இன்னொரு மன்ஹாட்டன் டொனால்ட் ஆண்ட்ரிம்

இன்னொரு மன்ஹாட்டன்

டொனால்ட் ஆண்ட்ரிம்

தமிழில்கார்த்திகைப் பாண்டியன்

 

 

 

 

 

 

 

புகைப்படங்கள் : அனாமிகா


அவர்கள் பலமுறை தங்களுக்குள் பொய் சொல்லிக் கொண்டதுண்டு, பல வருடங்களாக, எனவே, கிட்டத்தட்ட ஒரு நாடகக்காட்சியைப்போல, கபடமென்பது அவர்களிடையே வழக்கமான ஒன்றாகிப் போயிருந்தது. அவர்களைப் பற்றிய இந்தத் தகவலை அனைவருமறிவார்கள் – நண்பர்களைப் பொறுத்தவரையில் இதுவொரு செய்தியாகவும் இருந்ததில்லை. அன்றிரவு விருந்துக்கு எலியட்டோடும் சூசனோடும் சேர்ந்து போவதாக முடிவாகியிருந்தது, இவர்களுடைய மனநிலையிலும் பேச்சின் தொனியிலும் உருவாகும் மாற்றங்களுக்கு அவர்கள் பழகியிருந்தார்கள் –உதாரணத்துக்கு, மேசையின் மறுபுறமிருந்து தன் மேல் கவியும் ஜிம்மின் துயரார்ந்த பார்வைகளுக்கான எதிர்வினையாய் நிகழும் கேட்டின் நாடகீயமான பெருமூச்சுகள் – அவை கவலையும் துரோகமும் நிரம்பிய சூழலில் வாழ நேர்வதன் அழுத்தத்தில் உருவாகி வருகின்றன. அதுவொரு பனிக்காலம், மேலும் இருண்டிருந்தது, அவர்களது சிறிய வசிப்பிடத்தை நிறைத்த காற்று வறண்டும் அருவருப்பான வெம்மையோடும் இருந்தது; என்றாலும் கூட அவர்களுக்குத் தேவையாயிருந்ததென்பது, ரகசியமான நான்கு வழிச்சாலை சரசங்களுக்காகவும் கிளர்ச்சியூட்டும் உரையாடல்களுக்கெனவும் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லும் மற்றுமோர் இரவல்ல என்று ஜிம்முக்குத் தோன்றியது. வரவேற்பறை எத்தனை கசகசப்பானதாக மாறினாலும் சரி, ரேடியேட்டர்கள் எத்தனை சத்தமாக சீறினாலும் ஒலியெழுப்பினாலும் பரவாயில்லை, அவர்களனைவரும் ஒன்றாக அமர வேண்டும், பின் ஒவ்வொருவராகத் தங்களுடைய மனதிலுள்ளதைப் பேச வேண்டும். அவர்கள் பேசியே ஆக வேண்டும். ஆனால் முதலில், வெளிநோயாளர்களுக்கான மருந்தகத்திலிருந்து தான் திரும்பி வரும் வழியிலுள்ள, மலர் விற்பனையாளரின் கடைக்கு அவன் செல்ல வேண்டும். கதவுகளின் வழியே பூங்கொத்தினைச் சுமந்தபடி உள்ளே நுழைந்தால் ஒருவேளை கேட் புன்னகைப்பதற்கான வாய்ப்பிருந்தது.

வேறொரு சாத்தியமும் இருந்தது, மாலையின் முடிவில் – அவனும் கேட்டும் அங்குதான் தங்குவார்களென்பதில் உண்மையில் அவனுக்கு நம்பிக்கையில்லை – உணவு விடுதியிலிருந்து எலியட்டின் மகிழுந்து வரை பனியினூடாக நடந்து செல்லும்போது அவன் சூசனோடு இணைந்து கொண்டால் அது சங்கடமாகவோ அல்லது வினோதமாகவோ தோன்றாதிருக்கலாம். வேறு வார்த்தைகளில் சொல்வதெனில், மற்றொரு மனிதனிடம் கேட் கிசுகிசுப்பது குறித்து அவனுக்கு எந்தக் கவலையுமில்லை என்றும் கூடத் தோன்றலாம். (எலியட்டோடு பேச, அவளுக்கென ஒரு வழிமுறை இருந்தது, தலையைக் குனிந்து தனது முகத்தின் பக்க விளிம்புகளில் விழும் முடிக்கற்றைகளின் வழியே சீற்றத்தோடு முணுமுணுப்பாள், ஆகையால், அவளுடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அவளது மூச்சுக்காற்றின் புகைமூட்டத்துக்குள் குனிந்தும் சாய்ந்தும் கேட்கிற நிலைமைக்கு எலியட் தள்ளப்படுவான்.) ஜிம்மின் சொந்தப் பிரச்சினையான சூசனுக்கும் அவனுக்குமிடையே இருந்த தொடர்பு, ஐந்து மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது, அவனும் கேட்டும் தங்கியிருந்த கட்டிடத்தின் முனையிலுள்ள மலர் விற்பனையகத்தை நெருங்கியபோது – அந்த இரவின் பிற்பொழுதில், மனநிலை நன்றாகயிருந்தால் – அவளும் அவனும் கேட்டும் எலியட்டும் இரண்டிரண்டு பேராக இரண்டு வரிசைகளில் வாகனக் காப்பகத்தை நோக்கி நடந்து செல்கையில் ஏதுமறியாதவனைப் போல் தன்னுடைய கைகளை சூசனின் தோள்களின் மீது போட்டுப் பார்க்கும் பரிசோதனை முயற்சியை ஆரம்பிக்குமளவுக்கு அது நீண்ட காலம்தான் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

நிச்சயமாக, கேட்டை புண்படுத்தி விடக் கூடாதென்பதில் அவன் கவனமாயிருந்தான், அல்லது, குறைந்தபட்சம், தகாத உறவில் அடைந்த வெற்றிக்காக அவளை தண்டிப்பதாகத் தோன்றி விடக்கூடாது. ஒரு இனிமையான வழிமுறையில் – எலியட் அவளை புன்னகைக்கச் செய்தான். முதல் முறை அவர்களைச் சந்திக்கும் யாருக்கும் ஏதோ புதிதாய் மணமானவர்கள் என்றே தோன்றும்.

அவளை வெறுப்பதென்பது தவறு.

மலர்களின் விற்பனையகத்தை அவன் வந்தடைந்திருந்தான். உள்ளே, குளிரூட்டிய பெட்டிகளிலிருந்த ரோஜாக்களிடம் நேராக நடந்து சென்றான். அதுவொரு குளிர்நிரம்பிய தினமாக இருந்ததாலும் – குளிரோடு காற்றும் பலமாக அடித்தது – குளிரில் அவனும் விறைத்துப் போயிருந்ததாலும், வெப்பமான பகுதியினூடான அந்த சிறிய நடை அவனை கதகதப்பாக்கியது, மேலும் பெட்டியின் கண்ணாடிக்கதவை வெடுக்கென்று இழுத்துத் திறந்தபோது கடுங்குளிரான காற்று தனது முகத்தில் மோதுவதை உணர்ந்தான். உள்ளே குனிந்து மலர்களை ஒப்பிட்டுப் பார்த்தான். அந்தப் பெண்ணிடம் கேட்டான், “ஏற்கனவே திறந்திராத, உனக்குத் புரிகிறதுதானே, அதாவது மலர்ந்திடாத மஞ்சள்நிற ரோஜாக்கள் உங்களிடம் உள்ளதா?”

அன்றைய மாலையின் சிக்கலான சாத்தியங்களை கணக்கில் கொண்டால், மஞ்சள் ரோஜாக்கள், காமத்தைக் காட்டிலும் நட்பைச் சுட்டுகிறவை என்பதால் அவைதான் சரியாக இருக்கும் என்று தோன்றியது.

“எங்களிடம் இவைதான் இருக்கின்றன.”

“அவை அழகாக இருக்கின்றன, ஆனால் வெகுநேரம் நீடிக்கக்கூடியவை அல்ல.”

ரோஜாக்களைக் காட்டிய பெண், அவளும் அழகாகத்தானிருந்தாள். இங்கே இதற்கு முன்பு அவளை அவன் பார்த்திருந்தும் எப்படியோ கவனிக்காமல் விட்டு விட்டானா? அவளுக்கு என்ன வயதிருக்கும்? அவளுடைய கண்களுக்குள் பார்க்கும் ஆபத்தை அவன் எதிர்கொள்ளத்தான் வேண்டுமா? அவளொரு மோதிரத்தை அணிந்திருந்தாளா? அவளது பின்புறம்? மேலும் இப்போது அவன் அவளிடம் என்ன சொன்னான்? மலர்களோடு பொருத்திப் பார்த்தால் திறப்பதும் மலர்வதும் ஒரே அர்த்தத்தையே கொண்டிருந்தன. அவளருகில் இருக்கும்போது அவன் தெளிவாகப் பேசும் திறனற்றவனாகிப் போயிருந்தான்.

அதே வேளையில், குடியிருப்பின் மாடிப்பகுதியில் இருந்த கேட், தொலைபேசியில் எலியட்டோடு பேசிக் கொண்டிருந்தாள். அந்த அழைப்பு ஐந்து மணி நேரங்களைத் தாண்டி நீண்டிருந்தது. உபயோகத்திலிருந்த அனைத்து தொலைபேசிகளையும் கேட் பயன்படுத்தும்படி ஆனது: அவளுடைய அலைபேசி, மேலும், அலைபேசிக்கு முன்பாக, ஒன்று சமையலறையிலும் மற்றொன்று படுக்கையறையிலுமாக வீட்டிலிருந்த மலிவான இரண்டு கார்ட்லெஸ் ஹெட்செட்டுகள். “பீப் சத்தத்தை உன்னால் கேட்க முடிகிறதா? நான் தொலைபேசியை மாற்ற வேண்டும். சற்று பொறு,” சமையலறைத் தொலைபேசியின் மின்னூட்டம் குறைந்தபோது உணர்ச்சி மேலிட அவள் அலறினாள். அந்த தொலைபேசியைத் தூக்கிக்கொண்டே (அவளுடைய அழைப்பின் முதல் பகுதி) அவள் படுக்கையறைக்குள் சென்றாள், இரவு மேசையின் மீது கிடந்த அதன் சகோதரனை எடுத்து இந்த புதிய தொலைபேசிக்குள் பேசினாள், “இருக்கிறாயா? உனக்குக் கேட்கிறதா? இன்னொரு தொலைபேசியை நான் அணைக்கும் வரை சற்று பொறு,” அதன் பிறகு இரண்டையும் சமையலறைக்குள் தூக்கிச் சென்று மடிந்து போன தொலைபேசியை சுவரில் அதற்குரிய இடத்தில் மாட்டினாள். இந்தத் தொலைபேசிக்குப் பின்னாலிருந்த நிலைப்பெட்டியின் கதவு, ஒரு காலத்தில் உணவுக்கலங்களையுடைய நகரும் மேடையை வைக்கப் பயன்பட்ட, குறுகலானதொரு இருண்ட காற்றுப்புழைக்குள் சென்று முடிந்தது. படுக்கையறை தொலைபேசியிலிருந்து, எலியட்டுக்குத் திருமணமானதையும் அவளுக்குத் திருமணமானதையும் ஏன் அவர்களுக்கிடையே இருக்கக்கூடிய பொதுவானதொரு ஒற்றுமையென்பதாக நினைக்கத் தேவையில்லையென்பதை விளக்குகையில், கேட் இந்த நிலைப்பெட்டியை எண்ணற்ற முறை திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள். குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமா என்பதில் நிலையான முடிவெடுக்க இயலாதவர்களாக இருந்தார்கள் என்பதை கணக்கில் கொள்ளும்போது, குழந்தைகளில்லை என்பது தங்களிருவருக்கும் இடையே ஒருவிதமான உணர்வுப்பூர்வமான சமநிலையை உருவாக்குவதாக அவள் உணர்ந்தாள், மேலும் அவர்களுடைய துணைவர்கள் அடிக்கடி இதனைத் தெளிவுபடுத்திக் கொண்டேயிருப்பார்கள், அவர்களுடைய நம்பிக்கையின்படி – மிகக்குறிப்பாக எலியட்டைப் பற்றிய சூசசின் மதிப்பீட்டின்படி, மிகக்குறிப்பாக கேட்டைப் பற்றிய ஜிம்மின் மதிப்பீட்டின்படி, மேலும் சூசனோ ஜிம்மோ தங்களுடைய மணவாழ்க்கையை மாற்றியமைப்பது குறித்து ஒருபோதும் பேசியதில்லை – நிச்சயமாக அவர்கள் “ஒரு அற்புதமான அப்பாவாகவோ” அல்லது “ஒரு அற்புதமான அம்மாவாகவோ” இருப்பார்கள்.

எலியட் குறுக்கிட்டான்: “அதை கேட்டுக் கொண்டேயிருப்பது உனக்கு சலிக்கவில்லையா?”

“அது நாம் பேசுவதற்கு அப்பாற்பட்டது,” என்று பதிலளித்தாள் கேட், மேலும் தொடர்ந்தாள், “ஓ, எலியட், உன்னோடு பேசுவதென்பது ஏன் இத்தனை கடினமான விசயமாயிருக்கிறது?”

“உனக்கு பதில் வேண்டுமா?”

“உனக்கு என்னைத் தெரியும், எப்போதும் ஆர்வமாகத்தானிருப்பேன்,” எத்தனை கேவலமான சங்கதி? ஏன் இதற்குமேலும் தன்னால் எலியட்டோடு படுக்க முடியாதென்பதை, முதல் முறையாக என்றில்லை, அவனுக்குத் தெளிவுபடுத்த அவள் பொறுமையாக முயன்று கொண்டிருந்தாள். உரையாடலின் முதல் சில மணி நேரங்களுக்கு, காதலுக்கும் சரசத்துக்குமான தனது ஆழ்மன உந்துதலை, அவளால் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் தொலைபேசிகளை மாற்றுகிற சமாச்சாரமும், கசகசக்கும் வீட்டுக்குள் ஒவ்வொரு அறையாக அலைய நேர்ந்ததும், உள்ளபடி, அவளைத் தளர்வுறச் செய்தன. ஒருவகையில், அந்த முதல் தொலைபேசியை இழந்ததென்பது, ஒரு குறியீட்டைப்போல, எலியட்டின் ஆசைக்கெதிரான தனது தற்காப்புணர்வின் முதல் வரிசையை அவள் இழந்ததைப் போலிருந்தது. அல்லது ஒருவேளை, சமையலறையில் நின்றபடியே அவள் யோசித்தாள், நகரும் மேடையின் கதவினை ஒரு கையால் திறந்து மூடுவது, ஒரு தொலைபேசிக்காக மற்றொரு தொலைபேசியைத் தியாகம் செய்யும் தவிர்க்கவியலாத செயல்பாடு என யாவுமே, ஆரம்பிக்கும்போது காதலர்கள் அன்பைத் தங்களிடையே பரிமாறிக்கொள்ளத் தேவையானதொரு மனப்பாங்கினை உருவாக்குவதற்கான மறைமுக செயல்கள் என்பதாகக்கூடப் புரிந்து கொள்ளலாம். அல்லது நான் அத்தனை அபத்தமாக யோசிக்கிறேனா?

