன் தோற்றம் அவனிடத்தில் இரக்கத்தை ஏற்படுத்தியது. அது அவனுக்கு எதையோ ஞாபகப்படுத்தியது.

மேல்மாடியில் நின்றுகொண்டு மாடிக்கூடத்தைச் சுற்றும்முற்றும் பார்த்தாள். “இங்கிருக்கிற நான்கு கதவுகளில் ஏதோவொரு கதவு பழுதடைந்திருக்கலாம் என்கிறாய், அப்படித்தானே?” ஸாம்ஸாவின் முகம் சிவந்தது. “ஆம், இவற்றில் ஒன்று கூடத்தின் இடது கோடியில் இருக்கும் கதவு என்று நினைக்கிறேன்” அவன் குரல் தடுமாறியது. அன்று காலை அவன் விழித்தெழுந்தது அந்த அறையில்தான்.

“நினைக்கிறாய்” அந்தப் பெண்ணின் குரல் நீரூற்றி அணைக்கப்பட்ட நெருப்பைப்போல உயிரில்லாமல் இருந்தது. “ஒருவேளை” அவள் திரும்பி ஸாம்ஸாவின் முகத்தை ஆராய்ந்தாள். “எப்படியோ அல்லது வேறெதுவோ” என்றான் ஸாம்ஸா. அவள் மீண்டும் பெருமூச்செறிந்தாள். வறண்ட குரலில் “கிரகோர் ஸாம்ஸா” என்று ஆரம்பித்தாள். “நீ பேசுவதைக் கேட்பதே வெகு சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. என்னவொரு சொற்களஞ்சியம் உன்னிடத்தில்! சொல்ல வருவதைத் துல்லியமாகச் சொல்லிவிடுகிறாய். எப்படியோ அல்லது வேறெதுவோ!” அவள் தொனி மாறியது.

“இருக்கட்டும் கூடத்தின் இடதுகோடிக் கதவை முதலில் சோதித்து விடலாம்”கதவிடம் சென்றாள். தாழ்ப்பாள் குமிழை முன்னும் பின்னும் திருகிப் பார்த்தாள். கதவைத் தள்ளித் திறந்தாள். அறை முன்பு இருந்ததைப்போலவே இருந்தது. வெற்றுக்கட்டில், அதுவும் அழுக்கான கட்டில். விரிப்பற்ற தரை. பலகைகளை அடித்து மூடப்பட்ட சன்னல். அந்தப் பெண் இவை எல்லாவற்றையும் கவனித்திருக்கக்கூடும். ஆனால் ஆச்சரியமடைந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. நகரம் முழுக்க இதைப் போன்ற பல அறைகளைப் பார்த்திருப்பவளைப்போலத் தோன்றினாள்.

கீழே குந்தியமர்ந்து, கருப்புப் பையைத் திறந்து ஒரு வெள்ளை நாரியல் துணியை எடுத்துத் தரையில் விரித்தாள். பையிலிருந்து பலவிதமான சாதனங்களை வெளியிலெடுத்து அதன்மேல் கவனமாகப் பரப்பினாள் – வதை முகாமிலுள்ள தியாகிக்கு முன் கொலைக்கருவிகளை எடுத்துக் காண்பிக்கும் சித்திரவதையாளன்போல. சுமாரான கனத்திலிருந்த ஒயர் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதை பூட்டுக்குள் செருகி, பல்வேறு கோணங்களில் திறமையாகத் திருப்பித் திருப்பிச் சோதித்தாள். அவள் கண்கள் முனைப்பில் சுருங்கின.

பூட்டுக்குள்ளிருந்து வரக்கூடிய மெல்லிய சத்தங்களுக்காக செவிகளைத் தீட்டிக் கொண்டு ஆராய்ந்தாள். பின்னர் மெல்லிய ஒயரை எடுத்துப் பூட்டுக்குள் செலுத்தி சோதனையைத் தொடர்ந்தாள். அவள் முகம் இறுகி, சீன வாளைப்போலக் கோணின. ஒரு பெரிய டார்ச் லைட்டை எடுத்துப் பூட்டின் துவாரத்துக்குள் வெளிச்சத்தை அடித்து மும்முரமாக எதையோ ஆராய்ந்தாள்.

ஸாம்ஸாவிடம் “இந்தப் பூட்டுக்குச் சாவி இருக்கிறதா?” என்று கேட்டாள்.

“இதற்குச் சாவி இருக்கிறதா என்பதே எனக்குத் தெரியாது” என்று நேர்மையாகப் பதிலளித்தான்.

