அஞ்சலி-அசோகமித்திரன்

 

(1931-2017)

அறுபது வருடங்கள் ஓய்வின்றி எழுத்துத்துறையில் செயல்பட அதன் மீது விலக்க முடியாத பிடிப்பு இருந்தாலொழிய சாத்தியமில்லை. அதுவும் அலட்சியமான ஒரு வரியைக் கூட கையாளாமல் இருந்தார் என நம்பத்தான் வேண்டியிருக்கிறது.   நவீனத்துவத்தை தமிழில் நிலைநிறுத்திய மிகச்சிலருள் அசோகமித்திரனுக்கு பிரதானமான இடமுண்டு. வடிவஒருமை, சொல்லை அதன் இயல்பிற்கேற்பவே கையாளுதல், தடம் புரளாத துல்லிய விவரிப்பு, வெளித்தெரியாத மறைபொருளின் நுட்பம் போன்றவையே மறுவாசிப்பில் புதிய சாளரங்களைக் காட்டித் தருகிறது. சாதாரணர்களை படக்கம்பெனிக்காரர்களை சாமியார்களை சிறுவர்களை எழுதும் போதும் அவர் எவரொருவரின் சார்பாகவும் நிலைப்பாட்டை எடுத்துக் கொள்வதில்லை. பெரும்பாலும் மிகையுணர்ச்சியை அவர் அனுமதிப்பதேயில்லை எவ்வளவு துயருக்கருகில் பெண்கள் இருந்தாலும் அவர்களை மதிப்புமிக்கவர்களாக காட்டுவதிலிருந்து அசோகமித்திரன் தன் இறுதிக்காலம் வரை விலகவில்லை. குறிப்பாக அவர்கள் கண்ணீரை எந்த கதைகளுக்குமான கச்சாப்பொருளாக கைகொள்ளவில்லை. செகந்திராபாத், சென்னை ஆகிய இருநகரங்களிலேயே  அவரது கதைகள் (சில கதைகள் மட்டும் அயல்தேசத்தில் நடப்பவை) கால்கொண்டிருக்கின்றன. அந்த மனிதர்களின் மொழி எவ்வளவு சாதாரணமும் எளிமையுமானதோ அதே போன்றதொரு மொழியையே தன் படைப்பிலும் கையாண்டார். ஆனால் அவற்றை கலையாக மாற்றுகையில் நிகழும் ரசவாதமே அசோகமித்திரனைச் சாதாரணர் அல்லர் என எண்ணச் செய்கிறது. இந்த நகரங்களின் வளர்சிதை மாற்றங்களை ஒரு வரலாற்றாளனுக்கு தன் படைப்பின் வழி கையளித்து சென்றிருக்கிறார் என்றும் கருத இடமுண்டு. சிறுகதைகள் நாவல்கள் மட்டுமல்ல அவர் எழுதிய சினிமா சம்பந்தமான கட்டுரைகள் தனித்துவமுடையவையே. இரு வேறுவகைப்பட்ட வாசகர்களும் நுழைந்து செல்லத்தக்க வாயில்களைக் கொண்டது அசோகமித்திரனின் படைப்புலகம். நல்ல சூழலில் பல லட்சம் பேரைச் சென்றடைந்திருக்கக் கூடிய ஆக்கங்கள் இவை. ஆனால் அவரை நோக்கி மிகப்பல வாசகர்களும் சென்றது இரண்டாயிரத்துக்குப் பிறகே. ஆன போதும் இது பற்றியெல்லாம் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் சமரசம் ஏதுமின்றி இறப்பதற்கு சில தினங்கள் வரை வாசிப்பதையும் எழுதுவதையும் அவர் சளைக்காமல் மேற்கொண்டிருந்திருக்கிறார். அசோகமித்திரன் விட்டுச் சென்றிருக்கும் படைப்புகளைப் போலவே இந்தச் செய்தியும் மகத்தானது தான்.

அசோகமித்திரனின் மிக முக்கியமான கதைகளுள் ஒன்றான ‘ஐநூறு கோப்பைத் தட்டுகள்’ சிறுகதையை மீள் பிரசுரம் செய்து  கபாடபுரம் தன் அஞ்சலியைத் செலுத்துகிறது.

-ஆசிரியர்.


 ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்

-அசோகமித்திரன்

ஓவியங்கள் : அனந்த பத்மநாபன்.

ஸையது அப்துல் காதர் ‘ஸையது அப்துல் காதர் அண்ட் கம்பெனி’ பெரிய கடையைத் தாண்டி, பக்கத்தில் இருந்த ஒரு சந்தில் புகுந்தார். அவருக்கும் அந்தக் கடைக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. ஸையதைப் போல அந்த ஸையது அப்துல் காதரும் சிகந்தராபாத்தில் நல்லகுட்டா என்னும் இடத்தில்தான் வசித்துவந்தார். ஸையதைப் போல அவரும் ஒரு காண்ட்ராக்டர். ஸையது ஒரு காண்ட்ராக்டைக் கண்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அந்த ஸையது அப்துல் காதர் தம்முடைய கம்பெனியில் மாதத்துக்கு ஒரு விஸ்தரிப்புச் செய்து வந்து அமோகமாக வாழ்கிறார். எல்லாவற்றுக்கும் இதுதான் காரணமாக இருக்க வேண்டும் – அந்த ஸையது அப்துல் காதர் வியாபாரத்தைத் தவிர வேறு எந்தத் துறையிலும் தலையிட்டுக்கொள்வதில்லை. ராமன் ஆண்டாலும் ரஹீம் ஆண்டாலும் அவருக்குப் பாதகம் இல்லை. ஆனால் ஸையது அப்படி இல்லை.