“மீண்டும் ஒரு முறை சொல். நீ சொன்னது எனக்குக் கேட்கவில்லை.” அவள் எலியட்டிடம் சொன்னாள். சூடேற்றும் குழாய்கள் சத்தமிட்டன; பகல்பொழுது இருளுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. சமையலறை ஜன்னலுக்குக் கீழேயிருந்த ரேடியட்டரிலிருந்து வெளியேறிய நீராவியின் சீற்றம் அவளுக்குக் கேட்டது. எலியட் மீண்டும் ஆரம்பித்தான், “நானொரு உளநோய் மருத்துவரென்பதால் ஒரு சூழலின் அத்தனை சாத்தியங்களையும் என்னால் தன்னியல்பாகவே கண்டுணர முடியும் என்று சில நேரங்களில் நீ நினைப்பதாக நான் நினைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் அப்படிப்பட்ட உளநோய் மருத்துவரில்லை.”

“உன்னுடைய மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களில் ஒருத்தி என்பதைப்போல தயவு செய்து என்னிடம் பேசாதே,” என்றாள், அவன் பெருமூச்செறிந்தான்.

“கேட், நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்திருப்பவர்கள், கேட்.” என்றான்.

“ஜிம் உன்னுடைய நண்பன்.”

“நீயும் கூடத்தான் என்னுடைய தோழி.”

“உன்னுடைய மனைவியும் என்னுடைய தோழிதான்.” அவள் தொடர்ந்தாள், “கருமம். நான் இதை வெறுக்கிறேன். இப்போது இந்த நாசமாய்ப்போன தொலைபேசியும் சத்தம் போடுகிறது. இரு. எலியட். உன்னால் பொறுக்க முடியுமா?” படுக்கையறை தொலைபேசிக்குப் பதிலாக போதுமான அளவு மின்னூட்டம் நிரம்பியிராத சமையலறைத் தொலைபேசியை எடுத்துக் கொண்டாள், பிறகு அந்த தொலைபேசியோடு படுக்கையறைக்குள் சென்று படுக்கையின் முனையில் அமர்ந்தாள்.

“கேட், ஏன் நீ சூசனை இழுக்கிறாய்? நீ சொல்ல வருவது என்னவென்று எனக்குத் தெரிய வேண்டும். சூசனைப் பற்றி பேசுவதில்லை என்று நாம் ஒப்பந்தம் செய்திருந்தோம். ஆக நீ இதை எங்கே கொண்டு செல்கிறாய்? கேட்? இருக்கிறாயா?” அவன் காத்திருந்தான்.

“நீ என்னோடு பேசுவாயா? தயவு செய்து, இப்படிச் செய்யாதே. இதைச் செய்யாதே, கேட். சரி, நாசமாய்ப் போக, நாசமாய்ப் போக, நாசமாய்ப்-”.

அவனுடைய தொலைபேசி சத்தம் போட்டது. மின்னூட்டம் காரணமல்ல. வேறொரு அழைப்பு. “கேட், ஒரு நிமிடம் காத்திரு. பொறு, கேட்” என்றான்.

மற்ற அழைப்பை ஏற்றான். “ஹலோ?”

“நான்தான்,” என்றாள், பிறகு வீட்டிலிருக்கும் இரண்டு தொலைபேசிகளும் முடிந்து போனதை சோகமான குரலில் அவனிடம் தெரிவித்தாள், மேலும் இப்போது அலைபேசியில் அவள் அழைத்திருப்பதும் கூட துரோகமிழைப்பதை தான் விரும்பவில்லை என்பதைச் சொல்லத்தான்.

“நீ வெளிப்படையாகப் பேச வேண்டும்,” என்றான்.

“உனக்குக் கேட்கிறதா? சிக்னல் தெளிவாக இருக்கும்போது சொல்,” அலைபேசியை காதில் அழுத்திக்கொண்டு படுக்கையறையிலிருந்து வரவேற்பறைக்கு நடந்தாள், பிறகு சமையலறைக்கு, அங்கிருந்து கூடத்தின் வழியாக, பயன்படுத்தவியலாத கழிவறையைக் கொண்ட சிறிய இரண்டாவது குளியலறையைத் தாண்டி, குடியிருப்பின் முன்புறமிருந்த சின்னஞ்சிறு ஓய்வறையை வந்தடைந்தாள்.

“இங்கே?” என்று கேட்டாள். “இங்கே?”

“எனக்கு சரியாக கேட்கவில்லை,” என்றான். ஆகவே அவள் தான் வந்த வழியே திரும்பிச் சென்று மீண்டும் வரவேற்பறைக்கு வந்தாள், அங்கிருந்த விளக்கை எரியச் செய்தாள். வானம் இருட்டாக இருந்தது. மற்ற மனிதர்களின் ஒளிரும் ஜன்னல்களை அவள் நகரத்தின் அத்துவானமெங்கும் கண்டாள். மறுபடியும், அவர்களுடைய உறவு குறித்த கேள்வியை அப்படியே விட்டுச் செல்லும் இடத்துக்கு எலியட் அவளை மடைமாற்றியிருந்தான் – அல்லது தன்னை அவன் வேறெங்கோ இழுத்துச்செல்ல அவள் அனுமதித்திருந்தாள். எப்படிப் பார்த்தாலும், விவாதிப்பதில் என்ன பயன் உள்ளது? ஜிம் எந்நேரமும் வீடு வந்து சேரலாம், பிறகு, சிறிது நேரம் கழித்து, இருவரும் வெளியே சென்று இரவு விருந்துக்காக சூசனையும் எலியட்டையும் சந்திப்பார்கள். எத்தனை பெரிய பைத்தியக்காரத்தனம்? அவள் இன்னும் குளித்து உடை மாற்ற வேண்டியிருந்தது. எலியட்டிடம் ஒப்புக்கொண்டாள், “சரி, நான் இதைப் பற்றி யோசிக்கிறேன்.”

“அப்படியென்றால், நாளை?” என்றான் எலியாட், பிறகு சொன்னான், “நீ புரிந்து கொண்டு விடுவாய் என்பது எனக்குத் தெரியும்.” அடுத்த சில நிமிடங்களில் தன்னுடைய அலுவலகத்தை விட்டு வெளியேறாவிட்டால் உணவகத்துக்கு தனது வெள்ளை அங்கியோடுதான் வர வேண்டியிருக்கும் என்று வேடிக்கையாகச் சொன்னான். அவர்கள் விடைபெற்றார்கள், பிறகு அலைபேசியை வைத்து விட்டு கால்மணி நேரத்துக்கு அவள் அழுது கொண்டிருந்தாள்.

கீழே, மலர் விற்பனையகத்தில், கேட்டுக்கான ஜிம்மின் பூங்கொத்து வளர்ந்து கொண்டேயிருந்தது. அது மஞ்சள் ரோஜாக்களை மட்டும் கொண்டிருக்கவில்லை, மாறாக, சிவப்பு மற்றும் ஊதா நிற அலங்கார அணிகலன்களையும்; ஹீதர், ஃப்ரீசியா மற்றும் அல்ஸ்டோமேரியா போன்ற வண்ணப் புதர்ச்செடிகளின் சிறு கிளைகளையும்; பச்சை மற்றும் வெள்ளை நிற அல்லிகள்; நீல நிற ஐரிஸ் மலர்கள் மற்றும் சாமந்திப்பூக்கள்; மேலும் அந்தப்பெண் கூடைகளுக்குள்ளிருந்து எடுத்த, அவனுடைய ஒப்பிசைவுக்காக அவனது பார்வையில் படும்படி காற்றில் அசைத்துக்காட்டிய, வேறு சில பொருட்களும் அந்தப் பூங்கொத்தில் இருந்தன. “வேறென்ன? அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்?” மேலும் சிலவற்றை எடுக்க, குளிர்சாதனப்பெட்டிக்குள் குனிந்தவாறு அவள் கேட்டாள்.

“பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. நீ எதை விரும்புகிறாயோ அதையே அவளும் விரும்புவாள் என்று நினைக்கிறேன்,” என்றான், மேலும் தான் அப்படிச் சொன்னது சரிதானா என்று யோசித்தான். அவளைத் தூண்ட முயல்கிறானா? கடைக்குள் வேறு வாடிக்கையாளர்கள் யாருமில்லை. நெருங்கிச் சென்றாலும் சற்று எட்ட நின்றபடி, காட்சிக்கு வைத்திருந்த ஒவ்வொரு பெட்டியாக அவன் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து சென்றான். தான் உள்ளாடைகளும் கூட வாங்கியிருக்கலாம், என்று எண்ணிக் கொண்டான்; மேலும், சொல்லப்போனால், கேட்டுக்காக வாங்குவதாகச் சொல்லிக்கொண்டு, தான் மலர்க்கொத்தை வாங்கியது, அந்தப் பெண்ணுக்காகவும்தான் என்று அவனுக்குத் தோன்றியது, அதாவது, அன்றைய பின்னிரவின் புணர்ச்சிக்காக அவளுடைய கணவன் கீழே ஒரு கடைக்காரப் பெண்ணை மாற்றுருவாகப் பயன்படுத்தி தன்னை தயார் செய்து கொள்கிறான் என்பதை அறிய நேர்ந்தாலும் கேட் அவ்வளவாக வருத்தப்பட மாட்டாள்.

“பேபிஸ் பிரத்1” அந்தப் பெண் அவனிடம் சொன்னாள்.

“புரியவில்லை?”

“எனக்கு பேபிஸ் பிரத் ரொம்பப் பிடிக்கும்.”

“அப்படியெனில், நமக்கு அதுவும் ஒரு கொத்து தேவைப்படும்.” என்றான் ஜிம்.

“நல்லது.”

அவள் திரும்பினாள், முடிவுறாத அந்த மலர்க்கொத்தினை பணப்பெட்டியின் அருகேயிருந்த ஆயத்தமேடையில் சாய்த்து வைத்தாள், மேலும், அவனுக்குத் தன் முதுகைக் காட்டியபடி, சொன்னாள், “இங்கே எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது.” தன்னுடைய தோள்பக்கமாகத் திரும்பிப் பார்த்தாள் (அவன் நெருங்கி வர வேண்டுமென விரும்புகிறாளா?), பிறகு, வேகமாக – என்னவொரு அசாத்தியமான சாகசம் என நினைத்தான் – மீண்டும் திரும்பி பூங்கொத்தினைப் பிரிக்கும் வேலையைத் தொடங்கி மலர்களை வெவ்வேறு தொகுதிகளாகப் பிரித்தெடுத்தாள், பல்வண்ண வேறுபாடுகளைக் கொண்ட வரிசைகளின் குவியல், வண்ணங்களின் அடிப்படையிலோ வகைபிரித்தோ அவள் அவற்றை அடுக்கவில்லை (ஒன்றாகக் கிடந்த சிவப்பு, ஊதா மற்றும் மஞ்சள் நிற ரோஜாக்களைத் தவிர்த்து), ஆனால், தண்டின் நீளத்தைப் பொறுத்து அவற்றைப் பிரித்தாள் என்று புரிந்தது. தளைகளைப் பிரித்து முடித்தவுடன், கத்திரியை எடுத்தாள்.

“ஒரு நிமிடம் ஆகும்,” என்றாள்.

தண்டுகளை அவள் நுணுக்கமாக வெட்டுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். “நிதானமாகச் செய்,” என்றான்.

ஆனால் ஒரு பிரச்சினை இருந்தது: இந்த மலர்களின் விலை என்னவாக இருக்கும்? அவள் தொகுத்த பூங்கொத்து – அவளுடைய கைகளில், அது தோற்றமளித்ததைப் போல – மலர்கள் விற்பனையகத்துக்கு வரும்போது அவன் விரும்பியதை விட ரொம்பப் பெரிதாகவும் அகலமாகவும் இருந்தது. பூங்கொத்து என்பதைக் காட்டிலும், கவனமாக அடுக்கப்பட்ட, மேசையின் மையத்தில் வைக்கப்படும் மலர்களின் தொகுதியாகவே அது தோற்றமளித்தது, மலர்களுக்கிடையே அந்தப்பெண் திணித்த இலைகளடர்ந்த பச்சைநிறக் கிளைகளும் மங்கிய வெண்மையோடிருந்த பேபிஸ் பிரத்தும் அதற்குக் காரணமாகயிருக்கலாம், உருண்டு திரளாக தடிக்குமளவுக்கு அவள் அவற்றை அலங்கரித்திருக்கவில்லை.

“நாம் சிறிது மலர்களை வெளியே எடுக்கலாமா?” என்று கேட்டான், ஆனால் அப்படி கேட்டிருக்கக்கூடாது என்று எண்ணினான். என்ன மாதிரியான மனிதன், தன்னுடைய மனைவிக்கென ஒரு மாபெரும் பூங்கொத்தை உருவாக்கச் சொல்லி இன்னொரு பெண்ணை நாடி, பிறகு அவளைத் தன்னுடைய செய்கையிலிருந்து பின்வாங்கச் சொல்லுவான்?

“நான் எதை வெளியே எடுக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று அந்தப் பெண் கேட்டாள். அவள் எரிச்சலுற்றாளா? அவனுக்கு அவளுடைய முதுகுதான் தெரிந்தது. அவனைப் பற்றி குறைவாக நினைப்பாளோ? தன்னுடைய மனைவியை ஏமாற்றும் கேவலமான வேசைமகன் என்று அவனைப் பற்றி எண்ணுவாளோ?

“அதாவது, குறிப்பாக, கலைநயம் பொருந்தியதொரு பூந்தொட்டியை நெருப்புக்கூண்டினருகே உள்ள மாடத்தின் மீது வைக்க ஆசைப்படுகிறேன், அதில், என்னுடைய கணிப்பின்படி, இவை ரொம்ப அழகாகத் தோற்றமளிக்கும்,” அவன் நேர்த்தியாகப் பொய்யுரைத்தான். (உண்மையில், மாடத்தின் மீது ஒரு பூந்தொட்டி இருக்கவே செய்தது – ஆனால் அதனாலென்ன?) அவன் தொடர்ந்தான், “நான் சொல்ல வருவது என்னவென்றால் என்னுடைய நினைவில் இருக்கும் பூந்தொட்டி இத்தனை பெரிதாக இருக்காது.”

