மைக்கலேஞ்சலோ அன்டோனியானி மூன்று திரைப்படங்கள்

-லேகா ராமசுப்ரமணியம்

“You know what I would like to do: make a film with actors standing in empty space so that the spectator would have to imagine the background of the characters”

-Michelangelo Antonioni

இத்தாலிய  இயக்குநரான மைக்கலேஞ்சலோ அன்டோனியானி ,1960களில் நவீன சினிமா உருவாக்கத்தில் பெலினி,பெர்மென் போன்ற தனது சமகால ஆளுமைகளோடு முக்கிய பங்களிப்பை செய்தவர்.மைக்கலேஞ்சலோவின்  திரைப்படங்கள் எவ்வித கட்டமைப்பிற்குள்ளும் அடங்காதவை.கதைசொல்லியின் நேர்த்தி கொண்டு ஒரே நேர்க்கோட்டில் விவரணைகளை தராமல்,கதாபாத்திரங்களின் மனப்போக்கில் நம்மை பயணிக்கச் செய்பவை.மனித உறவுகளின் நிலையற்ற தன்மையை,உளவியல் ரீதியிலான போராட்டங்களை பேசுபவை.கடினமான கேள்விகளை முன்வைக்கும் அதே வேளையில் பார்வையாளனை சுதந்திரமாக சிந்திக்க தூண்டுபவை இவரது படைப்புகள்.அவரது கதை மாந்தர்கள் பெரும்பாலும் தனிமையில் உழல்பவர்களால, கனவுகளில் தொலைந்து போனவர்களாக,விரும்பியதை அடையும் துணிச்சலற்றவர்களாக  உள்ளனர்.தன் கதாபாத்திரங்கள் விரும்புவதெல்லாம் கபடமற்ற அன்பை பகிரும் ஒரு சமூகமோ/வீடோ/ மனிதனோ மட்டுமே என்கிறார் மைக்கலேஞ்சலோ.

உலகத்தின் காரியங்களில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு தனித்தலையும் அவரது பிரதான கதாபாத்திரங்கள் பெரும்பாலும் பெண்களாய் அமைந்திருப்பது குறிப்பிடத் தகுந்தது. மனைவியாய்,காதலியாய்,தாயாய்,தோழியாய்  எல்லா  ரூபங்களிலும் நெருக்கடிகளை சந்திக்கும் பெண்களின் கதை இவரது தனித்துவம். அப்பெண்கள் கண்மூடித்தனமான அன்பை பொழிபவர்கள்,ஆண்களை குறித்து புகார் வாசித்தாலும் அவர்களின் துணையின்றி தனித்து வாழத் தயங்குபவர்கள்,கடந்த கால நினைவுகளின் துணை கொண்டு நிகழ்கால துரோகங்களை மன்னிக்க கூடியவர்கள்.பெண் மனதை இதனை அணுக்கமாக படம் பிடித்துகாட்டுவது சாத்தியமா என்றெண்ணும் அளவிற்கு துல்லியம் நிறைந்தவை இவர் முன்னிறுத்தும்பெண்களின் குணாதிசியங்கள்.