சந்துக் கோடியிலிருந்த மசூதிக்குச் சென்று அங்கே தாம் வழக்கமாக உட்காரும் மூலையில் ஸையது உட்கார்ந்துகொண்டார். அது மிகச் சிறிய மசூதி. அந்தச் சமயத்தில் ஒரே ஒரு கிழவர் மட்டும் ஒரு புறாக் கூட்டத்துக்குச் சிறிது கோதுமை ரவையைத் தரையில் இறைத்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் அமைதியாக இருக்கலாம் என்று வந்து உட்கார்ந்த ஸையதுக்கு விடாமல் குட்-குட்-குட்-குட் என்று கத்திக்கொண்டிருந்த புறாக்கள் அனைத்தையும் ஒரேயடியாக நசுக்கிவிடலாமா என்று தோன்றிற்று.

ரவை எல்லாம் செலவான பிறகு அந்தக் கிழவர் ஸையதிடம் வந்தார். ஸையதின் அருகிலேயே சிறிது நேரம் பேசாமல் நின்றுகொண்டிருந்தார். இருவர் மனத்திலும் ஒரே பயந்தான் இருந்தது, எங்கே மற்றவன் ‘ஏதாவது சில்லறை இருந்தால் கொடு’ என்று கேட்டுவிட்டுப்போகிறானோ என்று.

“நேற்றுகூட நாம்பள்ளிக்குப் போயிருந்தேன்” என்றார் கிழவர். அப்படிச் சொல்லிக்கொண்டே இடுப்பைப் பிடித்துக்கொண்டார். அந்த இடத்திலிருந்து நாம்பள்ளி குறைந்தது மூன்று மைல்களாவது இருக்கும்.

புறாக்கூட்டத்திலிருந்து ஒரு வெண்புறா தனிப்பட்டு வந்து கிழவரையும் ஸையதையும் தனது முட்டாள்தனமான பார்வையுடன் பார்த்துக்கொண்டு நின்றது. அது சிறிதாக இருந்தபோதே அதன் சிறகுகளைக் கத்தரித்துப் பறக்க முடியாதபடி செய்துவிட்டார்கள். அது முட்டையிட்டுப் பொரித்த குஞ்சுகள் எல்லாம் தாயுடன் இருந்த அந்த மசூதியை நம்பி வாழப் பழகிவிட்டன. அந்தக் கூட்டத்தில் இருந்த பாதிப் புறாக்கள் அந்த முட்டாள் புறாவினுடைய குழந்தைகள்.

“நான் சொன்னது நிஜந்தான்.”

ஸையது அதைக் கேட்டுக்கொண்டு தலையசைத்தார். கிழவர் நிஜம் என்று உறுதிப்படுத்திய விஷயம் ஸையதின் மூத்த மகன் இப்ராஹிமின் மனைவி ஹைதராபாத்தில் சைக்கிள் ரிக்ஷா இழுத்துக் காலம் தள்ளுகிறாள் என்பது.

ஸையது தம் இரு கைகளாலும் கழுத்தைப் பிடித்துவிட்டுக் கொண்டார். கழுத்து ஏகமாக வலித்தது.

கிழவர் கடைசியில் தான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டார். “ஒரு பதினைந்து ரூபாய் இருந்தால் எப்படியோ பம்பாய்க்குப் போய்விடுவேன். அங்கிருந்து போவதற்கு ஏதாவது பார்த்துக்கொள்ளலாம்” என்றார்.

“பதினைந்து ரூபாய் என்னிடம் இருந்தால் இந்த நிமிஷமே நான் ஓடிப் போய்விடுவேன்” என்றார் ஸையது. அந்த முட்டாள் புறா இன்னமும் அவரையேதான் பார்த்துக்கொண்டிருந்தது. பதினைந்து ரூபாய் இருந்தால் மனைவி மக்களோடு நான்கு நாட்களாவது சரியாகச் சாப்பிடலாம். யூஸப்பைத்தான் பள்ளிக்கூடத்திலிருந்து போகச் சொல்லிவிட்டார்கள். இரண்டு மூன்று மாதச் சம்பள பாக்கியைக் கட்ட வேண்டும். அதெல்லாம் முடியாது; அவனை எங்கேயாவது சைக்கிள் கடை, பூக்கடையில்தான் சேர்க்க வேண்டும். அந்தப் பயல் நாராயணனுக்கு வேறு பணம் தரவேண்டும். இந்த முட்டாள் புறா இவ்வளவு குழந்தை குட்டிகளை வைத்துக்கொண்டு, சிறகையும் ஒடித்துக்கொண்டு ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிறது. அது எங்கேயும் வேறு தேசத்துக்கு ஓடிப் போக யோசிக்க வேண்டியதில்லை. பட்டினி கிடந்தாவது அதற்குத் துளி தானியத்தை மசூதியில் யாராவது இறைத்துவிடுவார்கள்.