அவனுக்கு காரணங்கள் தேவைப்பட்டனவா? குடும்ப வாழ்க்கை பற்றி அவன் பேசியிருக்கத்தான் வேண்டுமா?

அவன் சட்டென்று பின்வாங்கினான். “யோசித்துப் பார்த்தேன், மாடத்திலிருக்கும் பூந்தொட்டியைப் பற்றிக் கவலைப்படாதே. இப்படியொரு அருமையான பூங்கொத்தை சிதைப்பதென்பது வெட்கக்கேடான சங்கதி.”

”நான் எதையும் சிதைக்கப் போவதில்லை.”

அவள் அவனைத் திட்டுகிறாளா? அவர்களுக்குள் சங்கடங்கள் மூள்கின்றனவா? அவளுடைய அடுத்த நகர்வுக்காகக் காத்திருந்தான்.

“நான் உங்களுக்குப் பெரியதொரு பூந்தொட்டியைத் தரமுடியும்,” கடைசியாக அவளொரு பரிந்துரையை முன்வைத்தாள்.

அவனுக்கு மூச்சு முட்டியது. அவள் அவனைக் காட்டிலும் குறைந்தபட்சம் இருபது வருடங்கள் சிறியவளாக இருக்க வேண்டும். ஆனால் தன்னை ஒரு நிச்சயமற்ற மனிதனாக அவனை உணரச்செய்தது அவர்களுக்கிடையேயான வயது வித்தியாசமோ அல்லது அவன் திருமணமானவன் என்கிற சங்கதியோ அல்ல. அவனுடைய சிந்தனைகளின் செயல்முறைதான் சிக்கலானது: சின்னச்சின்ன அளவுகளில் அவன் எடுத்துக்கொண்ட லித்தியம் அவனுடைய யதார்த்தவுலகை மிதவேகத்தில் இயக்கியது. லித்தியம் அல்லது உளச்சோர்வுக்கு எதிரான காக்டெயில் அல்லது அவையனைத்தும் இணைந்து நிகழ்த்தும் கச்சேரி. சில சமயங்களில், அவன் பேசும்போது, உள்ளுக்குள்ளிருந்து உருவாகும் ஒருவித காற்று தன்னுடைய எண்ணங்களை இடைமறித்து மீண்டும் தன்னை நோக்கி விசையோடு வீசச்செய்வதாக உணர்ந்தான், ஆக வார்த்தைகளை வெளியிடும்போது சுய-பிரக்ஞையோடு தனது சொற்றொடரியலை மிகுந்த கவனத்தோடு தகவமைத்துக் கொள்ள அவனை நிர்ப்பந்தித்தது.

“நான் இப்போதுதான் வெளியேறி – நான் இப்போதுதான் மருத்துவமனையை விட்டு வெளியேறி வந்துள்ளேன்,” அவன் உளறிக்கொட்டினான்.

அவனை எதிர்கொள்வதற்காக அவள் திரும்பியதைப் பார்த்தான்; கைகளில் வெள்ளை அல்லிகளையும் சிவப்புநிறத்தில் சாட்டின் துணியையும் ஏந்தியிருந்தாள், அவளுடைய கண்கள் இடது, வலது, இடது என அலைபாய்ந்தன.

“நானதைச் சொல்லியிருக்கக்கூடாது! நானதைச் சொன்னேன் என்பதை மறந்து விடு! நானதைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை! பூந்தொட்டியைக் கொடு! எனக்கு பூந்தொட்டி வேண்டும்!”

“ஓ!” பூங்கொத்தின் பகுதிகளைத்தான் இன்னும் கைகளில் வைத்திருக்கிறோம் என்பதை உணர்ந்ததில் திடுக்கிட்டதைப்போல, அவள் சொன்னாள். “நான் பின்னால் ஓடிச்சென்று ஒன்றை எடுத்து வருகிறேன்.”

மாடிப்படிகளின் கீழே ஜிம்மும் அந்தப்பெண் தங்களை சீரமைத்துக் கொண்டிருந்த வேளையில், உயரமான குதிகால்களைக் கொண்ட சிவப்புநிற காலணிகளோடு கேட் வீட்டுக்குள் நடைபயின்றாள், பணப்பைக்குள் அதற்கான சங்கதிகளை திணித்து, சாவிகளை அவற்றின் வழக்கமான இடத்தில் தேடிக் கொண்டிருந்தாள். ஜிம் உள்ளே நுழையும்முன் தப்பித்து அவள் வெளியேற வேண்டும். வீதியிலிருந்து தொலைபேசியில் அழைத்து அவனை விடுதியில் சந்திப்பதாகச் சொல்லலாம். இடைவெளியின்றி, எலியட்டிடமிருந்து ஜிம்மிடம், பிறகு எலியட்டிடம், பிறகு ஜிம்மிடம், பிறகு சூசனிடம் என்று செல்ல நேர்வது அசிங்கம். ஆனால், உண்மையில், அவள் எங்கு செல்லப் போகிறாள்? வெளியே மர இருக்கையில் உட்கார முடியாத அளவுக்கு குளிராகயிருந்தது. விடுதிக்கு அடுத்ததாக இருந்த மதுக்கூடம் ராசியில்லாதது என்பதோடு உளச்சோர்வையும் உண்டாக்கக்கூடியது, அது வயதான மனிதர்களின் கூடாரம், மேலும் விடுதியினுள்ளே இருந்த மதுக்கூடமோ மேசைக்காக அடித்துக்கொள்ளும் மக்களின் கூட்டத்தால் நிரம்பியிருக்கும். பிராட்வேயின்2 அருகேயுள்ள செய்திநிலையத்தில் வெறுமனே புத்தகங்களைப் புரட்டியபடி நிற்கலாம், ஆனால் அப்படியென்றால், கடையின் பின்புறமுள்ள பாலியல் படங்களைப் பார்க்க அவளைத் தாண்டி நெருக்கியடித்துச் செல்லும் மனிதர்களின் வரிசையை சகித்துக் கொள்ள வேண்டி வரும். வீட்டின் கதவை தனக்குப் பின்னால் அறைந்து சார்த்தி ஐந்தாவது மாடியிலிருந்து இறங்க ஆரம்பித்தாள். குளிர்காலத்தின்போது சூரியன் மறையும் முன்பே வீட்டை விட்டுக் கிளம்புவதில் அவள் பெரும்பாலும் தோற்றுப்போவாள். அது அவளுடைய மனநிலையை பெரிதும் பாதித்தது.

வெளியே, காற்று பலமாக வீசியது. அவள் தொப்பி அணிந்திருக்கவில்லை. கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த துண்டினை இறுக்கிக் கட்டினாள், மேலங்கியின் பட்டையை இழுத்து விட்டு தலையைத் தாழ்த்திக் கொண்டாள், கைக்குள் பணப்பையை இறுகப் பற்றியபடியும் கைமூட்டுகளை அங்கியின் பைகளுக்குள் புதைத்தும் அவள் பிராட்வேயை நோக்கி நடந்தாள். பனி பெய்தாலும் பெய்யலாம். ஆனால் இப்போதெல்லாம் பனி பொழிவதென்பது இன்னும் சரியான காலத்தில் நிகழ்கிறதா என்ன? தொப்பி இருக்கிறதோ இல்லையோ, தெருவிளக்கிலிருந்து சில பனிக்கட்டிகள் நழுவி தன் தலையின் மீது வீழ்வதில் அவள் சங்கடப்பட மாட்டாள். அவள் சிறுமியாயிருந்த காலத்தில், குளிர்காலம் முழுதும் தரையில் பனி படர்ந்திருக்கும். அதுதான் அவள் நினைவிலிருந்தது. உண்மையில், அவள் பண்ணையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள், நியூ இங்கிலாந்தில் இருந்தது பற்றி, நியூயார்க்கில் அல்ல. ஆக அவள் சொல்ல வருவதுதான் என்ன? இந்நாட்களில், பலவருடங்களுக்கு முன்னால், அவளுடைய பெற்றோர் இறப்பதற்கு முன்பிருந்ததைப்போல இல்லாமல், வெகு அரிதாகவே பனி பொழிந்தது. அவளுடைய சிறுவயதின் நினைவாயிருந்த பனிப்பொழிவு காலத்தில் தொலைந்து போனதாக அவளுக்குத் தோன்றியது, மாறிவரும் தட்பவெட்பநிலையின் காரணமாகவும்.

உயர்ந்த குதிகாலைக் கொண்ட காலணிகளோடு தன்னால் இயன்றளவு வேகமாக அவள் நடந்தாள். பிராட்வேயை நெருங்கி, நகரத்தின் உட்புறத்தை நோக்கித் திரும்பி நடந்து மலர் விற்பனையகத்தைக் கடந்து சென்றாள், அழகான அந்த கடைப்பெண் அப்போதுதான் பின்புறத்திலிருந்து மலர்களோடு வெளியேறி வந்தாள் – அவளுக்கான மலர்கள், கேட்டுக்கான மலர்கள் – அவை அவற்றுக்கான பூந்தொட்டிக்குள் இருந்தன.

“இதோ தயாராகி விட்டது,” என்று அந்தப்பெண் ஜிம்மிடம் அறிவித்தாள். கைகளை நீட்டி, மலர்களைத் தருவதாக, தனக்கு முன்னால் அவற்றை உயர்த்திக் காட்டினாள். ஆனால் அதனை அவளிடமிருந்து பெற்றுக்கொள்ள அவன் நகரும் முன்பாக, எதிர்பாராமல் – மருந்துதான் காரணம், மூளையை மழுங்கடித்து அவனது எதிர்வினையை காலந்தாழ்த்தியது – அந்தத் தொகுதியை மேடையின் மீது எறிந்துவிட்டு, அதீத-எடையுடைய பூந்தொட்டிக்காக தான் மேலும் கீழும் தேட நேர்ந்ததை விளக்கினாள், அகலமாக மட்டுமில்லாமல் பெரியதொரு பூங்கொத்தை சரியாகத் தாங்கிக் பிடிக்குமளவுக்கு ஆழமாகவும் தேர்ந்தெடுக்க வேண்டியதானது.

ஜிம்மும் அந்தப் பெண்ணும் அவளுடைய படைப்பை ரசித்தார்கள். பரந்து விரியவோ அல்லது கீழ்நோக்கி குனியவோ எளிதான முறையில், மலர்களின் தண்டுகள் நேராய் நிமிர்ந்து நிற்க, அந்தப் பூங்கொத்தின் அடர்த்தி மெல்ல மெல்ல புலனானது. ரோஜாக்கள் தங்கள் முட்களோடு அனைத்து இடங்களையும் நிரப்பியிருந்தன, மேலும் அல்லிகள், தடித்த அதன் தண்டுகளை அந்தப்பெண் நடுவில் குவித்திருந்தாள், பூங்கொத்தினுடைய மேற்பாகத்தில் அவை பொங்கி வழிந்தன, அதாவது, அதாவது, அதாவது – ஏதோவொரு பித்துப்பிடித்த உலகிலிருந்து வெடித்துக் கிளம்பும் பித்துப்பிடித்த மரங்களைப் போல, என்று அவன் எண்ணினான். பேசுகிறபோது தன்னை மிக லேசாக உணர்ந்தான். “மலர்களை சின்னச்சின்ன குழுக்களாகக் கட்ட ரிப்பன்களையும் சாட்டின் துணிகளையும் நீ பயன்படுத்தியுள்ள விதம் எனக்கு ரொம்பப் பிடிக்கிறது. சின்னச்சின்ன பூங்கொத்துகளாலான பெரிய பூங்கொத்து என்பதைப்போல தோன்றுகிறது. பார்ப்பதற்கு நிறைய விசயங்கள் இருக்கின்றன! என்னால் அல்லிகளின் மணத்தை உணர முடிகிறது. அந்த வாசனையை நீ முகர்ந்து பார்க்க விரும்பவில்லையா? ஓவியர் ஃப்ரகனார்டை உனக்குத் தெரியுமா? பௌச்சரைத் தெரியுமா? பௌச்சரின் மலர்களைப் பார். பெரும்பாலும் அவை நாற்றமடிப்பவை. அனேகமாக ஃப்ரிக் அருங்காட்சியகத்தில் பௌச்சர் தொங்கிக் கொண்டிருக்கலாம்.”

அவன் தீவிரமாக முயன்றான். “உனக்கு அருங்காட்சியகங்கள் பிடிக்குமா?”

“நேரம் கிடைக்கும்போது.”

“நான் உனக்கு ஃப்ரிக்கைச் சுற்றிக்காட்ட முடியும்.” அகலமாக இளித்தபடி தோள்களை குலுக்கியவன் தன்னுடைய தலையை அசைத்துக் காட்டினான், ஓர் ஆடியைப் போல அவள் அவனை பிரதிபலித்தாள், தோள்களைக் குலுக்கி, முகத்தை கோமாளியைப் போல வைத்துக் கொண்டாள்.

“நீ செய்கிற வேலையை மிகவும் சரியாக இருக்கிறாய்,” என்றான், அவள் “நன்றி” என்று சொன்னபிறகு கேட்டாள், “நீங்கள் எப்படி பணம் செலுத்த விரும்புகிறீர்கள்?”

தான் செலவு செய்ய நேர்ந்திருக்கும் தொகையை யூகிக்க அவன் முயன்றான். எவ்வளவாக இருந்தாலும், நிச்சயம் ரொம்பப் பெரிய தொகையாகத்தான் இருக்கும். அவனது சமீபத்தைய மருத்துவமனை செலவுகளைக்கூட பெரும்பாலும் கேட்டின் காப்பீடுகளின் மூலமாகவே சமாளிக்க முடிந்தது – அவளுடைய ஆவணங்களைத்தான் அவன் பயன்படுத்தினான்; அவனுடைய வாழ்வில் வெகுகாலம் நீண்ட (கேட்டின் வார்த்தை, சில சமயங்களில் கிண்டலாகவும் பயன்படும்), மிக மோசமான, குழப்படியான இந்த காலகட்டத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் – என்றாலும் செலுத்தப்படாத தொகைகள் என நிறையவே மிச்சமிருந்தன, ஒவ்வொரு வாரமும் வந்து சேரும் புத்தம்புது கடன்கள், உடன், ஓரளவு தொகையாவது திரும்பி கிடைக்கக்கூடிய, நகரத்தின் அப்பர்ஈஸ்ட்3 சைடில் அவன் கலந்து கொண்ட மனநல பிற்காப்பு வகுப்புகளுக்கான செலவுகளும் இருந்தன.

