ஃபொரோ ஃபரோக்ஸாத் கவிதைகள்

ஃபொரோ ஃபரோக்ஸாத் கவிதைகள்

தமிழில் : ஆர்.சிவகுமார்

ஃபொரோ ஃபரோக்ஸாத் (1935-67)

ஈரானிய கவிஞர், திரைப்பட இயக்குநர். பெண்ணிய நோக்கில் சர்ச்சைக்குரிய நிறுவன எதிர்ப்புக் கவிதைகள் எழுதியவர். ஈரானியக் கவிதை மரபுகளோடு முரண்பட்டவர். 16 வயதில் திருமணம். ஒரு ஆண் குழந்தைக்குத் தாயான பின் 18 வயதில் விவாகரத்து. குழந்தையை வளர்க்கும் உரிமையைச் சட்டபூர்வமாகப் பெற்றார். இருபது வயதில் முதல் கவிதைத் தொகுப்பான The Captive வெளியானது. எதிர்மறையான கவனத்தையும் எதிர்ப்பையும் பெற்றார். ஐரோப்பாவில் சில மாதங்கள் தங்கிய பிறகு ஈரான் திரும்பினார். The Wall, The Rebellion என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாயின. திரைப்பட இயக்குநர் ஒருவரோடு உண்டான நட்பின் ஆதர்சத்தால் The House is Black (1962) என்ற தலைப்பில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஈரானியர்கள் குறித்தத்  திரைப்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டார். இப்படம் பல சரவதேச விருதுகளைப் பெற்றது. படப்பிடிப்பின்போது, ஒரு ஈரானியத் தொழுநோய்த் தம்பதியின் ஆண் குழந்தை ஒன்றின் மீது ஏற்பட்ட பாசத்தால் அதைத் தத்தெடுத்துக் கொண்டார். 1964இல் Another Birth என்ற இன்னொரு தொகுப்பு வெளியானது. கார் விபத்தொன்றில் 1967 பிப்ரவர் 13 ஆம் தேதி இறந்தார். அயோதுல்லா கோமேனியின் ஆட்சியில் இவருடைய கவிதைகள் பத்தாண்டுகள் தடை செய்யப்பட்டிருந்தன.

இவருடைய இளைய சகோதரரான Fereydeen Farrokhzad (1938-92) பாடகர், கவிஞர், அரசியல் போராளி. மர்மமான முறையில் ஜெர்மனியில் மத அடிப்படைவாத சக்திகளால் கொல்லப்பட்டவர்.

பரிசு

இரவின் ஆழத்திலிருந்து பேசுகிறேன்
இருளின் ஆழத்திலிருந்து பேசுகிறேன்
இரவின் ஆழத்திலிருந்து  பேசுகிறேன்

நண்பரே, என் வீட்டுக்கு வருவதாக இருந்தால்
எனக்கொரு விளக்கையும்
அந்தக் களிப்புநிறைச் சந்தில் இருக்கும்
கூட்டத்தைப் பார்க்க ஒரு ஜன்னலையும்
கொண்டுவாருங்கள்

அதன் பிறகு

என் மரணம் ஒருநாள் வரும்
அது பிரகாசமான வசந்தப் புலரியாக இருக்கலாம்
தொலைதூரக் குளிர்கால அந்தியாக இருக்கலாம்
அல்லது, மூடுபனி கவிந்த, உறைந்த
இலையுதிர் காலத்து நிசப்த இரவாக இருக்கலாம்

அந்த நாள்
இருண்டு, பிரகாசமாக அல்லது மேகம் மூடியதாக இருக்கலாம்
இருந்தும்
மற்றவை போலவே
அதுவும் ஒரு வெறுமையான நாளாக இருக்கும்:
எதிர்காலத்தின் வெற்றுக் கற்பனை
கடந்த காலத்தின் சித்திரம்

அந்த நாள்
என் கண்கள் கருந்துளைகள் போல
என் முகம் சில்லிட்ட சலவைக் கற்கள் போல இருக்க
விரைந்த தூக்கத்தில் எடுத்துச் செல்லப்படுவேன்
என் வண்ணக் கனவுகளைப் பின்தங்க விட்டு

ஒரு பக்கத்தின் பீதி வெளுப்பின்மேல் என் கைகள் விழும்
சந்தம் நிறைந்த என் எண்ணங்கள் அவற்றின் கூட்டிலிருந்து தப்பியோடும்
இக் கடைசிக் கவிதையின் அதிர்வுக்கு என் மனம் தன்னை இழக்கும்
பிறகு, துயரமிருக்காது, வேதனையிருக்காது, கடும் சினம் இருக்காது

இடைவிடாமல் என் பெயரை நிலம் அழைக்க
அவர்கள் வந்து சேர்வார்கள் கல்லறைக்குள் என்னை வைக்க
ஓ, எல்லா நள்ளிரவுகளிலும் என் காதலர்கள்
என் தனித்த இடத்தில் சில பூக்களை வைப்பார்கள்

பிறகு

என் உலகின் திண்ணிய நிழல்கள்
திடீரென நகர்ந்து அகன்று விடும்:
முழு நிலவின் ஒளியில், ஒரு இரவில்
அந்நியர்கள் என் கவிதைகளைத் தொடர்ந்து வாசிப்பார்கள் . . .