ஸையது மறுபடியும் கழுத்தைப் பிடித்து விட்டுக் கொண்டார். வலி அதிகமாகிக்கொண்டிருந்தது.

அன்று பிற்பகல் ஸையதிடம் நாராயணன் வந்திருந்தான். “ஞாயிற்றுக்கிழமைக்குள் வீட்டைக் காலி பண்ணாவிட்டால் போலீஸ் வந்து சாமான்களைத் தூக்கி எறிவார்களாமே? உங்களை நம்பினோமே, மோசம் செய்துவிட்டீர்களே!” என்றான்.

“என்னடா முட்டாள் மாதிரி பேசுகிறாய்? உனக்காகத்தான் நான் ஊரெல்லாம் அலைந்துகொண்டிருக்கிறேனே!”

“இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி ஏமாற்றப் போகிறீர்கள்? இந்த வயதில் சின்னப் பையன்களிடம் ஏன் பொய் சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள்?” – நாராயணன் வாய்விட்டு அழுதுவிட்டான்.

ஸையதுக்குக் கோபம் வந்துவிட்டது. “என்னடா சொன்னாய்? என் உயிர் நண்பனின் மகனிடமிருந்தா நான் இப்படிப் பேச்சுக் கேட்டுக்கொள்ள வேண்டும்? ஆண்டவனே!” இந்த மாதிரி சில வார்த்தைகள் சொன்னார். திடீரென்று தம் இரு கைகளாலும் மார்பில் தொம் தொம் என்று குத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டார். நாராயணன் ஒரு கணம் அரண்டுவிட்டான். உடனே, “வேண்டாம், மாமா. வேண்டாம், மாமா” என்று கூறிக்கொண்டே அவருடைய பெருத்த கைகளைப் பிடித்துக்கொண்டான். இருவரும் சிறிது நேரம் பேசாமல் நின்றுகொண்டிருந்தார்கள்.

ஸையதுடைய கடைசி மகன் யூஸப் அப்போது வீட்டினுள் நுழைந்தான். ஸையது அவனைக் கூப்பிட்டு, “ரேய் பாபா. வீடு ஏதாவது காலி இருக்கிறதா?” என்று கேட்டார். யூஸப் ஒன்றும் புரியாமல் விழித்தான். ஐந்தாவது பாரத்தில் படித்துக்கொண்டிருந்த அவனைத்தான் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

ஸையது, “வீடு ஏதாவது காலி இருந்தால் என்னிடம் சொல்லு. நம் சங்கரன் போன மாசம் காலமாகிவிட்டான் அல்லவா? அவன் சம்சாரம் குழந்தைகளெல்லாம் அந்த ரெயில்வே வீட்டைக் காலி பண்ண வேண்டுமாம். வீடு ஏதாவது காலி இருந்தால் சொல்லு” என்றார். யூஸப் இன்னமும் விழித்தான். பிறகு பதில் ஒன்றும் கூறாமல் உள்ளே போய்விட்டான்.

அவன் உள்ளே போன பிறகு ஸையது நாராயணனிடம், “இதைப் பாரடா, மகனே. நான் உனக்கு வீட்டுக்காக இந்தச் சிகந்தராபாத்தில் எல்லாரிடமும் சொல்லி வைத்திருக்கிறேன். உனக்குத்தான் தெரியுமே, அந்த இடாலியாவுடைய முனீம்ஜிக்கு ஒரு பத்து ரூபாய் அட்வான்ஸ்கூடக் கொடுத்து வைத்திருக்கிறேன். அவன் வீடுகளில் ஒன்று காலியானவுடன் நமக்கே தருகிறேன் என்று சொல்லியிருக்கிறான்” என்றார்.

நாராயணன், “அவன் வீடும் காலியாகப்போவதில்லை; நீங்களும் அவனுக்குப் பணம் ஒன்றும் கொடுக்கவில்லை. அவனுக்கு உங்களைத் தெரியவே தெரியாதாம்” என்றான்.

“எவன் சொன்னான்? எவன் சொன்னான்?” ஸையது சிறிது பதறினார்.

“அந்த முனீம்ஜியே சொன்னான். நேற்று நானே அவனைப் போய்ப் பார்த்துவிட்டேன்.”

ஒரு நிமிஷம் எல்லாம் அமைதியாக இருந்தது. ஸையது, “நீயே போய்ப் பார்த்துவிட்டு வந்தாயா?” என்றார்.

நாராயணனுக்குப் பதிலளிப்பதற்கு அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

“என்னைத் தெரியவே தெரியாது என்று சொல்லிவிட்டானா?”

