பிரதி - பலன்

பிரதி-பலன்

-கணியன் பூங்குன்றன்


ஒரு பொருட் பன்மொழி

குழந்தைகளின் உலகம் என்கிற ஒற்றைக் குவிமையத்தை தேர்ந்து கொண்டு, சிறிதும் பெரிதுமான கோடுகளால் வெவ்வேறு சாயல்களில் வரையப்பட்டிருக்கும் விதவிதமான சித்திரங்களின் தொகை இது. வளர்ந்து பெரியவர்களாகி இந்த உலகத்திற்கு தகுந்தாற்போல, தங்களைப் பொருத்திக் கொள்ள கற்பதற்கு முன்பாக, குழந்தைகள் தங்களின் களங்கமற்ற வசீகரத்தோடு தம்போக்கில் உலவித் திரிகின்றனர். அப்பருவத்தில் அவர்கள் கொள்ளும் பரபரப்பு, ஆனந்தம், வினோதம், கற்பனை, கனவு முதலியன அவற்றின் இயல்பு எளிமை காரணமாக எல்லோரையும் ஈர்த்து நிறுத்தும் தன்மையுடையது. அத்தகைய தருணங்கள் பலவற்றை தனது வார்த்தைகளால் ஒற்றியெடுத்து, ஒவ்வொன்றையும் ஒரு கவிதையாக ஆக்கிப் பார்த்திருக்கிறார் பெரியசாமி. உலகப் புகழ்பெற்ற ‘குட்டி இளவரசன்’ புத்தகத்தை அதன் ஆசிரியர் ‘முன்பு ஒரு காலத்தின் குழந்தைகளாக இருந்த பெரியவர்களுக்கு’ சமர்பணம் செய்திருப்பார். அப்படிப்பட்ட ஒரு பெரியவரின் நோக்கிலிருந்து எழுதப்பட்டவை எனலாம் இக்கவிதைகளை. மொழியின் இலக்கணத்திற்கு தன் கற்பனைகளை ஒப்புக்கொடுக்கத் தொடங்கும் கணத்திலிருந்து தான் ஒரு குழந்தை, தனது குழந்தமையிலிருந்து வெளியேறத் தொடங்குகிறது எனலாம். குழந்தைகளினுடைய அன்றாடத்தனத்திலிருந்து உருவாகும் கவித்துவம் என்பது பெரும்பாலும் அதனுடைய மொழி வழுவலிலிருந்து பிறப்பதுவே. சொற்களின் கண்ணாடித் தடுப்பை ஊடுருவிப் போனால் மாத்திரமே அதன் முழுவனப்பையும் கொண்டுவர முடியும். பெரியசாமி அதற்காக ஒரு தூண்டில்காரனின் பொறுமையோடுக் காத்திருக்கப் பழகுவாரெனில், நெளிந்தோடும் நீலவானத்தில் குட்டிமீன்களோடு சில நட்சத்திர மீன்களையும் பிடிக்கக்கூடும்.

குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீல வானம் – ந. பெரியசாமி – தக்கை, 15, திரு.வி.க.சாலை, அம்மாபேட்டை, சேலம்-3. பக்.40 ; விலை.ரூ.30.


 ஆட்டுவித்தலுக்கும் அசைதலுக்கும் நடுவே

இருளைத் தொட்டு பொருட்களைத் துலங்கச் செய்யும், நாளின் முதல் கற்றை ஒளியைப் போல எளிமையாக ஒலிக்கும் சொற்களைக் கொண்டு, அரூவமான மனத்தருணங்களையும் அசந்தர்பமான பார்வைக் கோணங்களையும் விளங்கச் செய்பவை சபரிநாதனின் வரிகள். மேலெழுந்தவாரியான பார்வைக்கு சற்றே உணர்ச்சியற்றதைப் போலத் தோன்றும் இவருடைய மொழி, அதன் அந்த விலகல் தன்மை காரணமாக, அசலானதும், முன்நிபந்தனை இல்லாததுவுமான ஒரு வாசிப்பு அனுபவத்தை தருகிறது.

 

மேற்படி அமைதிக்கு அடியில் கடலின் ஆழத்தில் எதிரிடும் நீரோட்டங்களைப் போல இவருடைய அலட்டலில்லாத வாக்கியங்களின் உட்கிடையாக சொல்லிணைவுகளிலும், பொருள் கோடல் முறைகளிலும் உருவமைதியிலும் பல புதிய எத்தனிப்புகளைக் காண முடிகிறது. நமது புலனுணர்வுகளின் வழி நாம் அனுபவம் கொள்ளும் இவ்வாழ்வின் சிதறுண்ட அன்றாடத் தருணங்களையும், பொருளிழந்து அர்த்தம் குழம்பிய காட்சிகளையும்தான் தனது கவிதைகளுக்கான கச்சாப்பொருளாகக் கொள்கிறார். ஆனால் அவற்றை தற்கணத்திலிருந்து விடுவித்து நெடிய இறந்த காலத்துடனும், இனி நீளவிருக்கிற எதிர்காலத்துடனும் பிணைப்பதன் வாயிலாக அவற்றைச் சுற்றிலும் மங்கியதொரு துயரஒளியை பரவவிடுகிறார். அது படிக்கும் நம்மை அருளுணர்வின் பாற்பட்ட ஒரு நினைவேக்கம் தொற்றிக் கொள்ளும்படி செய்கிறது. உணர்வின் தாக்கத்திலும் கூட சிந்தனையின் வீச்சு படிந்திருக்கும் இத்தொகுப்பின் கவிதைகளில் ‘தங்கை பிடித்த முயல்’, ‘டச்சுக்கல்லறைகள்’, ‘காந்தி ஆசிர்வதிக்காத குழந்தைகள்’, ‘விழி’, ‘அன்பின் வழியது’, ‘வகுப்பிலேயே அழகான பெண்’, ‘குசகுடித் தெரு’ போன்ற கவிதைகள் அதன் உள்ளார்ந்த தொனியாலும், நுட்பமான நிற மாறுபாடுகளாலும் முதல் வாசிப்பிலேயே நம்மைக் கவரும் தன்மையுடையன. ‘உயிர்த்தெழுதலின் கீதங்கள்’ அதன் பரிசோதனைப் பண்பால் கவனம் ஈர்க்கக்கூடிய நெடுங்கவிதை. நதியின் வேகத்திற்கு இழுப்பட்டு செல்லாது எதிர்த்து, சுழன்று , மிதக்கும் சிறு இலை போல நழுவும் காலத்தினூடாக நம் மனதை நகரவிடாமல் பிடித்து நிறுத்தி வைக்க முயலுகிறது பல கவிதைகள். ஒரு பிரார்த்தனைப் புத்தகத்தின் முதுகில் ஒட்டியிருக்கும் நூலை நுழைத்தெடுத்து புரளும் ஏதோ ஒரு பக்கத்தை அன்றைய நாளுக்கான செய்தியாக தெரிவு செய்து படிக்கத் தொடங்குவதைப் போல இத்தொகுப்பிலுள்ள கவிதைகளையும் நிறுத்தி நிதானமாக படிக்க வேண்டியிருக்கிறது. இதுவே இத்தொகுப்பின் பலமும் இன்னொருவகையில் பலவீனமும் கூட.

வால் – சபரிநாதன் –  மணல்வீடு- ஏர்வாடி, குட்டப்பட்டி, சேலம்- 636453 பக்கங்கள்-167 ; விலை.ரூ.150/-.  


 

‘நீங்கள் எதை வேண்டுமாயினும் தின்னுங்கள்! நானோ என் பன்றிகளுக்கு ரோஜாக்களையே தருவேன்’ என்று தன் முந்தைய தொகுப்பில் எழுதிய வெய்யில் இந்தத் தொகுப்பில் மேலும் தீர்க்கமான குரலுடன், தெரிவு செய்து கொண்ட அழகியலோடு தனது அரசியலை முன் வைத்திருப்பதைக் காண முடிகிறது. தலைப்பிலேயே தொனிக்கும் அந்த எள்ளல் தொகுப்பிலுள்ள பல கவிதைகளினூடாகவும் ஒரு எதிர்விசையாக வெளிப்படுகிறது. ஒரு கவிதைக்கு இன்று விலக்கப்பட்ட பொருள் என்று எதுவுமில்லை. தனது கவித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளும் பட்சத்தில், அது எது குறித்தும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அப்படி ஒரு கவிஞன் முன் வைக்க முனையும் ஒரு விஷயம் கவிதையாக நிலைப்பதற்கு அதன் அழகியல் அழுத்தமாக அமைய வேண்டும். ஒரு கவிதையில் விரவிவர வேண்டிய கருப்பொருள்கள் என தெய்வம், மாந்தர், உணவு, விலங்குகள், பறவைகள், தாவரங்கள், இசை, தொழில் மற்றும் செய்தி என சிலவற்றை தொல்காப்பியம் சுட்டுகிறது. ஆக, கவிதை வலியுறுத்த விரும்பும் தகவலை ஒரு கருத்தாக நேரடியாக அல்லாமல் குறிப்பால் உணரக்கூடிய ஒன்றாக வைக்க வேண்டும். அதற்கு ஒரு கவிதையை கட்டமைக்கும் அழகியல் கூறுகள் வலுவாக அமைய வேண்டும். அவ்வகையில் வெய்யிலின் கவிதைகளில் இடம்பெறும் சிறுதெய்வங்கள், அவற்றிற்கு படையிலடப்படும் மாமிச உணவுகள், பனை, கருவேலம் போன்ற மரங்கள், எருக்கு, ஊமத்தை முதலிய பூக்கள், பன்றி, எருமை, பாம்பு, நாகம் முதலிய உயிரிகள் ஆகியன கூடி உருவாக்கும் ஒரு வகை எதிர் மரபின் அழகியல் இயல்பாகக் கூடிவந்திருக்கிறது. ஒரு சில கவிதைகளில் ஒன்றித்து வராமல் பிசிறு தட்டினாலும் ‘நுரையீரல்களின் பாடல்’, ‘அறத்தடி நீர்’, ‘உங்க பேர் என்ன சார்’, ‘மின்மினி விளையாட்டு’, ‘உலை துள்ளும் பருக்கை’, ‘பனைகளின் பிள்ளை’, எனப் பல கவிதைகளில் மொழி வீரியமும், வேகமும் கொண்டதாக உணர்வோடு ஒன்றிழைந்து நின்று நம்மை ஈர்க்கிறது. தான் பேச வந்த அரசியலை அதற்கான அழகியலுடன் முன்வைத்திருக்கிறது என்ற அளவில் முன்னுதாரணமான தொகுப்பு.

கொஞ்சம் மனது வைய்யுங்கள் ஃபிராய்டு –  வெய்யில் – மணல்வீடு- ஏர்வாடி, குட்டப்பட்டி, சேலம்- 636453  பக்கம்.78 ; விலை.ரூ.80/-