“ஆ, கிரகோர் ஸாம்ஸா… சில நேரங்களில் நீ பேசுவதைக் கேட்கும்போது செத்துவிடலாமென்றிருக்கிறது”

அதன்பிறகு அவனை அவள் முற்றிலும் புறக்கணித்துவிட்டு வேலையில் மூழ்கினாள். சாதனங்களிலிருந்து ஒரு ஸ்க்ரூ டிரைவரைத் தேர்ந்தெடுத்து, கதவிலிருந்து பூட்டைக் கழற்றி எடுக்கத் தொடங்கினாள். அவளது செயல்பாடுகள் மெதுவாக ஆனால் ஜாக்கிரதையாக இருந்தன. அவ்வப்போது வேலையை நிறுத்திவிட்டு, முன்பு செய்ததைப்போலவே உடம்பை முறுக்கித் தளர்த்திக் கொண்டாள். அவளுக்குப் பின்னால் நின்றுகொண்டு அவள் இப்படி உடம்பை முறுக்கிக் கொள்வதைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு வினோதமாக ஓர் உணர்வு எழுந்தது. அவன் உடல் திடீரென சூடாகத் தொடங்கி, நாசித்துவாரங்கள் விடைத்தன. வாய் உலர்ந்தது. வாயைத் திறந்து சுவாசிக்க முற்படுகையில் பெரிதாக ஏப்பம் போல வந்தது. காதுமடல்கள் நமைத்தன. அதுவரை தளர்வாகத் தொங்கிக்கொண்டிருந்த அவனது ஆண்குறி இறுகத் தொடங்கி, விரைத்தது.

அது எழும்பி, நீண்டு, அவனது கவுனின் முன்புறத்தை வீங்கச் செய்தது. அவனுக்கு நிகழும் இந்த மாற்றத்துக்கு என்ன காரணமென்று விளங்காமல் குழம்பினான். பூட்டைக் கழற்றி எடுத்துக்கொண்டு அந்த இளம்பெண் சன்னலுக்குச் சென்று பலகைகளின் இடைவெளியில் வரும் வெயிலில் பூட்டை வைத்துச் சோதித்தாள். முகத்தைச்சுருக்கி, வாயை இறுக்கிக்கொண்டு பூட்டுக்குள் மெல்லிசாக ஒயர் ஒன்றைச் செலுத்தி பலமாகக் குலுக்கி, உள்ளே எப்படிச் சத்தம் வருகிறது என்று காதை வைத்தக் கேட்டாள்.கடைசியாகப் பெருமூச்சுடன் ஸாம்ஸாவைத் திரும்பிப் பார்த்தாள்.

“உள்ளே எல்லாம் உடைந்துபோயிருக்கிறது. நீ சொன்னதைப்போல இதுதான் பழுதான பூட்டு”

“சரி” என்றான் ஸாம்ஸா.

“என்ன, சரி? இதை இந்த இடத்தில் வைத்து என்னால் சரி செய்ய முடியாது. இது சிக்கலான வகைப் பூட்டு. இதை எடுத்துக்கொண்டு போய் என் அப்பா, அண்ணன்கள் யாரிடமாவது கொடுத்துதான் சரி செய்ய வேண்டும். எனக்கு இதில் அனுபவம் கிடையாது – சாதாரண பூட்டுகளைத்தான் கையாளத் தெரியும்”

“ஓஹோ” என்றான் ஸாம்ஸா. எனவே இந்தப் பெண்ணுக்கு ஒரு அப்பாவும் நிறைய அண்ணன்களும் இருக்கிறார்கள். பூட்டுக் கொல்லர்கள் குடும்பம்.

“உண்மையில் என் அண்ணன்களில் ஒருவர்தான் இங்கே வருவதாக இருந்தார். வெளியே ஒரே கொந்தளிப்பாக இருந்ததால் என்னை அனுப்பினார்கள். நகரம் முழுக்க சோதனைச்சாவடிகள்”

கையில் வைத்திருந்த பூட்டைக் குனிந்து பார்த்தாள். “எப்படி இதைப்போல இந்தப் பூட்டு உடைந்திருக்கிறது? வினோதம். யாரோ பூட்டுக்குள் ஆயுதத்தைச் செருகி உள்ளிருக்கும் பாகங்களை நாசமாக்கியிருக்கிறார்கள். வேறு எப்படியும் இதை விளக்க முடியவில்லை. அவள் மீண்டும் உடம்பை முறுக்கினாள். அவள் கைகளைச் சுழற்றுவது நீச்சல் வீரர் ஒரு புதிய நொடிப்பைப் பயிற்சி செய்வதைப்போலிருந்தது. மனதை மயக்கி, கிளர்ச்சியூட்டும் உடற்சுழற்சி.