நாராயணன் உள்ளங்கையால் முகத்தைத் துடைத்துக்கொண்டான். பிறகு, “இனிமேல் உங்கள் சகவாசமே வேண்டாம். என்னை ஏய்த்து, வாங்கின பத்து ரூபாய் உங்களிடமே இருக்கட்டும்” என்றான்.

ஸையது, “இதைக் கேளடா நாராயணா” என்று ஏதோ ஆரம்பித்தார்.

“போதும், போதும். இனிமேலும் நான் மோசம் போக வேண்டாம். உங்களைப் பற்றி வெளியில் பேசிக்கொள்வது அத்தனையும் உண்மை என்று இப்போதுதான் தெரிகிறது. உங்களை நம்பாமல் இருந்திருந்தேனானால் நானாவது ஏதாவது வீடு தேடிக்கொண்டிருப்பேன். இன்னும் நான்கு நாட்களுக்குள் காலி பண்ண வேண்டும்.”

“நாராயணா, டேய் நாராயணா!” நாராயணன் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டான். வரும்போது சிறு பையனாக இருந்தவன் வெளியே போகும்போது ஓர் ஆளாக மாறிவிட்டது போல ஸையதுக்குத் தோன்றிற்று.

உள்ளே யூஸப்பும் அவன் அம்மாவும் ஏதோ சண்டை போட்டுக்கொண்டிருப்பது இலேசாகக் காதில் விழுந்தது. ஸையது உள்ளே போய்ப் பார்த்தார். அவர்கள் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். எங்கோ மூலைக்கொரு சாமானாக இருந்ததால் வீடு மிகப் பெரிதாக இருப்பது போலிருந்தது. ஸையது சிறிது நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தார். பிறகு தம் மனைவியைப் பார்த்து, “நான் வெளியில் போக வேண்டும். ஏதாவது தின்ன இருந்தால் கொடேன்” என்றார்.

அவர் மனைவி, “வீட்டில் என்ன இருக்கிறது?” என்று கேட்டாள். பிறகு, “காலையில் செய்த ரொட்டி ஒன்று இருக்கிறது. அதை வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.

ஸையது சமையலறைக்குள் சென்று பார்த்தார். நசுங்கிப் போயும் வெளியெல்லாம் கரியாகவும் இருந்த சில அலுமினியப் பாத்திரங்கள் ஒரு மூலையில் கிடந்தன. சுவரில் அநேக வருடப் புகைச்சல் படிந்து கிடந்தது. ஒரு பாத்திரத்துள் பாதி ரொட்டி இருந்தது. ஸையது அதை எடுத்து இரண்டு துண்டம் வாயில் போட்டுக்கொண்டார். அது சோளத்தினால் செய்யப்பட்டது. அவரால் அதைக் கடிக்கவும் முடியவில்லை. விழுங்கவும் முடியவில்லை. அங்கே வைத்திருந்த மண் பீப்பாயின் குழாயைத் திறந்து சிறிது தண்ணீர் எடுத்துக் குடித்தார். அது டில்லிப் பீப்பாய். வெகு அழகான வேலைப்பாடு அமைந்து ஒரு குழாயும் பொருத்தியிருந்தது. அந்த அறையில் இருந்த மற்றச் சாமான்களுடன் அது பொருந்தவே இல்லை. மண் பாத்திரங்கள் எவ்வளவு உயர்ந்தவையாக இருந்தாலும் உபயோகப்படுத்திவிட்டால் திரும்ப விற்றுப் பணமாக்க முடிவதில்லை.

ஸையது தம் தலையிலும் சிறிது தண்ணீரைத் தெளித்துக்கொண்டு வெளி அறைக்கு வந்தார். கழுத்துவரை வளைவு வளைவாகத் தொங்கிய தமது தலை மயிரை வாரிக்கொள்ள ஆரம்பித்தார். தலையில் ஒரு கறுப்பு மயிர்கூட இல்லை. ஏதோ நிறம் இடப்படாத டோப்பா ஒன்றைத் தலையில் மாட்டிக்கொண்ட மாதிரி இருந்தது. தலையை வாரி முடித்தவுடன் ஸையது தமது காக்கி புஸ்கோட்டைப் போட்டுக்கொண்டார். கைத்தடியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினார். யாரிடமாவது கதவைத் தாழிட்டுக்கொள்ளச் சொல்லலாமா என்று தயங்கினார். பிறகு தாமே கதவைச் சாத்திக்கொண்டு வெளியே புறப்பட்டார். மாலை வெயில் பளிச்சென்று அடித்தது.

