கடித இலக்கியம்-கலாப்ரியா


ரவி

27.12.85

அன்புள்ள கலாப்ரியாவுக்கு,

உங்கள் கடிதம் கிடைத்தது. என் குறுநாவல் நன்றாக வந்திருப்பதாக நீங்கள் எழுதியிருந்தது மிகவும்  சந்தோக்ஷமாக இருந்தது.

பிரஸ் கிடைப்பது சிரமமாக இருப்பதாக எழுதியிருந்தீர்கள். இங்கு பாண்டியில் ஒரு நல்ல பிரஸ் உள்ளது. அதில்தான் ‘லத்தீன் அமெரிக்க சினிமா – ஓர் அறிமுகம்’ என்ற என் புத்தகத்தை அச்சடித்தேன். ஒரு மாதத்தில் முடித்துக் கொடுத்துவிட்டார்கள். உங்களுக்கு அந்நூலின் ஒரு பிரதியை Bank of TamilNadu, Kadayanallur என்ற முகவரிக்கு அனுப்பிவைத்து விட்டேன். பிறகுதான் நீங்கள் இடைகல் வந்துவிட்டது தெரிந்தது. கடையநல்லூரிலிருந்து அந்த நூலை உங்களுக்கு அனுப்பிவிடுவார்களா? – விபரம் எழுதுங்கள். புத்தகம் எப்படி இருந்ததென்றும் எழுதுங்கள்.

எல்லா நண்பர்களையும் விசாரிக்கிறேன். பிற உங்கள் கடிதம் கண்டு.

அன்புடன்

ரவி.


26-10-93

அன்புள்ள கலாப்ரியா அவர்களுக்கு,

உங்கள் கடிதம் பார்த்து மிகவும் சந்தோஷமாக இருந்தது. என் கவிதையைப் பற்றிய உங்கள் எதிர்விளைவு எனக்கு மிகவும் முக்கியமானது. உங்களுடைய கவிதைகளை திரும்பத் திரும்ப படித்து கவிதையினை சுழலவைக்கும் இழைகளை கண்டு பிடிக்க முயன்றிருக்கிறேன். “எட்டையபுரம்”, “மற்றாங்கே” போன்ற தொகுப்புகளில் இடம் பெற்றிருப்பது போன்ற இறுக்கமான நுட்பமான படிமங்களுக்காக மிகவும் ஏங்கியிருக்கிறேன். அலுப்பூட்டும் கருத்துப் படிமங்களிலிருந்து காட்சி படிமங்களை நோக்கிப் போக உங்களுடைய கவிதைகளே எனக்கு உத்வேகமளித்து வந்திருக்கின்றன. எனக்கு ஆதர்சமான ஒரு கவியிடம் என் கவிதைகள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது நான் விரும்பிய பாதையில்தான் பயணம் செய்கிறேன் என்பதை உறுதிபடுத்துகிறது. இது எனக்கு சந்தோஷம் கொடுக்கிறது.

என்னை நினைத்துக்கொண்டு துவரங்குறிச்சியை கடந்து போனதைப் பற்றி எழுதியிருந்தீர்கள். உங்கள் நினைப்பு நிஜமாகி உண்மையாகவே நீங்கள் வந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

என்னைப் பற்றி கேட்டிருந்தீர்கள். சொல்லிக்கொள்ள எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. இருப்பதும் என்னைப் பற்றி சொல்லுமா என்று தெரியவில்லை. 26 வயசாகிறது. பத்து வருடங்களுக்கு முன்பு எனது ஆரம்ப கட்ட கவிதைகள் மணிமேகலை பிரசுரத்திலிருந்து ஒரு தொகுப்பாக வெளிவந்தது. அது கொடுத்த நண்பர்கள் தொடர்புகள் நான் பல்வேறு விதமான கவிதைகளை எழுதிப்பார்த்து கடைசியில் எனக்குரிய ஒரு பிரத்யேக வெளிப்பாட்டு முறையை எட்டிப்பிடிக்க உதவிற்று. இப்பொழுது இந்தத் தொகுப்பு வந்திருக்கிறது.

ஐந்தாம் வகுப்பு வரை முறையான பள்ளிப் படிப்பு பிறகு சுய கல்வியில் B.A வரை வந்தேன். அதை பாதியில் விட்டுவிட்டு வேறு புத்தகங்களில் மூழ்கிப் போனேன். சமீபத்தில் நண்பர்களின் தொந்தரவினால் M.A சேர்ந்திருக்கிறேன். நிறைய்ய கவலைகள். துக்கங்கள். கடந்த இரண்டு வருடமாக வாழ்க்கை அமைதியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. குறிப்பாக திருநெல்வேலியில் கிடைத்த சில நண்பர்களால். முக்கியமாக ச.தமிழ்ச்செல்வனும் அன்று என்னோடு குற்றாலம் வந்திருந்த லல்லியும், சமீப காலமாக நிறைய்ய இடங்கள் சுற்றிப் பார்க்கிறேன், பிரயாணம் சந்தோஷமாக இருக்கிறது. முகங்களின் மனசுகளின் வேடிக்கைகள் வாழ்க்கைக்கு சுவாரசியமூட்டுகின்றன. எழுத்து ஆனந்தம் தருகிறது. படைப்புச் செயலின் எதிர்பாராமல் திறக்கும் குகை வாசல்களின் பரபரத்து நிற்கிறேன். வீட்டிலும் நண்பர்கள் மூலமாகவும் என் எளிய தேவைகள் நிறைவேறுகின்றன. வேறொன்றும் அதிகமாக எனக்கு வேண்டியிருக்கவில்லை. சரி போதும்.

“உலகெலாம் சூரியன்” படித்தேன். கலப்ரியாவின் கவிதைகள் கலாப்ரியா கவிதைகளாக இருக்கின்றன. நிறைய்ய கவிதைகளோடு இதயபூர்வமான தொடர்பு சாத்தியாமாகிறது. அனுபவங்களின் பல்வேறு கீற்றுகள் ஒரு படைப்பு ஆளுமையால் மைய்யம் கொண்டிருக்கின்றன.

ஆனால் உங்கள் பழைய கவிதைகளில் இருக்கும் தீவிரம் இதில் சற்று குறைந்திருப்பது போல தோன்றுகிறது. பல கவிதைகள் பற்றி நிறைய்ய பேச முடியும் பிறிதொரு சந்தர்ப்பத்தில். எழுத்திலோ நேரிலோ.

குற்றாலம் கருத்தரங்கு எனக்கு ஈடுபாடோ, உற்சாகமோ தரவில்லை, அந்தச் சூழலில் ஒரு அபத்தம் இருந்தது. இதற்காக நெடுந்தூரம் பயணம் செய்து வந்திருந்த பலர் சொல்லிய ஏமாற்றமான வார்த்தைகளை நிறைய்ய கேட்டேன். வெளிப்பாட்டிற்கான ஆரோக்கியமான இதயபூர்வ சூழல் தடுக்கப்பட்டிருந்ததுதான் காரணம். நீங்கள் இவ்வளவு பிரயாசை எடுத்துச் செய்கிற இம்முயற்சி இப்படி ஆகக்கூடாது. நான் அடுத்த வருக்ஷமும் குற்றாலம் வருவேன். அப்பொழுது வேறுமாதிரியான, பங்கேற்பாளர்களுக்கு “அச்சம்” ஏற்படுத்தாத ஒரு சூழல் அமைய வேண்டும். களைப்பு ஏற்படுத்தாத விவாதங்கள் சாத்தியப்படுத்த வேண்டும்.

டிசம்பர் அல்லது ஜனவரியில் மீண்டும் திருநெல்வேலி வருவேன். அப்பொழுது தகவல் தெரிவிக்கிறேன். முடிந்தால் ஒருநாள் அங்கு என் இருப்பிடம் வந்து நீங்கள் இளைப்பாறலாம். நேரம் கிடைக்கும்போது ஏதாவது எழுதுங்கள். சந்திப்போம்.

என்றும் உங்கள்

ஹமீது

(மனுஷ்யபுத்திரன்)


மதுரை.

22.10.94

அன்புள்ள கலாப்ரியா,

’சுபமங்களா’வில் உங்களது நேர்காணலைப் படித்த நிமிஷம் முதற்கொண்டு எழுத நினைத்துக் கொண்டிருந்த கடிதத்தை, இப்பொழுதுதான் எழுத முடிந்திருக்கிறது. எவ்வளவு தூரம் எழுத முடியும் என்று தோன்றவில்லை – என்னுடைய தயங்கிய மொழியை மீறி.

உங்கள் கவிதையைப் போலவே உங்கள் பேட்டியும் பாசாங்கின்றி இருக்கிறது. உங்கள் கவிதையின் ஆதாரப் பண்புகளில் ஒன்றான அலைக்கழிவின் ஊற்றுக்கண்ணை ஸ்பரிசிக்க முடிகிறது. உங்களாது கவிதை மொழியின் உருவாக்கத்தைப் படிப்படியே தொடர்ந்து வர முடிகிறது. உங்கள் கவிதையின் இயல்பான கூச்சமின்மையும், நேர்மையும், தெறிப்பும் தமிழைச் சில புதிய தடங்களில் செலுத்தியிருப்பதை உணர முடிகிறது. இவ்வளவு விரிவான தளத்தில் இப்பொழுது தான் உங்களை மற்றவர்கள் பார்வைக்குக் கிடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கல்யாணியின் கவிதைக்கு அப்புறம்தான் உங்கள் கவிதை என்ற கூற்று மட்டும் தேவையற்றதாய்ப் படுகிறது.

அன்புடன்

ந. ஜயபாஸ்கரன்.


பங்களூர்

28.2.81

அன்புள்ள கலாப்ரியாவுக்கு,

உங்கள் கடிதம். புதுக்கவிதை பற்றி நீங்கள் குறிப்பிடுவது போல் விஸ்தாரமாகச் சொல்ல ஆசைதான்.

அதற்கான பக்கங்களும் ஒதுக்கத்தான் நினைத்திருந்தேன். கவிதை ஒரு அனுபவம். எனவே புதுக்கவிதை பற்றி வியாசம் எழுதுவதற்குப் பதில் சமீபத்திய கணையாழி, வானம்பாடி,ழ போன்ற பத்திரிகைகளிலிருந்து என்னை பாதித்த கவிதைகள் சிலவற்றை ஒரு மிகச் சிறிய அறிமுகத்துடன் வெளியிட்டு நதியில் அனுப்பும் விளக்குகளாக அவைகளை அனுப்பி விடலாம் எனத் தீர்மானித்திருக்கிறேன். கணையாழியில் சமீபத்தில் வந்த ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்’, ‘ழ’ வில் வந்த வெயில், இவையிரண்டும் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன். உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு dedication போல தொனிக்கிறது. Send me another poem of your own selection.

அன்புடன்

சுஜாதா


 

பிரியமுள்ள மருமகப்பிள்ளைக்கு மாமாவின் ஆசிகள். நான் கேட்டுக்கொண்டபடிக்கும் நீ ஒப்புக்கொண்டபடிக்கும் கேள்விகள் வருகிறது. கேள்விகளும் பதில்களும் நமக்குத் தெரிந்தவையே. என்றாலும் ரசனை கருதி இப்படிச் செய்யவேண்டியதிருக்கிறது. “கதைசொல்லி” சென்னை முகவரிக்கு எழுதி அனுப்பிவிட்டு அதன் நகல் ஒன்றை எனக்கும் அனுப்பு.

நீ உரைநடையிலும் கால்பதிப்பது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. சுவாரஸ்யமாக உனக்குக் கட்டுரைகள் எழுதவரும். நெல்லை மண் வாகு அப்படி.

அடிக்கடி பார்க்கமுடியாமல் காலம் நம்மை தூரத்தில் தூரத்தில் விசிறிப் போட்டுவிட்டது. பழைய துருப்பிடித்த சைக்கிள் போல ஆகிவிட்டது உடம்பு. பேரீச்சம் பழத்துக்குக்கூட ஒப்பேறாது!

புதுவை இளவேனில் “இடைசெவல்” என்ற பெயரில் ஒரு குறும்படம் எடுத்துக்கொண்டிருக்கிறான். அதுக்காக நாங்கள் ஊர் பக்கம் போக நேர்ந்தது. மூன்று நாளில் ஒரு நாளை நண்பர்கள் சந்திப்பு என்று வைத்துக்கொண்டோம். பூமணி, சோ.தர்மன் இப்படி வந்தார்கள். தீப.நடராஜன்கூட எதிர்பாராமல் வந்திருந்தார். நல்ல அக்னி நட்சத்திரம்! சிரமப்பட்டுப்போனோம். கரும்பைப் பிழியாமல் சாறுகுடிப்பது எப்படி! பயணங்கள் ஒருகாலம் ஆனந்தம் தந்ததுதான். அவலை நினைத்து இப்போ உரலை இடிக்கலாமா. எதோ தப்பித்து வந்தோம்.

நாட்கள் கழிந்து கொண்டிருக்கின்றன.


கி. ரா

6-6-2007

புதுவை – 8

பிரியம் நிறைந்த மருமகப்பிள்ளைக்கு,

மாமாவின் ஆசிகள்.

உன் காயிதம் கிடைத்தது. சந்தோஷம்.

இந்தத்தபா குற்றாலம் வருகிறது உறுதிதான். நான், அத்தை மட்டுமில்லை திவாகர் குடும்பமும்.

மூச்சுக்காட்டாமல் 28ம் தேதி லீவைப்போட்டுவிட்டு தெங்காசிக்கோ குற்றாலத்துக்கோ வந்துவிடு.

குளூரப் பேசித் தீர்க்கலாம்.

இடைகாலுக்கு நான் வரமுடியுமென்று தோன்றவில்லை. முந்தியைபோல உடம்பு பிரயாணங்கள் ஏத்துக்கொள்ள மாட்டெங்கு.

கலியாணி அம்பாசமுத்திரத்துக்குக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தான்; போக முடியலை. எப்படியாவது ஒரு விசெ போகணும்.

நீ இப்போ என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்? பாரதி, தாகூர் போல வசனமும் எழுது. ஜிலேபியாகவே எவ்வளவு நேரம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இலைபோட்டு பல வர்க்கங்கள் கறிவகைகளோடு சாப்பிட வேண்டாமா?

நா இப்போதுக்கொள்ளெ ஒண்ணும் எழுதலை. இந்த மாசம் பூரா லெட்டர் எழுதுறதிலேயே பொழுது கழிஞ்சது.

கொஞ்சம் டால்ஸ்டாயைப் படிக்க முடிஞ்சது. அது ஒரு பெரிய்ய மலை. பிரம்மாண்டமான விருட்சங்கள், மலர்க்கொடிகள், அட்டைக்கடிகள், அருவிகள், சிற்றோடை சலசலப்புகள் யானை பிளிறல் புலி உருமல், தலைச்சாய்த்துப் படுத்துக்கிடக்கும் மேகங்கள், சீள் வண்டுகளின் இரைச்சல், விதமான பறவைக் கத்தல்கள் இப்படி ஒரு பேருலகமே அடங்கிக்கிடக்கு அதில்.

பாங்கில் நீ நோட்டுகளை எண்ணி எண்ணி கொடுக்கிறதும் வாங்கி வாங்கிப் போடுகிறதும் சமுத்திர அலைபோல் மாறிமாறி அதை பேக் செய்து கொண்டிருப்பாய். சலிப்பில்லை. வீட்டில் யாவரும் நலம்தானே? சந்திப்போம்.

கி. ரா.

14-8-1984


3-10-82

இடைசெவல்

ப்ரியமுள்ள கோபாலுக்கு மாமாவின் ஆசிகள்.

உன் காயிதம் கிடைத்தது. மீராவின் வரத்து பற்றித்தெரிந்து எழுதுவோமே உனக்கு என்று நினைத்ததினால் தாமதமாகிவிட்டது. வாரம் வாரமாக ஒத்திப்போட்டுக்கொண்டே தொடர்கதைபோல ஆயிக்கொண்டிருக்கிறது மீராவும் அகராதியும். வர்றப்ப வரட்டுமே.

உனது வீட்டில் எங்களுக்கு அமர்க்களமாய் சாப்பாடு போட்டாய். இங்கே வந்ததும் உன் அத்தையிடம் சொன்னேன். சொதி எப்படி வைக்கிறது என்று இவளுக்குத் தெரியவில்லை. அதுக்காகவாவது இவளை ஒருக்க இடைகாலுக்குக் கூட்டிக் கொண்டு வரவேணும்.

உனக்குத் தங்கமான இல்லாள் வாய்த்திருக்கிறாள். ஒரு குறைவும் இல்லை. குடும்பத்தின் பொறுப்பையெல்லாம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என்னைப் போலவே நீயும்.

உன்

கி. ராஜநாராயணன்.


9-9-86                                                                                                                                                                      இடைசெவல்

பிரியமுள்ள கோபாலுக்கு

மாமாவின் ஆசிகள்; பாரதிக்கும் சேர்த்து. பாரதியோடு பேசிப்பழக சந்தர்ப்பமே ஏற்படவில்லை எனக்கு. அத்தைக்குத்தான் அந்த யோகம் கிடைத்தது. அம்பாசமுத்திரத்திலும் அத்தை பாரதியின் புகழ் பரப்பிக்கொண்டே இருந்தாள். அங்கே அனைவரும் சுகம். நிற்க.

ஒரு முக்கிய விஷயமாய் இக்கடிதம் எழுதுகிறேன். உனக்கும் கல்யாணிக்கும் போட்டியாக இப்போது எங்களுக்கு ஒரு மருமகப்பிள்ளை வந்திருக்கிறார். பெயர் பால்ராஜ்கென்னடி. அவருக்கு இந்த 22ம் தேதி கல்யாணம். கல்யாணத்தை ஒட்டி அவர் ஒரு புஸ்தகம் போடுகிறார். சுந்தர ராமசாமி, நான், வண்ணதாசன், அசோகமித்ரன், அபி, அப்துல் ரகுமான், மீரா முதலியவர்கள் அந்தப் புத்தகத்துக்கு எழுத்து தானம் கொடுக்கிறோம். நீயும் ஒரு ஒரு எழுத்து – கவிதை – தானமாகக் கொடுக்கவேண்டும். உடனே அனுப்ப வேண்டிய முகவரி. திரு. பால்ராஜ் கென்னடி, மதுரை.

இந்த தடவை தென்காசி, அம்பாசமுத்திரமெல்லாம் போய் எனக்கும் அத்தைக்கும் வயிறு ரிப்பேராகப் போய்விட்டது.

நாங்கள் இடைகால் வரமுடியாவிட்டாலும் நீ பாரதியையும் சரஸ்வதியையும் தென்காசிக்கே அழைத்துக் கொண்டுவந்தது நல்ல விஷயம். அடுத்தமுறை நாங்கள் பாரதியைப் பார்க்கும்போது பெரிய பெண்ணாக வளர்ந்திருப்பாள். அழிப்பாங்கதை போய் சிறுகதை வந்துவிடும்.

கி. ரா.


சி. மணி

16-12-82

சேலம் 3

அன்புடையீர்,

 

தங்கள் கடிதம் கிடைத்தது. புதிய தொகுப்பு வெளியிட இருப்பது மகிழ்ச்சி தருகிறது.

நான் எழுதுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகின்றன. எனவே என்னிடமிருந்து கவிதைகளை எதிர்பார்க்கவேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

 

அன்புடன்

சி. மணி

23 Damodara Reddy st

Madras 600017, Feb 25, 1980

அன்புள்ள கலாப்ரியா அவர்களுக்கு,

நேற்று பார்த்து இன்று படித்து முடித்தேன் ‘மற்றாங்கே’யை. அநேகமாக எல்லாமே முன்பே படித்த கவிதைகள். ஆனால் இன்னொருமுறை படித்தது வீணான செயலாகத் தோன்றவில்லை. நீடூழி இருந்தும் நித்தியப் புதுமையாக இருப்பதே கவிதையல்லவா?

முடிந்தால் இவ்விரு முகவரிக்கும் பிரதிகள் அனுப்புங்கள். (துணைக் கடிதத்தில் நான் கூறினேன் என்று சொல்லி)

  1. Ka. Naa Subramanian, New Delhi
  2. Shri S. Krishnan, Madras

அன்புடன்

அசோகமித்ரன்.


எம். எ. நுஃமான்

அண்ணாமலை நகர்

16-9-87

அன்புள்ள நண்பர்

கலாப்ரியா அவர்களுக்கு,

குற்றாலம் வந்திருந்தபோது நீங்கள் காட்டிய ஆதரவுக்கும் உபசரிப்புக்கும் நன்றி.

இரண்டு நாட்களே கலந்து கொண்டாலும் பட்டறை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பலரைச் சந்தித்து அறிமுகம் செய்துகொள்ளவும் கருத்துகளை கேட்கவும் அது வாய்ப்பளித்தது. இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

 

பட்டறை பற்றிய எனது கருத்துகளை, இரண்டுநாள் நிகழ்ச்சிகள் பற்றிய தொகுப்பாகவும், எனது கருத்துக்குறிப்பாகவும் சற்று விரிவாகவெ எழுதி(9 பக்கங்கள்) அசோகமித்திரனுக்கு அனுப்பியிருந்தேன். அதை முழுமையாகப் பிரசுரிப்பதற்கு கணையாழியின் பக்க வரையறை இடம் கொடுக்காது எனவும் அதைச் சுருக்கி இரண்டு பக்கத்தில் வெளியிடுவதாகவும் அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன். கட்டுரையின் சுருக்கம் கணையாழி அக்டோபர் இதழில் வரக்கூடும். முழுக்கட்டுரையையும் வேறு ஏதாவது ஒரு சிறு சஞ்சிகைக்கு கொடுக்கிறேன்.

உங்கள் வசம் ‘மாற்றாங்கே’ தொகுப்பு இருந்தால் எனக்கு ஒரு பிரதி அனுப்ப முயலுங்கள்.

நன்றியுடன்

எம். எ. நுஃமான்


திருவனந்தபுரம்

3-8-87

நண்பருக்கு,

உங்கள் கடிதம். ஏற்கனவெ திரு.பிரம்மராஜனுக்கும் எழுதியிருந்தேன். நான் வருவேன் என்று. திரு. காசியபன், அவர் மனைவி, நான் – ஆக மூவரும் வருவதாகத் திட்டம். இதைப் பற்றி காசியபன் விரிவாக எழுதுவார். ட்யூட்டோரியல் காலேஜில் நான் 8-9-87 இல் இருக்கவேண்டும்.

இத்துடன் MO வில் ரிஜிஸ்ட்ரேஷன் பணத்தை அனுப்புகிறேன். இப்பொழுது இருக்கும் நிலையில் இது எனக்கு பெரிய செலவில்லை. வித்யாசமாக நினைக்காதீர்கள். ஒரு நிபந்தனை என்றால் அது எல்லோருக்கும் பொருந்தும்!

இத்துடன் நான் படிக்க இருக்கும் 5 கவிதைகளையும் இணைத்திருக்கிறேன். உங்கள் எல்லோரையும் பார்த்துப் பேசிப் பழகுவது எனக்கும் ஒரு அனுபவமாக இருக்கும். திரு. விக்கிரமாதித்தியனை சந்தித்தால் நான் அங்கு வருவேன் என்று தெரிவியுங்கள். அவருக்குத் தனியாக எழுதுகிறேன்.

அன்புடன்,

”நகுலன்”


மதுரை

6.12.94.

அன்பிற்கினிய கலாப்ரியாவுக்கு,

வணக்கம். உங்கள் கடிதம் கிடைத்தது. சந்தோஷமும் நன்றிகளும். சாவகாசமாக எழுத நினைத்து, நகர்ந்துவிட்டன நாட்கள். மன்னிக்கவும்.

நான் என்றுமே கலாப்ரியா ரசிகன் தான். முதன் முதலாக கனமான தெறிகள் இதழில் ‘சுயம்வரம்’ படித்த நாளிலிருந்து இன்று வரையும். உங்கள் பேட்டியை ரொம்ப ரசித்துப் படித்தேன். பேட்டி கண்டவரின் இயலாமை, தட்டைத்தனம், மோசமான புகைப்படங்கள் எல்லாவற்றையும் மீறி உங்களை வெளிபடுத்தியிருக்கும் விதம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.

சுபமங்களாவுக்கு ஒரு நல்ல பேட்டிக்காரரை கடவுள் வழங்கட்டும்.

——————-

உங்கள் ‘சூரியன்’ தொகுப்பைப் படித்துவிட்டு ஒரு நீண்ட கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு நீங்கள் பதிலேதும் எழுதாது குறித்து ரொம்ப நாட்களாக கோபமாக இருந்தேன். சரி இந்த வருஷ பட்டறையில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். ‘வன்முறை அரங்குகள்’ தொடர்ந்து நடத்துவதில் என்ன பிரயோஜனம் என்று செப்டம்பரையும் நவம்பரையும் கடத்திவிட்டு டிசம்பரில் நிற்கிறீர்களா, அல்லது வேறு ஏதேனும் காரணமா, தெரிவில்லை.

——————-

முந்தாநாள் ஞாயிற்றுக்கிழமை கல்யாண்ஜி வீட்டுக்கு சென்றிருந்தேன். கல்யாண்ஜி இந்த வாரம் முழுதும் திருநெல்வேலியில் இருப்பார். திரும்பவும் நிறைய எழுதுகிற மனநிலையை அடைய பிரயத்தனப்பட்டிருக்கிறோம். இந்தச் சமயத்தில் முக்கியமாக தேவை நண்பர்கள் தான். நண்பர்களின் வெகு சாதாரணமான சந்திப்புகள் கூட நமக்குள் நிறைய பாதிப்புகளை, தூண்டல்களை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் கல்யாணியை சந்தித்தால் என்ன? மதுரைக்கு வந்து ஒரு அரை நாளை எங்களோடு செலவழித்தால் எங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். மறுநாள் காலை நீங்கள் இடைகாலில், பஸ்ஸில் லீவு லெட்டரைக் கொடுத்து அனுப்பிவிட்டு, எட்டயபுரம் போன்று ஒரு நீண்ட கவிதையை எழுத ஆரம்பிக்க முடியாதா என்ன?

உங்களால் எழுத முடியும் சுவாமி. நீங்களும் கல்யாணியும் ‘எங்கள் உலகம் ரொம்ப சிறியது இதில் என்ன சொல்ல இருக்கிறது?’ என்ற மனநிலையை அளவுக்கதிகமாக சுமந்து கொண்டிருக்கிறீர்கள். உலகம் சிறியதோ பெரியதோ என்பதில்லை விஷயம். உங்கள் பிரத்யேகமான மனசு, பார்வை, மொழி இவைகளுக்காகத் தானே நாங்கள் மயங்குகிறோம். தொடர்ந்து தொடரத் தொடரும் படைப்பின் ரகசியம் நீங்கள் அறியாததா? படிமங்களின் ராஜா நீர் தானையா. கிருஷ்ணாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், தாடிக்கொம்பு கலா மண்டபங்களுக்கு இணையான ஒரு பெரும் படிம மண்டபத்தை நீங்கள் கட்ட முடியாதா? முடியும் முடியும் முடியும் முடியும்.

——————–

அக்காவுக்கும் குழந்தைகளுக்கும் எங்கள் அன்பு.

அன்புடன்.

க. சமயவேல்.


சுந்தர ராமசாமி                                                       நாகர்கோவில்

6.4.89

அன்புள்ள கலாப்ரியா,

உங்கள் 3.4.89 கடிதம். டிராஃப்ட் கிடைத்தது.

சிங்கப்பூர் போகும் முன் நீங்கள் எனக்கு எழுதியிருக்கலாம். மேலும் சில விலாசங்கள் தந்திருப்பேன். சிங்கப்பூரில் கோவிந்தசாமி என்ற நண்பர். நீங்கள் அவசியம் சந்தித்திருக்க வேண்டிய ஒருவர். அத்துடன் சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூருக்கு நீங்கள் ரயிலில் போய்விட்டு வந்திருக்கலாம். கோலாலம்பூரில் நாலைந்து நெருக்கமான நண்பர்கள் இருக்கிறார்கள். பொதுவாக இந்த இரண்டு இடங்களிலும் இலக்கியப் பிரக்ஞை என்பது பூஜ்ஜியம். பாண்டியனும், கோவிந்தசாமியும் விதிவிலக்கு. பாண்டியனை நேரில் சந்தித்திருக்கிறேன்.

பாண்டியன் சந்தாதாரர்தான். ரூ. 75 தந்திருந்தார். சிங்கப்பூருக்கு ஒரு இதழ் அனுப்ப – இதழ் விலை சேர்த்து – ரூ. 22 ஆகும். அவருக்கு 3,4,5 இதழ்கள் போயிருக்கின்றன. இப்போது அவர் கணக்கில் ரூ. 9 வரவாக இருக்கிறது. நீங்கள் அவரது சந்தா தொகையை அனுப்பிவையுங்கள். ரூ. 100 அனுப்பிவைத்தீர்கள் என்றால் இன்னும் 5 இதழ்கள் அனுப்பி வைக்க முடியும்.

இந்த வருடம் கவிதைப் பட்டறையை இன்னும் முறையாக, திட்டமிட்டு நடத்த வேண்டும். கவிதை பற்றிய சர்ச்சையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இறுதி முடிவுகள் எடுப்பதற்கு முன்னர் நானும் நீங்களும் சந்தித்துக்கொள்வது உபயோகமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

திருமதி. கலாப்ரியாவுக்கும் குழந்தைகளுக்கும் எங்கள் அன்பு.

அன்புடன்,

சு.ரா


ராமசந்திரன்.                                     சென்னை. 33

23.8.01

பிரியமுள்ள கோபால்,

வணக்கம். எல்லோரும் நல்ல சுகம்.

நீங்களும், சரஸ்வதி, பாரதி, தரணி எல்லோரும் சௌக்யமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

 

அத்தையுடைய விசேஷத்துக்கு வந்துவிட்டு வந்தபிறகு உங்களுக்கு லெட்டர் எழுதவேண்டும் என்று நினைத்தேன். 94-ல் உங்களுடைய பேட்டிக்காக இடைகாலுக்கு வந்தது. அதன்பிறகு ஏழுவருடம் கழித்து அன்றுதான் ராமகிருஷ்ணனுடன் வரமுடிந்தது.

நாற்பத்து இரண்டு வருடங்களுக்கு முந்தி தாழையூத்து பெரியப்பா தாழையூத்தில் இந்தியா சிமிண்ட்ஸ் குவாட்டர்ஸில் இருந்தார்கள். ருக்கு அக்காவுடைய சடங்குக்குப்போன போதுதான் அவர்கள் குவாட்டர்ஸ் வீட்டை முதன்முதலாகப் பார்த்தேன். உங்களுடைய வீட்டுக்கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்ததுமே தாழையூத்துப் பெரியப்பா வீடு ஞாபகம்தான் வந்தது. இப்போது பெரியப்பாவும் இல்லை, ருக்கு அக்காவும் இல்லை, ருக்கு அக்கா கன்னியாகவே அகால மரணமடைந்து விட்டாள்.

’நேட்டிவிட்டி’ என்ற ஆங்கிலச் சொல்லால் குறிப்பிடுவது அதைக் கொச்சைப்படுத்தி விடுமோ என்று பயப்படுகிறேன். ஹெப்ஸிபா ஜேசுதாஸின் ‘புத்தம் வீடு’ம், நீல. பத்மநாபனின் ‘தலைமுறைகள்’, டி. செல்வராஜின் ‘மலரும் சருகும்’, லா.சா.ராவின் ‘அபிதா’ இதெல்லாம் படிக்கிறபோது லகரியூட்டும் ஒரு காவிய சோகம் மனதில் கவியும். தாகூர், சரத்சந்தர், ரேயின் படங்களிலும் காலையிருள் போன்ற அந்த ஆத்ம சோகம் நெஞ்சைத் தொடும். சமீபத்திய விகடன் கவிதை உள்பட.

’சீறும் புயலும் மழையும் சேர்ந்தால் சின்னக்குடை தாங்காது’ என்கிற தேவதாஸ் படப் பாடல் வரிகள் தருகிற அமரவேதனையை உங்களுடைய விகடன் கவிதை தந்தது. உங்களுடைய வீட்டுக்கு எதிரே இருக்கிற நெல் சேரின் காய்ந்து கருத்துப்போன பாசியை இலக்கியத்தில் கொண்டுவர முடிந்தால் எவ்வளவு உன்னதமாயிருக்கும்? அந்த உன்னதத்தை நீங்கள் கவிதைகளில் விதைக்கிறீர்கள். சேவற்கொடியோன் ஞாபகம்தான் வருகிறது.

உங்களுடைய


37.S

பெரியார் காலனி

நிலக்கோட்டை 624208

22.9.84

அன்புமிக்க கோபால்,

வணக்கம்.

ஒரு மாசத்துக்குக் கொஞ்சம் கூட ஆச்சு, நாம் பார்த்து. சமீபத்தில் பிரம்மராஜன் இங்கு வந்திருந்தார்.

ஆத்மாநாமும் இவரும் நல்ல சிநேகிதர்கள் என்பதால் அவருடைய மறைவு இவரை நிரம்பப் பாதித்திருக்கிறது. நிறையப் படித்த, பேசுகிற இந்த நல்ல மனிதர் உன்னுடைய கவிதையின் மேல் உயர்ந்த அபிப்பிராயம் வைத்திருக்கிறார். மற்றாங்கே, எட்டயபுரம், தெறிகள் & கொல்லிப்பாலை குறுங்காவியங்கள் பற்றி மொத்தமாக ஒரு கட்டுரைக்கு எல்லாக் குறிப்பையும் தயார் செய்து வைத்திருக்கிறதாகச் சொன்னார்.

அக்டோபர் 3 முதல் 7 வரை (மதுரை K.புதூர், 127 கற்பகம் நகரில் உள்ள மாமனார் வீட்டிற்கு மறுபடியும் வருவார்). முடியுமானால் அவரைச் சந்திக்க ஒருநாளை ஒதுக்க முயன்றுபார். நான் முதலில் நினைத்ததுகூட உன்னை அவரை எல்லோரையும் நிலக்கோட்டைக்கு வரவழைத்துவிட்டால் நானும் உங்கள் பேச்சைக் கேட்டுக் கொள்ளலாமே என்று. இப்போதும் அந்த அழைப்பு இருக்கிறதெனினும், நீங்களும் பிரம்மராஜனுமாகக் கவிதைபற்றிப் பேசிக் கொள்கிறபோது என்னால் எதையும் உதவிகரமாக supplement செய்ய முடியாதோ என்று படுகிறது. திருப்பித் திருப்பித் தோன்றுவதெல்லாம் பிரம்மராஜனும் நீயும் ஒருமுறை சந்திக்கலாம் என்பதே.

எனக்கு OCT 7ம் தேதி முழுநாளும் வேறுவேலை இருக்கிறது, Associationனில் ஒரு seminar என்று. மற்ற எந்த நாளிலும் அந்த மாநோன்பு நாட்களில் ஓய்வுதான்.

அன்னம் விடு தூதுவுக்குத் தொடர்ந்து எழுதவில்லையா? ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ பகுதியின் மூலமாக உனக்கு ஏதாவது சொல்ல இருப்பின் சொல்லலாமே.

என்ன ஆயிற்று Mysore Project? அநேகமாக அதுவும் இந்த மாதமோ அடுத்த மாதமோ இருக்கும் என்று நினைக்கிறேன். வெற்றிக்கரமாக அதை முடித்துத் திரும்புவதற்கு வாழ்த்துகள்.

வெளியூரில் இருந்துவிட்டுத் திரும்பின சமயம் மனம் கச்சிதமாக இருந்தது. June Julyல் சில கதைகள் எழுதினேன். மறுபடி ரோட் என்ஜின் மாதிரி முன்னும் பின்னும் மாறிமாறி அலுவலக ரோதைகள் உருண்டு, எல்லாம் சப்பித் தகடாகக் கிடக்கிறது.

அலுவலகத்தில் கீழ் – சக – மேல்மட்ட உறவுகளில் எந்த Strainம் இல்லாமல் வைத்துக்கொள். மற்றப்படி வாழ்க்கை தன்னைப்போலப் போய்க்கொண்டிருக்கும்.

வள்ளி, சங்கரி, நடராஜ் எல்லோரும் நிலக்கோட்டையில் பிரிவுபசார மாதங்களில் இருந்து கொண்டிருக்கிறார்கள். April Mayல் எந்த ஊர் காத்திருக்கிறதோ.

பாரதிக்கும், ‘லெச்சுமி அம்மாளுக்கும்’ மற்றும் நண்பர்களுக்கும்,

அன்புடன்

கல்யாணி. சி.7-9-94

625016

அன்புமிக்க கோபால்,

வணக்கம்.

மூன்றாம்தேதியில் இருந்து கடைகடையாக அலைந்தேன். கடைசியில் நேற்றுத்தான் மதுரையில் சுபமங்களா கிடைத்தது. விளக்குத்தூண் முக்குத் திரும்புகிற இடத்தில் நானும் சொக்கனும் டீ சாப்பிடுவோம். அதுக்குப் பக்கத்துக்கடையில் வாங்கி அங்கேயே நின்று வாசித்தேன்.

பெரிய தங்கச்சி ஜெயா பெரிய மனுக்ஷி ஆகிவிட்டாள் என்று தெரிந்ததும், நான் மச்சில் உட்கார்ந்து அப்பாவின் ஈஸி சேரில் எழுதவோ படிக்கவோ செய்து கொண்டிருந்தேன்,(மணி வீட்டுச் சத்தம்-அவங்க அம்மா சத்தம்-இப்போது ஞாபகம் வருகிறது. அதோடு தோட்டத்துப் பக்க ஜன்னலின் வெளிச்சமும்) – விக்கி விக்கி நான் அழுதேன். அதேபோல, உன்னுடைய பேட்டி படிக்கையிலும் அழுதேன்.

அழக்கூடியவனாக நானும், அழவைக்கும்படி வாழ்வும் இன்னும் இருப்பது ஆறுதலாக இருக்கிறது.

 

மனப்பூர்வமான வாழ்த்துகள்

கல்யாணி அண்ணன்.