ஸாம்ஸா தீர்மானித்தான். “உன்னிடம் ஒன்று கேட்கலாமா?”  என்றான்.

“கேள்வியா?” அவனைச் சந்தேகமாகப் பார்த்து “என்ன கேட்கப்போகிறாய் தெரியவில்லையே, கேள்” என்றாள்.

“நீ ஏன் அடிக்கடி உடம்பை முறுக்கிக் கொள்கிறாய்?” அவள் ஸாம்ஸாவை நிமிர்ந்து நோக்கினாள். உதடுகள் சற்றுத் திறந்தன. “முறுக்கிக் கொள்வதா?” சற்று யோசித்தாள். “இதைச் செல்கிறாயா?” என்று செய்து காட்டினாள்.

“ஆமாம், இதேதான்”

“என் பிரேஸியர் நிலையாக இருக்காது” என்றாள் குரலில் சினேகமில்லாமல், “அதனால்தான்”

“பிரேஸியரா?” ஸாம்ஸா ஹீனமான குரலில் முணுமுணுத்தான். அவன் ஞாபக அடுக்குகளில் இல்லாத ஒரு சொல்.

“பிரேஸியர் பெண்களின் உள்ளாடை – தெரியாதா உனக்கு?” என்றாள். “அல்லது அதை அணியக் கூனிகளுக்குத் தகுதியில்லை என்கிறாயா?”

“கூனி?” அவன் உள்ளே சுமந்திருக்கும் மாபெரும் வெற்றிடத்திற்குள் மேலும் ஒரு சொல் இழுத்து உறிஞ்சப்பட்டது. அவள் என்ன சொல்கிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை. இருந்தாலும் ஏதாவது சொல்ல வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது.

“இல்லை, அப்படி நினைக்கவில்லை” என்று முனகினான்

“இதைக் கேள். கூனிகளான எங்களுக்கும் இரண்டு மார்பகங்கள் இருக்கின்றன, மற்ற பெண்களைப்போலவே. அவற்றைத் தாங்கிப்பிடிக்க பிரேஸியரை உபயோகிக்கிறோம். பசுமாடுகளைப்போல மடியைத் தொங்கவிட்டு ஆட்டிக் கொண்டு எங்களால் நடக்க முடியாதல்லவா?”

“ஆம், முடியாது” ஸாம்ஸா தடுமாறினான்.

“ஆனால் பிரேஸியர்கள் எங்களைப் போன்றவர்களுக்காக வடிவமைக்கப்பட்டவையல்ல – தளர்ந்து விடுகின்றன. மற்ற சாதாரணப் பெண்களைப்போல எங்களுக்கு உடலமைப்பு இல்லைதானே? அதற்காகத்தான் உடம்பை முறுக்கி அதைப் பழைய நிலைக்கு மேலேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்களெல்லாம் நினைப்பதைவிட எங்களுக்குக் கஷ்டங்கள் அதிகம். நீ என்னைப் பின்னாலிருந்து முறைத்துப் பாரத்துக் கொண்டிருந்தது இதனால்தானா? உனக்கு இப்படித்தான் கிளர்ச்சி ஏற்படுகிறதா?”

“இல்லையில்லை. நீ ஏன் அப்படிச் செய்கிறாய் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டேன்” ஆகவே, பிரேஸியர் என்பது மார்பகங்களை உயர்த்தி வைத்திருக்கும் படியான ஒரு சாதனம் என்று புரிந்துகொண்டான். கூனி என்றால் முதுகு வளைந்திருக்கும் பெண். அதுவும் தெரிந்துவிட்டது. இவ்வுலகத்தில் தெரிந்துகொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றனபோல.

“நீ ஒன்றும் என்னைக் கிண்டல் செய்யவில்லையே?” அந்தப் பெண் கேட்டாள்.

“உன்னைக் கிண்டல் செய்யவில்லை”

அவள் கழுத்தை வளைத்து ஸாம்ஸாவை நிமிர்ந்து பார்த்தாள். அவன் உண்மையைத்தான் பேசுகிறான் என்று தெரிகிறது. அவனிடம் கள்ளத்தனம் இல்லை. சற்று மந்தபுத்திக்காரன் போல இருக்கிறான், அவ்வளவுதான். அவளைவிட சில வருடங்கள் பெரியவனாக இருப்பான். கொஞ்சம் ஊனமுற்றவன் என்பதோடு புத்தி மாறாட்டம் உள்ளவனாகவும் தெரிகிறான். ஆனால் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவன். நடத்தை நாகரீகமாகவே இருக்கிறது. கொஞ்சம் ஒல்லியாக, வெளிறிப்போயிருந்தாலும் பார்க்க அழகாகத்தான் இருக்கிறான். அப்போதுதான் அவன் கவுனின் கீழ்ப்பகுதியில் தெரிந்த புடைப்பைக் கவனித்தாள்.