பதினைந்து இருபது கஜதூரம் போன பிறகுதான் ஸையதுக்குத் தாம் அந்தத் தெருவில் இருப்பதை உணர முடிந்தது. அவர் அந்தத் தெருவை உபயோகப்படுத்த விரும்பவில்லை. அந்தத் தெருவில் ஹிந்துக்கள் நிறைய இருந்தார்கள். ஸையதின் தலைக்கு வெகு சமீபத்திலிருந்து ஒரு சிறிய ரப்பர்ப் பந்து வேகமாகப் பறந்து வந்தது. எதிர்ச் சுவரில் பட்டுத் தெருவில் குதித்துக் குதித்து உருண்டது. ஸையது திரும்பிப் பாராமல் வேகமாக நடக்க ஆரம்பித்தார். பின்னால் நான்கைந்து இளைஞர்கள் சிரிப்பது கேட்டது. ஸையதை ஓர் இடி இடித்துக்கொண்டு பந்தைத் துரத்திய வண்ணம் ஓர் இளைஞன் ஓடினான். பந்தை மடக்கிய பிறகு அதை மெதுவாக உதைத்துக்கொண்டு திரும்பி வந்தான். ஸையதுக்கு நேர் எதிரே அதைக் கொணர்ந்து நிறுத்தி ஓங்கி உதைத்தான். கால் குறி தவறிவிட்டது. “டேய் பத்மாஷ், ஒதுங்கிப் போடா. கண் தெரியவில்லை?” என்று அவன் ஸையதைக் கேட்டான்.

ஸையத் அப்போதுதான் அவனை நிமிர்ந்து பார்த்தார். அவன் உடனே அவர் புஸ்கோட்டைப் பிடித்துக்கொண்டு, “என்னடா முறைத்துப் பார்க்கிறாய்?” என்று இன்னொரு கேள்வி கேட்டான். இதற்குள் மற்ற இளைஞர்கள் ஸையதைச் சூழ்ந்துகொண்டார்கள். “ரஜாக்கர் அயோக்கியன் என்ன சொல்கிறான்?” என்று ஒருவன் கேட்டான். இன்னொருவன், “உதை, அவனை, உதை” என்று சொன்னான். ஸையது, “உம், உம்” என்று தமக்குத் தாமே சொல்லிக்கொண்டார். பின்னால் இருந்த ஒருவன் அவரை முன்னே தள்ளினான். அவர் பந்தைக் கொண்டு வந்தவன் மீது சாய்ந்தார். அவன் அவர் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான். எல்லோருமாக அவர் கைத்தடியைப் பிடுங்கி எறிந்துவிட்டு அவரைச் சுவர் மீது மோதினார்கள். ஸையது கைகளைத் தலை மீது வைத்துக்கொண்டு ஒரு பந்துபோலச் சுருண்டுகொண்டு உட்கார்ந்தார். “இனிமேல் தெருவிலே ஒழுங்காக நடந்து போடா, ரஜாக்கர் கொலைகாரனே” என்று ஒருவன் சொன்னான். கூடவே ஓர் உதையும் விழுந்தது.

ஸையது மெதுவாக எழுந்து, கலைந்திருந்த தலையைக் கோதிவிட்டுக்கொண்டார். நிதானமாக நடந்து சென்று கைத்தடியை எடுத்துக்கொண்டார். தெருவில் போய்க்கொண்டிருந்தவர்கள், வீடுகளிலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் யாரும் எதிலும் குறுக்கிடவில்லை. ஸையது தொடர்ந்து நடக்கலானார். அவருக்கு அந்தப் பந்தை எடுத்துக்கொண்டு வந்த இளைஞனை நன்றாக ஞாபகம் இருந்தது. அவன் அந்த இடத்துப் பால்காரர்களில் ஒருவன். மூன்று வருடங்களுக்கு முன் அவன் மாடுகளைக் கட்டி வைத்திருந்த ஒரு சிறிய மைதானத்தில்தான் ஸையது தாம் சேர்த்து நடத்தி வந்த படைக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். ஸையதுடைய மூத்த மகன் இப்ராஹிம் அந்த மாடுகளின் கயிறுகளை அறுத்துவிட்டு, அந்த இளைஞனின் மண்டையில் ஒரு துப்பாக்கியின் பின் புறத்தால் ஓங்கி அடித்தான். அந்த இரவே அந்தப் பால்காரனின் குடும்பமும் அத்துடன் ஏராளமான மற்றக் குடும்பங்களும் எங்கெங்கோ வெளியேறின. இப்போது இப்ராஹிம் என்ன ஆனான் என்று தெரியவில்லை. இந்தியத் துருப்புகள் ஹைதராபாத்தில் பிரவேசிக்க ஆரம்பித்தவுடன் அவற்றை எதிர்க்கப் போன முதல் ரஜாக்கர் படையில் அவன் இருந்தான். கடைசியாக ஒரு விஷயம் ஸையதின் காதுக்கு எட்டியது. இப்ராஹிமினுடைய மனைவி இரவில் ஆண் உடை தரித்துக்கொண்டு வாடகை சைக்கிள் ரிக்ஷா விட்டுப் பணம் சம்பாதிக்கிறாள்.

