கலையும் கலகமும்-2

டியாகோ ரிவேராவும் மெக்ஸிகோ கலகமும்

மோனிகா

 

“டியாகோ என்னை ரயில் நிலையத்தில் சந்தித்தார். அப்போது நான் அவர் மெக்ஸிகோவில் கம்யூஸ்டு கட்சி தொடங்கிய பிதாமகர்களில் அவரும் ஒருவர், ஒரு ஆகச் சிறந்த ஓவியர், கைவிரல் சுட்டலில் மேலெழும் ஒரு நாணயத்தை தனது துப்பாக்கியால் குறிபார்த்து வீழ்த்திவிடக்கூடியவர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவரை நேரில் சந்தித்தபோது பருத்த வயிற்றுடனும், எல்லா நேரங்களிலும் அகன்றதொரு புன்னகையுடனும், ஏன் சிறிது பயப்படச் செய்யும் தோற்றம் கொண்டவராகவுமே அவர் எனக்கு அறிமுகமானார்” என்று மெக்ஸிகோவின் ஓவியரான டியாகோ ரிவேராவைப் பற்றிக் கூறியுள்ளார் ருஷ்ய புரட்சிக் கவிஞர் மாயோகொவெஸ்கி.

 

Trotsky -RIVERA AND BRETON

யார் இந்த ரிவேரா? மெக்ஸிகோ நாட்டின் மிகச் சிறந்த ஓவியரான ரிவேராவின் பெற்றோர் மிகச் சாதாரண பள்ளி ஆசிரியர்கள். சிறு வயதிலிருந்தே ஓவியத்தின்பால் ஈர்க்கப்பட்ட ரிவேரா தனது பெற்றோரால் பரிந்துரைக்கப்பட்ட ராணுவ பள்ளியில் படிக்கப் பிடிக்காமல் ஓவியக்கல்லூரியில் சேர்ந்து படித்தவர். தனது இருபதாவது வயதில் ஆறடி உயரம், பருமனான உடல், தவளைக் கண்கள், புத்தரைபோன்றதொரு சிரிப்பு என வாழ்ந்த ரிவேராவுக்கு நண்பர்களுக்கும், காதலிகளுக்கும் என்றுமே குறைவில்லை. காரணம் அவரது வசீகரமான பேச்சும் அதில் அடங்கிய ஒரு நகைச்சுவை உணர்வும்தான். 1920களில் பிரான்சுக்கு சென்று அங்குள்ள ஓவியர்களை சந்திக்கும் ரிவேரா, ஜான் மிரோ, பிக்காஸோ போன்றவர்களையும் அங்கே சந்திக்கிறார். திரும்பவும் 1923ல் மெக்ஸிகோ திரும்பும் முன்னர் மெக்ஸிகோவில் ஒரு மிகப்பெரிய கலகம் உருவாகியிருப்பதை உணர்கிறார்.

1910ம் ஆண்டு பொர்ஃபீரியோ டயாஸ் என்னும் கொடுங்கோலன் மெக்ஸிகோவை தான் முன்னுக்கு கொண்டுவந்துவிட்டதாக மார்தட்டிக் கொண்டான். மற்ற நாடுகளின் 20ம் நூற்றாண்டு வளர்ச்சி வேகங்களுடன் ஈடுகொடுக்க பெருமளவு அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டதாக சொல்லிக் கொண்டான் டயாஸ். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு ரயில் பாதைகளை அமைப்பதற்கும் சுரங்களில் வேலை செய்வதற்கும் செவ்விந்திய மக்களை பண்ணை அடிமைகளாக மாற்றிய இம்முறை மக்களை கொதித்தெழச் செய்தது. ஹாசியண்டாக்கள் என்றழைக்கப்பட்ட இந்த அடிமைகளிடம் “உணவா அடியா” (pan o palo) இரண்டில் எதனை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டது. ஐரோப்பிய கலாச்சாரத்தில் மூழ்கித்திளைத்த சில மேல்தட்டு அறிவு ஜீவிகளே இதன் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். அகஸ்டோ காம்தே மற்றும் ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் போன்றவர்களின் வழிவந்த முன்னேற்ற தத்துவப்பாதையை(positive philosophy) மாணவர்கள் அறிவியல் பூர்வமான இந்த நகர்வுகளை மேட்டுக்குடியினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தை மட்டுமே மனதில் கொண்டு ஆதரித்தனர்.

மறுதேர்தலுக்கு நிற்க மறுத்த டயாஸை 1910ம் ஆண்டு ஹாசியண்டா குழுக்களிடையே தோற்றுவிக்கப்பட்ட போராளியான மதேரோ எதிர்த்துப் போராடத் தொடங்கினார். அவரை பொய் வழக்குகளில் தள்ளி சிறையில் அடைத்தார் டயாஸ். இதன் காரணங்களினால் அமெரிக்காவிற்குள் ஓடி ஒளிந்தார் மதேரா. மெக்ஸிகோவின் ராபின் ஹுட் என்று அழைக்கப்பட்ட கொள்ளைக் கூட்ட தலைவர்களான ஒரோசோவும் பான்சோ வில்லாவும் ஒரு புரட்சிகர ராணுவத்தை டியாசுக்கு எதிரே நிறுத்துவார்கள் என அப்போது கற்பனைகூட செய்திருக்கவில்லை.