வெயிலார்ந்த ஒரு நாளில் என் நினைவாக
என் சிறு அறைக்குள் அவர்கள் நுழைவார்கள்
என் கண்ணாடிக்கு அருகில் இன்னுமிருக்கும்
என் முடியின் ஒரு கற்றையையும்
உயிரின் அறிகுறிகளாக என் விரல்ரேகைகளையும் காண்பார்கள்

ஒரு பாய்மரப் படகைப் போல
என் ஆன்மா தப்பிக்கும்
என்னிலிருந்தும் என் சவத்திலிருந்தும் விடுதலை பெற்று.
பார்வையின் எல்லைகளில் நான் மறைந்துபோவேன்
முடிவற்ற பறத்தலில்
வீடற்று அலையும் பட்டத்தைப்போல

நாள்கள் விரைந்து வாரங்களாக
வாரங்கள் அதே வேகத்துடன் மாதங்களாக
கடிகாரத்தின் கண்களை உறுத்து நோக்குவீர்கள்
என் கடிதங்களுக்கும் அழைப்புகளுக்கும் வீணாகக் காத்திருந்து

ஆனால்
உங்களிடமிருந்தும் உங்கள் இதயத் துடிப்பிலிருந்தும்
வெகுதூரம் விலகி உயிரற்ற என் உடல்
அன்னை பூமியின் குரலற்ற கரங்களில்
அமைதியாக ஓய்வுகொள்ளும்

பின்னாளில்
சூரியனும் காற்றும் மழையும்
என் கல்லறையின் குளிர்க் கல்லை மெருகேற்றும்:
இறுதியில்
மறுபிறப்பின் தொன்மங்களிலிருந்தும்
பேரிலிருந்தும் புகழிலிருந்தும்
விட்டு விடுதலையாகி
இருப்பேன் நான் எப்போதும் விடுதலையாகி

ஆங்கில மொழிபெயர்ப்பு: மரியம் தில்மாகனி

 

 காதல் பாடல்

என் இரவுகள் உன் கனவால் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன, இனிய அன்பே
உன் நறுமணத்தால் என் மார்பு கனக்கிறது
உன் முன்னிலையால் என் கண்களை நிறைக்கிறாய், இனிய அன்பே
துயரைவிட மகிழ்ச்சியைக் கூடுதலாக அளிக்கிறாய்
மண்ணை ஊடுருவிக் கழுவும் மழையைப் போல
என் வாழ்வைக் கழுவித் துப்புரவாக்கினாய்
தகிக்கும் என் உடலின் இதயத் துடிப்பு நீ
என் கண்ணிமைக் கேசத்தின் நிழலில் எரியும் ஒரு தீ
கோதுமை வயல்களைவிட அதிக வளம் தருகிறாய்
தங்கக் கிளையைவிடக் கனிகளின் பாரம் கூடுதல் உன்னிடம்

உனக்கு மாற்றாக வேறு யாரையும் கொள்ளமாட்டேன்
ஓ இது ஒரு தீங்கானத் துயர், குறைபாட்டு உணர்வின் உந்துதல்
செயல் தொடங்கிப் பின் பயனற்றுத் தன்னையே சிறுமைப்படுத்தல்
கொடும் இதயத்தை மறைத்திருக்கும் மார்புகளில் தலை சாய்த்தல்
பண்டைய வெறுப்பால் மனதை மாசுபடுத்தல்
சீராட்டும் கைகளில் பாம்பொன்றைக் காணல்
சினேகப் புன்னகைக்களுக்குப் பின்னால் நஞ்சைக் கண்டுபிடித்தல்
ஏமாற்றும் கைகளிடம் நாணயங்களை ஒப்படைத்தல்
அங்காடிகளுக்கூடே தொலைந்து போதல்

என் தோலுக்குக் கீழே ஒளிந்துள்ளாய்
என் திசு ஒவ்வொன்றிலும் ஊடுருவிப் பாய்கிறாய்
தடவிக் கொடுக்கும் உன் கைகளால் என் கேச நுனி பொசுங்குகிறது
என் கன்னங்கள் வேட்கையின் வெயில் கணப்பால் கன்றியுள்ளன
இனிய அன்பே, என் ஆடைகளுக்கு நீ அந்நியன்
ஆனால் என் நிர்வாணப் பிரதேசங்களுக்கு நீ அன்னியோன்யம்
ஓ, ஒளிரும் நித்திய சூரியோதயமே
தென்புல வானிலையின் வலிய சூரிய வெம்மை
தொடக்கப் புலரியைவிட கூடுதல் மலர்ச்சி நீ.

இளவேனிற்கால ஏற்ற இறக்க அலைகளைவிட
கூடுதல் புதுமலர்ச்சி கூடுதல் நீர்மை
இனியும் இது காதலில்லை இது கண்கூசும் அதிஒளி
அமைதிக்கும் இருளுக்கும் இடையே
சுடர்வீசும் சரவிளக்கு
காதல் என் மனதில் கிளர்த்தப்பட்ட கணத்திலிருந்து
வேட்கையுடன் முழு அர்ப்பணிப்பானேன்
இனியும் இது நானில்லை நானில்லை
‘என்னுடன்’ நான் வாழ்ந்த வருடங்கள் வீணே
இனிய அன்பே, உன் முத்தங்களுக்கு என் உதடுகள் வழிபாட்டு மேடை
உன் முத்தங்களின் வருகைக்குக் காத்திருக்கின்றன என் கண்கள்

என் உடலில் ஆனந்தப் பரவசத்தின் வெறி அசைவுகள் நீ
உன் உருவின் கோடுகள் ஆடையென என்னை மூட
ஓ, ஒரு மொட்டென நான் வெடித்து அவிழப்போகிறேன்
துயருடன் ஒரு கணம் கறைபடும் என் களிப்பு
ஓ, துள்ளிக் குதித்துக் கண்ணீரை மேகமெனப்
பொழிய விருப்பம் எனக்கு

இந்த என் சோக இதயமும் புகையும் நறுமணமும்?
வழிபாட்டுக் கூடத்தில் நரம்பிசைக் கருவிகளின் இசை?
இந்த வெற்று வெளியும் அம்மாதிரிக் கற்பனைகளும்?
இந்த அமைதியான இரவும் மிகு அளவுப் பாடலும்?
இனிய அன்பே, உன் பார்வை ஒரு மந்திரத் தாலாட்டு
தூங்கத் தெரியாமல் அழும்  குழந்தைகளுக்குத் தொட்டில்
அரைத் தூக்கத் தென்றல் உன் சுவாசம்
என் வேதனையின் எல்லாத் துடிப்புகளையும் அது கழுவி நீக்குகிறது
அது நாளையப் புன்னகைகளுக்குள் ஒளிந்துள்ளது
என் உலகங்களின் ஆழங்களுக்குள் அது புதைந்துள்ளது

கவிதையின் மூர்க்கத்துடன் என்னை நீ தொட்டாய்
என் பாடல்களுக்குள் தீயைச் சொரிந்து
காதலின் உணர்ச்சிக் கொந்தளிப்பைக் கிளறி
இவ்வாறு என் கவிதைகள் அனைத்துக்கும் தீமூட்டி, என் அன்பே

ஆங்கில மொழிபெயர்ப்பு: கரீம் இமாமி

 

அந்தப் பறவை வெறும் ஒரு பறவைதான்

அந்தப் பறவை சொன்னது:
“என்ன பிரகாசமான நாள், என்ன இதமூட்டும் காற்று!
வசந்தம் வந்துவிட்டது
நான் என் இணையைத் தேட வேண்டும்.”

கம்பியின் முனையிலிருந்து பறவை பறந்தது
மேகங்களை நோக்கி உயரப் பறந்து
விரைந்து மறைந்தது
ஒரு விருப்பத்தைப் போல
ஒரு வழிபாட்டைப் போல
ஒரு முணுமுணுப்பைப் போல
வானின் பெரும் பரப்பில்

அந்தப் பறவை சிறியது, லேசானது
அது உற்சாகமானதல்ல
அது தனித்திருந்தது
ஆனால், நல்லது, அந்தப் பறவை
உண்மையில் சுதந்தரமாயிருந்தது

வானில்
மலைகளின் எல்லாத் திசைகளின் மேலும்
சந்துகளின் மேலும்
போக்குவரத்து விளக்குகளின் மேலும்
‘நில்’ எனச் சொல்லும் சின்னங்கள் மேலும்
அது ஓயாது பறந்தது.

அதன் கனவுகள் தந்த அமைதியின் உச்சங்களில்
காலத்தின் வெளியின் நீல உள்ளர்த்தைத்தை இறுதியில் உணர்ந்தது

அந்தப் பறவை, நல்லது,  வெறும் ஒரு பறவைதான்
அந்தப் பறவை, நல்லது,  உண்மையில் சுதந்தரமாயிருந்தது

ஆங்கில மொழிபெயர்ப்பு: மரியம் தில்மாகனி