நுண்கதைகள் – இளங்கோ கிருஷ்ணன்


இருபத்தைந்தாயிரம் நிலவுகள்

நான் பிணம். இப்போது அதுதான் என் பெயர். நான் மட்டும் அல்ல என் கனவுகள், ஆசைகள் எல்லாமும் வெறும் பிணம்தான். இதோ என் தலைக்கு மேல் கொற்றவையின் நெற்றிப் பொட்டாய் ஒளிரும் இப்பெண்ணம் பெரிய நிலவுக்குத் தெரியும். நான் யாரென. இல்லை இதற்குத் தெரியாது. இதுவும் என்னைப் போல் உயிரற்ற ஒரு ஜடம். தாளாத பித்தாய் பிரவகிக்கும் இதன் தந்த வண்ண ஒளி மட்டும் என்னைப் படுத்தவில்லை என்றால் நான் கறாராய் சொல்லிவிடுவேன். இதுவும் ஜடம்தான். என்னைப் போல் பிணம்தான். இந்த நிலவுக்கு என்னைத் தெரிந்திருக்க நியாயமில்லை. இது என் நிலவில்லை. எங்கள் நிலவில்லை. எங்களுக்கும் இப்படி ஒரு நிலவிருந்தது. இந்த நிலவுக்கு இருபத்தைந்தாயிரம் நிலவுகளுக்கு முன் எங்கள் பறம்பின் மீது வெள்ளிப் துகில் பராகித்த வெள் உவா அது. அப்போது என் பெயர் பாரி. வேல் பாரி என்மனர் புலவர். பறம்பு மலையின் மடியில் ஒரு குழந்தை போல் நிலவு வளர்ந்த நாட்கள் அவை.

நிலவோடு என் வாழ்வு பிணைந்தது. பனங்கள்ளைப் போல் நிலா பொங்கிக் கொண்டிருந்த நாள் ஒன்றில்தான் நான் பிறந்தேனாம். அம்மை சொல்வாள். கருங்காட் குறிஞ்சிகள் வாயவிழும் பின்னிரவில், யானைகள் காதடிப்பதைப் போன்று ஓசையிட்டு அசையும் மருதக் கிளைகளின் இடையே ஒரு அழகிய வெள் உவா சிரித்திருக்க என் மழலைச் செல்வங்கள் பிறந்தனர். அங்கவை, சங்கவை. முல்லைக்கொடியின் உறுதியும் லாவகமும் உடலிலும் மனதிலும் வாய்த்த பசுந்தளிர்கள்.

ஒவ்வோர் வெள்உவாவையும் கள்ளுடனும் கூத்துடனும் களியுடனும் வரவேற்போம். மகரயாழுக்கும் மொந்தைக்கள்ளுக்கும் மயங்கி நிலவிறங்கி தரை நெருங்கும் பின்னிரவு வரை ஆட்டமும் பாட்டமும் தொடரும்.

பின்பு வந்தன கார் உவா காலங்கள். வென்றெரி முரசின் வேந்தர்கள் வந்தனர். கார்உவா போல் கறுத்த சின்னஞ்சிறு மிளகுக் கொடிகள் பரம்பு மலையில் படரத்தொடங்கிய போது, முல்லைக்கொடிகள் கொப்பிழந்து தடுமாறி, காயம்பட்ட நாகம் போல் நிலத்தில் துவண்டன. கருமிளகே நிலவாய், கதிராய் வானில் உருண்டுகொண்டிருந்த போதாத காலங்களில் சூழாப் பகை சூழ்ந்தது. நாங்கள் நாடிழந்தோம். நிலவிழந்தோம். கூத்திழந்தோம். குடியிழந்தோம். யானையின் பெருமூச்சுப் போல சூறைக்காற்று வீசிக்கொண்டிருந்த ஒரு வெள்உவாவில் மூன்று வாட்கள் சேர்ந்து என்னைக் கிழித்துப் போட்டன. முல்லைக்கொடிகள் தவழ்ந்துவந்து என்னைச் சுருடிக்கொண்டன. இருபத்தைந்தாயிரம் நிலவுகள் போயின. இருபத்தைந்தாயிரம் நிலவுகள் வந்தன. வேந்தர் போயினர். வேழமும் போயின. மிளகுதான் இன்னமும் நிலவாய் கதிராய் உருண்டுகொண்டிருக்கிறது. நானோ பிணம். நிலவைப் போல், கல்லைப் போல் மண்ணைப் போல் வெறும் பிணம்.