அஸ்தமன சூரியன் ஸையதுடைய நிழலைப் பிரம்மாண்டமானதாகச் செய்தான். நாள் கணக்கில் அரை வயிறாகச் சாப்பிட்டால்கூட எப்படித் தம் உடல் குறுகவில்லை என்பது அவருக்கு வியப்பாக இருந்தது. வயது அறுபதுக்கும் மேற்பட்டு, வசதிகளும் அற்றுப்போன காலத்தில்தான் அவருக்கு நன்றாகப் பசிக்க ஆரம்பித்திருந்தது. ஒரு காலத்தில்தான் அவருக்கு உணவுப் பண்டங்களைக் கண்டாலே வாய் கசந்தது. அவரைச் சுற்றிலும் உயர்ந்த வகைப் பிஸ்கோத்துகள், ஜாம் வகைகள், வெண்ணெய், இறைச்சி, கோழி முட்டை எல்லாம் இறைந்து கிடந்தன. யுத்தத்தின்போது சிகந்தராபாத்தில் இருந்த துருப்புகளுக்கு உணவுப் பண்டங்களைச் சேகரித்து விநியோகிக்கும் காண் டிராக்டர்களில் ஒருவராக அவர் இருந்தார். வேலூரில் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு நிம்மதியாக இருந்த அவரை நிஜாம் அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருந்த அவர் மைத்துனன் குரேஷிதான், “வா, வா, நீயும் ஒரு காண்டிராக்டர் ஆகிவிடு. இங்கே பணம் கொட்டிக்கிடக்கிறது” என்று இழுத்து வந்தான். அவரைத் தன் வீட்டிலேயே குடித்தனம் நடத்தச் செய்தான். பணம் ஏராளமாகக் கொட்டித்தான் கிடந்தது. பணத்தின் மீது அப்போது இருந்த அசிரத்தையைப் பார்த்து ஸையதுக்குத் தாம் ஒரு சாமியாராகக்கூட ஆகிவிடலாம் என்று தோன்றிற்று. ஆனால் அதெல்லாம் பொய், வெறும் பொய் என்று அப்புறந்தான் தெரிய வந்தது.

யுத்தம் முடிந்தது. நாட்டில் என்ன என்னவோ மாறுதல்கள் நிகழத் தொடங்கின. ஸையதுக்கு அந்த வயதில் இபின் காஸிமும் அலாவுத்தீனும் கோரியும் அவுரங்கஜீபும் கனவில் தோன்றத் தொடங்கினர். முஸ்லிம்களுக்குப் புத்துயிர் அளித்து உலகனைத்தும் ஆளவைக்க வேண்டிய பொறுப்பும் தமக்கு உள்ளது என்று ஸையதுக்கு ஓர் எண்ணம் வேரூன்றிவிட்டது. மகன், மைத்துனன் எல்லாரும் அவருடன் சேர்ந்து கொண்டார்கள். ஆனால் சீக்கிரமே, எதிர்பாராதவை எல்லாம் நடக்கத் தொடங்கின. மகனைப் பற்றித் தகவலே இல்லை. குரேஷி தன் குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு ஓடிப் போய்விட்டான். ஸையதோ எந்த நிமிஷமும் மனைவி மக்களுடன் தெருவில் நிற்க வேண்டும். தெருவில் நின்றால் பால்காரர்கள் உதைப்பார்கள்.

ஸையது சட்டென்று ஒரு சுவரைப் பார்த்த வண்ணம் நின்றுகொண்டார். சைக்கிளில் வேகமாகப் போய்க்கொண்டிருந்த நாராயணன் நல்ல வேளையாக அவரைப் பார்த்துவிடவில்லை. இரண்டு மூன்று வருடங்களாக அவர் யார் யாரிடமிருந்தோ தம்மை ஒளித்துக்கொள்ள வேண்டியிருந்தது. நாராயணனுடைய தகப்பன் சங்கரன்  அந்தக் காலத்தில் கடலூரில் ஸையதோடு சேர்ந்து வசித்தவன். பள்ளிக் கூடத்துக்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் தொடர்பு விட்டுப் போயிற்று. யுத்தம் முடிந்து சுமார் ஒரு வருடம் ஆன பிறகுதான் ராணி கஞ்ஜ் பஸ் ஸ்டாண்டில் சங்கரனை ஒரு நாள் ஸையது அடையாளம் கண்டுபிடித்தார். சங்கரனும் சிகந்தராபாத்தில் ரெயில்வேயில் வேலை பார்த்துவந்தான். குழந்தை குட்டிகள் எல்லாம் இருந்தார்கள். இப்போது அவன் இறந்துவிட்டான். அவன் குடும்பத்தாரை ஒரு மாதத்துக்குள் ரெயில்வே வீட்டைக் காலி பண்ணும்படி காரியாலயத்தில் உத்தரவிட்டிருந்தார்கள். ஸையது அவர்களுக்கு வீடு பார்த்துத் தருவது தம் பொறுப்பு என்று சொல்லியிருந்தார். அவர்களும் ஏதோ நம்பிக்கையில் அவரே கதி என்று இருந்தார்கள். அவரைத் தெருவில் நான்கு பேர் பிடித்து உதைத்தால் கேள்வி கேட்பார் இல்லை, அவருக்கு வெகு நாட்களாகவே மிகச் சிறிய ஜீவனோபாயங்கூட இல்லை, அவரே தாம் இருக்கும் வீட்டை விட்டுச் சீக்கிரம் வெளியேற வேண்டும் என்பவற்றையெல்லாம் அவர்கள் தெரிந்து வைத்துக்கொள்ளவில்லை. அந்த இடாலியாவினுடைய வீடுகளையும் வியாபாரங்களையும் கவனித்துக்கொண்டிருந்த முனீம்ஜி ஒரு காலத்தில் ஸையதுக்கு மிகுந்த ஆப்தனாக இருந்திருக்கிறான். இப்போது அவனை நெருங்க முடிவதில்லை. அவரைத் தெரியவே தெரியாது என்று வேறு கூறி விடுகிறான்.

