“அற்புத யதார்த்தவாதி” டேவிட் கிராஸ்மன். நேர்காணல்: சாம் கெர்பல்

 


 

தமிழில் : அசதா

மனம் திறந்த இந்த நேர்காணலில் இஸ்ரேலிய எழுத்தாளர் டேவிட் கிராஸ்மன் பிரதமர் நெதன்யாஹுவின் கோழைத்தனம், தன் மகனின் மரணம் சமீபத்திய தனது நாவலை பாதித்த விதம், மனிதநேயத்துடன் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் அரவணைத்துக்கொள்ள வேண்டியதன் தேவை இவை குறித்துப் பேசுகிறார்.

ஆயிரம் பாலஸ்தினீயக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்தால் பதிலுக்கு ஜூன் 2006ல் எல்லை தாண்டிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கையில் ஹமாஸ் தீவிரவாதிகளிடம் பிடிபட்ட பத்தொன்பது வயதான ஸ்டாஃப் சார்ஜென்ட் கிலாத் ஷாலித்தை விடுவிப்போம் என்ற அறிவிப்பையொட்டி “அனைவரது மகன்” என்ற தலைப்பில் யோஸி ஹலேவி எழுதிய கட்டுரையில் “இனியும், இந்த தேசம் நன்றாயிருக்க வேண்டும் அல்லது என் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்ற இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்துகொள்ள வேண்டியதில்லை” என்று நிம்மதி கொண்டதாகக் குறிப்பிட்டார். தி நியூ ரிபப்ளிக்கில் பங்களிப்பு ஆசிரியராகப் பணியாற்றும் ஹலேவி “அந்த ராணுவ வீரரை விடுவிப்பதற்காக நடந்த பிரச்சாரச் செயல்பாடுகளில் தான் ஈடுபடவில்லை” என்பதோடு அவனை அவனது பெற்றோரின் கரங்களில் சேர்ப்பதற்கு உதவிய, அவ்வீரரது விடுதலைக்காக பாலஸ்தீனியக் கைதிகளை விடுவிக்கும் ஏற்பாட்டுக்கு அவர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார் என்ற தவிர்க்கவியலாத குற்றவுணர்வின் ஒரு பகுதியாகவே தனது நிம்மதியுணர்வு இருந்ததாகச் சொன்னார். ஹலேவியின் இந்தப் பார்வை பெற்றோர் என்ற வகையில் அவரது உள்ளுணர்வுக்கு நேரெதிராக இருந்தது.

ஹலேவி சொல்லும் இந்த எதிரெதிர் நிலை, தனது தனிப்பட்டத் துயரம் பொது விஷயமாகிவிட்ட ஒருவரது  நிலையுடன் ஒத்துப்போவது. See Under: Love: A Novel, The Yellow Wind மற்றும் The Book of Intimate Grammar ஆகிய நூல்களின் ஆசிரியரான இஸ்ரேலைச் சேர்ந்த டேவிட் கிராஸ்மன், இருபது வயதே நிரம்பிய, இஸ்ரேலிய ராணுவத்தின் ஸ்டாஃப் சார்ஜென்ட்டான தனது மகன் ஊரியை 2006 ஆகஸ்ட்டில் (கிலாத் பிடிபட்டு இரண்டு மாதங்கள் ஆகியிருந்த நிலையில்) இரண்டாவது லெபனான் போரின் இறுதிக் கட்டத்தில் இழந்தார். தான் பிறந்த நாட்டுக்கும் தனது குடும்பத்துக்கும் இடையில், சக இஸ்ரேலியரின் பாதுகாப்புக்கும் தனது பிள்ளைகளின் பாதுகாப்புக்கும் இடையில் அவர் உணர்ந்த கடும் மன அலைப்பு அதன் உச்சத்தைத் எட்டியது. ஊரியின் இறுதி ஊர்வலத்தின்போது அவர் நிகழ்த்திய அஞ்சலி உரையில் “இஸ்ரேலியத்தன்மையின் உருவமாக” தன் மகன் ஊரி இருந்ததை தங்களது அரசியலிலும் சமூகத்திலும் பரவலாகக் காணும் வெறுப்புணர்வு மற்றும் சீர்கேட்டிலிருந்து இஸ்ரேலியர் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டிய தேவையுடன் ஒப்பிட்டார். இஸ்ரேலியச் சமூகம் தனது தனிப்பட்ட விவகாரங்களுக்கும் தன் தேசத்துக்குமிடையே ஓட்டைகள் மிகுந்த வேலிகளைக் கட்டி வைத்திருக்கும் ஒரு சமூகமாக இருக்கும் பட்சத்தில் அதற்காக அது பெரிய, துர்ப்பாக்கியமானதொரு விலையைத் தரவேண்டியிருக்கும்.