1911ல் பதவி விலகியபின் சிலகாலங்களுக்குப் பிறகு மதேரோவும் கொல்லப்படுகிறார். விவசாயப் புரட்சிக்காகவும் தொழிலாளர் நலனுக்காகவும் தொடர்ந்து போராடிவந்த ஜபாட்டா மெக்ஸிகோவின் அதிபராக பதவி ஏற்றபின் கொல்லப்படுகிறார். பின்னர் 1917ம் ஆண்டு கரான்ஸா என்னும் சீர்திருத்தவாதி பதவி ஏற்றபின்பே மெக்ஸிகோ தன்னை மீள் உருவாக்கம் செய்து கொள்ளத் தொடங்குகிறது. ஆயிரக்கனக்கான பள்ளிகளும் விவசாயிகளுக்கான திட்டங்களும் அறிவிக்கப்படுகின்றன. மெக்ஸிகோ தனது ரத்த வரலாற்றிலிருந்து மீள்கிறது.

மெக்ஸிகோவின் மறுமலர்ச்சிக் காலமாகிய இத்தருணத்தில்தான் டியாகோ நாடு திரும்புகிறார். அவரது மார்க்ஸிய கண்ணோட்டத்தால் டிராட்ஸ்கியுடன் ஒரு நட்பு உண்டாகிறது. நாளடைவில் அவருடைய ஸ்டாலினிய எதிர்ப்பினால் அவர்களுடைய நட்பு விரிசலடைகிறது.  1920லிருந்து 24வரை நிறைய சுவரோவியங்கள் வரைவதற்காக அரசாங்கம் அவரை பணிக்கிறது. அப்போது தனது நாற்பத்தி மூன்றாவது வயதில் 21 வயது பெண்ணான ஃப்ரீடா காலோவை மணம் புரிகிறார் டியாகோ. ஃப்ரீடாவின் ஓவியங்களில் ஒரு குழந்தையாக, ஆசானாக, தோழனாக வரையப் பெறுகிறார்.  கியூபிஸம் எனப்படும் ஜியோமிதி தத்துவங்களுக்குள் ஊடுருவும் பாணியை பிரான்ஸில் கற்றுத் தேர்ந்த போதிலும் தனது தனிப்பட்ட ஓவியப்பாணியை கையிலெடுத்து வரையத் தொடங்கினார் டியாகோ. அவரது மார்க்ஸிய சிந்தனையும், ஐரோப்பிய பாரம்பரிய அழகியலை கட்டுடைக்கும் ஆர்வமும் அவரை ஒரு தனித்துவமான பாணியை நோக்கி நகர்த்தின.

DIEGO PORTRAIT

ஐரோப்பிய ஆரம்பகால மறுமலர்ச்சியின்போது(Early Renaissance) பயன்படுத்தப்பட்ட வண்ணங்களையும் ரேணுவா போன்றோரின் பருத்த உடல்களையுமே அவரது ஓவியங்களில் காணலாம். தன்னுடைய சுவரோவியங்களின் மெக்ஸிகோவின் பாரம்பரிய வரலாற்றையும் தற்கால நிலையையும் சேர்த்து வரைவது டியாகோவின் பாணி. “மெக்ஸிகோவின் மருத்துவ வரலாறு, நல்லதொரு சுகாதாரத்தை நாடும் மக்கள்” (The History of Medicine in Mexico: The People’s demand for better health) என்னும் தலைப்பிடப்பட்ட ஓவியத்தில் ஒரு புறம் அந்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் மறுபுறம் தற்காலிக மருத்துவ முறைகளையும் மக்களின் முறையீடுகளையும் வரைந்திருப்பார். 24 x 35 அடியில் வரையப்பட்ட இந்த ஓவியம் ஒரு தேசிய மருத்துவமனையின் வாயிலில் வரையப்பட்டது.

1930முதல் நான்கு ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரத்திற்கு செல்லும் டியாகோ அங்குள்ள சுவற்றில் டெட்ராய்ட் தொழிற்சாலை என்னும் ஓவியத்தை வரைகிறார். இப்பயணம் அவரது மாஸ்கோ பயணத்திற்கு பிறகே அமைகிறது. மார்க்ஸியவாதியான டியாகோ ஃபோர்ட் கம்பெனியின் சுவருக்கு ஓவியம் வரைய எப்படி ஒத்துக்கொண்டார் என்ற ஆச்சரியம் ஒரு புறம் இருக்க இந்த ஓவியத்தின் மொழி நம்மை பிரமிக்க வைக்கிறது. ஓவியத்தின் மேல்பகுதியில் ஒரு ஆணும் பெண்ணும் படுக்கையிலிருந்தபடி கீழே நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கீழே ஒரு உலோக இயந்திரங்களின் காட்டிற்கு நடுவே கட்டங்களுக்குள் திணிக்கப்பட்ட மானுட உடல்கள் வேலையில் ஈடுபட்டிருக்கின்றன. மேல்பகுதியில் உள்ள இருவருக்கு நடுவே ஒரு ஜன்னல் போன்ற அமைப்பிலிருந்து கைகள் போராட்டத்திற்காக எழுந்து கொண்டிருக்கின்றன. அதிகாரத்திற்குள் விடுதலையைப் பேசும் இப் பேசும் பொற்சித்திரம் டியாகோவை இன்றளவும் நமது மனதில் நிறுத்துகிறது.

Hospital

அவரது மாவு அரைக்கும் பெண், பூ விற்கும் பெண் போன்ற ஓவியங்கள் இயல்பான சிவப்பிந்தியர்களின் உடலமைப்பை ஒட்டியதாகவும் ஆடம்பரப் பூச்சுகளற்ற யதார்த்த அழகியல் சார்ந்தவையாகவும் காணப்படுகின்றன.

ஐரோப்பிய அழகியலைப் பயின்ற ஒரு ஓவியர் மண் மணம் மாறாத ஓவியங்களைப் படைத்ததும் அதனினும் அரிதாக மார்க்ஸியக் கோட்பாடுகளை தனது ஓவியங்களும் மூலம் வெளிக்கொண்டுவந்ததும் டியாகோ ரிவேராவை வரலாற்றில் முன் நிறுத்தியது எனலாம்.