ஸையது அந்தச் சந்தில் திரும்பி அங்கிருந்த மசூதிக்குள் நுழைந்தார். அது அவருக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம். ஒரு காலத்தில் அவரிடம் தங்கிப் போயிருந்த பட்டாக்கத்திகளையும் பிச்சுவாக்களையும் அங்கேதான் புதைத்து வைத்திருந்தார். இன்னும் அவற்றை வெளியே எடுக்கவில்லை. கிழவர் ஒருவர் புறாக்களுக்கு ரவை தூவிக்கொண்டிருந்தார்.

அந்தத் தாய்ப் புறா இன்னமும் ஸையதையே பார்த்தப்படிதான் இருந்தது. அல்லது ஸையதுக்கு அப்படித் தோன்றிற்று. ஹிந்துவாக இருந்தால் பூர்வ ஜன்மத் தொடர்பு என்று விளக்கம் தரலாம். இப்ராஹிமே மறுபடியும் வந்திருக் கிறான் என்றுகூடச் சொல்லிவிடலாம். இப்ராஹிம் ஏன் பெண் புறாவாகத் தோன்றுகிறான்? அவன் மதத்துக்காக ஒரு தகரத் தகட்டைத் தூக்கிக்கொண்டு பெரிய பெரிய பீரங்கிகளையும் டாங்கிகளையும் அல்லவா எதிர்க்கப் போயி ருந்தான். அவர்தான் பயங்கொள்ளி. உலகம் தம் பக்கம் இருக்கும்போது இல்லாத கோஷங்களையும் அட்ட காசங்களையும் நடத்தியாகிவிட்டது. நிலைமை சிறிது மாறியவுடன் வீட்டுக்குள்ளேயே ஒளிந்துகொண்டு யார் யார் காலிலெல்லாமோ விழ ஆரம்பித்துவிட்டாயிற்று. சிறு பையன்களை மோசம் செய்ய ஆரம்பித்து விட்டாயிற்று.

ஸையதுக்கு அந்த வெண்புறா நாராயணனை நினைவு படுத்தியது. அந்தப் பயல் நாராயணனை ஏய்க்க அவர் எண்ணவே இல்லை. உண்மையில் அந்தக் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்றுதான் அவருக்கு ஆசை. எல்லாம் சரியாகப்போய்விடும் என்று எண்ணித்தான் பத்து ரூபாய் பணம் வாங்கி வைத்துக் கொண்டார். ஆனால் முனீம்ஜியைப் பார்க்கவே முடிய வில்லை. நிலைமை சகிக்க முடியாமல் போய்க்கொண்டிருந்தது. அந்தப் பத்து ரூபாயைத்தான் செலவழித்துக்கொள்ள வேண்டி யிருந்தது. அவர் பணம் காசுக்கு அப்பாற்பட்டவர். தம் இனத்தையே புனருத்தாரணம் செய்யப் பிறந்தவர் என்றெல்லாம் நினைத்துக்கொண்டுதான் ஆயுளில் பாதிக்குமேல் ஆன பிறகு ஏதேதோ இயக்கத்தில் ஈடுபட்டார். இப்போது அவரும் சிதறிக்கொண்டிருந்தார்; அவர் வம்சமும் சிதறிக்கொண் டிருந்தது; எல்லாரும் அழிந்துகொண்டிருந்தார்கள்.

புறாவைப் பார்க்கப் பார்க்க ஸையதின் மனம் கொதித்தது. அந்தப் புறாவைப் போன்றவன்தான் நாராயணன். அவனுக்குப் பதினேழு பதினெட்டு வயதுதான் இருக்கும். நன்றாகப் படித்துக் கொண்டிருந்தான். இன்னும் ஒரு வருடமானால் பி.ஏ. பட்டம் வாங்கிவிடுவான். மிகவும் வெள்ளை மனம்; எதன் மீதும் நம்பிக்கை கொள்ளும் உள்ளம்; அழுவதற்குத் தயங்காத சுபாவம். அம்மாதிரி இருப்பவர்களுக்குக் கஷ்டங்கள் வருவதுபோல இருந்தாலும் அந்தக் கஷ்டங்களை எதிர்த்துப் போராடி வெற்றியடைய அவர்களுக்குத் தைரியமும் சக்தியும் உண்டு. ஸையது மாதிரி இருப்பவர்களுக்கு இருதயம் ஒரு பாலை வனம். இன்பத்திலும் துன்பத்திலும் ஒரு வறட்சி.