மெல்ல நகரும் கதைவோட்டம்,சோர்வளிக்கும் காட்சிகளின் நீளம்  என இவரது திரைப்படங்கள் மீது பொதுவான சில குற்றச்சாட்டுகள் உண்டு.உண்மையில் மைக்கலேஞ்சலோ விஸ்தரிக்கும்  உலகினுள் செல்ல இக்குறைகள் தடையே இல்லை .அவர் தேர்ந்தெடுக்கும் நிலப்பரப்புகளும்,முடிவற்று நீளும் சாலைகளும்,மயக்குறு நிறங்களின் ஆக்கிரமிப்பும் மறக்கமுடியா கனவாக நம் மனதில் தங்கிப் போகக் கூடியவை. உதாரணமாக, L’Eclisse’ல் கதாநாயகி  தங்கியிருக்கும் வீட்டின்  நவீன வடிவமைப்பு காலத்தை கடந்தது.போலவே வண்ணப்படமான Red Desert’ல் தொழிற்சாலையின் அடர் சாம்பல் நிற பின்னணியில் பச்சை நிற உடையணிந்து நாயகி மோனிகா உலாவும் காட்சிகளில், ஒளிப்பதிவின் புதிய பரிமாணத்தை காட்டியிருப்பார். L’Avventura’ல் கதை நிகழும் இத்தாலின்  ரோம்,சிசிலி நகரங்களின் மேன்மை பொருந்திய கட்டிடங்களையும்,பண்டைய தேவாலயங்களையும் தனக்கே உரிய பிரத்யேக அழகியலோடு காட்சிப்படுத்தியிருப்பார். மேலும் திரைப்படத்திற்கு தொடர்பற்றது என கருதக் கூடிய சாத்தியங்கள் கொண்ட இவரது படக் காட்சிகள் பலவும் மாய எதார்த்த அழகு கொண்டு நம்மை ஈர்ப்பவை.

1960களின் துவக்கத்தில் வெளியான மைக்கலேஞ்சலோவின் பின் வரும் மூன்று திரைப்படங்கள் அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவை.காதலை மையமாகக் கொண்ட இம்மூன்று படங்களுக்கும் பொதுவானதாக துரோகம்,தனிமை,தேடல், சலிப்பு  என பல விஷயங்களை பட்டியலிடலாம். மைக்கலேஞ்சலோவின் அந்நாளைய காதலி மோனிகா விட்டி இம்மூன்று திரைப்படங்களிலும் தன் சிறப்பான பங்களிப்பை செய்திருப்பது குறிப்பிடப்படவேண்டியது. “என் திரைப்படங்களில் கதைக் கரு எனவொன்று இருப்பதேயில்லை..” எனக் கூறும் மைக்கலேஞ்சலோவின் இப்படைப்புகள்  அதன் மாறுபட்ட திரைமொழிக்காக  உலக சினிமா ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுபவை.


L’Avventura (1960)

தோழி க்ளாடியாவுடனும் காதலன் சாண்ட்ரோவுடனும் சிசிலிக்கு அருகில் உள்ள தனித்தீவிற்கு சுற்றுலா செல்லும் அன்னா,கதையின் முதல் மையப்புள்ளி.கூச்சலும் குழப்பமும் நிறைந்த காதல்உறவில்,உற்சாகம் மிகுந்த நண்பர் கூட்டத்திற்கு மத்தியில்  மனசோர்வு கொண்டவளாக நம் பரிதாபத்தை சம்பாதித்து கொள்கிறாள்.திருமணம் குறித்தும் சாண்ட்ரோவோடு சண்டையிடும் அன்னா,அந்த உரையாடலுக்கு பிறகு காணாமல் போகிறாள். பாறைகளில் கால் தவறி கடலில் விழுந்து இறந்தாளா,சாண்ட்ரோ மீதுள்ள கோபத்தில் தீவை விட்டுச் சென்றாளா என்பதெல்லாம் எவரும் அறியா காரியங்கள்.அதை துப்பறிவதற்கு கூட இயக்குனர் எவ்வித தடயங்களையும் பார்வையாளனுக்கு வைக்கவில்லை என்பது இங்கு கவனிக்கப் படவேண்டியது. காற்றில் கரைந்த அப்பெண்ணைக் குறித்தான சிந்தனைகளில் இருந்து நாம் வெளிவரும் முன்னர் க்ளாடியாவும் சாண்ட்ரோவும் காதல் வயப்படுகின்றனர்.நாம் சற்றும் எதிர்பாராத அசாதாரண நிகழ்வது.