“ஹே, என்ன அது?” என்றாள் கடுமையாக. “அங்கே என்ன துருத்திக் கொண்டிருக்கிறது?”

ஸாம்ஸா குனிந்து கவுனைப் பார்த்தான். அவன் குறி மிகவும் விரைத்து நீண்டிருந்ததைக் கேட்கிறாள். அவள் குரலின் தொனியை வைத்துப் பார்க்கும்போது இது மிகவும் அவச்செயலாகத்தான் இருக்குமென்றும் யூகித்தான்.

“இப்போது புரிகிறது” என்று வெடித்தாள். “ஒரு கூனியைப் புணர்ந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறாய், இல்லையா?”

“புணர்தல்?” என்றான். அவனால் இனங்கான முடியாத இன்னொரு சொல்.

“இடுப்பில் வளைந்து கூன் முதுகிட்டு இருப்பதால் எங்களைப் பின்னாலிருந்து பிடித்து வீழ்த்திவிடலாம் என்று உனக்கு நினைப்பு இல்லையா” என்று சீறினாள். “உன்னைப் போன்ற வக்கிர புத்திக்காரர்கள் நிறையபேர், கூனிகளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் கற்பனை செய்து கொள்ளாதே, மகனே! எங்களை அவ்வளவு எளிதில் அடைந்துவிட முடியாது!”

“நான் மிகவும் குழம்பிப்போயிருக்கிறேன்” என்றான் ஸாம்ஸா.

“உன்னை எந்த விதத்திலாவது கஷ்டப்படுத்தியிருந்தால், தயவு செய்து மன்னித்துக்கொள். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். தவறாக எதைச்செய்யவும் நான் நினைக்கவில்லை. எனக்கு உடல்நலமில்லாமல் இருந்தது. பல விஷயங்கள் எனக்குப் புரியவில்லை”

“சரி, சரி. புரிகிறது. நீ சற்று மந்தம், இல்லையா? ஆனால் உன் சரக்கு பிரமாதம். நல்ல மூடில்தான் இருக்கிறாய் போலிருக்கிறது”

“மன்னித்துக் கொள்” என்றான் மீண்டும்.

“சரி விடு. என் வீட்டில் ஒன்றுக்கும் உதவாத நான்கு அண்ணன்மார்கள் இருக்கிறார்கள். நான் சின்னப்பெண் என்பதால் எல்லாவற்றையும் காட்டியிருக்கிறார்கள். அது என்னவோ பெரிய ஜோக் என்பதைப்போல. அசிங்கம் பிடித்தவர்கள். அதனால்தான் எனக்குத் தெரியும். உன்னுடையது அட்டகாசமாகத்தான் இருக்கிறது”

அவள் குந்தி உட்கார்ந்து, எல்லா சாதனங்களையும் பையிலிட்டாள். பழுதடைந்த பூட்டை நாரியல் துணியில் சுற்றி பத்திரமாக உள்ளே வைத்தாள். எழுந்து நின்று, “இதை வீட்டுக்கு எடுத்துப்போகிறேன்“ என்றாள். உன் பெற்றோர்களிடம் சொல். சீராக்க முயல்கிறோம், இல்லாவிட்டால் வேறொன்றை மாற்றிவிடலாம். புதிதாக வாங்க வேண்டுமானால் இப்போது இருக்கும் நிலைமையில், நாளாகலாம். மறக்காமல் சொல்லிவிடு, சரியா? நான் சொல்வது புரிகிறதா? மறந்துவிட மாட்டாயே?”

“சொல்லிவிடுகிறேன்”

அவள் மெதுவாகப் படியிறங்கிச் செல்ல, ஸாம்ஸா பின்னால் சென்றான். இருவரின் நடையிலும் ஓர் ஆச்சரிய ஒற்றுமை இருந்தது.

அவள் ஊர்ந்து செல்லும் பூச்சியைப்போலப் படிக்கட்டுகளில் தவழ்ந்து செல்ல, அவன் அசாதாரணமான கோணத்தில் முதுகைப் பின்னால் வளைத்து கைப்பிடிக்கம்பைப் பிடித்தபடி இறங்கிக்கொண்டிருந்தான். இருவரின் வேகமும் ஒன்றாக இருந்தது.

