நொய்யல்

 

(பகுதி 2, அத்தியாயம் 9)

-தேவிபாரதி


ஓவியம்  : அனந்த பத்மநாபன்

 அத்தியாயம் – 9


‘ஏ அருக்கு, உனக்கிந்தக் கதயெல்லா ஆரு சொன்னாங்கொ?’

‘வேற ஆரு, எங்கம்மாயிதே, எங்கம்மா செத்துப்போனப்ப எனக்கு மூணு வயுசுகோட இல்லியா, உருக்கா பச்சக் கொளந்தையா, பால்குடிகோட மறக்குலியா. எங்களப் பாத்துக்கறதுக்கு ஆளு வேணும்னு சொல்லித்தே எங்கப்பெ ரண்டாந்தாரங் கட்டிக்கிச்சா, ஆனா தாலிக்கட்டிக்கிட்டு வந்த பதனஞ்சா நாளே பொட்டிச் சாவிய வாங்கி இடுப்புல சொருவிக்கிட்டு எங்கப்பனப் படாதபாடு படுத்துச்சா எங்கு சின்னாயா. ஊட்டுல அத்தன மாடிருந்துமு எங்கு ரண்டு பேருத்துக்குமு ஒரு சொட்டுத் தராதா, வெறும் பழைய சோத்தக் கறச்சூத்திக் குடிக்கச் சொல்லி அடிக்குமா, நாங்கோட வெங்காயத்தக் கடிச்சுக்குட்டுக் குடிச்சுக்குவனா, உருக்காதே பரிதவிச்சுப் போவாளா’

‘பாவத்தெ, பாவத்தெ…ஏ’ல்லே நம்பு நாச்சக்காளா அப்பிடியெல்லாம் பண்ணுனவ?’

‘அவதே அவதே, பின்ன அவதான இவியப்பனுக்கு ரண்டாந்தாரமா வந்தவ? வேற ஆரு?’

‘தெனமு இருட்டிருக்கறவே என்னைய எழுப்பியுட்டுருமா, வாசக்கூட்டச் சொல்லி அடிக்குமா, காலங்காத்தால ஒருவா கருப்பிட்டித் தண்ணிகோடக் குடுக்காம காட்டுக்குக் குப்பெ கொண்டுபோவச் சொல்லி அடிக்குமா, ஒரு கொரக்கூட நம்பக் குப்பய அள்ளி, சும்மாடுகோடக் கூட்டாமத் தலைலெ வெச்சுக் கொண்டுக்கிட்டுப் போன்னு சொல்லி அடிக்குமா எங்கு சின்னாயா’

‘அதெல்லா உனக்கு ஞாபகமில்லையா அருக்கு?’

‘அதெப்பிடி ஞாபகமிருக்கு? மூணு வயசுனா செரியா நடக்கக்கோடத் தெரியாது. தத்தக்காப் பித்தக்கான்னு செவத்தக் கிவத்தப் புடுச்சுக்கிட்டுத்தே எட்டு வெக்கோணு. ஏ பேச்சுக்கோடச் செரியா வந்துருக்காது, அப்பறொ இதெல்லா எங்கத்த போயி ஞாபகமிருக்குஞ் சொல்லு?’

‘அப்பறொ ஆரு இதெல்லாஞ் சொன்னா?’

‘எங்கு மாமெந்தே இதெல்லா எங்குளுக்குச் சொல்லுச்சு. ஒரு நா வெள்ளீம்பளத்துக்கு ஆரயோ பாக்கோணும்னு வந்தவியொ திடுதிப்புன்னு ஊட்டுக்கு வந்துருக்கறாங்கொ, அப்பத்தே நா சாணிக்கூடயத் தலைலெ வெச்சு நடக்கமாண்டாம நடந்து போயிக்கிட்டிருந்தனா, எதுத்தாப்பல நடந்து வந்துக்கிட்டிருந்தவீளுக்கு மொதல்ல என்னய அடையாளந் தெரீலியா, தாரு கொளந்தையோ காணா இப்பிடி வாங்கொடும பண்றாங்களேன்னு ரோசண பண்ணிக்கிட்டுத் தாண்டி ரண்டெட்டுப் போனதுக்கப்பறந்தே தாரு நம்பு அருக்காக்குட்டியாட்ட இருக்குதேன்னு அவீளுக்குப் பட்டுச்சா, அப்பறந் திரும்பி வந்து எடுத்து மாருல சாத்திக்கிட்டு இப்படியாப்பட்ட நெலமைல உங்கொளந்தையப் பாத்துப்புட்டு இன்னொ நாஞ் சாகாம இருக்கறனே சாமீன்னு எங்கம்மாள நெனச்சுக்குட்டு அப்பிடித் தேம்பித் தேம்பி அழுதாங்களா, சாணிக்கூடயத் து£க்கிக் குப்பைல போட்டுட்டு அவ்வளவு ஆங்காரமா ஊட்டுக்கு வந்தவியொ எங்கப்பனப் பாத்துப் பெத்த புள்ளையச் சாணி சொமக்கப் போட்டுப்புட்டு அப்பிடியென்னடா உனக்குக் கூதி கேக்குதுன்னு எக்காளமாக் கேட்டுப்புட்டு கீழ தள்ளி ஒதையொதைன்னு ஒதச்சுப் புட்டாங்களா, சனமே கூடீருச்சா. எங்கு ரண்டு பேருத்து நெலமையையும் பாத்துப்புட்டு அப்பிடி நெஞ்சு நெஞ்சா அடிச்சுக்குட்டு அழுதாங்களா. அப்பறொ வந்த வேலயக்கோடப் பாக்காம எங்கு ரண்டு பேருத்தையுங்கூட்டிக்கிட்டு நேராச் சிலுவம்பளத்துக்கு வந்து எங்கம்மாயிகிட்ட வெவரத்தச் சொன்னாங்களா’

‘ஏ’ல்லே அருக்கு இதெல்லா கதயோ, நெசமோ? மத்ததாட்ட இதயு உப்பந்தி பண்ணிச் சொல்றயோ என்னமோ’

‘உப்பந்தி பண்ணி நா எதுக்குச் சொல்லோணு? இதெல்லா நாம்பட்ட கதெ. உங்குளுக்குச் சொல்றதெல்லா படாத கதெ’

‘கதைல கோடப் பட்ட கதெ, படாத கதென்னு உண்டுமா அருக்கு?’

‘ஆமா எங்கம்மாயிகிட்டக் கத சொல்லச் சொல்லிக் கேட்டா அது மொதல்ல கேக்கற கேள்வியே அதுதே, பட்ட கத சொல்லுட்டா, படாத கதெ சொல்லுட்டான்னு கேக்கு. பட்ட கத சொல்லுன்னு கேட்டா ஒரு மூச்சழுதுபுடு. அதெதுக்காயா உங்குளுக்கு பொறந்த நாக் கண்டுப் படாத கஷடமில்லெ, வராத துக்கமில்லெ, பொறந்துங் கஷ்டொ, இருந்துங் கஷ்டொ, வாழ்ந்துங் கஷ்டொ, கெட்டுங் கஷ்டொ அப்பிடீங்கு. இப்ப என்னம்மாயி உனக்குக் கஷ்டொ? அப்பிச்சி நல்லாத்தான வெச்சுருக்குதுன்னு கேட்டா அதுக்குமு மூக்கச் சிந்து. அப்பிச்சி நல்லாத்தே வெச்சுருக்கறாங்கொ, எனக்கென்ன சோத்துக்குக் கஷ்டமா? சாத்துக்குக் கஷ்டமா? இப்பிடி ரண்டு எளங்குருத்தக் கொண்டாந்து புடுச்சு வளறதுக்கு மண்ணில்லாத இந்த மொட்டப்பாறைம் பேருல உட்டுப்புட்டு வேடிக்க பாக்குதே அந்த ஆண்டவெ, அதுதே எனக்குக் கொறெ அப்பிடீன்னு எங்கு ரண்டு பேருத்தயு மாரும்பேருல போட்டுக்கிட்டுத் தேம்பித் தேம்பியழுவு. அப்பவெல்லா அது என்ன சொல்லுது, எதுக்கப்பிடி அழுவுதுன்னு எனக்குத் தெரியாது.  எங்கம்மா இல்லாத கொறெகோட எனக்குத் தெரீல, அப்பிடி வளத்துச்சு. எங்கம்மாயி அப்பிடி அழுவறதப் பாத்துப்புட்டு நாங்க படாத கத சொல்லச் சொல்லிக் கேப்பொ. அதச் சொல்றதுனா அதுக்கு அத்தன பிரியொ, சிட்டுக்குருவிக் கதெ, அட மூக்கங் கதெ, மாலக் கண்ணங் கதெ, நரியண்ணம் பொண்டாட்டி கொசுவாயி ஆவி புடுச்சுச் செத்துப்போன கதெ, அது தெரியுமல்லொ? நல்லாருக்குமாக்கு, ஒரு ஊருல ஒரு நரியா, நம்பத் துண்டிருக்கம் புடுச்சதா, அதுக்கு ஆருமே பொண்ணுக் குடுக்க மாண்டீன்னுட்டாங்களா, அதுனால அந்த நரிக்கு ஒரு கொசுவெ ஏமாத்தி அதுக்குச் சீல துணிமணியெல்லாங் கட்டியுட்டுக் கண்ணாலம் பண்ணி வெச்சுப்புடுவாங்கொ, ஒரு நா அந்த நரி பக்கத்தூருப் பட்டீலருந்து ஒரு செம்பிலிக் கெடாயப் புடுச்சாந்து ஆக்கித் தரச்சொல்லு. கறிய அறிஞ்சு அடுப்புல வெச்சு மூடிவெச்சுப்புட்டு நா வரவரைக்குந் தொறக்கப்புடாதுன்னு கொசுவாயிகிட்டச் சொல்லீட்டு வேட்டைக்குப் போயிரு, கொசுவாயி புருஷம் பேச்சக் கேக்காம மூடியத் தெறந்து பாக்கு, அப்பத்தே ஆவி புடுச்சுச் செத்துப்போயிரு, கேட்டுருக்கறீங்கள்ளொ? நானே எத்தன மட்டஞ் சொல்லீருக்கறானப்பறொ, அப்பறொ அதும்பட அங்கத்தக் கொண்டுக்கிட்டுப் போயி ஒரு மொட்டப்பாறைம்பேருல ஊத்துவாங்க, அப்பவே அந்தப்பாற குழியாப் போயுறு, அப்ப அந்தப் பாறைக்கு ஒரு பொறா வரு, தெனமும் பாக்கற பாறெ இப்பிடிக் குழியாக் கெடக்கறதப் பாத்துப்புட்டு, பாறெ பாறெ நீயேங் குழியாப்போனேன்னு கேக்கு, சொல்லீருக்கறனல்லொ? அதுக்கந்தப் பாறெ சொல்லுமா, அதேங்கேக்கற பெறாவே, நரியண்ணம் பொண்டாட்டி கொசுவாயி ஆவி புடுச்சுச் செத்துப் போயி அதக்கொண்டாந்து இங்க ஊத்தி பாறெ நாங்குழியாப் போனெ, பெறா நீ  பொங்குதித்துக்கொங்கு, அதக்கேட்டு அந்தப் பெறாப் பொங்குதித்துக்கு, அப்பறொ அந்தப் பெறா ஒரு ஆலமரத்துல போயி உக்காரு, பெறாவே பெறாவே நீயேம் பொங்குதுத்திக்கிட்டேன்னு ஆலமரங் கேக்கு, பெறா தாம் பொங்குதுத்துன கதயச் சொல்லி, ஆலமரமே நீ தலையுதித்கன்னு சொல்லு, அதக்கேட்டு ஆலமரந் தலையுதித்திக்கு, அப்பறொ அந்த ஆலமரத்துக்கு நெழலுக்கொதுங்க ஒரு ஆனெ வரு, ஆனெ கேட்டதுக்கு ஆலமர தாந்தலையுதுத்துன கதயச் சொல்லி தும்பச்சாங்கையெ ஒடுச்சுக்கச் சொல்லி அந்த ஆனைக்குச் சொல்லு, கேட்டுருப்பீங்கள்ளொ? அப்பறொ அந்த ஆனெ தண்ணி குடிக்க ஆத்துக்குப் போகு, ஆறு கேக்கு ஆனெ ஆனெ நீயே தும்பச்சாங்கையெ ஒடுச்சுக்கிட்டீன்னு, ஆனெ அதுகிட்டத் தாந் தும்பச்சாங்கையெ ஒடுச்சுக்கிட்ட கதயச் சொல்லிப்புட்டு இப்பிடி ஆனெ நாந் தும்பச்சாங்கையெ ஒடுச்சுக்கிட்டெ, நீ தண்ணிவத்திக்கொங்கு, அதக்கேட்டு ஆறு தண்ணி வத்திப் போயிரு, அப்பொ அந்த ஆத்துக்குத் தண்ணியெடுக்க ஒரு மொட்டப் பாப்பா வருவா, அவ கேட்டதுக்கு ஆறு தாந்தண்ணி வத்திப்போன கதயச் சொல்லி அவ கொண்டாந்த கொடத்த ஒடைக்கச் சொல்லீரு, இவ கொடத்த ஒடச்சுப்புடுவா, கொடத்த ஏம்புள்ளெ ஒடச்சீன்னு அவியாயா கேப்பா, மவ கொடத்த ஒடச்ச கதயச் சொல்லி அம்மாகிட்ட அடுக்குப்பானைய ஒடைக்கச் சொல்லுவா, அப்பறொ அவளாலெ காட்டுலருக்கற அப்பனுக்கு சோறாக்க முடியாமப் போயிரு, வெறுங்கையோட காட்டுக்குப் போவா, புருஷ சோறென்னாச்சுன்னு கேட்டதுக்குத் தா அடுக்குப்பானைய ஒடச்ச கதயச் சொல்லிப் புருஷங்கிட்ட கலப்பைய முறிச்சுப் போடச் சொல்லீருவா, அப்பறொ மகெ வருவே, அப்பெ அவங்கிட்ட தாங் கலப்பய ஒடச்ச கதயச் சொல்லுவே, அதேங் கேக்கறீப்பா, நரியண்ணம் பொண்டாட்டி கொசுவாயி ஆவி புடுச்சுச் செத்துப் போயி, அதக்கொண்டாந்து மொட்டப்பாறைல ஊத்த, பாறெ குழியாப்போச்சு, அப்பறொப் பெறாப் பொங்குதுத்தி, ஆலமரந்தலையுதுத்தி, ஆனெ தும்பச்சாங்கையெ ஒடுச்சு, ஆறு தண்ணி வத்தி, மொட்ட¢¢ப் பாப்பா செப்புக்கொடத்த ஒடச்சு, அம்மா அடுக்குப்பானையக் கீழ தள்ளியுட அப்பெ நா கலப்பய ஒடச்சுப்புட்டெ, மவனே நீ நம்பு போருக்குத் தீ வெச்சுருன்னானா, மகம்போயி தொண்டுப்பட்டீலருந்த வைக்கப் போருக்குத் தீ வெச்சுப்புட்டானா, அந்தத் தீ மத்த போருலயெல்லாம் புடுச்சு, போருத் தீ ஒரு கூரைல பத்திக் கூரத் தீயி ஒரு ஊட்டுல புடுச்சு, ஊட்டுத் தீயி ஊரையே புடுச்சு ஊரே வெந்து போச்சா, இப்பிடி ஒரு கொசுவுனால ஒரு ஊரே எருஞ்சு போச்சா, நாங்கோட எழவுக்குப் போயிட்டு வந்தன்னு கதய முடிக்கு எங்காத்தா, கேக்கக் கேக்கச் சிரிப்பா வரு,  அப்பறொ இந்தக் கத தெரியுமல்லொ? எட்டாளும் பாட்டுக்காரெ, ஒராளுஞ் சோத்துக்காரெ போறனே போறனே ஆத்தோட போறனேன்னு வருமே? அது, அதச் சொன்னா சிரி சிரீன்னு சிரிப்பா எங்கு உருக்காயா. இப்பிடி எங்கம்மாயி சொன்ன கத ஒரு நு£று இருக்குமாக்கு. நெறையா உப்பந்தி பண்ணிச் சொல்லு. அதுக்குத் தெரிஞ்சதென்னமோ பத்துப் பதனஞ்சு கததே, ஆனா அதுகளையே பலவெதமாத் திருச்சுத் திருச்சு வெவ்வேற கதயாச் சொல்லு. அது எங்களோட இருந்தது ஒரு பத்து வருத்திக்குத்தே, பத்து வருத்துல எங்குளுக்குக் கத சொல்லாமத் தூங்குன நா ஒண்ணுமில்லெ. வாம் பாட்டாளி. அப்பிச்சியூட்டுக் காடு வரக்காடு. ராயி, கம்பு, சோளம்னு மழ கண்டா எதாச்சுமு வௌயு. ஒரு முக்காப்படி நரிப்பயித்தச் சோளத்துல கலந்து எறச்சுட்டுப்புடுவாங்கொ, கருது முத்தி மேல வாரதுக்குள்ள நரிப்பயிறு முத்திக்கு. முக்காப்பிடி வெதைக்கு ரண்டு வள்ளங் கெடைக்கு. அதுதே சாத்துக்கு. கெணத்துல தண்ணியிருந்துதுனா ராயி வெதைப்பாங்கொ, அப்பொ ஒரு பாத்தீல தட்டுப்பயித்தைமு இன்னொரு பாத்தீல கத்திரிச்செடி, வெண்டச்செடி, மொளகாச்செடி, தக்கோலிச்செடீன்னு எதையாவது ரண்டப் பயிரு பண்ணி வெச்சுருப்பாங்கொ. அம்மாயி காட்டுக்குள்ளயே கெடக்கு. நானுமு உருக்காலுமு வெகு நா அதும்பட பொறவாலயே முந்தானியப் புடுச்சுக்கிட்டுத் திரீவொ. அம்மாயி எங்குளுக்கு எதாச்சுங் கத சொல்லுன்னு சொல்லி நச்சிக்கிட்டே இருப்பொ. அதுக்கு பொழுதாவரைக்குஞ் சித்த நிக்க முடியாது, அத்தன வேல. ஒரு எருமயிருந்துது, எங்கு ரண்டுபேருத்துக்குமு பாலுக்கெங்க போறதுன்னு கன்னபொரஞ் சந்தைக்குப் போயி வாங்கியாந்துருந்தாங்க எங்கு அப்பிச்சி, அத மேக்கோணு, அதில்லாம நாலு வெள்ளாட்டுக்குட்டி. அதுகள வளத்தி ஒரு பண ரண்டு பணத்துக்கு வித்துத்தேக் கைச்செலவத் தாட்டோணு. எங்குளுக்குச் சோறாக்கி வெச்சுப்புட்டு காலங்காத்தாலயே காட்டுக்குப் போயிரு. அங்கத்த வேலய முடிச்சுக்குட்டுப் பண்டம்பாட்ட ஓட்டிக்கிட்டுக் கொரங்காட்டுக்குப் போயிரு. ஆட்டுக்குட்டிகளயெல்லா அண்ணாங்காலப் போட்டு முடுக்கியுட்டுப்புட்டு எருமையக் கண்ணுக்குள்ள வெச்சுக்கிட்டே ஆருகிட்டயாச்சும் பழம பேசிக்கிட்டிருக்கு. அது காலோஞ்சு போயி உக்காந்துதுனா நாங்க கத சொல்லச்சொல்லி நச்சுவொ. அது என்னென்னமோ தகுமானஞ்சொல்லி பொழுதாவரைக்கு இழுத்தடிச்சுப்புடு, பொழுதோடச் சோறாக்கறப்பக்கோட உடமாண்டொ, நச்சிக்கிட்டே இருப்பொ. அதிலீமு இந்த உருக்கா இருக்கறாளே நைநைன்னு கெடப்பா. அம்மாயி பொறுபொறுங்கு, இப்பத்தே உப்பந்தியாவிக்கிட்டிருக்குதுங்கு, அப்படியே படுக்கறவரைக்கு எதாவது தகுமாணஞ்சொல்லிச் சமாளிச்சுப்புடு. சோறாக்கி மொதல்ல எங்குளுக்குத்தேம் போடு. அப்பறொ அப்பிச்சி திம்மபாங்கொ, கடசியாத்தே அம்மாயி திங்கு. அப்புச்சி நம்பிப்போச்சான்னு எங்கு வவுத்தத் தடவித்தடவிப் பாப்பாங்கொ, வவுறு முட்டியாட்ட இருக்கோணு, அப்பத்தே அப்பிச்சிக்குத் திருப்தி. அல்ல வயிறு பள்ளமாக் கெடந்தாக்கோட பொறுத்துக்க மாண்டங்கொ, கண்டமண்டலமாத் திட்டிப்புடுவாங்கொ. அப்பறொ அல்லாருமு படுத்துக்குவொ, ரண்டு பேருமே அம்மாயிகிட்டத்தேம் படுத்துக்குவொ, அப்பத்தே அம்மாயி எங்குளுக்குக் கத சொல்லு. மொதல்லயே சொன்ன கதயாத்தே இருக்கு, ஆனா ஒவ்வொருக்காச் சொல்றப்பவு ஒவ்வொரு மாதிரி இருக்கு. காத்தால இருந்து உப்பந்தி பண்ணி உப்பந்தி பண்ணி எங்குளுக்காகச் சேத்து வெச்சுருந்ததையெல்லா ஒண்ணுடாமச் சொல்லு. மொத நாச் சொல்றப்பொ சிட்டுக்குருவிக்கு நாலு குஞ்சுதே இருக்கு, நாலடுக்குலேதே கூடுங்கட்டீருக்கு, மக்காநாளு அஞ்சாயிரு, அதுக்கு மக்காநாளு ஆறாயிரு, அப்பறொ ஒரு நா ஏழு குஞ்சுன்னுது. நாஞ்சொன்ன பாட்டெல்லாங்கோட அம்மாயி உப்பந்தி பண்ணிச் சொன்னதுதே, கெவுனிச்சுப் பாத்தாத் தெரியு, மத்தவியொ சொல்றதுக்குமு நாஞ்சொல்றதுக்குமு எத்தனையோ வித்துவேசந் தெரியு. அல்லா எங்கு அம்மாயி உப்பந்தி பண்ணிச் சொன்னது. அம்மாயிகிட்டக் கத கேட்டுக் கத கேட்டு நானுங்கோட நெறையா உப்பந்தி பண்ணிச் சொல்லப் பழவிக்கிட்டெ, எங்கம்மாயி கத சொல்ற தோரணயப் பாத்துச் சிரி சிரீன்னு சிரிச்சுக் கெடப்பொ, அடமூக்கன்னா அடமூக்கனாட்டவே பேசிக்காட்டுமாக்கு, அப்பிடிச் சிரிச்சுக்கெடக்கங்காட்டி நானுமு எங்கு உருக்காலுமு தாயில்லாத கொறெ தெரியாம வளந்தொ, கேக்கறவியொ மனசௌவற மாதரயுங் கதயிருக்குது, மாமியா கொடுமெ, மாமனா கொடுமெ, சின்னாயா கொடுமெ, நங்கயா கொடுமென்னு எத்தன கொடுமயப் பாத்துருக்கறொ? அத்தனைக்குங் கதையிருக்குது. காளாம் பொடச்சதே அப்பிடியொரு கதைலதே, அந்தக் கத நம்பூர்லயே அல்லாருக்குந் தெரியு. அதிலீஞ் சிரிப்புத்தே, அந்த மாமியாக்காரி எத்தன கொடும பண்ணுனா? அத்தனைக்குமு அந்தப் புள்ள கங்கெ பொழ பொறுத்தாப்பல பொறுத்துக்கிட்டுத்தான இருந்துது. அந்தப் புள்ளைக்கு ஒரு நாளைக்காச்சு நல்ல சோறு போட்டுருப்பாளா, நல்ல துணிமணி குடுத்துருப்பாளா, ஒரு நல்ல நாப் பொல்லா நா உண்டுமா? அந்தப் பழைய சோறுதே, பழைய துணிதே, அவ ஊட்டுல என்ன இல்லாம இருந்துது? பண்டம்பாடே ஏழெட்டுருப்பிடி இருந்துதாப்பறொ, அத்தன சீவனுக்கும் பருத்திக்கொட்டெ ஆட்டியே அந்தப் புள்ளக்குச் சப்பையெல்லாங் கழுண்டு போச்சு. பாவொ பெத்தவிய அவளுக்குப் பாலுந்தேனுமாக் குடுத்து வளத்துனாங்களாமா, இங்க வந்து ஒரு துண்டு கறிக்கு வெறியெடுத்துப்போச்சு, மாமியாக்காரி வாரத்திக்கு ரண்டு மட்டங் கறி ஆக்கிப்புடுவாளாமா, அல்லாத்தையு ஒளிச்சு வெச்சுக்கிட்டே தின்னு தீத்துப்புடுவாளாமா, இந்தப் புள்ள வெக்கத்த உட்டு அப்பிடிக் கெஞ்சுவாளாமா, ஒரு துண்டு கண்ணுல காமிக்க மாண்டாளாமா, கடசீல இந்தப் புள்ள சட்டி கழுவறப்ப ஒட்டிக்கிட்டிருக்கறதத்தே வழிச்சு நக்குமா, அத்தன கொடும பாத்துக்குங்களே, அத அவ புருஷங்காரனுங் கண்டுக்க மாண்டானாமா, ஆயா சொல்ற பேச்சுக்கு மறுபேச்சுப் பேசமாண்டானாமா, பாவொ இவ என்ன பண்ணுவா? ஆருகிட்டப் போயி மொறயுடுவா? செரி இதுதே நம்பு தலையெழுத்தாட்ட இருக்குதுன்னு நெனச்சுக்குட்டு இருந்துட்டாளா, ஒரு நா அந்த மாமியாக்காரி எங்கியோ ஊருக்குப் போறம்னு போயிட்டாளா, முந்தானிச்சீலயப் புடுச்சுக்குட்டு அவ புருஷங்காரனுமு பொறவாலயே போயிட்டானாமா, திலும்பி வாறதுக்கு மூணு நா ஆவும்னு சொல்லீருந்தாளா, அப்ப இந்தப் புள்ள ஆருக்குந் தெரியாம ஊட்டுலருந்த கட்டுச்சாவலொண்ணப் புடுச்சு ராத்திரியோட ராத்திரியா ஆக்கி வெடிய வெடியத் தானொருத்தியே தின்னு தீத்துப்புட்டாளாமா, அது எத்தச் சோட்டுச் சாவலுங்கறீங்கொ? எந்துருச்சு நின்னா ஒரு வெள்ளாட்டுக்கெடாயொசரொ இருக்குமாமா, அத்தனையுமு ஒருத்தியே தின்னு தீத்தாச் சும்மாருக்குமா? நடு ராத்திரீல வவுறு வலி புடுச்சுக்குச்சா, பொறுக்க முடீலியா, செரி அளவுக்கு மீறித் தின்னுபுட்டமாட்ட இருக்குது, சலவாதிக்குப் போனாச் செரியாப் போயிருமுனு எந்துருச்சு மந்தக் காட்டுக்குப் போலாமுன்னு போனாளா. வழியெல்லா ஒரே இருட்டு. கருகும்முனு இருந்ததா, இவ பயந்துக்கிட்டா. வவுறு வலியும் பொறுக்க முடியாம இருந்துருக்குது, அவசரொ, செரி ஆனதாவுட்டு, ஆவத்துக்குப் பாவமில்லீனு ஊரு முச்சந்தீலியே கோந்துட்டாளா. பேலப்பேல வந்துக்கிட்டே இருந்துதா, நிக்கவே இல்லியா, முக்கிமுக்கி வெளிய தள்ளிப்புட்டுத் திரும்பிப் பாத்தா எருமக் கண்ணாட்ட அத்தச்சோடு நின்னுதா அவ பேண்ட பியி.  செரி எப்பிடியு காத்தால ஊருக்காரங்க வந்து பாத்தாங்குன்னா பிரச்சனெ வரு, அதுக்கென்ன பண்றதுன்னு ரோசண பண்ணிக்கிட்டே வந்து, மிச்ச மீதியிருந்த கறி, கொளம்பெல்லா எடுத்துச் சாணிக்குப்பையத் தோண்டி அதுல ஊத்தி மூடிப்புட்டுப் படுத்து அசந்து தூங்கீட்டாளா, அவ நெனச்சபடியே பிரச்சன பெருசாயிருச்சு, நடூருக்குள்ள ஆரு இந்த அசிங்கத்தப் பண்ணி வெச்சதுன்னு ஒரே கொழப்பொ, இன்னாரு செஞ்ச தப்புன்னு ஊகம் பண்ணவு முடீலெ, செரி ஊருச்சனமெல்லா ஒவ்வொருத்தராப் போயி அந்தப் பீயிக்கிட்டயே நானா பேண்டமுன்னு கேக்க வேண்டீது, பீயி ஆமான்னு ஆரச்சொல்லுதோ அவுங்களச் சுண்ணாம்புக் களவாயில துணிச்சுப்புடறதுன்னு முடிவாச்சா, அதும்படி ஒவ்வொருத்தரா அந்தப் பியிக்கிட்டப் போயி ஏம்பியி நானா பேண்டெ அப்பிடீன்னு கேட்டாங்களா, ஒவ்வொருத்துருங் கேக்கறப்பொ அந்தப் பியி ம்ஹும்னு தலையாட்டுச்சா, இவளையும் போயிக் கேக்கச் சொல்லுச்சாச் சனொ, இவுளுக்குப் பயொ, பேண்டது இவதானொ? நல்ல சோறு தண்ணி இல்லாமப் பொங்காட்டத்தேங் கெடப்பா, இவ எங்க போயி இத்தச்சோட்டு விட்டயப் போட்டுருக்கப் போறா, இருந்தாலு ஒரு மொறைக்குக் கேட்டுருன்னு சொன்னாங்களா, இவ என்ன நடக்கப் போவுதோன்னு பயந்துக்கிட்டே கிட்டப்போயி ஏம் பிய்யி நானா பேண்டன்னு பாவமாக் கேட்டாளா, பியி ஒருக்கா அவள அண்ணாந்து பாத்துதா, அப்பறொ அலலாருத்துக்குஞ் சொல்றாப்பல அவுளுக்குமு ம்ஹும் அப்பிடீன்னு சொல்லுச்சா, ஊர்சசனத்துக்கெல்லா ஒரே கொழப்பொ, ஊருல இருக்கற அல்லாருத்துகிட்டயுங் கேட்டாச்சு, ஆருமே இல்லீனா அப்பறொ இந்தக் காரியத்த ஆரு செஞ்சுருப்பான்னு ரோசண பண்ணிக்கிட்டிருக்கறப்பொ மாமியாக்காரி ஊருலருந்து அப்பத்தே வந்தாளாமா, எல்லாத்தையுங் கேள்விப்பட்டு எனக்கென்ன பயொ, நா ஊருக்குப் போயி மூணு நா ஆச்சு, இதா போயிக் கேக்கறெமுன்னு வேகவேகமாப் போயி ஏம் பியி நானா பேண்டமுன்னு அவுதி புடுச்சாப்பல கேட்டாளா, பியி கொஞ்சங்கோட யோசிக்காம ம்க்குமுன்ருச்சா. அப்பறொமென்ன மாமியாக்காரியப் புடுச்சுச் சுண்ணாம்புக் களவாயில தினிச்சுப்புட்டாங்களா, இவ தம்புருஷங்கோட ஒரு தொந்தரவுமில்லாமச் சந்தோஷமா இருந்தாளா. இப்பிடியொரு கத, அவ அந்தக் கோழிச்சாத்தக் கொண்டு போயிச் சாணிக் குப்பைல ஊத்துனா பாரு அந்த எடத்துல மூணாநாப் போயிப் பாத்தாளாமா அங்க வெள்ளவெள்ளயா மொட்டுமொட்டா என்னமோ மொளச்சுக் கெடந்துதா, என்னமோ காணமான்னு புடுங்கி மோந்து பாக்கங்காட்டி கோழிக்கறி வாசமடிச்சுதா, அதக்கொண்டாந்து ஆக்கித் திங்கங்காட்டி அத்தன ருசியா இருந்துதா, அதுதே காளானா, கோழிச்சாத்துலருந்து மொளச்சு வந்ததுதே இந்தக் காளான்னு சொல்றதுக்குத்தே இந்தக் கத. அதே மாதிரி அந்த ஆறு எப்பிடி உப்பந்தியாவி வருதுங்கறதுக்குமு ஒரு கதயுண்டு. அத எங்கம்மாயி ஒரே ஒருக்காத்தே எங்குளுக்குச் சொல்லுச்சு. கதைன்னாக் கொஞ்சத்திக்குக் கொஞ்சமாச்சுச் சிரிக்கறாப்பல இருக்கு, இந்தக் கதைல அதுக்கு எடமே இல்லெ, அதுனால ஆருமு இதச் சொல்ல மாண்டாங்கொ, ஆனா கேக்கறவுங்குளுக்கு அது எப்பிடியாப்பட்டவீளாருந்தாலுஞ் செரி மனசௌவிப் போயிரு, அப்பிடியொரு கதெ, இந்தக் கதய எங்குளுக்குச் சொல்றப்பொ எங்கப்பிச்சீமு கோந்து கேப்பாங்கொ, கத சொல்றப்பொ எங்கம்மாயி அழுவழுவுன்னு அழுவு, கண்ணுலருந்து தாரதாரயாக் கண்ணீரோழுவு, எங்கப்பிச்சீங்கோட அழுவுவாங்கொ, ஒரு நாத் தாக்குப்புடிக்க முடியாம எங்கப்பிச்சிக் கத்திப்புட்டாங்கொ, அப்பிடியொரு கதெ. அல்லாக் கதயாட்டத்தே அதுமு ஆரம்பிக்கு, ஒரு ஊருல ஒரு அப்பனாயாளா, அவீளுக்கு ரண்டு பொட்டப்புள்ளைகளா அப்பிடீன்னுதே அந்தக் கதையு ஆரம்பிக்கு, அப்பொறெ வேற மாதர போயிரு. எங்கம்மாயி அந்தக் கதயச் சொல்றப்பொ எனக்குமு உருக்காலுக்குமு அது நாங்க பட்ட கதயக் கேட்டடாப்பலதேந் தெரிஞ்சுது, எங்கு கதயாட்டத்தே அந்த ரண்டு பொங்கொளந்தைகளயு உட்டுப்புட்டுப் பாம்பு கடிச்சுச் செத்துப் போயிருவா அதுல வாற ஆயாக்காரி, எங்கப்பனாட்டத்தே அதுல வாற அப்பனுமு ரண்டந்தாரஞ் செஞ்சுக்கு. அதுல வாற சின்னாயாக்காரியாட்டத்தே எங்கு சின்னாயாக்காரியு அவுளுக்குன்னு ஒண்ணு பொறக்கறவரைக்குமு எங்கள நல்லாப் பாத்துக்குவா, அப்பறொ அந்தக் கொளந்தைகளப் பண்ணாத சித்தரவத பண்ண ஆரம்பிச்சா, அவ பெத்ததுக்குப் பாலுமு நெய்யுமாக் குடுப்பாளா, மூத்த தாரத்துப் புள்ளைகளுக்கு வெறு சட்டி கழுவுன தண்ணிதானா, ஊடு வாசக்கூட்டறது, சாமாணஞ்செட்டுக் கழுவறது, தொண்டுப்பட்டிக்குப் போயிச் சாணியெடுக்கறது, மாடு கண்ணுக்குப் பருத்திக்கொட்டையாட்டறதுன்னு பொழுதுக்குமு எதாச்சு வேல வாங்கிக்கிட்டே இருப்பாளா, பகலைக்கு எரும மேக்கற வேல. கல்லுக்குள்ளயு முள்ளுக்குள்ளயு அலஞ்சலஞ்சு அந்தப் புள்ளைகளுக்குக் காலெல்லா ஆணியா, நடக்கக்கோடச் சத்தியில்லியா, ஆன கஞ்சி குடுச்சுருந்தாத்தான ஆவு? எங்கு மாமெ வந்து எங்களக் கூட்டிக்கிட்டுப் போனப்பொ நானுமு உருக்காலுமு அப்பபிடித்தே இருந்தமா, எங்கம்மாயி சொல்லு. அந்தப் புள்ளைக தெனமுஞ் செத்துப்போன ஆயாள நெனச்சு அப்பிடி அழுவுமா, அம்மம்மா நீயே எங்களத் தனியா உட்டுபுட்டுச் செத்துப்போனே? போனதுதேம் போனே பேசாமெ எங்களையுங்கூடவே கூட்டிக்கிட்டுப் போயிருக்கலாமல்லவுன்னு அவியாயாளச் சுட்டுப்போட்ட எடத்துல போயி நின்னுக்குட்டு அப்பிடி அழுவுமா. ஒரு மூச்சழுதுபுட்டு விதியேகொறைன்னு பொழுதோட ஊடு வந்து சேருமா, தெனமு அடிதே, ஒததே, பேச்சுத்தே. அப்பிடியிருக்கறப்பத்தே ஒரு நா அவியாயா கெனாவுல வந்து சொன்னாளா, ஆயாயா, அழுவாதீங்கொ உங்குளுக்கு நானிருக்கறெ, கீலோகத்துல இருந்தாலு மேலோகத்துல இருந்தாலு  நா உங்குகோடவேதே இருப்பெ, கவலப்படாதீங்கொ, நம்பு காட்டுக் கெழக்கு வேலீல ஒரு பாலமரமிருக்கும் பாருங்கொ, பாலமரத்துக்கு வடவறமா ஒரு சங்கம்பொதரு இருக்கு, அதுக்கு மேவறமா ஒரு பனங்கருக்கு, பனங்கருக்குக்கு நேர் கெழக்கால ஒரு வெள்ரிச்செடி இருக்கு. செடி சிறுசுதே, பூவுமிருக்காது, பிஞ்சுமிருக்காது, எலயெல்லாங்கோடச் சுண்டிப் போயி பாத்தாக் குரமத்தஞ் செடியாட்டத்தே இருக்கு, அதுகிட்டப் போயி நின்னு என்னைய நெனச்சுக்குங்கொ, உங்குளுக்கு வேண்டிய மட்டுக்கு வெள்ரிப் பழொங் கெடைக்கு, அழுவாதீங்காயான்னு சொல்லீட்டு மறஞ்சு போயிட்டாளாமா. இந்தப் புள்ளைகக் காட்டுக்கு எருமைய ஓட்டிக்கிட்டுப் போனப்பொ ஆயாக்காரி சொன்ன அடையாளத்தையெல்லா வெச்சு அந்த வெள்ரிச்செடியத் தேடுச்சா. இப்பத்தே எங்கு பொளப்புக்குமு கதைக்கு வித்துவேசொ வருதுன்னு வெச்சுக்குங்களே, எங்குளுக்கு எங்காயா கெனாவுலயு வருலெ, அப்பிடியொரு வெள்ரிச் செடியக் காட்டவு இல்லெ, எங்கள எங்கு மாமெ வந்துதான கூட்டிக்கிட்டுப் போச்சு? மாமனுமில்லாமப் போயிருந்தா எங்கு கெதி என்னாயிருக்குமோ? அது அந்தப் பகவானுக்குத்தேந் தெரியு. சின்னாயாக்காரி பண்ணுன கொடும பொறுக்கமாண்டாம ஒண்ணு கெணத்துலயோ கொளத்துலயோ உளுந்து செத்துருப்பொ, இல்லெ தன்னரசநாடாப் பொறப்புட்டு எங்கியாச்சும் போயிருப்பொ, அப்பிடிப் போயிருந்தா ஆரு கையில சிக்கி என்ன ஆயிருப்பமோ தெரியாது. விதி போக்குவரத்தில்லாமக் கெடந்த எங்கு மாமன அங்க கூட்டியாந்துது, விதியோ இல்லெ கதைல வாறாப்பல எங்காயாதே மாமன அனுப்புச்சு வெச்சாளோ தெரீல, ஆயா வந்து காப்பாத்துனா என்ன, ஆயாகோடப் பொறந்தது வந்து காப்பாத்துனா என்ன? எல்லா ஒண்ணுதே, இப்ப நெனச்சாலு எனக்கு மேலுக்காலெல்லா சிலுத்துக்குது போங்கொ, செரி அது கெடக்குட்டு, கதைக்கு வருவொ. வெள்ரிச் செடியக் கண்டுபுடுச்சு கெனாவுல வந்து சொன்னாப்பல அந்த ரண்டுமு கண்ண மூடி நின்னு ஆயாள மனசுல நெனச்சு அழுதுதா. அந்த மாயத்திக்கு அந்தச் சின்னச் செடீல பொன்னெறத்துல ரண்டு வெள்ரிப்பழந் தெரிஞ்சுதா. அந்த ரண்டு கொளந்தைகளுக்குமு அதப்பாத்து அப்பிடித் தேம்பித்தேம்பி அழுததாம் போங்கொ. அப்பறொ அலுங்காம அதப் பொரிச்சுக்குட்டு வந்து பனங்கருக்கு மறப்புல வெச்சுப் புட்டு வாயில வெச்சா அத்தன ருசியா, தேனாட்ட அத்தன தித்திப்பா இருந்துதா. வவுறு நம்ப அதயத் தின்னுபுபட்டு ஒண்ணுந் தெரியாததுகளாட்ட எருமைய மேச்சு ஊடு கொண்டாந்து சேத்துச்சா. அன்னைக்கிருந்து சின்னாயாக்காரி போடற தீவச் சோத்தெ அந்தக் கொளந்தைக ரண்டுமு கைலகோடத் தொடறதில்லெ, இப்பிடி ஒரு ரண்டு மூணு வாரம் போச்சு. அந்த வெள்ரிப் பழத்தத் தின்னுதின்னு அந்தக் கொளந்தைகளுக்கு ஒடம்பெல்லா சும்மாத் தளத்தளன்னு ஆவிப்போச்சு, நெறங்கோட மாறிக்கிச்சா, மின்ன கண்ணெல்லா குழியுழுந்து, எலும்புந்தோலுமா கருவழிஞ்சு போயிக் கெடக்குமா, அப்பிடியிருந்ததுக எப்பிடியிப்பிடிப் பவுனாட்ட மாறிச்சுன்னு சின்னாயாக்காரிக்கு ஆச்சிரியந் தாங்குல, நாம நம்பு புள்ளைக்குப் பாலுமு நெய்யுமா ஊத்திக்குடுக்கறொ, தேனுந் தெரவியமுமா ஊட்டியுடறொ அதுகோட இப்பிடியில்லையே இதென்னாயா அதிசியமா இருக்குது, இந்த ரகசியத்த எப்பிடியுங் கண்டுபுடிக்கோணும்னு ஒரு நாப் பொறவாலயே போயிப் பாத்தாளாமா, அன்னாடுஞ் செய்யறாப்பல அந்தப் புள்ளைக வெள்ரிப்பழத்தப் பொறிச்சுக்குட்டுப் போயி பனங்கருக்கு மறப்புல வெச்சுத் தின்னுக்கிட்டிருக்றப்பொக் கையுங் களவுமாப் புடுச்சுட்டாளா. அப்பொறொ அந்தப் புள்ளைககிட்ட ஆதரவாப் பேச்சுக் குடுத்து அந்த ரகசியத்தையுந் தெரிஞ்சுக்கிட்டாளா, இதுல ஒண்ணு பாத்தீங்கன்னா அதிசயமா இருக்கு, சின்னாயாக்காரி அந்தப் பழத்தக்கொண்டுபோயித் தம்பட புள்ளைக்குக் குடுக்கலாமுன்னு யோசுச்சு தந்தரமாப் பேசி ஒண்ண வாங்கிக்கிட்டு வந்தாளா. செரி நாமுளுங் கொஞ்சொந் தின்னுக்கிட்டு நம்பு புள்ளைக்குங் கொஞ்சொங் குடுப்பமுன்னு புட்டு வாயில போட்டாளா, கசப்புன்னாக் கசப்பு அப்பிடியொரு கசப்பா, செரி இது இவியாயா பண்ற தந்தரொ, குழில போயிப் படுத்துக்குட்டு மூத்தா அந்தத் தந்தரொம் பண்ணுனா எளையா எனக்கு ஒண்ணுமா தெரியாதுன்னு கருவிக்கிட்டே படுத்தாளா. பொழுதோடப் புருஷங்காரெ வந்து அல்லையக் கிள்ளுனானா, அவொ அவங் கையத் தட்டியுட்டுப்புட்டு குப்பறக்கப் படுத்துக்குட்டாளா, செரி என்னமோ கொறையிருக்குமாட்ட இருக்குது, என்னுன்னுதேங் கேட்ருவமேன்னு அவள எழுப்பிக் கேட்டானா, அந்தத் தந்தரக்காரி அவுனுக்குப் பதிலுச் சொல்லாமக் கூகூன்னு அழுதாளா. அல்லே ஏ அழுவறே? உனக்கு என்ன கொறெ வெச்சிருக்கறெ? சொல்லு. எதாருந்தாலு நிவர்த்தி பண்ணித்தாரமுன்னு சத்தியம் பண்ணுனானா. அவ ஒருக்காலுக்கு இருக்காச் சத்தியத்த வாங்கிக்கிட்டுத் தனக்குத் தலவலி, அது நல்லாப் போவோணுமுன்னா நம்பு காட்டுல ஒரு வெள்ரிச் செடியிருக்குது, அத வேரோட புடுங்கிக்கொண்டாந்து எனக்கு அரச்சுப் பத்துப் போட்டுட முடீமான்னு கேட்டு வெள்ரிச்செடியிருக்கற எடத்துக்கு அடையாளமுஞ் சொன்னாளா. புருஷங்காரனுக்கு ப்பூன்னு போச்சு. இந்தக் கெரவத்துக்கு எதுக்கு இத்தன சத்தியொ? இதா நொடிச்ச நொடீல கொண்டாரெ அப்பிடீன்னு சொல்லீட்டு பந்தத்தக் கொளுத்தியெடுத்துக்குட்டு அப்பவே பொறப்புட்டுப் போனானா. சொன்னாப்பலயே செடிய அடையாளங் கண்டு புடுச்சு அத வேரோட புடுங்குனானா. மேனாட்டுலருந்து அதப் பாத்துக்கிட்டிருந்த மூத்தாளுக்கு ஆத்தரமா வந்துதா. ஒரே போடாப் போட்டறலாமுன்னுகோட நெனச்சாளா, ஆனா என்னருந்தாலு தொட்டுத் தாலி கட்டுன புருஷனாப் போனான்னு பொறுத்துக்குட்டுப் பேசாம இருந்துக்குட்டாளா. இப்பிடியொரு ஆவத்து வருமுன்னு தெரிஞ்சுதே எளையா அதத் தாஞ்செய்யாமப் புருஷன உட்டும் பண்ணச் சொன்னது. சொன்னபடியே புருஷங்கார அந்தச் செடியக் கொண்டாந்து அம்மிக்கல்லுல வெச்சு அரச்சுப் பத்துப் போட்டுட்ட மாயத்திக்கு எனக்குத் தலவலி நல்லாப்போச்சுன்னு மல்லாந்துக்கிட்டாளா. தம்பட புள்ளைக இப்பிடி ஏமாந்த பொளப்புப் பொளைக்குதேன்னு ஆயாளுக்கு வருத்தொ. அன்னைக்கே தம்பட கொளந்தைக கெனவுல வந்து, ஆயாயா உங்குளுக்குச் சொன்னாலும் புத்தியில்லெச் சொல்லாட்டியும் புத்தியில்லெ, அவளப் பத்தி நல்லாத் தெரிஞ்சுமு அந்த வெள்ரிக்கொடியக் காட்டிக்குடுப்பீங்களா? செரி போனது போவுட்டு, காத்தால காட்டுக்குப் போனதீமு நம்பு காராம் பசுகிட்ட எம்பேரச் சொல்லுங்கொ, மடி நெறையாப் பால் குடுக்கு. அதக்குடுச்சா அமுர்தத்தக் குடிச்சாப்பல தெடமா இருப்பீங்கொன்னு சொன்னாளா அவியாயா. அந்தக்காராம் பசு அவ வளத்துனது. கொளந்தைக பாலுக்குனு அவங்கப்பமூடு சீதனமாக் குடுத்துட்டது. இந்த முண்டப்பாவிக்கு எப்பூமே அதக் கண்டா ஆவாது. பாலுங் கறக்கறதில்லெ, செனையு ஒட்டறதில்லெ, அவ கண்ணாலமாவி அந்த ஊட்டுக்கு வந்த புதுசுல நல்லாத்தேங் கறந்துக்கிட்டிருந்துதா, அவியாயா கெனாவுல சொன்னாப்பல அதும்பட பாலு அத்தன தித்திப்பா இருக்குமாமா. ஆனா இவொ அந்தக் கொளந்தைகளக் கொடுமப்படுத்த ஆரம்பிச்சதீமு அதுக்கு மடியுமு வத்திப்போச்சு, கெர்ப்பப்பையுங் காஞ்சுபோச்சு. இவ அதுக்குத் தவுடுமு வெக்கறதில்ல, பருத்திக்கொட்ட புண்ணாக்குமும் போடறதில்லெ. போருப்பக்கத்திக்குமு அண்ட உடமாண்டா. அது பாட்டுக்கு எதையாவுது ரண்டு பச்சயக் கரண்டு தின்னுவுட்டு வந்து படுத்துக்கு. மத்த பண்டம்பாடுகளோட சேந்து கொஞ்ச நா தொண்டுப்பட்டிக்கு வந்துக்குட்டிருந்துது, அப்பறொ வாரத நிறுத்திக்கிட்டுது. எங்கியாவுதுஞ் சுத்து, எதோரெடத்துல மொடக்கு. அந்தப் புள்ளைக எருமைய ஓட்டிக்கிட்டுப் போனா பொறத்தாலயே திரியு. அதும்பட மடீலெ போயிப் பாலுக்குடிக்கச் சொல்றாளே ஆயாக்காரீன்னு அந்தக் கொளந்தைகளுக்கு மொதல்ல ஆச்சிரியொ. அப்பறொ அம்மா கெனவுல வந்து சொன்னா அது பொய்யாப் போவாதுன்னு மக்கா நாக் காத்தால காட்டுக்குப் போனதீமு அந்தக் காராம்பசுவத் தேடிப் போச்சுதுகளா, அந்த மாடுமு இவீளத் தேடிக்கிட்டுக் காட்டுக்கு வருது. அதப்பாத்ததீமு அந்தக் கொளந்தைகொ ரண்டும் பக்கத்துல போயி அப்பத்தே புதுசாப் பாக்கறாப்பலச் சித்த நேரம் பாத்துக்குட்டு நின்னுதா, அந்த மாடுமு அந்தக் கொளந்தைகள ஒரு அதிசியமாட்ட அப்பிடி வெறச்சு வெறச்சுப் பாத்துதா, அவியாயாதே தம்பட கொளந்தைகளப் பாக்கலாமுன்னு அந்த மாட்டு ரூவமெடுத்து வந்துட்டாளோ என்னமோ, ஆரு கண்டா? பக்கத்துல வந்து அந்த ரண்டையு அணச்சாப்பல நின்னுக்குச்சா. நாக்க நீட்டிக் கண்ணுக்குட்டிய நக்கறாப்பல நக்கிநக்கிக் குடுத்துதா, அந்த மாட்டுக்கிருக்கற பாசங்கோட மனசனுக்கில்லெ, அப்பறொ நாய்க்கிருக்கற நன்னி மனசனுக்கிருக்குதா? அப்பிடித்தே, மனச நரியாட்ட ஓநாயாட்ட வஞ்சன பழவிக்கிட்டே, சூது பழவிக்கிட்டே, திருட்டுப் பெரட்டுப் பண்ணிப் பழவிக்கிட்டே. அதுதே மழ பேய மாட்டீங்குது, சனத்துக்குக் குடிக்கத் தண்ணி சிக்க மாண்டீங்குது, செரி அது கெடக்குட்டு, நாம கதயப் பாப்பொ. கெனவுல சொன்னாப்பல அந்தக் கொளந்தைக அந்த மாட்டப் பாத்து அம்மான்னுகோடச் சொல்லுலெ, அதுகளப் பாத்ததீமு வத்திப்போன அதும்பட மடி பூரிச்சுக்குச்சா, நாலு காம்புலீமு தானா பாலுச் சொட்டுச்சா, குடீங்காயா ஏ தயங்கி நின்னு பாத்துக்கிட்டிருக்கறீங்கொங்கறாப்பல அதுகள அப்பிடிக் கண்ணு நெறையாப் பாத்துதா. அந்தப் பாலுக்கு அப்பிடியொரு ருசி. கண்ணுக்குட்டிகளாட்டக் காலுக்கடீல போயி நின்னுக்குட்டு வவுறு நம்பக் குடிச்சுப்புட்டு வாயத் தொடச்சுக்குட்டுப் போயி ஒண்ணுந்தெரியாததுகளாட்ட தம்பாட்டுக்குப் பண்டம்பாடுகளப் பாத்துக்கிட்டிருந்துதா. அந்த மாடுமு நெனச்சாப்பல காட்டுக்கு வாறதில்லெ, அந்தப் புள்ளைகளுக்குப் பசுச்சா இதுக்கு மடி சொரந்துக்குமா, அப்பத்தே அதுகளத் தேடிப் போகுமா. எப்பிடியோ அந்த வெள்ரிச்செடியப் புடுங்கியெறிஞ்சுபுட்டொ, இனியெனத்தத் தின்னு அவுளுக மினுக்குவாளுகளோ பாக்கலா, நானூத்தற புளிச்ச தண்ணியையுந் தீவச்சோத்தையுமுட்டா அவுளுகளுக்கு வேற கெதியில்லீனு நெனச்சுச் சந்தோஷப்பட்டுக்குட்டுக் கெடந்தாளா அவியாயா. ஒரு நாப் போச்சு, இரு நாப் போச்சு, ஒரு வாரஞ்சென்னுது, இருவாரஞ் சென்னுது, நாளாவ நாளாவ அந்தப் புள்ளைகளுக்கு மினுமினுப்பு அதிகரிச்சுக்கிட்டே போனதே தவுத்துக் கொஞ்சங்கோட மங்கக்காணா. இதென்னடாது அதிசியமாருக்குது? வெறுங் கம்மஞ்சோத்துத் தண்ணிக்குமுந் தீவச்சோத்துக்குமு இப்பிடிப் பூரிக்குமா? இதுல இன்னொ என்னமோ இருக்குதாட்டருக்குது, அதக் கெவினிக்கோணும்னு மறுக்காளுமு அதுக பொறவால போயிக் கம்மறவா நின்னுக்குட்டுப் பாத்தாளாமா, அதுகளப் பாத்ததீமு அந்த வறட்டு மாடு நாக்கச் சொலட்டிக்கிட்டு ஒடியாறதீமு, தாயக் கண்டாப்பல அதுக ரண்டு குதுகலமாக் கிட்டப் போறதையுமு, அந்த வறட்டுமாடு மடி பூரிச்சு நிக்கறதையுமு அதுக ரண்டுமு ரண்டு பக்கத்திக்கு நின்னுக்குட்டுக் காம்பச் சப்பறதையும் பாத்தவளுக்கு வயித்தாலயே போயிருச்சா. பொறுக்க மாட்டாம ஊடு வந்தவொ ஆருகிட்டயு ஒண்ணும் பேசாம முக்காட்டப் போட்டுப் படுத்துக்குட்டாளா, புருஷங்காரெமந்து கால நோண்டவு குறுக்கிப் படுத்துக்குட்டா, அவுனுக்கு ஒண்ணும் புடிபடுலெ. கேட்டதுக்கு தனக்கு வயித்துவலீன்னுருக்கறா, செரிப் போயி வைத்தியரக் கூட்டியாரமுன்னு பொறப்புட்டவனத் தடுத்து, இது சும்மா வந்துருக்கற வயித்துவலியில்லெ, செய்வென, காத்துக் கருப்புத்தே வந்து அண்டீருக்குமாட்ட இருக்குது, நா மின்னயே சோசியகாரங்கிட்டக் கேட்டுட்டெ, அவெ அதுக்கொரு பரிகாரமுஞ் சொல்லீருக்கறே, ஒரே மனசா அதப் பண்ணித் தருவீங்களோ மாண்டீங்களோன்னு மின்னையாட்டவே அவங்கிட்டச் சத்தியஞ் செஞ்சுதரச் சொல்லிக் கேட்டாளா. அவுனுமு செரி என்னமாருந்தாலும் பண்ணித்தாரெ, நீ விஷயத்தச் சொல்லுன்னானா. அதுக்கவ கள்ளச் சிருப்புச் சிருச்சுக்கிட்டே மூத்தாளூட்டுச் சீதனமாக் கொண்டாந்த அந்தக் காராம்பசுவ வெட்டிப் பலி குடுத்தாத்தே எம்பட வயித்துவலி நல்லாவும்னு சோசியகாரெஞ் சொல்லீருக்கறே, அதும்படி செய்யோணும்னாளா, அவுனுக்கு மனசே இல்லியா, என்னதே வறடாருந்தாலு அது ஒரு பசுவல்லொ? அதப் போயிப் பலி குடுக்க முடீமா, அதுமு அது மூத்த தாரத்தோட சீதனமா வேற போச்சு, இருந்த அஞ்சாறு வருஷத்துல எத்தன பாலக் குடுத்துருக்கு, எத்தன சாணியப் போட்டுருக்கு, ஊருல பாதிப் பேரு பெருசானதே அது குடுத்த பாலுலெதேன்னு வெகு நேரொ ரோசன பண்ணிக்குட்டிருந்தானா. அவுளுக்குக் கோவொ, செரி நீங்க நா நல்லாருக்கறதவுட மூத்தா கொண்டாந்த சீதனத்தத்தே பெருசாப் பாப்பீங்களாட்டருக்குது, நா எங்கு அப்பனு£ட்டுக்கே போறெ, நெட்டையோ குட்டையோ அவிய சொல்றபடி கேக்கறெ, என்னக்கிருந்தாலு அவியதே எனக்காவாங்கொ, உங்குளுக்கு எம்பேருலருந்த ஆசையெல்லாம் போயிருச்சு, அனுபவிக்கவரைலு அனுபவிச்சுப்புட்டு இப்பச் சீக்கு வந்து படுக்கங்காட்டி எச்சலயெத் து£க்கியெறியறாப்பல து£க்கியெறிஞ்சுபுட்டீங்கொ, நீங்கள்லா நல்லாருப்பீங்களான்னு கண்டபடி வார்த்த பேசிக்கிட்டு ஒரு மூச்சழுதாளா. அவுந்தே என்ன பண்ணுவேம் பாவொ, எதுக்கெடுத்தாலு இப்பிடியே பண்றாளே இவொ, செரி இந்த ஒரு தரக்கா அவ சொன்னாப்பல செஞ்சுதேம் பாத்தரலாமேன்னு ஆளுக்காரனுகளக் கூப்புட்டு அந்த மாட்டப் புடுச்சுக் கொண்டாந்து கட்டுத்தொறைல கட்டுன்னு சொன்னானா. ஆளுங்காரங்கூட்டமு அவஞ் சொன்னாப்பல காடு கரையெல்லாஞ் சுத்தி, கட்டுமாறு கட்டி அதப் புடுச்சுக் கொண்டாந்துட்டானுகளா. அப்பறமென்ன ஒரு மூணே நாளுக்குள்ள அத ஊரு முச்சந்தல வெச்சு வெட்டிப் பலி குடுத்துட்டானா அவெ. மக்கா நாளே தேறியெந்துருச்சுப் புருஷனுக்குச் சந்தோஷமா முந்தானய விரிச்சாளா அந்த வேவரசி. அந்தப் புள்ளைகதே சோந்து போச்சு, மாடு செத்துப் போயி ஏழெட்டு நாச்சென்னுமு ஆயா கெனாவுல வரக்காணா, மறுக்கா அதே தீவச்சோறுதே, கம்மஞ்சோத்துத் தண்ணிதே. நாலே நாளுக்குள்ள அதுகளுக்கு நெறம் மங்கிப் போச்சு. அதே அடி, அதே ஒதெ, அதே பேச்சு. அந்தப் புள்ளைக மறுக்கா அவியாயா குழி மேட்டுக்குப் போயி ஒரு மூச்சழுது நின்னுதுகளா. அன்னைக்குப் பொழுதோடவே கெனாவுல வந்து நின்னுருக்கறா அந்தப் பாவஞ்செஞ்ச முண்டப்புள்ள. ஆயாயா உங்குளுக்கும் புத்தியில்லெ எனக்கும் புத்தியில்ல, கம்மறவாருந்து காரியஞ்சாதிக்கறதுக்குப் பதலா நாமளே காட்டிக் குடுத்து இப்பப் பறிகொடுத்து நிக்கறொ, மேனாடு போனதீமு நா உங்குளுக்காக அந்தப் பகவாங்கிட்டக் கேட்டு வாங்குனது மூணு வரொ, அதுல ரண்டு வீணாப் போச்சு, இனி மிச்சமிருக்கறது ஒண்ணுதே, அதும்படி நா மானடத்திரேகமெடுத்து வருவெ. தெனமு நீங்க நம்பு காட்டுலருக்கற மேக்கோட்டுக் கெணத்துக்கு வந்துருங்கொ, அதுல ஒரு பாம்பேறியிருக்குது பாருங்கொ அதுல நா உங்குளுக்காகக் காத்துக்கிட்டிருப்பெ, வாங்கொ. அப்பிடி வந்தீங்கனா நா உங்குளுக்கு மொலப்பாலுந் தருவெ முட்டாயிந் தருவெ, வாங்கடா கண்ணுகளான்னு சொல்லீட்டு மறஞ்சுட்டாளாமா. மக்கா நாக் காத்தால அந்தப்புள்ளைக ரண்டுமு ஆயா சொன்னாப்பல அந்தக் கெணத்துக்குப் போயிப் பாத்துருக்கறாங்கொ, பாம்பேறிலெ மசத்த விரிச்சுப் போட்டுக்குட்டு அப்பிடி உக்காந்துருந்தாளா அவியாயா. அவுளுக்கு ஆறடிக் கூந்தலாமா, அவுத்துட்டா தலவு மசுரு நெலம்பொரளுமா, அத்தன நீளொ, உசுரோட இருக்கறப்பொ அமாவாசெ மதியங்கண்டா தலைக்கு அரப்புத் தேச்சுத் தண்ணிவாத்துக்கிட்டு நடூட்ல எப்பிடி உக்காந்து அத்தன மசத்தையு விரிச்சுப்போட்டுக் காய வெப்பாளோ அப்பிடித்தே அப்ப அந்தக் கொளந்தைகளுக்குந் தெம்பட்டாளாமா. தாயப் பாத்ததீமு அதுகுளுக்குக் கண்ணெல்லாந் தளும்பிக்கிச்சா, ஆயாளுக்குந் தாங்குலே, பாத்து நாலஞ்சு வருஷமிருக்குமல்லொ? உட்டுட்டுப் போறபோது மூத்தவ ஒருத்திதே நடக்கத் தக்கனெ இருந்தா. எளையவொ அப்பத்தே தவுந்து பழவீருந்தாளாமா. இப்பொ ரண்டுமு இடுப்பத் தொட்டுக்குட்டு நிக்குது. அதிலீமு பெரியவ வயுசுக்கு வாறாப்பலயல்லொ இருந்தா?. பாத்ததீமு மூணு பேருமு ஒருத்தரயொருத்துரு கட்டிப் புடுச்சுக்குட்டு அப்பிடிக்கூகூன்னு கதறுனாங்களா. அந்தக் கெணறு ஒரு பாங்கெணறு. தண்ணி தளும்பி வாணி போயிக் கெடந்துதா. பாம்பேறீல ஒரு இத்தணைக்கூண்டு எடந்தே இருந்துதா, செரியா கோரக்கோட முடீலியா. அதிலீமு செடி செத்தெ. அப்பொற ஆயாக்£ரி அவிய ரண்டு பேருத்தயு நடுக்கெணத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயி அப்பிடியே தண்ணி மேல கோரச் சொல்லிச் சொன்னாளா. அதுக ரண்டு ஆயா பேச்சக் கேட்டு அப்பிடியே சம்மணங்காலப் போட்டுக் கோந்துக்கிச்சா. தண்ணிதே, ஆனா அப்பொ அது அதுகளுக்குப் பஞ்சு மெத்தையாட்டத்தே இருந்துதா, நாம அப்பிடி நிக்க முடீமா, கோர முடீமா? அதெல்லா ஒரு சத்திய வாக்கு. ஆயா வாங்கி வந்த வரொ. ஆயாக்காரிமு அதுகளாட்டவே அந்தத் தண்ணி மேல கால நீட்டிக் கோந்துக்குட்டு அதுகுளுக்கு ஆளுக்கொரு மாருல பால் குடுத்தாளா. மேனாட்டுலருந்து அதுகுளுக்குன்னு சீனி முட்டாயி, கல்கண்டு, பச்சமாவு, பணியாரொ, சீதாப்பழொ அப்பறொ அதுகுளுக்கு வேண்டிய நகெ நட்டு, புதுத்துணி, புதுச்செருப்பு, சோறாக்கறதுக்கு அரிசி பருப்பு, மொளகா புளி, நல்லெண்ணெ தேங்கெண்ணெ,  அப்பறொ சோறாக்கறதுக்கு வேண்டிய பாத்தரம்பண்டமெல்லாங்கோடக் கொண்டாந்துருந்தாளா. புள்ளைக அத அப்பிடி ஆயியாயின்னு தின்னதப் பாத்துப்புட்டு அப்பிடி அழுதாளா. அப்பொறொ ஆயாயா நா வாங்கி வந்துருக்கற வரத்துப்படி நீங்க ரண்டு பேருமு பெருசாவிப் புருஷமூடு போற வரைக்குங்கூட இருப்பெ. உங்குளுக்கு வேண்டிதெல்லா நாங்கொண்டாந்து தாரெ, கவலப்படாதீங்கொ. பொறுமையாக் கோந்து பொழுதா வரைக்குமுந் தின்னுங்கொ, ஆராச்சுமு வந்து இங்க என்னாயா பண்றீங்கொன்னு கேட்டாத் தண்ணி வாத்துக்கறமுன்னு சொல்லிப்புடுங்கொ, நா உங்கு ரண்டு பேருத்து கண்ணுக்குந் தவுத்து மத்தவியா ஆரு கண்ணுக்குந் தட்டுப்பட மாண்டெ, நாங்கொண்டார பண்டம் பாத்தரங்களுமு ஆரு கண்ணுக்குந் தட்டுப்படாதுன்னு சொல்லி அதுகுளுக்குத் தலைக்கு நல்லெண்ண வெச்சு அரப்புப் போட்டுத் தண்ணிவாத்துட்டுத் தல சீவி, கருவேலங்காய ஒரச்சுச் சாந்து பண்ணிப் பொட்டு வெச்சு, அவிய காட்டுக்குள்ள இருந்த மல்லீக்கொடிலெ போயி பூப் பொறிச்சாந்து தலெ நெறையா வெச்சுட்டு அழகு பண்ணிப் பாத்தாளாமா. பொழுதாவரைக்கு ஆயாலும் புள்ளைகளு ஒரு வெணாடி பிரீலியா. பொழுதுழுந்த பிற்பாடு புதுத்துணியெல்லா அவுத்து வெச்சுப்புட்டு மறுக்கா பழய துணியப் போட்டுக்குட்டு, நகெ நட்டையெல்லாங் கழுட்டி ஆயாகிட்டக் குடுத்துட்டுத் தலையப் பழயபடிப் பரட்டையாக் கலச்சுட்டுக்கிட்டு நல்லா இருட்டுக்கட்டுனதுக்கப்பறொ ஊடு போயிச் சேந்தாங்களா. சின்னாயாக்காரி கண்ணுலயே தட்டுப்படக்கூடாதுங்கறதுக்காக அந்த ரண்டுமு நல்ல புள்ளைகளாட்ட இருட்டிருக்கவே எந்துருச்சு ஆக வேண்டிய வேலையெல்லா முடிச்சுப்புட்டு பொழுது கௌம்பறதுக்கு மின்னயே காட்டுக்குப் போயிருவாங்களா. சின்னாயாக்காரி போட்டுக் குடுக்கற தீவச் சோத்தையுமு புளிதண்ணியமுங் கொண்டாந்து மாட்டுத்தாழிக்குள்ள கொட்டீருவாங்களா. இப்பிடி ரண்டு வருஷம் போச்சு. புள்ளைக நல்லா கொழுக்கொழுன்னு கண்ணுப்படறாப்பல வளந்துது. இனி அதுகள ஆரு கையிலாவுது புடுச்சுக் குடுக்கோணுமேங்கற கவலப் பெத்தவுளுக்கு வந்துருச்சு. மானடத் திரேகத்துக்கு அவ வாங்கி வந்திருந்த வரமு முடியற காலொ நெருங்கிக்கிட்டிருக்குது. மேனாட்டுக்குப் போயிச் சேரோணுமல்லொ? செத்தவ பின்ன இங்கயேவா இருந்துக்க முடியு? அதுனால அதுக்கென்ன பண்லாமுன்னு ரோசண பண்ணிக்கிட்டிருந்துது. அப்பறொ ஒரு நா திடீர்னு அவ புருஷங்காரெங் கெனாவுல போயி மசத்த விருச்சுப் போட்டுக்குட்டுப் பல்ல வெறுவிப் பயங்காட்டிக்கிட்டு நின்னாளா. அவுனுக்கு பயத்துல மூத்தரமெல்லா வந்துருச்சா. ஈர வேட்டியோட எந்துருச்சுப் பாக்கங்காட்டி ஒண்ணுந்தட்டுப்படுலியா. செரி எதோ கெட்ட கெனான்னு நெனச்சுக்குட்டுச் சாமியக் கும்புட்டுட்டுப் படுத்துக்கிட்டானா. அப்பொற மக்கா நாளு அந்தச் சக்களத்தி கெனாவுல போயி நின்னுருக்கறா. அவுளுமு பயந்து போயி ஔருஔருன்னு ஔரீருக்கறா, இப்பிடியே ரண்டு மூணு மட்டங் கண்ணுக்குக் காட்டிப்புட்டு ஒரு நா ராத்திரி அவிய ரண்டுபேருமு ஒண்ணாக் கட்டல்ல கெடக்கறப்பொ தமபட சக்களத்தி முதுகுல பளாருன்னு ஒரு அற அறஞ்சாளா. என்னமோ ஏதோ காணமேன்னு அடிச்சுப் புடுச்சு எழுந்து அவுசரஅவுசரமாச் சீலயச் சுத்திக்கிட்டு எந்துருச்சு வௌக்கத் து£ண்டியுட்டுப் பாக்கங்காட்டி அஞ்சு வெரலும் பதுஞ்சு முதுகு நத்தங்கன்னிப்போயிக் கெடந்துதா. புருஷம் பொண்டாட்டி ரண்டு பேருத்துக்குமு காச்சக் குளுரு புடுச்சுக்குச்சு. எட்டு நாக் கெடய உட்டு எந்திரிக்க முடீலியா. அந்த எட்டு நாளைக்குமு கெனாவுல வந்து பயப்படுத்திக்கிட்டே இருந்தாளாமா மூத்ததாரத்துக்காரி. ஒரு நா ஒரு கெழவியாட்ட வந்து நிப்பாளா, மக்கா நா பூனையாட்ட வந்து நிப்பாளா, அதுக்கு மக்கா நாச் சின்னக் கொளந்தையாட்ட வந்து நிப்பாளா, ஆரு, என்னுனு கேட்டா அப்பிடியே காத்தோட காத்தாப் போயிருவாளா. அவ வந்து நின்னா ஊதுவத்தி மணக்குமா, சாம்பரானி வாசொக் குமுகுமுன்னு வருமா. ஒரு நா சலவாதிக்குப் போலாமுன்னு அப்பிடி எந்துருச்சு நடக்க முடியாம நடந்து ஊட்டுக்குப் பொறவால போயிருக்கறா, அப்பொத் தம்பட சக்களத்தி முன்னால பனமரமாட்ட அடிக்குந் தலைக்கு எந்துருச்சு நின்னாளா மூத்ததாரத்துக்காரி, அவளுக்கு அங்கயே கண்ணெல்லா நட்டுக்குச்சு, நின்ன கெடைலியே சலவாதிக்குப் போயிருச்சு. அப்பறொ ரண்டு பேருமு எங்கயோ து£ரந்தொலைவுக்குப் போயி ஒரு பூசாரியப் பாத்து இதுக்குப் பரிகாரமென்னன்னு கேட்டுருக்கறாங்கொ. வெவரமெல்லாங் கேட்டுப்புட்டுச் சுத்தி வளைக்காம நேரடியாப் புட்டு வெச்சுப்புட்டானாமா அந்தப் பூசாரி. தம்பட கொளந்தைகளச் செரியா கெவுனிக்காம, அதுகளுக்குச் சோறு தண்ணி ஊத்தாம, அடிச்சு ஒதச்சுக் கொடுமெ பண்ணுனதுனால மூத்ததாரத்துக்காரிதே பேயா வந்து இப்பிடிக் கஷ்டப்படுத்தறா, அதுனால அதுகளுக்கு நல்ல மொறையாக் கண்ணாலங் காச்சி நடத்தி வெக்கறதுக்கு வழியப்பாருங்கொ சாமி, இல்லாட்டி இது இப்பிடித்தேத் தொந்தரவு பண்ணிக்கிட்டிருக்குமுன்னானா. அப்பங்காரனுக்கு அப்பத்தே அந்தப் புள்ளைக நெனப்பே வந்துதா. அதுகளப் பாத்துக்கறதுக்குனுதே நா உன்னயக் கட்டிக் கூட்டியாந்தெ, அதுகுளுக்குச் சோறும் போடாம தண்ணீங் குடுக்காம அடிச்சு ஒதச்சுக் கொடும பண்ணிக்கிட்டிருக்கறாயலெ நீன்னு கோவமாக் கேட்டானா, அதுக்கவொ அய்யய்யோ இந்தப் பூசாரிப் பொய் சொல்றே, அவன நம்பாதீங்கொன்னு சொல்லி மாலமாலயாப் பொய்க் கண்ணீருட்டுக்குட்டு அப்பிடி அழுதாளாமா. அப்பறொ அப்பங்காரெ நா எம்பட கொளந்தைகளப் பாக்கோணும்னு போய்க் கூட்டியாரச் சொல்லி காட்டுக்கு ஆளுக்காரனுகளெ அனுப்புச்சானா. அவுனுகளும் போயி அந்தப் புள்ளைகளத் தேடிக் கண்டுபுடுச்சுக் கொண்டாந்து முன்னால நிறுத்துனானுகளா. புள்ளைக சும்மா தளத்தளன்னு தக்காளி நாத்துகளாட்ட நின்னதப் பாத்துப்புட்டு அவெ செரி, இந்தப் பூசாரி பொய்தேஞ் சொல்றே, நல்லாப் பாத்துக்குலீனா இந்தப் புள்ளைக இப்பிடியிருக்குமான்னு நெனச்சுக்குட்டுப் பொண்டாட்டியப் பாத்து செரி நாம இதுகளுக்கு ஒரு கண்ணாலத்தப் பண்ணி வெச்சுப்புடலா, இல்லாட்டி ஊரொலகோ உன்னைய இப்பிடித்தேங் கொற சொல்லிக்கிட்டிருக்கு, அதுனால நாம்போயி எம்பட பொறந்தவக்காரிகிட்டப் பேசிப்புட்டு வாரமுன்னு கௌம்புனாளா, அதுக்கவ வேண்டாமுன்னு தடுத்துப்புட்டு நீங்க ஏ அவ்வளவு தூரத்திக்கு அலஞ்சு கஷ்டப்பட்டுக்கிட்டு, ஊருல எங்கு சொந்தக்காரமூட்டுல ரண்டு பசங்க இருக்கறாங்கொ, நல்ல பசங்கொ, கட்டற மொறெதே, சொத்துங்கெடக்குது, நாஞ்சொன்னாச் செரீம்பாங்கொ நாம்போயிப் பாத்துப்புட்டு வாறெ, நீங்க ஆக வேண்டிய காரியத்தையெல்லாம் பாருங்கொன்னு அப்பிடித் திருத்தமாப் பேசி அவனச் சமாதானப்படுத்துனாளா, அந்தப்பல்லிக்கெருவி அவ பேச்ச நம்பிக் காரியத்த ஆரம்பிச்சுப்புட்டே, அவுளுக்கு அந்தப் புள்ளைகளப் பாக்கப் பாக்க வவுறு வாயெல்லா எரிஞ்சுதா, எப்பிடியாச்சு அதுக பொழப்பக் கூடப்போட்ரொணும்னு திட்டம்போட்டாளா, அவ சொன்னாப்பல ரண்டு பசங்க இருந்தது நெசந்தே, நல்ல வசதிதே, கட்டற மொறையுந்தே, ஆனா அதுலருந்த சூழ்ச்சிதென்னுனா, ரண்டு பேருத்துல ஒருத்தனுக்குக் குட்ட வெசாதி மத்தவனுக்குக் காசநோயி. அதுனாலயே ரண்டு பேருத்துக்குமுப் பொண்ணுக் குடுக்கறதுக்கு ஆருமருலெ. மக்காநாளே பொறப்புட்டுப் போனவ பண்ணாத சூழ்ச்சி பண்ணி கண்ணாலத்த உறுதிப்படுத்திக்குட்டு வந்து புருஷங்கிட்டச் சொல்லிப்புட்டா. அவ சொன்ன ரொசணப்படி பொண்ணுப் பாக்க வந்தவனுகொ சீக்கு வெளிய தெரியாதபடிக்கு மறச்சுக்குட்டு வந்தானுகளா. குட்ட வெசாதி புடுச்சவெ தழும்பு கண்ணுக்குத் தெரியாதபடிக்குக் களிமண்ணக் கொளச்சுப் பூசிக்கிட்டானா, காசநோய் புடுச்சவெ நெஞ்சுக்கு மேல பஞ்ச வெச்சு அடச்சு அதுக்கு மேல ஒரு அங்கராக்கப் போட்டுக்குட்டு வந்தானா. இவிய காத்தாலருந்து காத்துக்கிட்டிருந்தாங்களா, ஆனா மாப்பளயூடு வாறதுக்கு இருட்டாவிப் போச்சா. கேட்டதுக்குத் தடம்வழி செரியில்லெ அதுதே இவ்வளவு தாமுசொமுன்னு சொல்லீட்டானுகளா மாப்பளயூட்டுக்காரனுகொ. அப்பங்காரனுமு அத நம்பிக்கிட்டே, இருட்டுல எரிஞ்சது ஒரே வௌக்கு. அதுக்குமு எண்ணையில்லாமப் பாதீல கெட்டுப்போச்சு. அல்லா அவ ஏற்பாடுதே. வந்தவியொ ஆரயுமுஞ் செரியாப் பாக்கவு முடீலெ. மாப்பளக்காரனுக ஆரு, கூடவந்தவியொ ஆருன்னு ஒண்ணுந் தெரீலெ. பேசி முடிச்சாச்சு. எட்டா நேத்தே கண்ணாலமுன்னு முடிவும் பண்ணியாச்சு. அந்தப் பாவஞ்செஞ்ச முண்டப்புள்ளைகளுக்குமு ஒண்ணுந் தெரீலெ. ஊட்டஉட்டு வெளீல போறதுக்கில்லாமக் காவப் போட்டிருந்துருக்கறா சின்னாயாக்காரி. தவிச்சுக் கெடந்துருக்குது அந்த ரண்டும். கண்ணாலத்துக்கு ஒரு ரண்டு நா இருக்கறப்பொ எப்பிடியோ அல்லாருத்தயு ஏமாத்திப்புட்டு ரண்டு புள்ளைகளுமு முட்டிக்கிட்டுப் போயிருச்சா. போனது ஒரே வாங்குல காட்டுக்குத்தேம் போயிருக்குது. அதுக்குள்ள சின்னாயாக்காரிக்கு விஷயந் தெரிஞ்சு போச்சா. இவுளுக எதுக்குக் காட்டுக்குப் போறாளுக, மின்ன மாதரி எதாச்சுமு மர்மமிருந்தாலுமிருக்குமுன்னு நெனச்சுக்குட்டு ரண்டாளுகளக் கூட்டிக்கிட்டு அவுளுமு பொறவாலயே போனாளா. ரண்டுமு நேரா அந்தக் கெணத்துக்குத்தேம் போயிருக்குது. அங்க போயி பாம்பேறீல உக்கோந்து அம்மாம்மா இந்த மாதரி சின்னாயாக்காரி எங்கு ரண்டு பேருத்தயு சீக்குக்காரனுகளுக்குக் கட்டிக் குடுக்கத் திட்டம் போட்டுருக்குது, இதுலருந்து நாங்க மீண்டுவர முடியாதாட்ட இருக்குது. நீ பேசாம எங்கள வந்து உங்கோடவே கூட்டிக்கிட்டுப் போயிருன்னு சொல்லி மொறையேருன்னு அழுதுக்கிட்டுருந்துதா. அப்பப் பாத்து சின்னாயாக்காரி வந்து கெணத்த எட்டிப் பாத்தாளாமா, அவ கண்ணுக்கு அந்தப் புள்ளைகதேந் தெருஞ்சுருக்குது, தாய் தெரீலெ. இதெதுக்கு இந்த ரண்டு பேருமு இப்பிடி இந்தப் பாங்கெணத்துப் பாம்பேறீல கோந்துக்குட்டிருக்கறாளுகொ? இதுல சூதென்னாச்சுமிருக்குமோண்ணு ரோசண பண்ணுனாளாமா. அவ ரோசணைக்கு ஒண்ணுஞ் சிக்குலெ. செரி இதயேம் போயி வெட்டியா ரோசண பண்ணிப் பொழுதப் போக்குவானே, இவளுக இங்க வந்துருக்கறதுமு நல்லதுக்குத்தே, பேசாம ரண்டு பேருத்துத் தலைமேலையுமுங் கல்லத் தாங்கிப் போட்டுக் கெணத்துக்குள்ள தள்ளியுட்டுப்புடலா, புருஷங்காரெங் கேட்டா காத்தவறி உளுந்துட்டாங்களாட்ட இருக்குதுன்னு சமாளிச்சுக்கலாமுன்னு கல்லத் தேடுனாளா. ஆயாக்காரிக்கு அவ சூழ்ச்சி புருஞ்சு போச்சு. இனி நம்பு கொளந்தைகள இந்தச்சண்டாளிகிட்ட உட்டுட்டுப் போவக்கூடாதுன்னு முடிவு பண்ணி, ஆயாயா இனிமேலேமு நீங்க இங்க இருக்க வேண்டா பேசாம ரண்டுபேருமு எங்கோடக் கெணத்துல குதுச்சு முழுவிக்குங்கொ, ஆழத்திக்குப் போயிரலா. அங்க வந்து எந்தக் கொம்பியு ஒண்ணும் பண்ணீர முடியாது, நாம்பாத்துக்கறமுன்னு சொல்லீட்டு மொதல்ல தாங் குதுச்சாளா, தாயத் தொட்டுப் புள்ளைக ரண்டுமு பொறவாலயே குதுச்சுதா. குதிச்ச மாயத்துல தாய்க்காரி அதுக ரண்டையு ரண்டு கையில புடுச்சு உள்ள இழுத்துக்குட்டுப் போயிட்டாளா. கல்லக் கொண்டாந்து வெச்சுக்குட்டுத் தலைல போடறதுக்குத் தரணம்பாத்து நின்னுக்கிட்டிருந்தாளா அந்தச் சக்களத்தி. முழுவுனது ரண்டுமு அப்பறொ மேல வரவேயில்லெ. செரி கத முடிஞ்சுதாட்ட இருக்குது, அதுமு நல்லதுக்குத்தே அப்பிடீன்னு நெனச்சவளுக்கு அந்தப் புள்ளைக கழத்துல கெடந்த நகெ ஞாபகத்துக்கு வந்துதா. செரி எப்பிடியாருந்தாலு ரண்டயு மேல கொண்டாந்துதான தீரோணும்னு புருஷங்காரனுக்குத் தகவச் சொல்லியுட்டாளா. வாயிலீமு வயித்துலீமு அடிச்சுக்குட்டு அவெ ஒடியாந்தே. ஊருச்சனமெல்லா வந்துச்சு. கண்ணாலத்துக்கு வந்திருந்த சனமு வந்து கெணத்து மேட்டுல கூடி நின்னுக்குச்சு. மொதல்ல பாதாள சோதி போட்டு நறுவுசாத் தேடிப் பாத்தாங்களாமா, ஒண்ணுந் தட்டுப்படக்காணமா, நல்லா மூச்சுப் புடுச்சுக் குமுளிக்கத் தெரிஞ்ச நாலாம்பளைகள எறக்கியுட்டுத் தேடிக் கொண்டாரச் சொன்னாங்களாமா, அவீளுமு உள்ள குமுளுச்சு அடியாளத்துக்குப் போயி ஒரிண்டிடுக்குடாமச் சல்லட போட்டுத் தேடிப்பாத்துப்புட்டு வந்து ஒண்ணுந்தட்டுப்படக்காணாமுன்னு ஒதட்டப் பிதுக்குனாங்களாமா, அப்பறொ எங்கதேம் போயிருப்பாளுகொன்னு அவுளுக்குக் கொழப்பொ. அவுளுக்குங் கொழப்பொ அவ புருஷனுக்குங் கொழப்பொ ஊருச்சனத்துக்குங் கொழப்பொ. அல்லாருங்கூடி ரோசண பண்ணி ஆனதாவுட்டு, கெணத்துல இருக்கற தண்ணியெல்லா எறச்சுப்பாத்துப்புடறதுன்னு முடிவு கட்டுனாங்களா. அத்தாப் பெரிய கெணத்த என்னைக்கு எறச்சு முடிக்கறது, செத்துருந்தா ரண்டு நாள்ள சவொ மேல வருமல்லொன்னு சொன்னதுக்கு அந்தச் சக்களத்தி ஒத்துக்க மாண்டமுன்னு சொல்லீட்டாளா, அதுல என்னமோ ரகசியமிருக்குது, அதத் தெரிஞ்சுக்கோணுமுங்கறதுதே அவ ஆசெ, அத மறச்சுக்குட்டுப் புள்ளைக மேல பாசமிருக்கறாப்பல குய்யோ மொறையோன்னு கீழ உழுந்து பொரண்டாளாமா. புருஷங்காரனுமு, செரி பொண்டாட்டிக்காரி சொன்னபடியே ஆவுட்டும்னு கெணத்த எறைக்கச் சொல்லி உத்தரவு போட்டானா. ஊருச்சனமெல்லாங்கூடி ஒரு நாப்பொழுதுக்குமு எறச்சுது, ஒரு வெரக்கட தண்ணி கொறஞ்சுது, ரண்டு நாப்பொழுதுக்கு எறச்சுது, ரண்டு வெறக்கட தண்ணி கொறஞ்சுது. இப்பிடி நாளுக்கொரு வெறக்கட தண்ணீன்னு கணக்கு வெச்சு அல்லாருமு மொறெ போட்டுக்குட்டுத் தண்ணியச் சேந்தி ஊத்துனாங்கொ, அப்பவு அதுல தண்ணி கொறையிலெ, இப்பிடி ஒரு நாப் போச்சு, ரண்டு நாப் போச்சு அப்பறொ ஒரு வாரமாச்சு, ஒரு வாரம் போச்சு, ரண்டு வாரம் போச்சு அப்பறொ ஒரு மாசமாச்சு, மாசமும்போயி வருஷமுமாச்சு, ஒரு வருஷம் பல வருஷமாச்சு, இன்னஞ் சலிக்காம எறக்கிறாங்கொ.