L’Avventura,சராசரி  திரைப்பட அனுபவத்தை எதிர்நோக்கும் பார்வையாளனை நிச்சயம் அதிர்விற்குள்ளாக்கும். நதியோட்டத்தைப்  போல ஓரிடத்தில் நிலை கொள்ளாத இதன் திரைக்கதை நம் கவனத்தை தொடர்ச்சியாக இடம் மாற்றிக் கொண்டே  இருக்கிறது.ஒரு த்ரில்லர் திரைப்படத்தின் அத்தனை லட்சணங்களுடனும் துவங்கும் ஆரம்ப காட்சிகள் மெல்ல மெல்ல தடம் விலகி காதல் கதையாக உருமாறுகிறது.

முதலில் தயங்கி பின்  சாண்ட்ரோவின் காதலை ஏற்றுக் கொள்ளும் க்ளாடியா அவனைக் காட்டிலும் அக்காதலை கொண்டாடித் தீர்க்கிறாள். குறிப்பாக அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில் சிரித்து மகிழ்ந்து ஆடிக் கழிப்பதும்,ஓடும் ரயிலின் பின்னணியில் அடர் புல்வெளியில் அவர்கள் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சியும் காதலின் பித்த நிலையை சொல்லுபவை.காலம் கடந்த ரகசியத்தை போல அன்னாவை குறித்த நினைவுகள் முழுக்க மறக்கடிக்கப்பட்டு இப்புதிய காதலர்களின் உலகத்திற்குள் நுழைகிறோம்.கதையின் இரண்டாவது மையப்புள்ளி இக்காதல்.

சாண்ட்ரோவின் ஆர்வம் க்ளாடியாவிடமிருந்து வேறொரு பெண்ணுக்கு மாறுகையில் கதையின் போக்கு துரோகத்தின் கதை நோக்கிச் செல்கிறது. அன்பை யாசிப்பவர்களுக்கு யோசனையின்றி தன்னை ஒப்படைத்து விடும் க்ளாடியாவும், கிடைத்த அன்பின் மகத்துவம் புரியாமல் உடல் சார்ந்து மட்டுமே பெண்ணை அணுகும் சாண்ட்ரோவும் குணத்தால் நேர் எதிர் திசையில் பயணிப்பவர்கள். சற்றும் எதிர்பாராத அவனது செயலால், இதுவரை நிகழ்ந்த யாவும் வேறு அர்த்தம் பெற்று நிற்க, கிளாடியா முன்னே மன்னிப்பு கோரி அவன் மண்டியிடும் அந்த இறுதிக் காட்சி உணர்வுப்பூர்வமானது. துரோகங்களை மன்னிக்கும் பெருங்குணம் தேவதைகள் மட்டுமே கொண்டது! அன்னாவின் மறைவிற்கும் சாண்ட்ரோவுடனான நெருக்கத்திற்கும் பாலம் அமைப்பது போல க்ளாடியா பணக்கார நண்பரொருவரின் வீட்டிற்கு செல்கிறாள். அங்கு அவளுக்கு அறிமுகமாகும் மேல்தட்டு மனிதர்களின் வினோதமான குடும்ப சூழலும்,அங்கு தயக்கமின்றி அரங்கேறும் துரோகங்களும் திருமண பந்தம் குறித்து அவளுக்கு தெரிவிக்கப்படும் குறியீடுகளாக கொள்ளலாம்.

மிகவும் சிக்கலான இக்காதல் கதையின் புரிந்துணர்வில் முடிந்தவரை பார்வையாளனையும் பங்களிக்கச் செய்ததே  மைக்கலேஞ்சலோவின்  சிறப்பு.வார்த்தைகளால் சொல்லவியலாத கூர்மையான ஒளிப்பதிவு வசனங்களின் தேவையை பல இடங்களில் நிராகரிக்கிறது.மிகுந்த அக்கறையோடு படமாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு காட்சியும் மனித உணர்வுகளை அதன் எதார்த்த அழகோடு நமக்கு கடத்துவது. தத்தம் வேடத்தை கச்சிதமாக நிறைவேற்றியுள்ள நடிகர்களுள் நம்மை முழுவதுமாக வசப்படுத்திக் கொள்வது க்ளாடியாவாகி நடித்துள்ள மோனிகா விட்டி. இத்தாலியின் பேஷன் ஐகானாக பின்னாளில் அறியப்பட்ட அழகி. கலைத்து போட்ட புதிர்களை ஒன்று சேர்க்கும் வெகு சுவாரஸ்ய பயணத்திற்கு இட்டுச் செல்லும்  இப்படைப்பு நவீன வாழ்வின் உறவு சிக்கல்களை முற்றிலும் வேறொரு மொழியில் முன்வைக்கிறது.


La Notte (1961)

La Notte, சுமூகமற்ற மண வாழ்க்கையை  மீட்டெடுக்க வழியறியாது  தடுமாறும் தம்பதியினரின் ஒரு நாள்  நிகழ்வுகளின் தொகுப்பு. கியோவனி தன் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற  எழுத்தாளன், லிடியா சுயநலமும், தன் பால்  அக்கறையுமற்ற கணவனை அவனது குறைகளோடு ஏற்றுக் கொண்டவள்.பரஸ்பரம் இருவரும் கொண்டிருக்கும் காதல் மீது நம்பிக்கையற்று,அன்பின் வாதையில் இருப்பவள். தங்களின் எழுத்தாள நண்பனை மருத்துவமனையில் காணச் செல்லும் துவக்க காட்சி அவர்களுக்கு இடையேயான இடைவெளியை கோடிட்டு காட்டுவது.

மைக்கலேஞ்சலோவின்  திரைப்படங்கள் துவக்கமோ முடிவோ இல்லாதவை.கதை மனிதர்களின் கடந்த காலமும்,எதிர்காலமும் பார்வையாளனின் கற்பனைக்கு விடப்பட்டவை. இங்கு லிடியாவின் பார்வையிலிருந்தே கியோவனியின் பிம்பத்தை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இயக்குநரின் சார்பு நிலை மொத்தமாய் லிடியாவின் பக்கமே இருப்பது அக்கதாபாத்திரத்திற்கு வலு சேர்ப்பது. ஆண் பெண் பகடையாட்டத்தில் எப்போதும் வீழ்த்தப்படுவது ஆண்களே.

மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நண்பனின் பேச்சு லிடியாவை கூடுதல் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறது.அங்கிருந்து கியோவனியின் புத்தக விழா கூட்டத்திற்கு செல்லும் லிடியா,அங்கு நிகழும் கொண்டாட்டத்தை முற்றிலுமாக வெறுக்கிறாள்.அங்கிருந்து கால் நடையாக அவள் செல்லும் சிறு தூரம்,அதன் தொடர்ச்சியான  காட்சிகள் இத்திரைப்படத்தின் அசாத்திய தன்மைக்கு சான்று.ஆள் அரவமற்ற சாலைகளும் , பழமையான கட்டடங்களும் கியானி டி வெனன்ஸோவின் காமிராவினால் கூடுதல் அழகு பெறுகின்றன.அச்சூழலின் அமைதியை மீறிய ஒரு வித பதற்றம்  நம்மை தொற்றிக் கொள்கிறது.வசனங்கள் ஏதுமற்ற அந்த நீண்ட காட்சியில் லிடியாவுடன் நாம் மேற்கொள்ளும் சில நிமிட பயணம் போற்றுதலுக்குரியது.

தன்னைச்  சுற்றி ஓய்வின்றி சுழலும் உலகத்தை வேடிக்கை பார்த்தபடி நடக்கும் லிடியா, இரண்டு குழுக்களாக சண்டையிட்டுக் கொள்ளும் இளைஞர்களை கடக்கிறாள்.நாம் அஞ்சும் படி அவர்கள்  அவளை அச்சுறுத்தவோ, அவளிடம் தவறாக  நடந்து கொள்ளவோ முயலவில்லை.உலகம் அதன் இயல்பில் இயங்கிக் கொண்டிருந்த குழப்பமும்,அச்சமும் அவளிடத்தே மட்டுமே எஞ்சி நிற்கின்றன. மேலும் அவ்விடத்தில் தன்  கணவனை அவள் முதல் முறை சந்தித்து ,காதலர்களாய் அவர்கள் உலா வந்த பூங்கா பொலிவிழந்து கவனிப்பாரற்று  இருக்கிறது.லிடியாவின் மனநிலையை அப்பட்டமாய்  வெளிக்காட்டும் காட்சி அது.

அன்றைய இரவை அவர்கள் பெரும் பணக்காரர் ஒருவரின் பிரம்மாண்ட விருந்தில் கழிக்க நேரிடுகிறது. மது மயக்கத்தில், உற்சாக கூக்குரலிட்டப்படி அங்குள்ள மனிதர்கள் நீச்சல் குளத்திலும்,பூங்காவிலும் சிறுபிள்ளைகளைப் போல திரிகின்றனர். லிடியாவிற்கு மற்றுமொரு தனிமையான பொழுது. எவ்விடத்திலும்,யாருடனும் தன்னை இணைத்துக் கொள்ள முடியாத குழப்பமான மனநிலை அவளுக்கு.மாறாக கியோவனியோ அப்பணக்காரரின் மகளான வேலண்டினாவின் மீது கிளர்ச்சி கொள்கிறான்.வேலண்டினாவாக மோனிக்கா விட்டி.அவனைக் காட்டிலும் வயதில் இளையவளாக இருப்பினும் மிகுந்த முதிர்ச்சியுடன் வேலண்டினா அவனை கையாளும் விதம் கச்சிதம். அவள் “The Sleep Walkers”  என்னும் தத்துவார்த்த  நாவலை வாசித்துக் கொண்டிருப்பதும் பொருட்படுத்த கூடியதே. அவ்விடத்தின் மனிதர்கள் ஒரு கோணத்தில் உணர்ச்சிகளற்ற நடைபிணங்களைத் தான் நமக்கு நினைவூட்டுகின்றனர்.

லிடியாவாக ஜியான் மொரே, Jules and Jims,Diary Of Chamber Maid,Elevator to the Gallows உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பிரபலமான  பிரென்ச் நடிகை. இத்திரைப்படத்தில் குடும்ப உறவில் சிக்கித் திணறும் பெண்ணை கண்முன் நிறுத்தும் நடிப்பு இவருடையது. கியோவனியாக நடித்துள்ள மார்செல்லோவிற்கு அறிமுகங்கள் தேவையில்லை. இத்தாலிய இயக்குநர்  பெலினியின் திரைப்படங்களின் மூலம் பரவலாக அறியப்பட்டவர். காதலை  வெளிக்காட்டிக் கொள்ளாத சராசரி ஆண்களின் பிரதியாக அலட்டல் இல்லா நடிப்பால் கவர்கிறார்.

சமூகப் பார்வையில் பெண் எவ்விதம் பாவிக்கப்படுகிறாள் என்பதை அடுத்த தலைமுறை பிழையின்றி அறிந்து வைத்திருப்பதை உணர்த்தும் பாத்திரப்படைப்பு வேலன்டினாவுடையது. ஆண்களால் பெண் மனதை  ஒரு நாளும் புரிந்து கொள்ள இயலாது என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்லும் தேவதை அவள்.நிராகரிப்பும்,அரவணைப்பும் சலிக்காமல் தொடரும் ஆண் பெண் விளையாட்டில் லிடியாவும் கியோவனியும் விதிவிலக்கல்ல என்னும் பேருண்மையே இறுதியில் வெற்றி பெறுகிறது.


L’Eclisse (1962)

L’Eclisse,முந்தைய இரு திரைப்படங்களை போலின்றி நேரடியான கதை சொல்லலை கொண்டது.காதலை முறித்துக் கொண்ட ஒரு இளம்பெண் பின் வரும் நாட்களை எவ்விதம் எதிர்கொள்கிறாள் என்பதை முடிந்தவரை தனது  இணையற்ற காமிரா மொழியால் நம்முடன் பகிர்கிறார் மைக்கலேஞ்சலோ. விட்டோரியா (மோனிகா விட்டி ) கூச்சமும்,பயந்த சுபாவமும் கொண்டிருக்கும் அதே  வேளையில் வாழ்க்கை குறித்த தீர்மானங்களின் சமரசம் செய்து கொள்ளாத இளம்பெண்.

வாழ்வியல் சிக்கல்களும், பணத்தின் மீதான பேராசையும், ஆண்களின் இச்சையும் அவளை அச்சம் கொள்ள செய்யும் அதே வேளையில் அதிலிருந்து கவனமாக தன்னை விடுவித்து கொள்ளும் வித்தையை  அறிந்தவள்.கடந்து போன காதலை குறித்து யோசித்துக் கொண்டிராமல் முடிந்தவரை தன்னை கொண்டாட்டங்களில் ஈடுபடுத்திக் கொள்ளும் விட்டோரியா,நவீன யுவதிகளின் பிரதி. தன் தோழிகளுடன் முகத்தில் சாயம் பூசி ஆப்பிரிக்க பழங்குடியினரைப் போல வினோத நடனமாடும் விட்டோரியாவின் உளவியலை புரிந்துகொள்வது கடினமில்லை.பைன் மர காடுகளில் மாலை பொழுதுகளை கழிப்பதும்,நண்பர்களுடன் ஹெலிகாப்டரில் பறப்பதும் கூட அவளுக்கு பிடித்தமான செய்கைகளாக உள்ளன.

இத்தனை கேளிக்கைகளுக்கு மத்தியிலும் சலிப்பை உணரும் விட்டோரியா பங்கு சந்தை நிபுணனான பெரோவிடம் காதல் கொள்கிறாள்.பணத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இயந்திரத்தனமான வாழ்க்கை முறையை பின்பற்றும் பெரோவிற்கு அவள் மீது உண்டாகும் காதலில் உறுதியான முடிவுகள் இல்லை.அந்நகரத்தில் தன்னை ஒரு ஏலியனான கருதுவதாக சொல்லும் விட்டோரியா அவனோடு கழிக்கும் சிற்சில பொழுதுகள் சுவாரஸ்யமாகவே கழிகின்றன. இருப்பினும் இருவேறு இலக்கை கொண்ட  அவர்கள் ஒரே பாதையில் பயணிக்க முடியாமல் போவது ஏற்றுக் கொள்ளக்கூடிய பிரிவே. காதல்,குடும்பம், உறவுகளின் தேவை இத்யாதிகளை போட்டு  குழப்பிக் கொள்ளாமல் தன் தேவையை மட்டுமே முன்நகர்த்திச் செல்லும்  நவநாகரீக காதலர்களின் கதை இது.


Monika Vitti

மைக்கலேஞ்சலோவின் பிற படைப்புகளை ஒப்பிடுகையில் L’ Eclisse’ல் வெளிப்படும் காட்சிகளின் துல்லியம் பார்வையாளனை முற்றிலும் மாறான திரை அனுபவத்தை அளிக்கின்றது. மாண்டேஜாக விரியும் இத்திரைப்படத்தின் நீண்ட இறுதிக்கு காட்சி அதற்கொரு உதாரணம். வெறுமையான சாலைகளும்,தெரு விளக்கும்,அடுக்குமாடி கட்டடங்களும், ஓடும் பேருந்தும்,வெறித்துப் பார்க்கும் மக்களும், அணுஆயுதத்தின் விளைவுகளை  அறிவிக்கும் பத்திரிக்கை செய்தி என   நீளும் அக்காட்சி  நம்மை உறைந்து போகச் செய்வது. இருண்ட கனவின் சாயலைக் கொண்டிருக்கும் இப்பின்நவீனத்துவ படைப்பு  உன்னத இசையின் துணையோடு உலக யுத்தத்திற்கு பிந்தைய சமூகத்தின் நிலையையும் மறைமுகமாக பேசுகிறது.