பூனை

அவளுக்கு சிறுவயதில் இருந்தே கெளதம் என்ற பெயரை ஏனோ பிடித்திருந்தது. இத்தனைக்கும் அந்த பெயரில் அவளுக்கு யாரையுமே தெரிந்திருக்கவில்லை. அவளின் பத்தாவது வயதில் தான் ஆசையாய் வளர்த்த ஒரு பூனைக்கு கெளதம் எனப் பெயரிட்டாள். பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பியதும் அதனை மடியில் தூக்கி வைத்துக்கொள்வாள். அதுவும் அவள் அரவம் கேட்டதுமே ‘மியாவ் மியாவ்’ என உடல் விரைக்க ஓடி வரும். அவள் எங்கு சென்றாலும் கால்களுக்குள்ளேயே நடக்கும். அவளருகிலேயே படுத்து உறங்கும். ஒரு நாள் தண்ணீர் லாரியில் அடிபட்டு அது செத்துப்போன தினத்தில் அவள் அழுது அழுதே மூர்ச்சையானாள். அடுத்த இரு நாட்கள் எதையும் உண்ணாமல் படுக்கையிலேயே சுருண்டு கிடந்தாள். இரவெல்லாம் தேம்பினாள். விட்டத்தையே வெறித்திருந்தாள். ஏதோ முடிவெடுத்தவள் போல் மறுநாள் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றாள்.எல்லோரும் ஆச்சர்யப்படும்படி விரைவில் இயல்பானாள்.
அவன் தன்னை கெளதம் என்று அறிமுகப்படுத்தியபோது வியப்பு தாங்காமல் அவனையே பார்த்தாள். பழுப்பு நிறக் கண்கள். பூனைக்கு மனித சாயல் கொடுத்தது போன்ற முகம். செம்பட்டையும் கறுப்பும் கலந்த தாடி, மீசை… அவளுக்கு குறுகுறுவென இருந்தது. திருமணமான புதிதில் அவளுக்குப் பூனை பிடிக்குமென அவள் கணவன் எங்கிருந்தோ ஒரு செம்பட்டை வண்ண பூனையைக் கொண்டு வந்தான். ஆளை விழுங்குவது போன்ற அதன் பார்வை அவளைத் துளைத்தது. ‘இதைக் கொண்டுபோய் விட்டுட்டு வாங்க‘ என்று தீர்மானமாகக் கூறினாள். அவள் கணவன் சமாதானப்படுத்த முயன்றான். அவள் கத்தி கூப்பாடிட்டாள். இப்போது கத்த முடியாது. இது அலுவலகம். அவள் அமைதியாய் இருந்தாள். மதிய உணவு வேளையில் கெளதம் வந்தான். ‘நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களாமே‘ என்றான். அவள் ஏதோ பதிலிருத்தாள். அவளின் தடுமாற்றம் அவனுக்குப் பிடித்திருக்க வேண்டும். அடிக்கடி அவளிடம் காரணமின்றி வந்து நின்றான். அவள் தடுமாறிக்கொண்டே இருந்தாள்.

ஒரு மழைநாளில் வீட்டில் யாருமில்லாத போது கெளதம் அழைத்தான். சாதாரணமாய் பேச்சு தொடங்கியது. மழை தூறிக்கொண்டே இருந்தது. தெருவெங்கும் வெள்ளம். நிலம் பூத்துக் குலுங்கியது. மழைக் காலம் முடிவற்று நீண்டது. மழையில் செங்கொன்றை இலைகள் வீழ்ந்துகிடக்கும் முற்றத்தை அவள் பெருக்கிக்கொண்டிருந்தபோது பூனைகள் இரண்டு விளையாடுவதைக் கண்டாள். முறுவலித்தபடி அவற்றின் விளையாட்டை ரசித்துக்கொண்டிருந்தாள். வாசலில் நிழலாடியது. அவன் வந்து நின்றான். பூனைகள் எங்கோ ஒதுங்கின.