“நாம் இதை பயன்படுத்தலாம்,” அவன் தன்னுடைய கடனட்டையை அவளிடம் கொடுத்தான்.

அவள் அட்டையைத் தேய்த்தாள். “இது வேலை பார்க்கவில்லை,” என்றாள். இரண்டாவது முறையாக அட்டையை இயந்திரத்தில் தேய்த்தபிறகு, அவள் வருத்தந்தொனிக்கும் குரலில் சொன்னாள். “உங்களுடைய வங்கிக்கணக்கில் ஏதும் சிக்கலிருப்பதாக இதற்கு அர்த்தமில்லை,” என்றாள். “நீங்கள் உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ள வேண்டும். வேறு ஏதாவது வங்கிக்கணக்கை முயற்சித்துப் பார்க்க விரும்புகிறீர்களா?”

“என்னிடம் வேறு கணக்குகள் எதுவுமில்லை. மொத்தத் தொகையைச் சொல்.”

“முன்னூற்று நாற்பத்தியொரு டாலர்கள் மற்றும் அறுபது சென்ட்கள்.”

அவனுடைய பதட்டம் அதிகரிக்க நீளமாக மூச்சு விட்டான். ஒரு பூங்கொத்திலுள்ள மலர்களுக்கு இத்தனை செலவாகுமா என்ன?

பைக்குள் கையை நுழைத்து பணத்தைத் தேடினான், ஆனால் அதனால் என்ன நடந்து விடும்?

“ஒரு நிமிடம் காத்திரு,” என்றான்.

என்ன செய்வது, என்ன செய்வது? அவன் தன்னுடைய மனைவியை அழைக்க வேண்டி வரும். அவன் அவளை அழைக்கத்தான் வேண்டுமா? அவளை அவன் அழைத்துத்தான் ஆக வேண்டும். தொலைபேசியை வெளியே எடுத்து எண்களை அழுத்தினான் – அந்தத் தருணத்தில் மருந்துகள் கைவசம் இருந்ததற்காக அவன் சந்தோசப்பட்டான் – உடனடியாக அழைப்பை ஏற்ற கேட் கத்தினாள், “எங்கிருக்கிறாய்? நான் சூசனோடு உணவு விடுதியில் இருக்கிறேன்! எலியட் வெளியே மகிழுந்தை நிறுத்திக் கொண்டிருக்கிறார். நீ உன்னுடைய சிகிச்சைக்குப் போனாயா?”

“கொஞ்சம் சத்தம் போடாமால் இருக்கிறாயா, கேட்?”

“இங்கே பயங்கரக் கூட்டமாக இருக்கிறது!”

“நான் உன்னோடு பேச வேண்டும், தனியாக,” என்றான், கடைப்பெண்ணை விட்டு விலகி திரும்பி நின்று கொண்டான். ஆனால் அந்த சிறிய இடத்துக்குள், அந்தப்பெண் ஒட்டுக்கேட்பதை அவனால் நிச்சயமாகத் தவிர்க்கவியலாது, எனவே தொலைபேசியைத் தன் கைகளால் மூடி, அவளிடம் குனிந்து கிசுகிசுப்பாகச் சொன்னான், “நான் இப்போது வந்து விடுகிறேன்,” பிறகு கடையை விட்டு வெளியேறி, உறையச் செய்யும் காற்றினூடாக நடைபாதியில் ஏறி நின்றான், மெல்ல, தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு, கேட்டிடம் சொன்னான், “வீட்டுக்கு வரும் வழியில் நின்று உனக்காக மலர்களை வாங்கினேன், ஆனால் ஏதோவொரு காரணத்தால் வங்கிக்கணக்கு கடனட்டையோடு ஒத்துப்போக மாட்டேன் என்கிறது, எனவே என்னிடம் போதிய பணம் இல்லாமல் நான் மலர் விற்பனையகத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறேன், ஆக என்னுடைய பிரச்சினை என்று நான் நினைப்பது என்னவென்றால் – கருமம், எனக்கு பிரச்சினை என்னவென்றே தெரியவில்லை, மிச்சமிருக்கும் பணத்தின் மீது நான் ஒரு கண் வைத்திருக்க வேண்டும், அல்லது தேவைக்கதிகமான பணத்தை நாம் செலவு செய்திருக்கும் சாத்தியமும் உள்ளது. இதுபற்றி நாம் பேசியிருக்கிறோம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் சத்தியமாக, இது ஒன்றும் அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை.”

“ஓ ஜிம், நீ செலவு செய்கிறாயா? எவ்வளவு செலவழித்திருக்கிறாய்?” கேட் அழுதாள், அவன் பயந்து பின்வாங்கினான்.

“சூசன் அங்கிருக்கிறாளா?” என்றான்.

“நான் சொல்லுகிற ஒரு வார்த்தை கூட உனக்குக் கேட்காதா? அவள் இங்கேதான் இருக்கிறாள். நாங்கள் மன்ஹாட்டன்களை அருந்திக் கொண்டிருக்கிறோம். நீ வருகிறாயா? உனக்காகத்தான் காத்திருக்கிறோம். நீ ஏன் சூசனிடம் பேச விரும்புகிறாய்? ஜிம், நீ நம்முடைய பணத்தை செலவழிக்கிறாயா?”

“நான் சூசனிடம் பேச விரும்பவில்லை. இந்த உரையாடல் நம்மிருவருக்கு மட்டுமிடையில் நிகழ வேண்டுமென்பதைத்தான் விரும்புகிறேன்.”

“ஜிம், தயவு செய்து, தெரிந்து கொள்வதற்கான விசயங்களெல்லாம் நம்மைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு ஏற்கனவே தெரியாது என்பதைப்போல் நடந்து கொள்ளாதே.”

“இல்லை – நான் நம்முடைய பணத்தை செலவழிக்கவில்லை.”

“நீ குழம்பிப் போயிருக்கிறாய்.”

“நீ ஏன் என்னை ஆராய்கிறாய்? நான் குழம்பவில்லை. மலர்களைக் கொண்டு உன்னை ஆச்சரியப்படுத்த நினைத்தேன். ஆனால் தெளிவாக, அது என்னுடைய தவறுகளில் இன்னுமொன்றாக மாறிப்போனது. அடுத்தமுறை நான் ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசிக்கிறேன். நான் செய்வது எல்லாம் தேவையற்றதுதான்.”

“நிறுத்து,” என்று கேட் அவனிடம் சொன்னாள்.

தொலைபேசியின் வழியாக விடுதியின் மதுக்கூட சத்தங்களை அவனால் கேட்க முடிந்தது, குரல்களும் வேலை-முடிந்த பிறகு உண்டாகும் மற்ற கூச்சல்களும். பிறகு காற்று வீசியது, அதன்பிறகு அவனால் கேட்க முடிந்த ஒரே சத்தமென்பதாக தொலைபேசியின் அமைதியை உணர்ந்தான். காற்று வடிய, கேட்டின் குரல் சொல்லிக் கொண்டிருந்தது, “எலியட் இங்கே வந்து விட்டார், லாரன்சோ எங்களுக்காக ஒரு மேசையை சுத்தம் செய்து கொண்டிருக்கிறான். மலர்களைப் பற்றி நான் யாரிடமாவது பேசுகிறேன்.”

இப்படியாக மீண்டும் அவன் கடைக்குள் சிரமப்பட்டு நுழைந்தான், தொலைபேசியை நீட்டி, அந்தப்பெண்ணிடம் சொன்னான், “அவள் உன்னிடம் பேச விரும்புகிறாள்.”

அந்தப்பெண் ஒருகணம் தயங்கினாள், பிறகு கைகளை நீட்டி தொலைபேசியைத் தன்னுடைய கரத்தில் தர அவனை அனுமதித்தாள்.

“ஹலோ?” என்று அவனுடைய தொலைபேசியில் சொன்னாள்.

அவன் கடையின் ஒரு முனையில் சென்று நின்றான். அந்தப்பெண் அவனுடைய மனைவியின் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் எண்ணைக் கேட்டு எழுதியபோது, விளையாட்டுத்தனமாக, மலர்களை முகர்ந்தபடி, வெறுமனே சுற்றித்திரிவதை எண்ணி அவன் வருந்தவில்லை. அவளுடைய பெயரை அவன் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாது, இனி அதற்கு சாத்தியமில்லை, கேட் அதனை உறுதி செய்து கொள்வாள், மண்பாண்டத்தில் வளர்க்கப்பட்ட ஒரு இலைகளடர்ந்த மரத்தின் பின்னாலிருந்த தன்னுடைய மறைவிடத்தை விட்டு வெளியேறும்போது அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். பூக்கள் நிரம்பிய தொட்டிகளும் குளிரூட்டும் சாதனங்களும் வரிசையாக இருப்பதை அவன் கண்டான், பின்புறம் செல்லும் கதவையும், ஆனால் அந்தப்பெண்ணை எங்கே? கேட் சொன்ன ஏதோவொரு விசயத்துக்கான எதிர்வினையாய் அவள் சிரிப்பதை கேட்க முடிந்தது, பூங்கொத்தின் பின்னால் அவள் நின்றிருப்பதைப் புரிந்து கொண்டான். “ஓ, ஆண்களையும் அவர்களுடைய முக்கியமான செலவீனங்கள் குறித்தும் எனக்குத் தெரியாதா என்ன!” என்று அதிசயித்தாள்.

கேட் அவளிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாள்? வழக்கம் போல, அவனை கேலி செய்கிறாளா? அவனை மனம்பிறழ்ந்தவன் என்கிறாளா? அதீத ஆர்வம் சார்ந்தும் தற்கொலையிலும் அவனுக்கு சில சிக்கல்கள் இருந்தன, மேலும், ஒருகணம் முன்பாக அவர்களுடைய முந்தைய உரையாடலின்போது கேட் சுட்டிக்காட்டியதைப்போல, முந்தைய வசந்தகாலத்தின்போது 59 ஸ்டிரீட் பிரிட்ஜில்4 சிலநாட்கள் அவன் தங்கியிருந்ததையும், அவர்களுடைய படுக்கையறை ஜன்னலுக்கு வெளியே தெரிந்த ஒருவழிப்பாதையில் நிகழ்த்திய வாகன விளையாட்டுகளையும் – இல்லை, அவை விளையாட்டுகள் அல்ல, கண்டிப்பாக இல்லை, உண்மையாகவே – அனைவரும் அறிவார்கள்.

“என்னவொரு அற்புதமான கிறிஸ்துமஸ் அது! முதலில் வடதுருவம் உருகியது, பிறகு அத்தனை குட்டிச்சாத்தான்களும் மடிந்து போயின.”

அவற்றில் எது குறித்தும் யோசிக்க அவன் விரும்பவில்லை. ஆனாலும் கூட, அவன் புணர விரும்பிய பெண்ணொருத்தி தற்போது கேட்டிடம் பேச்சு வாங்கிக் கொண்டிருப்பதை – அதுவும் அவனுடைய தொலைபேசியில்! – ஒட்டுக் கேட்டபடி இப்போது ஒரு புதர்ச்செடியின் பின்னால் ஒளிந்து கிடக்கிறான் என்றால் அதற்கு அதுதான் காரணம். எப்படியானாலும், சில சமயங்களில், தினப்பராமரிப்பு மையத்திலிருந்து வீடு திரும்பும்போது – அவனுக்கான சிகிச்சைமுறையை அப்படித்தான் சொல்லிக் கொள்வான் – வாழ்க்கை குறித்து உற்சாகமடைந்தவனாக, ஐந்தாவது வழிச்சாலையில் நகரப்பேருந்தை விட்டுத் தாவி குதித்து, பெர்க்டார்ப் குட்மேனுக்குச்5 சென்று, இரண்டாவது மாடிக்கு மின்தூக்கியில் ஏறிப்போய், கடை மூடும்வரை உடைகளை முயற்சித்துப் பார்ப்பதில், என்ன பெரிதாய் குடிமுழுகி விடப் போகிறது? அது தவறான செயலா என்ன? பைத்தியமாக்கும் மனச்சோர்வால் அவன் பாதிக்கப்பட்டிருப்பதாக அவனுடைய மருத்துவர்கள் நினைக்கவில்லை; சொல்லப்போனால், அப்படியொரு சங்கதியை அவர்கள் மறுத்தார்கள். என்றாலும், கேட் அவனுடைய சிகிச்சை விவரங்களைத் தொடர்ந்து வாசித்து வந்தாள், மேலும் தானாகக் கற்றுணர்ந்த மேதாவியைப் போல, பெய்ன் விட்னியின்6 மருத்துவர்கள் நேர்பார்வையில் காணக்கிடைத்த ஒரு சங்கதியை வேண்டுமென்றே குறைத்துக்காட்ட முயலுவதாக உறுதிபட நம்பினாள்: மருந்துகளை உட்கொள்ளுவதால் அவனுக்குள் உண்டாகும் மோசமான மாற்றங்களின் சங்கதி, மேலும் அங்கிகள், கழுத்தணிகள், சட்டைகள் மற்றும் காலணிகளில் தொடர்ச்சியாகத் தெரிந்தே அவன் செலவு செய்வதையெல்லாம் கணக்கில் கொள்ளும்போது, அவை யாவும், குறைந்தபட்சம், அவனுடைய கலவையான மனச்சோர்வு நிலையை பிரதிபலிப்பதாகவே அவள் நினைத்தாள். “ஏன் அவர்கள் உனக்கு ஒலன்சாப்பின்7 தருவதில்லை?” என்று அவனைக் கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். தனது சிகிச்சையில் தலையிடாமல் இருக்குமாறு அவளை அவன் கெஞ்சினான், மேலும் ஆலோசனையும் சொன்னான் – அவளுடைய பதின்ம வயதில் நிகழ்ந்த அவளது அப்பாவின் மரணத்தையும் மசசூசட்ஸில் இருந்த பண்ணையை விட்டுக்கொடுக்க நேர்ந்ததையும் பற்றி எண்ணிப்பார்த்து – கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலுக்குச் சென்று அவன் மீண்டது அவளுக்குள் புதைந்திருந்த பழைய துயரங்களை மீட்டெடுத்த சூழலில், அவற்றை அதிகரிக்கும் வழிமுறைகளில், கைகளால் நெய்யப்பட்ட அவனுடைய புதிய ஆடைகளைக் காட்டிலும், திவாலாகிப் போவது பற்றிய அவளுடைய அச்சமும், உயிரை பலி கேட்குமளவுக்குப் பேரதிர்ச்சி என்பதாக செலவு செய்வதை அவள் வலியுறுத்துவதுமே காரணமாகியிருந்தன என்று சொன்னான்.

