மெளனத்திற்கு திரும்புதல்(Everlasting Moments 2008)

கோகுல் பிரசாத்

“You see what you want to see”

– மரியா லார்சன் (படத்திலிருந்து)

சுவீடன் தேசத்து இயக்குநர் யான் ட்ரோவெலுக்கு (Jan Troell) வாழ்வு சாசுவதமானது எனும் நம்பிக்கையின் மீது அதீத பற்று உண்டு. ஆகாசத்திற்கு விரையும் ஊஞ்சல் ஆடி ஓயும் கணத்திற்காக காத்திருப்பவர். வண்டி எதிர்நோக்கிச் செல்லும் பாதையைப் போலவே அது சேறில் பதித்துச் சென்ற தடங்களும் அவருக்கு அத்தியாவசியமானது. சாதாரண மனிதர்களின் சாகசமற்ற வாழ்க்கையைத் துழாவி காவியப் பரிமாணங்களை கண்டடைபவர். மிக முக்கியமாக காயத்தைக் கீறி ஆழப்படுத்தி பார்வையாளர்களை வெறுமனே கண்ணீர் உகுக்கச் செய்யும் சலிப்பேற்றக் கூடிய சராசரி உத்திகளை இவரது படங்கள் அறவே தவிர்க்கின்றன.

தீர்மானமாக ஒன்றைக் காட்டி விட வேண்டும் என்ற கட்டுப்பெட்டித்தனமான எண்ணம் ஏதும் இல்லாததாலேயே ட்ரோவெலின் படங்கள் வாழ்வுக்கு அணுக்கமாகி விடுகின்றன. பார்வையில் இடறுவது அத்தனையும் காட்சியில் வரட்டுமே என்கிறார். நிலைத்திருப்பதைக் காட்டிலும் அலைவுறுதலே போதையேற்றுவது. சின்னஞ்சிறிய துமிகள் தெறித்து விழுந்து இணைந்து கடல் மடியில் சூரியனை அமிழ்த்தி விளையாடுகின்றன. இவர் தனக்குக் கிட்டும் தருணங்களை எல்லாம் பந்தயப் பொருட்களாக்கி வெல்வது நிச்சயமாகிவிட்ட நிதானத்துடன் பார்வையாளர் முன்னிலையில் சூதாடுகிறார். தம்மை ஒப்புக்கொடுத்து விட்ட பாவனையில் கரித்துக் கொட்டியவாறே தருணங்கள் களைத்து நீண்டு கிடக்கின்றன. ஒளிர்ந்தும் மறைந்தும் குவிந்தும் சிதறியும் உணர்வுகளின் தீவிரம் துடிக்கிறது.

நம்பகத்தன்மை வாய்ந்த புறச்சூழலும் மிகையில்லாத உணர்ச்சிகளும் ட்ரோவெல் படங்களின் பொதுக்கூறுகள். ஓர் ஆவணப்படத்திற்கு அவசியப்படும் விரிவான பின்புலத்தை அடிப்படையாகக் கொண்ட புறக்காரணிகள். திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டவையும் சின்னச் சின்ன பிம்பங்கள் வழியாக தன்னைத் திரட்டி உருவாகும் உலகமும் சந்திக்கும் புள்ளியில் அவை உயிர்கொள்கின்றன. அதில் உள்ளங்கள் மோதி தன்போக்கில் கட்டுப்பாடின்றி வெளிப்படும் அபாரமான தருணங்களை முகக் குறிப்புணர்த்துதல்கள் வழியாக நமக்குக் கடத்துவதே இவரது தலையாய நோக்கம். அதற்காகவே ஏராளமான அண்மைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. இவரே தனது படங்களுக்கான ஒளிப்பதிவாளருமாததால் (சில படங்கள் மட்டும் மிஷா காவ்ரஸோவுடன் இணைந்து ஒளிப்பதிவு செய்யப்பட்டவை) காட்சிகளுள் துலங்கி வரும் எதிர்பாராத சாத்தியங்களை தாமதிக்காமல் களவாடும் சாமர்த்தியமும் பார்வையாளராகவும் விலகி நின்று அவதானிக்கக் கூடிய அனுகூலமும் உண்டு. தவிர்க்கவியலாத சமூக உருமாற்றங்களின் வழி மேலெழும் கருத்தாக்கங்களையும் கனவுகளையும் தனது திரைப்படங்களின் வாயிலாக நெருக்கமாகப் பின்தொடர விரும்பும் ட்ரோவெல் அதன் சாத்தியப்பாடுகளை ஆராயத்தக்க வகையில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி அல்லது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தை கதைக் களங்களாக (வலுவான பின்னணி!) தேர்வு செய்கிறார். இவர் இயக்கிவற்றுள் The Emigrants (1971) மற்றும் The New Land (1972) ஆகிய படங்கள் இதற்கான மிகச் சிறந்த உதாரணங்கள்.

