“நீதியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது எது?”

விஷ்ணுபுரம் சரவணன்

புகைப்படம் : அனாமிகா


வாசகர் பற்றிய அனுமானங்களே பெரியவர்களுக்கான எழுத்துக்கும் சிறாருக்கான எழுத்துக்குமான இடைவெளி. ஒரு படைப்பை வாசகர் எவ்விதம் எதிர்கொள்வார் எனும் முன் திட்டமிடல் சிறார் இலக்கியத்தில் முதன்மையாக முன்னிருத்தப்படுகிறது. குழந்தைகளில் வயது, வாழும் சூழல், நிலப்பரப்பு, சொல் வங்கி, படிக்கும் கல்வி நிலையம் உள்ளிட்ட பல விஷயங்களை மனதில் நிறுத்தி சிறார் இலக்கிய முயற்சிகள் எழுதப்படுகின்றன. பெரியவர்களுக்கான இலக்கியத்தில் இவற்றிற்கு அநேகமாக இடமில்லை என்றே சொல்லவேண்டும். எழுதப்பட்ட பிரதியிலிருந்து இந்த வகைகள் பற்றிய ஆய்வு    மேற்கொள்ளப்படும்.  இவை முழு முற்றிலுமான வரையறை அல்ல. ஆனால் இந்த வேறுபாடு பிரதானமானது.

வாசகர் பற்றிய இந்த முன் வரையறையே சிறார் கதை/பாடல்/உரைநடை உருவாக்கத்தில் முதன்மையான பங்கு வகிக்கிறது. இதிகாச கதைகளின் சிறார் வடிவ பிரதிகளிலிருந்து இன்றுவரை அப்படித்தான் சிறார் வாசிக்க படைக்கப்படுகின்றன.  கிராமத்தில், அரசுப் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுவர் ஒருவருக்கு என தீர்மானிக்கப்படும்போது, அந்த நூல் அச்சிறுவரால் படிக்கப்படும்போது எளிமையாக உள்ளிழுத்துக்கொள்ள முடியும் என்று கருதப்படுகிறது.  இதிலிருந்து விலகி எழுதப்பட்டால் அவர்கள் வாசிப்பதற்கு தடுமாற்றமான பிரதியாக அது மாறக்கூடும். ஆனால் இந்த முன் திட்டமிடல் சிறார் இலக்கியத்தின் பலவீனமாக அமைந்தும் விடுகிறது.

சிறார் படைப்புகள் என்றாலே அது நீதியொன்றை நேரடியாகவோ, மறைமுகமாகவோ வலியுறுத்திய வண்ணமே இருக்கின்றன. இது புராணக் கதைகள் எளிமைப்படுத்திய பிரதிகளில் மட்டுமல்ல அதற்குப் பிறகு வந்தவர்களாலும் இவ்வழக்கம் தொடரப்பட்டது. இதனாலேயே சுமார் 50 வகை நீதிகளின் கரம்பிடித்து நடந்த கதைகள் அல்லாத சிறார் படைப்புகளை தமிழில் பார்ப்பது அரிதினும் அரிது. ஆனால், இவை சிறாருக்கு பெரும் சலிப்பூட்டுகின்றன. அவர்கள் ஒருபோதும் நீதி பிறழ்ந்து நடப்பதில்லை; குற்றம் புரிவதில்லை; புறம் பேசுவதில்லை; பொய் உரைப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு இவை நீதியாக போதிக்கப்படுகின்றன. இந்தச் சூழலே சிறார் இலக்கியத்தின் தொடர் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்தது/ இருந்து வருகிறது. (சில விதிவிலக்குகள் தவிர)

இந்த நீதிக்கதைகளின் அடிப்படையே சிறார் இலக்கியம் என்பது குழந்தைகளுக்கு ஏதேனும் போதிப்பதற்கு எனும் எல்லைக் கோட்டை வரையறுத்துவிட்டது.  எனவே அதைக் கடக்க பலரும் துணிவதில்லை. இதுவே சிறார் இலக்கியத்தின் மற்ற வடிவங்களுக்கும் பொருந்தும். போதனையான இலக்கிய நூல்களை குழந்தைகளின் கைகளில் பரிசு பொருளாக பள்ளிகளில்/வீடுகளில்/நிகழ்ச்சிகளில் திணிக்கப்பட்டன. அந்த நூல்களின் அட்டைப் படம்கூட குழந்தைகளை வசிகரிக்கவில்லை. அதனால் அவை அலமாரியில் நிரந்த தூக்கம் அடைந்தன. அதன் நல்வாய்ப்பாக குழந்தைகளும் தப்பித்தனர்.

இந்தப் போதனை திணிப்புகளிலிருந்து கடந்த பத்தாண்டு காலமாக சிறார் இலக்கியம் தப்பி, வேறு திசைக்கு பயணிக்கத் தொடங்கியுள்ளது. மலையாளத்திலிருந்து யூமா வாசுகி, ஆங்கிலத்திலிருந்து இரா.நடராசன், உதயசங்கர், சீனா மொழியிலிருந்து கொ.மா.கோ.இளங்கோ உள்ளிட்டோர்களால் தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டு வரும் கதைகளின் வடிவத்தின் தாக்கம் சமீபமாக சிறார் இலக்கியத்தில் பங்களித்து வருபவர்களின் படைப்புகளில் தெரிகின்றன.

பெரியவர்களுக்கான இலக்கியத்தைப் போலவே புத்தம் புதிதான கதை ஒன்றை சிறாருக்கு பகிர்ந்தளிக்கும் படைப்புகளைக் காணமுடிகிறது. அவற்றுள் உலவும் சிறு குதூகலமும் இன்றை குழந்தைகளின் மொழிக்கு அந்நியப்பட்டு போகாமல் இருப்பதும் ஆரோக்கியமானது. எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகிய இருவரின் சிறார் இலக்கிப் பங்களிப்புடன் விழியன், பாலபாரதி, பாலு சத்யா, கொ.மா.கோ. இளங்கோ, உதயசங்கர், மு.முருகேஷ் உள்ளிட்டோரின் படைப்புகள் குழந்தைகள் பலராலும் விரும்பி படிக்கப்பட்டு வருவது தமிழ் சிறார் இலக்கியத்திற்கு மகிழ்ச்சியான செய்தி. ஆனாலும் சிறு உறுத்தலும் இருக்கத்தான் செய்கிறது.

முன் காலத்தில் படைப்புகள் நீதியால் நிரப்பட்டனவோ அதுபோல இப்போது பலரின் படைப்புகளில் அறிவியல் செய்தி அல்லது நிரூபணங்கள் நீதியின் இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளன. ஓர் அறிவியல் விஷயத்தை எடுத்துக்கொண்டு அதற்கேற்ற கதையை உருவாக்குவது அல்லது தான் உருவாக்கும் கதை நிகழும் இடங்களைப் பற்றிய அறிவியல் தகவல்களைச் சேகரித்து தருவது என்பது நடந்துவருகிறது.

ஒரு நாவலின் கதை அழகாக சென்றுக்கொண்டிருக்கிறது. அடுத்த பக்கத்தின் அரை பக்கத்தில் பாக்ஸ் கட்டி, அறிவியல் துணுக்குகளை பதிந்துள்ளனர். இப்போது அந்த நூலைப் படிக்கும் சிறுவர் கதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டுமா இல்லை அந்தத் துணுக்குகளைப் படித்துவிட்டு பின் கதைக்குள் மீண்டும் நுழைய வேண்டுமா? எனும் கேள்வி எழுகிறது. கடலில் நடக்கும் கதையொன்றிற்கு கடல், கடல் பிராணிகள் பற்றிய துணுக்குகள் இடையிடையே தர வேண்டிய அவசியம் என்ன?

ஒரு கதை படிக்கையில் சிறுவர் தனக்குள் அந்தக் கதையைக் காட்சியாக நிகழ்த்திக்கொண்டிருப்பர். அவர்களுக்கான கடலின் நிறம் நீலமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, கதையில் வரும் காடும் சிறுவர் மனதில் உருவாக்கிக் கொள்ளும் காடும் ஒன்றல்ல. எழுத்தாளரை விடவும் மிகச் சிறப்பான, காட்சியமைப்பில் அந்தக் கதைக்குள் அவர்கள் பயணித்துக்கொண்டிப்பர். இறகொன்றைப் பிடித்தப்படி பறந்துகொண்டே அடுத்தப் பக்கத்தைப் புரட்டுகையில் வானம், நட்சத்திரம், சூரியன் பற்றிய தகவல்கள் அந்த இறகு மீது கடும் சுமையை இறக்கி வைக்கும். அந்தச் சுமையோடு மீண்டும் அவர்களால் முன்போல பறக்க முடியாது.

மேலும் கதை என்பது கட்டற்ற வெளிக்குள் நிகழ்த்திக்காட்டுவது. அதுவும் சிறார் கதைகள் தனது எல்லைகளற்ற வெளிக்குள் சஞ்சரிப்பவை. அறிவுரைகளால் நிரம்பி வழியும் அவர்களின் பொழுதுகளை தன் மென்கரங்களால் மலர்த்துபவை கதைகள்/பாடல்கள். ஒரு சொல்லின் பொருளுக்கான வெவ்வேறு அர்த்தங்களை மெல்ல உணர்ந்து அவற்றின் கரம்பிடித்து கதைக்குள் இறங்கிகொண்டிருப்பார்கள் சிறுவர்கள். இறங்க, இறங்க பல வண்ண வெளிச்சமும் திளைப்பும் கூடிக்கொண்டேயிருக்கும். ஒரு புறத்தில் இறங்கி மறுபுறம் ஏறும்போது வந்த வழி மறைந்துவிடும். திரும்ப பார்க்கும்போது தெரியும் வழியில்தான் தான் நடந்துவந்தோமா எனும் சந்தேகம் ஊறத்தொடங்கும்.

இந்த மனநிலையில் சென்றுகொண்டிருக்கும் பயணத்தில் இடையில் துணுக்குகள் அவர்களுக்கு பெரும் மதில்சுவர்களாக மாறிவிடுகின்றன. வெகு சிலர் அதன் அருகில் இருக்கும் சிறு வழியில் தப்பித்து வந்துவிடுகின்றனர். பலர் பொதுஅறிவுச் சுரங்கத்தை வளப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அந்தச் சுவர்களில் மோதிக்கொண்டு அங்கே நின்றுவிடுகின்றனர். வந்த வழியும் மறைந்துபோய், மதிலைக் கடக்கவும் முடியாமல் தவிப்போர் ஏராளம்.

நீதி கதைகளின் வழியே எது ஒன்றையோ போதித்துவிட முயல்வதை ஏற்றுகொள்ளாதவர்கள், இந்த அறிவியல் துணுக்கு இடையீட்டையும் மறுப்பார்கள் என்றே நம்புகிறேன். சிறுவர்களுக்கான கலை வடிவங்கள் அவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு இல்லை எனும் தெளிவுகொள்ள வேண்டியச் சூழல் இது.

சளசளத்து ஓடும் ஆற்றில் குழந்தைகளை நீந்தச் செய்து, எழுத்தாளரும் அவர்களோடு நீந்த வேண்டியவர்களாக மாறவேண்டும். அப்போதே குளிர்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் இருவரும் நீந்தமுடியும்.