ஸையதுக்குத் தம்முள் உதிக்கும் சிந்தனைகளுக்கு அர்த்தம் புரியவில்லை. ஆனால் அவரால் அவற்றை அநுபவிக்க முடிந்தது. அவருடைய சக்தியற்ற தன்மையையும் மனத்தின் வறட்சியையும் நன்றாக உணர முடிந்தது.

ஸையதுக்கு அந்தப் புறா தம்மைப் பார்த்து ஏளனம் புரிவதுபோல இருந்தது. அதனுடைய அமைதியைக் கண்டு சிறிதும் அமைதியற்று இருந்த அவருக்குக் கடும் பொறாமை உண்டாயிற்று. திசை நிலையற்றுத் திரிந்துகொண்டிருந்த அவருக்குப் பயம், சலனம் அற்று நிம்மதியாக இருக்கும் அந்தப் பறவையிடம் துவேஷம் ஏற்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் அவருக்கு ஏற்பட்ட நஷ்டங்கள், தொல்லைகள், அவமானங்கள் எல்லாவற்றும் காரணமானது ஒரு புறா உருக்கொண்டு தம் முன் நிற்பதுபோலத் தோன்றிற்று.  ஸையது வெறி பிடித்தாற்போல் பாய்ந்து சென்று அந்தப் புறாவைப் பிடித்தார். அதனுடைய உருண்டைக் கண்கள் இன்னமும் அவரையேதான் பார்த்தபடி இருந்தன.

“பாபா, உனக்கு ஓர் அவசரக் கடிதம் வந்திருக்கிறது.“

புறாவும் கையுமாக ஸையது திரும்பிப் பார்த்தார். யூஸப் ஒரு கடிதத்தை நீட்டியவாறு நின்றுகொண்டிருந்தான்.

“நீங்கள் வெளியே போனது தெரியாது. அம்மாதான் கையெழுத்துப் போட்டு வாங்கினாள்” என்றான் யூஸப்.

புறாவைக் கீழே விட்டுவிட்டு ஸையது அவசர அவசரமாக அந்தக் கடிதத்தை உடைக்க ஆரம்பித்தார். அது சர்க்கார் கடிதம். மண் நிறமுள்ள நீண்ட உறையில் அனுப்பியிருந்தார்கள். உறையைக் கிழித்து எறிந்துவிட்டுப் பதறும் கைகளுடன் ஸையது கடிதத்தைப் பிரித்தார். ஹைதராபாத் அரசாங்கத்தின் ஒரு காரியாலயத்திலிருந்து அது வந்திருந்தது. அரசாங்கத்துக்கு ஐந்நூறு பீங்கான் கோப்பைகளும் தட்டுகளும் வேண்டுமாம். ஸையதால் அவற்றை விநியோகிக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டு எழுதியிருந்தார்கள்.

ஸையதுக்குத் தன் துன்பம், வலி, துவேஷம் எல்லாம் ஒரு நொடியில் பறந்துவிட்டன. மூன்று வருட காலத்தில் ஒழுங்கான வேலை ஒன்று வந்தது என்றால் இதுதான். அவருக்கு இதுவரை உணவுப் பண்டங்கள் காண்டிராக்ட் நடத்தித்தான் பழக்கம் உண்டு. இருந்த போதிலும் அரசாங்கமே இந்த வேலையை அவரிடம் ஒப்படைத்திருந்தது. ஐந்நூறு கோப்பை தட்டுகளில் அதிகம் போனால் அவருக்கு இருபத்தைந்து ரூபாய் கிடைக்கலாம். ஆனால் அது பெரிதல்ல. அவர் இனி மேலும் ரஜாக்கர் என்று ஒதுக்கி வைக்கப்படமாட்டார். அரசாங்கத்திடம் ஒரு புதுத் தொடர்பு ஏற்படும். யார் என்ன சொல்ல முடியும்? இதனால் வாழ்க்கையிலேயே ஒரு புதுத் திருப்பம் உண்டானாலும் உண்டாகலாம். முதலில் இந்தப் பயல் யூஸப்பைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்துவிட வேண்டும்.

மசூதியை விட்டுக் கிளம்பும்போது ஸையது புறாக் கூட்டத்தைப் பார்த்தார். ஒரு கண வித்தியாசத்தில் அவர் கையில் மடிந்துபோக இருந்த அந்தப் புறா ஒன்றுமே அறியாததாய், தன் முட்டாள் கண்களை அகல விழித்துப் பார்த்தது.

வீட்டை நெருங்கியவுடன் ஸையதுக்கு ஒரு சந்தேகம் தோன்றிற்று. ஒரு தெரு விளக்கின் அடியில் கடிதத்தை மறுபடியும் படித்துப் பார்த்தார். அவர் சந்தேகம் வீண் போகவில்லை. தவறு ஒன்று நடந்திருந்தது. அது அவருக்கு வந்த கடிதமல்ல. அது ஸையது அப்துல் காதர் அண்டு கம்பெனிக்காக வந்த கடிதம்.

ஸையது கைகளைப் பயங்கரமாகப் பிசைந்துகொண்டார். அந்தக் கணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய அந்தப் புறாவின் உருவந்தான் அவர் மனத்தில் தோன்றிற்று.

1959