‘மியாவ்‘ என்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். என்னாச்சு என்றான் அவள் கணவன். ‘ஒண்ணுமில்லை ஏதோ கனவு‘ என்றாள். இன்னொரு மழைநாளில் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதே பூனையின் கண்கள். குழந்தையைப் பார்த்துவிட்டு அவள் வெளியேறினான். பிறகு, எப்போதும் அவன் வரவேயில்லை. இவளும் தடுக்கவில்லை. கொஞ்ச நாட்கள் கெளதம் வந்துகொண்டிருந்தான். பிறகு அவனையும் காணவில்லை. அவள் இதை எதிர்பார்த்தவள் போல நடந்துகொண்டாள்.

மழைக் காலமும் கோடை காலமும் மாறி மாறி வந்தன.

மகனைப் பார்க்க அமெரிக்காவுக்குச் சென்றாள். மகன் அங்கு ஒரு டாக்டர். சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது அவனைப் பார்த்தாள். பழுப்பு விழிகள் பூனை முகம். இளைஞன். ‘நீங்கள் இந்தியனா… என் முன்னாள் கேர்ள் பிரெண்ட் இந்தியன்தான். இது கேழ்வரகா..இதை எப்படி உண்ண வேண்டும். சம்பிரதாயமான பேச்சுக்கள். கிளம்பும்போது ‘யூ லுக் கிரேட்‘ என்று கிசுகிசுத்தான்.
மறுநாள் வீட்டின் நிலைக் கண்ணாடி முன் நின்று திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள். அழைப்பு மணி ஒலித்தது. டெலிவரிபாய் பார்சல் ஒன்றைத் திணித்துப் போனான். அவனிடம் இருந்துதான். பரபரப்பாய் பிரித்தாள். ‘மியாவ்‘ என்று சத்தமிட்டு பெட்டிக்குள் இருந்து தலை நீட்டியது, வெள்ளை நிறத்தொரு பூனை.


வனம்

அவன் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தான். மழை கொஞ்சம் தணிந்து சூரியன் தயக்கமாய் எட்டிப்பார்த்தது. வனமெங்கும் பறவைகள் விடியலின் குதூகலத்தில் இரைந்துகொண்டிருந்தன. அவன் அந்த சால மரத்தடியே வந்து நின்றான். மேலே ஒரு பரத்வாஜம் கூவிக்கொண்டிருந்து. அவன் ‘கூ..கூ‘ என்று கூவ அவைகளும் திருப்பிக் கூவின. அவன் புன்னகைத்து மறுபடியும் உற்சாகமாய்க் கூவினான். அதுவும் கூவியது. மீண்டும் ஒரு முறை இவன் கூவும் முன் எதிர் திசையிலிருந்து ஒரு கூவல். இவன் மீண்டும் கூவினான். சில கணங்கள் பதில் இல்லை. இப்போது மீண்டும் கூவினான். பதிலுக்கு அதுவும் கூவியது. இவன் மனம் மெல்லிய பரபரப்படைந்தது. கூவல் வந்த திசை நோக்கி ஓடினான். அங்கே தாரு மரத்தடியே ஒரு மான் நின்றிருந்தது. அதன் கொம்பில் ஒரு விநோத மலர் ஹாரமாக சுற்றப்பட்டிருந்தது. பளிரென கண்பரிக்கும் நீலத்தில் வானம் ஒரு துண்டாய் விழுந்தது போல் என்ன மலர் இது நீலோத்பவமா? நிஷாகாந்தமா? தர்பைகள் அடந்த நிலத்தில் அந்த மானின் கொம்பு மட்டுமே இப்போது தெரிந்தது. அந்த கூவல் சத்தத்தைக் கேட்டான். மான் அந்த திசை நோக்கி ஓடியது. இவனும் ஓடினான். புல் அடர்ந்த ஒற்றையடிப்பாதை மரங்களுக்கு இடையே மேல் நோக்கிச் சென்று கொண்டேஇருந்தது. மான் தாவி தாவி அதில் ஓட இவனும் ஓடினான். திடீரென அந்த மான் காணாமல் போனது. அதைத் தேடிக்கொண்டே மலை உச்சிக்கு சென்றான். மலையின் உச்சியின் ஒரு செடியில் அந்தப் பூ இருப்பதைக் கண்டான். பரபரபாய் அதன் அருகே ஓடிச்சென்று அந்தப் பூவையே பார்த்துக்கொண்டிருந்தான். மெல்ல அதைப் பறித்து, முகர்ந்தவாறே, நிமிர்ந்து எதிரே இருந்த பள்ளத்தாக்கைப் பார்த்தவன் அதிர்ந்தான். அந்த பள்ளத்தாக்கெங்கும் கண்ணுக்கு எட்டிய வரை அந்த பூக்கூட்டம். வானம் சரிந்து பூமி எங்கும் மூடிக்கிடப்பதை போன்ற ஒரு மாயம். மனம் கசிய மண்டியிட்டு அமர்ந்து அழுதான். அவனுக்குப் பின்னால் ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். கையில் ஒரு மலர் மாலையுடன் அவள் நின்றிருந்தாள். ‘இதைத் தேடித்தானே வந்தீர்கள்‘ என்றாள். அவன் தோற்றம் அவளுக்கு விநோதமாக இருந்தது; அவள் தோற்றம் அவனுக்கு அதைவிட விநோதமாக இருந்தது. அவள், அவனை அருகே அழைத்தாள். அவன் ஒரு கணம் மெல்ல பயந்து, காலை பின் வைத்து செல்லப் பார்த்தான். அவள் சட்டென ஓடி வந்து அவன் கைகளை பிடித்துக்கொண்டாள். ’ஏன் இப்படி பயப்படுகிறீர்கள் நான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன்‘ என்று புன்னகைத்தபடியே அவனைக் குறுகுறுப்பாய் பார்த்தாள். அவள் பார்வை அவனை என்னவோ செய்தது. கையிலிருந்த மாலையை அவன் தலையிலிருந்த கொம்புகளில் சுற்றினாள். அவன் மந்திரத்தில் கட்டுண்டவன் போல மனம் மயங்கி நின்றிருந்தான். அவள் குரல் அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. சற்று முன் கேட்ட கரிச்சானின் அதே குரல். ‘உங்கள் குரல் ஏன் பரத்வாஜத்தின் குரல் போல் உள்ளது ரிஷியே‘ என்றான். ‘ஏனெனில் நான் பெண்‘ என்றாள். ‘ஓ பெண் என்றால் என்ன ரிஷியே?‘ என்றான். நான் ‘ரிஷியல்ல பெண். அதிலும் தாசி‘ என்றாள். அவனுக்குப் புரியவில்லை. இந்த ஹேமகூடத்தைத் தாண்டி விநோதமான பழக்கங்கள் கொண்ட ரிஷிகளும் உள்ளார்கள் என்று அவன் தந்தை சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. அவள் உடலையே வெறித்துப் பார்த்தான். அவள் குரல் குயில் போல இருந்தது. உடலோ மான் போல இருந்தது. ‘நீங்கள் ஏன் இப்படி இருக்கறீர்கள் ரிஷியே..உங்கள் மரவுரி விநோதமாக உள்ளது‘ என்றான். அவள் ஒன்றும் சொல்லாமல் அவனையே ஆசையாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கண்கள் இன்னமும் மருட்சியாக இருந்தன. அவள் ‘மான்குட்டி… மான்குட்டி‘ என அவனைக் கொஞ்சினாள். அவன் ஏதோ கேட்க முற்பட, அவள் தன் விரல்களால் அவன் உதடுகளை மூடி, மெல்ல அவன் தலையிலிருந்த மான் கொம்புகளை வருடியபடியே வந்து உச்சியில் கைவைத்து வருடினாள். அவன் கண் செருகி வசமிழந்தான். ‘உங்கள் பெயர் என்ன ரிஷியே‘ என்று குழறினான். ‘என் பெயர் விசாலி‘ என்றாள். ‘என் பெயர்…‘ என்று அவன் பேசப் பேச ‘தெரியும்… ரிஷ்யசிருங்க மகரிஷி‘ என்றபடி அவனை இறுக்கி அணைத்தாள். இருவரும் கால்களை நிலத்தில் ஊன்றி நிற்க முடியாமல், தடுமாறிச் சரிந்தனர். மேகங்கள் மெல்ல முழங்கிப் பொழியத் தயாராகின.

Leave a Comment