இவரது கதை மாந்தர்கள் துயர் கவிழும் அன்றாடப் பொழுதுகளிலிருந்தும் சிறுமையை உணரச் செய்யும் லௌகீகத் தந்திரங்களிலிருந்தும் தம்மை அறுத்துக் கொண்டு கொஞ்சமேனும் நகர்த்திக் கொள்ளத் தவிக்கிறார்கள். ஆயிரமாயிரம் வலைப்பின்னல்கள் அருகருகே அமைந்துவிட்ட சதிப்பெருக்கில் வெளியேறி வீழ்வதென்னவோ இரத்த உருசி அறிந்திருக்கும் கூர்வாளின் நிழலில் தான். புதிய நம்பிக்கைகளின் வசீகரம் தரும் குறுகுறுப்பு அலைகள் நுரைத்துத் ததும்பும் அவகாசத்தில் பாதிக்குக் கூட நிலைபெறுவதில்லை. ஏறி நிற்க யத்தனிக்கும் போதே பலகை எட்டி உதைக்கப்படுகிறது. எனினும் காலடியில் நழுவும் நிலத்தை பற்றிக் கொள்ளும் திராணி குறித்து பறத்தலின் சுகம் கண்டவர் கவலைப்படுவதில்லை. ஒரு நொடி பறந்தாலும் ஒட்டுமொத்த வாழ்விற்கும் அது போதுமானது எனும் எண்ணம் உடைய மனிதர்கள். குத்திக் கிழித்து இரணமாக்கும் காலத்தின் கோர பற்களிடையே புகவிருக்கும் மனிதரைக் கூட எப்போதும் ஒரு புன்னகையை தவழவிடச் செய்கிறார் என்பதில் தான் ட்ரோவெலின் மேன்மை அடங்கி இருக்கிறது. வெந்தழலில் துளிர்க்கும் நீரின் கருணை. பனி இறுகிய நிலத்தில் முளைக்கும் பைந்தளிரின் வேட்கை.

இவரது இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான Everlasting Moments திரைப்படம் மேற்கூறிய பொதுப் பண்புகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட விதிவிலக்கல்ல. மரியா லார்சன் புகைப்படக் கலை பயிலத்துவங்குவது ஒரு விபத்து தான். அதன் மூலமாக அவள் விரும்பும் விடுதலையை அடைய முற்படுவது நிறைவேறக் கூடியது தானா என்பதை சுய விசாரணை செய்கிறது இப்படம். கலையினால் மனிதனுக்கு எதையும் கற்றுத்தர முடியாது என அறுதியிட்டுச் சொல்லும் தர்க்காவ்ஸ்கி அதன் நடைமுறைப் பயன் என்பது நம்மை மரணத்திற்கு தயார்படுத்துவது மட்டும் தான் என்கிறார். கலைச் செயல்பாடுகள் மனிதரிடையே நல்லதை பயிற்றுவிக்கும் என நம்புவது ஒரு மாபெரும் ஜோக். நம்மால் இயல்வதெல்லாம் கலை தரும் அனுபவங்களுக்கு நம்மை முற்றாக ஒப்புக்கொடுப்பதே. அது தரும் மயக்கங்களின் ஊடாக மேலானதொரு வாழ்வை வாழ்ந்து பார்க்கலாம். விளைவுகளின் முன் பக்குவம் கொண்டு எதிர்வினையாற்றலாம் அல்லது பரந்த மனத்துடன் உள்வாங்கிக் கொள்ளலாம். ஆனால் தூய விடுதலை என்பது கலைகளுக்கு அப்பாற்பட்டது. இந்தத் திரைப்படம் கலைகளின் எல்லைக்குட்பட்ட வரம்புகளை வகுக்கத் துணிகிறது. காற்றை காற்றால் அளைவது போல. அதே சமயத்தில் நம்மை ஆட்கொள்ளும் கலையானது நம் பிடரியை பிடித்து உந்தும் அவாவை கண்டு குதூகலிக்கிறது. கலை மீதான பிடிப்பு வேறுபல அன்றாட விஷயங்களுக்கு முக்கியத்துவம் தராத வகையில் நம் மனத்தை பழக்குவது குறித்தறிந்த பின் உள்ளத்தில் பொங்கும் கிளர்ச்சியையும் பேராவலுடன் உற்று நோக்குகிறது.

16MMல் படமாக்கப்பட்டு 35MMக்கு மாற்றப்பட்டதால் ஒருவிதமான கனவுதத்தன்மை படம் முழுவதும் வியாபித்திருக்கிறது. மரியாவின் மகள் மாயா (Maja) தான் நமக்கு இந்தக் கதையை சொல்லத் தொடங்குகிறாள். Voice-Overஇல் படம் நகர்வது அலுப்பூட்டக்கூடிய பழைய உத்தியாக முதலில் தோன்றினாலும் ‘Camera Lens’ எனும் பிறிதொன்றினை கொழுகொம்பாக நாடி வாழ்வின் முழுமை நோக்கி அடியெடுத்து வைத்தவளின் கதையை இன்னொருவரின் பார்வையில் கூறக் கேட்பதைக் காட்டிலும் பொருத்தமான வழிமுறை வேறெதுவும் இருந்திருக்க முடியாது. நினைவேக்கப் பொக்கிஷங்களை புகைப்படங்களாக பத்திரப்படுத்தியவளின் வாழ்வை நினைவில் மீட்டுதல். மாயா பார்த்த மரியா. அதில் பார்வையாளர்கள் கண்டுணர வேண்டிய பிரத்யேக கோணமும் மிச்சமுள்ளது. காமெராவின் கண் சிமிட்டலில் கிறக்கம் கொண்டு உறைந்து போகும் காட்சிகளின் ஊடாகவே மரியாவின் உலகம் விரிகிறது. வீடு தரும் மூச்சுத்திணறல்களுக்கு நடுவே நுரையீரல் நிரம்பி வெளியேறும் மெல்லிய ஆசுவாசம். அறிதலின் பொற்கணங்கள் இடைவெளியின்றி தாக்கும் திக்குமுக்காடல். அதுகாறும் அடியாழத்தில் மறைந்து விட்டிருந்த ஆச்சரியங்கள் வெளிச்சத்திற்கு வந்து தம்மை வெளிக்காட்டிக்கொண்டு விட்டதில் ஏற்படும் புல்லரிப்பு. பிடிமானம் தரும் அளப்பரிய நம்பிக்கையும் புதிதாய் பிறந்துவிட்டதில் விழித்துக் கொள்ளும் அழகுணர்ச்சியும் சங்கமிக்கும் கொண்டாட்டம். இவை அனைத்திற்கும் மேலாக தன்னிலை மறந்து கடமைகள் பிறழ்கையில் விதிர்க்கும் பதற்றமும் தவிப்பும்.

கலை ரீதியிலான சிக்கல்கள் ஒரு தளத்திலும் உணர்வு ரீதியிலான கொந்தளிப்புகள் இன்னொரு தளத்திலும் இயங்குகின்றன. இரண்டையும் இணைத்ததில் இறுகும் முடிச்சுகள். அவற்றை அவிழ்த்து பலவந்தமாக ஒரு முடிவு நோக்கித் தள்ளாததில் இயக்குநரின் பக்குவம் தெரிகிறது. இப்படம்  ‘அம்மா-பிள்ளை’ உறவே உன்னதமானது போன்ற வசதியான கற்பிதங்கள் மேல் பரிகாசம் புரிகிறது. மனத்தை இழுத்துச் செல்லும் விசைகள் அத்தனையையும் கண்காணித்தபடியே ஒரு மூலையில் வீற்றிருப்பது வாழ்வது அல்ல. திடும்மென நெஞ்சம் அதிர சன்னதம் கொண்ட மனம் நாம் அறிந்திராத நமது இரகசிய முகமூடிகளை தனிமையில் அம்பலப்படுத்தும் போது அதற்கு ஒரு திகைப்பை பரிசாக வழங்கலாம். நம்மால் அவ்வளவுதான் இயலும். மரியாவுக்கு அங்ஙனம் நேர்கிறது. கணவன் மீதான ஆற்றாமை வெறுப்புடன் நொதித்து பிறக்கவிருக்கும் கருவின் மேல் கொப்பளிக்கிறது. அவள் குறித்து அதுவரை புனையப்பட்டிருந்த சித்திரம் சட்டென்று குலைந்து நடுக்கம் கொள்கிறது. அவள் எளிய பெண்ணல்ல எனும் புரிதல் எட்டிப்பார்க்கிறது. கற்பனையின் உப விளைவான அசட்டுத்துணிச்சல் உக்கிரங்கொண்டு எழுந்தாடும் தருணமது. அவசரகதியில் தீர்ப்பு எழுதிவிடக்கூடிய எல்லா வாய்ப்புகளுமுள்ள இந்தச் சம்பவத்தை காருண்யத்துடன் அணுகிய விதம் என்றென்றைக்குமான பாடம்.

எண்ணற்ற இடையூறுகள் ஏற்படும் சமயங்களிலும் நெருப்பில் விழும் அந்துப்பூச்சி போல கலையானது மரியாவை கவர்ந்து ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. படத்தில் திருமண உறவை மீறிய காதல்கள் மடங்கிக் கிடக்கின்றன. எல்லைகளுக்குள் நின்றவாறு ஊசிமுனைகளை மட்டும் நீட்டி உரசிக்கொள்ளும் பசப்பல்கள். தீ மூளாது எனத் தெளிந்துவிட்டதில் தணியும் குற்றவுணர்ச்சி. மூண்டால் தான் என்ன என அறிவுசார் துணை மீது நெகிழும் அன்பு. அவளது துணையே புகைப்பட கலையின் நீட்சியான சினிமாவை அவளுக்கு அறிமுகப்படுத்துகிறான். குடும்பத்துடன் சாப்ளின் படம் (Easy Street) பார்க்கச் செல்கிறாள். காட்சிகள் உண்டாக்கும் உடனடித் தாக்கத்தை பிரமிப்புடன் உள்வாங்குகிறாள். சலனமற்று மிதந்திருந்த விழிகளில் ஒரு துள்ளல். திமிறித் ததும்பும் நீரூற்று பீய்ச்சியடிக்கும் பரவசம்.

முதலாம் உலகப்போரின் போது நிலவிய சுவீடன் சமூகத்து குறுக்குவெட்டுத் தோற்றம் இதில் பதிவாகி உள்ளது. அந்த வெறுமையை சாப்ளின் படங்கள் அல்லது பிற கலைகள் வழியாக மீறிச் செல்ல முனைந்ததன் வரலாறும். இதற்கு மேல் என்றால் கதையைத் தான் வரி வரியாக எழுத வேண்டியிருக்கும். அப்படிச் செய்வதற்கு விக்கிபீடியா மட்டும் வாசித்த வேறு ஆட்கள் இருக்கிறார்கள். ஆகவே முடிவாக, எதையெதையோ தொட்டுச் செல்லும் திரைக்கதையில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட துருத்திக் கொண்டிருக்கும் மெனக்கெடல் ஏதுமில்லை என்பதே ஓர் ஆச்சரியம். ஓர் இறகு மிதந்து வருவதைப் போல இத்தனை இலகுவாக விஷயங்களைக் கையாள்வது என்பது ஒரு கனிந்த மனத்திற்கே சாத்தியமாகக் கூடும். நாம் கரைந்து காணாமற் போவதற்கு திரையில் ஒரு வாழ்வு மின்னுகிறது. இவ்வாறு நிகழும் ஒவ்வொரு தருணமும் அபூர்வமானது. அத்தகைய கணங்களை மரியா புகைப்படங்களாக பத்திரப்படுத்தி வைத்தாள். நாம் நினைவுகளில் சுமந்தலைவோம்.

பெர்க்மென் அளவுக்கே புகழ் பெற்றிருக்க வேண்டிய இயக்குநர் யான் ட்ரோவெல் இயக்கிவற்றுள் அவசியம் பார்க்க வேண்டிய மற்ற படங்கள்:

  1. Here Is Your Life (1966)
  2. The Emigrants (1971)
  3. The New Land (1972)
  4. Hamsun (1996)
  5. The Last Sentence (2012)