பிறகு, ஊரியின் மரணத்தையடுத்து வெளிவந்த கிராஸ்மனின் நாவலான ‘To the End of the Land’ லேசு அட்டைப் பதிப்பாக வின்டேஜ் புக்ஸினால் ஆகஸ்டில் வெளியிடப்பட்டதற்கு காரணமுண்டு. இந்நாவல் ஓரா என்ற இஸ்ரேலியப் பெண்ணைப் பின்தொடர்கிறது, ராணுவப் பணியிலிருக்கும் தன் மகன் ஓஃபர் இரண்டாவது இன்டிஃபடாவில் கொல்லப்படக்கூடும் என்ற சாத்தியப்பாட்டிலிருந்து தப்பிக்க எண்ணியவளாய் ஜெரூசலத்திலிருந்து கிளம்பி கலிலேயா வழியாக ஒரு நீண்ட நடைபயணத்தை மேற்கொள்கிறாள் ஓரா.  இப்பயணத்தில் அவள் அவ்ரமைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறாள். அவ்ரம் இளமைக் காலத்திலேயே அவளால் வாதைக்குள்ளானவன், 1973ல் நடந்த யோம் கிப்பூர் போரில் எதிரிகளிடம் போர்க்கைதியாகப் பிடிபட்டவன். அவனுடனான தனது பழைய உறவை, கூடுமானால் அதே கொந்தளிப்புடன்,  புதுப்பிக்க முயல்கிறாள். மே 2003ல், தனது மகனின் மரணத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கும் சற்று முன்புதான் ‘To the End of the Land’ நாவலை எழுதத் தொடங்குகிறார் கிராஸ்மன். நாவலின் இறுதியில் காணப்படும் குறிப்பில், ‘”எனக்கொரு உணர்வு, சொல்லப்போனால் ஒரு ஆசை, நான் எழுதும் இந்த நாவல் அவனைப் பாதுகாக்குமென நினைத்தேன்.  இந்த மாந்திரீக எண்ணத்தில் கொஞ்சம் ஓராவின் தப்பியோடுதலிலும் காணப்படுகிறது, ஒருவேளை இது மொத்த இஸ்ரேலின் உணர்வுமாகவும் இருக்கலாம். இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குரியன் ஒருமுறை சொன்னார், “இஸ்ரேலில் நீங்கள் ஒரு யதார்த்தவாதியாக இருக்க வேண்டுமெனில் அதிசயங்களில் நம்பிக்கை வைப்பவராக நீங்கள் வேண்டும்.” கிலாத் ஷாலித் பிடிபட்டது உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சனைகளில் அரசாங்கத்தின் தெளிவும் ஒழுங்குமுறையுமற்ற நடவடிக்கைகளை டேவிட் கிராஸ்மன் கண்டித்து வந்துள்ளார். ஹமாஸுடனான கொடுக்கல் வாங்கல்களில் குறிப்பாகக் கைதிகளைப் பரிமாற்றிக் கொள்வதில் இஸ்ரேல் துணிச்சலாக ஈடுபடுவதில்லை என 2010 ஜூலை ஹரீட்ஸ் இதழில் கிராஸ்மன் எழுதினார். ஹமாஸ் பதில் வினையாற்றவில்லையென்றாலும் அரசாங்கம் தனது வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அது ஒன்றும் தடையாக இருக்கப்போவதில்லை என்று அவர் நம்புகிறார். அரசாங்கம் தனது பிடிவாத ’முடக்குவாதத்தை’ உதறிவிட்டு ‘பல ஆண்டுகளாக நம் மீது நாமே மேற்கொண்டிருக்கும் முற்றுகையை நீக்க வேண்டும்’ என அவர் வேண்டுகோள் வைக்கிறார்.

ஷாலித் விவகாரம் பகிரங்கமாவதற்கு பல வாரங்கள் முன்பே நான் கிராஸ்மனிடம் பேசினேன். அவரது நாவல், இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனை, சமீபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள், இஸ்ரேலிய அரசாங்கம் ஆகியன உள்ளிட்ட பலவும் இடம்பெற்ற எங்கள் உரையாடல் முழுக்கவும் கிராஸ்மனின் குரலுக்கும் அவரது வார்த்தைகளுக்குமிடையேயான வேறுபாடு கண்டு நான் வியந்தேன்.

நெதன்யாஹு மற்றும் இஸ்ரேலிய அரசியல் பற்றிப் பேசுகையில் வெளிப்படும் காட்டமான, கசப்புமிக்க வெற்று ஆரவாரப் பேச்சு அவரது நிதானமான ஆழந்த சிந்தனையின்பாற்பட்ட குரலில் வெளிப்படுவதை நம்புவது கடினமாயிருக்கும்.  அவரது பேச்சு தீர்க்கமானது ஆனாலும் பேச்சினூடான தனது எண்ணவோட்டத்தை அவர் மறைக்க முயற்சிப்பதில்லை, பேச்சின் போதே அது வெளிப்படுவதைக் காண முடியும். ஒருவேளை இது தாய்மொழியல்லாத ஒரு மொழியில் பேசுவதனால் இருக்கலாம், ஆனால் எப்படி அவர் வெகுசில விஷயங்களை மட்டுமே சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார் என்பதையும் அது உணர்த்துகிறது. இஸ்ரேல் மற்றும் அதன் தலைவர்கள் மட்டிலான தனது மனக்கலக்கத்தை அவர் மறைப்பதில்லை, ஆயினும் தனது தாய்நாட்டிற்குப் பிரகாசமான எதிர்காலமிருக்கிறது என நம்பவும் செய்கிறார். இவ்வளவுக்குப் பிறகும் அவர் நம்பிக்கையைக் கைவிடவில்லை.

குவெர்னிகாவுக்காக சாம் கெர்பெல்.

குவெர்னிகா: உங்கள் மகன் ஊரி இஸ்ரேலிய ராணுவத்தில் சேருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு To the End of the Land நாவலை எழுதத் தொடங்கினீர்கள். அவனைப் பாதுகாக்கும் ஒரு வழியாக இந்நாவலை எழுதத் தொடங்கியதாகக் குறிப்பிடுகிறீர்கள், தனது மகன் ஓஃபர் உயிருடன் இருக்க வேண்டி கலிலேயாவில் ஓரா பயணம் மேற்கொள்வது போல. ஓரா உங்களது பிரதியுருவா?

டேவிட் கிராஸ்மன்: எல்லாக் கதைமாந்தரும் என் நாவலில் இருக்கின்றனர் என நான் நினைக்கிறேன். ஆரம்பத்தில் அது எனக்குத் தெரியாவிட்டாலும் பிறகு அவர்கள் அப்படி (பிரதியுருக்களாக) ஆகிவிடுகின்றனர். பின்னாளில் என் வாழ்வில் நிகழ்ந்தவற்றின் பார்வையிலிருந்து மட்டுமல்ல, வழக்கமாகவே ஒரு கதைமாந்தரைப் பற்றி எழுதத் தொடங்கும்போதே எனக்கும் அவருக்கும் என்ன தொடர்பு, ஏன் அவர் அல்லது அவளை நோக்கி இப்படி ஈர்க்கப்படுகிறேன் என எனக்குப் புரிவதில்லை. மெல்ல மெல்ல இந்தக் கதைமாந்தர் என்னுடன் தொடர்புடையவர், என் மட்டில் அர்த்தமுடையவர் என்பதை உணர்கிறேன். ஓரா நானல்ல; நாங்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து மிகவும் வேறுபட்டவர்கள். ஆனால் ஓராவை எழுதிய பின் நான் அவளாக மாறிவிட்டேன் என நினைக்கிறேன்.

குவெர்னிகா:  நாவலின் இறுதியில் உள்ள குறிப்பில் உங்கள் மகன் ஊரியின் மரணத்துக்கு முன்பே இந்த நாவலில் பெரும்பகுதி எழுதி முடிக்கப்பட்டுவிட்டது என்கிறீர்கள். இத்துயர நிகழ்வுக்குப் பின் மீண்டும் நீங்கள் நாவலை எழுதத் தொடங்கிய அந்த நாளுக்கு என்னை அழைத்துச்செல்ல முடியுமா? அப்போதைய உங்களின் எண்ணங்கள் என்ன, நாவலின் தொனி அல்லது கட்டமைப்பு மாறியதா என்பன பற்றி விளக்க முடியுமா?

டேவிட் கிராஸ்மன்: அடிப்படையான கதை மாறவில்லை. கதைக்கு நான் விசுவாசமாக இருக்க வேண்டுமென நினைத்தேன். இந்தக் கதை ஒரு மகனின் மரணம் பற்றியது அல்ல மாறாக அவன் இறந்து விடுவானோ என்ற மனத்தவிப்புப் பற்றியது. இந்த நாவல் மரணம் பற்றியதே அல்ல, வாழ்வு பற்றியது, மரணம் குறித்த அச்சம் பற்றியது. இது இஸ்ரேலின் ஒவ்வொரு குடும்பத்துக்கும், இஸ்ரேல் எனும் கருத்தமைவுக்கும், இஸ்ரேல் எனும் நாட்டுக்குமான இயல்பான கலவையுணர்வு.

மீண்டும் எழுதத் தொடங்கியது குறித்து நான் விரிவாகப் பேச விரும்பவில்லை. நாவலுக்குத் திரும்புவது ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் அது மட்டுமே இந்த உலகில் மீண்டும் எனக்கான ஓர் இடத்தைக் கண்டடைய உதவும் வழி என்பதை மெதுவாக உணரத் தொடங்கினேன். ஏனென்றால் இதற்கு முன்பிருந்த யாவற்றிலிருந்தும் வெளியேற்றப்படும் உணர்வானது எதையும் இனி முக்கியத்துவமற்றது, தேவைப்படின் நமக்குக் கிடைக்கக்கூடியதுதானே எனச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை புரியச் செய்தது. கதை இன்னும் வலுவாகவே இருந்தது, அது நான் பழகிய களம், படைப்புக்கான உந்து சக்தி மீண்டும் உண்டானது. தெளிவுகளற்று எல்லாமே குழப்பமாகவும் மரத்துப் போயும் இருந்த உலகில் வார்த்தைகளைக் கறாராக, துல்லியமாகப் பயன்படுத்த வேண்டியிருந்தது. மிகவும் தவறான ஓர் உலகில் சரியான ஒன்றைச் செய்ய வேண்டிய உணர்வை அது ஊட்டியது. அன்பையும், பரிவையும், உயிர்ப்புள்ள கதைமாந்தரையும், வாழ்க்கை நிகழ்வுகளையும், நகைச்சுவையுணர்வையும் நாவலுக்குள் செலுத்துவது எனக்கு மீண்டும் வாழ்தலைத் தேர்ந்தெடுக்கும் ஒரு வழியாக இருந்தது.

குவெர்னிகா: மேலே குறிப்பிட்டவாறு ஓராவிலிருந்து எப்படி நீங்கள் வேறுபடுகிறீர்கள்?

டேவிட் கிராஸ்மன்: இயல்பில் ஓரா ஒரு கலைஞர் கிடையாது. தனது  சிந்தனை யாவிலும் இருப்பிலும் அவ்ரம் கலைஞன். அவ்ரமுடன் அதிகம் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். ஓரா கலைஞர் இல்லை; விஷயங்களை வழமையாக அவை இருக்கும் விதத்திலேயே அவள் பார்க்கிறாள். அவள் ஊன்றி நிற்பவள், அவளது பாதங்கள் இரண்டும் பூமியிலிருக்கின்றன. பிரெஸிலிலிருந்து ஒரு வாசகி அழகான கடிதம் எழுதினார். “ஓரா கலைகளுக்கான உந்துசக்தியாக இல்லாமலிருக்கலாம், ஆனால் நிச்சயமாக வாழ்க்கைக்கான உந்துசக்தி.” அந்த வாசகி சொன்னது சரிதான் என நினைக்கிறேன். நாவலில் உள்ள அனைத்துக் கதைமாந்தரிலும் ஓரா அதிகத் துடிப்பும் உத்வேகமும் மிக்கவள். அவளைச் சுற்றிலுமுள்ள ஆண்கள் அனைவரும் அவளிடமிருந்து இவற்றை எடுத்துக் கொள்கிறார்கள், மனதில் புகுத்திக்கொள்கிறார்கள், இவற்றால் ஊட்டம் பெறுகிறார்கள். குடும்பத்தில் அவள் ஒருவகையான உற்பத்தித் மையமாக இருக்கிறாள். கையறு நிலையில் இருக்கையிலும், எண்ணப்படி யாவும் நடக்கிற போதும் எதையுமே அவளாக  உருவாக்குவதில்லை. வீட்டை விட்டுத் தொலைவாகப் பயணிக்கும் அந்த முடிவு மட்டும் விதிவிலக்கு. யதார்த்தத்தையும் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் மீளுருவாக்கம் செய்யும் சக்தி அவளுக்கு உண்டு.

குவெர்னிகா: வாசகர்களும் விமர்சகர்களும் ஓரா கதாபாத்திரத்தை வெகுவாகப் புகழ்ந்துள்ளனர், அது நியாயமானதும்கூட. ஆனால் To the End of the Land பெரும்பகுதி காவியத் தன்மையுடையதாக இருக்கிறது, காரணம் கதைமாந்தரனைவரும் மிகத் தெளிவுடன் சித்தரிக்கப்பட்டவர்களாய் பல பரிமாணமுடையவர்களாய் இருக்கிறார்கள். அவ்ரம் கதாபாத்திரம் எங்கிருந்து உருக்கொண்டது என இன்னும் கூடுதலாகச் சொல்ல முடியுமா?

டேவிட் கிராஸ்மன்: என்னைப் பொருத்தவரை, ஓரா ஒருத்தி மட்டுமில்லை, இரண்டு முக்கியக் காதாபத்திரங்கள் இந்த நாவலில் இருக்கின்றனர். அவ்ரம் படைப்பாளி, கலைஞன், அதிகம் வாதைக்குள்ளானவன்-மற்ற நாவல்களில் நான் படைத்த கதாபாத்திரங்களை விடவும், விலக்கப்பட்டவன், மற்றவர்களால் புரிந்துகொள்ளப்படாதவன், தனித்தன்மை, வித்தியாசப்பட்டிருத்தல்  என்னும் பொறுப்புகளை சுமக்கத் துணிபவன். வித்தியாசமாக இருப்பதை அவன் விரும்புகிறான், ஆனால் அதே நேரம் அவன் நம்பிக்கை வறண்டவனாக இருக்கிறான்: அடுத்தவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ள விரும்புகிறான். ஒரே நேரத்தில் அவன் மிக வலுவான மனிதன் மற்றும் மிக பலவீனமான மனிதன். பலவீனமானவன் அல்ல, மிக நொய்மையானவன், எப்போதும் கற்பனையில் ஆறுதல் தேடுபவன்.  ஓராவிடம் அசலான கற்பனைகள் கிடையாது. கற்பனை விஷயங்களில் அவளுக்கு நம்பிக்கை இல்லை. அந்தப் பயணம் தொடங்கிய பிறகே அவளது தீவிர அவாவிலும் மாய எண்ணங்களிலும் கற்பனை தென்படுகிறது. அவள் தரையில் காலூன்றிய சாதாரண பெண். அவ்ரமோ எப்போதும் மிதந்தபடியிருந்தான்-குறைந்த பட்சம் கைதியாகப் பிடிபடும் வரையாவது. அவனை மறு உருவாக்கம் செய்வதன் வழி, அவனை மீண்டும் வாழ்வுக்குள் கொண்டு வருவதன் வழி அவனது கலை சார்ந்த குணங்களை அவள் அடைகிறாள் எனலாம்.  ஆரம்பத்தில் ஓஃபர் பற்றிய கதையை அவ்ரமிடம் அவள் சொல்ல, அவன் அதைக் கேட்க மறுக்கிறான். வாழ்க்கையுடன் அவன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை. தனக்கான மென் பொருள் அளவுக்குமீறி ஏற்றப்பட்டுவிட்டதாகச் சொல்கிறான், வேறொருவருக்கு அவனது வாழ்வில் இடமில்லை என்கிறான். அவ்ரம் ஓஃபரினால் கவரப்படவில்லையாயினும் ஓஃபரின் கதையினால் கவரப்படக்கூடும் என எண்ணி வலிந்து அவள் ஓஃபரின் வாழ்க்கைக் கதையை அவனிடம் சொல்கிறாள். அவ்ரம் அதுபோன்றவொரு ஆள்தான், மனிதர்களை விடவும் கதைகள் அவனைக் கவர்கின்றன. இந்தப் பயணத்தில் ஓரா செய்வதெல்லாம், அனேகமாக அவன் வாழ்வில் முதல் முறையாக, கதை எனும் பரிமாணத்தைக் கடந்து மனிதர்கள் என்னும் பரிமாணத்தை நோக்கி அவனை அழைத்து வருவதுதான். ஆதியிலமைந்தவொரு வழியில், தனது கைதி வாழ்வை அவன் மீண்டும் பின்தொடரா வண்ணம் அமைந்த ஒரு வழியில், யாதர்த்தத்தை அவன் தொடும்படிச் செய்தாள்.

 குவெர்னிகா: ஓராவின் முன்னாள் கணவன் இலனைப் பற்றி?  ஓரா, அவ்ரம் இவர்களுடன் இலனும் சேர்ந்து ஒரு மூவர் குழுவாக இருக்கின்றனர்.

டேவிட் கிராஸ்மன்: இலன் முக்கியமானவன், ஆனால் அப்பாத்திரம் கதையின் பின்னணியில்தான் தேவைப்பட்டது. நாவலின் முந்தைய வடிவங்களில் இலனுக்கு நிறைய இடமிருந்தது. பிறகு இந்தக் கதையின் மையம் ஓராவுக்கும் அவ்ரமுக்கும் இடையில் இருப்பதை உணரத் தொடங்கினேன். நாவலின் முதற்பகுதியில் மருத்துவமனையில் தனித்து வைக்கப்பட்டிருக்கையில் இலன் எப்போதும் தூங்கிக் கொண்டிருக்கிறான். ஒரு வகையில் இலன் தன் வாழ்விலும் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவன் தன்னிலிருந்து வெளியே வருவதில்லை. பின்னரும் அவன் அதிகம் மாறிவிடவில்லை. ஓரா அவனைக் காதலிக்கிறாள், அவனையே தேர்ந்தெடுக்கிறாள். இருவரும் சேர்ந்து ஒரு பிள்ளையைப் பெற்ற பின்னரும் தான் இன்னும் அவ்ரமுக்காகத்தான் இருக்கிறோம் என்பதை எப்போதும் அறிந்தவளாயிருக்கிறாள் ஓரா. ஆமாம், இந்த முக்கோண உறவில் அவ்ரமுக்கும் இலனுக்குமிடையில் பரஸ்பர ஈர்ப்பு போன்ற ஏதோ ஒன்று  இருப்பதாகவும் சொல்லலாம். இந்த ஈர்ப்பு பாலுறவு சார்ந்தது என நான் நினைக்கவில்லை, அது தன்னைப் போல இருக்கும் இன்னொருவரைக் கண்டறிவதில் உள்ள ஈர்ப்பு. இளமையில் அவ்ரமும் இலனும் மிகத்துணிவான  இரு இளைஞர்களாக இருந்தனர், இலன் அப்போது தனது ஆழங்களைத் தானே கண்டறியத் தலைப்பட்டான். வேற்று நாட்டில் பரஸ்பரம் தங்களை அடையாளம் கண்டுகொள்ளும் இரண்டு உளவாளிகளைப் போல அவர்கள் இருந்தனர். ஆனால், யோம் கிப்பூர் போரின்போது எகிப்தியப் படையினர் அவனைச் சுற்றிவளைத்து நெருங்கிக் கொண்டிருக்கையில் பதுங்குகுழியிலிருந்து அவ்ரம் ரேடியோ மூலம் சொன்ன அவனது கதையை தொடர்ந்து கேட்க முடிவெடுக்கிறான் இலன், அப்போதுதான் தான் அவ்ரமைப் போல நிஜமான கலைஞன் இல்லையென்பது அவனுக்கு உரைக்கிறது.

குவெர்னிகா: இதை இன்னும் சற்று விரிவாகப் பார்க்கலாமா, அதாவது எழுதுவது என்பது புரிந்து கொள்ளும் ஒரு வழி. உங்கள் நாவல்களில் பல தீவிர சுயசரிதைத் தன்மையுடையவை. உதாரணத்துக்கு See Under: Love நாவலில் ஒரு பகுதி நாஜிக்களின் இன அழிப்பிலிருந்து தப்பித்தவர்களது மகனைப் பற்றியது. உங்களது உறவினர் ஒருவர் ஆஷ்விட்ஸில் இருந்திருக்கிறார். இந்தத் தனிப்பட்ட விஷயங்கள் திட்டமிட்டா அல்லது போகிற போக்கிலா, உங்கள் எழுத்தில் எப்படி அவை இடம் பெறுகின்றன?

டேவிட் கிராஸ்மன்: சிலநேரம் அவை தம் போக்கில் வந்து சேர்ந்துகொள்கின்றன, சிலநேரங்களிலோ அவை எனக்குத் தேவைப்படுகின்றன. ஏனென்றால் கதை வடிவில் எழுதினாலன்றி என் வாழ்வின் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களை என்னால் புரிந்துகொள்ள இயலாது. அதாவது என் கதைமாந்தருக்கு வேறு பார்வைக் கோணங்களை, வேறு  வரைவுகளை, என்னுடையது மட்டுமல்லாது பிறருடையதையும்,  அளிக்கிறேன்.

குவெர்னிகா: To the End of the Land  நாவலில் கையாளுகையில் எளிதில் புண்படுத்திவிடக்கூடிய அளவுக்கு உணர்ச்சிமயமான பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலிய ராணுவம் கைதிகளை நடத்தும் விதம் அதில் ஒன்று.  அது போன்ற ஒரு சம்பவத்தில் ஓஃபர் சிக்கிக் கொள்கிறான். எப்படித் தன் மகன் இதில் ஈடுபட்டான் என நினைத்து மருகுகிறாள் ஓரா. கணவன் இலனோ ஓஃபருக்கு ஆதரவாக இருக்கிறான். ஆனால் அங்கு என்னதான் நடந்திருக்கும் என்பதை அறிந்துகொள்ளத் துடிக்கிறாள். நாவலில் இந்தச் சம்பவத்தை எழுதத் தூண்டியது எது?

டேவிட் கிராஸ்மன்:  நாங்கள் மிக வன்முறையான ஒரு பிரதேசத்தில் வசிக்கிறோம், இதன் காரணமாகச் சிலநேரம் நாங்கள் கடுமையாக எதிர்வினையாற்ற வேண்டியிருக்கிறது. ஓஃபர் மற்றும் ஹெப்ரானைச் சேர்ந்த பாலஸ்தீனியரைப் பற்றிய ஒரு பகுதி நாவலில் வருகிறது. அதே போல எகிப்தியரிடம் பிடிபட்ட அவ்ரமை அவர்கள் வதைப்பது குறித்த ஒரு பகுதியும். நாங்கலெல்லாருமே கைதிகள், சிக்குண்டவர்கள்.  மனிதத் தன்மையற்ற, நற்குடி வாழ்வுக்கு எதிரான ஒரு சூழலில் மனிதராக இருப்பது, அதுவும் நேர்மையும் ஒழுக்கமும் கொண்ட மனிதராக இருக்க முயல்வது கடினமானது. வெறுப்பு அச்சம் சார்பெண்ணங்கள் இனத் துவேஷம் ஆகியவற்றால் நஞ்சூட்டப்பட்டச் சூழலில் இந்த நஞ்சுகளிடம் சரணடைந்துவிடாமலிருக்க ஒருவர் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. இதுபோன்ற சிந்தனை முறை எளிதில் நம்மைக் கவர்ந்து அதனிடம் தஞ்சமடையச் செய்துவிடும். மற்றவரை அச்சுறுத்தலாகப் பார்த்தல், நம்மை பீடத்தில் ஏற்றி வைத்தல், அந்த மற்றவர் நாம் அதிகாரத்தைக் கையிலெடுத்தால்தான் வழிக்கு வருவார் எனவே நமக்கு விருப்பமில்லையென்றாலும் அவர்களைக் கடுமையாகவே நடத்துவோம், யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கான தாங்கவியலாக் கடுமை கொண்ட இந்த வழிகள் நம்மையே  புரிந்துகொள்ள உதவும் வழிகளாகும். இது ஒருவகையான அக நிறைவுடன் உலகைப் பார்க்கும் வழியுமாகும் என்பதெல்லாம் இந்தச் சிந்தனை முறையில் அடங்கும். பெற்றோர் குழந்தைகளை மனிதத் தன்மையுடன் வளர்ப்பது இங்குள்ள பெரிய சவால்களுள் ஒன்று. குழந்தைகள் இளம் வயதில் பலதையும் பார்க்கிறார்கள்.  அவர்கள் மற்றவரை, எந்த மற்றவராயினும், எந்த மனித உயிராயினும் நுண்ணிய உணர்வுடன் அணுகும் வகையிலும், எல்லா மனிதரையும் மரியாதையுடன் நோக்கும் வகையிலும் வளர்க்க வேண்டும். ஆனால் இப்படி வளர்ப்பது அவர்களை இப்பகுதியின் யதார்த்த வாழ்க்கைக்குத் தயார் செய்யாதே என்ற அச்சம் ஏற்படுகிறது. இங்குள்ள வாழ்வு மனிதத் தன்மையுடன் முரண்படும் வாழ்வு. ஹெப்ரானில் அவன் செய்த செயலுக்காக ஓரா ஓஃபரைக் கடிந்துகொள்ளும் போதும், பாலஸ்தீனர்களை மனிதத் தன்மையுடன் நடத்த வேண்டும் என அவனை எச்சரிக்க நினைக்கும்போதும், தான் சொன்னதை மனதில் வைத்துச் செயல்படுகையில் நொடி நேரம் அவனது கவனம் பிசகி எதிர்வினையாற்றுவது தாமதமாகி அந்தக் கண நேரத் தயக்கத்தால் அவனுக்கு மரணம் நேர்ந்துவிடுமோ என அஞ்சவும் செய்கிறாள். இங்கே இது புறவயமான ஒரு எண்ணம் மட்டுமல்ல; நிச்சயமான யதார்த்தமும்கூட. மக்கள், குறிப்பாக ராணுவத்திலிருப்போர், உயிரோடிருக்க வேண்டுமாயின் தெளிவான விரைவான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இவ்வித உச்ச மனக்குழப்பங்கள், உண்மையில் இவை கிரேக்கத் துன்பியலுக்கானவை, எங்கள் அன்றாட உணவு, எங்களதும் பாலஸ்தீனியரதும். மனிதராக நீடிக்கும் பொருட்டு இந்த முரண் உந்துதல்களை, அழுத்தங்களை, ஆவல்களை மட்டுப்படுத்த நினைத்தால் அது மிகவும் கடினமான காரியமாகிவிடுகிறது. கையில் ஒற்றை மெழுகுவர்த்தியுடன் பெரும் புயல் நடுவே நடப்பதற்கு இதை ஒப்பிடுவேன். எப்படி அதை நீங்கள் அணையாமல் காப்பீர்கள்? எப்படி அதை நீங்கள் காப்பாற்றிச் செல்வீர்கள்?

குவெர்னிகா: இஸ்ரேலிய-பாலஸ்தீனப் பிரச்சனை ஒரு புறமிருக்க, சமீபமாக இந்தக் கோடைக்குப் பிறகு இஸ்ரேலில் வெடித்த போராட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களைப் பற்றியும் பேசியிருக்கிறீர்கள், எழுதியிருக்கிறீர்கள். பல இஸ்ரேலியரிடம் நான் பேசினேன், நான் பேசிய அனைவருமே இந்தப் போராட்டங்கள் இஸ்ரேலது ஒற்றுமையின் வலிமையை அவர்களுக்கு உறுதிப்படுத்தியிருப்பதாகச் சொன்னார்கள். உங்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறதா? அரசியல் செயற்பாட்டுடனான ஒரு இஸ்ரேலின் எதிர்காலத்துக்கு நம்பிக்கை தரும் அறிகுறிகளாக இவை இருக்குமா?

டேவிட் கிராஸ்மன்:  ஆமாம், இஸ்ரேலியரை விரோதமிக்க பல சிறு குழுக்களாகப் பிரித்த 1967ம் வருடப் போர் எங்களிடமிருந்து பறித்துக்கொண்ட ஒன்றை நாங்கள் மீண்டும் நாடிச் செல்ல இந்தப் போராட்டங்கள்  உதவின. இந்தச் சமூகப் போராட்டங்களால் சட்டென்று எங்களிடையே ஒற்றுமையையும் கட்டுக்கோப்பையும் மீண்டும் உணர முடிந்தது. உண்மையிலே நாங்கள் ஒற்றுமையைச் சுவாசித்தோம், அது  எங்கள் சமூகத்துக்கு மிகவும் தேவைப்பட்ட ஆனால் தொலைந்து போய்விட்டிருந்த ஒரு தாதுச்சத்துப் போலிருந்தது. போராட்டங்களும் அதன் தலைவர்களும் எங்களது பொருளாதார நிலைக்கும் குடியேற்றங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்துப் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்தாலுமேகூட அவை இந்தச் சமூகத்தின் முதிர்ச்சியை, எதிர்காலம் குறித்த நம்பிக்கை மிக்க ஏதோவொன்றைக் குறிப்பதாக நான் நினைக்கிறேன்.  உதாரணத்துக்குச் சொன்னால் வரிப்பணத்தில் பெரும்பகுதி இந்த யூதக் குடியேற்றங்களுக்கும் அவற்றைப் பாதுகாக்கும் ராணுவத்தினருக்கும் செலவாகிறது. சில வாரங்களுக்கு மட்டும் யூத ஆக்கிரமிப்பு பிரச்சனை பற்றிப் பேசுவது ஒன்றும்  மோசமான விஷயமாக இருக்காது, ஏனென்றால் எதிர்வரும் தேர்தலிலும் தற்போதைய சூழலிலும் இன்னுமதிகம் சமூகம் தொடர்பான விஷயங்களைப் பேசுவது,  யாராயிருந்தாலும் அவர்களுக்கு சம உரிமை மற்றும் மரியாதை அளிப்பது, நாம் செய்வனவற்றுக்குப் பொறுப்பேற்பது, சமூகம் சார்ந்த நமது கொள்கைகள் நம்மை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது இவற்றின் மூலம் இந்த எதிர்புப் போராட்டங்கள் பாலஸ்தீனியர்களைப் பொறுத்தமட்டிலான ஒரு அரசியல் செயல்பாடாக மாறும் வாய்ப்பிருப்பதாக நான் நம்பினேன்.

 குவெர்னிகா: இவையனைத்திலும் இஸ்ரேலிய அரசின் பங்கு என்ன? ஒரு வருடம் முன்பு நேர்காணலொன்றில் “நமது தலையெழுத்தை சிறப்பாக மாற்றியமைக்கக் கூடியவர்’ எனப் பிரதமரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்போதும் அப்படி நினைக்கிறீர்களா?

டேவிட் கிராஸ்மன்:  ஆமாம், இப்போதும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் அதனால் நான் நம்பிக்கை மிக்கவன் என்றாகிவிடாது. அப்போதுமேகூட புதிய சவால்களுக்கு முன்னால் முற்றிலும் செயலிழந்து நின்ற திரு. நெதன்யாஹு மீது நான் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை. அச்சமிகு அவநம்பிக்கைக்குள் சிக்குண்டவராகவே அவர் யதார்த்தத்தை எதிர்கொண்டார். என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.  விரோதம் பாரட்டும் நாடுகளால் நாங்கள் சூழப்பட்டுள்ளோம். இன்றுவரை அவற்றுள் பெரும்பாலான நாடுகள்-பெரும்பாலானவை எனச் சொல்ல மாட்டேன், அரபு நாடுகள் அனைத்தும்-இங்கிருப்பதற்கான எங்களது உரிமையை ஏற்றுக் கொள்ளாதவை, இந்த தேசத்தின்மீது எங்களுக்கிருக்கும் ஆழ்ந்த பற்றுதலையும் இது எங்கள் தேசம் என்ற எங்களது உணர்வையும் புரிந்துகொள்ளாதவை. எனவே எங்களது அச்சங்களுள் சில உண்மையானவை, நிச்சயமானவை. ஆனால் உண்மையான ஆபத்துக்களுக்கும் அவரது தனிப்பட்ட அச்சங்கள் மற்றும் கடந்த கால அதிர்ச்சிகளின் எச்சங்களுக்குமிடையிலான வேறுபாட்டை நெதன்யாஹு அறிந்திருக்கவில்லை. இந்த யதார்த்தத்தை மாற்றியமைக்கவோ புதிய யதார்த்தத்தை உருவாக்கவோ கூடிய தலைவர் இல்லையவர். தொடர்ந்து அவர் இது போலவே சிந்திக்கவும் செயல்படவும் செய்வாரேயானால் மீண்டும் எங்களைக் கடுந்துயருரிலும், தீவிர அச்சங்களிலுமே தள்ளிவிடுவார். இவற்றுக்கு அப்பாலும் இஸ்ரேலின் இன்றைய சூழ்நிலையையும், மக்களது அச்சங்களை ஊதிப் பெருக்கி அவர்களை ஒரு மாதிரி ஒன்றுபடுத்துவதில்-அச்சத்தினால் உண்டாகும் ஒற்றுமை-நெதன்யாஹுக்கு இருக்கும் மேதமையையும் பார்க்க சமீபத்தில் இஸ்ரேல் கண்ட பிரதமர்களுள் மிகவும் வலுவான பிதமர் அவர்(ஏரியல் ஷரோனும் மிக வலுவான ஒரு பிரதமராக இருந்தார்). அனேகமாக வெளியிலிருந்தான அழுத்தத்தின் நிமித்தம் வழமைக்கு மாறாகச் செயல்பட அவர் துணிந்தால், சில நாட்களுக்கு முன்பு ஐ.நாவில் கண்டது போல பாலஸ்தீனர் மட்டில் வேறுபட்டதொரு அணுகுமுறையைக் கையாண்டால்,  இன்னொரு இயல்பு நிலைக்கு வாய்ப்பு உண்டாகக் கூடும். முகம்மது அப்பாஸின் செயல்பாடுகள் உற்சாகம் தருவனவாக இல்லையென்பதையும் இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும். பதற்றத்தையும் பகையுணர்வையும் ஆதரிக்கும் இரண்டு தலைவர்களை இங்கு காண்கிறோம். ஒரு புதிய பாதைக்கு, ஒரு புதிய எதிர்காலத்துக்குத் தங்களது மக்களை திரும்பச் செய்யும் தொலைநோக்கு இந்த இருவருக்குமே இல்லை.

குவெர்னிகா: இவையனைத்தையும் வைத்துப் பார்க்க, புனைவின் பணி, இன்னும் பொதுவாகச் சொன்னால் கலையின் பணி, இங்கு என்னவாக இருக்கிறது?  உங்களது எழுத்தும் இன்னும் பல இஸ்ரேலியப் படைப்பாளிகளது எழுத்தும் சுய ஆய்வின்பாற்பட்டவையாகவும் கதைமாந்தரது அக ஆழத்துள் பயணிப்பனவாகவும் உள்ளன, எனவே எதிர்ப்புப் போராட்டங்கள், பாலஸ்தீன நாட்டுக்கான கோரிக்கை, அரபு வசந்தம் போன்ற பல நிகழ்வுகள் தமது உச்சத்தைத் தொட்டிருக்கும் காலத்தில் புனைவு மிகவும் முக்கியமானதொரு பங்காற்ற முடியும் எனத் தோன்றுகிறது.

டேவிட் கிராஸ்மன்:  இஸ்ரேலில் கலை செழித்துக் கொண்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். சினிமா தொடங்கி நாடகம், இசை, இலக்கியம் என அது அற்புதமாக செழித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பட்டப் புலன் குறைபாடுடைய ஒருவர் தனது இன்னொரு புலனைக் கூர்தீட்டிக்கொள்வார், பார்வையற்ற ஒருவர்  சூழலுடன் இன்னுமதிகத் தொடர்பை உண்டாக்கிக் கொள்ள தனது செவித்திறனை மேம்படுத்திக் கொள்வது போல. இஸ்ரேலும் அப்படித்தான். சில வருடங்களாக முடங்கிப் போய் பல வகையிலும் தனது இருப்பின் பரிமாணங்களைக் குறுக்கிக் கொண்டுள்ளது. இந்நிலையில் அது யதார்த்தத்தை இன்னுமதிகம் ஸ்பரிசிக்கவும், யதார்த்தத்துள் இன்னுமதிகம் தன்னை நிறுத்திக் கொள்ளவும் தனது கலைப் புலனை நன்கு வளர்த்துக்கொண்டு அந்த முடக்கத்துக்கு ஈடு செய்கிறது எனச் சில நேரம் நான் நினைப்பதுண்டு. கதைகள் யாதர்த்தத்தை மாற்றியமைக்காது; துரதிருஷ்டவசமாக அவைகள் உலகையும் மாற்றியமைக்கப் போவதில்லை. அதிகார மையங்களில் இலக்கியத்துக்குப் பிரதிநிதிகள் கிடையாது. நிதிச் சந்தைகளிலும், பாராளுமன்றத்திலும், ராணுவத் தலைமையகத்திலும்கூட. ஆனால் இந்த உலகம் நம்மை மாற்றியமைத்துவிடாதிருக்க அவை உதவக்கூடும். போரின் பொதுப் பரிமாணத்துக்கு எதிரான ஏதோவொன்று இலக்கியத்தில் இருக்கிறது. போர் என்பது அடுத்தவரை அழிப்பது, அதோடு நம்மையும் அழித்துக்கொள்வது; பொதுமைப்படுத்தல்களும் தடாலடி வரையறைகளும் அடுத்தவரை தீவினையின் உருவமாகச் சித்தரித்தலுமே போர். எழுத்து தனிநபர்களை இனங்குறிப்பது, அவர்களை நுணுகிக் கவனிப்பது, அவர்கள் மட்டில் மிகவும் கரிசனத்துடனிருப்பது. எழுத்து நுட்பங்களை வலியுறுத்துவது. இஸ்ரேலிலும் பாலஸ்தீனத்திலும் மட்டுமன்று, தொழில் மயமான நமது சமூகத்தில் எங்கெல்லாம்-பெரு நிறுவனங்கள், பெரு நகரங்கள்-மக்கள் நூல்களை வாசிக்கிறார்களோ அங்கெல்லாம் நமது நம்பிக்கையை, மானுட நம்பிக்கையை திரும்ப அளிக்கும் வல்லமை பெற்றதாக எழுத்து இருக்கிறது. இது சாதாரண விஷயமில்லை.

நவம்பர் 15, 2011.

(டேவிட் கிராஸ்மனின் To the End of the Land நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு காலச்சுவடு பதிப்பகத்தால் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது)