ட்ராட்ஸ்கி மருது பக்கம்

 

பள்ளிநாட்களில் எனது தந்தையார் பரிசளித்த புலியூர்கேசிகன் தயாரிப்பில் வந்த ‘மாவீரன் திப்புசுல்தான்’ பற்றிய புத்தகத்தைக் கடந்த பிறகு அவரே எனது கதாநாயகனார். அதைத் தொடர்ந்து அவரை, அவர் காலத்தைப் படிப்பதும் சேகரிப்பதும் என் வேலை. 60களின் கடைசியில் எங்கள் குடும்பத்தாருடன் முதலில் ஸ்ரீரங்கப்பட்டணம் பார்க்கக் கிடைத்தது. தொடர்ந்து ஓவியக்கல்லூரி மாணவனாக இருந்ததிலிருந்து இன்றுவரை அவரின் நினைவிடம் செல்வது எனக்கு நிறைவை அளிக்கிறது. நாற்பத்தி ஐந்து வருடங்களாக கதைகளாகவும் சித்திரங்களாகவும் புகைப்படமாகவும் என் மனதில் குடிகொண்டிருந்த ‘திப்புவின் புலி’ மரப்பொம்மையை (கர்ஜிக்கும் ஆர்கன் உடம்பிற்குள் வைக்கப்பட்ட) நேரில் கண்ட போதான நிறைவைச் சொல்ல வார்த்தைகளால் முடியாது தான். லண்டன் நண்பர் நித்தியும் சில நண்பர்களாலும் கூடிய வாய்ப்பு. விக்டோரியா ஆல்பர்ட் ம்யூசியத்தில் ஆசியப்பகுதி பூட்டப்பட்டிருந்தும் என்னை மதித்து ம்யூசியத்தின் பெருந்திரள் கூட்டத்திற்குள் எங்களைத் தனியாக ஒருவருக்கும் தெரியாமல் ம்யூசியத்தின் ஊழியர் உள்ளே அனுப்பினார். நான் திரும்பி “எனக்காக உங்களைத் திப்பு தான் அனுப்பியிருக்கிறார்” என்று சொன்ன போது என்னைக் கட்டி அணைத்தார் அவர்.

கீழே உள்ள இரு சிற்பப் பிரதிகள் எத்தனையோ படைப்புகள் உள்ள அந்த ம்யூசியத்தில் என்னைத் தனியாகக் கவர்ந்தது. சிற்பி ஆல்பர்ட் ஸ்டீவன்ஸ் செய்தது(1817-75) இது. இடது சிற்பம்- உண்மையும் பொய்யும். வலது- வீரமும் கோழைத்தனமும்.

உண்மை பொய்மையின் இரட்டைநாக்கைப் பிடித்து இழுப்பதுவும் பொய்மைக்கு பாம்பின் வால் போன்ற பகுதி துணியின் சுருக்கத்திற்கு அடியில் புரல்வது போலவும் இருக்கிறது.

இரண்டாவது சிற்பத்தில் வீரம் கோழைத்தனத்தை தன் காலடியில் போட்டு மிதிப்பு போலவும் இருக்கிறது.