புதர்ச்செடிக்குப் பின்னாலிருந்து தன்னை உற்றுப்பார்த்தான். பொருத்தமில்லாத ஒரு காஷ்மீரி மேலங்கியோடு இன்று அவன் சற்றே-வெளுப்பான கம்பளியால் நெய்த ஹெரிங்போனை8 அங்கியாக அணிந்திருந்தான். அதில், மேற்சட்டையில், கொஞ்சம் தோள்பட்டைத் துணியும், காற்றுக்கென இரு துளைகளும், அத்தோடு, வெகு அழகான, மூன்று-இரண்டாகத்-தைக்கப்பட்ட-பொத்தான்களின் வகைமாதிரியும் இருந்தன (மேற்சட்டையின் மார்புப்பகுதியில் தைக்கப்படும் பாணிகளில் தற்போது அவனுக்கு மிகவும் பிடித்த முறை), மேலும், இடுப்பின் கீழ், திருப்பியடிக்கப்பட்ட ஒற்றை மடிப்புகளும் பாதத்தில் ஒன்றேகால்-அங்குலம்-மடித்தும் தைத்த காற்சட்டைகள். எந்த ஒரு மனிதன் தான் தன்னுடைய காற்சட்டைகளை மடித்துத் தைக்க விரும்ப மாட்டான்? மேற்சட்டையின் கைப்பகுதியில் இடதுபுறம் ஒரேயொரு பொத்தானை மட்டும் திறந்து விட்டிருந்தான், அதேபோல வலதுபுறமும். ஒரு கடனாளியைப் போல அவன் தோற்றமளிக்கவில்லை. அவன் அப்படியா தோன்றினான்?

கேட் அவனைக் கொல்லப் போகிறாள். அவனைக் கொல்லுமளவுக்கு அவள் பைத்தியக்காரிதான். அதுதான் உண்மை. அவன் என்ன செய்கிறான், ஏற்கனவே ஒரு காரணமற்ற செலவுக்கு, எலியட் மற்றும் சூசனுடனான இரவுணவுக்கு அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தார்கள் எனும்போது – மாலை முடிகையில், நிச்சயமாக அது நீண்டதொரு மதுக்கூட செலவாகவே இருக்கும் – வாரநாட்களின் நடுவில் வரும் ஓர் சராசரியான இரவில் விலையுயர்ந்த மலர்களுக்கென ஏன் அவன் செலவழிக்கிறான்? ஆனால், விடுதியின் பின்புறமிருந்த சிறிய மேசையில் தன்னுடைய கணவனை எதிர்பார்த்து, நண்பர்களோடு அமர்ந்திருந்தபோது, கேட் நினைத்துக் கொண்டாள், அவளுடைய கணவனைப் பொறுத்தவரையில் எப்போதும் இப்படித்தான் நடக்கும்: அவன் எதையாவது செய்வான், விளைவுகளை அவள் சந்திப்பாள். “எத்தனை அவமானமாக இருக்கிறது,” என்று வேதனையடைந்தாள். மலர் விற்பனையகத்தின் பெண்ணோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணிடம், சத்தம் போட்டுப் பேச கேட் விரும்பவில்லை, அதை விடக் குறிப்பாக எலியட்டிடம், ஜிம்மின் மீது அவளுக்கிருக்கும் எரிச்சலை சாக்காகக் கொண்டு மறுநாளே அவளை அழைத்து விடுதியில் இன்னும் சில மதியநேரங்களை செலவிட வேண்டி வாதிடுவான்.

வாரம் ஒரு முறையோ அல்லது சில நேரங்களில் இரு முறையோ அவள் எலியட்டைச் சந்திக்க, ஈஸ்ட் சைடிலிருந்த லாவெல் விடுதிக்குச் சென்று வந்தாள், அது மாடிசனுக்கும் பார்க்குக்கும் இடையில் அறுபத்து-மூன்றாவது வீதியில் இருந்தது. பேருந்தில் பயணிப்பாள். குறிப்பிட்டுச் சொல்வதெனில், அவள்தான் முதலில் வருவாள். அறையின் சாவியைப் பெற்று, மேலே சென்று, குளிப்பாள்; எலியட் ஆய்வகத்தில் மாட்டிக் கொள்ள நேர்ந்து இருட்ட ஆரம்பித்தால், அறையிலுள்ள சிறிய குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து ஒரு மன்ஹாட்டனையோ அல்லது ஏறத்தாழ ஒரு மன்ஹாட்டனையோ கலந்து முடிப்பாள், பிறகு நிர்வாணமாக, ஜன்னலின் மீது சாய்ந்து, வடதிசையிலிருக்கும் கார்னஜி மலைகளின் ஈஸ்ட் நைண்டீஸை9 நோக்கி பார்த்தபடியிருப்பாள், அங்கேதான் கேட்டின் அம்மா, அவளைப் போலவே ஒற்றைப் பிள்ளையாக இருந்தவள், அவளுடைய அப்பாவை மணமுடித்து பண்ணைக்குச் செல்லும்வரை அங்குதான் வசித்து வந்தாள்.

மன்ஹாட்டன்கள்தான் அவளுடைய அம்மாவுக்கும் விருப்பத்துக்குரிய மதுவகைகளாக இருந்தன. தன்னுடைய அம்மாவைப் போலல்லாது, மாலை நேரங்களில் மூன்றோடு முடித்துக் கொள்ள வேண்டுமென கேட் முயன்றாள். அன்றிரவு லாரென்சோவின் விடுதியில், வழக்கத்தை விட அவள் அதீத முனைப்போடிருந்தாள், ஒரு வாய் சாப்பிடும் முன்பாகவே இரண்டாவதை முடித்திருந்தாள். தனது கண்ணாடிக்கோப்பையை ஒருகையிலும் தொலைபேசியை இன்னொரு கையிலும் ஏந்தியபடி, மலர் விற்பனையகத்தின் பெண் அவளுடைய அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் எண்ணை மீண்டுமொரு முறை ஒப்பித்தபோது, விடுதியின் பலத்த சத்தங்களின் நடுவே அதனை உன்னிப்பாகக் கேட்டபடியிருந்தாள். எலியட் அவளின் பின்னே அமைதியாக அமர்ந்திருந்தான். கைகளைக் கட்டியிருந்தான், அவனுடைய கால்களுக்கு இடமளிக்கும் வகையில் அவனது இருக்கை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பின்பக்கம் சாய்ந்திருந்தது. சூசன் மேசையை விட்டு எழுந்தாள்; அவள் கேட்டிடம் அறிவித்தாள் – மிகுந்த இறுக்கத்தை நோக்கி அவள் நகர்வதை அந்தக்குரலில் உணர முடிந்தது – “கேட், நீ என் மிகச்சிறந்த தோழி, ஆனால் இத்தனை காட்டமான பானத்தை நீ எப்படி அருந்துகிறாய் என்று தெரியவில்லை.” கேட்டையும் எலியட்டையும் நோக்கி ஒன்றாக, அவள் சொன்னாள், “நீங்கள் இருவரும் எனக்கும் மாபெரும் சகாயம் ஒன்றைச் செய்ய முடியுமா? லாரென்சோவைத் தடுத்து நிறுத்தி எனக்கொரு காஸ்மோவைக் கொண்டு வரும்படி சொல்வீர்களா?”

“என்னுடைய கணவனைப் பற்றி ஒருவார்த்தை கூட என்னிடம் உதிர்க்காதே,” சூசன் கழிவறைக்குச் சென்ற மறுகணம், கேட் எலியட்டை எச்சரித்தாள்.

தொலைபேசியில், அந்தப் பெண்ணிடம், பிறகு சொன்னாள், “மன்னியுங்கள், நான் உங்களைச் சொல்லவில்லை. நான் வேறு யாரிடமோ பேசிக் கொண்டிருந்தேன்.”

அதே வேளையில், பெண்களுக்கான அறையில், சூசன் அவளுடைய தொலைபேசியில் இருந்தாள், ஓர் அடைப்புக்குள்ளிருந்து ஜிம்மின் எண்ணுக்கு அழைத்தாள்.

என்றபோதும், பதிலளித்தது அந்தப்பெண்தான்.

“ஹலோ, கொஞ்சம் பொறுக்க முடியுமா?” என்று அந்தப்பெண் சொன்னாள். சற்று நேரத்துக்கு தொலைபேசி அமைதியானது. சிறிய இடைவெளிக்குப் பிறகு, அந்தப்பெண் மீண்டும் வந்து கேட்டாள், “யார் அழைப்பது என்று நான் கேட்கலாமா?”

“யார் பதிலளிப்பது என்று நான் கேட்கலாமா?”

“தயவு செய்து, பொறுத்திருங்கள்.”

“சார்?” அந்தப்பெண் ஜிம்மை அழைத்தாள். அவனை அங்குமிங்கும் தேடினாள். அவன் எங்கே போயிருப்பான்? கடையை எட்டு மணிக்கு மூட வேண்டும். கிட்டத்தட்ட மூடும் நேரம். “ஒரு பெண்மணி உங்களை அழைக்கிறார்.”

“நான் இங்கிருக்கிறேன்! இதோ இங்கே!” தன்னுடைய மரத்துக்குப் பின்னாலிருந்து அவன் பதில் சொன்னான்.

“ஒரு நொடியில் அவர் உங்களிடம் பேசுவார்,” அழைத்தவரிடம் அவள் உறுதியளிப்பது அவனுக்குக் கேட்டது. அதன்பிறகு, சின்னதாய் ஒரு அமைதி, மீண்டும், தனது தொழிற்முறை தொனியை வரவழைத்துக் கொண்டு, அந்தப்பெண் கேட்டிடம் தொடர்ந்து பேசினாள். “மீண்டும் ஒரு முறை நான் இதை உங்களிடம் கேட்க நேர்ந்ததற்காக மன்னியுங்கள். கடைசி ஐந்து எண்களையும் காலாவதியாகும் நாளையும் மீண்டும் ஒரு முறை உறுதி செய்யலாமா?”

அவன் மருத்துவமனையில் இருந்தபோது – கடந்த ஆறு மாதங்களில், மூன்று முறை அவசர சிகிச்சைப் பிரிவு அறைக்கு சென்று வரவும் இரண்டு முறை பூட்டிய-நோயர் அறைக்குள் அனுமதிக்கவும் வேண்டியதாகியது – எண்ணற்ற நாட்களை அவன் மெத்தையில் கிடந்தவாறே கழித்திருக்கிறான், அழுதபடியே. அவனுடைய மருத்துவர்கள் (தினசரி சிகிச்சை முறைகளை முன்னின்று வழிநடத்தும் சமூக சேவகர்களோடும் உளநோய் சிகிச்சைக்கான செவிலியர்களோடும் இணைந்து), கருவறையில் இருப்பது போலுள்ள இந்த நிலையிலிருந்து வெளியேறும்படியும் வேறு எதையாவது முயற்சிக்கும்படியும் அவனைத் தூண்டினார்கள், குறைந்த பட்ச முயற்சியாக, தொலைக்காட்சியைப் பார்க்கவோ அல்லது மற்ற நோயாளிகளோடு குழு விளையாட்டுகளில் ஈடும்படியோ, ஆனால் அது அவர்களுக்கு மிகுந்த சவாலான காரியமாகவே இருந்தது. சில நேரங்களில் அவனால் உணர முடியும், குளியலறைக்கோ அல்லது நீரூற்றுக்கோ அல்லது நோயாளிகளுக்கான பொது அறைக்கோ போகும்போதும் வரும்போதும், அல்லது செவிலியர் பிரிவில் தனக்கான மருந்துகளைப் பெற்றுக் கொள்ள வரிசையில் நிற்கும்போதும், அல்லது பரிசோதனை அறையின் மேசையில் வெறுமனே நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும்போதும், அவன் நகர்ந்து செல்லும் பகுதியிலுள்ள காற்று முழுதும் அவனை சுற்றிச் சூழ்ந்து கொள்வதான தீர்க்கமான உணர்வு அவனுக்குள் தோன்றும், அத்தோடு ஒரு திடப்பொருளென அந்தகாற்று – உண்மையாகவே, அதை விளக்க எந்த வார்த்தையும் போதாது – அவனைச் சுற்றி இறுகும். அதனுடைய எடை அவனை அழுத்தும். இது அவனைக் காயப்படுத்தியது, மிக மோசமாகக் காயப்படுத்தியது, என்றாலும் வலியின் ஊற்றுக்கண்ணைக் கண்டடைய முயன்றபோது அவனால் அது முடியவில்லை: அது, அவனறிந்த வரையில், அவனிடமிருந்துதான் உருவானது. மெத்தையின் மீது, கேட் மற்றும் சீர்குலைந்துபோன தங்களுடைய காதலை எண்ணி உடைந்து போனவனாக விசும்பியபடி, சூழ்நிலைகளால் நசுக்கப்படுபவனைப்போல கிடப்பான்.

“சார்?”

அந்தப்பெண்ணின் குரல் கடை முழுதும் எதிரொலிப்பதாகத் தோன்றியது. அவன் அவளை உற்றுப்பார்த்தான். பூங்கொத்துக்குப் பின்னாலிருந்து அவள் எப்போது வெளியே வந்தாள்? மரத்தின் மறுபக்கம் அவள் நின்றிப்பதை அவனால் பார்க்க முடிந்தது. இலைகளின் வழியே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீங்கள் நலமாக இருக்கிறீர்களா, சார்?”

“நான் நலமாகத்தான் – எனக்கு ஒரு நிமிடம் வேண்டும்.” அவனுடைய உதடுகள் வறண்டு இதயம் வேகமாகத் துடித்தது. அனேகமாக, மருந்துகள் அதற்கான காரணமாக இருக்கலாம்.

“யாரோ ஒருவர் உங்களோடு பேச விரும்புகிறார்கள். உங்களால் அழைப்பை ஏற்கவியலுமா? முயற்சிக்கிறீர்களா?” அவள் அவனுடைய தொலைபேசியை ஒரு கையில் ஏந்தியிருந்தாள், கிளைகளின் வழியே அவனிடம் நீட்டினாள்.

அவளுடைய கையை நெருங்க அவன் மரத்துக்குள் தனது கையை நீட்ட வேண்டியிருந்தது. அவன் வியர்த்திருந்தான்.

தொலைபேசியில் “ஹலோ,” என்றான்.

“என்னதான் நடக்கிறது,ஜிம்?” லாரன்சோவினுடைய விடுதியின் பெண்களுக்கான கழிவறையிலிருந்து சூசன் அவனிடம் வினவினாள்.

“சூசன், எப்படியிருக்கிறாய்?” என்றான்.

“ஒரு காலத்தில் நான் நன்றாகத்தானிருந்தேன்.”

“மன்னித்துக்கொள்.”

“நாங்களனைவரும் இங்கிருக்கிறோம், ஜிம். உனக்காகக் காத்திருக்கிறோம், காத்துக் கொண்டேயிருக்கிறோம்.”

“அங்கு வந்து சேர என்னால் ஆன எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறேன். என்ன வேண்டுமென்று சொல்லி விட்டீர்களா? விசேஷமாக ஏதாவது? எது நன்றாக இருக்கிறது?”

”கேட் தன்னிடமிருந்தே விலகி நிற்கிறாள். நீங்களிருவரும் திவாலாகி விட்டதாகச் சொல்கிறாள். மொத்தப் பணத்தையும் நீ செலவு செய்து விட்டதாகவும் சொல்கிறாள்.”

“நான் அப்படிச் செய்யவில்லை.”

“என்னிடம் பொய் சொல்லாதே, ஜிம். தயவு செய்து, என்னிடம் பொய் சொல்லாதே.” மூக்கை உறிஞ்சி, மெதுவாக, விசும்பத் தொடங்கினாள்.

“அழுவதை நிறுத்து, அழுவதை நிறுத்து, செல்லக்குட்டி,” அவன் தொலைபேசியில் கிசுகிசுத்தான். பிறகு ரிசீவரின் மீது கையை வைத்துக்கொண்டு அந்தப் பெண்ணிடம் சொன்னான், மரத்தினுடைய இலைகளின் வழியே அவள் இன்னும் அவனை உற்றுப் பார்த்தபடியிருந்தாள், “மீண்டும் ஒரு முறை நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்.” மனதை திடப்படுத்திக் கொண்டு, நிமிர்ந்து நின்று, அவன் புதர்ச்செடியின் பின்னாலிருந்து வெளியேறி வந்தான். அந்தப்பெண்ணைப் பார்க்கும் துணிவு அவனுக்கில்லை, ஆனால் அவள் தன்னிடம் சொல்வதை அவனால் கேட்க முடிந்தது, மிகுந்த சங்கடத்தோடு அவளைக் கடந்து கதவை நோக்கி நடந்தபோது, அவனுடைய மனைவியும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டையும் வேலை பார்க்கவில்லை என்பதாகத் தோன்றியது, அதுவும் – மலர்களுக்கான பணத்தைத் தர அவனுக்கு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா?

கைகளை அசைத்து, திரும்பி வருவேன் என்று சைகை செய்தான். வெளியேறி குளிரினூடாக பிராட்வேயை நோக்கி நடக்கத் தொடங்கினான். தனது மேலங்கியின் கழுத்துப்பட்டையை இழுத்துப் போர்த்திக் கொண்டான். மலர் விற்பனையகத்தின் கதவு அவனுக்குப் பின்னால் இழுத்து மூடப்பட்டது.

அதே வேளையில், நால்வருக்கான அவர்களின் மேசையில், கேட்டும் எலியட்டும் பொறுமையை இழந்திருந்தார்கள்.

“நான் அவனிடம் பேசுகிறேன்,” என்றான் எலியட். முழங்கைகளை மேசையின் மீது வைத்திருந்தான். தன்னுடைய ஸ்காட்ச்சில் கொஞ்சத்தைக் கூட அவன் குடித்திருக்கவில்லை.

“அது நல்ல யோசனையாகப் படவில்லை.”

“உன்னுடைய தொலைபேசியைத் தா.” தனது கையை நீட்டினான்.

“நான் இன்னும் அழைப்பில்தான் இருக்கிறேன்.”

“கேட்,” என்றான்.

“என்னைத் தனியே விடு.”

“உன் விருப்பம்.” என்றவன், இருக்கையில் சாய்ந்தமர்ந்தான், அவள் அவனிடம் வெடித்தாள், “எப்படி உன்னால் இதுபோல நடந்து கொள்ள முடிகிறது? நீ ஒரு மருத்துவர். ஏன் இப்படி கருணையின்றி இருக்கிறாய்?”

“நான் மருத்துவராய் இருப்பதற்கும் என்னுடைய உணர்வுகளுக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டான் (இதைக் கேட்டவுடன் அவள் தன் விழிகளை உருட்டினாள், ஆனால் அவன் அதை கவனித்ததாகத் தோன்றவில்லை.) மேலும் தொடர்ந்தான், “நானொரு மருத்துவராக இருக்கலாம், ஆனால் உன்னுடைய கணவனின் மருத்துவரல்ல.”

“அவனுடைய பெயர் ஜிம், நினைவிருக்கிறதா?”

“உனக்கு போதை அதிகமாகி விட்டது என நினைக்கிறேன். அப்படித்தான் என்று நினைக்கிறேன்.”

அவன் மேசையிலிருந்து எழுந்து, பைகளைத் தடவிப் பார்த்தான் – அவனுடைய தொலைபேசிக்காக – பிறகு சொன்னான், “நாசமாய்ப் போக, நான் ஆராய்ச்சிகள் செய்கிறேன். நோயாளிகளைக் கவனிப்பவனில்லை. அவனுக்கென அற்புதமான மருத்துவர்கள் இருக்கிறார்கள். நானே அவனை அழைக்கிறேன்.”

அவன் கிளம்பிப்போய் கேட் தனியாக இருந்தபோது, சூசனின் காஸ்மாபாலிடனோடு லாரன்சோ வந்து சேர்ந்தான்.

“உன்னைத் தனியாக விட்டு அனைவரும் போய் விட்டார்கள்,” என்றான் லாரன்சோ, கலகலப்பான குரலில் கேட் பதிலுக்குச் சொன்னாள், “அனைவரும் போய் விட்டார்கள்!”

“நான் உனக்கு இன்னொரு மன்ஹாட்டனைக் கொண்டு வருகிறேன்,” சூசனின் காக்டெயிலை மேசையின் மீது வைத்து விட்டு லாரன்சோ கேட்டின் காலி கோப்பையை எடுத்தான். கேட்டால் மெலிதாகப் புன்னகைக்க முடிந்தது. தொலைபேசியை காதினருகே வைத்தாள். “ஜிம்? ஜிம், நீ அங்கிருக்கிறாயா?” என்று கிசுகிசுத்தாள்.

கீழ்த்திசை நகரத்தில் ஆறு தொகுதிகள் தள்ளி, ஜிம் சூசனோடு பேசிக் கொண்டிருந்தான். “நான் இங்கேதான் இருக்கிறான், உன்னோடுதான் இருக்கிறேன், செல்லக்குட்டி,” அவளிடம் உறுதியாகச் சொன்னான். உண்மையில், அவளோடு மீண்டும் படுப்பது குறித்து அவன் யோசிக்கவில்லை. ஓ – அவளோடு படுப்பதை அவன் பெரிதும் விரும்பினான் – பிரச்சினை அதுவல்ல. ஆனால் அந்த மாலைப்பொழுதில் அவனுடைய உடல் சுருங்கிக் கொண்டிருந்தது: காற்றின் எடை உடலின் மீது கவிந்து, அவனது ஆண்மையையும் மனிதகுலத்தின் மீதான நம்பிக்கையையும் தரைமட்டமாக்கியது.

“சூசன்,” என்றான். “சூசன்.”

“என்ன?” என்றாள். அவளுடைய குரல் அறையை நிறைத்தது. “என்ன நடக்கிறது? அது நிகழ்கிறதா? இப்போது அது உனக்குள் நிகழ்கிறதா? எனக்கு ரொம்பப் பயமாயிருக்கிறது. நான் என்ன செய்வேன்?”

“சூசன்,” என்றான். “சூசன்.”

இன்னும் சில நிமிடங்களில் சத்தமில்லாமல் மீண்டும் மலர் விற்பனையகத்துக்குள் திரும்பி அவன் நுழையவிருப்பதையும், அவனும் ஒரு தேவதையும் இணைந்து கேட்டுக்காகத் தயாரித்த மர்மமும் அழகும் நிரம்பியதொரு பூங்கொத்தைத் திருடப் போவதையும், அவன் அவளிடம் விளக்கினான்.  அந்த தேவதைக்கு அவன் உதவியிருப்பதை சுட்டிக்காட்டினான். தன்னை நேர்மையானவனாகவே உணர்ந்தான். தேவதைகளைப் பொறுத்தவரை தான் குறியீட்டுத்தன்மையோடு பேசுவதை சூசனிடம் ஒப்புக்கொண்டான் – நம்பிக்கையோடிருப்பதைப் பறைசாற்றவும் அவளுடைய நம்பிக்கையைத் தக்க வைப்பதற்காகவும் அவன் அப்படி செய்கிறான். உணவு விடுதிக்குள் அவன் நுழையும்போது அவள் நிதானமிழக்காமல் இருக்க வேண்டுமென்று தான் விரும்புவதாகவும் சொன்னான். பிறகு அழைப்பை துண்டித்து கேட்டை வந்தடைந்தான்.

“நான் வந்து கொண்டிருக்கிறேன்,” என்றான்.

“மகிழ்ச்சி,” என்றாள்.

“நான் உன்னை நேசிக்கிறேன்.” என்றான்.

“நான் உன்னை நேசிக்கிறேன், நான் உன்னை நேசிக்கிறேன்,” என்றாள்.

“நீ எலியட்டோடு பேசினாயா?” என்று கேட்டாள்.

”அவனிடம் நான் பேசவில்லை,” என்று சொன்னான்.

அதே வேளையில், எலியட்டால் அவனைப் பிடிக்க முடியவில்லை, தொலைபேசி இணைப்புகளை அவர்களுடைய இரண்டு மனைவிகளும் ஆக்கிரமித்திருந்தார்கள். அவன் ஏற்கனவே இரண்டு குறுந்தகவல்களை அனுப்பியிருந்தான், முதலாவது, “ஜிம், என்னை அழை, சரியா?” என்றது, மற்றொன்று, “ஜிம், என்னை அழைப்பாயா?” அவனுடைய மூன்றாவது முயற்சி வெற்றியடைந்தது, ஆனால் ஜிம் பதிலளிக்கவில்லை. அவன் பீப் சத்ததைத் கேட்டான், தொலைபேசியை காதிலிருந்து விலக்கி மேலோட்டமாகப் பார்த்தான், யார் அழைப்பது என்பதை அறிந்து, கேட்டிடம் சொன்னான், “அவன்தான். ஆனால் இப்போது அவனிடம் நான் பேச வாய்ப்பேயில்லை.”

“எனக்குப் புரிகிறது,” என்றாள். பிறகு அவள் சொன்னாள், “இங்கே வந்து சேர், அன்பே, இரவுணவுக்காக வந்து எங்களோடு சேர்ந்து கொள். நம் அனைவருக்கும் உணவு வேண்டும். நாம் உண்ண வேண்டும்.”

“அவன் உன்னை கவனித்துக் கொண்டானா, நான் சென்றபிறகு?” என்று கேட்டான்.

“சென்றபிறகு?” என்றாள்.

“அதை வேறு எப்படி சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.”

“நீ எங்கிருக்கிறாயோ அங்கேயே நிற்கிறாயா, மனிதர்கள் வந்து சேரும்வரை?” என்று கேட்டாள்.

“நோயர் ஊர்தியை அனுப்பி விடாதே,” அவன் அவளிடன் சொன்னான்.

தொலைபேசியைத் தன்னுடைய பைக்குள் வைத்தான். திரும்பி மலர் அங்காடியின் கதவைப் பார்த்து நின்றான். காற்று பலமாக வீசிய சாலையில் சில மனிதர்கள் அவனைக் கடந்து சென்றார்கள் – அல்லது அப்படித் தோன்றியது. நெற்றிப்பொட்டின் கீழ் ஒருங்கிணைந்து கொண்டிருந்த வலியும் அவனுடைய எண்ணங்களில் சேர்ந்திருந்தது. அவன் அதனை வெளியேற்ற விரும்பினான். இதைச் செய்வதற்கான வெவ்வேறு வழிமுறைகளை அவனால் யோசிக்க முடியும். திறந்திருக்கும் உயரமான ஜன்னல்களையோ அல்லது மேல்மாடிகளின் மூடப்படாத அவசரகால வழிகளையோ அல்லது பாலங்களினுடைய நடைபாதைகளை ஒட்டி அமைந்திருக்கும் கம்பி வேலிகளின் இடைவெளிகளையோ அவனுடைய மனம் எதிர்கொள்ள நேர்கையில் இப்படித்தான் இருக்கும்.

அவன் சற்று முன்னேறி வந்தான். கதவின் ஒரு பகுதி கண்ணாடியில் செய்யப்பட்டிருந்தது, எனவே அவனால் கடைக்குள் பார்க்க முடிந்தது. ஜன்னலை முஷ்டியால் உடைத்துத் திறந்து வேண்டுமென்றே கையின் நரம்புகளை வெட்டிக் கொள்வது எளிதாயிருக்கும் என்பதாக அவனுக்குத் தோன்றியது. மாறாக, கையை கதவின் சட்டத்தில் வைத்துத் தள்ளினான். உள்ளே தன் தலையை நுழைத்தான். அவனுடைய நடவடிக்கைகளில் குற்றவுணர்ச்சி இருந்தது, என்றாலும் அதற்கு அவசியமில்லை என்பதை அவனறிவான், நிச்சயம் மலர் விற்பனையகத்தில் அது தேவையில்லை – இதுவரை அவன் ஒன்று செய்து விடவில்லை. என்றபோதும், தலைகுனிந்தவனாக, ரகசியமாக அவன் உள்ளே நுழைந்தான்.

எங்கும் அந்தப்பெண் பார்வைக்குத் தட்டுப்படவில்லை. கடைசியாகப் பார்த்தபோது அவன் அளவிட்டதைக் காட்டிலும் அந்தப் பூங்கொத்து இப்போது இன்னும் பெரியதாகத் தெரிந்தது. நடுங்கும் தன் கைகளால் எப்படி அவன் அதனை பிராட்வே வரை தூக்கிச் செல்வான்? மேசையின் மீது அதனருகில் – கவனம், அவன் கவனமாக இருக்க வேண்டும் – அந்தப்பெண்ணின் கிளைநறுக்கும் கத்திரிகள் கிடந்தன, உடன் வழக்கமான கத்தரிக்கோல்களும் ஒரு சிறிய கூரான கத்தியும்.

அந்தப் பொருட்கள் அப்படியே கிடக்கட்டுமென அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

மேற்திசை நகரத்தில், உணவு விடுதியில், லாரன்சோ கேட்டுக்கு அவளுடைய பானத்தைக் கொணர்ந்தான். ரொட்டி வேண்டுமென்று கேட்டாள், பிறகு, வேண்டிய உணவினைத் தருவிக்க இவ்வளவு நேரந்தாழ்த்துவதற்காக அவனிடம் மன்னிப்பு கேட்டாள். “நாங்களனைவரும் கூடிய விரைவில் இங்கு ஒன்றுகூடிடுவோம்,” என ஆழ்ந்து பெருமூச்செறிந்தாள்.

அவளதைப் பற்றி சரியாகத்தான் சொன்னாள். ஜிம்மிடம் பேச முயற்சிப்பதை எலியட் கைவிட்டிருந்தான், குளிர் அவனை மீண்டும் உள்ளே துரத்தியிருந்தது. இருக்கைகளுக்கு இடையேயிருந்த பாதையின் வழியாக அவர்களுடைய மேசையை நோக்கி ஊர்ந்து வந்தான். சூசனும் கூட, ஒன்றுக்கு இருந்து முடித்த மறுகணமே, வந்து சேர்ந்திருந்தாள். தொலைபேசியில் இருக்கும்போது, அவளுடைய அகங்காரம் அதைச் செய்யவிடாமல் தடுத்திருந்தது.

ஆக, மீதமிருந்தது ஜிம் மட்டும்தான், அவனுக்குத் திருடனாகும் ஆசை இருக்கவில்லை. மாறாக, மலர்களுக்கான பரிவர்த்தனையாக வேறு எதையேனும் அவனால் தரவியலுமா? அவனது கைக்கடிகாரம் அத்தனை மதிப்புடையது அல்ல. அவனுடைய மேலங்கி புத்தம்புதியது, பூங்கொத்தையும் கைக்கடிகாரத்தையும் ஒன்றாகச் சேர்த்தால் கூட அவற்றை விட ரொம்பவே விலை அதிகமான ஒன்று. எனவே, மற்றொரு நாள் பணத்தோடு திரும்பி வருவேன் என்று உறுதி சொல்லும் விதமாக, நான் உனக்குக் கடன்பட்டிருக்கிறேன் (IOU) என்கிற சைகையை விட்டுச்செல்ல முடிவு செய்தான், அல்லது, உண்மையான பணத்தைக் கொண்டு வராவிட்டால் கூட, அவனுடைய அல்லது அவனது மனைவியினுடைய கடனட்டைகளில் ஏதெனும் ஒன்று மீண்டும் செயல்படத் தொடங்கி அவற்றை எப்போதிருந்து பயன்படுத்தலாம் என்கிற தகவலோடாவது மீண்டும் வருவான்.

ஆனால் ஓர் எழுதுகோளைத் தன் கைகளால் பற்றிக்கொள்ள முயன்றபோது, அவனால் முடியவில்லை; மேலும் பணப்பெட்டிக்குக் கீழே கிடந்த சிறிய துண்டுத்தாளின் மீது தன்னுடைய பார்வையை குவிக்க முயன்றபோது – கேட்டினுடைய அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் தகவல்களை அந்தப்பெண் எழுதிய பற்றுச்சீட்டின் ஒரு பகுதிதான் அது – தன்னுடைய மனம் மூர்க்கமடைவதை அவன் உணர்ந்தான். இதுதான் அந்த மனச்சரிவு. பற்றுச்சீட்டினை மடக்கிச் சுருட்டி தன் பைக்குள் திணித்துக் கொண்டான். பூங்கொத்தினை நெருங்கினான். பூந்தொட்டிக்குள் அந்தப்பெண் நீரை ஊற்றியிருந்தாள்.

அந்த ஃபிப்ரவரி இரவில் எட்டு மணிக்குப் பிறகு பிராட்வேயில் நகரத்தின் கீழ்த்திசையில் நீங்கள் நடந்து கொண்டிருந்தால், மலர்களின் பிரம்மாண்டமானதொரு திரட்சியோடு ஒரு மனிதன் உங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். விளக்குகளை மதிக்காமல் வீதிகளில் விரைந்தோடுகிறவன் போக்குவரத்து சமிக்ஞைகளுக்காகக் கூட நிற்கவில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்; எனவே, தனக்கு முன்னால் கைகளின் உயரத்தில் தூக்கிப் பிடித்திருந்த மலர்க்கூட்டங்களின் வழியே (முட்களை விட்டு விலகியிருக்க தன்னால் முடிந்ததைச் செய்கிறான்) அவனால் பார்க்க முடியாமல் போயிருக்கலாம் என்பதையும் சரியாக யூகித்திருக்கலாம். தொலைவில் எச்சரிக்கை மணியொலி கேட்ட போதெல்லாம் – மேலும், ஒருமுறை, இரவு நேர வானில் ஒலித்த உலங்கூர்தியின் அலகுகளினுடைய வெட்டுச்சத்தம் அவனை அருகாமை வீதியில் வெருண்டோடச் செய்தது – அவனை கள்ளத்தனமும் பயமும் நிறைந்ததொரு நடைக்குள் ஆழ்த்தியது. சமநிலையைத் தொலைத்திருந்தான்; காவலர்களை எண்ணி மிரண்டான். காற்றில் பறந்த மலர்கள் அவன் தலையில் மோதின. தொலைவிலிருந்து பார்க்கும்போது, அவனொரு பழங்கால, பயன்பாட்டில் இல்லாத சலிப்பூட்டும் மனிதனை நினைவுறுத்தலாம்; அலங்காரமானத் தலையணியை அணிந்திருக்கும் ஒரு காட்டுமிராண்டியை. ஆனால் அவன் நெருங்கி வருகையில், அவனுடைய ஐரோப்பிய பாணி உடைகளை நீங்கள் கவனித்திருக்கலாம், நவீனமான அவனது சிகையலங்காரத்தையும்; மேலும் உங்களை நீங்களே கேட்கவும் நேரலாம், “அந்த மனிதனுக்கு என்னதான் பிரச்சினை?”

காற்றைப்போல உங்களைக் கடந்து அவன் விரைகையில் சற்றே விலகி, கழுத்தில் சால்வையை இறுக்கிச் சுற்றிக்கொண்டு, பாதையில் தொடர்ந்து சென்றீர்களேயானால், அடுத்ததாக, மேலங்கி அணிந்திராத, மேலும் குழப்பத்தோடிருக்கும் ஒரு இளம்பெண்ணை தெருமுனையில் சந்திக்க நேரிடலாம். “மலர்களால் நிரம்பி வழியும் பூங்கொத்தோடு இருக்கும் மனிதனை நீங்கள் பார்த்தீர்களா?” தடுமாறும் குரலில் அவள் கேட்டிருப்பாள், நீங்கள் அவளுடைய வெறுமையான, வெளுத்த கால்களிலிருந்து பார்வையை விலக்கி, மேற்திசையை சுட்டி “அவன் அந்த வழியாகச் சென்றான்,” என்று சொல்லியிருப்பீர்கள். அதற்குள், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் இடைவெளிகளினூடாக, நடந்து செல்லும் பாதைகளின் மீது, பனித்திவலைகளின் முதல் துளிகள் சுழன்று விழத் தொடங்கியிருக்கும்.

லாரன்சோவின் விடுதிக்குச் செல்லும் பாதையில், விழுந்து கொண்டிருக்கும் பனியை, ஜிம் நிமிர்ந்து பார்த்தான். ஒருகணம், அதையொரு சமிக்ஞை என்பதாக எண்ணினான் – ஆனால், எதற்கான சமிக்ஞை? உணவு விடுதியின் கதவை பலமாகப் பிடித்திழுத்து பலவந்தமாக தள்ளித் திறந்தான், அறையின் முன்பகுதியில் உணவருந்திக் கொண்டிருப்பவர்களை குளிர் தாக்கக்கூடாது என்பதற்காகத் தொங்க விடப்பட்ட வெல்வெட் திரைச்சீலைகளுக்கும் கதவுக்குமிடையே இருந்த இருண்ட பகுதியில் சிதறுண்ட மலர்களோடு தடுமாறி விழுந்தான்.

திரைச்சீலைகளைப் பிரித்துக் கொண்டு எழுந்தான். நுழைவாயிலின் அருகே அமர்ந்திருந்த மனிதர்களிடம் “மன்னியுங்கள்” என்றான். நீளமாகவும்-மற்றும்-சிறிதாகவும் தண்டுகளைக் கொண்ட மலர்கள் ஒரேபோல திரைச்சீலைகளில் குத்தி நின்றன. இப்போது ஒரு பரிசாரகன் நெருங்கி வந்தான் – பிறகு லாரன்சோவும் கூட, அவனுடைய மென்மையான, விடுதியாளனின் குரலில் அழைத்தபடி, “சீயோ, ஜேம்ஸ். சீயோ. நான் உன்னை ஜிம் என்றழைக்க முடியாது, தெரியுமில்லையா.”

“லாரன்சோ, சீயோ.” என்றான் ஜிம். திரைச்சீலைகளை சீர் செய்வதில் பரிசாரகன் மும்முரமாயிருந்தான். லாரன்சோ உதவிக்கரம் நீட்டினான். “இந்த வழியாக, இந்த வழியாக வா,” என்று அறிவுறுத்தினான் லாரன்சோ. ஜிம் இடதும் வலதுமாகத் திரும்பினான், தன்னையும் – உடன் அந்தப் பூங்கொத்தையும் – வழவழப்பான துணியின் மடிப்புகளுக்குள் பொதிந்து கொண்டான். இதழ்கள் கணிசமாக உதிர்ந்தன. ரோஜா முட்கள் வெளியில் சிதறின; பூங்கொத்தின் மேற்பகுதியிலிருந்த தண்டுகள் காற்றில் ஆடின. அவன் அறைக்குள் தடுமாறி நுழைந்தான்.

“ஒன்றும் பிரச்சினை இல்லை, நான் நலமாகத்தான் இருக்கிறேன்,” மீண்டும் உறுதி செய்வதாக (அவன் அப்படி நம்பினான்) லாரன்சோவிடமும், பரிசாரகனிடமும், மேலும் வேடிக்கை பார்ப்பர்தற்காகத் தங்களுடைய இருக்கையை விட்டுத் திரும்பி அமர்ந்திருந்த மனிதர்களிடமும், தலையை அசைத்தபடி அவன் சொன்னான்.

“உனக்கு என்ன நடந்தது, ஜேம்ஸ்?” தன்னுடைய மார்புச் சட்டையின் வெண்ணிற பட்டு கைக்குட்டையை லாரன்சோ வெளியே எடுத்து, ஜிம்மின் நெற்றியில் கிடந்த, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா மற்றும் நீல நிற மலர்களைத் தட்டி விட்டான்.

“இங்கே வரும் மொத்த தூரமும் நான் ஓடி வந்தேன்,” என்றான் ஜிம்.

“உனக்கு ரத்தம் வருகிறது,” என்று லாரன்சோ அவனிடம் சொன்னான். ரத்தம் லாரன்சோவின் கைக்குட்டையை நனைப்பதை ஜிம் பார்த்தான்.

“நிறைய இடங்களில் அடிபட்டிருக்கிறது. அணில்களோடோ அல்லது வேறு எதனுடனோ சண்டையிட்டதைப் போல் தோற்றமளிக்கிறாய்.” என்றான் லாரன்சோ. பிறகு, பலமாகச் சிரித்தான்.

“நான் வந்து – நான் சண்டையிட்டுக் கொண்டுதானிருந்தேன், லாரன்சோ. அணில்களோடு அல்ல. ரோஜாக்களோடு.” ஜிம் விளக்கிச் சொல்ல லாரன்சோ கேட்டுக் கொண்டான். “ஓ, ஆமாம். நான் அவற்றை எடுத்துக் கொள்கிறேன்.”

அவன் பரிசாரகனிடம் பேசினான். “பால், இவற்றை ஜேம்ஸிடமிருந்து எடுத்துக் கொள்கிறாயா?” பின் ஜிம்மிடன், சொன்னான். “நாங்கள் உன்னுடைய மேசைக்கு இவற்றைக் கொண்டு வருகிறோம்.”

“வேண்டாம், வேண்டாம்,” என்றான் ஜிம். அந்த மலர்கள் கேட்டுக்கான அன்பளிப்பென்பதை லாரன்சோவிடம் விளக்கினான், அதை அவன்தான் அவளிடம் தர வேண்டும். அது மிகவும் முக்கியமானது என்றும் லாரன்சோவிடம் அறிவித்தான். பூந்தொட்டியை இறுகப் பற்றினான். அதன் விளிம்புகளிலிருந்து தெறித்த நீரால் அவனுடைய காற்சட்டைகள் ஈரமாயின. அவனது காலணிகளையும் நீர் அழுக்காக்கியது. சின்னச்சின்ன கிளைகள் மேலங்கியிலும் உடையின் முன்புறமும் ஒட்டியிருப்பதை அவனால் பார்க்க முடிந்தது. முட்களைத் தவிர்த்துக் கொள்ள தீவிரமாக முயற்சித்த பிறகும், மிகுந்த ஏமாற்றத்தை உணர்ந்தான். தன்னுடைய உடைகளை மீண்டும் அடித்துத் தைப்பவனிடம் தர வேண்டுமென எண்ணினான். பிறகு அவனது எண்ணங்கள் கசப்பானதொரு தோல்விக்குள் சிதைவுற்றன. அவன் தொட்டது அனைத்தும் நாசமாய்ப் போனது. மலர்கள் கிட்டத்தட்ட சிதைந்திருந்தன.

இருப்பினும், அவன் அவற்றை மேசைகளின் இடைவெளியினூடாக எடுத்துச் சென்றான். அங்குமிங்காக, மனிதர்கள் தங்களுடைய இருக்கைகளில் முன்புறமாகக் குனிந்தோ, அல்லது பக்கவாட்டில், அவனை நடந்து செல்ல அனுமதித்தார்கள். பின்புறத்தை நோக்கி அவன் முன்னேறிச் செல்ல, அறை அமைதியானது. மனிதர்கள் தங்களுடைய வெள்ளிப்பொருட்களைக் கீழே வைத்தார்கள், பழரசக் கோப்பைகளையும்; கண்கள் தன்னை உற்று கவனிப்பதை ஜிம் உணர்ந்தான்.

“சாப்பிடுங்கள்! உங்களால் முடியும்போதே வாழ்ந்து கொள்ளுங்கள்,” என்று அந்தக் கூட்டத்திடம் பறைசாற்ற ஜிம் ஆசைப்பட்டான். ஆனால் யாருக்கும் எதையாவது சொல்லித்தர அவனிடம் என்னதான் இருந்தது? அவனொரு திருடன், இன்னும் கேவலமாகச் சொன்னால் – ஒரு சாதாரண குற்றவாளி. அவனுடைய வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் காதலிக்குத் தருவதற்காக ஒரு பூங்கொத்தைத் திருடியவன்.

அவள் அவனைப் பார்த்தபோது, சந்தோசத்தால் நிறைந்தாள். அவள் நிறைய குடிக்க வேண்டியிருந்தது – ஆனால், பரவாயில்லை, இனி தனிமையானவளாக உணர வேண்டியதில்லை.

“கேட்,” என்றழைத்தான். எழுந்து கொண்டாள், அவன் அவளை நோக்கித் தள்ளாடி நடந்தான். எலியட்டும் சூசனும் கூட எழுந்து நின்றார்கள். கேட்டின் இருபுறமும் அவர்கள் சூழ்ந்திருக்க, நடுவிலிருந்து அவள் வெளியேறி வந்தாள், “மன்னியுங்கள், சற்றே விலகிக் கொள்ளுங்கள்,” என்று சொல்லியபடியே – ஜிம்மைப் போலில்லை என்றில்லாமல், அவளுடைய கால்களும் தள்ளாடின – மேசைகளின் கடலினூடாக தனக்கான வழியைத் தேடினாள்.

குளியலறைகளின் அருகே அவர்கள் சந்தித்தார்கள். மதுக்கூடம் அவர்களின் வலப்புறம் இருந்தது. அவனுடைய முகத்தில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க கேட் தனது கைகளை உயர்த்தினாள். ரத்தம் கழுத்து வரை வழிந்தோடி அவனுடைய சட்டையின் கழுத்துப்பட்டையை நனைத்தது. “இவையெல்லாம் உனக்காகத்தான்,” என்று அவளிடம் சொன்னான்.

அவள் சத்தமில்லாமல் அழுதாள், பின் முணுமுணுத்தாள், “அழகாக இருக்கின்றன, ரொம்ப அழகாக இருக்கின்றன.” பிறகு அவளுடைய அழுகை தீவிரமடைந்தது, ஆவேசத்தோடு அலறினாள், “நீ சாதித்து விட்டாய், ஓ, இங்கு வந்து விட்டாய், நாங்களனைவரும் பயந்து போனோம், நான் என்னைத் தொலைத்தவளாக உணர்ந்தேன்.”

“நான் இங்கேதான் இருக்கிறேன்,” என்றான், அவனுக்கும் கண்ணீர் வழியத் தொடங்கியது. எல்லாம் சரியாகி விடும் என அவளிடம் சொல்ல விரும்பினான், அவனும் சரியாகி விடுவான் என்றும், கூடிய சீக்கிரமே அவன் வேலைக்குப் போவான், பற்றுச்சீட்டுகளுக்கு பணம் செலுத்தி, அவளுடைய தோள்களின் பாரத்தை பகிர்ந்து கொள்வான்; ஆக, இறுதியாக, குழாய்களெல்லாம் இற்றுப்போன அந்த சிறிய வீட்டை விட்டு அவர்கள் வெளியேற முடியும். அவள் அவனுக்கு எத்தனை முக்கியமானவள் என்பதை அவளிடம் சொல்ல ஆசைப்பட்டான்.

ஆனால், தன் ஓரக்கண்களால், மதுக்கூடத்துக்குப் பின்னாலிருந்த கண்ணாடியில் தென்பட்ட தன்னுடைய கேவலமான பிரதிபலிப்பை, அவனால் பார்க்க முடிந்தது. கேட்டின் கைகளைப் பார்த்தான், ரத்தம் அவளுடைய உள்ளங்களில் வழிந்தோடியது. மேலும், அவர்களின் ரத்தத்தையும், அழுகையையும், கேட் மற்றும் ஜிம்மின் தலையில் திருமணத்துக்கான வெண்கொற்றக்குடை போல் விழுந்து கிடந்த அல்லி மலர்களையும், என்னவென்று புரிந்து கொள்ள முடியாமல், சமையலறையிலிருந்தோ அல்லது மதுக்கூடத்திலிருந்தோ வெளியேறி வந்து அமைதியாக தங்களைச் சுற்றி நின்றிருந்த வாடிக்கையாளர்களையும், பரிசாரகர்களையும், பணிப்பெண்களையும், மற்றும் மேசைகளைத் துடைப்பவர்களையும் அவன் பார்த்தான். அவனுடைய உடலின் வலி அதிகரித்தது, பிறகு அவன் சொன்ன வார்த்தைகள் அன்பின் சாயலைக் கொண்டிருக்கவில்லை. அல்லது அவை அன்போடுதான் இருந்தன. அவன் தனது மனைவியிடம் பேசினான், போலவே சுற்றி நின்றிருந்த மனிதர்களிடமும் சொன்னான்.

“பார்த்தாயா, கேட்? நீ பார்த்தாயா? நான் போக வேண்டிய நேரம். இனியும் என்னால் முடியாது. எனக்கு இங்கே இடம் கிடையாது. நான் உங்களைச் சேர்ந்தவனில்லை. இப்படித்தான் நான் காயப்படுகிறேன். நீ சந்தோசமாக வாழலாம். ஆனால் அது ஒருபோதும் எனக்காக என்றிராது.”

“இல்லை, இல்லை, அன்பே,” அவள் விசும்பினாள்.

யாரோ அவனுடைய கையைத் தொட்டார்கள். அது எலியட், அவனுக்குப் பின்னால் வந்து நின்றிருந்தான். ஜிம்மிடம் சொன்னான், “நாம் மகிழுந்துக்குச் செல்லலாம்.”

லாரன்சோவும் அங்கிருந்தான். கேட் ஜிம்மிடம் சொன்னாள், “அன்பே, லாரன்சோ மலர்களை எடுத்துக் கொள்ளட்டும். இப்போதைக்கும் மட்டும்.” அவனும் எடுத்துக் கொண்டான்.

ஒரு கணத்துக்குப் பிறகு, லாரன்சோ ஈரத்துணியோடு திரும்பி வந்தான். தன்னுடைய கண்களைத் துடைக்கவும் ஜிம்மின் முகத்தையும் தனது கைகளையும் சுத்தம் செய்ய அவளதைப் பயன்படுத்தினாள். மேலங்கியைச் சுற்றியிருந்த இடைவாரை இழுத்துக் கட்டினாள், “சரியாக இருக்கிறது.”

அவர்கள் விடுதியை விட்டு வெளியேறினார்கள், நால்வரும். சூசன் ஜிம்மைத் தன் மீது சாய்த்துக் கொண்டாள், எலியட் கேட்டைத் தாங்கிப் பிடித்தான். கதவை மூடி வெளியேறும்போது, அவர்களுக்குப் பின்னால், லாரன்சோ தனக்கு படியளப்பவர்களிடம் சொல்வதைக் கேட்டார்கள், “எல்லாம் சரியாகி விட்டது. நம்முடைய நண்பருக்கு நேரம் சரியில்லை. தயைகூர்ந்து, உங்களனைவருக்கும் நானொரு பானத்தை இலவசமாக வழங்குகிறேன்.”

பிராட்வேயில், காற்று நின்றிருந்தது, வெளியில் கதகதப்பு கூடியிருந்தது. புதிதாய் விழுந்திருந்த பனியினூடாக அவர்கள் நடந்தார்கள். மேலும், உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஜிம் சூசனின் தோள்களைச் சுற்றி தன்னுடைய கைகளைப் போடத்தான் செய்தான், எலியட்டும் கேட்டின் அருகாமையில் நடந்து வந்தான், அவனிடம் சொல்வதற்கு அவளிடம் என்னவெல்லாம் இருந்ததோ அதை அவள் முணுமுணுப்பதைக் கேட்டபடி நடந்தான்.

வாகனக் காப்பகத்தில், ஜிம்மும் கேட்டும் எலியட்டின் மகிழுந்தினுடைய பின்னிருக்கையில் ஏறிக் கொண்டார்கள். சூசன் எலியட்டின் அருகிலமர்ந்தாள். எலியட் விசைப்பொறியைத் தூண்டி, முன்புற விளக்குகளையும், வண்டியின் கண்ணாடியைத் துடைக்கும் கரங்களையும் இயங்கச் செய்தான். டம், டம், டம். கீழ்திசையில் விரைந்தான். பயணத்தின்போது, ஜிம் தனது வயிற்றிலிருந்து இடைவாரை உருவியெடுத்தான். கழுத்துத்துண்டையும், தொலைபேசியையும், சாவிகளையும், தன்னிடமிருந்த மொத்தத் தொகையையும், கிட்டத்தட்ட முப்பது டாலர்கள், அவன் கேட்டிடம் கொடுத்தான்.

பிற்பாடு, அவசர சிகிச்சை அறையின் தரையில் முழங்காலிட்டு அமர்ந்து, அவனுடைய காலணிகளின் நாடாக்களை அவிழ்ப்பாள். செவிலிப்பெண் வருவாள், பிறகு வேறொருத்தியும், மருத்துவர் வந்து தூக்க மாத்திரைகளை பரிந்துரைப்பார்.

அதே நேரம், பின்னிரவுக்குப் பிறகான பொழுதில், எஃப்.டி.ஆர்10 நெடுஞ்சாலையின் வழியாக எலியட்டும் சூசனும் மன்ஹாட்டனை விட்டு வெளியேறி, ப்ரான்க்ஸினூடாக, வெஸ்ட்செஸ்டர் மாகாணத்துக்குள் நுழைந்திருப்பார்கள்.

“இப்போது நீங்கள் வீட்டுக்குச் செல்லலாம், உங்களுக்கு விருப்பமிருந்தால்,” மருத்துவர் கேட்டிடம் சொன்னார். “அவருக்கு எதுவும் நடக்க நாங்கள் விட மாட்டோம்.”

கழிவுப்பொருட்களைப் போடும் பிளாஸ்டிக் பையொன்றை அவர் கேட்டிடம் தந்தார், ஜிம்மின் மேலங்கியையும் முன்புற சட்டையையும் அவள் அதற்குள் போட்டாள். அவனிடமிருந்த கடைசி பணத்தை, நகரத்துக்குள் செல்வதற்கான தன்னுடைய வாடகை வண்டிக்காகவும், குடியிருப்பின் அருகேயிருந்த கொரியச் சந்தையில் பாலும் தானியங்களும் வாங்கவும், அவள் பயன்படுத்துவாள்.

இரவின் ஆழத்தில், அவர்கள் அவனுக்காக வந்தார்கள். சக்கர நாற்காலியில் அமர ஒரு ஆண் தாதியாளர் உதவினார், பிறகு முற்றத்தின் வெண்ணிற புதிர்ப்பாதைகளின் வழியே அவனைத் தள்ளிக்கொண்டு போய் மின்தூக்கிக்காக காத்து நின்றார்.

மார்கரேட், இரவு நேர தாதிப்பெண்களில் ஒருத்தி, அவனை நோயர்-அறையில் சந்தித்தாள். “ஹலோ, திரு.டேவிஸ். நீங்கள் மீண்டும் எங்களிடம் வந்து விட்டீர்கள், பார்த்தீர்களா.” அவள் கேட்டாள், “உங்களால நடக்க முடியும் என்று தோன்றுகிறதா?” அவனுக்கு ஆட்வியனும்11 காகிதக் கோப்பியில் நீரும் தந்து, விழுங்குவதை கவனித்தாள். பின்னர் அவனுக்கேயான அறைக்கு அவனை வழிநடத்திச் சென்றாள்.

 

குறிப்புகள்

 1. பேபிஸ் பிரத் – நூலிழை போன்ற காம்புகளுடன் நுடங்கியாடும் தோட்டச்செடி வகைகள். அழியாத காதலின் சின்னமாக பூங்கொத்துகளில் இடம்பெறக்கூடியவை.
 1. பிராட்வே – நியூயார்க் நகரிலிருக்கும் ஒரு சாலை
 1. அப்பர் ஈஸ்ட் சைட் – நியூயார்க்கிலுள்ள மன்ஹாட்டனின் அருகாமைப் பகுதி
 1. 59 ஸ்டிரீட் பிரிட்ஜ் – குயின்ஸ்பாரோ பாலம். நியூயார்க் நகரத்தின் நுழைவாயில் என்றும் சொல்லலாம்.
 1. பெர்க்டார்ப் குட்மேன் – மன்ஹாட்டனின் ஐந்தாவது வழிச்சாலையில் அமைந்திருக்கும் ஆடம்பரமான பல்பொருள் அங்காடி
 1. பெய்ன் விட்னி – உளநோய் சிகிச்சை மருத்துவமனை
 1. ஒலன்சாப்பின் – இயல்பாக அதிகம் பயன்படுத்தப்படாத உளநோய் சிகிச்சை மருந்து
 1. ஹெரிங்போன் –ஆண்களுக்கான விலையுயர்ந்த ஆடை வகை
 1. ஈஸ்ட் நைண்டீஸ் – நியூயார்க்கின் வடதிசையிலுள்ள மலைத்தொடர்
 1. எஃப்.டி.ஆர் நெடுஞ்சாலை – ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் நெடுஞ்சாலை
 1. ஆட்வியன் – பதற்றதைக் குறைப்பதற்கான மருந்து

 

டொனால்ட் ஆண்ட்ரிம் (1958)   

அமெரிக்காவைச் சேர்ந்த புனைகதை எழுத்தாளர். நியூயார்க்கர் இதழில் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதி வருகிறார். 1999-ஆம் வருடம் நியூயார்க்கர் வெளியிட்ட நாற்பது வயதுக்குட்பட்ட முக்கியமான இருபது எழுத்தாளர்களின் பட்டியலில் ஆண்ட்ரிம் இடம்பெற்றிருந்தார். 2013-ஆம் ஆண்டுக்கான மதிப்புக்குரிய மெக்ஆர்த்தர் புத்தாய்வு மாணவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை மூன்று நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு மற்றும் ஒரு நினைவோடைத் தொகுதி ஆகியவை வெளியாகியுள்ளன.

 

கார்த்திகைப் பாண்டியன்

1981 ஆம் வருடம் மதுரையில் பிறந்த கார்த்திகைப் பாண்டியன் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரியொன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். எஸ்.ராமகிருஷ்ணனை தனது ஆதர்ஷமாகக் கொண்டவர். சிறுகதைகள் எழுதவதோடு மொழிபெயர்ப்பிலும் தீவிர ஆர்வம் செலுத்தி வருகிறார். நல்லதொரு இலக்கிய வாசகனாக அடையாளம் காணப்படுவதே தனக்குத் திருப்தியளிப்பதாகச் சொல்கிறார்.

இதுவரை வெளியாகியுள்ள புத்தகங்கள்:

 1. எருது – மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் (எதிர் வெளியீடு)
 2. மர நிறப் பட்டாம்பூச்சிகள் – சிறுகதைகள் (எதிர் வெளியீடு)
 3. ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் – யுகியோ மிஷிமா – மொழிபெயர்ப்பு நாவல் (எதிர் வெளியீடு)