ஸாம்ஸா அவனது “விரைப்பை”இளக்கிக்கொள்ள கடுமையாக முயன்றாலும் அது அதன் இயல்பான நிலைக்குச் சுருங்க மறுத்தது. அவளது உடலசைவுகளைப் பின்னாலிருந்து பார்க்கும்போது அவன் இதயம் வேகமாகத் துடித்தது. சூடான, புதிய ரத்தம் நாளங்களில் பாய்ந்தது. அந்தப் பிடிவாதமான விரைப்பு அடங்க மறுத்தது. அவர்கள் முன் கதவை அடைந்ததும், “நான் ஏற்கனவே சொன்னதைப்போல, என் அண்ணன்களில் ஒருவன்தான் இன்று வருவதாக இருந்தது” என்றாள். “ஆனால் தெருக்களில் எங்கே பார்த்தாலும் ராணுவத்தினரும் பீரங்கிகளும். மக்கள் வெளியே வந்தால் கைது செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் எங்கள் வீட்டு ஆண்களால் வெளியே தலை காட்ட முடியவில்லை. கைது செய்து விட்டால், பிறகு எப்போது விடுவிப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. அதனால்தான் என்னை அனுப்பினார்கள். தன்னந்தனியாக ப்ராக் நகர வீதிகளில் நடந்து வந்திருக்கிறேன். கூனியை யாரும் கவனிக்கமாட்டார்கள் என்று சொன்னார்கள்”

“பீரங்கிகளா?” ஸாம்ஸா முணுமுணுத்தான்.

“ஆம். நிறைய இயந்திரத் துப்பாக்கிகள், பீரங்கிகள். ஆனால் உன்னுடைய பீரங்கி ரொம்பவும் கவர்ச்சியாக இருக்கிறது”

அவன் கவுனுக்குள்ளேயிருந்த எழுச்சியைச் சுட்டிக்காட்டிச் சொன்னாள். “ஆனால் தெருவில் உள்ள பீரங்கிகள் மிகவும் பெரியவை. கடினமானவை பயங்கரமானவை. உன் குடும்பத்தினர் எல்லோரும் பத்திரமாகத் திரும்பி வரட்டும்”

ஸாம்ஸா ஆனது ஆகட்டுமென்று துணிச்சலாகக் கேட்டேவிட்டான்

“நாம் மீண்டும் சந்திக்க முடியுமா?”

அந்த இளம்பெண் ஸாம்ஸாவைத் திரும்பிப் பார்த்தாள். “என்னை மீண்டும் சந்திக்க வேண்டுமென்றா சொல்கிறாய்?”

“ஆம். இன்னும் ஒருமுறை உன்னைப் பார்க்க விரும்புகிறேன்”

“உன் சமாச்சாரத்தை இப்படி விரைத்துக் கொள்வதற்காகவா?”

ஸாம்ஸா குனிந்து பார்த்துக் கொண்டான். “இது எப்படி நிகழ்ந்தது என்று என்னால் விளக்க முடியவில்லை. ஆனால் இதற்கும் என் உணர்ச்சிகளுக்கும் தொடர்பில்லை. இது ஏதோ இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை போல”

“விளையாடாதே” அவள் அந்தப் பதிலை ரசித்தாள்.

“இதய பிரச்சனையா இது? கேட்பதற்கு சுவையாகத்தான் இருக்கிறது. இதற்கு முன் யாரும் இப்படிச் சொல்லிக் கேட்டதில்லை”

“இது என் கட்டுப்பாட்டில் நடக்கவில்லை”

“அப்படியா, புணர்ச்சிக்கான தயாரிப்பு இல்லையா இது?”

“புணர்ச்சி என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது”

“சரி, நேராகவே கேட்டுவிடுகிறேன். உன் சமாச்சாரம் இதைப்போல இறுகி, விரைப்பதற்குக் காரணம் உன் மனம் அல்ல, இதயம்தான் என்கிறாய்?”

ஸாம்ஸா ஒப்புதலாகத் தலையசைத்தான்.

“கடவுள் சத்தியமாக?”

“கடவுள்” ஸாம்ஸா அவள் சொன்னதை எதிரொலித்தான். இதற்கு முன் கேள்விப்பட்டிராத மற்றொரு சொல். அவன் மௌனமானான்.

அந்தப் பெண் அயற்சியுடன் தலையை ஆட்டிக்கொண்டாள். பிரேஸியரை சரிபடுத்திக் கொள்வதற்காக மீண்டும் உடம்பைத் திருப்பி முறுக்கிக்கொண்டாள். “சரி விடு. கடவுள் சில நாட்களுக்கு முன் ப்ராக் நகரத்தை விட்டுப் போய்விட்டார் என்று நினைக்கிறேன். அவரை மறந்து விடலாம்”

“சரி, நான் உன்னை மீண்டும் பார்க்க முடியுமா?” ஸாம்ஸா கேட்டான்.

அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு புதிய பாவம் தோன்றியது – அவள் விழிகள் தூரத்துக்குச் சென்று மூட்டான நிலப்பரப்பை வெறித்தன.

“உண்மையாகவே என்னை மீண்டும் சந்திக்க விரும்புகிறாயா?”

ஸாம்ஸா தலையை ஆட்டினான்.

“சந்தித்து என்ன செய்யப்போகிறோம்?”

“பேசிக்கொண்டிருக்கலாம்”

“எதைப் பற்றி“ என்று கேட்டாள்.

“நிறைய விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும்”

“வெறும் பேச்சு மட்டுமா?”

“உன்னிடம் கேட்பதற்கு என்னிடம் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன”

“எதைப்பற்றி?”

“இந்த உலகத்தைப் பற்றி. உன்னைப் பற்றி. என்னைப் பற்றி. நாம் பேசித் தீர வேண்டிய பல விஷயங்கள் இருப்பதாக நினைக்கிறேன். உதாரணத்திற்கு, பீரங்கிகள், அப்புறம் கடவுள், பிரேஸியர், பூட்டுகள்”

அவர்கள் நடுவே இன்னொரு மௌனம் கவிந்தது. கடைசியில் அவளே பேசினாள். “எனக்குத் தெரியவில்லை” என்று தலையை மெதுவாக ஆட்டிக்கொண்டாள். ஆனால் அவள் குரலில் இருந்த உணர்ச்சியற்ற தன்மை இப்போது குறைந்தது. “நீ என்னைவிட ஒழுங்காக வளர்க்கப்பட்டிருக்கிறாய். உன் பெற்றோர்கள் அவர்களுடைய அருமை மகன் நகரின் மோசமான பகுதியிலிருந்து வரும் ஒரு கூனியோடு சம்பந்தப்படுகிறான் என்று தெரிந்தால் சந்தோஷப்படமாட்டார்கள். அவர்களுடைய பையன் நொண்டியாக, மந்தமாக இருந்தாலும்கூட. மேலும் நகரம் முழுக்க வெளிநாட்டு பீரங்கிகளும் படைகளும் சுற்றிக்கொண்டிருக்கும்போது, இனி என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?”

இனி என்ன நடக்கும் என்று ஸாம்ஸாவுக்கு உண்மையிலேயே ஊகிக்க முடியவில்லை. அவனுக்கு எதுவுமே விளங்கவில்லை. எதிர்காலம் குழப்பம்தான். ஆனால் நிகழ்காலமும் கடந்த காலமும் கூடக் குழப்பமாகவே இருந்தன அவனுக்கு. எது சரி, எது தப்பு? உடை அணிந்து கொள்வதுகூடப் பெரும் சிக்கலாக இருக்கிறது.

“எப்படியிருந்தாலும் சில நாட்கள் கழித்து இந்த வழியாக வருவேன்” என்றாள் அந்தக் கூன முதுகுப் பெண். “சீராக்க முடிந்தால் பூட்டை எடுத்து வந்து மாட்டிச் செல்கிறேன். இல்லாவிட்டால் திருப்பித் தந்துவிடுகிறேன். வந்து சென்றதற்காகச் சேவைக் கட்டணம் எனக்குத் தரவேண்டியிருக்கும். நீ இங்கே இருந்தாயென்றால் நாம் பார்க்கலாம்.

நீ சொன்னதைப்போல நீண்டநேரம் பேசமுடியுமாவென்று தெரியாது. ஆனால் உன்னுடைய இந்தத் துருத்தலை உன் பெற்றோர் கண்ணில் படாமல் மறைத்துக் கொள்வது நல்லது என்பேன். யதார்த்த உலகத்தில் இதைப்போன்ற விஷயங்களை வெளிப்படையாகக் காட்டினால் பாராட்டு கிடைக்காது”

ஸாம்ஸா தலையாட்டினான். எப்படி இதைக் கண்ணில் படாமல் மறைத்துவைத்துக் கொள்வதென்று அவனுக்கு விளங்கவில்லை.

“வினோதம்தான் இல்லையா?” என்றாள். மிகவும் சிந்தனைவயப்பட்ட குரலில். “சுற்றிலும் எல்லா இடங்களிலும் வெடித்து எரிந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் சிலர் பழுதான பூட்டைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் அதைப் பழுதுபார்ப்பதற்காகக் கடமையுணர்ச்சியோடு வருகிறார்கள்… ஆனால் அதுதான் வாழ்க்கை போல. இப்போது நம்மைப்போல சின்னச்சின்ன விஷயங்களைக்கூட கடமையுணர்வோடு, நேர்மையாகச் செய்தால், உலகம் சின்னாபின்னமாகிச் சிதறிக் கொண்டிருக்கும்போதுகூட நம்மால் காலூன்றி நிற்கமுடியும், இல்லையா?”

அவள் ஸாம்ஸாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். “நான் ஏதோ துருவித்துருவிக் கேட்பதாக நினைக்காதே. அந்த இரண்டாம் தளத்திலுள்ள அறையில் என்ன இருக்கிறது, என்ன இருந்தது? வெறும் கட்டில் மட்டுமே இருக்கும். அந்த அறைக்கு எதற்காக அவ்வளவு பெரிய பூட்டு வேண்டுமென உன் பெற்றோர் கேட்கிறார்கள்? அந்தப் பூட்டு உடைந்துவிட்டதற்காக ஏன் அவர்கள் அவ்வளவு பதற்றப்படுகிறார்கள்? அப்புறம் ஏன் அந்தச் சன்னலை மூடி பலகைகள் அடிக்கப்பட்டிருக்கின்றன? அங்கே எதையாவது அடைத்து வைத்திருக்கிறார்களா?”

ஸாம்ஸா தெரியாது என்று தலையை ஆட்டினான். அங்கே எதையாவது அல்லது யாரையாவது அடைத்து வைத்திருந்தார்கள் என்றால், அது அவனைத்தான். ஆனால் அதற்கு என்ன அவசியம் இருந்தது? எதற்காக? அவனுக்கு எதுவும் புரியவில்லை. “உன்னிடம் எதையும் கேட்பதில் அர்த்தமில்லை” என்றாள். “சரி, நான் போக வேண்டும். தாமதமானால் கவலைப்படுவார்கள். நான் பத்திரமாய்ப் போய்ச்சேர வேண்டுமென்று பிரார்த்தனை செய்துகொள். பாவப்பட்ட கூன்முதுகுப் பெண்ணை ராணுவத்தினர் கவனிக்கக்கூடாது, அவர்களில் யாரும் வக்கிரம் பிடித்தவர்களாக இருக்கக்கூடாது என்றும் வேண்டிக்கொள். ஏற்கனவே நிறைய அனுபவித்திருக்கிறோம்”

“பிரார்த்தனை செய்து கொள்கிறேன்” என்றான் ஸாம்ஸா. ஆனால் “வக்கிரம்” என்றால் என்னவென்று அவனுக்கு விளங்கவில்லை. அதைப்போலவே பிரார்த்தனை என்றாலும். அவள் தனது கருப்புப் பையை எடுத்துக்கொண்டு, கூன் முதுகு மேலும் சற்றுக் குனிய, கதவை நோக்கி நடந்தாள். “உன்னை மீண்டும் பார்ப்பேனா?” கடைசியாக ஒருமுறை ஸாம்ஸா கேட்டான்.

“நீ யாரையாவது ஆழமாக நினைத்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக அவர்களை மறுபடியும் பார்ப்பாய்” என்றபடியே வெளியேறினாள். இம்முறை அவள் குரலில் உண்மையான பிரியம் இருந்தது.

“பறவைகளிடம் எச்சரிக்கையாக இரு” என்று கத்தினான்.

அவள் திரும்பி தலையசைத்தாள். தெருவில் இறங்கி நடந்தாள். திரைச்சீலையின் பிளவு வழியாக அவள் நடைபாதையில் கூன்முதுகோடு செல்வதைப் பார்த்தபடி இருந்தான். நடை தடுமாற்றத்தோடு இருந்தாலும் வியப்பூட்டும் வகையில் படுவேகமாக நடந்து சென்றாள். அவளுடைய ஒவ்வோர் அசைவும் அவனுக்கு அழகாக இருந்தது. அவளைப் பார்க்குபோது குளத்து நீரிலிருந்து வெளிவந்து உலர்ந்த நிலத்தில் குதியாட்டமாகச் செல்லும் நீர்ப்பூச்சியின் ஞாபகம் அவனுக்கு வந்தது. அவனுக்கென்னவோ இரண்டு கால்களால் ஆடியாடி நிமிர்ந்து நடப்பதைவிட அவளைப்போல நடப்பது ஒழுங்கான நடைமுறையாகத் தோன்றியது.

அவள் பார்வையிலிருந்து மறைந்ததும் ஒன்றைக் கவனித்தான். அவனுடைய பாலுறுப்புகள் தமது பழைய மிருதுவான, சுருங்கிய நிலைக்குத் திரும்பி விட்டிருந்தன. திடீரென்று எழுச்சியுற்றிருந்த அந்த விரைப்பு மறைந்து, இப்போது அந்த உறுப்பு கால்களுக்கு நடுவே அப்பாவியான பழத்தைப்போல, சாதுவாக, பாதுகாப்பின்றித் தொங்கிக் கொண்டிருக்க, விரைகள் சௌகரியமாக அவற்றின் பையில் ஓய்வெடுத்திருந்தன. கவுனின் பெல்ட்டை சீராக்கிக்கொண்டு உணவுக்கூடத்திற்குச் சென்று உட்கார்ந்து மேஜையில் மிச்சம் வைத்திருந்த சிலலென்ற காபியைக் குடித்தான். இங்கே வசித்து வந்தவர்கள் எல்லோரும் எங்கோ போய்விட்டிருக்கிறார்கள். அவர்கள் யாரென்று அவனுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள்தான் அவனுடைய குடும்பமாக இருக்குமென்று நினைத்துக் கொண்டான். எல்லோருக்கும் திடீரென ஏதோ நடந்துவிட்டிருக்கிறது. அவர்கள் இந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டிருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் திரும்பி வராமலே போகலாம். “உலகம் சின்னாபின்னமாகிச் சிதறுதல்” என்றால் என்ன பொருள்? கிரகோர் ஸாம்ஸாவுக்குத் தெரியவில்லை.

அயல்நாட்டு ராணுவம், சோதனைச் சாவடிகள், பீரங்கிகள் – எல்லாமே மர்மமாக இருக்கின்றன. அவன் நிச்சயமாக அறிந்திருந்த ஒரே விஷயம் அந்தக் கூன்முதுகுப் பெண்ணை மீண்டும் சந்திக்க விரும்புகிறான் என்பதுதான். எதிரெதிரே உட்கார்ந்து அவன் இதயத்திலுள்ள எல்லாவற்றையும் பேசிக் கொட்டிவிட வேண்டும். இந்த உலகத்தின் புரியாத புதிர்களை அவளோடு சேர்ந்து அவிழ்க்க வேண்டும். அவள் தன் உடம்பைத் திருப்பி முறுக்கிக் கொள்வதை, பிரேஸியரை சரி செய்து கொள்வதை எல்லா கோணங்களிலிருந்தும் பார்த்து ரசிக்க வேண்டும். சாத்தியப்படுமென்றால் அவள் உடலெங்கும் தன் விரல்களைப் பதித்து வருட வேண்டும். அவள் மிருதுவான சருமத்தைத் தொட்டு அவளுடைய சூட்டை விரல் நுனிகளில் உணர வேண்டும். உலகத்தின் படிக்கட்டுகளில் அவளோடு இணையாக ஏறி இறங்க வேண்டும்.

அவளைப் பற்றி நினைப்பதே அவனுக்குள் கதகதப்பை உண்டாக்கியது. ஒரு மீனாகவோ அல்லது ஒரு சூரியகாந்தியாகவோ அல்லது வேறெதுவாகவோ மாறியிருக்கலாமே என்ற ஆசை இப்போது அவனிடத்தில் இல்லை. மனிதனாக இருப்பதில் சந்தோஷம் கொண்டான். இரண்டு கால்களால் நடக்கவேண்டியிருப்பதும், உடையணிந்து கொள்ள வேண்டியிருப்பதும் பெரிய அசௌகரியம்தான். அவனுக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் மனிதனாக இல்லாமல் ஒரு மீனாகவோ ஒரு சூரியகாந்திப் பூவாகவோ இருந்திருந்தால் இந்த உணர்ச்சிகளை அவன் அனுபவித்திருக்கமாட்டான். இவ்வாறு அவன் மனதில் ஓடியது. ஸாம்ஸா கண்களை மூடிக்கொண்டு அதே இடத்தில் வெகுநேரம் அமர்ந்திருந்தான். பின் முடிவெடுத்தவனாக எழுந்து, அவனது கருப்புக் கைத்தடியை எடுத்துக்கொண்டு மாடிப்படிகளை நோக்கி நடந்தான்.

அவன் இரண்டாம் தளத்துக்குத் திரும்பிச் செல்வான். ஒழுங்காக உடையணியும் விதத்தைக் கற்றுக் கொள்வான். தற்போதைக்கு அதுதான் அவனது குறிக்கோள். அவன் கற்றுக் கொள்வதற்காக உலகம் காத்திருந்தது.

 

பூனைகளின் நகரம் – ஹாருகி முரகாமி – தமிழில்: ஜி.குப்புசாமி – வம்சி வெளியிட்டுள்ள நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதை.